வேணு வேட்ராயன் கவிதைகளைப்பற்றி
பூஜ்யம் என்பது எண் என்று அழைக்கும் வகைமைக்குள் எவ்வாறு வரும் என்பது எனது கணிதம் சார்ந்த நெடுங்கால பல குழப்பங்களில் ஒன்று. வேணு வேட்ராயன் கவிதைத் தொகுப்பான அலகில் அலகு தொகுப்பின் கவிதைகள் எதற்கும் தலைப்பு இல்லை. வசதிக்காக எண்கள் மட்டும். பூஜ்யத்தில் இருந்து ‘எல்லாம்’ துவங்கியது போலவே, இத் தொகுப்பில் பூஜ்யத்தில் துவங்குகிறது கவிதை வரிசை.
சாந்தம் சாந்தம் சாந்தம் என்று நிறையும் பூஜ்யமாவது கவிதையில் துவங்கி பின்னோக்கி நேரே ஒரு கோடு இழுத்தால், அது பாரதியின் வசன கவிதையில் (குறிப்பாக ஞாயிரு) சென்று முடியும். அந்த வசன கவிதையின் வேதாந்தப் பார்வையிலிருந்து ஒரு கோடு இழுத்தால், அது வேணுவின் இந்த பூஜ்யமாவது கவிதையில் வந்து முடியும்.
பாரதியின் வசனகவிதை செறிவாக்கம் கண்டு, க நா சு வழியே புதுக்கவிதை என நாமகரணம் பெற்று, எழுத்து, கசட தபற எனும் இயக்கங்கள் வழியே செழித்த இந்த வகைமை, நவீனத்துவ நோக்கு, பின்நவீன நோக்கு, இரண்டாயிரத்துக்குப் பிறகான இன்று வரையிலான போக்குகள் வழியே அது சாதித்தவை பல இருப்பினும், அது.அடிப்படையில் கலை கையாள வேண்டிய ‘ஆத்மீகமான’ ஒன்றின் மீதானவிசாரணை சார்ந்து (மிகச் சிறு விதி விலக்குகள் தவிர்த்தால்) பாராமுகமே கொண்டிருந்தது.
நவீனத்துவம் செழித்த சூழலில் பிரதான உடைப்பை உருவாக்கினார் பிரமிள். கட்டறுத்த கொந்தளிப்பின் அழகியலை நிறுவினார். நேர் உணர்வுகளின் அருவ உலகை இயங்க வைத்தார் அபி . பின் நவீனத்துவத்துக்குப் பிறகான கவிதையின் அழகியலை, மொழியை, வடிவத்தை, சாராம்சத்தை நிறுவினார் தேவ தேவன். மூவரிலும் செயல்பட்ட பொதுத் தன்மையும், அது வரையிலான கவிதைகளின் சாராம்சத்திலிருந்து விலகிய தனித்தன்மையும் இம் மூவர் கொண்ட ‘ஆத்மீக’ நோக்கில் இருந்து உருவானது.
இந்த ஆத்மீக நோக்கு எனும் தனித் தன்மை, அதுவே அலகில் அலகு தொகுதியை, வேணுவை இன்றைய கவிதைகள், அதன் ஆளுமைகள் எனும் பொது ஓட்டத்திலிருந்து தனித்து, தனித்துவம் கொண்ட தொகுப்பாக ஆளுமையாக நிறுத்துகிறது.
லௌகீகமான விஷயங்களைப் பின்தொடரும் இத் தொகுப்பின் சில கவிதைகளை விட்டு விடலாம். ஒரு குழந்தை கண் முன் தெரியும் அனைத்து பொம்மைகளையும் இழுத்து வைத்துக்கொள்ளும். ஆனால் குறிப்பிட்ட சில பொம்மைகளை கொண்டே விளையாடும். காரணம் அதன் அக உலகுடன் பிணைந்த ஒன்றாக அந்த குறிப்பிட்ட பொம்மையே இருக்கும். அது போல இத் தொகுப்பில் வேணுவின் அகம் பெரிதும் பின்னிப் பிணைந்து நிற்பது, இருத்தல் சார்ந்த சாராம்சமான ஒன்றுடன்தான்.
நவீனத்துவம் பேசும், காலத்தின் முன் ‘நான்’ இயற்கையின் முன் ‘நான்’ என்று கூர்மை கொள்ளும், ‘நான்’ எனும் அலகு சார்ந்த இருப்பு அல்ல. சாராம்சமான இருப்புஅதுவே வேணுவின் நோக்கு. முதல் எனப்படுவது நிலமும் பொழுதும். தொல்காப்பியர் வகுத்தது. இத் தொகுப்பில் வேணுவே ஒரு கவிதையில் சொல்வது போல. இருத்தல் அதுவே முதல் என்றாகிறது.
ஒடுங்குதல் நிகழ்கிறது
ஒவ்வொரு சாளரமாய்
தன்னை சாத்திக்கொள்கிறது.
நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு
வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீலவெளியில் வீசுகிறது.
*
அந்தரவெளியில் தனித்து நீந்தும்
வெண்மலர்.
*
புல்வெளியில் கூடடைந்த நத்தை
தன் மனவோட்டங்களை பின்தொடர்கிறது.
*
இருத்தல் முதல் என ஆகிறது.
இத் தொகுப்பின் கவியாளுமையை எல்லா விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் கவிதை இது. சாராம்சமான ஒன்றினை அடிப்படையாகக் கொண்ட இந்த தொகுப்பின் கவிதைகள், புறவயமான சித்தரிப்பில் துல்லியமான உருவங்கள் வழியாகவும், அகவயமான சித்தரிப்பில் அருவமான அலகுகள் வழியாகவும் தொழிற்படுகிறது. புறவயமான சித்தரிப்புகள் சென் கவிதைகளில் தொழிற்படும் புறம் போல இருக்கிறது. ‘போல’ என்பது இங்கே முக்கியத்துவம் வாய்ந்த விகுதி. சென் கவிதையில் வரும் பட்டாம்பூச்சி, மகிழ்ச்சி, களங்கமின்மை என எதன் குறியீடாகவும் அமைவதில்லை. அங்கே பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிதான். இங்கே இத் தொகுப்பில் வரும் பட்டாம் பூச்சிகளும், யானையும், பறவைகளும், மீன்களும் கவிதையின் சாரம் வழியே அர்த்த சாத்தியங்கள் ஏற்றப்பட்ட ஒன்று.
உதாரணமாக
எல்லா குளங்களிலும் மிதக்கிறது
ஒரே நிலா.
இது ஒரு சென் கவிதை.
சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும்
உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்.
இது தொகுப்பிலுள்ள கவிதை. முன்னொரு காலத்தின் பெருநதி யை ‘கண்டு சொல்பவன்’ அதுவே வேறு பாடு.
நதிநீரில் முகம்காணும் கரைமலர்கள்.
அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்
மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்.
செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்.
இத் தொகுப்பின் புறவயமான சித்தரிப்பு அதன் வழியே, ஆத்மீக சாரம் ஒன்றை நோக்கிய நகர்வு எனும் அழகியலுக்கு சிறந்த உதாரணம் மேற்கண்ட கவிதை. இந்த வரிசையிலேயே அலகில் அலகு பொருத்தி அலைகளில் ஆடும் தன்னை அருந்திச் செல்லும் பறவை கவிதையும் அமைகிறது.
அகவயம் சார்ந்த இரண்டாம் வகைமைக்கு-
இழையில் பிணைந்திருக்கும் மனங்கள்.
வெளிறிய சாம்பல் உறையில் உறங்கும்
வெஞ்சினத்தின் கங்கு.
சிலருக்கென்றே பூக்கும் வாடாமலர்ச் சிரிப்புகள்.
நனைந்திருக்கும் கூந்தலில்
மலர்சூடும் நதிநீர்க்கரங்கள்.
நீரற்ற ஓடைமேல் சருகுகள்
புரளச்செய்யும் காற்று.
ஆழ்ந்த உறக்கத்தில்
உறைந்திருக்கும் காட்சிக்குவியல்கள் .
கணப்பொழுதில் பற்றிமேலேறும்
எண்ணக் கொடிகள்.
விழிப்பில் உறங்கி இருளில் நீந்தும் கனவு மீன்கள்.
*
ஆயிரமாயிரம்
சிறகுகளின் பறவை
ஒரு கணத்தில்
ஒரு திசையில்
நகர்கிறது.
காலமற்ற
வெளியுமற்ற நிலையில்
அது நிலைக்கிறது
மேற்கண்ட கவிதைகளை உதாரணம் சொல்லலாம்.
காலமும் வெளியும் அனுபவ மண்டலத்தில் நிகழ்த்தும் மாயம் மீதான இரு கவிதைகள், தத்துவம் கால் வலிக்கும்போது அது கவிதையில் அமர்ந்து இளைப்பாரிக்கொள்ளும் என்று எவரோ சொன்னதன் இலக்கிய சாட்சியம்.
முடிவின்றி
சொட்டிக்கொண்டிருக்கும்
கடிகார முட்கள்.
அடியற்ற ஆழத்தில்
விழுந்துகொண்டிருக்கும்
காலத்துளிகள்.
நீரில் விழும்
ஒரு துளி நீலம்.
உடைந்து சிதறும்
கண்ணாடிக் குடுவை.
வெளியினில்
நீந்தி விளையாடும் மீன்கள்.
தேவ தேவன். அவருடைய மொழியும், நோக்கும் இத் தொகுப்பின் பல கவிதைகளில் (13, 23, 60) இழைந்து நிற்கிறது. பசும்பாலில் தித்திப்பு போல .குறிப்பாக பன்னிரண்டாவது கவிதையான அசடன் கவிதையில்.
தேவ தேவன் உள்ளே வரும்போதே இயல்பாக வாசக மனம் தேவ தச்சன் எங்கேனும் தென்படுகிறாரா எனத் தேடும். என் நோக்கில் தேவ தச்சன் வடிவத்தால் மொழியால் நோக்கல் முற்றிலும் தேவதேவனுக்கு மாறானவர். தேவ தச்சச்சன் ‘பிரக்ஞயின்’ குறிப்பிட்ட நிலை குறித்து மட்டுமே பெரும்பாலும் கவனம் கொள்பவர். அந்த குறிப்பிட்ட ப்ரக்ஞய் நிலையை கைப்பற்றும் வடிவத்தை தேர்ந்தவர். உதாரணமாக தேவதச்சனின் எனது காலை உணவு கவிதையை சொல்லலாம். கை மட்டுமாக இருக்கும் பிரக்ஞ்சை நிலை குறித்த கவிதை அது. மொழியாலும் வடிவத்தாலும் இந்த நிலையை கைப்பற்ற ஒரு ‘லாவகத்தை’ கையாளுகிறார் தேவதச்சன். இதற்க்கு நேர் எதிர் நிலை தேவ தேவன். வேணு இந்த தொகுப்பில் அபி மற்றும் தேவ தேவன் இவர்களுக்கே அணுக்கமாக இருக்கிறார். எட்டாவது கவிதையான பலூன் குட்டிகள் மட்டும் சற்றே தேவ தச்சன் உலகின் அருகே வருவது என்று சொல்லலாம்.
மொத்தத் தொகுப்பிலும் விலகி நிற்கும்தனித்துவமான அழகிய கவிதை பதினோராவது கவிதை. அதில் ஒரு கதை இருக்கிறது. காதல் கதை. பார்வை நோக்கு point of view இருக்கிறது. அவளது நோக்கில் சொல்லப்படும் கதை. அவள் காதலனுடன் கொள்ளும் பயணத்தில் அவள் அடைந்த சுவாரஸ்யமான கணங்களில் ஒன்று, டோல்கேட் ஊழியர் அவள் காதலனை பார்த்து சிங்கிளா டபுளா என கேட்கும் கணம். காதலன் நிலையோ வேறு. அவனது இடம் இங்கே. அவனது நேரம் இக் கணம். இந்த நிலையில் வாழ்பவன் வசம்தான் அந்த வினா வந்து விழுகிறது.
தேவ தேவன் வசம் ஒரு வாசகர் வினவினார். ஏன் கவிதைகள் மீதான அக்கறை மட்டும் வாசிப்பு சூழலில் குறைவாக இருக்கிறது? தேவ தேவன் சொன்னார் வாழ்வனுபவம் மீதான அக்கறை குறைவு உதாசீனம் என்றும் இதை சொல்லலாம். இதன் பொருள் தேவ தேவன் நோக்கில் கவிதையும் வாழ்வனுபவமும் வேறு வேறு அல்ல என்பதே. இதன் படி நவீனத் தமிழ் கவிதை வரலாற்றில் பிரமிளும், அபியும், தேவ தேவனும் முன்வைத்த வாழ்வனுபவம் முற்றிலும் தனித்தன்மை கொண்டது. சமூக ஆழ்மனதின் சாராம்சம் மீது திகழ்வது. ஒட்டு மொத்த மானுடமும் வாழ்வனுபவம் என்று எதை உணர்கிறதோ, அதை முதல் அடியாகக் கொண்டு துவங்குவது ஆத்மீக சாதகனின் பயணம். ரமணரின் பயணம். மானுட இருப்பின் உச்ச சாத்தியம் ரமண நிலை. அந்த நிலை, அந்த வாழ்வனுபவங்களை பிரதிபலிக்க, மொழியினூடாக சென்று எட்ட முனைந்தவர்களே மூவரும். அவர்களின் தொடர்ச்சி என்றே வேணுவின் துவக்கம் நிகழ்கிறது.
மொழியில் திளைத்தல், புதிய புதிய சொல்லிணைவுகள், புதிய புதிய படிமங்கள், சமன்வயம் வாய்ந்த உணர்வு நிலை, நவீனத்துவத்தின் கூர்மையும் கச்சிதமும், மேலான உணர்வு நோக்கிய கொந்தளிப்பு இரண்டும் பிசிர் இன்றி முயங்கிய வடிவம் என இந்த தொகுப்பில் தனது வருகையை காத்திரமாக நிறுவி இருக்கிறார் வேணு.
வேங்களிறேறி
காரிருள் வனத்தில்
செந்தழல் கனி தேடுதல்.
இலக்கிய கர்த்தா அந்த ஆத்மீக சாதகனின் அதே தேடுதல் கொண்டவன்.
செந்தழல் கனி தேடுவது.
அது காரிருள் வனம். சரியான ஒரே பாதையை தேர்வதற்குள் பலநூறு
பிழையின் பாதையில் சென்று மறைய எல்லா வாய்ப்பும் உண்டு.
அக் கனி தேடும் அந்த இருள் வன பயணத்தை கடக்கத் தேவைப் படுவதோ, வேங்கையும் வேழமும் என்றான ஒன்று.
அந்த வினோத விலங்கின் கால்தடத்தை வாசகர் இத் தொகுப்பின் வழியே அறியலாம்.
நண்பரும் கவியுமான வேணு வேட்ராயன் அவர்களின் இந்த அலகில் அலகு தொகுதி குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.