கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
அன்புள்ள ஜெ
குமிழி மானுட துக்கத்தையும் அதிலிருந்து மீட்சியையும் காட்டும் கதை. நீங்கள் எழுதும் அந்த காலகட்டத்தில் அறுபது எழுபதுகளில் குழந்தைகள் இறப்பது மிகுதியாகவே இருந்திருக்கிறது. குழந்தைகள் இறப்பதை குழந்தைகள் பிறப்பதை வைத்து சமன் செய்துகொண்டிருக்கிறார்கள். குழந்தையின் பிறப்பு குழந்தையின் சாவை சரியாக்கிவிடும் என்பதற்கான ஆறுதல் வார்த்தைகள் அந்தக்காலத்திலே ஏராளமாக உண்டு. “அந்தக்குழந்தைதான் இப்டி வந்து பொறந்திருக்கு” என்று சொல்வார்கள்.
கிட்டத்தட்ட அதே கதைதான். இங்கே தன் குழந்தையை இன்னொருவருக்கு கொடுப்பதன் வழியாக மீட்டுக்கொள்கிறாள் அந்த குயவர்குலத்து அம்மா. அவளால் அந்த மண்குழந்தையை தொடவே முடியவில்லை. ஒருவாரமாக அப்படியே இருக்கிறது. அனந்தன் அதை எடுத்தபோது அவன் அதை தப்பாக எடுத்ததால் அவள் அதை தொடுகிறாள். தொட்டதும் அழுகிறாள். பனி உருக ஆரம்பித்துவிட்டது. இனி அதை அவள் கொடுத்துவிடுவாள். அவள் கொடுத்தது இங்கே கிடைக்கிறது.
வெறும் கவித்துவப் படிமங்கள் வழியாகவே ஓடும் அழகான கதை.
டி.எம்.ராகவன்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
நலம்தானே?
குமிழி படித்தேன் . சுருக்கமான தெளிவான மனத்தில் நிற்கும் கதை.
“இருவர் சேர்ந்து மண் சேர்த்திட ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய்வைத்த சூளை” என்று மகவு உண்டாகிப் பிறப்பதைப் பாம்பாட்டிச் சித்தர் பாடியிருப்பது நினைவுக்கு வந்தது.
குயவன் கலம் செய்வதும், இருவர் கலந்து பிள்ளை உருவாவதும், எழுத்தாளன் படைப்பை உருவாக்குவதும் எல்லாம் இணையாகவே என் மனத்தில் எழுந்தன. மூன்று செயல்களுக்கும் ஆர்வம், உணர்ச்சி, அமைதிச் சூழல் தேவை.
தொடக்கத்தில் வரும் மாதவண்ணன் வேறு. மூன்று முறை மனைவிக்குக் கரு கலைந்ததால் உண்டான சோகமும், ஆண்டி இன்னும் பாவையைத் தராததால் மனத்தில் சினமும் ஆத்திரமும் கொண்டுள்ளார்.கதை முடியும்போது அவரே மனம் நிறைவு பெற்று இருக்கிறார்.
தன். கையால் பானை உருவாகாதபோது அவர்கொள்ளும் ஆத்திரம்,கவலை,சினம் எல்லாம் குழந்தை பெற்றெடுக்காத மனத்தின் வெளிப்பாடே. பானை உருவான உடன் மகிழ்ந்து பகவதீ என்று கூச்சலிடுவது ஆனந்தத்தின் வெளிப்பாடு. படைப்பின் கரு உள்ளே தோன்றி அதை எழுத்தில் கொண்டுவருவதுவரை எழுத்தாளன் வேதனை கொண்டாலும் அது படைப்பாக வந்தவுடன் மிக மகிழ்ச்சி கொள்கிறான்.
முதலில் சாராயத்தின்பால் கவனமே செலுத்தாதவர் அவரே பலமுறை முயற்சி செய்து பானையை உருவாக்கிய பின் தம்மால் இனி கலையாத கருவை உண்டாக்க முடியும் என்றெண்ணுகிறார். அதனால்தான் அவரே அம்புரோஸ் சாராயம் கேட்கிறார்.
மனசு கனியணும் அப்பொழுதுதான் கலம் உருவாகும் என ஆண்டி கூறுவதை குழந்தை உண்டாவதற்கும், படைப்பு தோன்றுவதற்கும் கூடப் பொருத்திப் பார்த்து க் கொள்ளலாம்.
ஆப்புத்தட்டிச் சரி செய்வதுதான் குழந்தையை நோய் நொடி அணுகாமல் வளர்ப்பதும், படைப்பை மறுவாசிப்பு செய்து திருத்துவதும் ஆகும்.
கரு கலைவது என்பவர்களுக்கு மூன்று பிரசவத்திற்குச் சமம் என்பார்கள். உள்ளே ஆண்டியின் மனைவி குழந்தையின் சோகத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மண்ணாலான பாவையை வைத்து அழுவது மாதவ அண்ணனின் மனைவியின் நிலையையையும் காட்டுகிறது.
யட்சியை நம்பி பாவை செய்து வைக்கும் தொன்மத்தையும், கரு கலையும் யதார்த்தத்தையும் கலந்து மிளிரும் அற்புதக் கதை
வளவ. துரையன்
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
லக்ஷ்மியும் பார்வதிய்ம், மலையரசி இரு கதைகளும் ஒரு குறுநாவல் போல அழகாக இணைந்துகொண்டு ஒரு முழு வாழ்க்கையையே காட்டுகின்றன. லக்ஷ்மியும் பார்வதியும் கதையில் 13 வயதான சிறுமியாக வரும் பார்வதிபாய் மலையரசி கதையில் தான் நினைத்த எல்லாவற்றையும் செய்திவிட்ட நிறைவுடன் தன் கடைசி கடமையையும் செய்ய வந்திருக்கிறாள்
துர்க்கை என்று சொல்கிறீர்க்ள். குட்டிகளை கவ்வி கொண்டுசென்று பாலூட்டும் புலி. கவ்வி குதறிப்போடும் புலியும்கூட. ஸ்வாதித்திருநாளின் கடைசி கீர்த்தனம் பர்வத நந்தினி பார்வதிபாய் அரசியைப்பற்றிய கவிதை என்று உருவகம் செய்திருப்பதுதான் இந்தக்கதையில் உச்சம் என்று நினைக்கிரேன். அந்தக் கவிதைபற்றிப் பேசும்போது ஸ்வாதித்திருநாள் சொல்லும் எல்லா வரிகளுமே கவித்துவமாக உள்ளன.
சரஸ்வதி பாபு
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
லட்சுமியும் பார்வதியும் மலையரசி இருகதைகளுமே ஒர் ஆழ்மான உனர்ச்சியை உருவாக்கின. லட்சுமிபார்வதிபாய் சுவாதித்திருநள் படத்தில் ஸ்ரீவித்யா செய்த கதாபாத்திரம் என்று நினைக்கிரேன். அதில் ஸ்வதிதிருநாளின் காதலியான சுகந்தவல்லியை கொலைசெயபவராகவும் ஒருவகையான நுட்பமான வில்லியாகவும்தான் அவர் காட்டப்பட்டிருக்கிறார். அவர் எப்படிப்பட்ட ஆட்சியாளர் என்று காட்டும் இந்தக்கதை அவரை ஒருவகையில் மீட்டு எடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சுவாதித்திருநாளின் கடைசிநாள் பற்றிய இந்தக்கதை ஒரு எபிக் டிராமா தன்மையுடன் இருக்கிறது. இதற்குத்தான் வரலாரு தொன்மம் என்று கதை நகரவேண்டும் என்றும் சொல்வது. நித எபிக் யூனிட்டியை யதார்த்தமான சமகாலக் கதைகளில் கொண்டுவந்துவிடமுடியாது
சிவக்குமார்
***