கோட்டைமுகம் வழியாகவோ, கோட்டைப்புறம் வழியாகவோ உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி இல்லை. வடக்கே குமாரபுரம் போகும் மண்பாதையில் இருந்து பிரிந்த ஒரு சிறிய வண்டிப்பாதை சுடுகாடுகளின் வழியாக சென்று கோட்டையை அடையும். நான் முன்பு இருமுறை அங்கே வந்ததுண்டு. யானையை மறைக்குமளவுக்கு தருவைப்புல் வளந்து பூக்குலைகள் நிறைந்து நுரையுடன் அலையடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாதையில் எவரேனும் செத்து பாடை வரும்போது அன்றி உயர்சாதியினர் எவரும் தென்படமாட்டார்கள்
நான் ஒரு பாறைமேல் ஏறிநின்று எவரேனும் கண்ணுக்குப் படுகிறார்களா என்று பார்த்தபின் இறங்கி மெதுவாக நடந்தேன். அவ்வப்போது கையை வாயில் குவித்து “தீண்டாத்தோனாக்குமே, ஆயித்தமுண்டே” என்று கூவிக்கொண்டேன். என் குரல் பாறைகளில் முட்டி எனக்கே திரும்பி வந்தது. யாரோ ஒரு தீண்டத்தகாதவன் என்னை விலகிச் செல்ல கோரிக்கொண்டிருந்தான்.
அந்தப் பாதை பெருமாள்குளத்தருகே யானைமேல் அம்பாரிபோல காணிப்பிள்ளையார் கோயில் அமைந்திருந்த பெரிய பாறையை ஒட்டியிருக்கும் சிறிய கோட்டைவாசலைச் சென்று சேரும். அதற்கு அப்பால் பெருமாள் குளம் நீலநீர்ப்பரப்பு நிறைந்து அலைகொண்டிருக்கும். அதன் கரையோரமாகச் செல்லும்பாதை வளைந்து ஒருகிளை நயினார் நீலகண்டசாமி கோயிலுக்கும் இன்னொன்று தேர்த்தெருவுக்கும் சென்றுசேரும் .அவற்றில் நானோ என் குடியினரோ செல்ல முடியாது.
குளத்தடியிலிருந்து ஒற்றை ஆள் செல்லத்தக்க சிறுபாதைகளாக கிளைபிரிந்து ஊரின் எல்லா மாளிகைகளுக்கும் பின்புறம் சென்றுசேரும் ஊடுவழிகள் உண்டு. ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு வலைபோல நகரை இணைப்பவை அவை. அவற்றின் வழியாக நகரின் எந்த இடத்துக்கும் சென்றுவிடலாம். கொல்லைப்பக்கம் சென்று மலமும் சிறுநீரும் வெளியேறும் துளைகளுக்கு அருகே நின்று குரல்கொடுக்கலாம். எங்கள் குடியினர் அனைவர் கைகளிலும் ஒரு சிறிய குழல் உண்டு. அதை ஊதினால் கதவைத் திறந்து வேலைக்காரர்கள் வெளியே எட்டிப்பார்த்து என்ன என்று கேட்பார்கள்.
தேரிக்குளமும் அதனருகே அந்தப்பாறையும் மிகத்தொன்மையானவை. அவை நகரம் அங்கே வருவதற்கு முன்னரே இருக்கின்றன. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரவிவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா அங்கே அரண்மனையும் மண்கோட்டையும் கட்டி பத்மநாபபுரம் என்று பெயரிட்டு குடியேறுவதற்கு முன்பு அந்த பாறையின் மேல் மரத்தாலான பள்ளிதான் இருந்தது. அங்கே ஆடையில்லாத அமணச்சாமிகள் குடியிருந்தனர். பாறைக்குக் கீழே இருந்த நிலத்தில் எங்கள் மக்கள்தான் கூட்டம்கூட்டமாக குடிலமைத்து தங்கியிருந்தார்கள். பெருமாள்குளத்தின் நீரால் அங்கே விவசாயம் செய்தார்கள்.
பின்பு மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா குளத்துக்கு கரை கட்டினார். கோட்டையை கல்லால் கட்டி உயர்த்தினார். அர்ண்மனையில் கஜானாவும் ரங்கமண்டபமும் பூமுகமண்டபமும் ஊட்டுபுரையும் உருவாகியது. படைகள் வந்தன, சேவகர்கள் பெருகினர். எங்கள் ஆட்கள் கோட்டைக்கு வெளியே துரத்தப்பட்டனர். மேலும் மேலும் பின்னால்சென்று வேளிமலை அடிவாரத்தில் குடில்களை அமைத்துக்கொண்டனர். அமணசாமிகள் அங்கிருந்து கிளம்பி வடகிழக்கே பாண்டிநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
புறக்கோட்டையின் அருகே சந்தடிகளை கண்டேன். வாயில் கைவைத்து ஓசையிடுவதற்கு முன் அங்கே என்ன நடைபெறுகிறது என்று பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அடர்ந்த புல்லின் வழியாக அசைவை உருவாக்காமல் மண்டியிட்டு முன்னால் சென்றேன்.
கோட்டையின் முன்னாலிருந்த பாறைச்சரிவில் புலைமாடனின் ஆளுயரமான உருவின்மேல் சுண்ணாம்பும் மணலும் கலந்த சுதைச் சாந்தை பூசி செப்பனிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் ஆட்கள்தான்.
நான் வெளியே வந்து “கறுத்தாளுக்கும் காட்டுநீலிக்கும் ஜெயம்!” என்றேன்.
அவர்களில் ஒருவர் திரும்பி என்னை பார்த்து “சர்வ ஜெயம்” என்றார். ”ஆரு?” என்று கண்களைச் சுருக்கி கேட்டார்.
“நமக்கு பொன்மனையிலே அம்மவீட்டுலே அடிமைப்பணி…” என்றேன். “ஒரு தூதுமா வந்தேன்.”
”ஓ” என்றார். மேற்கொண்டு கேட்கக்கூடாதென்று அறிந்திருந்தார்.
“என்ன நடக்குது?” என்றேன்.
“தெரியல்லியா? புலைமாடனை அணிவிச்சு ஒருக்கிட்டிருக்கோம்” என்றார். “பலி வாங்கப்போறாருல்லா? கழுப்பலி? நல்ல கோளாக்கும். இனி ஓராண்டுக்கெல்லாம் அடங்கி இருக்கலாமே.”
நான் “ஆமா” என்றேன்.
“மேலே கழுபீடமும் ஒருங்கிட்டிருக்கு… வேணுமானா போயிப்பாரும்” என்றார்.
“மேலேயா?” என்றேன்
“அதுக்குண்டான இடமாக்கும். இங்க ஒருத்தனை கழுவிலே ஏத்தி கதவை மூடிப்போட்டா அவன் தொண்டை கிளிஞ்சு நிலைவிளிச்சாலும் அங்க கோட்டைக்குள்ள ஏமான்மாருக்கு கேக்காதுல்லா? அம்மிணிகளும் பிள்ளைகளும் பயந்திரக்கூடாதே.”
நான் பாறைச்சரிவின் வழியாக மேலே ஏறிச்சென்றேன். சரிவு முழுக்க நரிகளும் சிறுத்தையும் போட்ட எச்சங்கள் உலர்ந்து கிடந்தன. மான்புழுக்கைகள் விதைகள் போல பரவியிருந்தன. முள்செடிகள் ஆங்காங்கே எழுந்திருந்தாலும் மொட்டைப்பாறைச் சரிவு.
மேலே கோட்டைக்குள் ஓசைகள் கேட்டன. நான் உரக்க “கறுத்தாளுக்கும் காட்டுநீலிக்கும் ஜெயம்!” என்றேன்.
உள்ளிருந்து “சர்வ ஜெயம்” என்ற குரல் கேட்டது. ஒருவர் எட்டிப்பார்த்து “ஆரு?” என்று கேட்டார்.
“நமக்கு பொன்மனை அம்மவீட்டு அடிமைப்பணி.பேரு குளிகன்” என்றேன். “ஒரு தூதுமாட்டு வந்தேன்.”
“தூது இந்த கழுவேத்தலைப் பத்தியா?” என்றார்.
“ஆமா” என்றேன். மற்றவர்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
“நம்மபேரு சிண்டன், மூத்தபுலையனாக்கும்” என்றார் மூத்தவர் “அந்த பயலுக்கு என்னத்துக்க கேடு? அம்மைக்கு ஒத்தமகன்னு சொன்னாங்க. பதினேளு பெத்தவளுக்கு மிஞ்சிநின்ன ஒத்தமரம்…”
“அதெல்லாம் தெய்வங்களுக்க வெளையாட்டுல்லா” என்றேன். “என்ன செய்யுதீக?”
“தெரியல்லியா? கழுபீடம்” என்றார்.
“களிமண்ணிலயா?” என்றேன்.
இடையளவுக்கு உயரத்தில் குழைத்த களிமண்ணால் ஒரு பீடம்போல் அமைத்திருந்தனர்.
சிண்டன் “களிமண்ணு உலந்தா பாறையாக்கும்” என்றார். திரும்பி அங்கு நின்றிருந்த இளைஞனிடம் “இருலே” என்றார்.
அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். மெலிந்த பதினெட்டுவயது இளைஞன். மென்மையான மீசையும் தாடியும் கொண்டவன். கன்னங்களிலும் மூக்கிலும் பருக்கள் இருந்தன.
“என்ன?” என்றேன்
“குண்டித்தடம் வேணும்லா.. அளவு செரியா இருக்கணும். இந்த பய அவனுக்க அதே அளவுள்ளவனாக்கும். லேய் உக்காரு”
அவன் தலையை அசைத்தபடி பின்னால் சென்றான்.
“லே, உன்னையா கழுவேத்துறாங்க? சும்மா அளவுக்குலே… டேய் குருமா அவனை பிடிச்சு இருத்துலே.”
குருமன் அவன் கையைப் பிடிக்க அவன் “இல்ல இல்ல” என்றான்.
“லே உக்காருலே” என்று சிண்டன் ஓர் அதட்டு போட்டார். அவன் நடுங்கி கைகூப்பினான். இருவர் அவன் ஆடைகளை அவிழ்த்தனர். வெற்றுடலுடன் நின்ற அவனை கைபிடித்து இழுத்துவந்து அந்த களிமண் பீடத்தில் அமரச்செய்து தோளைப்பிடித்து அழுத்தினர்.
எழுந்தபோது அவன் பின்பக்கத்தின் தடம் களிமண்ணில் பதிந்திருந்தது. நான் அவனைப் பார்த்தேன். கைகளை கூப்பியபடி நடுங்கிக்கொண்டிருந்தான். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
சிண்டன் அந்த தடத்தில் அவனுடைய பிருஷ்டங்கள் இரண்டும் பதிந்த இடைவெளியில் அவனுடைய குதத்தின் குழி இருந்த இடத்தை அடையாளப்படுத்தினார். இன்னொருவன் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்த சிவப்புநிறமான பிரம்பை எடுத்து அதில் அழுத்தி நட்டான். மூன்றடி ஆழத்திற்கு இறங்கி இரண்டரை அடி உயரத்திற்கு எழுந்து நின்றது.
“இதிலயா?” என்றேன். எறும்பு நிறமான வழவழப்பான பிரம்பு. எண்ணை மின்ன செம்புக்கம்பியோ என்று தோன்றச்செய்தது.
“இதாக்கும்” என்று சிண்டன் சொன்னார். “நல்லா வளையும். பச்சைப்பிள்ளை விரலுபோல பதுத்ததாக்கும். வெண்ணை தேய்ச்சு வழுவழுப்பாக்குவாங்க. கழுவனை கைய பின்னால நல்லா கட்டி கொண்டுவந்து இதுக்குமேலே உக்கார வைப்பாங்க. பிரம்பை குதப்புழை வழியா உள்ள விடுவாங்க. மண்புழு மாதிரி நுழைஞ்சு உள்ள போயிடும். வலிக்காது. ரத்தம் வராது. அதனாலே கழுவனுக்கு ஒண்ணுமே தெரியாது… அவனுக்கு குளிரா சுகமாக்கூட இருக்கும்.”
அவர் அதை சொல்லும்போது மகிழ்கிறார் என்று தெரிந்தது. ஆனால் மற்றவர்கள் இறுகிய முகத்துடன் நின்றார்கள்.
“கழுப்பிடிக்கு ஆசான்மாரு உண்டு… மேக்கரை ஆசான் வருவாரு. குடலை பிடிச்சு பிடிச்சு குழாயிலே கம்பை கோத்து கொண்டுபோறது மாதிரி கழுவை உள்ள கொண்டு போயிடுவாரு. நெஞ்சுக்குழி வரை போனதும் அப்டியே உக்காரவச்சு கதவை மூடிட்டு போயிருவாங்க… காலுகொஞ்சம் நீட்டினாப்ல இருக்குத பீடமாக்கும், எந்திரிக்க முடியாது. ஒருத்தன் மட்டும் இங்க இருந்து நாழிகைக்கு ஒருதடவை பதநீரு குடுக்கணும்”
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். “குடலுகள் மறுபடி பழையமாதிரி ஆகுமில்லா? அப்ப வலி தொடங்கும். ஆனா ரத்தம் போகாததனாலே மயக்கம் வராது. நல்ல முழு நினைப்போடே வலியை அனுபவிக்க முடியும். வலி நின்னு துள்ளும்லா? பசிச்சும் தாகிச்சும் நினைவு போயிடப்பிடாது. அதுக்குத்தான் பதநீரு. ஒருநாள் முழுக்க கிடந்து அலறுவான். பின்ன தொண்டை உடைஞ்சிரும். பிறவு உடம்பு மட்டும் துள்ளிட்டே இருக்கும். உசிரு போறதுவரை வலி இருக்கும்”
நான் பெருமூச்சுவிட்டேன்.
“உடனே சாவ மாட்டான். சிலபேரு எட்டுநாளு வரை சாவாம கிடந்து துடிச்சிருக்கானுக” என்றார் சிண்டன்
நான் திரும்பிப் போகலாம் என்று வழியைப் பார்த்தேன்
“பின்ன ஒண்ணு, இந்த வலியை அறிஞ்சு செத்தா அவனுக்கு எல்லா பிறவிக்கடனும் முடிஞ்சாச்சுன்னு அர்த்தம். அவன் கழுமாடசாமியா ஆயிடுவான். அவனுக்கு நட்டகல்லுண்டு. ஆண்டு பலியும் குருதிகொடையும் உண்டு. பின்ன அவனுக்கு அழிவில்லை” என்றார் சிண்டன் “இங்க நம்ம திருவிதாங்கூர் நாட்டிலே நாநூற்றி பதினேழு கழுமாடனுங்க உண்டு பாத்துக்கிடுங்க.”
“நீங்கதான் இதை செய்யணுமா?” என்றேன்.
“நாம செய்யணும்லா? அதுக்குத்தானே தலைப்புலையன் பட்டமும் குடியிருக்க வீடும் கோலுவச்சுக்கிட உரிமையும் மகாராஜா தந்திருக்காரு?” என்றார் சிண்டன் “நம்ம அப்பன் பாட்டன் காலம் முதல் உள்ள உரிமையும் அதிகாரமுமாக்கும்.”
நான் மீண்டும் ஒருமுறை அந்த களிமண் பீடத்தை பார்த்தேன். கீழிறங்கிச் செல்லும்போது அந்த இளைஞனை நினைத்துக் கொண்டேன்.
கோட்டைவாசல் வழியாக உள்ளே நுழைந்து பெருமாக்குளம் வழியாக சுற்றி சின்னச் சந்துக்குள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். அவ்வேளையில் அந்த பொந்துவழிகளில் எவருமில்லை. மலமெடுப்பவர்கள் காலையில் வந்து சென்றிருப்பார்கள். கஞ்சிக்காக சாயங்காலம் வருவார்கள். மலம் எடுத்த இடத்திலேயே கஞ்சி கொடுக்கப்படும். சந்துக்குள் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. சாக்கடை நொதித்துக் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் ஓசை.
நான் வீடுகளை எண்ணிக் கொண்டே சென்றேன். சரியான வீடுதானா என்று இன்னொரு முறை கணித்துவிட்டு என் ஊதலை முழக்கினேன். மும்முறை முழக்கியபோது கதவு திறந்து ஒரு படைநாயர் எட்டிப்பார்த்தான்.
“என்னடா?” என்றான்.
நான் என்னிடமிருந்த முத்திரை மோதிரத்தைக் காட்டினேன். அவன் முகம் சுருங்கியது.
“கரியாத்தன் கிட்ட பேசணும்… அதுக்காக பொன்மனையிலே இருந்து வலியம்மச்சி பகவதிப்பிள்ளை அனுப்பின தூதனாக்கும்” என்றேன்.
“கொண்டா” என்று அவன் வாங்கிக்கொண்டான். “ஓலை உண்டாடே?”
“இல்லை, வாய்ச்சொல்லு மட்டும்தான்”
அவன் உள்ளே சென்றான். நான் காத்து நின்றேன். நீண்டநேரம் ஆனதுபோலிருந்தது.
கதவு மீண்டும் திறந்து அவன் “வாடே” என்றான். நான் உள்ளே நுழைந்தேன். அங்கே எட்டு நாயர்கள் ஈட்டிகளுடன் இருந்தனர்.
என்னை அழைத்துச்சென்ற படைநாயர் “அந்தா கெடக்கான் எருக்குழி பக்கத்திலே, போயிப்பேசு…” என்றான். “அரைநாழிகைக்கு மேலே வேண்டாம் கேட்டியா?”
நான் தொழுப்புரையை கடந்து சாணிக்குழியை அடைந்தேன். அதனருகே எருமையை கட்டும் பெரிய இரும்பு வளையத்தில் கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கரியாத்தன் கிடந்தான். அவன் உடம்பின்மேல் கரிய படலம்போல ஈக்கள் மொய்த்திருந்தன.
நான் அருகே சென்றதும் ஈக்கள் ரீங்கரித்தபடி எழுந்தன. கரியாத்தன் கண்களை திறந்து என்னைப் பார்த்தான்.
நான் குந்தி அமர்ந்தேன் “நான் பொன்மனை அம்மைவீட்டு தலையடிமை குளிகன்” என்றேன். “உனக்கு மூத்தம்மச்சி விட்ட தூதுமா வந்திருக்கேன்.”
அவன் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உடலெங்கும் புண்கள் சீழ்கட்டியிருந்தன. சவுக்கடியும் பிரம்படியும் கிழித்து உருவான புண்கள். சூடு வைக்கப்பட்டு வெந்து தோல் வழண்டு சீழ்கட்டிய புண்கள். கைகளிலும் கால்களிலும் இருபது விரல்களிலும் நகங்கள் இல்லை. முகவாயில் பற்களும் இல்லை. சித்திரவதையால் அவன் மனம் உறைந்து சிந்திக்க முடியாதவனாக ஆகிவிட்டிருந்தான் என்று உணர்ந்தேன்.
“கரியாத்தா, நடந்தது நடந்தாச்சு. நீ உன் அம்மைக்கு ஒத்தைப்பிள்ளை. பதினேழு பெத்தவளுக்கு அந்திக்கஞ்சிக்காக மலைக்குளிகனும் மாடனும் விட்டுவச்ச மகன்… அந்த கடமை உனக்கிருக்கு. இப்ப உயிரோட இருக்குறது மட்டும்தான் உனக்க கடமை பாத்துக்கோ.” என்றேன்
அவன் என் சொற்களை கேட்கிறான் என்று கண்கள் மட்டும்தான் காட்டின.
“உன்மேலே அம்மை தம்புராட்டி திருக்கண் பாத்திருக்காங்க. கருணை காட்டி நீ உயிரு தப்ப ஒரு வழி சொல்லியிருக்காங்க. நீ அதைச் செய்தா போரும். மத்ததை அவங்க பாத்துக்கிடுவாங்க” என்றேன். “நாளைக்கு காலையிலே உன்னைய புறங்கோயிலிலே காட்டுநீலி எசக்கியம்மன் சன்னிதிக்கு கூட்டிட்டு போவாங்க. அங்க திவான்பேஷ்கார் சாமி கடைசிக்கேள்வி கேப்பார். மகாராஜா விட்ட தீட்டூரத்தை வாசிப்பார். தெய்வங்கள் கேட்க ஓலையை வாசிச்சாச்சுன்னு சொன்னா பிறகு அதை மாத்த மகாராஜாவாலேயும் முடியாது. அதுக்கு முன்னாலே நீ இதைச் செய்யணும்…”
அவன் விழிகளால் ஆம் என்றான்.
“நான் இங்கேருந்து போனதுமே மண்டலம் சாமியை பாக்கணும்னு காவல் நாயருகிட்டச் சொல்லு. எதுக்குன்னு கேட்டா ராஜரகசியம் சொல்லணும்னு சொல்லு. நாலஞ்சுபேர் கேக்க சத்தம் போட்டுச் சொல்லு. உன்னை எசக்கியம்மன் சன்னிதிக்கு கூட்டிட்டு போவாங்க. அங்க பேஷ்காரும் வேற அதிகாரிகளும் நிப்பாங்க. அங்க எசக்கியம்மனுக்க பலிபீடத்தை தொட்டு ஆணையிட்டு எல்லாரும் கேக்க சத்தமாட்டுச் சொல்லு, நீ பொன்னுமங்கலம் அம்மைவீட்டு எளையம்மை தேவகிப் பிள்ளையை தொட்டதில்லைன்னு… மூணுமுறை ஆணையிட்டுச் சொல்லு..”
அவன் வாய்திறக்கும் முன் நான் தொடர்ந்து சொன்னேன். “அங்க நிக்கிற பேஷ்கார் நாராயணையர் பொன்னுமங்கலம் பகவதிப்பிள்ளை அம்மச்சிக்க ஆளுதான். அவரு உன் சத்தியத்தை ஓலையிலே எளுதி சங்குமுத்திரை இட்டு திவான்பேஷ்காருக்கு முன்னாலே கொண்டுபோயி சேத்திருவாரு. அதுக்குமேலே அதை ஆரும் ஒண்ணும் செய்யமுடியாது.”
“நீ பயப்படாதே. குலதெய்வம் காட்டுநீலி இசக்கியத் தொட்டு சத்தியம் செஞ்ச புலையனை அவராலே அப்டி கொல்லமுடியாது” என்று நான் மேலும் சொன்னேன் “அதுக்கு மறுபடியும் பல சடங்குகள் இருக்கு. புலையர் மகாசபை கூடணும். அதிலே உன்னை நிறுத்தி பூசாரி விசாரம் பண்ணணும். புலையர் மகாசபையிலே மூணு சோதனை இருக்கு. பச்சமண்ணிலே பானை பிடிக்குதது, சுட்ட கல்லை சும்மா எடுக்குதது, கொதிக்கும் எண்ணையை குடிக்குததுன்னு. மூணும் செரியா வந்தா உன்னைக்கொல்ல மகாராஜாவாலேயும் முடியாது. நீ தப்பீருவே”
அவன் மேலும் ஏதோ சொல்ல வர நான் கையசைத்து “நீ கேக்குதது புரியுது. ஆனா புலையர் மகாசபை அம்மச்சி பகவதிப்பிள்ளை தம்புராட்டி ஆணையிலே இருக்கும். அதிலே நானும் இருப்பேன். வேண்டியது வேண்டிய மாதிரி செய்துபோடலாம். நீ இந்த சத்தியம் மட்டும் செய்தாப்போரும்.”
“என்னை பிடிச்சு குடுத்தது வலியம்மச்சி பகவதிப் பிள்ளையாக்கும். இப்ப ஏன் உயிரை காப்பாத்தி விடுதாங்க?” என்று அவன் கேட்டான். அவன் நெடுநேரமாக பேசாமலிருந்தமையாலும் உதடுகள் வீங்கியிருந்தமையாலும் குரல் குழறலாகவே கேட்டது.
“அது நமக்கு புரியாத ஆட்டம்” என்று நான் சொன்னேன். “குடும்பவீட்டிலே சொந்த மகளுக்க கூட புலையனைப் பாத்தா கொஞ்சம் சூடு வரத்தானே செய்யும்… குடும்பத்துக்கு கேடு வரவழைச்சுப் போட்டான்னு நினைச்சு சத்தம் போட்டு ஆளைக்கூட்டியாச்சு. அதிலே ஒருத்தி குடும்ப காரணவருக்க வீட்டுக்காரி அம்மிணித்தங்கச்சி. வேறகுடும்பத்திலே இருந்து வந்தவ. அவ இவங்களுக்கு எதிரி. அவளுக்கு தெரிஞ்ச பின்னாடி அப்டியே மறைக்க முடியாதுல்லா? நாடுவாழிக்கும் ராஜாவுக்கும் செய்தி போயிட்டுது. பின்ன இதெல்லாம்… விசாரிப்பு, தண்டனை…”
“அப்ப நின்னு கொக்கரிச்சாள்லா? என்னைய கட்டி வச்சு அடிச்சப்ப சிரிச்சாள்லா?”
“ஆமடே, ஆனா பிறவுதான் பகவதிப்பிள்ளை அம்மச்சிக்கு தெரிஞ்சுது இது அம்மை வீட்டுக்கு மகா களங்கமாக்கும். இனி அங்கே நல்ல குடும்பத்திலே யாரும் பெண்ணெடுக்க வரமாட்டாங்க. ராஜகுடும்பம் பெண்ணெடுக்க வரலைன்னா அந்த அம்மைவீடு அப்டியே நின்ன நிப்பிலே பட்டு போயிடும் பாத்துக்க” என்றேன்.
மேலும் குரல் தாழ்த்தி “நினைச்சுப்பாரு, உன்னைய கழுவிலே ஏத்தி கழுமாடனாக்கி நிக்கவைச்சா அவங்க குடும்பத்திலே இருந்து ஆண்டோடாண்டு பலியும் கொடையும் குடுக்கணும் இல்லியா?. தலைமுறை தலைமுறையாட்டு இந்தப் பழி அப்டியே நிக்கும்… அந்தக்குடும்பமே சீப்பட்டுப் போயிடும்” என்றேன்
“ஆமா” என்றபோது அவன் முகத்தின் உணர்ச்சிகளை என்னால் உணரமுடியவில்லை.
“நீ சாமியத்தொட்டு சத்தியம் செஞ்சா பழி இல்லேன்னுதான் ஆகும். உன்னை விட்டுட்டா பிறகு இது நிக்காது.”
“எளையம்மை தேவகிப் பிள்ளை சத்தியம் செஞ்சாச்சா?” என்றேன்.
“முதல்ல நீ சத்தியம் செய்யணும். உன் தண்டனையை நிப்பாட்டி வைக்கணும். பிறகு எளையம்மையை அம்மைவிசாரம் செய்வாங்க. அவங்க பகவதி கோயிலுக்கு முன்னாலே மூத்தம்மைமார் கூடியிருக்குத சபையிலே தீயைத் தொட்டு சத்தியம் செய்வாங்க… பிறகு நீயும் புலைய விசாரத்திலே மீண்டு வந்திட்டேன்னா மகாராஜா உன்னை விட்டிருவாரு…அதோட பழி போயிடும்.”
படைநாயர் எட்டிப்பார்த்து ஈட்டியால் தரையை குத்தி ஓசை எழுப்பினான்.
“தேவகிப்பிள்ளை எளையம்மை இப்ப என்ன சொல்லுதாங்க?” என்று கரியாத்தன் கேட்டான்.
“நீ அவளை தொடவே இல்லைன்னு சொல்லுதா”
“அப்டியா?”
“ஆமாலே, அவ அப்டிச் சொல்லி சத்தியம் செய்ஞ்சதினாலேதானே இதெல்லாம். நீ அவளை தொடவே இல்லைன்னு தேவகிப்பிள்ளை இளையம்மை ஊருசபையிலே வந்து சொல்லி அழுது அழுது எல்லாரையும் நம்ப வைச்சுப்போட்டா. நாகத்தான் முன்னாலே சூலம் தொட்டு சத்தியம் செய்திருக்கா. பகவதிக்கு முன்னாலே விளக்கு தொட்டுசத்தியம் செய்திருக்கா” என்றேன் “அது பொம்புளையாளுகளுக்க ஒரு நிலைபாடாக்கும். கடைசிவரை சம்மதிக்க மாட்டாளுக. கடைசி கண்ணீர்த்துள்ளி வரை விடுவாளுக.”
அவன் இமைதாழ்த்தி கேட்டுக்கொண்டிருந்தான்.
நான்மேலும் குரலை தாழ்த்தி “நீ கழுவிலே ஏறுவே. ஆனா அவளையும் படியடைச்சு பிண்டம் வைச்சு செத்தவளா ஆக்கி வீட்டைவிட்டு அனுப்பிடணும்ல? அவளை முன்னமாதிரி இப்ப முச்சந்தியிலே ஏலம் விடமாட்டாங்க. ஆனா இனி அவளுக்கு சாதிக்குள்ள எடமில்லை. அவ பெறுத பிள்ளைகளுக்கு சொத்தும் ஸ்தானமும் இல்லை. பாவப்பட்ட கீழாளன் நாயரு யாருக்காவது கெட்டி வைப்பாங்க. வாழ்க்கை போச்சுல்லா? அந்தப் பதற்றம்” என்றேன்.
கரியாத்தன் விழிகளை தாழ்த்தி யோசித்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் பெரியவை, இமைகள் கன்றுக்குட்டி இமைகள் போல பெரிய பீலி கொண்டவை. அவனை அப்போது பார்க்க குழந்தை போலிருந்தது.
“சத்தியம் செய்யுததை பத்தி யோசிக்காதே. நீ அம்மைக்க ஒத்தமகன். இசக்கியம்மை புரிஞ்சுகிடுவா. நீ மீண்டு வந்தபிறகு கள்ளம் சொன்னதுக்கு பரிகாரமாட்டு இசக்கி அம்மைக்கு உன் அம்மை ஒரு நேர்ச்சை நேந்து நோன்பிருந்து பலிகொடை குடுத்தா போரும். அவளும் அம்மையில்லா?”
“மாமன் அறியணும், என்னை விளிச்சது தேவகிப்பிள்ளை இளையம்மையாக்கும்” என்றான் கரியாத்தன்.
“தெரியும்டே, தேவகிப்பிள்ளை இளையம்மைக்கு புடவைகொடுத்தவரு பூத்தேடத்து வலிய நம்பூதிரி. அவருக்கு வயசு அறுபது. எளையம்மைக்கு இருபது. எப்டி நிக்கும்? உன்னைய பாத்து மோகிச்சிட்டாங்க…” என்றேன்.
“என்னை மிரட்டினாங்க. வரல்லேன்னா எனக்க அம்மையை கொன்னிருன்னு சொன்னாங்க..” என்றான் கரியாத்தன். “நான் ஆறுமாசமா ஒளிச்சாக்கும் நடந்தேன்”
“அது அவங்க வழக்கமாட்டு செய்யுததாக்கும். காமம் கண்ணை மறைக்கும்லா?” என்று நான் சொன்னேன். “அதை நாம இப்ப பேசவேண்டாம்”
“அன்னைக்கு உரப்புரைக்கு வாடேன்னு என்னை வேலைக்காரி வந்து விளிச்சா. எதுக்குன்னு தெரியாமத்தான் போனேன்… அங்க தேவகிப்பிள்ளை இருந்தா.ஆனா பகவதிப்பிள்ளை மூத்தம்மை பாத்ததுமே நான் அவளை பிடிக்கப் போனேன்னு சொல்லி கதறி அழுதுபோட்டா… என்னைய கைகாட்டிப் விட்டா”
“புரியுது… செரி விடு.. நீ செய்யல்லேன்னு ஒரு சத்தியத்தைச் செய். மிச்சத்தை நான் பாத்துக்கிடுதேன்”
“இல்ல மாமா, நான் சத்தியம் செய்ய மாட்டேன்” என்று கரியாத்தன் உறுதியான குரலில் சொன்னான்.
“என்னடே சொல்லுதே?” என்று நான் கூவிவிட்டேன்.
“நான் சத்தியம் செய்யமாட்டேன். நான் கழுவேறுதேன். கழுவிலே இருக்கிறப்ப கடைசீ ஆசை கேப்பாங்கள்லா? அப்ப பொன்மனை போற பெரிய பாதைக்கு ஓரமா, சந்தை முக்கிலே என்னை அடக்கி கல்லுநட்டி கழுமாடனாக்கணும்னு சொல்லுவேன். அதை சொல்லிட்டே கழுவிலே உக்காருவேன்” என்று அவன் பல்லைக் கடித்தபடி சொன்னான்.
“அங்க நிப்பேன். ஆயிரம் வருசம் சனங்க என்னைய பாக்கட்டும். என்னை கும்பிடட்டும்… கரியாத்தா நீ ஜெயிச்சேன்னு அந்தக் குடும்பம் நின்னு அழுது கண்ணீரு விடுத காலம் வரும். பலிக்கு அடங்க மாட்டேன். மந்திரத்திலே நிக்க மாட்டேன். அந்த வீடிருக்கும் இடத்தை குளம் தோண்டினபிறகுதான் நிறைவேன்.”
அவன் சொற்கள் மிகமிக ரகசியமாக, எனக்குள் ஓர் எண்ணமாக எழுபவை போல கேட்டன. “டேய் மக்கா..” என்று நான் கைநீட்டினேன்.
“ஊரு அறியட்டும். உலகம் அறியட்டும். நாடு முழுக்க அறியட்டும்” என்று அவன் பல்லைக் கடித்தபடி சொன்னான்.
“டேய் சொல்லுததை கேளு… வேண்டாம் மக்கா. நான் இப்ப கழுமேடைய பாத்துட்டாக்கும் வாறேன்.”
“நான் மானசீகமாட்டு நூறுமுறை கழுவேறியாச்சு..”
“நான் நெஞ்சிலே கையை வச்சு சொல்லுதேன், தூது வந்ததே உனக்காகத்தான்… சத்தியமா நீ வாழணும்னுதான்.”
“செத்தா மயிரே போச்சு மாமா. என்ன சொன்னீக, பழி வந்திரும்னு பயப்படுதாக இல்ல? அவங்களுக்கு நாம திருப்பிக் குடுக்க இந்த பழி மட்டும்தானே இருக்கு?” என்று அவன் சற்று கோணலான புன்னகையுடன் கேட்டான்.
“வேண்டாம்டே மக்கா” என்றபோது நான் கண்ணீர் வழிய அழுது கொண்டிருந்தேன்.
படைநாயர் மீண்டும் ஈட்டியுடன் எட்டிப்பார்த்தான்.
அவனை திரும்பிப் பார்த்துவிட்டு கரியாத்தன் சொன்னான். “பேஷ்கார் விசாரணை நாளைக்கு இல்ல மாமா, இப்ப. அவரு நாளைக்கு வடசேரிக் கிருஷ்ணன்கோயிலுக்கு போறாரு… விசாரணை இப்பதான். இதோ என்னைய கூட்டிட்டுப் போயிருவாங்க”
“வேண்டாம்டே மக்கா… சொன்னாக்கேளு.”
அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு தெரியாது… எளங்கன்று நீ”
“போர்க்களத்திலே தலைப்பலியா நிக்கணுமானா எளங்கன்றா இருக்கணும் மாமா.”
“போதும்” என்று படைநாயர் வந்து சொன்னான். “அவனை கூட்டிட்டு போகணும்… ஆளு வந்திருக்கு.”
நான் எழுந்துகொண்டு கண்ணீருடன் கையைக் கூப்பி நின்றேன். “வேண்டாம் மக்கா! வேண்டாம் மக்கா” என்று முணுமுணுத்தேன்.
இரு படைநாயர்கள் வந்து சங்கிலியின் பூட்டை திறந்து கரியாத்தனை விடுவித்தனர். சங்கிலி குலுங்கும் ஓசையில் என் மனம் நடுங்கியது.
அவன் கைகளை அச்சங்கிலியால் சேர்த்து பிணைத்தனர். அவன் புன்னகையுடன் என்னை நோக்கி திரும்பி எங்களுக்கு மட்டுமான புலைய மொழியில் “ஆனால் உண்மையில் நான் தேவகிப்பிள்ளை எளையம்மையை தொடவே இல்லை…” என்றான்.
“மக்கா!” என்று நான் கைநீட்டி கூவிவிட்டேன்.
அவனை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அவன் தரையில் சங்கிலி இழுபடும் ஒலியுடன் வீங்கிய கால்களை எடுத்துவைத்து நிதானமாக நடந்து சென்றான்.
***