கதைத் திருவிழா-2,செய்தி[சிறுகதை]
அன்புள்ள ஜெ
செய்தி சிறுகதை ஒரு அழகான இனிமையான கதை. சில பழைய நினைவுகள் தித்திக்குமே அதைப்போல. இரண்டு முதல் அனுபவங்கள், இரண்டுபேருக்குமே. ஒரு பெண்ணிடம் உன்னை முத்தமிடவேண்டும் என்று ஆசை என்று அவன் சொல்வது அவனுக்கு முதல் முறை. அப்படி ஒருவன் தன்னிடம் காதல்மொழி சொல்லும் அனுபவம் அவளுக்கும் புதிதாக இருக்கலாம். அவள் ஒளிகொண்டு பொலிவது அதனால்தான். காதலின் இனிமை புனிதம் பற்றியெல்லாம் சொல்லப்படுகிறது. குற்றவுணர்ச்சியும் ஆக்ரமிப்பு உணர்ச்சியும் இல்லாத மென்மையான காதலும் அப்படி இனிமையானது தூய்மையான இன்பம் என்றுதான் தோன்றுகிறது
எஸ்.அருண்குமார்
***
வணக்கம் ஜெயமோகன்.
நலம்தானே
செய்தி சிறுகதை படித்தேன். இதை எழுதுவது கம்பிமேல் நடக்கும் வித்தைதான். துளி தவறினாலும் கதையில் காமம் மேலே வந்துவிடும் அபாயம் உள்ளது.
பதின்பருவ வயதில் ஏற்படும் பாலியல் உணர்வும்,அதனால் தனியாக ஒரு பெண் அழைக்கும்போது ஏற்படும் எண்ணங்களும்தான் கதைசொல்லிக்கு ஏற்படுகின்றன
அவளைப் பார்க்க முதலில் செல்லும்போதே சுற்றுமுற்றும் யாரும் இல்லை என்று பார்த்து விட்டுச் செல்லும் அவனுக்கு அவள் மார்பகங்கள் தெரிகின்றன. பின்னால் கடிதத்தில் இருப்பதைப் படித்து முடித்தபின் அருகில் அமர்ந்து என்னைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லையா என்று கேட்கும்போது அவளின் உருவ அழகு அவனை இன்னும் கவர்வது அவன் பார்வையின் மூலம் தெரிகிறது. அந்த வயதின் அவத்தை இது.
அந்த அழகுதான் கடிதத்தில் இல்லாத வருணனையையும்,அவள் பற்றிய அவன் விருப்பங்களையும் அவள் கணவன் எழுதியதாகச் சொல்ல வைக்கிறது.
அதே மனநினைவுகளுடன்தான் விஜயஸ்ரீயைப் பார்க்கிறான் அது அவனின் பாலுணர்வைத் தூண்டுகிறது. ஆனால் மனத்தின் ஓரத்தில் இருக்கும் நேர்மை வந்து தான் அவளைப் பயன்படுத்திக் கொண்டு அவளின் முகத்திற்கு எதிரேயே அவளைப் பற்றிப் பாலியல் நோக்கில் படித்துக் காட்டியதை எண்ணிப் பயப்படுகிறான். அப்பொழுது கூட அவன் வருத்தப்படவில்லை.
யாராவது மீண்டும் அக்கடிதத்தைப் படித்துத் தான் இல்லாததைப் படித்ததைக் கண்டுபிடிப்பிடித்துவார்களா என அஞ்சுகிறான்.ஆனால் அவனால் அவளை மறக்கவும் முடியவில்லை. போய்ப்பார்க்கவும் அச்சமாக இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சாகத் தன்னை உணர்கிறான்.
இறுதியில் இரண்டு பேரின் கண்களும் பேசுவதில் கதை அற்புதமாக முடிகிறது. அவனைப் பற்றி அவளும் அவளைப்பற்றி அவனும் எண்ணுவதை வாசகரின் ஊகத்துக்கே விட்டுவிடுவதுதான் சிறப்பாக இருக்கிறது.
வளவ. துரையன்,
***
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
கேரளவரலாற்றுப் பின்னணியில் வெளிவந்திருக்கும் நான்காவது கதை இது என்று நினைக்கிறேன். [ஆயிரம் ஊற்றுக்கள், போழ்வு,இணைவு] இந்தக்கதை உருவாக்கும் உணர்ச்சிகள் விசித்திரமானவை. ஒன்று இது சேரசோழ பாண்டிய வரலாறு போல இல்லை. அதெல்லாமே லெஜெண்ட் மாதிரி ஆகி ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒரு யதார்த்தத்தை உருவாக்கவே முடியது. புராணமாகவே சொல்லமுடியும். இது பக்கத்திலுள்ள கதை. ஆகவே இதிலுள்ள யதார்த்தம் துல்லியமாக இருக்கிறது. அரச சம்பிரதாயங்கள் பேச்சுமொழி எல்லாமே. இரண்டாவதாக பழைய கதைகளில் அரசுச்சூழ்ச்சிக்ளை எல்லாம் நம்மால் சரியாக கற்பனைசெய்ய முடியாது. ஆனால் இந்தமாதிரி கதைகளில் சூழ்ச்சிகளை மிகநெருக்கமாகச் சொல்லமுடியும். உண்மையில் அரசியல் என்பது இப்ப்டிப்பட்ட சூழ்ச்சிகளாலானதாகவெ இருக்கும்
ஆனால் அதேச்மயம் இது வரலாறு. ஆகவே சமகால வரலாற்றிலிருந்து ரொம்ப தள்ளி இருந்துகொண்டிருக்கிறது. இதனால் இதற்கு இன்றைய அரசியலில் இருக்கும் பாலிமிக்ஸ் அம்சம் வருவதில்லை. இது வேறுவகையானது. இதுக்கு ஒரு லெஜெண்டின் இயல்பும் இருக்கிறது. லட்சுமி பார்வதி ரெண்டுபேருமே ஒரு வகையான உருவகங்களாகவே இருக்கிறார்கள். புனைவுக்கு அந்த சுதந்திரமும் இருக்கிறது. இந்த இரு அரசிகளையும் வைத்து எல்லா அரசிகளுக்கும் ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிவிடமுடியும் ஒருத்தி லட்சுமி, இன்னொருத்தி துர்க்கை. லட்சுமிக்காக துர்க்கை சீறி எழுகிறாள்
எஸ்.அர்விந்த்
***
ஜெ
லட்சுமியும் பார்வதியும் கதையில் லட்சுமிபாய் அரசி சொல்லும் ஒரு வரி என்னை மனம்கலங்கவைத்துவிட்டது. நினைக்க நினைக்க ஆறவே இல்லை. லட்சுமிபாய் தம்புராட்டி சொல்கிறார், ஒரு நியாயத்தை விளங்க வைத்துவிட்டால் மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பியதுதான் தன் தவறு என்று. அது இளமையில் நாம் நினைப்பது. ஆனால் மக்கள் நியாயங்களை அல்ல, தங்களுக்குச் சௌகரியமான நியாயங்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை அறிவதைத்தான் Coming of age என்று சொல்கிறர்கள். இந்தக்கதையை வாசித்தால் லட்சுமி முதிர்ச்சியையே அடையவில்லை. ஆனால் பார்வதி ஏழு வயசிலேயே முழுமுதிர்ச்சி அடைந்த அரசியாக இருக்கிறார் என்று தெரிகிறது. மற்றமனிதர்கள் ஒரு கையில் கரும்பும் இன்னொரு கையில் துரட்டியுமாக அணுகப்படவேண்டியவர்கள் என்ற முதிர்ந்த பார்வையை அவர் அடைந்திருக்கிறார்
சாரங்கன்.
***