செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-2,செய்தி[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

செய்தி கதையின் மையமான வரி கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டால் திரும்ப எடுத்துவிட முடியாது என்பதுதான் என்பது என் வாசிப்பு. அவன் செய்தியை அளித்துவிட்டான், அது போய்ச் சேர்ந்துவிட்டது. அவன் நினைப்பதுபோல அது வாபஸ் பெறத்தக்கது அல்ல. அது அவளுடைய சொத்து. அவளுடைய புன்னகை அதைத்தான் காட்டுகிறது

எஸ்.ராஜேஷ்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்று செய்தி சிறுகதையை வாசித்து விட்டதும் உடனடியாக இதை எழுதுகிறேன்.

சிறிய கதை. காமத்தின் முதல் அழைப்புகளில் தடுமாற்றமடையும் இளமை பற்றியது. அது காமத்தை நேரடியாகச் சந்திக்க முடியாமல் பல டிஃபென்ஸ் மெகானிசங்களைப் பயன்படுத்துவதை மிகவும் ரசித்தேன். வாளிப்பான பெண்ணின் சிலிர்ப்பும் அதற்குத் தான் காரணம் என்ற ஆனந்தமும் நிழல் போல தொடர்ந்து வருகிறது. அவன் பெயரே அனந்தன். எருமையின் எடையும் சதைகளும் நிறமும் பயத்தையும் அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தையும் ஒரு சேர வரவழைப்பன. அதைக் கண்டு கொள்கிறது அனந்தனின் ஆழ்மனம்.

தங்கபுத்தகத்தில் வருவதைப் போலவே இதிலும் மையத்தில் ஒரு நூல் இருக்கிறது. அது இண்லேண்ட் லெட்டர். அதில் தனது புனைவையும் சேர்த்து நகலெடுத்து அவளுக்கு அளிக்கிறான் அனந்தன்; இப்படி ஒரு கற்பனையை நான் உருவாக்கிக் கொண்டேன். மீசையரும்பும் பருவத்தில் ஒரு பெண்குரல் ‘செல்லம்’ என்று அழைக்கிறது. அது அவனை நின்ற இடத்திலேயே பறக்கச் செய்வதும், அவன் அவளை நேருக்கு நேர் சந்திக்க துணிவின்றி பதுங்கிக் கொள்வதும் அப்பருவத்தில் தவறாமல் நிகழ்ந்திருக்கும் கணங்களின் சேகரிப்புகள்.

ஒரு கன்ஃபெசன். படித்து முடித்ததும் ‘தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி’ பாடலை யூடியூபில் பார்த்தேன். மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டும் மனதில் காட்சியாய் விரிந்து கொண்டும் இருந்திருக்கக் கூடிய  உறக்கம் கெடுத்திருக்கக் கூடிய பாடல்தான் என்று தோன்றியது.  ‘வீணப் பூவே குமாரனாசாந்தே’ என்ற பாடலையும் கேட்டேன். அது அற்புதமான மெலடி. காமத்தைக் கலைக்குள் வைத்து காதல் என்று சொல்லும் பாடல் என்று முன்னதிலிருந்து இதைப் பிரித்தறிந்து கொண்டேன்.

நன்றி

கமலக்கண்ணன் கோபிநாதன்

***

அன்புள்ள ஜெ

மிகச்சிறியகதையாக தோன்றியது செய்தி. ஆனால் வார்த்தைகளைப் பார்த்தேன். பெரியகதைதான். வாசிப்பு தெரியவில்லை. இந்தக்கதையை மீண்டும் வாசித்தேன். இது இவ்வளவு உயிர்ப்புள்ளதாகத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று. அதற்குக்காரணம் அந்த சூழலும் மெய்யான வாழ்க்கையும்தான் என்று தோன்றியது. இந்தக்கதையையே அவள்- நான் என்றே எழுதியிருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் சூழல், அந்த ஏரிக்கரை வீடு, அவளுடைய தோற்றம் எல்லாமே அத்தனை விரிவாகச் சொல்லியிருந்ததுதான் மெய்யக்வே ஒரு உலகத்துக்குள் போய் அந்த வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தை அளித்தது. அதுவே கதையை ஒரு இனிமையான அனுபவமாக ஆக்கியது

சரவணக்குமார்

***

வணக்கம் ஜெ

செய்தி சிறுகதையை வாசித்தேன். எருமை மாட்டின் தினவைப் போன்றதாகத்தான் இருக்கிறது இளமைக்கே உரிய பாலியல் கவர்ச்சி. அந்தத் தினவினால் உந்தப்பட்டுச் செய்யப்படும் செய்கைகள் காமத்தின் முதற்சுவையைத் தரக்கூடியன. காலமெல்லாம் முதல் இனிப்பென நினைவில் இருக்கும்.

அரவின் குமார்

***

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு துளி நீலம்– சுனில் கிருஷ்ணன்