படித்தவுடனே பதில் போட நினைத்தேன் வேறு வேலைகள் ஆக்ரமித்து விட்டன. முதலில் அய்யாச்சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் இன்னும் பல்லாயிரம் மரங்கள் நடப்படப் பிரார்த்திக்கின்றேன். என்னால் அவருக்கு முடிந்த அஞ்சலி ஒரு நூறு மரங்களை நடுவது மட்டுமே. இவரைப் பற்றியும் இவரைப் போலவே தமிழ் நாட்டில் இருக்கும் இன்னும் ஒரு பத்திருபது உன்னதமான மனிதர்களையும் தொடர்ந்து பசுமை விகடன் மற்றும் மரம் வளப்பதை ஊக்குவிக்கும் இணைய தளங்களில்/கூகுள் குரூப்புகளில் படித்து வருகிறேன். எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பாராமல் இவர்கள் மரம் நடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார்கள். போற்றுதலுக்குரிய பெரு மக்கள்.
என்னால் முடிந்த வரையில் ஒரு சின்ன முயற்சியாவது எடுக்க வேண்டும் என்ற உந்துதலில் ப்ளாட் போட்டு விற்றிருந்தால் சில கோடி லாபங்களைப் பெற்றுத் தந்திருக்கக் கூடிய ஒரு ஏக்கர் நிலத்தில் பிடிவாதமாக நூறு மரங்களை வளர்க்குமாறு என் தந்தையைக் கேட்டுக் கொண்டேன். அவரும் தன் முதிய வயதில் இதில் முனைப்புடன் ஈடுபட்டு என் நோக்கத்திற்கு உதவினார். இப்பொழுது நூறு கன்றுகளை நட்டு அவையும் வேகமாக வளர்ந்தும் வருகின்றன. மரம் வளருங்கள் என்று அரசாங்கம் விளம்பரம் செய்கிறது ஆனால் உண்மையில் மரம் நட முயல்பவர்களைப் பல்வேறு வகையில் சித்ரவதை செய்கிறது என்பது அனுபபூர்வமாக நான் கண்ட உண்மை. நாங்கள் நட்ட மரங்களில் மா, பலா, தேக்கு போன்றவையும் இருப்பதால் அவை எதிர்காலத்தில் எங்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் என்பதால் எங்களது முயற்சி ஒரு வியாபார முயற்சியாகக் கருதப் பட்டு நாங்கள் பயன் படுத்தும் மின்சாரத்துக்கு மதுரை டவுண் ஹால் ரோட்டில் ஒரு விற்பனை நிலையம் செலுத்தும் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். ஆம் கம்ர்சியல் ரேட்டில் சில ஆயிரங்கள் எங்களிடமிருந்து மின்சாரக் கட்டணமாக வசூலிக்கிறார்கள் அதைக் குறைக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று என் அப்பா சொல்கிறார். அனேகமாக அதிக விலையில் மின்சாரம் வாங்கி சுற்றுப் புறத்தை பசுமையாக்க முயன்ற கிறுக்கன் நான் ஒருவனாகவே இருப்பேன் என்று நினைக்கிறேன். தண்ணீரை வீணடிக்கக் கூடாது என்பதினால் செலவு செய்து ட்ரிப் இரிக்கேஷன் அமைத்திருக்கிறோம். இருந்தாலும் மாதம் சில ஆயிரங்கள் செலவாகின்றன.
இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இத்தனையாயிரம் மரங்களை நட்டு வரும் பெரியோர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும். நாங்கள் மர நட முனைந்த பொழுது பசுமை விகடனில் படித்து விட்டு இப்படி தன் டி.கல்லுப்பட்டி நிலத்தில் மரம் வளர்த்து வரும் ஒருவரை நான் தொடர்பு கொண்ட பொழுது அவரே ஆர்வத்துடன் மதுரைக்கு வந்து என் தந்தைக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார். வனத் துறை, தோட்டத்துறை அலுவலர்களை என் தந்தை பல முறை சென்று அணுகிய பொழுதும் இன்று வரை எவரும் வந்து பார்க்கவும் இல்லை உதவவும்மில்லை. எந்தவித அரசு உதவியுமின்றி, மானியமும் இன்றி நாங்களாகவே காசு கொடுத்து கன்று வாங்கி நட்டு வளர்த்து வருகின்றோம். அரசாங்கம் இதற்காக ஒதுக்கும் பணம் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை.
மரம் நடும் இயக்கம் பெரும்பாலும் அய்யாச்சாமி போன்ற தன்னார்வலர்களினாலேயே நடத்தப் பெற்று வருகிறது. அவரது மறைவு இந்த முயற்சிக்குப் பெரும் இழப்பாகவே இருக்கும். அவர் அளவு இல்லாவிட்டாலும் அவரைப் பின்பற்றி ஒவ்வொருவரும் ஒரு சில மரங்கள வளர்ப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்
அன்புடன்
ராஜன்