விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020
ஜெ,
சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன் விழா நடைபெறுவதிலும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என எண்ணினோம். இறுதியாக தாங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, குமரகுருபரன் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 10 அன்று, விருது பெறும் கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களின் இல்லத்திற்கே சென்று, விருதை அளித்து அவரை கவுரவிப்பது என முடிவு செய்தீர்கள். தொடர்ந்து, வேறு ஒரு சந்தர்பத்தில் விருது விழா நடைபெறும் எனவும்.
இன்று மாலை, கவிதா சொர்ணவல்லி, புகைப்பட கலைஞர் கார்த்திக், ராஜகோபாலன், சண்முகம், சௌந்தர், சுரேஷ், காளிபிரசாத் மற்றும் நான் கவிஞர் வேணுவை சந்திப்பதாக முடிவு செய்தொம். சென்னை அருகே, அடையாறு ஆற்றின் முதல் உற்று உருவாகும் மலைப்பட்டு ஏரியின் அருகே மணிமங்கலத்தில் உள்ள அவரது குடியிருப்பில் உள்ள ஒரு பூங்காவில் சந்திப்பு நடைப்பெற்றது. இத்தனை நபர்கள் தகுந்த சமூக இடைவெளியுடன் கூட திறந்த வெளி அவசியமாக இருந்தது. வெளிச்சம் மறைவதற்குள் முதலில் விருது அளித்து, புகைப்படங்கள் எடுத்துவிட்டோம். பிறகு வேணு, தனது குடும்ப நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, வேணுவின் கவியுலகு குறித்து ஒரு உரையாடல் தொடங்கியது. சமகால கவிஞர்களின் கவியுலகு பெரும்பாலும் அகச்சிக்கல்கள், உணர்வெழுச்சிகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேணுவின் கவியுலகு இதனிலிருந்து முற்றிலும் விளக்கியுள்ளது. இது குறித்து வேணுவிடம் கேட்ட பொழுது, “எண்ணங்கள் உணர்வுகள் பல்கி பெருகக்கூடிய மனநிலை, ஒன்றிலிருந்து ஒன்றென விரிந்து செல்லக்கூடிய தன்மை, ஒரு கவியனுபவம். அதன் எதிர் திசையில், உணர்வுகள் அருகி, அற்றுபோகும் இன்மை வேறு வகை கவியனுபவம். இந்த இரண்டு எதிர் எல்லைகளுக்கிடையேயான பயணத்தின் எந்த நிலையிலும் கவிதை நிகழலாம். எங்கு நிகழ்கிறது என்பதை பொறுத்து கவிதையின் தன்மை மாறுபடும். இதில், எண்ணங்கள் ஏதும் இல்லாத அந்த ஏகாந்த நிலை கவிதை பிறக்கக்கூடிய ஒரு தளம். தியானம் போன்ற பயிற்சிகள் மூலமாகவோ, தன்னிச்சையாகவோ அடையக்கூடிய அந்த தருணம், கவியனுபவத்திற்கு நிகரான ஒரு அனுபவம். இது தான் நான் உத்தேசிக்கும் கவியனுபவம்.” என கூறுகிறார். அந்த சலனமற்ற stillnessல் இருந்து வேணுவின் கவிதைகள் பிறக்கின்றன.
அந்த நிலையில் எழும் கவிதைகளுக்கும் தத்துவார்த்த தேடல்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி கேட்டதற்கு, “வாசகர்கள் அந்த கவிதைகளை, பல கோணங்களில் ஒரு கோணமாக தத்துவார்த்த நோக்கில் வாசிக்கலாம். ஆனால், தன்னளவில் கவிதைக்கு தத்துவத்தில் இருந்து ஒரு விலகல் அவசியமாகிறது” என கூறுகிறார். “தத்துவார்த்தம் ஒரு அறிவு செயல்பாடு. சொற்களால் ஆனது. ஆனால், சொற்களுக்கும் தர்கங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ வேண்டியது கவிதை. அது தனித்து இயங்க வேண்டிய செயல்பாடு.”
இவ்வகையில் வேணுவிற்கு முன்னோடியாக ந. பிச்சமூர்த்தி அவர்களை நண்பர்கள் குறிப்பிட்டார்கள். ஆரம்பகால நகுலன், பிரமிள் கவிதைகளும் ஒப்பிட்டு பேசினார்கள். இவ்வரிசையில் தேவதேன் வேணுவின் கவியுலகிற்கு மிகவும் நெருங்கி வரும் கவிஞர். அதே சமயம், வேணுவின் கவிதைகளில் உள்ள காட்சி சித்தரிப்புகள் அவரை, தேவதச்சனுக்கு அருகில் கொண்டு செல்கிறது என்ற பார்வையையும் நண்பர்கள் முன்வைத்தார்கள்.
\
உரையாடலின் ஊடே, வேணு தான் 2010ல் இருந்து கவிதைகள் எழுதி வருவதாகவும், ஆரம்பம் முதலே அறிவார்த்தமாக எழுதப்படும் கவிதைகள், எண்ணி உருவாக்கப்படும் படிமங்கள் போன்றவற்றின் மீது விலக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். அதே சமயம், தனது கவிதைக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லாமல், தனது கவிதையாகவே வாழும், தேவதேவன் அவர்கள் தனக்கு மிக அனுக்கமாக கவிஞர் என குறிப்பிடுகிறார்.
தனது கவிதைகள் ‘அலகில் அலகு’ என்ற தொகுதியாக வெளிவர ‘ஜாஜா’ ராஜகோபாலன் அளித்த ஊக்கம் முக்கியமானதாக இருந்ததாக கூறினார்.
குமரகுருபரனின் பிறந்தநாள் அன்று, அவரது நினைவு விருதை கவிஞருக்கு அளித்துவிட்டோம். விருது விழா நடைபெறுவதற்கு ஏற்ற சூழல் விரைவில் அமைய வேண்டும் என்ற விருப்பம் ஒரு பக்கம். அதே சமயம், இணையம் வழியாக இந்த விருதையும் கவிஞரையும் கவனப்படுத்த சில நிகழ்வுகளை வரும் நாட்களில் ஒருங்கிணைக்கும் எண்னமும் உள்ளது.
அன்புடன்,
லாஓசி
கருவெளிஎங்கும்
மின்னி மின்மினுங்கும்
விண் மின்மினிகள்.
– அலகில் அலகு, வேணு வேட்ராயன்.