சாதியமும் புரட்சிகரமும்

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை

சட்டநடவடிக்கை பற்றி…

பா.செயப்பிரகாசம் பற்றி

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

அன்புள்ள ஜெ

நேரடியாக ஒரு கேள்வி. பா.செயப்பிரகாசம் அவர்களை சாதியவாதி என நம்ப உரிய முகாந்திரங்கள் உள்ளன என்று எழுதியிருக்கிறீர்கள். இவை என்ன என்று சொல்லவேண்டும் அல்லவா? அப்படிச் சொல்வது பா.செயப்பிரகாசத்தின் வாழ்நாள் பணியை அவமதிப்பது என்கிறார் பெருமாள்முருகன். எதிர்த்தரப்பாக அல்ல, வாசகனாக இதைக் கேட்கிறேன்.

எம்.சிவக்குமார்

***

அன்புள்ள சிவக்குமார்,

திரு.பா.செயப்பிரகாசம் சாதியமைப்புகளுடனும் இணைந்து சாதிப்புலத்தில் செயல்படுபவர் என்பது எப்போதுமே மார்க்ஸிய-லெனினியச் சூழலில் பேசப்படும் ஒரு செய்தி. ஒர் ஆண்டுகூட இது பேசப்படாமல் இருந்ததில்லை.

ஒரு வாசகனாக இவ்வாறு அறிவுச்சூழலில் பேசப்படுவதுதான் எனக்குத் தெரியும். அவற்றுக்கு பா.செயப்பிரகாசத்தால் பதில் ஏதும் சொல்லமுடியவுமில்லை. அவற்றை வாசிக்கவும் அவற்றில் இருந்து கருத்துருவாக்கம் செய்யவும் எனக்கு உரிமை உண்டு. அதற்குப்பெயர்தான் கருத்துச்செயல்பாடு. பா.செயப்பிரகாசம் அவரை சாதியவாதி என அடையாளப்படுத்தும் அவருடைய முன்னாள் தோழர்களுக்கு நேராக கிளம்பியிருக்கவேண்டும். நான் பொதுவெளியில் கிடைக்கும் அச்சான்றுகளில் இருந்து என் மனப்பதிவை உருவாக்கிக் கொள்கிறேன். அவரை பொய்யாக ஏதும் சொல்லிவிடவில்லை. புதிதாகவும் சொல்லவில்லை.

ஆகவே அவருடைய இயக்கத்தில் இருந்த ஒருவர் அவரைப்பற்றி எழுதும்போது அவருடைய இந்த பிம்பத்தைத்தான் இயல்பாகக் குறிப்பிட முடியும். தமிழக அரசில் திமுக அதிமுக அனைத்துக்கும் அணுக்கமாக இருந்து அரசியல் செய்த ஒரு சூழ்ச்சியாளர் வேறெப்படியும் இருக்கமுடியாது.

ஏற்கனவே ஒரு விவாதத்தில் நான் எஸ்.வி.ராஜதுரையை அன்னியநிதி பெறுபவர் என்று குற்றம்சாட்டிவிட்டேன் என்று கொதிப்படைந்தனர். அதை ஒரு செய்தியாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது நான் அவருடைய முன்னாள் தோழர்கள் எழுதிவெளியிட்ட கட்டுரைகளில் இருந்து, அவர்களின் நூல்களில் இருந்து அறிந்துகொண்ட செய்தி. அக்குற்றச்சாட்டு அவர்மேல் அவருடைய தோழர்களால் முன்வைக்கப்படவில்லை என்று அவரே சொல்லமாட்டார். அவரே அதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.

இன்று தமிழ் எழுத்தாளர்கள் ஏதோ பா.செயப்பிரகாசத்தை நான் முதல்முறையாக சாதியவாதி என்று குற்றம்சாட்டிவிட்டேன் என்று கொதிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எப்போதுமே அவர் அப்படித்தான் பார்க்கப்பட்டார். இது இன்றுள்ள சிலருக்கு உண்மையிலேயே தெரியாமலிருக்கலாம். ஆனால் பெருமாள் முருகனுக்கும் சுகுமாரனுக்கும் எல்லாம் மிக நன்றாகத் தெரிந்த விஷயம்.

நீங்கள் பா.செயப்பிரகாசம் என்று சும்மா கூகிளில் தேடிப்பாருங்கள், உடனே வரும் கட்டுரைகளில் இருந்தே  அவர் சார்ந்த ஒரு கூட்டம் இடதுசாரிப் பரப்பில்  ஒரு சாதியக் குறுங்குழுவாக எப்ப்டிச் செயல்படுகிறது என எழுதப்பட்ட கட்டுரைகள் கிடைக்கும்

உதாரணமாக, இப்போது என்னை மிரட்டுவதற்காக இவர்கள் சார்பில் வக்கீல்நோட்டீஸ் அனுப்பியிருப்பவர் அஜிதா என்பவர். இவர் பி.வி.பக்தவத்சலம் என்ற வழக்கறிஞரின் மகள். இவர்கள் பா.செயப்பிரகாசத்துடன் இணைந்து ஒரு சாதிக்குழுவாக செயல்பட்டிருக்கிறார்கள், மார்க்ஸிய இயக்க வரலாற்றையே சிதைத்து தங்களுக்குச் சாதகமாக எழுத முயன்றிருக்கிறார்கள் என்பதற்கான சான்று இந்தக் கட்டுரை.

ஒரு பிரபலம்; ஒரு குறுநூல்; ஊடகங்கள் இ.செந்தில்

இந்தக்கட்டுரையை விட கறாராக எழுதப்பட்டது இதில் குறிப்பிடப்படும் த.நா.மா.லெ.க வெளியீடான “புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை” என்ற நூல். இவர்களின் சாதியக்குறுங்குழு அணுகுமுறையின் அழிவுப்போக்கை சுட்டிக்காட்டும் புகழ்மிக்க நூல் இது.

என் தளத்தில் ஒரு முன்னாள் இடதுசாரி எழுதிய கடிதத்தில் உள்ள ஒரே வரிதானே இந்த கட்டுரையில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளது? எங்கே அவதூறு வருகிறது?  அந்தக் கட்டுரைக்கு பா.செயப்பிரகாசம் என்ன மறுப்பு தெரிவித்தார்? எங்கே பொங்கினார்? ஆக, அவர் தேடுவது வெறும் விளம்பரம். எழுத்தாளன் என்றால் தனியாள், எளிய இலக்கு என நினைக்கிறார். நானும் ஒரு சாதிய பின்புலத்தை காட்டியிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்.

இதையெல்லாம் நான் சொல்லவில்லை இந்த விவாதமெல்லாம் பதினைந்தாண்டுகளாக அனேகமாக நாள்தோறும் நடப்பது. நான் மேற்கோள்தான் காட்டுகிறேன். இந்த சாதியக்கூட்டமைப்பு பற்றியெல்லாம் எழுத்தாளர்களுக்கு தெரியாமலிருக்கலாம். அத்தனை ‘களப்பணியாளர்களுக்கும்’ தெரியும். அவர்களின் சொந்த சாதிய பார்வை என்ன என்பதைக்கொண்டே அவர்களின் அணுகுமுறையை நாம் பார்க்கவேண்டும்.

எழுத்தாளனின் அணுகுமுறை அல்ல இது. ஓர் உதாரணம் சொல்கிறேன், சென்ற ஆண்டு நான் தாக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரிய சாதியச்சங்க அமைப்பான என் சாதிச்சங்கம் என்னை அணுகியது, என்னை ஆதரிப்பதாகச் சொன்னது. குமரிமாவட்டத்திலேயே ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் சொத்து உள்ள அமைப்பு அது. என் பள்ளித்தோழன் அதில் பொறுப்பில் இருக்கிறான். நான் மறுத்துவிட்டேன். அந்த ஆதரவைப் பெறுவது ஓர் எழுத்தாளனுக்கு பீடல்ல என்று சொல்லிவிட்டேன். வேறு எழுத்தாளர்களுக்கும் இதையே சொல்லியிருக்கிறேன். கண்மணி குணசேகரனை கடுமையாக கண்டித்து எழுதியிருக்கிறேன்.

இதோ புரட்சிகரச் சாதியக்குறுங்குழு திராவிட அரசியல் செய்யும் அரசு உயரதிகாரி எழுத்தாளர் [எத்தனை அடையாளங்கள்,  அந்தப் பெருமாள் ஒருவரே இதற்கு சமானமானவர்] ஒருவரை நம் எழுத்தாளர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர் மார்க்ஸியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம்,திராவிடம் ஆகிய கருத்தியல்களில் ஒரே சமயம் சமரசமின்றி செயல்படுபவர் என்கிறது அறிக்கை– இப்படி ஒரு அபத்தத்தில் கையெழுத்திட இந்த எழுத்தாளர்களுக்கு கூசவில்லையா? நல்ல முன்னுதாரணம். இதில் ஆவேசமாக ஈடுபடும் யமுனா ராஜேந்திரனும் இந்த சாதியக்குறுங்குழுவில் இடம்பெறுபவர்தான்.

ஆக,  எல்லாருக்கும் சாதியக்குழுவாகச் செயல்பட்டாலும் புரட்சியாளராக தோற்றமளிக்கமுடியும் என்ற உறுதிப்பாடு கிடைக்கிறது. கையெழுத்து ஏன் போடமாட்டார்கள்?

ஒரு வேடிக்கை, ஒரு நண்பர் இவருடைய இருளுக்கு அழைப்பவர்கள் என்ற கதையை சுட்டி ஒரு கடிதம் போட்டிருந்தார். நீதிமன்றங்கள் பன்றித்தொழுவங்கள், வர்க்கச்சார்புடன் அப்பட்டமாக அநீதி மட்டுமே வழங்குபவை என்று எகிறிக்குதிக்கும் கதை. இதை எழுதியவர் எந்த நம்பிக்கையில் நீதிமன்றத்துக்கு என்னை அழைக்கிறார்? ‘அதுவேற வாயி’ என்பார். நீதிமன்றத்துக்கு வந்தால் சூரியதீபனா நானா அய்யய்யோ என்பார். இந்த நடிப்பைத்தான் குமட்டலெடுக்கும் போலித்தனம் என்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]