சட்ட நடவடிக்கை

பா.செயப்பிரகாசம் பற்றி

இணையத்தில் திரு.செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. நேரடியான கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தான். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்னவேண்டுமென்றாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறுநடவடிக்கை.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப்பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.திரு.செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறுவழக்கும் துறைரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் மொழியைக்கொண்டே வழக்கை நடத்துகிறோம்

இதைச் செய்யவேண்டிய கட்டாயம் இன்று உருவாகிவிட்டது. நான் எப்போதுமே வசைகளையும் அவதூறுகளையும் பொருட்டாக நினைத்தவன் அல்ல. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் நேரடியாகப் பெயர்சுட்டி எழுதிக்கொண்டிருக்கும் சாக்கடைப் பதிவுகளைக்கூட கருத்தில் கொண்டதில்லை.

ஏனென்றால் கருத்துச்செயல்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு என்பது ஓர் அம்சம். நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்க கருத்துக்களையே கருத்துவிவாதங்களில் சொல்லவேண்டும் என்றால் அதன்பின் கருத்துவிவாதமே இல்லை.சென்ற சில ஆண்டுகளாகவே இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல்கூடி இந்தப்போக்கை முன்னெடுத்து நீதிமன்றத்தை ஒரு மிரட்டல்கருவியாக மாற்றி அறிவியக்கத்தைச் சீரழித்துவருகிறார்கள்.

இந்நடவடிக்கையேகூட திரு செயப்பிரகாசம் அவர்கள் எனக்கு அனுப்பியிருப்பதாக ஒரு வக்கீல் நோட்டீஸ் இணையத்தில் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டபிறகுதான். இதை இப்படியே விடமுடியாது.

அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரைகுத்தப்படும் எவரும் இங்கே நீதிமன்றத்தை அணுகியதில்லை. அமைப்புக்கு எதிரான புரட்சியாளர்களாக தங்களை சொல்லிக்கொண்டு அத்தனைபேர் மீதும் அவதூறு கக்குபவர்கள்தான் அவர்கள்மேல் சிறு விமர்சனம் வந்தால்கூட நீதிமன்றத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால் இங்கே எழுதும்போதே எச்சரிக்கை உணர்வு உருவாகும். கைகள் தயங்கும். அது நிகழக்கூடாது.

முறையான நடவடிக்கைகளுக்கு சென்னையிலும் நண்பர்குழு ஒன்று கூடுவதாக உள்ளோம்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவிண் வரை…
அடுத்த கட்டுரைசட்டநடவடிக்கை பற்றி…