யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
அன்புள்ள ஜெ
ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் யாயும் ஞாயும் அழகான கதை. புதிய கதையாசிரியர்கள் வழக்கமாக ‘வலுவான’ கதை வேண்டும் என்று உக்கிரமான சம்பவங்களை எழுதுவார்கள். அல்லது அவர்களை எழுதவைப்பதே அந்தவகையான சம்பவங்களாக இருக்கும். சம்பவ வலிமையால் அக்கதைகள் நிற்கும். மிக இயல்பான சம்பவங்களால் கதைசொல்லியிருக்கும் easiness தான் இந்தக்கதையின் அழகு என நினைக்கிறேன்
கதைக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ற தளம் சொல்லப்படாமலேயே கிடக்கிறது. தொன்மக்கதை ஒரு பெரிய பின்புலம். அதற்கும் யதார்த்தத்துக்குமான உறவு என்பது ஒரு உருவகம்தான். ஒரு மானசீகமான தொடர்ச்சி மட்டும்தான். அதிலிருந்து ஆற்றலும் நம்பிக்கையும் வரும் என்றால் அது உண்மைதான். அதற்கு லாஜிக் என்று ஒன்றும் இல்லை.
யாயும் ஞாயும் என்ற தலைப்பு அருமை. நம் முன்னோர்கள் இப்படித்தான் மரபை தன்வயப்படுத்திக்கொண்டார்கள். ஊர் ஊராக ராமனும் சீதையும் பாண்டவர்களும் வந்த கதை இருப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்
ராஜசேகர்
***
அன்புள்ள ஜெ
யாயும் ஞாயும் அழகான கதை. உற்சாகமான கதை. ஒரு புன்னகையுடன் வாசித்து முடிக்கமுடிந்தது. யாயும் ஞாயும் என்ற தலைப்பு எதைக்குறிக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். அது முத்துப்பட்டனையும் அவருடைய மனைவிகளையும்தான் குறிக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள் உறவு ‘என் முப்பாட்டன்டா அவன்” என்று நாமே எண்ணிக்கொள்வதிலேதான் உள்ளது
அர்விந்த்
***
அன்புள்ள ஜெ
ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் யாயும் ஞாயும் சிறுகதையை தளத்தில் வாசித்தேன். கதை தொடக்கத்திலேயே முத்துப்பட்டன் என்ற பெயரை கேட்டதும் ஒரு கிளர்ச்சி, உற்சாகம். பள்ளிக் காலத்தில் முன்பு ஒருமுறை ஆனந்த விகடனில் (?) முத்துப்பட்டன் கதையை படித்திருக்கிறேன். இப்போது பெரிதாக எதுவும் நினைவில்லையெனினும் மங்கலாக ஒரு கீற்று போல் தோன்றி மறைந்தது.
யாயும் ஞாயும் வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே என்னை உள்ளிழுத்து கொண்டது. அந்த கதைச்சொல்லி போலவே உணர்ச்சி வேகம் கொண்டு விட்டேன். இறுதியாக, காயத்ரி,”மரமண்ட, முத்துப்பட்டன் தான் கல்யாணமான அன்னைக்கே குடும்பத்தோட செத்துட்டாரே… அப்புறம் எப்டி நீங்க அவரு வாரிசு ?” என்ற கேள்வி தூங்கினவன் முகத்தில் நீருற்றியது போல் இருந்தது. பின் கதைச்சொல்லிக்கு அவன் தாத்தாவின் நினைவு தந்த சிரிப்பு எனக்கும் அதே.
கதை படித்து முடித்ததும் சிறிது நேரம் நினைக்க நினைக்க உவப்பும் வியப்புமாய் இருந்தது. அந்த புன்னகையிலேயே சிறிது நேரம் அமிழ்ந்திருந்தேன். பின்னர் மெல்ல சிந்தனை தொடங்கியது.
அவனுக்கு கதை சொன்ன தாத்தாவை யோசித்துப் பார்க்கிறேன். அந்த தாத்தா அவன் வீட்டில் மட்டுமல்ல நம் ஒவ்வொரு வீடுகளிலுமே உள்ளவர். என் குடும்பத்திலேயே பல பாட்டன் காலத்து வீரக் கதைகள் உண்டு. என் அப்பா சொல்ல எனக்கு கேள்வி அவை. ஆனால் அவருக்கு அவர் தாத்தா சொல்லியது அவை. இது மட்டுமா இப்போதும் நினைத்து பார்க்கிறேன் என் ஆயா சொல்லியவை, தாத்தா சொல்லியவை என எவ்வளவு கதைகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் வீரத்தை, வலிவை, மாண்பை உள்ளே கொண்டவை. ஆறு புலிகள், நான்கு சிங்கங்கள் பலப்பல வீரக்கதைகள் உண்டு.
இந்த கதைகள் எல்லாம் எதற்காக ? வழிவழியாக மேலும் மேலும் பெரிதென உரு கொள்வது எதற்காக ? தலைமுறை தோறும் கடத்தப்படுவது எதன் பொருட்டு ? என்ற கேள்விகளை எழுப்புவதன் ஊடாக, அவற்றின் பதில்களை நோக்கி செலுத்துவதன் ஊடாகத்தான் யாயும் ஞாயும் தன் தரிசனத்தை முன்வைக்கிறது.
முத்துப்பட்டனின் கதையும் அவனின் குருதி வழி தான் என்பதும் அல்லவா கதைச்சொல்லிக்கு தன் காதலை அடைய அத்தனை உத்வேகம் அளிக்கிறது. அது ஏன் ? முத்துப்பட்டனின் குருதி வழி தான் என் கொள்ளும் போது அவன் தன்னை ஒரு மாபெரும் எரிமலையின் நுனி என்றல்லவா கருதி கொள்கிறான். அப்போது திரளும் ஆற்றல் அளப்பரியதாய் உள்ளது. தான் ஒரு உதிர்ந்து சரியும் இலை என்பதிலிருந்து பேராலத்தின் விழுது என்பதை அல்லவா இக்கதைகள் சொல்லிச் சொல்லி நிலை நிறுத்துகின்றன. தன் சிறு தனிமையை, வலிமையின்மையை மரபு என்னும் பேராற்றலை உருவகிப்பதன் மூலம் வென்றெடுக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பாக தங்களுடைய,”மரபை விருப்பதும் வெறுப்பதும் எப்படி ?” என்ற யூடியூப் காணொளியை கேட்டிருந்தேன். அவ்வுரையோடு இக்கதையை பொருத்தி பார்க்கும் போது மேலும் வெளிச்சம் பாய்கிறது எனக்கு. அதில் நீங்கள் தனியன்,”மனிதனுக்கு தேவை அல்டிமேட்டாக இரு சிறகுகள். கோடியில் ஒருவருக்கே சிறகு முளைக்கிறது. மீதம் பேர் என்ன செய்வது அவர்களின் தனிமையை போக்கி கொள்வதற்கு ? அவர்கள் மலையிலிருந்து சரிந்து வீழ்ந்து விடாமல் இருக்க பற்றிக் கொள்ளும் கொடி தான் மரபு.” என்று. இந்த கதையும் அதே தான். தான் ஒரு தனியன் என்பதிலிருந்து முத்துப்பட்டனின் பரம்பரை என்னும் போது வரும் துணிவு மிகப்பெரியது. அது தான் நுனி இலையல்ல மரமே தானேன உணர்வது.
இத்தனைக்கும் பிறகு யாயும் ஞாயும் என்ற தலைப்பை நோக்கினேன். அதன் பொருள் கதை குறித்த என் புரிதலில் மேலும் வெளிச்சத்தை ஏற்படுத்தக் கூடும் என்றெண்ணி இணையத்தில் தேடினேன்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிவதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
என்ற குறுந்தொகை பாடலும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொண்டேன். முழுப் பாடலையும் கதையோடு இணைத்து கொண்டால் இன்னோரு கோணத்தில் சிந்திக்க உதவுகிறது. யாயும் ஞாயும் என்பதே முத்துப்பட்டனுக்கும் கதைச்சொல்லிக்கும் என்ன உறவு ? என்பதையே கேட்கிறது. நேரடியாக குருதியுறவு என ஏதுமில்லை. இருவருக்கும் இருக்கும் நோக்கத்தை தவிர. ஆனால் குருதி உறவு என்ற அந்த பின்னல் ஏன் அப்படியொரு விசை எழுவதற்கு இன்றியமையாததாய் உள்ளது ? உடலும் உள்ளமும் விசை கொண்டெழ வேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒருவரின் வழி வந்தவன் நான் என்ற எண்ணம் வேண்டி இருக்கிறது.அதன் பொருட்டு தான் நாம் இப்படி புனைந்து உருவாக்கிறோமா !(?)
“மரபு நமக்கு சமைக்கப்பட்ட உணவாக தரப்படுவது அல்ல, நாம் தான் ஒவ்வொரு முறையும் நம் தேவைக்கேற்ப அறுவடை செய்கிறோம்.” என்ற உங்கள் சொற்கள் தான் நினைவில் எழுகிறது ஜெ.
ஜெ உங்களுக்கும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கும் என் நன்றிகள்.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள ஜெ,
***
அன்புள்ள ஜெ
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஒரு புதிய எழுத்தாளர் என நினைக்கிறேன். புதிய எழுத்தாளர் என்றாலும் சரளமாக உரையாடல்களை எழுதியிருக்கிறார். இந்த தளத்தில் முன்பு வெளிவந்த புதிய எழுத்தாளரான கோகுலரமணனின் கதையும் நேர்த்தியாக இருந்தது. இருவரும் தொடர்ச்சியாக எழுதவேண்டும்
சுவாமி
***
பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்