நான் என் அறைக்குள் மெத்தையை தட்டி விரித்துக்கொண்டிருந்தபோது பலர் உரக்கப்பேசியபடி சர்ச் வளாகத்திற்குள் நுழைந்து என் வீடு நோக்கி வருவது கேட்டது. குரலில் இருந்து ஆன்றப்பனை மட்டும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. ஆன்றப்பன் இருந்தால் அது ஏதோ சிக்கலான பிரச்சினைதான்
மின்சாரம் இல்லை. கடற்பகுதிகளுக்கு மட்டுமேயான மின்சாரவெட்டு உண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டுமேயான குடிநீர் வெட்டு உண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் நின்றுவிடுவதுண்டு. கடற்பகுதிகளுக்கு மட்டும் வந்துசேராத எவ்வளவோ விஷயங்கள் உண்டு.
நான் லாந்தரின் திரியை தூக்கி கையில் எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தேன். வெளியே இருபது முப்பதுபேர் என்னை நோக்கி வந்தனர். ஆன்றப்பன் நேராக முற்றத்தில் வந்து நின்று “ஃபாதர் கொஞ்சம் வாருங்க… ஒரு பிரச்சினை” என்றான்
“என்னடே?”என்றேன். “முதல்ல உள்ள வாருங்க. சமாதானமாட்டு பேசுவோம்” ஏதாவது அடிதடியாகத்தான் இருக்கும். கடற்புறங்களில் சாயங்காலம் அடிதடி சாதாரணம். ரத்தகாயம் என்றால்தான் நான் தலையிடவேண்டியிருக்கும்
“அம்பிடுபேரும் உள்ள வரமுடியாது ஃபாதர்.. இது அடிபிடி ஒண்ணும் இல்ல… வேற விசயம்.. வாருங்க”
நான் சட்டையை போட்டு ஒரு மப்ளரையும் கழுத்தில் சுற்றிக்கொண்டு கிளம்பினேன். லாந்தரை தாழ்த்தி ஓரமாக வைத்தேன். எட்டுகட்டை டார்ச்சை எடுத்துக்கொண்டேன்.
“என்னடே?”என்று போகும்போதே கேட்டேன்
“நம்ம கூட்டத்திலே ஒரு பய தொலைஞ்சுபோயிட்டான் ஃபாதர்” என்றான் ஆன்றப்பன் “சின்னப் பயலாக்கும்.பதினாறு வயசுதான். நம்ம எலிசாளுக்க பய. அவளுக்க வீட்டுக்காரன் கடலிலே போனபிறவு பிள்ளைகளை வச்சுக்கிட்டு நரகவேதனைப்பட்டா. பட்டினியும் சீக்குமா அளுகின மீனிலே புளு மாதிரியாக்கும் கெடந்தா. இந்தப் பய தலையெடுத்து இந்த வருசமாக்கும் கடலுக்கு போகத் தொடங்கினான். நல்ல பயலாக்கும். செல்லம்போல இருப்பான்..”
சென்றபடியே அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். எலிசாளின் மகன் அந்தோணி என்னும் பையன் ராயப்பன் முதலாளியின் பெரிய படகில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறான். அனுபவம் இல்லாதவன், ஆனாலும் கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.
மீன்பிடிக்கச் செல்ல ஆள்கிடைக்காமலான காலம். வடக்கே கடலையே பார்த்திராத பீகாரிலிருந்து வரும் தொழிலாளர்களையே கூட்டிச்செல்லவேண்டிய நிலைமை. இப்போதெல்லாம் மீன்பிடிப்பு என்பது முழுக்கமுழுக்க இயந்திரங்களின் வேலை. அள்ளி ஃப்ரீசரில் வைப்பது போன்றவைதான் உடலுழைப்பு வேலைகள். ஆகவே சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீன்பிடிக்க போகும்போதே கடல் வழக்கதுக்கு மாறான கொந்தளிப்பு அறிகுறிகளை காட்டியது.. ஆனால் அதற்கேல்லாம் படகை நிறுத்திவிடமுடியாது. பெரும்பாலான படகுகளைப்போல அதுவும் கடனுக்கு வாங்கப்பட்டது. மாதம் ஒன்றரைலட்ச ரூபாய் வட்டியுடன் தவணை கட்டப்படவேண்டியது. கடலுக்குச் சென்றே ஆகவேண்டும், மீன்பிடித்தே ஆகவேண்டும்.
ஆனால் நினைத்ததை விட புயல் அதிகம். மழை இல்லாத வரட்டுக் காற்று. அலைகள் எழுந்து கொந்தளித்தன. எப்படியும் போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் செல்லச்செல்ல அலைகள் தலைக்குமேல் மிக உயரத்தில் எழுந்து வந்து படகை தூக்கி வீசின. திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.
படகில் அனுபவசாலியாக இருந்தவன் கிறிஸ்டோபர். அவன் அந்தோணியிடம் பிகாரி தொழிலாளியான பன்னா சிங்கை அழைத்துக்கொண்டு படகின் பின்பக்க வளைவில் நெடுந்தூரம் நீண்டு கிடந்த நைலான் வடத்தை இழுத்துச் சுருட்ட சொன்னான். வடத்தை அவர்கள் இழுத்துச் சுருட்டிக்கொண்டிருந்தனர். படகு மேலெழுந்து ஒருபக்கமாகச் சரிந்து அதேவிசையில் மறுபக்கமாகச் சென்றது.அலையெழுந்து முழுப்படகையும் மூழ்கடித்து அப்பால் சென்றது. பொருட்கள் செல்லாமலிருக்க அவர்கள் ஒவ்வொன்றாக இழுத்து எடுத்தனர்.
மீண்டும் படகு மேலெழுந்தபோது செபஸ்தியான்தான் கண்டறிந்து சொன்னான்- அந்தோணி, பன்னாசிங் இருவருமே படகில் இல்லை. அவர்கள் எப்போது விழுந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.“ஏலே எப்பலே விளுந்தானுக?”என்று கிறிஸ்டோபர் கூவினான். அவன் குரலே மற்றவர்களுக்குக் கேட்கவில்லை.
அலைகள் அறைந்து அறைந்து படகை நெடுந்தொலைவு கொண்டுவந்தன. கரைக்கு வந்துவிடமுடியும் என்ற நம்பிக்கையே நெடுநேரம் கழித்துத்தான் வந்தது. எழுந்ததுபோலவே சட்டென்று கடல் அடங்கிவிட்டது. அவர்கள் தூண்டில்வளைவுக்கு வந்தபோது மிதமான அலைகள்தான். எந்த இடத்தில் அவர்கள் விழுந்தார்கள் என்று தெரியவில்லை.படகு அலைக்கழிந்து எங்கெல்லாம் சென்றது என்றும் தெரியவில்லை.
“அந்த இந்திக்காரப் பய பேரு என்ன?”என்றேன்
“பன்னாசிங்கு… நீங்க பாத்திருக்கீங்க ஃபாதர். நம்ம சர்ச்சு அன்னெக்சரிலே ஓடு மாத்த வந்தான்லா?”
“ஆமா, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருக்கும்… கொஞ்சம் பூனைக்கணு”
“அவனேதான்”
“நல்லா தெரியுமே… நெறைய பேசிட்டிருந்தேன்… சவைச்சு துப்பி தமிழ் பேசுவானே” என்றேன்
நான் கடற்கரைக்குச் சென்றபோது எலிசாம்மாள் நெஞ்சிலறைந்து அழுதுகொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஓடிவந்து காலில் விழுந்து கதறினாள். “எனக்க மாதாவே எனக்க மாதாவே” என்று கூவினாள்.
அவள் தலையை தொட்டு “செரி, பாப்பம். கடவுள் இருக்காரு… பாப்பம்…” என்று நான் சொன்னேன். எலிசாம்மாளின் இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு பையனும் திகைத்துப்போய் நின்றிருந்தனர்.
கிறிஸ்டோபர் என்னருகே வந்தான் “செரியான அலையாக்கும். படகு சருகுமாதிரி கெடந்து சுத்திச்சுது…”
“உங்கிட்ட ஜிபிஎஸ் இருக்குல்லா… குடு” என்றேன்
“ஜிபிஎஸ் தண்ணியிலே போயிட்டுது. செல்போன் வாட்சு எல்லாமே போச்சு…”என்று அவன் சொன்னான்
“இவனுக போன தடத்தை அறிய ஏதாவது வழி உண்டாடே?”என்று நான் ஆன்றப்பனிடம் கேட்டேன்
“இவனுக ஏதாவது எக்விப்மெண்ட்டு வச்சிருக்கணும்” என்று ஆன்றப்பன் சொன்னான் “மத்தபடி ஒண்ணும் செய்யமுடியாது”
“உடனே போயி ஒரு ரவுண்டு தேடணும்லா?”என்றேன்
“நாலு போட்டு போயிருக்கு… இப்ப காத்து இல்லை” என்றான் ஆன்றப்பன்.
“எங்கியாம் உயிரோட இருக்க வாய்ப்புண்டாடே?”என்று நான் கேட்டேன்
“உள்ளதைச் சொன்னா நூறுசதவீதம் வாய்ப்பில்லை. கடல் அப்டி பயங்கரமா அலையடிச்சுது.பாத்திரத்திலே இருக்குத தண்ணியை போட்டு குலுக்குத மாதிரியாக்கும் ஆண்டவரு கடலை போட்டு எளக்கினாரு.. விளுந்தவன் கடலுக்குள்ள பிறந்த முக்குவானானாலும் உள்ள போயிருப்பான்”
“அதெப்டி ஒரு காத்து சட்டுன்னு?”
“சிலசமயம் அப்டி வரும். கடலுக்குள்ள ஒரு எடத்திலே சூடு கூடிப்பொயி காத்து விரிவாகி மேலே போயிடும். மத்த எடத்து காத்து உடனே அங்க போகுது. அது ஒரு பெரிய காத்துசுழி மாதிரியாக்கும்…தண்ணியிலே ஒரு குடத்தவிட்டு கோரி எடுத்தா வருதுல்லா அந்தமாதிரி சுழி” என்றான் ஆன்றப்பன்
“நீ எங்கடே படிச்சே?”
“கடலுக்க போக்குகளை பத்தி ஒரு நல்ல புக்கு உண்டு” என்றான் ஆன்றப்பன். அவன் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்தவன். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். கிறிஸ்டோபர் கூட கம்யூட்டர் சயன்ஸ் படித்தவன்
“டேய் மத்த பய என்ன படிச்சிருக்கான்?” என்றேன்
“எம்சிஏ முடிச்சான்னு சொன்னான்” என்றான் கிறிஸ்டோபர். “பாவம் இந்நேரம் சுழிக்குள்ள போயிருப்பான்”
“இருந்தாலும் நாம போயி பாக்கணும்லா?” என்று நான் சொன்னேன்
“ஆமா, போட்டுகளை அனுப்பியாச்சு… கடலிலே மிதந்து கிடந்தா தெரிஞ்சிருக்கும். காத்து வடக்குகெளக்கா அடிச்சிருக்கு. அதனாலே அந்தாலே ஒரு நாப்பது கிலோமீட்டர் வரை போயிப் பாக்க சொல்லியிருக்கு” என்று ஆன்றப்பன் சொன்னான். “இனி கடலோரக் காவல்படைக்குச் சொல்லணும்… அவனுக ஹெலிகாப்டர் வழியாட்டு தேடிப்பாப்பானுக…அதுக்கு ஒரு இமெயில் அனுப்பணும். நாங்க நாலுபேரு ஒப்பு போடுதோம். உங்கபேரிலே அனுப்பலாம்”
ஆன்றப்பனுக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் அவனே ஏதாவதுசெய்தால் அவன் ஆட்கள் அவன் மூப்பெடுக்கிறான் என்று நினைப்பார்கள். ஆகவே என்னை எப்போதுமே முன்னிறுத்துவது அவன் வழக்கம்
“போட்டுகள் வந்தபிறகு மெயிலை எழுதலாமா?”என்றேன்
“இல்லல்ல, எழுதிருவோம்… போட்டுகளிலே ஒண்ணும் சிக்காது”
நான் திரும்பி எலிசாம்மாளை பார்த்துவிட்டு “அந்த பொம்புளையை வீட்டுக்கு போகச்சொல்லு. அந்தப்பிள்ளைகளுக்கு சாப்பிட என்னமாம் குடுங்க” என்றேன்
“போட்டுகள் திரும்பி வராம அவங்க போகமாட்டாங்க” என்றான் ஸ்டீஃபன்
ஸ்டீஃபனின் லேப்டாப் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆன்றப்பனே இமெயில் வாசகங்களை அழகான ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தான். என்னுடைய அதிகாரபூர்வ அடையாளத்துடன் கூடிய ஐடியில் இருந்து அதை அனுப்பினோம். அதன்பின் அரைமணிநேரம் கழித்து ஃபோனில் அழைக்கலாம் என்று கிறிஸ்டோபர் சொன்னான்
ஆனால் உடனே பதில் மின்னஞ்சல் வந்தது. ஆவன செய்யப்படும் என்று சப் லெஃப்டினென்டின் குறிப்பு.
“அவனுக ஓரளவு விழிப்பாத்தான் இருக்கானுக இப்ப” என்று ஆன்றப்பன் சொன்னான்
பத்து நிமிடங்களுக்குள் இன்னொரு மின்னஞ்சல் வந்தது கடலில் நின்றிருக்கும் ஐ.என்.எஸ் உதய் என்ற கப்பலில் இருந்து காப்டன் எழுதியிருந்தார். நாங்கள் குறிப்பிட்ட இடங்களை தேடத்தொடங்கிவிடுவோம் என்று
இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றியது. அனைவரும் பெருமூச்சுடன் அமைதியடைந்தோம். நான் கடற்கரையில் ஒரு படகின்மேல் ஏறி அமர்ந்தேன். கடற்கரை முழுக்க மக்கள் ஆங்காங்கே சிறு கூட்டங்களாகச் சிதறி நின்றனர். காற்று நல்ல குளிராக இருந்தது. மஃப்ளரால் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டேன்
அருகில் இருந்த அற்புதமேரியின் வீட்டிலிருந்து கட்டன்டீ கொண்டுவந்து தந்தார்கள்.அந்த வேளைக்கு அது இதமாக இருந்தது. நெஞ்சுக்குள் இருந்த படபடப்பு ஓய்ந்தது. நான் பெருமூச்சுவிட்டேன்
கடலை பார்த்தபடி காத்திருந்தோம். கடல் அலைகள் எனக்கு எப்போதுமே ஆச்சரியமும் பயமும் அளிப்பவை. நான் அங்கே பணிக்கு வருவதற்கு முன் ஏழெட்டுதடவை கடலைப் பார்த்ததுடன் சரி. நிரந்தரமாக தங்கவேண்டும் என்று ஆகி அங்கே வந்தபோது கடலின் ஓயாத அலறல் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது. ஏழெட்டுநாட்கள் தூக்கமே இல்லை.
அது எதையோ உறுமி அலறி ஆவேசமாக கரைமேல் அறைந்து தலைமுடி சுழற்றி துள்ளி சொல்லிக்கொண்டே இருக்க மனிதர்கள் எவரும் கேட்கவே இல்லை என்பதுபோல தோன்றியது. பின்புகூட தூக்கத்தில் எப்போது விழித்துக்கொண்டாலும் அந்த அலறலைத்தான் கேட்பேன். மிக அருகே ஒலிப்பதுபோலிருக்கும். தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்வதுபோலிருக்கும்.
சற்றுநேரத்திலேயே படகுகள் திரும்பி வந்துவிட்டன. எதிர்பார்த்த செய்திதான், கடலில் எவரும் இல்லை.
எலிசாம்மா கதறி அழுது நெஞ்சில் அறைந்து அறைந்து மயக்கமாகிவிட்டாள். அவளை தூக்கிக்கொண்டுசென்றார்கள்.
“கொஞ்சம் ரம்ம ஊட்டி விட்டிருங்க” என்று ஆன்றப்பன் சொன்னான். “இனி ஒரு நாலஞ்சுமாசம் அவளுக்கு நரகமாக்கும்… வாழ்க்கை முழுக்க நல்ல உறக்கம் இல்லை”
“என்னத்தை பொளைப்பு” என்று ஒருவன் சொன்னான்
வயசான மீனவர் ஒருவர் “ஏலே என்னலே பேசுதே? பொளைப்புக்கு என்ன கேடு? உனக்க அப்பனும் பாட்டனும் சோறுதின்னது இந்தக் கடலை வச்சுத்தான்லே” என்று கத்தினார்
“சரி சரி, பேச்சு வேண்டாம்” என்று நான் சொன்னேன். என்ன இருந்தாலும் கடலைப்பற்றி ஒன்றும் சொல்ல விடமாட்டார்கள்.
கடற்படையிலிருந்து இமெயில் வந்தது, அந்த எல்லைக்குள் எங்கும் கடலில் எவரும் இல்லை என்பதை வருத்தத்துடன் அறிவித்தார்கள்
ஆன்றப்பன் “செரி,எல்லாரும் கெளம்புங்க…” என்றான்.
நான் களைப்புடன் கிளம்பும்போது கோயில்குட்டி தனிஸ்லாஸ் என்னிடம் “துக்கமணி அடிக்கணும்லா?” என்றான்
“செரி”என்று நான் சொன்னேன்
மிகக்கூட்டமான நெரிசலான இடங்களில் மக்கள் ஒற்றைத் திரளாக ஆகிவிடுகிறார்கள். மணல் போல, தண்ணீர் போல ஒரு பரப்பாக மாறிவிடுகிறார்கள்.எவருக்கும் தனிக்குணமோ தனிச்செயல்பாடோ கிடையாது. தண்ணீரும் மணலும் தன்னைத்தானே சரிசெய்துகொள்பவை.அதேபோலத்தான் கடற்கரை என்று வந்ததுமே கண்டிருக்கிறேன்.
மறுநாளே இயல்புநிலை மீண்டுவிட்டது. ஒரு போலீஸ் கேஸ் பதிவுசெய்யப்பட்டது. எலிசாம்மாவுக்கு ஊர்கணக்கில் ஒர் உதவித்தொகை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் தொழில் இருந்தது. அதைச் செய்தேயாகவேண்டும் என்னும் கட்டாயம் இருந்தது. அவ்வளவுதான்.
ஆனால் பத்து நாட்கள் கழித்து ஆன்றப்பன் என்னை வந்து பார்த்தான். அவனுடன் கிறிஸ்டோபரும் பிதலீஸும் வந்தனர். நான் என் அறையில் வாசித்துக்கொண்டிருந்தேன் “என்ன?”என்று கேட்டபடி எழுந்து வந்தேன்.
“மத்தபய உயிரோடு இருக்கானாம்… அவனுக்க அடையாளம் இப்பதான் தெரிஞ்சிருக்கு” என்றான் ஆன்றப்பன்
“யாரு?” என்றேன். முதலில் எனக்கு என்னவென்றே புரியவில்லை.
“அந்தோணி, அவன் இங்க கொல்லங்கோட்டிலே இருக்கான். அங்கேருந்து மீன்பிடிக்கப்போறவங்க கண்டு மீட்டு வந்திருக்காங்க. பயலுக்கு என்ன ஏதுன்னு ஒண்ணும் சொல்லத் தெரியாததனாலே அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை. வாட்ஸப்பிலே பரப்பி விட்டிருக்கானுக. நேத்து ராத்திரிதான் பாத்தேன்…நம்மாளுதான்”
“உடனே கூட்டிட்டு வாங்க… ஊரிலே நாலஞ்சாளை கூட்டிக்கிடுங்க” என்றேன்.
ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கடற்கரையில் இந்தவகையான அற்புதங்களுக்கு எப்போதுமே இடமுண்டு
சாயங்காலம் ஊரே திரண்டு சாவடிக்கு முன்னால் காத்து நின்றது. ஆன்றப்பன் ஜீப்பில் போயிருந்தான். ஜீப் தொலைவில் வந்தபோது ஆரவாரம் எழுந்தது. ஏராளமானவர்கள் ஜீப்பை நோக்கி ஓடினார்கள்.
உள்ளிருந்து ஆன்றப்பன் இறங்கினான். செபஸ்தியும் பிதலீசும் இறங்கியபின் அந்தோணி இறங்கினான். கண்கள் கூசுவதுபோல முழங்கையால் முகத்தை மறைத்துக்கொண்டான். கேரளபாணியில் வேட்டி அணிந்திருந்தான். அவனேதான்
மொத்தக்கூட்டமும் அவனை மொய்த்துக்கொண்டது. பலர் “லே மக்கா.. லே” என்று கூவினார்கள்
எடத்துவாக்காரி “லே மக்கா நீ ஆண்டவரை பாத்தியாலே?”என்றாள்
எலிசாம்மா ஓடிவந்து அப்படியே அவன்மேல் பாய்ந்ததில் அவன் மல்லாந்து விழுந்தான். அவள் அவனை ஓங்கி ஓங்கி அறைந்தாள். கூச்சலிட்டு அழுதாள். அவன் தம்பி தங்கைகளும் அவன்மேல் சேர்ந்து விழுந்தார்கள்
ஆன்றப்பன் “தள்ளுங்க… அவனுக்கு நல்ல சுகமில்லை. பெரிசா ஞாபகமில்லை. இப்ப அவன் வீட்டுக்குப்போயி ரெஸ்டு எடுக்கட்டு” என்றான்
அவர்கள் அவனை தூக்கியே கொண்டுசென்றார்கள். அவன் ஒருமாதிரி மலங்க மலங்க விழித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது
நான் சர்ச்சுக்கு செல்லும்போது ஆன்றப்பன் கூடவே வந்தான். “போலீஸுக்கும் கடலோரக் காவல்படைக்கும் விசயத்தை சொல்லணும்” என்றேன்
“ஆமா” என்று ஆன்றப்பன் சொன்னான் “மத்த பயலைப் பத்தி விசாரிக்கணும். பன்னா சிங்கு. அவன் ஆளுக அவன் செத்துட்டான்னு அவனுக்க வீட்டிலே சொல்லிட்டாங்க. ராயப்பன் அவன் தம்பிக்கு அம்பதாயிரம் ரூபா பணமும் குடுத்திருக்காரு. ஆனா நாம விசாரிக்கணும்ல? இவன் எப்டி தப்பினான்? அவன் என்ன ஆனான்?”
நான் “ஆமா, முதல்ல இவனை விசாரிப்போம். இவன் தெளிஞ்சு வரட்டும் என்றேன்”
“நான் இவன் கிட்ட ஒரு மாதிரி விசாரிச்சேன். கிறுக்குமாதிரி பேசுதான்” என்றான்
“என்ன?” என்றேன்
“போட்டிலே இருந்து விளுந்ததுமே அலை அவனை தூக்கிட்டு போயிருக்கு நெறைய தடவை தூக்கி தூக்கி வீசியிருக்கு. பிறகு அப்டியே தூக்கி ஒரு தீவுமேலே போட்டிருக்கு”
“தீவுமேலேயா? எங்க?”என்றேன்
“அலையிலேயே போயிருக்கான்னா இங்க பக்கத்திலேதானே?”என்றான் ஆன்றப்பன் “அந்த தீவிலே நிறைய கல்லுகெட்டிடமா இருந்திருக்கு. இந்து கோயிலுக மாதிரி.. அதிலே ஒரு கெட்டிடம் மேலே விளுந்திருக்கான். அங்கேருந்து சறுக்கி கீழே வந்திருக்கான். தரையெல்லாம் பாறை. அதிலே நிறைய வாசல்கள் இருந்திருக்கு. அவ்ளவுதான் ஞாபகம். அதைச் சுத்திச் சுத்திச் சொல்லுதான்”
“தீவா? இது என்னடே? அங்க யாருமே இல்லியா?”
“யாரையும் அவன் பாக்கல்லை”
“அங்க மரம் ஒண்ணுமில்லியா?”
“அவன் அந்தளவுக்கு தெளிவாட்டு சொல்லல்ல”
“என்னடே இது? என்ன தீவு அது?”
“இங்க கடல் எல்லைக்குள்ள அப்டி தீவு ஒண்ணுமில்லை..” என்றான் ஆன்றப்பன்.
“சின்ன லகூனா இருக்குமோ?”
“அப்டி ஒரு லகூன் இங்க உண்டு, ஆனால் அதிலே கோயில் ஒண்ணுமில்லை. நாலு தென்னைமரம் நிக்கும். நாலுசுத்தும் கடலாக்கும். வெறும் மணல்மேடு”
“அப்ப இவன் எங்க போனான்?”
“தெரியல்ல…ஆனா துண்டுதுண்டா இதையே சொல்லுதான்”
“சொப்பனம் கண்டிருப்பானோ?”
“இருக்கலாம்..”
“இவனை எப்டி காப்பாத்தினாங்களாம்?”
“அங்க ஒரு பெரிய கடல்பாறைமேலே நின்னு கையை வீசி சத்தம்போட்டிருக்கான். மீன்பிடிக்க போனவங்க பாத்திருக்காங்க.”
“இது எப்ப?”
“நாலுநாளு ஆகுது… வெள்ளிக்கிழமை. அதாவது இங்க கடலிலே போயி ஏழுநாள் கழிச்சு”
“என்னடே இது…”என்றேன்
“இந்த ஏரியாவிலே வேற தீவே இல்லை. ஒரு சான்ஸ்தான் இருக்கு. இவனை அலைகொண்டுபோயி அந்த பாறைமேலே போட்டிருக்கு. அந்த பயத்திலே அவன் அதை தீவாட்டும் கோயிலாட்டும் நினைச்சிருக்கான். இல்லேன்னா பட்டினியா அங்க கிடக்கிறப்ப சொப்பனம் கண்டிருக்கான், அது அடிக்கடி நடக்கும். பட்டினியும் தாகமுமா மண்டை மயங்கினா பயங்கரமான சொப்பனம்லாம் வரும். ஒருத்தன் சுறாமீனுக்கு உள்ள போயி ஒருவாரம் அங்க தூங்கிட்டிருந்தேன்னு சொல்லியிருக்கான். பலபேரு மாதாவையும் ஏசுவையும் பாத்திருக்காங்க” என்றான் ஆன்றப்பன் . பிறகு “இல்லேன்னா…”என்றான்
“என்னடே சொல்லுதே?”என்றேன்
“இல்லேன்னா அந்த காத்துலே கடல்விலகி அடியிலே இருந்து ரொம்ப காலம் முன்னாலே மூழ்கிப்போன ஒரு தீவு வெளியே வந்திருக்கலாம்”
“மூழ்கிப்போன தீவா? உளறாதே”
“இல்ல, பாட்டன்மாரு சொன்ன கதையிலே அப்டி சிலது உண்டு. அதுக்க பேரு மணிபல்லவம்னாக்கும்”
“என்னது?”என்றேன்
“மணிபல்லவம்… அப்டி ஒரு தீவு உண்டுன்னு சின்னவயசிலே கதை கேட்டிருக்கேன்”
“ஏய், எவனோ தமிழ் வாத்தியாரு கிளப்பிவிட்ட கதை மாதிரி இருக்கு” என்றேன்
“அப்டி இல்லை.இந்த கடலுக்குள்ளே போறதுக்குன்னு சில வழிகள் உண்டு. அதை மாத்தக்கூடாது. ஹைவே மாதிரி. வழிமாறினா கடலுக்கு அடியிலே இருக்கிற பாறைகளிலே அடிமுட்டிரும். பல இடங்களிலே இடுப்பளவு ஆழத்திலே இறங்கி நிக்கலாம்னு சொல்லுவாங்க”
“அங்க கட்டிடங்கள் உண்டுன்னு சொல்லியிருக்காங்களா?”என்றேன்
“ஆமா” என்றான் ஆன்றப்பன் “சிலசமயம் கடலு அமைதியா பளிங்குமாதிரி ஆயிடும்…மிதமான மழைவெளிச்சம் இருக்கணும். இல்லேன்னா நல்ல நிலாவெளிச்சம். அப்ப அங்க போயி அடியிலே பாத்தா கெட்டிடங்களும் கோட்டைகளுமெல்லாம் இருக்குறத பாக்கலாம்னு சொல்லுவாங்க. அங்க கடல்பாசி கூடுதல். அதனாலே அங்கே யாரும் வலைபோடப் போறதில்லை.. பழைய காலத்திலே கட்டுமரத்திலே போறப்ப நீரோட்டம் வழியா அங்கபோன சிலர் பாத்திருக்காங்க”
ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஆன்றப்பன் அவனே சொன்னான். “இந்தக்கதையை அந்தப்பயலும் கேட்டிருக்கலாம். அவனுக்க பசிமயக்கத்திலே சொப்பனம் கண்டிருக்கலாம்”
நான் உடனே கூகிள் செய்து பார்த்தேன். “டேய் மணிபல்லவம்னா என்னான்னு போட்டிருக்கான் தெரியுமா? மணிமேகலையிலே அப்டி ஒரு தீவைப் பற்றி சொல்லியிருக்கு. மணிமேகலை எட்டாம் காதையிலே பூம்புகாருக்கு நாநூறு யோசனை தூரத்திலே நாகநாடுன்னு ஒண்ணு இருந்திருக்கு. அந்த நாகநாட்டிலே மணிபல்லவம்னு ஒரு தீவு. அதிலே மணிமேகலா தெய்வம்னு ஒரு பெண் தெய்வம்தான் ஆட்சி செய்திருக்கு. அந்த தெய்வம் மணிமேகலையை தூக்கிட்டு மணிபல்லவத்தீவுக்கு கொண்டு போயிருக்கு. அங்கதான் மணிமேகலைக்கு குறையாம சோறு வந்திட்டே இருக்கிற அமுதசுரபி கிடைச்சிருக்கு”
“ஓ”என்றான் ஆன்றப்பன் “அப்ப அப்டி ஒரு எடம் இருந்திருக்கு”
“அது சும்மா கற்பனை. உலகம் முழுக்க இந்தமாதிரி கதைகள் உண்டு. மாலுமிக்கதைகள்னு சொல்லுவாங்க. கடலோடிகள் சொல்லுற செவிச்செய்திகளை வச்சு இஷ்டம்போல வளர்த்துக்கறது. மணிபல்லவத் தீவு நாகநாடு பத்தில்லாம் எந்த ஜியாலஜிக்கல் எவிடென்சும் இல்லை”
“ஆனா அப்டி ஒரு கதை இருந்திருக்குல்ல?” என்று ஆன்றப்பன் சொன்னான். “அந்தக்கதைக்கான ஒரு சோர்ஸ் இருந்திருக்குல்ல?”
“என்ன சொல்றே?”
“பல்லவம்னா தளிர். மணின்னா முத்து. மணிபல்லவம்னா முத்து முளைச்சு வர்ர எடம்னு அர்த்தம். அப்டி ஒரு எடம் இருந்திருக்கு. கடலுக்குள்ள போயிருக்கு. பிறகு ரொம்பநாள் ஞாபகங்களிலே இருந்திருக்கு. அதைப்பத்தி பேசியிருக்காங்க. கனவு கண்டிருக்காங்க. மணிமேகலையே ரொம்பநாள் கழிச்சு அந்தக்கதையை வச்சு கற்பனையிலே எழுதப்பட்டிருக்கலாம்”
“சரி விடு” என்றேன். “டீ சாப்பிடுறியா?”
“போடுங்க”
நான் டீ போட்டேன். நாங்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பொதுவாக எதையெதையோ பேசிக்கொண்டும் அவ்வப்போது அகத்தில்நுழைந்து யோசித்துக்கொண்டும் இருந்தோம்.
ஆன்றப்பன் சொன்னான். “நானும் முடிஞ்சவரை ரேஷனலா யோசிக்கத்தான் முயற்சிபண்றேன் ஃபாதர் ஆனால் நிக்க மாட்டேங்குது. ஒருமாதிரி அலைபாய்ஞ்சுக்கிட்டே இருக்கு”
“பாப்பம், பய தெளிஞ்சு வருவான்லா?”என்று நான் சொன்னேன். “ஒரு நல்ல கதை கிடைச்சாக்கூட நல்லதுதானே?
ஆன்றப்பன் சிரித்துவிட்டான். எழுந்துகொண்டு “வாறேன். இந்த போட்ட எந்த நேரத்திலே வாங்கி விட்டேன்னு தெரியல்லை…ஈஎம்ஐ கட்டுறதை மட்டும்தான் நினைக்கமுடியுது… வேற சிந்தனையே மனசிலே இல்லை” என்றான்
எலிசாம்மாள் சர்ச்சுக்கு வந்து ஜெபம் செய்துவிட்டு போனாள். மகன் எப்படி இருக்கிறான் என்று கேட்டேன். நான் அவனிடம் பேசவேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். அவன் வீட்டுக்கு வந்ததுமே மனம்தேற ஆரம்பித்துவிட்டான், நன்றாகப் பேசுகிறான் என்றாள்
ஜெபம் செய்வதற்காக நானே அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். சுனாமியின்போது கட்டி அளிக்கப்பட்ட இரண்டு அறைவீடு கொஞ்சம் தள்ளி தோப்பருகே இருந்தது. அதன் இருபக்கமும் அஸ்பெஸ்டாஸ் போட்டு இழுத்து சமையலறையும் ஒரு முன்வராந்தாவும் கட்டியிருந்தனர். மொத்தக்குடும்பமும் என்னை வரவேற்றது
அந்தோணி என்னை கண்டதும் மெல்ல புன்னகைத்தது எனக்கு நம்பிக்கை அளித்தது. நான் அவனிடம் “ஜெபம் செய்யலாமா?”என்றேன். தலையசைத்தான்
ஜெபம் முடிந்ததும் எலிசாம்மா டீ கொண்டுவந்து தந்தாள். பக்கத்து கடையில் வாங்கிய டீ. அதைக் குடித்ததும் நான் அந்தோணியிடம் “நான் சிலது கேக்கணும். பேசலாமா?”என்றேன்
அவன் கண்கள் மாறின. தலையசைத்தான்
“தெளிவா எல்லாத்தையும் கேட்டுக்கிடவேண்டியது என் பொறுப்பு. நாளைக்கே ஏதாவது விசாரணை வரலாம். ஏன்னா உங்கூட இன்னொரு ஆளு காணாம ஆகியிருக்கான். நீ வந்த தகவலை தெரிவிச்சாச்சு”
அவன் மீண்டும் தலையசைத்தான்.
“சொல்லு, என்ன நடந்தது? அப்ப வந்த அலை ரொம்ப பயங்கரமா இருந்ததுன்னு சொன்னாங்க. நீ அதிலே எப்டி விழுந்தே? என்ன ஆனே? பன்னா சிங் என்ன ஆனான்?”
“நான் சொன்னதை ஆன்றப்பன் நம்பல்லை. வேற யாருமே நம்பல்லை. ஆனா அதாக்கும் சத்தியம்” என்றான் அந்தோணி
“அப்ப நீ கொஞ்சம் மனசுகுழம்பி இருந்தே. இப்ப நல்லா இருக்கே இல்ல? மைண்ட் அமைதியா இருக்கு இல்ல? எது சொப்பனம் எது உண்மைன்னு உனக்கு நல்லா தெரியும் இல்ல?”
“ஆமா தெரியும்” என்றான் “நான் பலமுறை அதை நினைச்சுப்பாத்து தெளிவா வச்சிருக்கேன்”
“சொல்லு”என்றேன்
அந்தோணி சொன்னான். “கயித்தைப் பிடிச்சு நானும் பன்னா சிங்குமா இழுத்தோம். அப்ப படகு அப்டியே எங்களை தூக்கி அந்தாலே எறிஞ்சிட்டுது. நான் ஒரு அலைமேலே போயி விழுந்தேன். அலைன்னா ஒரு பனை உயரத்திலே வளைஞ்சு நீலநிறமா மலைமாதிரி தெரிஞ்சுது. அப்டியே என்னை தூக்கித் தூக்கி எறிஞ்சுது. பத்துப்பதினைஞ்சு தடவை. நான் மேலே போயிட்டு கீழே வந்தேன். மேலே போறப்ப ரொம்பதூரத்துக்கு கடல் அலைகளை பாத்தேன்”
“அலைவழியா போய்ட்டே இருந்தேன். பறந்து போற மாதிரி இருந்தது. வளைஞ்சு சுத்திட்டே இருக்கிற மாதிரியும் இருந்தது. சட்டுன்னு என் உடம்பு கல்லிலே அறைஞ்சுது. நான் அப்டியே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். அலை பின்வாங்கி ஒழுகிப்போச்சு. அப்டியே ஒட்டி உக்காந்திட்டிருந்தேன். தண்ணி என்னைச்சுத்தி கொந்தளிச்சிட்டே இருந்தது. அப்றம் அருவி மாதிரி ஓடி வழிஞ்சு போச்சு.அப்றம்தான் நான் கண்ணையே திறந்தேன்”
“பாத்தா நான் ஒரு கோபுரத்துக்குமேலே உக்காந்திட்டிருந்தேன். இந்துகோயில் மாதிரி. ஆனா இப்ப உள்ள கோயில்கோபுரம் மாதிரி இல்லை. ஒருமாதிரி பிரமிடு. சிற்பம்லாம் ஒண்ணுமில்லை. ஆனால் அடுக்கடுக்கா இருந்தது. படிமாதிரி கீழே இறங்கிடலாம்” என்றான் அந்தோணி.
“பாசியும் பவளமும் எல்லாம் படிஞ்சு இருந்திருக்கும் இல்லியா?” என்றேன்
“இல்லை நனைஞ்சு கறுப்பா இருந்தது. ஆனா பாசியோ பவளமோ சிப்பியோ ஒண்ணுமே இல்லை. அப்டியே கழுவி வச்சமாதிரித்தான் இருந்தது”
“அதெப்படி?” என்றேன். “ஒரு பாறை மூழ்கியிருந்தாலே அதிலே பவளமும் சிப்பியும் வந்து ஒட்டிக்கிடும். பாசி கண்டிப்பா இருக்கும்”
“தெரியல்லை. அந்த எடம் அப்டி இருந்தது”
“சரி சொல்லு”
“அங்கே யாருமே இல்லை. நம்ம ஊரைவிட பெரிசு அந்த எடம். நூறு இருநூறு கெட்டிடம் இருக்கும். எதுக்குமே கதவு இல்லை. எல்லா வாசலும் திறந்திருந்தது. நான் ஒரு கோபுரத்துக்குள்ள போய் பாத்தேன். உள்ள எதுவுமே இல்லை. காலியா கெடந்தது. ஈரமான பாறைதான் தரை, சுவரு எல்லாமே. தூணிலே எல்லாம் நெறைய சிலைகள். ஆனால் எல்லாமே உருகி கரைஞ்சு ஒருமாதிரி துணிபோட்டு மூடினமாதிரித்தான் தெரிஞ்சுது”
“முகங்கள்லாம் மழுங்கியிருந்தாலும் எல்லாத்திலயும் என்னென்ன உணர்ச்சிகள் இருக்குங்கிறது அப்டி தெளிவா தெரிஞ்சுது. ஆச்சரியம் மாதிரி சிரிப்பு மாதிரி நம்மளை கூப்பிடுற மாதிரி,எதையும் பாக்காம பிரேயர் பண்ணுதமாதிரி. அந்த மாதிரி உணர்ச்சிகள் தெரியுறப்ப அதெல்லாமே உசிரோட இருக்கிற மாதிரி தோணிடுது. அதாவது நாம பாக்கிறப்ப சிலையா நின்னுட்டிருக்கு. நாம பாக்காதப்ப உசிரு வந்து நம்மளை பாக்குது”
“சட்டுன்னு திரும்பினா அதுகளோட கண்ணைப் பாத்திடலாம்னு தோணிச்சு. பலமுறை திரும்பிப் பார்த்தேன். ஆனா நம்ம நினைப்பே அதுகளுக்கு தெரியும். எப்ப கல்லாகணும் எப்ப திரும்ப உசிராகணும்னு தெரிஞ்சிருக்கு…” என்று அந்தோணி சொன்னான். “கிறுக்கனை மாதிரி அங்கிணயே சுத்திட்டு கெடந்தேன். யப்பா என்னென்ன சிலைகள். பிடரிமுடி சுருள் சுருளாட்டு கிடக்குத சிங்கம். தும்பிக்கை கோத்து கொம்பு முட்டி நின்னுட்டிருக்க யானை. வரிசையா மான்கூட்டம். மயில்கள், அன்னப்பறவைகள்…”
“ஃபாதர் அங்கே மயிலும் அன்னமும்தான் கூடுதல். அந்த ரெண்டு பறவையையும் செதுக்கிச் செதுக்கி அப்டியே ஒருமாதிரி அலங்காரக்கோலமா மாத்திட்டாங்க. அதேமாதிரி பூவுகள். என்னென்னமோ பூவையெல்லாம் செதுக்கி வச்சிருந்தான். நந்தியாவட்டை மாதிரியான பூதான் நெறைய. ஆனா தாமரை மட்டும் பல டிசைன். தூணுக்கு அடியிலே தாமரை மலந்து நின்னிட்டிருக்கும். மேலே தாமரை கவுந்து நிக்கும். மண்டபத்துக்க நடுவிலே கல்லை அடுக்கி பெரிய தாமரை மாதிரி கவுத்திருக்காங்க. கல்லு அப்டியே பூவா மலர்ந்திருக்கு”
“அங்க தெய்வம்னு ஏதாவது இருந்ததா” என்று நான் கேட்டேன்
“தெய்வம்னா…” என்று இழுத்தான். “நான் அப்டி தெளிவா தேடல்லை. சும்மா அங்க சுத்திச்சுத்தி அலைஞ்சேன். அங்க அப்டி ஒண்ணும் பாக்கல்லை” என்றான். பிறகு “அங்க ஒரு மண்டபம் இருந்தது… எட்டுகால் மண்டபம். எண்கோணவடிவத்திலே. அதுக்கு நட்டநடுவிலே ஒரு பாறை. அதிலே ஒரு காலடித்தடம் இருந்தது”
“காலடித்தடம்னா?”என்றேன்
“ஒத்தைக்காலடி”
“கன்யாகுமரி பாறையிலே இருக்கே அதை மாதிரியா?” என்றேன்
“ஆமா”
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் பொய்சொல்லவில்லை. அவ்வளவு விரிவாக கற்பனையோ கனவோ இருப்பதில்லை.அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பிறகு மீண்டுவந்து “அங்க என்ன சாப்பிட்டே?”என்றேன்
“பாறையிடுக்கிலே மீன் மாட்டிக்கிட்டிருந்த்து. அதை பிடிச்சு தின்னேன். ஒரு மழை பெய்ஞ்சுது, தண்ணியும் கிட்டிச்சு” என்றான். “ரெண்டுநாள் அங்கதான் இருந்தேன். ரெண்டு நிமிசம் ஒரு சொப்பனம் கண்டது மாதிரி இருக்கு”
“அங்கேருந்து எப்டி வெளியே வந்தே?”என்றேன்
“மூணாம்நாள் அங்க தண்ணி மேலே வரத் தொடங்கிட்டுது. தண்ணி மேலேறி வாரதை பாத்தேன். என்ன செய்றதுன்னு தெரியல்லை. மேலே மேலேயா ஏறி நின்னேன். இருக்கிறதிலேயே பெரிய கோபுரத்துக்க உச்சியிலே நின்னப்ப ஒருவிஷயம் தெரிஞ்சுது. அந்த மொத்த ஏரியாவும் ஒத்தை ஒரு பாறை. ஒருபெரிய பாறையை குடைஞ்சுதான் அந்த கோபுரங்கள் கோயில்கள் எல்லாத்தையுமே செஞ்சிருக்காங்க. மகாபலிபுரம் இருக்குல்லா, அதை மாதிரி”
தண்ணி மேலே வந்தப்ப நான் அதிலே மிதந்தேன். தண்ணி என்னை தூக்கிட்டு போச்சு. மிதந்து கிடந்திட்டே இருந்தேன். தண்ணி ரொம்பதூரம் கொண்டுபோச்சு. கடைசியிலே அந்த வேகம் நின்னப்ப ஒரு பாறையை பாத்தேன். நீந்தி அதுமேலே ஏறிக்கிட்டேன் .அங்க மூணுநாள் உக்காந்திருந்தேன். சாப்பாடு இல்லை, தண்ணியில்லை. செத்தேன்னு நினைச்சேன். அப்பதான் பாறையிலே சிப்பி பிடிக்க வந்தவங்களுக்க வள்ளத்தைப் பாத்தேன். எந்திரிச்சு நின்னு கையை ஆட்டினேன். குரல் வரல்லை, தொண்டை அடைச்சிருந்தது”
“நீ சட்டையை களட்டி வீசியிருக்கலாமே?”
“ஃபாதர் என் உடம்பிலே துணியே இல்லை. அலையிலே போயி அந்த கோயிலிலே விளுந்தப்ப என் உடம்பிலே இருந்து துணியெல்லாம் களண்டுபோச்சு. ஜட்டிகூட இல்லை”
“பெரிய அலையிலே அப்டி ஆகும்… சுனாமியிலே பலபேரு துணியில்லாமல் ஆனாங்க. ஆனா ஜட்டி எப்டி களண்டு போகும்?”
“அங்க பாறையிலே உருண்டப்ப போயிருக்குமோ?”
எலிசாம்மா வந்து “இனிமே கடலுக்கு போகவேண்டாம்னு சொல்லியாச்சு. இங்க கடையிலே வேலைக்குப்போனாலும் சோத்துக்கு பைசா கிடைக்கும்… அது போரும்” என்றேன்
“ஆமா, அது நல்லதுதான்” என்றேன். எழுந்துகொண்டு “சரி, இப்ப நீ இதைப்பத்தி வேற யாரிட்டயும் சொல்லவேண்டாம். மனசுக்குள்ள இருக்கட்டும்” என்றேன். “அப்டி ஒரு எடம் கடலுக்குள்ள இருக்கலாம். அந்த பெரிய அலையிலே வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கிடுதது நம்ம வேலை இல்லை. நமக்கு பொளைப்பு இருக்கு”
“ஆமா”என்று அவன் சொன்னான்
“அப்டியே கொஞ்சம் கொஞ்சமா மறந்தாத்தான் உனக்கு நல்லது. அம்மை சொல்லுறது மாதிரி கொஞ்சநாள் கடைவேலைக்கு போ”என்றேன்\
நான் அந்த இடத்தை கூகிள் வரைபடத்தைக்கொண்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற ஆய்வுநிறுவனங்களின் தகவல்களைக் கொண்டும் அடையாளப்படுத்த முயன்றேன்.ஆன்றப்பன் எனக்கு உதவிசெய்தான். நாங்கள் நினைத்ததை விட பிரமிப்பூட்டும்படியான துல்லியத்துடன் இருந்தது கூகிள் எர்த் நிலப்படம்.
கடலின் ஆழத்தைக் காட்டும் கூகிள் செயற்கைக்கோள் படத்தில் இந்தியாவின் மேற்கு கடலை ஒட்டி ஆழம் குறைவான பகுதி நீண்டு கடலுக்குள் இருப்பதை காணலாம். இந்திய தீபகர்ப்பம் ஐம்பதிலிருந்து நூறு கிலோமீட்டர் வரை குறுகி உள்ளே வந்திருக்கிறது. இந்த நீரில் மூழ்கிய பகுதிகளில் ஏராளமான கடல்பாறைகள் உள்ளன. பல பாறைகள் கடலுக்குமேல் எழுந்து நின்றிருக்கின்றன. மீனவர்கள் ஓய்வெடுக்கும் பகுதிகளாகவும் கடற்பறவைகள் குஞ்சுபொரிக்கும் இடமாகவும் இருந்தன
முட்டத்திற்கும் குளச்சலுக்கும் நடுவே கரையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் அப்பால் எங்கோ என்று அந்த இடத்தை வரையறை செய்தோம். நானும் ஆன்றப்பன்னும் அவனுடைய படகிலேயே கடலுக்குள் போய் அங்கிருந்த பாறைகளை ஆராய்ந்தோம். எதிர்பார்த்ததுபோலவே அப்படி எந்த தடையமும் கிடைக்கவில்லை. அப்படி ஓர் இடமிருந்தால் அது கடலுக்கு அடியில் இருபதடி ஆழத்துக்கும் கீழே, வெளிச்சம் சென்றுசேராத இருட்டில், இருக்கவேண்டும்.
ஆன்றப்பன் எளிதாகச் சோர்வடைந்தான். “ஏதோ ஒண்ணு வந்திட்டு போய்ட்டுது, அப்டி நிப்பாட்டிக்க வேண்டியதுதான். இனி தேடணுமானா நம்ம கிட்ட டைவர்வேணும். அதுக்குண்டான ரப்பர் போட்டுகள் வேணும்…” என்றான்
“ஆனா அப்டி ஒரு எடமிருக்குறதை கண்டுபிடிச்சுட்டோம்னா அது ஒரு நியூசாக்கும்…ஆறுமாசத்திலே உலகமே இங்க வர ஆரம்பிச்சிரும்” என்று நான் சொன்னேன். “இப்ப நான் நிறைய வாசிச்சாச்சு. சிலப்பதிகாரத்திலே ஒரு விஷயம் வருது. ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க, அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள அப்டீன்னு”
“அப்டீன்னா என்ன?”என்றான் ஆன்றப்பன்.
“அதுக்கு என்ன அர்த்தம்னு யாருக்கும் தெரியாது.அப்ப அது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு புராணமாக இருந்திருக்கணும். இப்ப அது என்னன்னு தெரியாம ஆளாளுக்கு ஏதாவது சொல்லிட்டிருக்காங்க. ஊழிதோறும் உலகத்தைக் காக்க அடியில் தன் அளவென்ன என்று அரசருக்கு புரியவைக்கிறதுக்காக பாண்டியன் தன் வேலை எறிஞ்சான். அதனாலே வானத்து தேவர்களுக்கு கோவம் வந்து அவன் நாட்டிலே கடற்கோள் வந்தது. பஃறுளிங்கிற ஆறும் பலசிகரங்கள் அடுக்கடுக்கா இருந்த குமரிமலையும் கடலுக்குள்ளே போச்சு. அதனாலே அவன் வடக்கா போயி மதுரையை உண்டுபண்ணினான். இதான் நேரடி அர்த்தம்…” என்றேன்
“அடியில் தன் அளவு அரசருக்கு உணர்த்தினதுன்னா என்ன? அதனாலே ஏன் தெய்வங்கள் கோவிச்சுக்கிடணும்? பாண்டியன் இந்திரனுக்கோ வருணனுக்கோ சவால்விட்டான்னு எடுத்துக்கிடலாம். ஏன்னா அவங்க ரெண்டுபேரையும்தான் வெறுமே அரசன்னு சொல்ற வழக்கம் இருக்கு. அடியில் உள்ள அரசன்னு சொல்றப்ப அது வருணன்தான். ராஜாக்கள் வருணனுக்கு சவால்விட்டு ஆயுதத்தாலே தாக்கி சண்டைபோடுற கதை ஒரு டெம்ப்ளேட் மாதிரி இந்து புராணங்களிலே நிறைய இருக்கு” என்று தொடர்ந்தேன்
“உண்மையிலே அதுக்கு என்ன அர்த்தம்? கடலை நிரப்பி நகரங்களை அமைக்கிறதைத்தான் வருணனோட சண்டைபோடுறதுன்னு சொல்லியிருக்காங்க. அது வருணனுக்கு பிடிக்கிறதில்லை. அவன் பொங்கி வந்து அழிச்சிடறான். வடக்கே கிருஷ்ணனோட துவாரகையைப்பற்றியும் இதே கதை இருக்கு… பழைய பாண்டியர்களோட நகரங்களான தொல்மதுரை கபாடபுரம்லாம் கடலுக்குள்ளேயே கட்டினதா இருக்ணும். அதுதான் வருணனுக்கான சவால்….”
“இந்த கடலுக்குள்ளே இப்ப மூழ்கியிருக்கிற நிலத்திலே ஏழ்தெங்கநாடு ஏழ்பனைநாடுன்னு பல நாடுகள் இருந்திருக்கிறதா பானம்பாரனார் உரையிலே வருது. அந்த நிலத்தோட பெரிய நகரத்தைதிலே ஒரு ஏரியாவைத்தான் அந்தோணி பாத்திருக்கான்” என்று நான் சொன்னேன். “இப்ப பறளி ஆறுன்னு சொல்லுத ஆறுதான் பஃறுளின்னு சொல்லுறாங்க”
“இப்டியே கற்பனை செஞ்சுகிட்டே போகலாம்… எவிடென்ஸ் வேணும்ல?” என்றான் ஆன்றப்பன்.
“இலக்கியத்தை பாத்தா என்னெனமோ இருக்கு” என்றேன். “மணிபல்லவம்ங்கிற எடம் ஒரு பெரிய கனவா இருந்திருக்கு. அங்க போறதுக்கு எல்லாருக்குமே பெரிய தவிப்பு இருந்திருக்கு. ‘மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்’ ன்னு மணிமேகலை சொல்லுது. அங்க போயி சுத்திக்கும்பிடணும்னு தோணுற ஆசைய யாராலயும் தணிக்க முடியாதுன்னு பாட்டு சொல்லுது”
“அங்க எதுக்கு போறானுக?”
“அங்கே போனா ஒருத்தன் தன்னோட ஏழுபிறவிகளையும் பாத்திடலாம். வாழ்க்கைக்க அர்த்தம் முழுசா தெரிஞ்சிரும். அங்கபோய் பாத்துட்டு ஆபுத்திரன் ’என்பிறப்பு அறிந்தேன், என் இடர் தீர்ந்தேன் அப்டீன்னு சொல்றான்’.அது கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் மூணுமா இல்லாம காலம் நிலையா இருக்கிற எடம்”
எழுந்துகொண்டு “வேணுமானா எங்கியாம் எளுதி விடுங்க” என்று தன் பையை எடுத்துக்கொண்டான்
“அதான் சொன்னியே, ஆதாரம் வேணும். ஆதாரமில்லாம அடிச்சுவிடுற ஆய்வாளர்கள் நெறைய இருக்காங்க… “ என்றேன்
“எல்லாம் கணக்குதான். இங்க வயித்துப்பாட்டு ஜனம் ரெண்டுபேரையுமே கவனிக்கிறதில்லை” என்று ஆன்றப்பன் கிளம்பிச்சென்றான்.
கொஞ்சம் கொஞ்சமாக நானும் எல்லாவற்றையும் மறந்துபோனபிறகு ஒருநாள் எலிசாம்மா என்னை தேடிவந்தாள். பதற்றமும் கண்ணீருமாக என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னாள். என் அறைக்கு அழைத்துச் சென்றேன்
“ஃபாதர், அந்தோணிகிட்ட நீங்க பேசுங்க…எனக்க பயல காப்பாத்திக்குடுங்க” என்று அழத்தொடங்கினாள்
“என்ன அவனுக்கு? நல்லாத்தானே இருக்கான்? வேலைக்கு போறான் இல்ல?”
“வேலைக்கு போய்ட்டுதான் இருந்தான். இப்ப பத்துப் பதினைஞ்சுநாளா போறதில்லை” என்று அவள் சொன்னாள். “அவனுக்கு மனசு செரியில்லை ஃபாதர். அவனுக்கு என்னமோ ஆயிப்போச்சு. பேயிபிசாசுக்க பிடியிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. கடலுக்கு போனப்ப அவனை என்னமோ ஏறி பிடிச்சுப்போட்டுது”
“சமாதானமா சொல்லுங்க, என்ன ஆச்சு?”என்றேன்
எலிசாம்மா சொன்னது இதுதான். திரும்பிவந்த பிறகு அந்தோணி மெல்ல மெல்ல மீண்டுவந்தாலும் சோர்வாகவே இருந்திருக்கிறான். அடிக்கடி தனிமையில் இருந்தான். எவரிடமும் அதிகம் பேசுவதில்லை. கடையில் வேலைக்கு போனான். அங்கும் எவரிடமும் எந்த தொடர்பும் இல்லை. அவன் தனியாக அமர்ந்து தனக்குத்தானே தலையாட்டி பேசிச் சிரிப்பதை எலிசாம்மா பலமுறை பார்த்தாள். அவன் அடிக்கடி கடற்கரையில் போய் நின்றுகடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். அலைகளுடன் பேசுவதுபோல கைகாட்டினான்
அவனிடம் பெரிதாக ஏதோ தவறு இருப்பதை அவள் உணரத்தொடங்கியது அவன் இரவில் காணாமாலாகத் தொடங்கியபிறகுதான். அவன் ஆடைகள் நனைந்திருப்பதை, கடல்மணலுடன் அவன் திண்ணையில் படுத்திருப்பதை முன்பும் பலமுறை பார்த்திருந்தாள். அவன் கடற்கரையில் சென்று நின்றிருக்கிறான் என்று நினைத்தாள்.
ஒருமுறை அவன் போகும்போது மெதுவாக எழுந்து பின்னால் போய் பார்த்தாள். அவன் கடற்கரைக்குப் போய் அங்கே குடில்களுக்கு அருகே கொட்டகைகளில் வைக்கப்பட்டிருந்த மோட்டாரை எடுத்து கரையில் நின்ற படகில் பொருத்திக்கொண்டு தள்ளி அலைகளில் ஏறி கடலுக்குள் போய் மறைந்தான். அவள் திகைப்புடன் ஓடிப்போய் கடற்கரையில் நின்றாள். நெடுநேரம் கழித்து விடிவதற்கு முன்புதான் அவன் திரும்பி வந்தான்.
அவள் கரையில் நிற்பதை அவன் கண்டதாகவே தெரியவில்லை. பழையபடி படகை நிறுத்திவிட்டு அவன் போய் திண்ணையில் ஈர உடையுடன் படுத்துக்கொண்டான். அவள் அவனருகே சென்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டாள். பிறகு அழுதாள். பின்பு கெஞ்சினாள். அவன் அவள் பேச்சை கேட்டதாகவே தோன்றவில்லை
“என் மக்கா, கோளுள்ள கடலாக்கும். நீயோ கை உறைக்காத சின்னப்பய. வேண்டாம்லேன்னு நான் காலைப்பிடிச்சு சொல்லியாச்சு. கேக்கல்ல. மறுபடி பலதடவை கடலுக்குள்ள போனான். இங்க எங்க வீட்டிலே கெடக்குத மோட்டாரை கொண்டுபோயி ரிப்பேர் செய்து வச்சிருக்கான். எங்க பளைய போட்டையும் ஓட்டை அடைச்சு ரெடிசெய்தாச்சு. போட்டை எடுத்துட்டு போனா இப்ப ரெண்டுநாள் மூணுநாள் கழிஞ்சாக்கும் வாறது. ரஸ்கும் தண்ணியும் எல்லாம் கொண்டுட்டுப் போறான்”
“எங்க போறான்?”என்றேன்
“தெரியல்ல. மீனு சிப்பி ஒண்ணும் கொண்டு வாறதில்லை” என்றாள் எலிசாம்மா.
“செரி, நான் வந்து பேசுதேன்”என்றேன்
அன்றே எலிசாம்மா வீட்டுக்கு போனேன். அந்தோணி வீட்டில் திண்ணையில் லுங்கிகட்டிக்கொண்டு தூங்கியபடி இருந்தான். என்னைக் கண்டதும் எலிசாம்மா அவனை எழுப்பினாள். அவன் எழுந்து தூக்கம் விலகாத கண்களைச் சுருக்கி என்னை பார்த்தான். முகம் வீங்கி உதடுகள் உலர்ந்திருந்தன
நான் முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்தேன். அவன் உள்ளே போய் முகம் கழுவி சட்டை போட்டுக்கொண்டு வந்தான். நானும் அவனும் தனிமையில் ஆனபோது நான் கேட்டேன். “என்னப்பா? உங்க அம்மை நீ கடலுக்கு போறதா சொன்னா… நீ போனியா?”
“ஆமா”என்றான்
“ஏன்?”
“நான் அந்த எடத்தை தேடிப்போனேன்” என்று அவன் சொன்னான்
“இங்கபாரு, அது உண்மையிலேயே இருக்கிற இடமா இருந்தாக்கூட எங்கியோ இருக்கு. கடலுக்கு உள்ள. எப்டியோ ஒரு அலையிலே மேலே வந்திருக்கு, கொஞ்சநேரம்.மறுபடி அதை கண்டுபிடிக்கணுமானா நம்மால முடியாது. உள்ளதைச் சொல்லணுமானா நீ சொன்னபிறகு நானும் ஆன்றப்பனும் சேர்ந்து இன்னும் சயண்டிஃபிக்கா தேடினோம்.பெரிய போட்டிலே போயி தேடினோம். தடையமே இல்லை. அப்டி ஒரு எடமிருந்தா அது முப்பதடி ஆழத்துக்கு அடியிலே இருக்கு… அது மேலே வராம நம்மால பாக்கவே முடியாது”
“நான் மறுபடி பாத்தேன்” என்றான்
நான் திகைத்துவிட்டேன்
“எனக்கு ஒரு சொப்பனம் வந்தது, அதிலே எங்க அப்பா அந்த கட்டிடங்களிலே உக்காந்து என்னை பாத்திட்டிருக்காரு. முழிச்சப்பிறவு நான் நடுங்கிட்டேன். அதிலே இருந்து வெளியே வரவே முடியல்லை” என்றான் அந்தோணி. “கடலுக்கு உள்ள போயி பாக்கணும்னு துடிப்பா இருந்தது. அதை செய்யவேண்டாம்னு கடுமையா தடுத்துப் பாத்தேன்… கிறுக்கு பிடிச்சிரும்னு தோணிட்டுது. பிறவுதான் போயி பாக்கலாம்னு போட்டை எடுத்தேன்”
“ஃபாதர் அந்த எடத்திலே இருக்கிறப்ப எனக்கு அங்க நெறையபேரு இருக்கிறதா தோணிச்சு.. என்னை பலபேரு பாத்திட்டிருக்கிறதா நினைச்சு திரும்பித்திரும்பிப் பாத்தேன். ஆனா இப்ப தெரியுது, எங்க அப்பா அங்க இருக்காரு” அந்தோணி சொன்னான்.
“இதெல்லாம்…”என்று நான் சொல்ல ஆரம்பிக்க அவன் கைகாட்டி இடைமறித்தான்.
“சும்மா தோணல்லுன்னு சொல்லுவீங்க. எனக்கும் அதெல்லாம் யோசிக்கத் தெரியும்” என்றான்.
“நான் சொல்றதைக்கேளு , நீ படிச்சவன். இந்தக் கடலு இங்க நம்ம கண்முன்னாடி விரிஞ்சு கிடக்கு. நாம பாத்துப்பாத்து பாக்காம ஆயிட்டோம். கேட்டுக்கேட்டு கேக்காம ஆயிட்டோம். அவ்ளவு பெரிசன ஒண்ணை நாம கான்ஷியஸ்லே எப்பவும் வச்சுக்கிட முடியாது. அதனாலே சப்கான்ஷியஸுக்கு தள்ளிவிட்டுடறோம்..கடல்தான் இப்ப நம்ம சப்கான்ஷியஸ். அதிலே அலையடிக்கிறதும் கொந்தளிக்கிறதும் எல்லாத்தையுமே சிம்பாலிக்காத்தான் பாக்கணும்.அந்த ஊரு எந்திரிச்சு வந்தது உன்னோட சப்கான்ஷியஸிலே இருந்துதான்”
“சரி அப்ப அதுக்குள்ள போயி பாக்கிறேன்”
“சப்கான்ஷியஸுக்கு நம்ம சிந்தனையிலே இருக்கிற ஆர்டர் இல்லை. அது கடல்மாதிரி முடிவில்லாம கெடக்கு. சரியான வழிகாட்டலும் அதுக்குண்டான சக்தியும் இல்லாமல் உள்ள போனா மூழ்கிடுவோம்”
“ஆனா அதுக்க ஒரு வாசல் திறந்தாச்சுன்னா பிறகு அதை மறந்து இருக்கமுடியாது…” என்று அந்தோணி சொன்னான். “அது கிறுக்குமாதிரின்னா அப்டியே வச்சுக்கிடலாம். ஆனா அதுக்குள்ள ஒரு தடவை போய்ட்ட பிறவு இங்க இந்த ஊரு இந்த சின்ன வீடுகள் சில்லறைத் தொளில் எல்லாமே மடத்தனமா ஆயிடும்”
நான் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்
அது ஒரு அழைப்பாக்கும் ஃபாதர். ஒரு கதவு திறந்த மாதிரி…” என்றான் அந்தோணி “நான் கடலுக்குள்ள போய் பாத்துட்டே இருந்தேன். எனக்கு வழி தெரியல்ல. கடலுக்குள்ள இடத்தைக் கண்டுபிடிக்கிற டிரெயினிங்கும் இல்லை. ஆனால் என் மனசுக்குள்ளே ஏதோ ஒரு தடம் இருந்தது. அதை நம்பி போய்ட்டே இருந்தேன். பலநாட்கள்”
“அங்க மத்தியான்னவெயிலிலே கடலுக்க நிறம் நீலம்கூடி ஒண்ணுமே தெரியறதில்லை. ஒரு தனிவெளிச்சம் வேணும், அளவான வெளிச்சம்.தண்ணிக்குள்ள ஊறி அடியிலே போற அளவு வெளிச்சம், ஆனா மேல்த்ண்ணியை நீலமாக்கி அடி ஆழம் காணாம ஆக்குத அளவு வெளிச்சம் இருக்க்க்கூடாது. போன மாசத்திலெ ஒருநாள் முழுநிலாவிலே நான் கடலிலே இருந்தேன். அப்ப ஒரு பாறை தூரத்திலே தெரிஞ்சுது. அதிலே யாரோ உக்காந்திட்டிருந்தாங்க. நான் போட்டை பக்கத்திலே கொண்டுபோனேன். நல்லாவே ஆளைப்பாத்தேன், எங்க அப்பா. அவரு என்னை பாத்துட்டு நின்னுட்டிருந்தாரு”
“அதெப்டி?”என்றேன்
“நீங்க சொன்னீகள்லா, சப்கான்ஷியஸ்னு.. அங்க இருக்கலாம்”
நான் மண்டையை கையால் சொறிந்து “குழப்பாதடே, கிறுக்குபிடிச்ச மாதிரி இருக்கு” என்றேன்
“நான் பாத்தேன், என் கண்ணால தெளிவாட்டு பாத்தேன். சந்தேகமே இல்லை. நான் பக்கத்திலே போறதுக்குள்ள என்னைச்சுத்தி அலை வந்திட்டுது. மிகப்பெரிய அலை. செங்குத்தா பத்து பனை உயரத்திலே. போட்டும் நானும் அந்த அலைகள் மேலே சுத்தினோம். அலை அடங்கினப்ப நான் என் பக்கத்திலே அந்த பாறைத்தீவை பாத்தேன். அதே எடம்தான்…”
“படகை உந்தி பக்கத்திலே கொண்டுபோனேன். அதிலே ஏறி உள்ள போயி பாத்தேன். அதே எடம். ஒத்தைக்கரும்பாறை. அதுக்க ஒத்த நடுவிலே எண்கோண மண்டபத்திலே ஒரு கால்த்தடம். சுத்தி அமைதியா நின்னுட்டிருக்கிற நனைஞ்ச கோபுரங்கள். கல்லுச்சுவரிலயும் தூணிலயும் சிற்பங்கள். அங்க யாருமே இல்லை. சுத்திச் சுத்தி வந்தேன். அப்பா அப்பான்னு கூப்பிட்டேன். அங்க நான் எவ்ளவு சத்தம்போட்டலும் குரல் வெளியே வராத மாதிரி இருந்தது”
“ஒரு கோபுரத்துக்குள்ள சின்ன அறை. அதுக்குள்ள எட்டிப் பாத்தேன். அங்கே சின்னதா பாறையிலே வெட்டின படிகள் தெரிஞ்சுது. சுரங்கம் மாதிரி உள்ளே எறங்கிப் போய்ட்டிருக்கு. முதல் நாலஞ்சு படியிலே இறங்கினேன். உள்ளே நல்ல இருட்டு. கூச்சலிட்டு பாத்தேன். உள்ளே இருந்து எதிரொலி வந்தது. அப்பா அப்பான்னு கூப்பிட்டேன். முழக்கம்தான் வந்தது. மறுபடி நாலஞ்சு படி இறங்கினேன். வந்த வழி தலைக்குமேலே சதுரமான வெளிச்சமா தெரிஞ்சுது. பயந்து மேலே ஏறிவந்திட்டேன். என்னை யாரோ துரத்திட்டு வர்ர மாதிரி இருந்தது. திரும்பிப்பாக்காமல் ஓடி போட்டிலே ஏறி வந்திட்டேன்”
“கரைக்கு வந்த பிறகு உக்காந்து நான் அழுதேன். ஏன் திரும்பி வந்தேன்னு நினைச்சு தலையிலே அடிச்சுக்கிட்டேன். எதுக்க்காக பயப்படுதேன்? எதை விட்டுட்டு போகணும்னு? எனக்கு இங்க என்ன இருக்கு? இந்த அழுக்கு வீடும் சாக்கடைத்தெருவும் சந்தடியும் குப்பையுமா? திரும்பிப்போகணும்னு தோணிச்சு. ஒரு வேளை திரும்ப எனக்கு அது தெரியாமலேயே ஆயிடலாம். இனி என் வாழ்க்கையிலே ஒரு வாய்ப்பே கிடைக்காம ஆயிடலாம்
அதை நினைச்சு நினைச்சு அழுதேன். மறுபடியும் கடலுக்குள்ள போனேன். பகலும் ராத்திரியும் அங்க இருந்தேன். மறுபடி தெரியாதுன்னே நினைச்சேன். ஆனால் தெரிஞ்சுது. ஒரு அந்திநேரம். அதேபோல பெரிய அலை. ரொம்பப்பெரிய அலை. நான் படகிலே சுத்தி சுத்தி வந்தேன். தூரத்திலே அந்த பாறைத்தீவை பாத்தேன். பொன்னிலே செஞ்சது மாதிரி. ஒரு பெரிய கிரீடத்தை கழட்டி வைச்ச மாதிரி. கிட்டக்க போலாம்னு நினைச்சேன். ஆனால் சட்டுன்னு அது தீமாதிரி தெரிஞ்சுது. கிட்டபோனா சுட்டுச்சாம்பலாக்கிடும்னு தோணிச்சு. ஆனால் விலகி வரவும் முடியலை. கண்ணீர் விட்டுட்டு அப்டியே பாத்துட்டே இருந்தேன். இருட்டி அப்டியே அணைஞ்சு மறைஞ்சு போச்சு” அந்தோணி தொடர்ந்தான்.
“போனவாரம் மறுபடியும் பாத்தேன். பௌர்ணமியிலே. அப்டி ஒரு வெளிச்சம் கடல்மேலே. அலையே இல்லை. கடல்நீர் பாறைமாதிரி கெடக்கு. நான் போட்டிலே போய்ட்டிருந்தப்ப அந்த எடம் தெரிஞ்சுது. முதல்ல கடல்மேலே மேகக்கூட்டம் எறங்கி கிடக்குதுன்னு நினைச்சேன். பக்கத்திலே போகப்போக அது அந்த எடம்தான்னு தெரிஞ்சுது. கனவான்னு நினைச்சு கூர்ந்து பார்த்தேன். அதே இடம்தான்.அப்டியே நிலவொளியிலே தெரிஞ்சுது”.
“நிலவு நேர்மேலே இருக்கு. நிலவிலே இருந்து என் படகு வரை ஒரு பாதை. பொன்னாலே விரிப்பு போட்டது மாதிரி தளதளன்னு… இறங்கி நடந்திருப்பேன். ஆனால் மனசு உள்ள நடுங்கிப்போச்சு. அப்டியே கண்ணீரோட பாத்துட்டே இருந்தேன். ரொம்பநேரம் கழிச்சு ஞாபகம் வந்தப்போ அலை அடிச்சிட்டிருந்தது. என்னை தூக்கி ரொம்பதூரம் கொண்டு வந்திட்டுது” அந்தோணி சொன்னான்
நான் கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். எப்படி எதைச் சொல்வது என்று தெரியவில்லை
“ஏன் அப்டியே திரும்பி வாறேன்னு தெரியல்லை. ஒரு சின்ன இழுப்புதான் இந்தப்பக்கமா கொண்டுவந்திடுது. அதைத் தாண்டி போக என்னாலே முடியல்லை” சட்டென்று உரக்க “தாண்டிப்போயாகணும்… போவேன்” என்றான்
“இங்கபாரு, உன் அம்மாவும் தம்பி தங்கச்சிகளும் இருக்காங்க…”
“ஆமா, ஆனா அவங்க எனக்கு முக்கியமில்லை… இங்க உள்ள எதுவுமே முக்கியமில்லை”
“நீ போற எடம் ஒருவேளை திரும்பி வரமுடியாத எடமாக்கூட இருக்கலாம”
“திரும்பி வரமுடியாத எடம்தான். திரும்பி வந்தாக்கூட போன ஆளா திரும்பி வரமாட்டேன். அது போறது மட்டும்தான்”
“ஏன்?”
“அதை நான் எப்டிச் சொல்றது? ஃபாதர் அந்த வாசல் திறக்கிறது நம்ம கையிலே இல்லை. அது கடலிலே இருக்கோ மண்டைக்குள்ள இருக்கோ, திறந்தாச்சுன்னா ஒண்ணும் பண்ணமுடியாது… இந்த அலைக்கழிப்பெல்லாமே கடைசியிலே அங்க போறதுக்காகத்தான். வேற வழியே இல்லை”
“சரி நான் ஒண்ணு சொல்லுதேன், நீ நாளைக்கு சர்ச்சுக்கு வரமுடியுமா?”
“எதுக்கு?”
“மறுபடி பேசுவோம்… ஜெபம் செய்வோம்”
“வாறேன்…”
“நாளைக்கு காலையிலே… கண்டிப்பா வரணும்”
அவன் தலையசைத்தான். நான் கிளம்பும்போது அவன் நாளை வராவிட்டால் தேடி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கு அவனிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நான் மிகவும் குழம்பியிருந்தேன், அகத்தே முற்றிலும் தனித்திருந்தேன்
மறுநாள் காலை அவன் வரவில்லை. அவனை கூட்டி வரும்படி கோயில்குட்டியை அனுப்பினேன். அவன் திரும்பிவந்து அந்தோணி வீட்டில் இல்லை என்று சொன்னான். அன்று மதியம் எலிசாம்மா வந்து அந்தோணி இரவிலேயே கடலுக்கு போய்விட்டதாகச் சொன்னாள். விசும்பி அழுதபடி “ஃபாதர் எனக்க பயல காப்பாத்துங்க ஃபாதர்” என்றாள்.
நாங்கள் அன்றும் அடுத்தநாளும் அதற்கு அடுத்தநாளும் காத்திருந்தோம். மூன்றுநாட்களுக்குமேல் அவனிடம் உணவும் நீரும் இருக்க வாய்ப்பில்லை. நான்காம் நாள் அவன் கடலுக்குள் போன செய்தியை நான் ஆன்றப்பனிடம் சொன்னேன். அவன் உடனே படகுகளை கடலுக்குள் அனுப்பினான். ஏழுநாட்களுக்குமேல் கடலில் தேடிக்கொண்டிருந்தோம். அந்தோணி திரும்பி வரவே இல்லை
நான் அவசரமாக என் ஊருக்குப் போகவேண்டியிருந்தது. பெங்களூரில் ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். அங்கிருந்து சென்னையின் இன்னொரு பத்துநாள் தியானமுகாமுக்குப் போனேன். அங்கிருந்து மீண்டும் கடற்கரைக்கே வந்தேன். வேண்டுமென்றேதான் அந்தப்பயணங்களை ஏற்பாடு செய்துகொண்டேன். எனக்கு வேறுவழியில்லை. என் உள்ளத்திடமிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது.
அந்தோணி காணாமலானது பெரிய அலைக்கழிப்பாக இருந்தது. இழப்பின் துயர் வேறு, மெல்லிய நம்பிக்கையுடன் அலைக்கழியும் துயர் வேறு. பிந்தையது மிகமிக கொடியது.அந்தோணி அவனே கடலுக்குள் சென்றிருந்தான். புயலில் மாட்டவில்லை. ஆகவே அவன் எங்காவது கரையேறியிருக்க வாய்ப்பிருந்தது. ஏற்கனவே ஒருமுறை அப்படி மீண்டு வந்தவனும்கூட.
என்னை அலைக்கழித்தது அவன் சாவு அல்ல. அதிலிருந்த வேறொன்று.சாவு என்பது எப்போதும் அறுந்து தொங்கும் வாழ்வின் நுனியில் தொங்கியாடுவது. இது அப்படி அல்ல. இதில் ஒரு முழுமை இருந்தது. கதைபோல, புராணம்போல. அல்லது ஒரு கனவுபோல. அதுதான் என்னை கொந்தளிக்கச் செய்தது. பிறிதொரு நினைவே இல்லாதவனாக ஆக்கியது.
அது ஓர் உளவியல் பீடிப்பு என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. மனம் கனவுகளை ஒன்றோடொன்று பிரக்ஞை அறியாமலேயே கைமாறிவிடுகிறது. ஏனென்றால் கனவுகள் அனைவருக்கும் உரிய ஆழத்தில் உறைகின்றன. ஒருவகை வைரஸ்.நான் அதனுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். மெல்லமெல்ல வென்றுமீளலாம், தளர்ந்து அமிழவும்கூடும்.. உள்ளே வரும் அந்த சின்னஞ்சிறு விதையை முளைக்கவைக்க என்னுள் எத்தனையோ விசைகள். என் அச்சங்கள்,ஐயங்கள், குற்றவுணர்வுகள். அன்றாடச்சலிப்பின் பேரெடை. கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டது மானுட வாழ்க்கை.கனவு அவனைவிடப்பெரிதாகும்போது வாய்திறந்து அவனை உண்டுவிடுகிறது.
அந்த அலைக்கழிப்பிலிருந்து தப்ப நான் அங்கிருந்து விலகிநிற்க முடிவுசெய்தேன். அது பயனும் அளித்தது. திரும்பி வந்தபோது அந்தோணி தொலைவான நினைவாக இருந்தான். ஆன்றப்பன் என்னை வந்து சந்தித்தபோது அனைவருமே அந்தோணி இனி வரமாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொன்னான்
‘பேப்பரில விளம்பரம் குடுத்தாச்சு. போலீஸ்ல புகாரும் குடுத்தாச்சு. எல்லா வாட்ஸப் குரூப்லயும் போட்ட்டாச்சு. இருபத்தஞ்சு நாளாச்சு. எங்கியாம் இருந்தான்னா வந்திருக்கணும்” என்று ஆன்றப்பன் சொன்னான்
“எங்கியாம் ஜெயிலிலே இருப்பானோ?”என்றேன்
“இப்பல்லாம் ஜெயிலிலே வச்சாக்கூட நெட்லே போட்டிருதாக… ஆனா அதுக்கு வாய்ப்பிருக்கு”
“பரவாயில்லை, எலிசாம்மாளுக்கு நம்புறதுக்கு ஒரு சின்ன வாய்ப்பு மிச்சமிருக்கே” என்றேன்
“ஆமா, பாவப்பட்ட குடும்பம்… அந்த எளையபய இப்ப கடைவேலைக்கு போறான்” என்று ஆன்றப்பன் சொன்னான்
ஆனால் மறுநாள் எலிசாம்மாவை சாலையில் பார்த்தபோது அவள் நம்பிக்கையை இழந்துவிட்டிருப்பதை கண்டேன். “சர்ச்சுக்கு ஏன் வரல்லை?”என்று கேட்டேன்
”வரணும்” என்று பொதுவாகச் சொன்னாள்
“விசுவாசத்தை விட்டிரவேண்டாம்” என்றேன். “உங்க மகன் வருவான்… ஆண்டவர் அருள்வார்”
“அவன் வரமாட்டான்” என்று அவள் சொன்னாள். “நான் வாங்கிவந்த வரம் அப்டித்தான். அவன் போயாச்சு… அவன் அப்பனுக்க ஒப்பம் போயி சேந்தாச்சு”
“இல்ல…”என்று நான் சொல்லத் தொடங்க அவள் இடைமறித்தாள்
“நான் சொப்பனம் கண்டேன் ஃபாதர்”
“என்ன சொப்பனம்?”என்றேன்
அவள் ஒன்றும் சொல்லாமல் சேலைமுனையை தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள்.
நான் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன கனவு? அந்தோணிக்கும் எலிசாம்மாவுக்கும் மணிபல்லவம் என்ற பெயரே தெரிந்திருக்கவில்லை. அந்த வார்த்தை என்னை மட்டும்தான் போட்டு சுழற்றிக்கொண்டிருக்கிறது. காலமில்லாத இடம். அப்படி ஒரு கனவு, ஒரு சொல் உள்ளே வந்து தைத்தால் அது விஷமுள் போல உள்ளத்தையே நஞ்சாக்கிவிடுகிறது. உயிரை எடுத்தபிறகுதான் ஓயும் அது.
ஆன்றப்பன் வந்தபோது அவனிடம் அதைப்பற்றி சொல்ல நினைத்தேன். ஆனால் தவிர்த்துவிட்டேன். அவனும் ஆர்வம் மடைமாறியிருந்தான். ஒரு புதிய லோனை வாங்கும் முயற்சிபற்றி பேசிக்கொண்டிருந்தான்.
நான் மணிபல்லவம் என்ற சொல்லை பித்துப்பிடித்து சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் அதிலிருந்து விலகினேன். ஒரு சில நாட்கள். அந்தோணியின் நினைவும் மயங்கி பின்னகர்ந்துவிட்டிருந்தபோது எனக்கு ஒரு கனவு வந்தது.
பின்னிரவில். நான் கனவுகாண்கிறேன் என்று எனக்கு தெரிந்திருந்தது. ஒரு படகில் தன்னந்தனியாகச் சென்றுகொண்டிருந்தேன். அலையில்லா கடல். நிலவொளி. ஒரு பாறைமேல் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
கூர்ந்து பார்க்கும்தோறும் அவன் மங்கலடைந்தான். மீண்டும் மீண்டும் பார்த்தபடி அருகே சென்றேன். விழித்துக்கொண்டேன். மனம் தெளிந்ததுமே தெரிந்தது, அவன் அந்தோணி. அவன் என்னை பார்த்தபடி அந்தப்பாறையில் அமர்ந்திருந்தான்
நான் வியர்த்து படபடத்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் குடித்து ஜெபித்துவிட்டு படுத்துக் கொண்டேன். நெடுநேரம் தூக்கம் வரவில்லை. விடியற்காலையில்தான் தூங்கினேன். விழித்த முதற்கணமே அந்த நினைப்புதான் வந்து நின்றது.
அதைத் தவிர்த்துவிடவேண்டும் என்று எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். அதில் என் மனம் படியாமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ஜெபம் செய்தேன். சர்ச் வேலைகளை இழுத்துவைத்து வெறியுடன் செய்துகொண்டிருந்தேன். வீடுகள் தோறும் போய் ஜெபம் செய்தேன். என்னென்னவோ செய்தேன். அத்தனைக்கும் பின்பும் இரவு தூங்குவதற்குமுன் மாத்திரை போட்டுக்கொள்ளவேண்டியிருந்தது
ஆனால் பத்துநாளில் அந்த தொந்தரவை மழுங்கவைத்துவிட்டேன். பின்னர் இயல்பாக நடமாடத்தொடங்கினேன். கடற்கரையில் எவருக்குமே அந்தோணி என்ற இளைஞன் அங்கே இருந்ததும் மறைந்ததும் நினைவில் இல்லை. டீக்கடையில் ஒருமுறை ஒரு பேச்சு எழுந்து வந்தது. ஒரு சின்னக்குமிழி உடைவதுபோல மறைந்தது.
இத்தகைய விஷயங்கள் நம் பிரக்ஞையை நாம் சமாதானப்படுத்தி அமையவைத்தபின் அடியிலிருந்து எழக்கூடியவை. நான் ஒரு கனவு கண்டேன். படகில் சென்றுகொண்டிருக்கிறேன். என் அருகே அந்தோணி இருக்கிறான் என்பதை என்னால் உணரமுடிந்தது. தொலைவில் அந்த பாறைத்தீவை கண்டேன். அது நிலவொளியில் பொன்னாக தெரிந்தது.
அக்கணமே விழித்துக்கொண்டேன். எழுந்து கடற்கரை நோக்கி ஓடினேன். கடல் அலையடித்துக்கொண்டிருந்தது. நிலவு அதன் முழுமையான ஜொலிப்புடன் வானில் நின்றிருந்தது. நிலவை நோக்கி அழைக்கும் அந்த பொன்னிறப்பாதை தளதளத்தது. கடற்கரையில் காற்று என்னை அறைந்த்து அறைந்து ஏதோ சொன்னது. அலைமுழக்கம் எதையோ சொன்னது
சட்டென்று அவற்றில் ஒரு சொல்லை என் அகம் பொருள்விளங்கிக்கொண்டது. திடுக்கிட்டு உடல் துள்ளி நடுங்கியது. என்ன சொல்? என்ன புரிந்துகொண்டேன்? அது என் விழிப்புள்ளத்திற்கு வரவே இல்லை.
கிறுக்குத்தனம், வெறும் கிறுக்குத்தனம். இங்கிருந்து ஓடிவிடவேண்டும். இது என்னை தின்றுவிடும். கடல் உருவாக்கும் மாயை. கடல் போட்டிருக்கும் தூண்டியின் ஒளிவிடும் மிதவைதான் அந்த மணிபல்லவம்.
பதைபதைத்தபடியும் உள்ளம் உடைந்து அப்படியே மணலில் விழுந்து அழுதபடியும் நான் இரவெல்லாம் அங்கிருந்தேன். விடியலில் ஒளியில் இரவெல்லாம் நான் கொண்ட அந்த கொந்தளிப்பு அசட்டுத்தனமான மனநாடகமாக மாறியது. திரும்பி வீடுநோக்கி ஓடி என் அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டேன். சர்ச்சுக்கு போகவில்லை. காய்ச்சல் என்று சொல்லிவிட்டேன்.
பகல்முழுக்க அங்கேயே இருந்தேன்.கொஞ்சம் தூங்கினேன். ஆனால் ஆழ்ந்த தூக்கம் இல்லை.அவ்வப்போது விழித்து விழித்து எழுந்துகொண்டிருந்தேன். கடைசியாக விழித்துக்கொண்டபோது நள்ளிரவு ஆகியிருந்தது. என் மனம் தெளிந்து அமைதியாக இருந்தது. நான் மிக அருகே என அந்த கனவை பார்த்துக்கொண்டிருந்தேன்
கடலுக்குள் போவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால் எனக்கு கடலுக்குள் செல்ல எந்த பயிற்சியும் இல்லை. ஆன்றப்பன்னை அழைத்தாலென்ன? ஆனால் அது முடியாது. இது தன்னந்தனியாக மட்டுமே செல்லவேண்டிய பயணம். இதை எவருமே தவிர்க்கமுடியாது. தவிர்க்கமுயன்று சுற்றிச்சுற்றி ஓடலாம். ஆனால் அது அந்த சுழிமையத்தை நோக்கி மேலும் விசையுடன் செல்வதுதான்
கடலுக்குள் செல்வதற்கான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக்கொண்டேன். போய் பார்ப்பதே இந்த மாயக்கவற்சியிலிருந்து என்னை மீட்கும். அங்கே ஒன்றுமில்லை. இது அந்தோணி சொன்ன கதைகளில் இருந்து என் மனம் கற்பனை செய்துகொண்டது. இந்த சின்னஞ்சிறு கடற்கரை ஊரின் தனிமையில் எனக்கிருக்கும் சலிப்பை வெல்ல என் மனம் இந்தக் கனவை வளர்த்துக்கொள்கிறது. இதை யதார்த்தத்தில் வைத்துப் பார்ப்பதே இதை உடைக்கும் வழி, ஒதுக்க முடியாது. ஒதுக்க ஒதுக்க இது பெருகும்
நான் கடற்கரைக்குச் சென்றேன். அந்த நிலையில் என் மூளை அடைந்திருந்த கூர்மை என்னையே வியக்கச் செய்தது. நாம் எதையும் கவனிப்பதில்லை என்பது நாம் கொண்டிருக்கும் மாயை, நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம். நம் ஆழ்மனம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறது.
எங்கே படகுக்குரிய மோட்டார் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்திருந்தது. ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து ஒரு படகில் பொருத்தினேன். படகை தள்ளி கடலுக்குள் கொண்டுசென்றபின் அதை இயக்கினேன். அலைகள்மேல் எழுந்துவிட்டேன்.
அலைகள் நிலவில் பளபளத்துச் சுருண்டன. புரண்டு கொந்தளிக்கும் நீர்ப்பரப்புக்கு மேல் சிவந்த நிலவு மேகங்கள் ஒளியுடன் சூழ்ந்திருக்க வானில் நின்றது. செல்லச் செல்ல நான் என் கைகளே படகை ஓட்ட அறிந்திருப்பதை புரிந்துகொண்டேன். நான் பயிற்சியின்போது படகோட்டுவதின் அடிப்படைகளைக் கற்று அப்படியே மறந்துவிட்டிருந்தேன்
பறவைகள் நுண்ணுணர்வால் வலசை போவதுபோல நான் சென்றேன். கடல்மேல் நான் சென்ற பாதை என்னுள் ஏற்கனவே எங்கேயோ இருந்தது. ஆனால் நடுவே அது வெறும் பித்து, நான் சாகப்போகிறேன் என்று தோன்றிக்கொண்டிருந்தது. ஓர் அலைபோல தர்க்கபுத்தி வந்து அறைந்து திரும்பு திரும்பு என்றது. அதைவிட பன்மடங்கு அலையாக எக்களிப்பு ஒன்றுவந்து மூடிக்கொண்டது
கடலில் நான் அலைந்துகொண்டே இருந்தேன். நெடுநேரம். எங்கும் அந்த பாறைத்தீவின் தடம் தெரியவில்லை. மாபெரும் ஈர வாழையிலைப் பரப்பு போல நிலவில் கடல் மின்னியது. அலைகள் அடங்கிவிட்டிருந்தன. மெல்லிய நெளிவு மட்டுமாக அவை என்னைச் சூழ்ந்திருந்தன.
திசையின்மையை என் வாழ்க்கையில் முதல்முறையாக உணர்ந்தேன். முதலில் ஒரு திகிலாக, பின் பதற்றமாக, பின்னர் ஒரு கொந்தளிப்பாக என்னுள் திகழந்த அது மெல்ல ஒரு விடுதலையுணர்வாக ஆகியது. முற்றிலும் திசையின்மை. திசைகளை நான் இழக்கவில்லை, அவை எனக்குள் தோன்றியே இருக்கவில்லை. ஏற்கனவே இருந்த நினைவுகளில்கூட திசைகளே இல்லை. திசையுணர்வு என்பது இருத்தலின் வெளியடையாளம். அதை இழப்பதென்பது தன்னை இழப்பது. நம் அகம் நடுங்கிவிடுகிறது. முற்றாக கரைந்து இன்மையை அடைந்துவிடுகிறது.
கடலில் நான் சுற்றிக்கொண்டே இருந்தேன். சற்றே தூக்கம் வந்திருக்கும். சிலநிமிடங்களாகக்கூட இருக்கலாம். படகு போய்க்கொண்டுதான் இருந்தது. பின்னர் தொங்கிய தலையின் ஆட்டத்தால் விழித்துக்கொண்டபோது மனம் சுக்கான் மாற்றிக்கொண்டுவிட்டிருந்தது. அந்த எக்களிப்பு மறைந்து மேலும் கூரிய தன்னுணர்வு வந்திருந்தது.
தன்னுணர்வு என்பது ஒரு தர்க்கரீதியான புள்ளி என்று அப்போது உணர்ந்தேன். அதை தர்க்கமே கட்டமைக்கிறது. பித்து அதை அழிக்கிறது. மீண்டும் தர்க்கம் அதை கட்டமைக்கிறது. அதற்கு திசைகள் தேவை. அந்தச் சிலந்தி நான்கு திசைகளையும் தொட்டுத்தொட்டு கம்பிநூல் இழுத்து வலைநெய்கிறது. அதன் நடுவே தன்னை அமர்த்திக்கொள்கிறது. வண்டுகள் அதை கிழித்தால் அறுத்து விடுவித்துவிடுகிறது.காற்றுக்கள் அதை அழித்தால் உடனே புதியதை பின்னத்தொடங்கிவிடுகிறது
நான் திசைகளை தேடித்தேடி தவித்து ஓர் உள்ளுணர்வாக கரை இருக்கும் மேற்குத்திசையை கண்டுகொண்டேன். படகைத் திருப்பினேன். அந்த கனவு முடிந்துவிட்டது. அது ஒருநாள் மட்டும் நின்றிருக்கும் மரம்—ஒரு மாபெரும் நாய்க்குடை. அவ்வளவுதான். அப்படி ஒரு பாறைத்தீவு இங்கில்லை. இருந்தால் அதை காண்பது இயலும் காரியமல்ல.
அப்போது நான் தொலைவில் ஒரு பாறையைக் கண்டேன். அதன்மேல் ஒருவன் நின்றிருந்தான். நிலவொளியில் முதலில் நிழல் போலிருந்தான். படகு சற்றே திரும்பியபோது அவன் முகத்தைப் பார்த்தேன். அது பன்னா சிங்.