மலேசிய அழகியல் விமர்சனத்தில்…

ஒரு மொழியின் முன்னோடி இலக்கியவாதிகளை அவர்களின் சூழல், அவர்கள் எடுத்துக்கொண்ட அறைகூவல்கள் ஆகியவற்றை கருத்திக்கொண்டு அழகியல்நோக்கில் ஆராய்வது அங்கு பின்னாளில் இலக்கியம் உருவாகி வருவதற்கு மிகமிக முக்கியமான அடித்தளம். தமிழகத்தில் க.நா.சு,சி.சு.செல்லப்பா இருவருமே அந்த பணியை செய்து விமர்சனப்பார்வைக்கு வழிவகுத்தனர். பின்னாளில் வெங்கட் சாமிநாதன் ,சுந்தர ராமசாமி போன்றவர்கள் அப்பணியை முன்னெடுத்தனர். இலங்கையில் மு.தளையசிங்கம் அதற்கு ஒரு தொடக்கத்தை அளித்தார்

பொதுவான அரசியல்நோக்கு சார்ந்த விமர்சனங்கள்தான் இயல்பாக எழுந்துவரும். சமகால  அரசியலைவைத்து எழுத்தாளன் என்ன நிலைபாடு எடுத்துள்ளான், எப்படி அதைச் சொல்கிறான், அது ஏற்கத்தக்கதா இல்லையா  என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் போக்கு இது. தமிழகத்தில்  தி.க.சிவசங்கரன்  இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் இப்பணியைச் செய்தார்கள்.

அரசியல் விமர்சனத்தைப் பொறுத்தவரை முழுக்கமுழுக்க அரசியல்கோட்பாடு சார்ந்து, புறவயமாக நடத்தப்பட்டால் மட்டுமே அதற்கு  அரசியல் ரீதியாகவேனும் மதிப்பு. அரசியலில் செயல்படுபவர்களால் செய்யப்பட்டால் அது அவர்களின் அரசியல்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கட்சிகட்டலின் நீட்சியாகவே நடைபெறும். அதன்பின் அங்கே எழுதுபவன் நம் கட்சியா எதிர்க்கட்சியா என்ற கேள்வி மட்டுமே உண்டு. வெற்றுரைகளே பாராட்டாகவும் வசைகளே விமர்சனங்களாகவும் எழும். இது இலக்கியத்தை அழிக்கும் ஒரு நோய்

தமிழ்ச்சூழலில் அன்றாட கட்சியரசியலின் தரப்புகளும் குழுக்களும் அவற்றைச்சார்ந்த கசப்புகளும் காழ்ப்புகளுமே அரசியல்விமர்சனங்களாக வெளிவருகின்றன. அந்த கட்சிகட்டல்களுக்குள் சென்று நிற்கும் சாரமற்ற படைப்பாளிகள் மட்டுமே அரசியல்ரீதியான பாராட்டுக்களை பெற்று திளைக்கிறார்கள். அரசியல் விமர்ச்னம் பெரும்பாலும்  தரமற்ற வெற்றுக்கூச்சல்கள் போடுபவர்களையே இலக்கியவாதிகளாக முன்னிறுத்த நேர்வது இப்படித்தான். நல்ல எழுத்தாளன் நுண்ணுணர்வாலேயே அங்கே செல்லாமல் தவிர்ப்பான். அரிதாக சில வாய்ப்புள்ள எழுத்தாளர்களும் அங்கே சென்று அழிவதுண்டு.

இச்சூழலில்தான் அழகியல்விமர்சனம் மேலும் அழுத்தமான தேவை உடையதாகிறது. எவர் முன்னோடிகள், ஏன்  என்று அது நிறுவும். அவர்களின் எழுத்தின் அழகியல்போதாமைகள் வெற்றிகளை அடையாளம் காணும். அவர்கள் உருவாக்கிய தொடக்கத்தை கண்டறிந்து மேலே செல்லும் வழிகளை காட்டும். சொல்லப்போனால் ஆரோக்கியமான stem cell களை அடையாளம் காணும் முயற்சிதான் அழகியல் விமர்சனம் என்பது.

நவீன் மலேசிய இலக்கிய முன்னோடியான அ.ரங்கசாமியின் நாவல்களை பற்றி எழுதியிருக்கும் இந்த இலக்கியவிமர்சனம் அவ்வகையில் மிக முக்கியமான ஒன்று

அ.ரெங்கசாமி நாவல்கள்- ம.நவீன்

***

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

மா.இளங்கண்ணன் தமிழ் விக்கி

அ.ரெங்கசாமி தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரை‘பிறசண்டு’ ,தேனீ- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…