கரு [குறுநாவல்]- பகுதி 1
கரு [குறுநாவல்]- பகுதி 2
அன்புள்ள ஜெ,
’கரு’ குறு நாவல் வெளிவந்த அன்றே வாசித்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் எழுதி அனுப்ப முடிந்தது. வாசிப்பை எழுத ஆரம்பித்தால் அதனுடன் என் பயண அனுபவங்களும் கனவும் சேர்ந்துகொண்டன.
***
ஹிமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் ரிவால்சர் (Rewalsar) என்ற இடத்தில் குரு பத்மசாம்பவர் (திபெத்தில் ரின்போச்சே என்று அழைக்கப்படுகிறார்) இளவரசி மந்தார்வாவுக்கு ரகசியமாக தாந்திரீக ஞானத்தை அளித்ததால் கோபப்பட்ட மன்னன் அவரை உயிருடன் எரிக்க முயன்றதாக தொன்மம். புகை விலக தாமரை மீது தியானத்தில் அமர்ந்திருக்கும் பத்ம சாம்பவரை கண்டு மன்னன் மனம் திருந்தி இளவரசி மந்தார்வாவை குருவுக்கு மணம்செய்து வைத்தான். பத்மசாம்பவர் அங்கிருந்து திபெத்துக்கு பெளத்தத்தை எடுத்துச்சென்றார். இது எட்டாம் நூற்றாண்டு ரிவால்சர்.
இன்று ரிவால்சரில் மலைகள்சூழ பத்மசாம்பவருக்கு 123 அடி உயர பிரம்மாண்டமான சிலை உள்ளது. அப்படி ஒரு இருப்பே ஒரு தரிசனம். அந்த ஊரும் குளமும் அவர் காலடியில்தான் இருக்கிறது. ஒரு குருவின் காலடியில் மக்கள் பிறந்து வாழ்ந்து மடியப்போகின்றார்கள்! மொத்த வாழ்க்கையும் அருகமர்தல்தான். மூடு பனித்திரை விலகி அந்த ஞான குருவின் தரிசனம் எழும்போது அந்த கனவுக்குள் நுழைந்துவிடலாம். அங்கிருந்து திபெத்துக்கும் ஷம்பாலாவுக்கும் ஒரு கனவுப்பாதை இருக்கிறது.
ஹிமாசல பிரதேசத்தில் குல்லு மாவட்டத்தில் நக்கர் (Naggar) என்ற இடத்தில் ரோரிச்சின் நினைவு இல்லம் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறது. சில சமயம் பயணங்களில் எந்த மேலதிக தகவலும் இல்லாமல் ஒரிடத்திலோ அல்லது ஒரு மனிதரையோ சென்றடைய நேரிடும். அங்குச் சென்று பார்த்தால் கற்பனை செய்யாத அளவுக்கு அந்த இடமோ அல்லது மனிதரோ வளர்வது ஒரு இனிய பயண அனுபவம். ரோரிச் குடும்பம் அப்படி ஒரு அனுபவம். முதல் மாடியில் உள்ள போஸ்டர் குறிப்புகள். ஆர்ட் கேலரியில் உள்ள நிகோலஸ் மற்றும் ஸ்வெஸ்திலாவ் ரோரிச்சின் ஓவியங்கள். புகைப்படங்கள். The Urusvati Himalayan Research Institute சுவற்றில் வரையப்பட்ட இமயமலை வரைபடங்கள். ஆய்வக உபகரணங்கள். என ஆர்வமூட்டும் இடம்.
ஹெலனா ரோரிச் ’அக்னி யோகா’ என்ற தன் பிரபஞ்ச தத்துவத்தை முன்வைத்தார். முதன்மையாக அது கிழக்கின் ஞானத்தையும் மேற்கின் அறிவியல் மற்றும் தத்துவத்தையும் இணைக்கும் ஒரு ஹோலிஸ்டிக் தத்துவம்.
நிகோலஸ் ரோரிச்சின் சமாதி. ரோரிச்சின் இரண்டாம் தாய்நாடு இந்தியா. சமாதி அவரது இல்லத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. கல்லறை வாசகம் இந்தியில் ‘பாரத் வர்ஷத்தின் மஹான் மித்ர மஹார்ஷி நிகோலஸ் ரோரிக்’ என்று அவரை குறிப்பிடுகிறது.
ரோரிச்சின் இல்லத்திலிருந்து ஷம்பாலாவுக்கு ஒரு கனவுப்பாதை இருக்கிறது.
***
சமீபகாலமாக நூற்றுக்கணக்கான நகரங்கள் வழியே பயணம் செய்துகொண்டிருக்கிறேன். பாலைவன நகரங்கள், ஆற்றங்கரை நகரங்கள், மலை நகரங்கள். சமவெளி நகரங்கள். கோட்டை நகரங்கள் என. ஒர் இடத்தின் தனித்தன்மை என்ன என்று கற்பனையில் மீட்டிக்கொண்டே இருப்பேன். அதற்கு இணையாக மானுடத்தின் கற்பனை நகரங்கள். ஆழி நகரங்கள், வன நகரங்கள், பாலை நகரங்கள் மற்றும் மலையுச்சி நகரங்கள். மனிதன் முற்று அறிய முடியாத ஒரு நிலவிரிவு இருந்தால் அதன் உள்ளே ஒரு கற்பனை நகரம் இருந்தாகவேண்டும். அறியமுடியாத வெளி விரிவில் மேலே சொர்க்க நகரங்கள். கீழே நரக நகரங்கள்.
பயணங்களில் மலைபித்து ஒரு தனிவகை. ராஜஸ்தானின் தெற்கு எல்லையில் அதாவது அபு மலையில் இருந்து வரும் ஆரவல்லி மலைத்தொடர்ச்சி ஹரியானாவை அடைய அடைய சிந்திய மணிகள் போல சிதறிக்கிடக்கும். ஹரியானாவின் தெற்கில் தோஷி ஹில் (Doshi hill) எனப்படும் எக்ஸ்டின்க்ட் எரிமலைக் குன்று உள்ளது. சிறிய ஒற்றை குன்றுதான். ஆனால் கொஞ்சம் செங்குத்தானது. உருகி வழிந்த பெரும் பாறைப் பரப்பை பார்த்து வியந்துகொண்டே மலையேறலாம். மேலே ஏறி உச்சியை அடைந்தால் U தான் மலையுச்சி. அதாவது உச்சியில் கிரேடர். மீண்டும் இறங்க வேண்டும். கிரேடர் கிண்ணத்தில் சியவன மகரிஷியின் கோயிலும் சிவாலயமும் ஏரியும் இருந்தன. இந்திய மண்ணின் அனைத்து மலையுச்சிகளிலிருந்தும் கிளம்பி இமயமலையில் சென்று முடியும் கற்பனை Zipline ஒன்று உள்ளது. அதேபோல எண்ணற்ற ஜிப்லைன்களில் தொற்றி பூமியின் அனைத்து மலையுச்சிகளிலிருந்தும் சாகசபித்தர்கள் இமயமலையில் கால்பதிக்கிறார்கள்.
உலகத்தின் கூரை அல்லது உச்சி நிலம் என்பது உண்மையில் ஒரு கனவுதான். மானுட Spirit ன் அல்லது பித்தின் குவிமையம். உலகத்தின் கூரையில் ஏறி கூவ வேண்டும் – சாகசபித்து. உலகத்தின் கூரையை வென்றெடுக்க வேண்டும் – நிலப்பித்து. உலகத்தின் கூரையில் உள்ளவர்களை மதம் மாற்ற வேண்டும் – மதமாற்ற பித்து.
உலகத்தின் கூரையில் ஒன்றை நிறுவிவிட்டால் அனைத்து இடங்களிலும் நிறுவியதற்கு சமானம்தானே! தன் வாழ்க்கையின் calling இந்த விந்தை நிலத்திலிருந்துதான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆடம் போன்றவர்கள். இந்தியவடிவில் வெட்டப்பட்ட ஒரு பெரும் தாமரை இலையில் நீர்த்துளிகளைப் போல துறவிகள் காலகாலமாக இந்தமண்ணில் இலக்கின்றி வழுக்கி அலைகிறார்கள். முக்தா அதில் ஒருவர். இவர்களுடன் மலைக்கொள்ளையர்கள், மலைமக்கள், ராணுவம் என பலவகையான கதைமாந்தர்கள்.
திபெத் என்ற அமைதியான தவநிலத்தில் மதமாற்றம் என்பது ஒரு அத்துமீறல்தான் என்று தோன்றுகிறது. அந்தப்பனிவெளியில் குழந்தை சார்ல்ஸ் தவறியது போல கிறிஸ்துவத்தின் ஆன்மா எங்கோ தவறிவிடுகிறது. அதன்பின் வெற்று மதப்பரப்பு நடவடிக்கையாக மாறிவிடுகிறது. மதத்தை பரப்ப சென்ற சூசன்னாவுக்கே அந்த நிலத்தில் crisis of faith வருவதுதான் உச்சம். ’ஏசு ஷம்பாலாவில்தான் இருப்பார்’. ‘ நான் ஷம்பாலாவுக்கு செல்லவே விரும்புவேன்’ என்று சொல்லும்போது அவள் நம்பிக்கையே மாறிவிடுகிறது. மேலும் யங் ஹஸ்பெண்ட் படையெடுப்பின் தோட்டா அந்த முதிய பிட்சுவை துளைக்கிறது. கிழக்கின் ஆன்மாவை நோக்கி பாய்ந்த தோட்டாதான் அது என்று நினைப்பதையும் தவிர்க்கமுடியவில்லை.
அன்னையர்களுக்கு வழிகாட்டும் நீலக்கண்களும் சிவப்புதாடியும் கொண்ட இளைஞன் மூலம் குறுநாவல் பிறவிசுழற்சி மறுபிறப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஆடம் நிகழ்வுகளை கோர்த்துக்கொண்ட விதத்தில் நிகழ்வுகளின் அறியமுடியாமை குறித்த வினா எழுகிறது. பிரபஞ்சத்தின் முடிவின்மை முன் அறியமுடியாமை முன் தர்க்கத்தின் பொருள் என்ன? ஒருவேளை ஒவ்வொன்றும் இலக்குடையதாக இருந்தால் மனித எண்ணங்களுக்கு என்னதான் அர்த்தம்? ஆடமுக்கு வழிகாட்டியாக அவன் அப்பா வருகிறார். அப்போது ’பெரிய பாதம்’ கொண்டு வழிகாட்டும் பனிமனிதன் யார்?
போ-சு ஆறு மீண்டும் மீண்டும் வருகிறது. முதிய பிட்சு சூசன்னாவின் மகன் சார்லஸைப் பற்றி ஆன்னியிடம் சொல்கிறார். இதன் வழியே நிகழ்வுகளின் புறவயதர்க்கம் ரத்துசெய்யப்படுகிறது. பனிவெளியின் கடுங்குளிரில் எப்படியோ பாலாடை போல மனதின் தர்க்க ஏடு உறைந்து அறுபடுகிறது. பின் கனவும் உருவெளித்தோற்றங்கள் என ஆழ் உள்ளம் வெளிப்படுகிறது. இந்த பனிவெளி ஒரு பெரிய ஆடி என்கிறார் பெட்ரூஸ். அங்கு நடமாடும் மனிதர்கள் உருவெளித்தோற்றங்கள். அந்த ஆடியை பூமி முழுவதும் விரித்தால் மானுடம் என்பதே ஒர் அலையடிக்கும் பிம்பம்தானா? என்ற விசித்திரமான கற்பனை எழுகிறது.
ஷம்பாலா ஒரு கனவு. கருப்பை. பிறவிசுழற்சியை அறுத்தவர்களின் வெளி. என ஷம்பாலாவை குறு நாவல் பல விதங்களில் விவரிக்கிறது. புராணங்கள். மதங்கள், மார்க்கங்கள் அனைத்தும் ஷம்பாலாவுக்கு விளக்கம் தருகின்றன. அவதாரங்கள் தோன்றும் கருப்பை அது. ஞானத்தின் தொடக்கமும் அதுவே முடியும் அதுவே. விதை நிலம். உண்மையில் ஷம்பாலா உச்சி நிலத்தில் வைக்கப்பட்ட மானுடத்தின் உச்ச கனவுதான். மனதை பித்துகொள்ளச் செய்யும் கனவு.
***
ஒரு கனவுப்பயணம். கன்யாகுமரியில் இருந்து தொடங்கி இந்திய பெருநிலத்தின் vibrant வாழ்க்கையின் வழியேச் செல்லவேண்டும். நாகரிகத்தின் பிடியில் வாழும் நகர மனிதன் முதல் இயற்கையின் மடியில் வாழும் வனமனிதன் வரை அணுகியறிய வேண்டும். குமரி முனை முதல் இமய நுனி வரை ஒரு துளையைப்போட்டு ஒரு பெரும் குச்சியை நுழைத்து இந்தியாவை திருப்பி திருப்பி அதன் வரலாற்றை பார்க்கவேண்டும். கற்பனைகட்டி எழுப்பிய கலைபொக்கிஷங்களை தரிசிக்கவேண்டும். அகல்சுடரில் தெரியும் கருவறை தெய்வத்தின் அருகமர வேண்டும். மசூதியின் அமைதியிலும் சூபி தர்க்காவின் தாளத்திலும் கால இடம் மறக்கவேண்டும். சிலுவையில் பறந்தெழுந்த ஏசுவின் முன் உளம் கனிய வேண்டும். ‘ஓம் கார் சத் நாம்’ எனத் தொடங்கும் சீக்கிய குருகிராந்த சாகிபை வலம்வர வேண்டும். தீர்த்தங்கரரின் விஸ்வரூப சிலையின் முன் நின்று இருப்பைப் பற்றி வினவவேண்டும். பெளத்த தர்மசக்கரத்தை சுழற்றும் ஒரு கையாக இருந்தல் வேண்டும்.
கடல். பாலை. மலை. மடுவு. ஏரி. ஆறு. சமவெளி. மீண்டும் கடல். பாலை. மலை. மடுவு. ஏரி. ஆறு. சமவெளி என ஏறியிறங்கி அலைந்து திரிந்து இமயத்தில் முதலடி வைத்து வெளி இமயமலையின் அழகை நான்கு பருவ நிலைகளில் பார்த்துக்கொண்டேச் செல்லவேண்டும். பசும்மலைகள் சூழ ஒர் உயர்ந்த மலையுச்சியின் மேலே நின்று தூரத்தில் தெரியும் வெண்பனியுச்சியின் பின் அப்பாலுக்கு அப்பால் மறையும் செம்பொட்டு சூரியனின் வண்ணத்திலோ இருமலைகளுக்கு இடையில் மிகக்கீழே அசைவற்று கிடக்கும் ஆற்றின் அமைதியிலோ எங்கோ தன்னுணர்வு இழக்கவேண்டும். பைன் மரத்தின் நிழலிலோ மலையின் ஏற்றத்திலோ தேவதாரின் உயரத்திலோ மலையின் இறக்கத்திலோ குமரி முதல் அறிந்த ஒவ்வொன்றையும் பஞ்சை போல ஊதிப்பறக்கவிடவேண்டும். பின் பத்து திசை பனி வெளியை உடலால் மட்டும் அறிந்து கடக்கவேண்டும். உயர் பனிஏரியின் தூய நீலத்தில் சித்த அலைகள் அடங்கி அந்த வெண்பனிவெளியில் கனவுப்பயணம் எங்கோ கனவைத் தாண்டியிருக்க வேண்டும்.
***
ஹிமாசல பிரதேசத்தின் அந்த மலைக்கிராமத்தில் அந்த ஞானகுருவின் காலடியில் ஒரு கிராமமே பிறந்து வாழ்ந்து மறைகிறது. அதுபோல காலம்காலமாக இமயத்தின் ’அருகருமர்ந்த’ பெரு நிலம்தான் இந்தியா. மனித மனத்தை போல இந்திய மண்ணையும் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் எனலாம். ஹரித்துவார் என்ற கங்கைகரையோர நகரம் ஹரியின் வாசல். அதுபோல ஷம்பாலா என்பது துரியத்தின் வாசல். இமயமலை என்ற பேரிருப்பாக எழுந்துள்ளது துரியத்தை நோக்கிய அழைப்புதான். உலகத்தின் கூரையில் இருந்து ஒரு மணியோசை போல பத்துதிசைகளிலும் ஒலிக்கும் அழைப்பு அது.
அன்புடன்,
ராஜா