விண் வரை…

வெண்முரசின் இருபத்தி ஐந்தாவது நாவலான கல்பொருசிறுநுரையை ஜூன் எட்டாம் தேதி பின்னிரவு ஒன்றரை மணிக்கு எழுதி முடித்தேன்.

இந்நாவல் பலவகையிலும் எனக்கு முக்கியமானது. இந்நாவல்நிரையில் இளைய யாதவனாகிய கிருஷ்ணன் பிறந்து கம்சனைக் கொல்லும் வரையிலான பகுதிகள் நீலம் என்னும் நாவலாக ஆகஸ்ட் 2014ல்  வெளிவந்தன. மிகப்பெரிய கொந்தளிப்புடன் பித்துடன் நான் இருந்த நாட்கள் அவை. மொழியினூடாக மட்டுமே சென்று யாதவனை தொட்ட பயணம். அங்கே சிந்தனைக்கே இடமில்லை. வெறும் உணர்ச்சி, வெறும் அழகு, வெறும் உளஎழுச்சி. இந்நாவலில் அந்த இளைய யாதவனின் விண்புகுதல் நிகழ்ந்திருக்கிறது.

இந்நாவல் அதைநோக்கியே செல்லும் என நான் அறிந்திருந்தேன். எனினும் சென்றடைவது என்பது எளிதாக இருக்கவில்லை. இந்நாவலின் தொடக்கப்பகுதிகள் அதன் இன்றியமையாமையை எல்லா வகையிலும் சிறுகச்சிறுக நிறுவுபவை. அரசியல், ஆணவமோதல்கள் , அவற்றை ஆளும் ஊழ் ஆகியவற்றின் கதை.

சென்ற ஒருவாரமாகவே இந்த முடிவை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.இங்கு மொழியினூடாக அன்றி புனைவினூடாகச் சென்றேன். இவ்வுலகில் வேறேதும் பொருட்டே அல்ல என்பதுபோல வாயில்களை மூடிக்கொண்டிருந்தேன்.இந்த வெறுமையின் நிறைவிலிருந்து கிழித்து வெளிவந்தே ஆகவேண்டும், இல்லையேல் செயலின்மையில் சென்று அமைந்துவிடக்கூடும்.

இன்னும் ஒரு நாவலுடன் வெண்முரசு நிறைவுறும். அடுத்த நாவல் ‘முதலாவிண்’ பாண்டவர்களின் விண்புகுதலைப் பற்றியது. சிறிய அந்நாவல் ஜூலை மாதம் 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் இறுதியில் முடியும் என நினைக்கிறேன். ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்ற சீவசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து எடுத்துநீட்டிக்கொண்ட சொல்லாட்சி. பிறக்காத, தோற்றமே அற்ற வானம் என்று பொருள்.முதற்கனல் என்னும் தலைப்பின் மறு எல்லை.

இந்நாவலை தொடங்கும்போது இளையராஜா அவர்களைச் சந்தித்து கால்தொட்டு வணங்கி ஆசிபெற்றேன். அப்போது அகத்தில் ஓர் அச்சம் இருந்தது, வெவ்வேறு வகையில் நாஞ்சில்நாடனும் அதைச் சொல்லியிருந்தார். தமிழில் பாரதம் எழுதி முழுமைசெய்ய எவராலும் முடிந்ததில்லை. இது முடிவதுவரை வாழ்வு வேண்டும் என்றுதான் குருவடிவான ராஜாவிடம் வேண்டிக்கொண்டேன். உண்மையில் அந்த ஒரு எண்ணம் மட்டுமே எனக்குள் அப்போது இருந்தது.இப்போதும் அதுவே வேண்டுகோள். ஒரு வாழும் குரு எல்லா குருநாதர்களின் வடிவமும்தான்.

முந்தைய கட்டுரைகுரைத்தல்வாதம்
அடுத்த கட்டுரைசட்ட நடவடிக்கை