பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6
மலையன் சொன்னான். அரசே, இளைய யாதவரின் விண்புகுதல் செய்தியை புறவுலகுக்குச் சொல்லும் கடமையை ஊழ் எனக்கு அளித்தது. சான்றாக அவருடைய காதில் கிடந்த குண்டலங்களையும் கையிலிருந்த கணையாழியையும் எடுத்துக்கொண்டேன். அவற்றிலிருந்த அருமணிகள் அனைத்திலும் உள்ளே சங்கும் ஆழியும் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்ணெதிரில் தூக்கிப்பார்க்கும் எவருக்கும் அது எவருடையதென்பது ஐயமில்லாது தெரியும்.
செல்லும் வழியெங்கும் நான் சூதரிடமும் வணிகரிடமும் அச்செய்தியை உரைத்துக்கொண்டே இருந்தேன். ஆகவே ஒற்றர்கள் வழியாக நான் செல்லும் இடத்திற்கெல்லாம் அச்செய்தி முன்னரே சென்று சேர்ந்திருந்தது. நான் சான்று காட்டி அதை உறுதிப்படுத்த மட்டுமே வேண்டியிருந்தது. என்னை யாதவ ஒற்றர்கள் பிடித்துக்கொண்டு படகினூடாக மதுரா நகருக்கு கொண்டு சென்றனர்.
யமுனையில் படகிறங்கி நகர்புகுந்து தெருக்களினூடாக வருகையில் அங்கு துயரம் நிறைந்திருப்பதை கண்டேன். ஆனால் பொன்றாப் பெருந்துயர் அல்ல அது. எதிர்பார்த்திருந்த ஒன்று நிகழ்கையில் எழும் நிறைவு கலந்த துயர். அது அசைவில்லாதது, மற்ற துயர்களைப்போல ஓங்கி தணிந்து அலைகொள்வதில்லை. இல்லத்து மாமுதியவர்கள் விழுகையில் அதை கண்டதுண்டு. மங்கலச் சாவு என்று அதை சொல்வார்கள்.
அது அவ்வண்ணமே நிகழும் என வாழ்வை அறிந்தமைந்தமையால் எழுவது. அல்லது நெடுங்காலம் தங்களைச் சூழ்ந்திருந்த ஒன்று அகல்கையில் ஏற்படும் விடுதலை உணர்வு. உண்மையில் சாவல்ல மனிதர்களை அலைக்கழிப்பது, சாவின் பொருளின்மைதான். இளமையில் நிகழும் சாவு துணுக்குறச் செய்கிறது. அது ஒரு பொருளில்லா விடுகதை. முதுமைச்சாவு தன் பொருளை தானே விளக்குவது. ஆகவே முடிவுகொண்ட பாடல் போன்றது.
நான் செல்கையில் மதுராவின் அரண்மனையின் சிற்றவையில் நிஷதன் தன் இளையோருடன் அமர்ந்திருந்தார். அவையில் என்னை கொண்டுசென்ற ஒற்றன் என் வருகையை அறிவித்தான். நான் உள்ளே சென்று என் ஊரையும் குலத்தையும் பெயரையும் அறிவித்து நிகழ்ந்தனவற்றை சுருக்கமான சொற்களால் கூறினேன். கூறிக் கூறி ஒரு செய்யுள்போல் அதை யாத்திருந்தேன். அவை முறைமைப்படி “இளைய யாதவர் விண்புகுக! வெல்க விருஷ்ணி குலம்! வெல்க யாதவப் பெருங்குலம்!” என்று ஓசையிட்டது.
ஆனால் நிஷதனும் உல்முகனும் இயல்பாகவே இருந்தனர். இருவர் முகங்களிலும் அதிர்ச்சியோ துயரோ தென்படவில்லை. நிஷதன் சற்று அசைந்து அமர்ந்து “தெய்வங்களும் மூதாதையரும் அருள்க! இதை இந்த அவை பல நாட்களாக எதிர்பார்த்திருந்தது” என்றார். “துயரத்திற்குரியது, எனினும் இயன்றே ஆவது. இவ்வண்ணம் இது நிகழவேண்டும் என்பதே ஊழ் எனில் அவ்வாறே.”
அமைச்சர் ஒருவர் “முறைப்படி இதை நகருக்கு அறிவிக்கலாமல்லவா?” என்றார். “நகர் முன்னரே அறிந்திருக்கிறது. நாம் அளிக்க வேண்டியது அரச உறுதிப்பாட்டை மட்டுமே. அரசமுறையாக பதினாறு நாள் துயரத்திற்கும், நாற்பத்தியோராவது நாள் விண்ணேற்றச் சடங்குகளுக்கும் ஆணையிடுக! அனைத்தையும் ஒருங்கு செய்க!” என்றார் நிஷதன். “ஆணை” என்று அமைச்சர் தலைவணங்கினார்.
பின்னர் அங்கு நிகழ்ந்ததெல்லாம் அரசுசூழ்தல் மட்டுமே. எவ்வண்ணம் அத்துயர் அறிவிக்கப்படவேண்டும், அரசகுடியினரில் எவருக்கெல்லாம் அத்துயர் அறிவிக்கப்படவேண்டும், அதற்கான சொற்கள் மற்றும் முறைமைகள் என்னென்ன, விருஷ்ணி குலத்தில் எவரெவருக்கெல்லாம் செய்திகள் செல்லவேண்டும், எந்த அடுக்கில் அனுப்பப்படவேண்டும் என்பவை பேசப்பட்டன. நான் சிறு பீடத்தில் கைகளைக் கட்டி அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் என் உள்ளம் எரிந்தது, கொந்தளித்தது, பின் அடங்கியது, இறுதியில் நான் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.
“மதுராவிலிருந்து இளைய யாதவரின் எட்டு அரசியருக்கும் முறைப்படி செய்தி அறிவிக்கப்படவேண்டும்” என்று நிஷதன் கூறினார். “அவர்கள் முன்னரே அறிந்திருப்பார்கள் எனினும் உறுதிப்பாட்டை அறிவிக்க விருஷ்ணி குலத்தவராகிய நாம் கடமைகொண்டுள்ளோம். அவருடைய கொடிவழியில் இனி எஞ்சியிருப்பவர்கள் நாங்கள் இருவருமே. மைந்தரென நீர்க்கடன் செய்யவேண்டியவர்களும் நாங்களே” என்றார்.
நான் அங்கிருந்து அஸ்தினபுரிக்குச் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மதுராவிலிருந்தே அஸ்தினபுரிக்கு அமைச்சர் ஒருவர் செய்தியுடன் அனுப்பப்பட்டார். எட்டு அரசியரையும் தனித்தனியாக சென்று பார்த்து செய்தி சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருந்தது. அதற்கான தேவையும் இல்லை என்று தெரிந்தது. எனது பணி அறிவித்தல் அல்ல, உறுதிப்படுத்தலே. அதை நான் செய்துவிட்டேன்.
இளைய யாதவரின் கணையாழியையும் குண்டலங்களையும் நிஷதனின் அவையில் ஒப்படைத்துவிட்டு அன்றே அங்கிருந்து கிளம்பினேன். இனியென்ன என்ற எண்ணம் எழுந்து சலிப்புற்றேன். மதுராவின் தெருக்களில் வருகையில் ஏதோ சூதன் ‘வில்லேந்திய விஜயனும் தேரோட்டியாகிய கிருஷ்ணனும்’ என்ற சொல்லை பாடினான். அக்கணம் எனக்கு தெரிந்தது, என் ஊழ் என்னை செலுத்துவது எங்கே என்று. உங்களைக் கண்டு இச்செய்தியை சொல்லவேண்டும் என்ற முடிவை அப்போதுதான் எடுத்தேன். அங்கிருந்து நேராக இங்கு வந்தேன்.
நான் வரும் வழியிலேயே தொடர்ந்த செய்திகள் வந்தடைந்தன. இளைய யாதவரின் எட்டு அரசியரும் நீர் புகுந்தும் எரிபுகுந்தும் உயிர் துறந்தனர். ஷத்ரிய அரசியரான ருக்மிணியும், நக்னஜித்தியும், லக்ஷ்மணையும், மித்ரவிந்தையும், பத்ரையும் தங்கள் நகர்களில் ஷத்ரிய முறைப்படி எரிபுகுந்தனர். தென்புலத்தில் சிதைகூட்டி, எரி எழச்செய்து, மங்கலத்தோற்றத்துடன் மலர் மாலை சூடி கைகூப்பி எரிபுகுந்து விண் எழுந்தனர்.
முறைப்படி அவர்களின் ஆடைகளும் அவர்கள் தங்கள் கொழுநருடையதென்று கொண்டிருந்த நினைவுப்பொருட்களும் அச்சிதையிலேயே வைக்கப்பட்டன. “சதி அன்னை விண்புகுந்தார்!” என்று சூழ்ந்திருந்த வீரர்களும் குடியினரும் புகழொலி எழுப்பினர். அனல் அணைந்த பின்னர் அவர்கள் அணிந்திருந்த மாலைகள் வாடாமல் சிதையில் எஞ்சின. அவர்கள் அணிந்திருந்த பொற்கலங்கள் உருகாமல் ஒளிகொண்டு கண்டெடுக்கப்பட்டன. அச்சிதையின் கன்னிமூலையில் சதிக்கல் நாட்டப்பட்டு அங்கே அவை கொண்டுசென்று வைக்கப்பட்டன.
அவர்களின் நகரிலிருந்து பெருந்திரளென குடிகள் சென்று எரிபுகுந்த அன்னையரை வணங்கி வாழ்த்து கொண்டனர். சிறுமியரை அன்னையர் கொண்டுவந்து அங்கு பணிந்து வணங்கச்செய்து அச்சிதையிலிருந்து எடுத்த சாம்பலை நெற்றியிலும் வகிடிலும் அணிவித்து நெறிச்சூளுரை கொண்டனர். அரசகுடிப் பெண்டிர் அனைவரும் வந்து அங்கே முழுநாள் உண்ணாநோன்பிருந்து வழிபட்டனர்.
ஏழு நாட்கள் விண் நீங்கிய அன்னைக்கு பூசனையும் வழிபாடும் நடந்தது. ஏழாம் நாள் பேருண்டாட்டும் களியாட்டும் ஆணையிடப்பட்டது. அங்கே துயர் மறைந்து கொண்டாட்டம் எழுந்தது. வண்ணக் கொடிகளும் தோரணங்களும் மங்கல இசையும் சிரிப்பொலிகளும் பெருகி நகரங்கள் அதிரத் தொடங்கின. ருக்மிணியின் விதர்ப்பத்திலும், நக்னஜித்தியின் கோசலத்திலும், மித்ரவிந்தையின் அவந்தியிலும், லக்ஷ்மணையின் மத்ரநாட்டிலும், பத்ரையின் கேகயத்திலும் நாடெங்கும் அவ்விழா கொண்டாடப்பட்டது.
நீர்புகும் மரபு கொண்ட தொல்குடிகளின் அரசியராகிய யாதவகுலத்து சத்யபாமையும், களிந்தமச்சர் குலத்து காளிந்தியும் யமுனையிலும், நிஷாதகுலத்து அரசி ஜாம்பவதி கங்கையிலும் மூழ்கி உயிர்நீத்தனர். தொல்முறைப்படி எளிய வெண்ணிற ஆடை அணிந்து, மங்கல அணிகள் சூடி, மலர்மாலைகள் அணிந்து கைகூப்பியபடி அவர்கள் நீரில் இறங்கி மூழ்கி மறைந்தனர். அப்போது அவர்களின் அணுக்கச்சேடியர் மட்டுமே உடன் சென்றனர். நீர்மறைந்தவர் பெருக்கில் குமிழிகளாக மறைந்த பின்னர் கரையில் நின்றவர்கள் தங்கள் கையிலிருந்த கலங்களை முழக்கி ஓசை எழுப்பினர். அதை கேட்ட அவர்களின் குடியினர் தங்கள் கலங்களை முழக்கியபடி “நீர்மகள் விண்புகுக! மூதன்னையர் அருள்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.
அவ்வோசை யாதவ நகர்கள் தோறும் பரவிச்சென்றது. யமுனையின் இரு கரைகளும் அவ்வாழ்த்தொலியால் முழங்கின. ஏழு நாட்கள் அங்கு துயர் கொண்டாடப்பட்டது. அன்னையர் நீர்புகுந்த இடங்களில் ஆற்றுக்கரையோரம் அவர்களுக்கு நடுகல் நிறுவப்பட்டு அருகே ஆலமரக்கன்று நடப்பட்டது. குடிப்பெண்கள் வந்து ஏழு நாட்கள் நீரும் அன்னமும் அளித்து மலரிட்டு வணங்கினார்கள்.
ஏழாவது நாள் அவர்களின் விண்ணேற்றத்திற்கான சடங்குகள் நிகழ்ந்தன. யாதவகுடிப் பெண்கள் அன்றுவரை ஒருவேளை உணவுண்ணும் நோன்பு கொண்டிருந்தனர். ஏழாம் நாள் இன்னுணவு உண்டு மலர் மாலை சூடி புத்தாடை அணிந்து தெருக்களில் இறங்கி கொண்டாடினர். “உடன்நீத்த அன்னையர் வாழ்க! விண்புகுக மூதன்னையர்!” என்று யாதவநிலம்தோறும் வாழ்த்தொலிகள் எழுந்தன.
இளைய யாதவருக்கான நாற்பத்தொன்றாவது நாள் நீர்ச்சடங்கு யாதவ ஊர்கள்தோறும் அறிவிக்கப்பட்டது. நாற்பத்தொரு நாளும் ஆண்களுக்கு ஒருவேளை நோன்பு என மரபு. ஆனால் அவரது குடியாகிய விருஷ்ணிகள் அன்றி எவரும் அதை முறையாக கடைபிடிக்கவில்லை என்று அறிந்தேன். போஜர்களும் ஹேகயர்களும் அந்தகர்களும் அவரை தங்களவர் என்றே எண்ணவில்லை. ஒரு வெற்றுச்சடங்காகவே அந்நோன்பு நிகழ்ந்தது.
இளைய யாதவர் அரசியல் நீத்ததுமே பெரும்பாலானவர்கள் அவரை மறந்துவிட்டிருந்தனர். அவர் இறந்துவிட்டார் எனும் செய்தி மீள மீள பல முறை வந்து அவர்களின் உணர்வுகளை பழக்கிவிட்டிருந்தமையால் மெய்யாகவே உயிர்நீத்தார் என்ற செய்தி எவரிலுமே எத்துயரையுமே உருவாக்கவில்லை. நீரில் ஒரு குமிழி உடைந்து மறைவதுபோல் அவர் குடிகளின் நினைவிலிருந்து அகன்றுவிட்டிருந்தார். பல ஊர்களில் திருமணநிகழ்வுகளும் பிற மங்கலநிகழ்வுகளும் இயல்பாக நடைபெற்றன.
நான் சூதர்களிடமிருந்து செய்திகளை பெற்றுக்கொண்டு கிழக்கு நோக்கி வந்துகொண்டிருந்தேன். பின்னர் கிழக்கில் தங்கியிருக்கையில் நகர்களினூடாக வந்த வணிகனொருவனை கண்டேன். அவன் இளைய யாதவர் மறைந்த செய்தி மக்களால் ஏற்கெனவே மறக்கப்பட்டுவிட்டது என்று கூறினான். இன்று தொல்கதைகளில் இருக்கும் ஒரு தெய்வ உருவகம் என்பதற்கப்பால் எவருக்கும் அவரைப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்குமா என்பதே ஐயம்தான் என்றான்.
“இளையோருக்கு அவர் வெறும் கதை மட்டுமே. முதியவருக்கோ அவர் மீது உளக்குறைகளும் கசப்புகளும் இருந்தன. மக்கள் குருக்ஷேத்ரப் பெரும்போரை உருவாக்கி, பல்லாயிரவரை கொன்றழித்து, பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களை ஆற்றலிழக்கச் செய்து, தன் குடியை நிலைநிறுத்த முயன்ற ஒரு யாதவ அரசன் என்பதற்கு அப்பால் அவரைப்பற்றி எக்கருத்தும் கொண்டிருக்கவில்லை. அவர் செய்த அப்பழியால் தெய்வங்கள் முனிந்து அவர் குலத்தை முற்றழித்தன என்று முதியவர் ஒருவர் ஊர்மன்றில் கூறியபோது அங்கிருந்த பிற முதியவர் அனைவரும் அதை ஏற்பதை கண்டேன்” என்று அந்த வணிகன் சொன்னான்.
இன்று அவரைப்பற்றி பாரதவர்ஷம் அவ்வாறே எண்ணிக்கொள்கிறது என்று தோன்றுகிறது. அவர் உரைத்த நூல் ஒன்று வேதமுடிபுக்கொள்கை கொண்டோர் நடுவே புழங்குகிறது என்றார்கள். வேதமுடிபுக் கொள்கையுடையவர்கள் அவ்வண்ணம் பல நூல்களை கொண்டிருக்கிறார்கள். ‘தன்னளவே உயரமாக சுவடிகளை அடுக்கி அவற்றை பயின்று முடிப்பவனே முதல் வேதமுடிபுக்கொள்கையினன். அவற்றை ஒட்டி தானே ஒன்று எழுதி முடிப்பவன் அக்கொள்கையை கடந்தவனாகிறான்’ என்று சூதரிடையே இளிவரல் உண்டு. அந்த நூலடுக்குகளில் ஒன்றென அவருடைய வேதமும் மறைந்துவிட்டிருக்கக் கூடும். எஞ்சுவது ஒன்றுமில்லை.
“ஆம் அரசே, எஞ்சுவது ஒரு துளியுமில்லை. எஞ்சுவது என்பது எப்போதும்போல் ஒரு நினைவு. அந்நினைவோ நினைக்கப்படுபவரால் நினைக்க நினைக்க புனையப்படுவதன்றி மெய்யல்ல. இப்புவியில் மெய்யென திகழ்வதெல்லாம் பொய்யென புரிந்துகொள்ளப்படுகின்றன. கண்முன் இருந்து மெய் மறைந்த பிறகு பொய் எஞ்சியிருக்கிறது” என்று மலையன் கூறினான்.
அர்ஜுனன் கூப்பிய கைகளுடன் அதைக் கேட்டு அமர்ந்திருந்தான். அவன் விழிநீர்விடவில்லை. அவன் உடல் மெய்ப்பாடென எதையும் காட்டவில்லை. விழிகள் தழைந்து நிலம்நோக்கி இருந்தன. ஒருசொல்லும் உரைக்கவில்லை. பின்னர் நீள்மூச்சுடன் நிமிர்ந்து விண்ணை நோக்கி வலக்கை சுட்டுவிரலால் மண்ணைத் தொட்டு “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
நாக நிலத்தின் எல்லையிலிருந்து அர்ஜுனன் நேராக அஸ்தினபுரி நோக்கி கிளம்பினான். கிளம்பிய பின் மெல்லிய ஓர் அமைதியின்மை என அச்செய்தி அவனில் வேரோடியது. மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டது. பித்தனென்றாக்கியது. செல்லச் செல்ல அவன் உள்ளம் கொந்தளிப்படைந்தது.
முதல் சில நாட்கள் எங்கும் நிற்கவோ அமரவோ படுக்கவோ முடியாதபடி அவன் உணர்வுகள் அலைகொண்டன. ‘எவ்வாறு! எவ்வாறு! எவ்வாறு! எவ்வாறு!’ என்று அவன் ஆழம் கரைகளில் வந்து அலையறைந்து கொண்டிருந்தது. எவ்வாறு நிகழக்கூடும்! எவ்வாறு அது இயலக்கூடும்! எவ்வாறு அது மறையக்கூடும்! மறையுமெனில் நிகழ்ந்தவை முற்றிலும் பொருளற்றவை. ஒவ்வொன்றும் பொருளற்றவை.
பின்னர் மெல்ல அவன் உள்ளம் அடங்கலானான். நீண்ட பயணத்தின் சலிப்பே உள்ளத்தையும் அமையச்செய்தது. ஆழ்ந்த துயரை சென்றடைந்தது அவன் அகம். ‘அவ்வண்ணமே! ஆம், அவ்வண்ணமே! அவ்வண்ணமே!’ என்று அவன் உள்ளம் மாறியது. இங்கு வந்த அனைவரும் அவ்வண்ணமே ஆயினர். ராகவராமனின் வெற்றி தொல்கவிஞனின் கவிப்பொருள் என்றாகியது. அவன் காவியத்தலைவன் என்று சொல்லில் நின்றிருக்கிறான். அன்றி இங்கெதுவும் நிலைகொள்வதில்லை.
எனில் எதற்கு எழுகிறார்கள்? ஏன் அனல் பெருக்கி பேருருக் கொள்கிறார்கள்? அலை நிகழ்த்துகிறார்கள், விண் வெடித்துச் சென்று மறைகிறார்கள். பேருருவர்கள் எழுந்து எழுந்து மறைய இப்புவி இவ்வண்ணமே இருக்குமெனில் அவர்கள் பேருருவர்கள்தானா? அலைகடலில் ஆயிரம் பல்லாயிரம் அலைகளுக்கு ஒருமுறை பேரலை எழுந்து வரும் என்பார்கள். கரைநிற்பவரின் அச்சமே சிற்றலையிலிருந்து பேரலையை பெரிதாக்கி காண்கிறது. கடலுக்கு அனைத்தும் ஒன்றே.
பின்னர் அவன் தெளிவுற்றான். ‘இனி! இனி! இனி!’ என்று அவன் உளம் மாறியது. சென்று இயற்றவேண்டிய பணியை அது குறிக்கிறது. வென்று ஒரு நாட்டை இளைய யாதவர் தனக்களித்தது ஒருவேளை இதற்காக இருக்கலாம். ஐந்தாவது வேதம் நிலைகொள்ள வேண்டும். புதுநெறி புவி தழைக்க வேண்டும். அதற்கு எழவேண்டும் அஸ்தினபுரியின் செங்கோல். அதற்கென்றே நான் திரும்பிச்செல்கிறேன். ஆணையிடும் பொருட்டு, நிறுவும் பொருட்டு.
ஆனால் அப்போது அச்சமூட்டும் ஓர் எண்ணமாக உணர்ந்தான், இளைய யாதவரின் ஐந்தாம் வேதத்தின் ஒரு சொல்கூட அவன் நினைவுக்கு வரவில்லை. பதற்றத்துடன் துழாவுந்தோறும் சொற்கள் முற்றகன்று சென்றன. மீண்டும் மீண்டும் உள்ளத்தின் அடுக்குகளைத் துழாவி, சலித்து, கண்ணீருடன் அவன் பின்னடைந்தான். ஒரு சொல்கூட எஞ்சவில்லை. முற்றாக தானும் மறைந்துவிட்டிருந்தது.
இனி வாழ்வதில் பயனில்லை என்று தோன்றியது. அங்கேயே ஏதாவது குகையில் அமர்ந்து உயிர்விடவேண்டும். அதுவே இனி உகந்த செயல். அறியப்படாதவனாக, எஞ்சாதவனாக. எஞ்சுவதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாமே பொய்யானவை. எஞ்சாதொழிவதிலேயே இன்றிமையாத ஒழுங்கு உள்ளது. அவன் தனக்குரிய குகையொன்றைத் தேடி அந்த வறண்ட காட்டில் அலைந்தான். பின்னர் மலையுச்சியில் நின்று வௌவால்கள் அந்தியில் எழும் திசையை கண்டான். அதை நோக்கிச் சென்று அங்கே ஒரு சுண்ணக்கல் குகையை கண்டடைந்தான்.
குகைக்குள் சென்று, அதன் இருட்டில் தவழ்ந்து, தனக்கென்றே அமைக்கப்பட்டிருந்த சிறு பீடமொன்றில் அமர்ந்தான். கைகளை மடிமேல் முழுவிடுகை முத்திரையில் வைத்து, மூக்கு நுனியில் விழி சேர்த்து, உளம் குவித்து அமர்ந்தான். உணவும் நீரும் ஒழிந்தமையால் ஏழு நாட்களில் தன் உயிர் பிரியுமென்று எண்ணிக்கொண்டான். ஏழு நாட்களில் என் அலைகள் ஓய்ந்து நான் விடுபடுவேன் எனில் விண்புகுவேன்.
உணவை ஒழிப்பதுபோல் எண்ணம் ஒழிவதற்கு சிறந்த வழி வேறில்லை. அது அடுப்பிலிருந்து விறகை விலக்குவதுபோல. உண்ணா நோன்பிருந்தவர்கள் உளம் அடங்கி விண் ஏகுவதை அவன் கண்டிருந்தான். என்னால் இயலவேண்டும். இயன்றாகவேண்டும். இனி வெல்வதற்கென எஞ்சுவது அது மட்டுமே. அதில் தோற்றால் அடைந்தவை எல்லாம் தோல்விகளே.
அந்த எண்ணமே தன் இயலாமை குறித்த பதற்றமாக, துயராக எழுந்தது. அவன் மூன்று நாட்கள் அங்கு அமர்ந்திருந்தான். மூன்று நாளும் உள்ளம் முழு விழிப்புநிலையிலேயே இருந்தது. மூன்றாவது நாள் வெளியே பேச்சுக்குரல்களை கேட்டான். கொடியேணியை உச்சிப்பாறையிலிருந்து கட்டித்தொங்கவிட்டு அதனூடாக இறங்கி வந்து மலைத்தேன் எடுத்துக்கொண்டிருந்த நிஷாதர்களின் பேச்சு அது என உணர்ந்தான்.
மெல்லிய சொற்கசங்கல்களாக அவர்களின் உரையாடல் கேட்டது. அவர்களில் ஒருவன் கூறினான். “அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”
மேலிருந்து அறுந்து மண்ணில் வந்து அறைந்து விழுந்ததுபோல் அர்ஜுனன் விழித்துக்கொண்டான். எழுந்து இருளில் தடுக்கி விழுந்து எழுந்து ஓடி குகையிலிருந்து வெளிவந்து அவ்வேடர்களை பார்த்தான். இருவரும் இளையவர்கள். “என்ன சொன்னீர்கள்?” என்று கூவினான். “சற்று முன் ஒரு பாடல்வரியை சொன்னீர்கள்… அது என்ன?”
அவர்களில் மூத்தவன் “முனிவரே, நீங்கள் யார்? இக்குகைக்குள்ளா இருந்தீர்கள்?” என்றான். “சற்றுமுன் நீங்கள் கூறியதென்ன? அவ்வரியை எங்கு பெற்றீர்கள்?” என்றான். “இது எங்கோ சூதர் ஒருவரால் கூறப்பட்டது. எங்கள் முதியவர்கள் இதை அடிக்கடி கூறுவதுண்டு” என்றான் முதியவன்.
அர்ஜுனன் “இது ஒரு புது வேதத்தின் வரி என்பதை அறிவீர்களா?” என்றான். “ஆம், இதன் ஒரு வரியையேனும் அறியாத எவரும் இங்கில்லை. யாரோ பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் இது பாடுவதற்கு எளியது, இனியது. நானே ஒவ்வொரு நாளும் கடமையை செய்க, பயனை அளிப்பது படைத்தவனின் கடன் என்று கூறிக்கொள்வதுண்டு” என்றான் முதியவன்.
அர்ஜுனன் ஒரு கணத்தில் ஐந்தாம் வேதத்தின் ஒவ்வொரு சொல்லையும், ஒலியையும் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்துக்கொண்டான். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி கண்ணீருடன் அங்கிருந்து திரும்பி நடந்தான். சிரித்துக்கொண்டும் தலையசைத்து தனக்குத்தானே பேசிக்கொண்டும் நடந்து அருகிருந்த சிறு நகரின் விடுதியை அடைந்தான். அங்கு கிடைத்த உணவை உண்டு அதன் ஓரமாக மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான்.
அங்கு வணிகர்கள் கூடி அமர்ந்தனர். நடுவே விழியிலாத சூதன் ஒருவன் அமர்ந்து புற்குழல் இசைக்கத் தொடங்கினான். முதற்சுருள் எழுந்தபோதே அர்ஜுனன் திகைத்து எழுந்து அமர்ந்தான். அவன் அசைவைக் கண்டு அனைவரும் திரும்பிப்பார்த்தனர். சூதன் குழல் தாழ்த்தி “கூறுக, முனிவரே!” என்றான். “இதை எங்கு கற்றீர்?” என்றான். “இது என் ஆசிரியராகிய முதுசூதர் பாசர் பயணியாகிய சூதர் ஒருவரிடமிருந்து கற்றது” என்றான் சூதன்.
“அவர் எங்கு கற்றார்? இந்த இசை நான் நன்கு அறிந்தது. இங்கு அனைத்தையும் நிகழ்த்திய இசை இது” என்றான் அர்ஜுனன். “என் ஆசிரியரின் ஆசிரியர் இதை விழியிழந்த இளங்குமரன் ஒருவனிடம் இருந்து கற்றார். நாவும் செவியும் விழியும் அற்றவன். இசையொன்றினால் மட்டுமே உலகுடன் பேசுபவன். அவன் பெயர் முரளி. யாதவ அரசகுடியில் பிறந்தவன், யமுனைக்கரையில் புற்குடிலொன்றில் தனிமையில் தங்கியிருக்கிறான். அவனைத் தேடி சூதர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவனிடமிருந்து அந்த இசை எங்கும் பரவுகிறது” என்றான் சூதன்.
“சூதரே, நீங்கள் எங்கிருந்து இதை கற்றீர்?” என்று அர்ஜுனன் கேட்டான். “நான் தென்திசையைச் சேர்ந்தவன். என் பெயர் கந்தன். இதை மேற்குப்புலத்தைச் சார்ந்த யவனச்சூதராகிய பாசரிடமிருந்து கற்றேன்” என்று அவன் சொன்னான். “இவன் என் மாணவன்” என்று அருகிருந்தவனை சுட்டிக்காட்டி “இவன் கிழக்கு நிலத்தை சேர்ந்தவன்” என்றான்.
இசைக்குமாறு கைகாட்டி அர்ஜுனன் மல்லாந்து படுத்தான். அவனைச் சூழ்ந்து குழலிசை எழுந்து பரவியது. அது ஐந்தாம் வேதத்தின் சொற்களில் பரவியிருப்பதை அவன் அறிந்தான். அவ்விசையில் ஐந்தாம் வேதத்தின் சொற்கள் ஊடுருவியிருந்தன. கண்ணீர் வழிய புன்னகைத்தபடி அவன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். பெருநதியில் சிறு துரும்பென அதில் மிதந்து சென்றுகொண்டிருந்தான்.
[கல்பொருசிறுநுரை நிறைவு]