ஜெயமோகனின் சிறுகதை நீளமாக இருந்தாலும் அது சலிப்பூட்டும்படி தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஓர் அனுபவமாக கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கதையின் தளம், பின்புலம், மாந்தர்கள் , உணர்வுகள் போன்றவை தனித்தன்மையோடு யாரும் எதிர்பாராத யாரும் தொடாத ஒன்றாகத் தெரிந்தன. ஒவ்வொரு கதையிலும் கதையைவிடக் காலம், பின்புலம், மன உணர்வுச்சித்தரிப்புகள் போன்றவை புது திசையில், புது விசையில் விரிவதாக எனக்குத் தோன்றின.ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை. அவை எனக்குள் புதிய புதிய திறப்புகளை அளித்தன. ஒவ்வொரு கதையும் படித்து முடித்ததும் எனக்குள் இருந்த பூட்டுகள் ஒவ்வொன்றாக திறப்பது போல் உணர்ந்தேன். ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு சாவி உள்ளதாகப் படும். வாசிப்பின்பம் அளிக்கவும் தவறவில்லை.