பெருவலி- வாசிப்பு

ஆசிரியருக்கு ,

பொதுவாக எழுத்தளர்கள் பாத்திரங்களான கதைகள்,கவிதையை கூறாகக் கொண்ட கவிதைகள், தக்கையாகச் சூம்பியே இருக்கும், வாசிப்பை மட்டுப்படுத்தும். திரை உலகைப் பற்றிய படங்களும் அவ்வாறே. சம்பவங்களின் வலுவில் நிற்காமல் உரையாடல்களின் வளவளப்பில் நீளும்.

‘பெரு வலி’ விதிவிலக்குகளின் வரிசையில் நிற்கும் நெஞ்சு கனக்கும் அனுபவம். சாதாரண விவரண இடங்களில் கூட அடியில் சென்று தீண்டும் வாக்கியங்கள் துவங்கி , (ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது என்ற சுந்தர ராமசாமியின் வரி) (எதைப்பத்தி சிந்திச்சேன்னு பாத்தா ஒரு டிராக்கும் கெடையாது. எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி…’)

நகம் பெயர்ந்து விழுந்த கால் கட்டை விரலின் சிவந்த சதை பரப்பில் தீண்டப்பட்ட கூச்சமும் , வலியும் கதை முழுக்க. முதலில் குமுத அட்டையில் காட்டப்படும் எருமை, ஒரு புகைப்பட அழகமைவிற்காக வெண்பரப்பின் பின்திரையில் ஒரு கருமை முன் நிறுத்தம் எனத் தோன்றியது. இரண்டாம்முறை கைலாயத்தில் பார்க்கும்போது கூட அழகே தென்பட்டது விநோதத்துடன். இறுதியில் கோமலின் வார்த்தைகளில் அது மரணத் தூதுவனாகும் இடம் ஒரு சிலிர்ப்பு. அவருக்கு அது ஒரு அழகிய தேவ தூதன்.

வலியின் நோவும் கோமலின் ஏளனமும் , சிரிப்பு முட்டும்போது மண்டையில் அடிப்பது போல. ( வலி எப்டி இருக்கு?’ என்றேன். ‘வளந்துட்டா…இப்ப அவளுக்கு தனியா அஜெண்டா இருக்கு) (‘நின்னா ஆசுவாசமா இருக்குமோ?’ என்று கேட்டேன்.‘யார்யா நீரு…நின்னா வேற மாதிரி வலி. நடக்கறச்ச கடப்பாரையால அடிக்கிற மாதிரின்னா நின்னா மண்வெட்டியால வெட்டுற மாதிரி).

கதை முழுக்க ஒவ்வொரு புள்ளியிலும் துடித்து தெறிப்பது வலி,வலி. ஆனால் (டேய், பாவிகளா உங்க ஒவ்வொருத்தன் சார்பிலயும் இத நான் எடுத்து தலையிலே வச்சுக்குவேண்டா…. ஏன்னா நீங்களும் உங்க எட்டுதலைமுறையும் படுற எல்லா வலியையும் நான் தின்னாச்சு. நானும் என் ஏழு முன்னோர்களும் செஞ்ச எல்லாத்துக்கும் நான் தண்டனைய அனுபவிச்சாச்சுடா… நான் ஏசு போல.) இது திடீரென அகம் தாவி உயர்ந்து அமரும் இடம் , வலியின் எடைக்கு ஒரு மாற்று கூடுதலாகிறது . இங்கு வந்து சேர
அவரின் பயணமும் , கூட நமதும் ஒரு கைலாய யாத்திரைக்கு சமம். (திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…’)

தனிமையும்,வெறுமையும் கைலாயத்தின் குறியீடாக ஒரு கதைக்குள்ளேயே வளர்ந்து நிறுவப்பெறுகிறது.
(அந்த மண்ணோட வெறுமை மனசுக்குள்ளே பூந்துட்டுதா? அப்டி இருக்க முடியாது. மனசுக்குள்ள அந்த வெறுமை கொஞ்சமாவது இருந்தாத்தானே வெளிய இருக்கறதை அது அடையாளம் காணும்.)
(எல்லா ஜீவனுக்கும் இயற்கை குடுத்திருக்கிறது தனிமையத்தானே? மத்த எல்லாம் நாம குளிருக்கு போத்திக்கறது. கையிலே கிடைச்ச அத்தனையும் எடுத்து மேலே போட்டுக்கறோம். பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள், கட்சி, கழகம், கலை, இலக்கியம் …எல்லாமே.) இது ஒரு தொடத்தயங்கும் இடம், தொட வேண்டாத இடமும் கூட. ஓரப்பார்வையிலேயே பூதாகரமாய் அச்சுறுத்துகிறது தனிமையும் , வெறுமையும்.

முக்கியமாக அந்த உறுதிப்பாடும், தியாகமும் , யார் விஞ்சி நிற்கிறார்கள்,பெஹன்ஜியா, கோமலா ?
(நான் கைலைலாஷ்ஜியை பாக்கக்கூடாதுன்னு ருத்ரனோட கட்டளைன்னா அப்டி ஆகட்டும். எப்டி தனியா விட்டுட்டு போவேன்’னா. எனக்கு மனசு நெகிழ்ந்துட்டுது. எப்ப வேணுமானாலும் எதையும் விட்டுக்குடுக்க ரெடியான ஒரு வாழ்க்கை. எந்தப் பிடியிலயும் இறுக்கம் இல்லை. கையிலே ஒண்ணுமே நிக்காது. அதனால அவங்க ஒண்ணையுமே சாதிக்க முடியாது. ஆனா மிக முக்கியமான எதையெல்லாமோ அடைஞ்சிடறாங்க இல்லியா?)

ஒரு மனித உடலின் உச்சகட்ட இன்ப நுகர்வு , வலியின் பெரு எடை நிதமும் நனவிலும் , கனவிலும் ஓயாது அழுந்தி படுத்தும் தொடர் வாழ்வில், எப்போதாவது கிடைக்கும் ஒரு சிறு விடுப்புக்கு பத்தில் ஒரு பங்கு ஈடாகாது. இங்கு ஆசுவாசமே மனித சாத்தியத்தின் உச்சகட்ட இன்பம், அங்கு அடையும் ஞானம் வேறெப்படியும் அல்ல, எந்த முறையிலும் அல்ல அடையக்கூடியது .

பாலையில்,வெயிலில் உடல்நீர் வற்றி, நா வெடித்து , உதடுகள் காய்ந்து உலர்ந்து, உயிர் விடும் கடைசி நொடியில் கைவரப்பெறும் சுனை நீரல்ல, கோடை வெம்மை தணிக்க நாம் பருகும் குளிர் பானம்.

கிருஷ்ணன்
ஈரோடு

ஏனோ இது நினைவுக்கு வருகிறது.

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே – இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு
– நல்வழி

ராமச்சந்திர சர்மா

 

கதைகள்

 

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைநாஞ்சில் தேர்தலில் நிற்கிறாரா?
அடுத்த கட்டுரைகோட்டி-கடிதங்கள்