யானைப்படுகொலைகள்- கடலூர் சீனு

யானைப்படுகொலை

படுகொலை செய்யப்படுவது என்ன?

என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

தற்போதுதான் தளத்தில் யானைக் கொலை செய்தி வாசித்தேன். கொலை நிகழ்ந்து நெடிய நேரம் கடந்து விட்டதால், அறிவுச் சமநிலை கொண்ட பல பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது.

மலையாளியாக பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் வகையறா பதிவுகள் முதல் வகை.

உண்மை எதுவோ அதை சரியாக பார்க்க வேண்டும். வயலுக்குள் காட்டுப் பன்றி நுழைந்து சேதம் செய்வதை தடுக்க, விவசாயிகள் இப்படி உணவில் வெடி வைப்பது இயல்பு. யானை தவறுதலாக இதில் சிக்கி விட்டடது. இந்த நிலையை தவிர்த்துவிட்டு ஒட்டுமொத்த மலையாளிகளே இப்படித்தான் என காழ்ப்பை கொட்டுவது தவறு. இது இரண்டாவது வகை.

காட்டுப் பன்றிகள் தலை சிதறி செத்தால் அது ஒரு விளைவையும் உருவாக்காது. செத்தது யானை. அதுவும் கர்ப்பிணி. ஆகவேதான் இத்தனை அறப்பொங்கல். இது மூன்றாவது.

இத்தகு விஷயங்களில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமே. எங்கேனும் இந்தியாவுக்குள் பெண் இப்படி செய்து கேள்விப்பட்டது உண்டா. இத்தகு பதிவுகள் தனி வகை.

பிராந்திய மனிதன் மீது குவியும் வெறுப்பை கேள்வி கேட்கிறது ஒரு பார்வை. அடிப்படை அறச்சீற்றம் மீது கேள்வி கேட்கிறது ஒரு பார்வை. கொடுமைக்கு எதிரான கொதிப்பு ஒரு நிலை. குற்ற உணர்வு அடுத்த நிலை.

முதல் பார்வையில் சரிதானே என்று தோன்றும் இந்த கருத்துநிலைகளும் உணர்வு நிலைகளும், மறு பரிசீலனை செய்தால், அந்த யானை தின்ற வெடிகுண்டும் இவையும் ஒன்றே என்று புலப்படும். யானை டாக்டர் கதையை எடுத்துக் கொண்டால், அதன் இலக்கு, இயக்கம் இரண்டின் வழியே ஒரு நிலையை ‘ஒருமை’ நிலையை சாதிக்கிறது. உண்மையான சிக்கல் ஒன்றுக்கு ஒருமையான முகம் அளிக்கிறது. அந்த ஒருமை மட்டுமே சமூகத்தில் அரசில் கிரியா ஊக்கி என அமைந்து  நேர்மறையாக ஏதேனும் நிகழ ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

மாறாக ஒரு விஷயம் உருவாகி வரும் போதே, அதை விழிப்புணர்வு நோக்கி நகர்த்தாமல், உருவாகிவரும் அந்த  ஒன்றை, அதன் அடிப்படை விசைகளை வினாக்கள் வழியே உடைப்பது என்பது அந்த யானையின் வாயில் உண்ணக் கொடுக்கும் மற்றொரு வெடி போன்றதே.

உண்மையில் சமூக வலைத்தளங்கள் அளிக்கும் கருத்து சுதந்திரம் என்பது,  தன்னியல்பாக உருவாகி வரும் ஒன்று, அதன் சிக்கல், சூழல்விழிப்புணர்வு நோக்கி வளராமல் மனிதர்கள் தங்களது கருத்து மோதல்கள் வழியே மழுங்கடித்துக்கொள்ளவே துணை நிற்கிறது.

உதாரணமாக மேற்கண்ட சூழலில், ஒருமுகப்பட்ட கருத்து உருவானால் என்ன நிகழும்? அது அரசை நிர்பந்திக்கும். அரசு என்ன செய்ய முடியும்?  வேறு எந்தக் காலத்தையும் விட, வனங்கள் அழித்து, தொழில் வளங்களுக்கான நிலமாக அந்த வனத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் சூழல் இந்த மத்திய அரசின் கீழ் தான் துரிதம் பெற்றிருக்கிறது.

தனது வாழிடம் சுருங்க, சுருங்க யானைகள் எங்கேதான் போகும்? 1980 இல் யானைகளின் ஆர்வலராக அதன் இனத்தின் பாதுகாவல் களப் பணிக்காக சத்தியமங்கலம் வனத்தில் பணியாற்றிய ராமன் சுகுமாரன் அவரது இது நாள் வரயியலான யானைகளோடான அனுபவங்களை என்றென்றும் யானைகள் எனும் சிறு நூலாக எழுதி இருக்கிறார். தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது.

அதில் அவர் பேசும் முதல் சிக்கலே, காட்டுப் பன்றிக்கு வைத்த வெடி உணவை உண்டு சாகும் யானைகளை குறித்ததுதான். நாற்பது ஆண்டுகளாக தொடரும் பிரச்னை. கருத்துக்கள் ஒருங்கு திரண்டு, கருத்தியல் ஆற்றல் என்று மாறி, சமூக அலகில் புறவயமாக ஒரு அசைவாக மாறும் நிலையை, இந்த சமூக வலைத்தளங்கள் (அதில் உரக்க ஒலிக்கும் மேற் சொன்ன வகைமைகளின்  ஜனநாயக ரீதியிலான கருத்து நிலைகள்)     முளைப்பதற்கு முன்பாகவே விதைகளை உடைத்து விடுகின்றன.

விளைவு. ஆக்கப்பூர்வமாக எதுவுமே  நிகழாத, ஜனநாயகத்தின் கூப்பாடு மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழல். சமூக வலைத்தளங்கள் ஜனநாயக களம்தான். அதிலிருந்து சமூகத்தில் விரும்பும் மாற்றத்தை உருவாக்கும், கருத்தியல் ஒருமை, அது கிளர்த்தும் ஒருங்கிணைத்த ஆற்றல் எதுவும் உருவாகி வராது. இந்த சூழலும் அதன் சான்றாகவே சென்று முடியும்.

கடலூர் சீனு

***

என்றென்றும் யானைகள் வாங்க

முந்தைய கட்டுரைஆனையில்லா, தேனீ- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிவம்,தேவி- கடிதங்கள்