அன்புள்ள ஜெ
போகன் சங்கர் இப்படி எழுதியிருந்தார்.
பாரதி கேரளத்தைப் பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஏறக்குறைய இந்த பொருளில். “மலையாளத்தில் நாய்கள் குரைப்பதில்லை.மலையாளிகள் பற்றி அப்படிச் சொல்லமுடியாது’
இது உண்மையா?
செந்தில்ராஜ்
***
அன்புள்ள செந்தில்ராஜ்
கேள்வி தெளிவாக இல்லை. மேலே சொன்னதில் மூன்று செய்திகள் உள்ளன. ஒன்று மலையாளத்தில் நாய்கள் குரைப்பதில்லை. இது உண்மை, அவை சம்ஸ்கிருதத்தில் “ஃபவ!” என்று குரைக்கின்றன.
இரண்டு, மலையாளிகள் குரைப்பதில்லை என்று சொல்லமுடியாது. அதுவும் உண்மை. அது பலருக்கு தெரியாது. ஏனென்றால் மலையாளம் மெல்லினம் மிகுந்த மொழி. மெல்லியலோருக்கு ஏற்றது. குரைத்தால் அது மியாவ் ஓசையாகவே வெளியே கேட்கும்
பாரதி சொல்லியிருக்கிறாரா? இருக்கலாம், அவர் திருவனந்தபுரம் வந்து அங்கே சைவப்பிரகாச சபையில் உரையாற்றியிருக்கிறார்.
ஆனால் நானறிந்தவரை பாரதி நாயர்களைப் பற்றித்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அதை முழுமலையாளிகளையும் குறிப்பதாக ஆக்கிவிட்டிருக்கிறார் போகன் என நினைக்கிறேன்.
ஜெ
***