கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

“கிறுக்குக்கூவான் மாதிரி பேசுதான் சார். அடிச்ச அடியிலே மண்டையிலே என்னமாம் களண்டிருக்குமான்னு சந்தேகமா இருக்கு” என்றார் சாமுவேல்.

“கூட்டிட்டு வாரும்வே, பாப்பம்” என்றேன்.

“எல்லாம் நடிப்பு… நாம பாக்காத நடிப்பா?” என்றார் மாசிலாமணி. “அடி எங்க படணுமோ அங்க படணும்… மணிமணியாட்டு சொல்லுவான்.”

“பாப்பம்… அவனுக்கு அடிபடவேண்டிய இடம் உடம்பிலே இல்லியோ என்னவோ” என்றேன்.

சாமுவேல் மோசஸை அழைத்து வந்தான். குள்ளமான கருப்பான இளைஞன். பெரிய உதடுகள், பெரிய கண்கள். மிகச்சிறிய காதுகள் தலையோடு ஒட்டியிருந்தன. குட்டையான காய்த்துப்போன விரல்கள். இரண்டுநாளில் அடர்த்தியாக தாடி எழுந்து முட்புதர்போல நின்றது.

“உக்காருடே” என்றேன்.

“வேண்டாம்சார்’ என்றான் பணிவுடன் கும்பிட்டு. அவன் தோள்கள் அத்தனை வலுவானவை என்பதை நான் கவனித்தேன்.

“உக்காரு… உங்கிட்ட பேசணும்” என்றேன்.

“வேண்டாம் சார்” என்றான்.

கையை ஓங்கியபடி, “டேய் உக்காரச்சொன்னா உக்காருடா,வெண்ணெ” என்றார் மாசிலாமணி.

அவன் சட்டென்று அமர்ந்துகொண்டான். உடம்பு நடுங்கத் தொடங்கியது.

“மாசு, நீரு கொஞ்சம் வெளியே நில்லும். ஸ்டீபன் நீயும் வெளியே நில்லு. கதவைச் சாத்து”

அவர்கள் வெளியே சென்று கதவைச் சாத்தினர்.

“இங்கபாரு, நான் சும்மா போட்டு அடிக்குத ஆளில்லை. எனக்கு கேஸுதான் முக்கியம். கேஸிலே நீ கெடந்து பெலம் பிடிச்சு ஒரு காரியமும் இல்லை. எங்களுக்கு வேண்டிய எவிடென்ஸு கிட்டுத வரை நாங்க விடமாட்டோம். நாங்க சொல்லுறது கோர்ட்டிலே நிக்கணும்னு இல்லை. உனக்கு காசிருந்தா, நல்ல வக்கீலை வச்சு உடைச்சுப்போட்டு வெளியே போ. அரசியலிலே ஆளிருந்தா வேணுமானா இப்பல்லாம் பப்ளிக் பிராசிக்யூட்டரையே போயி பாத்திருதானுக” என்றேன்.

அவன் பெரிய கன்றுக்குட்டிக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான் நான் சொல்வது புரிகிற்து என்று தெரிந்தது.

“படிச்ச கிரிமினலுங்க யாரும் இப்டி கிடந்து அடிதிங்க மாட்டானுக. இங்க எல்லாத்தையும் மணிமணியா சொல்லிடுவான். ஆகிறத கோர்ட்டிலே பாத்துக்கிடுவான். இங்கேருந்து எவ்ளவு சீக்கிரம் வெளியே போகமுடியுமோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நினைப்பான்” என்றேன்.

அவன் ஒன்றும் சொல்லாமல் அதே பார்வையுடன் அமர்ந்திருந்தான்.

“சரி, அங்க நடந்தது என்ன? சொல்லு. உண்மையைச் சொல்லணும்”

“சார், நான் ஆரம்பத்திலே இருந்தே உண்மையைத்தான் சார் சொல்லுதேன்.”

“சரி, சொல்லு” என்றேன். “நீயே நடந்ததை எல்லாம் சொல்லிடு… ஆரம்பத்திலே இருந்தே சொல்லணும்.”

“சரி சார்.”

“உன் பேரென்ன? அதிலே இருந்து தொடங்கு.”

“சார், என் பேரு மோசஸ்… அப்பன் பேரு ஞானப்பன். அப்பன் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்பவே விட்டுட்டு போய்ட்டாரு. எனக்கு அம்மை மட்டும்தான். அம்மையும் டீசண்டு கிடையாது” என்று அவன் சொன்னான். தயங்கி “டீசண்டுன்னா, அம்மைக்கு வேற வளியில்லை. நாங்க நாலு பிள்ளைங்க. எங்களுக்கு தீனி போடணும். எங்க ஏரியாவிலே ஆம்பிளை இல்லா பொம்பிளை மானமா வாழவும் முடியாது.”

“சரி, என்ன படிச்சே?”

“நான் பள்ளிக்கூடம் போனது ரெண்டாம்கிளாஸு வரையாக்கும் சார். அங்க என்னை மத்தபயக்க அம்மையைச் சொல்லி கேலிசெய்யுததை புரிஞ்சுகிடத் தொடங்கினதும் நிப்பாட்டிட்டேன். இரும்புக்கடையிலே வேலைக்கு போனேன். அங்கியே ராத்திரி படுத்துக்கிடுவேன். அங்க முதலாளி கொஞ்சம் அன்பா இருந்தாரு. எட்டுவருசம் அங்க வேலைபாத்தேன்.”

“அங்கேருந்துதான் ஆரம்பமா?” என்றேன்.

“ஆமா சார்… அங்க இருக்கிறப்ப கொஞ்சம்கொஞ்சமா பயக்ககூட சுத்தத் தொடங்கினேன். இங்க மொட்டவிளையிலே என்னைய மாதிரி பயக்க கூடுதலாக்கும் சார். எல்லாவனுக்கும் குடிப்பளக்கம் உண்டு. பல காரியங்கள் செய்து கையிலே காசும் வச்சிருப்பானுக. மொரட்டுப் பயக்க. எல்லாவனுகளுக்கும் சினிமாவெறி. ஆளுக்கொரு நடிகனுக்க ரசிகனுங்களா இருப்பானுக”

“அவனுக கூட நான் ஏன் சேந்தேன்னு இப்ப நினைச்சு நினைச்சு பாக்குதேன். எனக்கு வேற ஆளே இல்ல சார். இரும்புக்கடையிலே நான் ஒரு நாயி, பூனை மாதிரியாக்கும். அப்டித்தான் நடத்துவாங்க. அப்பதான் சுல்தான்னு ஆக்கர்கடை பய ஒருத்தன் பளக்கமானான். அவன் கூப்பிட்டான்னு ஒருநாள் சினிமாவுக்கு போனேன். அப்டியே இந்த கேங்குலே பளக்கமாயிட்டேன்” மோசஸ் சொன்னான்.

“இங்க எல்லாவனும் நல்லா பேசுவானுக, சிரிப்பானுக. சார், நான் சிரிக்க கத்துக்கிட்டதே இவனுககூட சேர்ந்தாக்கும். முன்னாடி எனக்கு சிரிக்கவே தெரியாது சார். ஆமா சார் நான் சிரிக்கதே இல்லை… இவனுககூட நல்லா சுத்துவேன். ராத்திரியிலே நைசா வெளியே போயி சேந்துகிடுவேன். செக்கண்ட் ஷோ படம் பாப்போம். நல்லா பரோட்டா பீஃப் திம்போம். செலவுக்குச் சின்ன களவுகள் செய்வோம்…”

“ரெண்டு வருசம் அவனுககூட இருந்த வாழ்க்கை இப்பமும் அப்டி இனிப்பா ஞாபகம் இருக்கு சார். நான் செத்தாலும் அதை மறக்க மாட்டேன். என்னவா ஆனாலும் அவனுககூட சேந்தது தப்புன்னு சொல்லமாட்டேன்” என்று மோசஸ் சொன்னான்.  “மொட்டவெளையிலே சரவணன் குரூப்பு ஆமோஸ் குரூப்புன்னு ரெண்டு உண்டு. நான் ஆமோஸ் குரூப்பாக்கும்”

“பிறவு என்ன ஆச்சு?” என்றேன்.

“எனக்கு வருமானம் திகையல்ல. பகலந்தி வரை கம்பி வளைச்சா அறுவது ரூவா தருவாரு மொதலாளி… அதனாலே அடிக்கடி இரும்புச்சாமான்களை திருடினேன். ஆக்கர்கடை சுல்தான் பயதான் ஐடியா குடுத்தான். எடுத்து அவனுக்க வண்டியிலே போட்டிருவேன். அவன் பாதிப்பைசா தருவான். அதை வைச்சு கேங்கிலே செலவளிப்பேன்.”

“முதலாளி பாத்திட்டே இருந்திருக்காரு, நான் ராத்திரி போறதெல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் சரியாட்டு பொறிவச்சு பிடிச்சுப்போட்டாரு. ’நன்னிகெட்டா நாயே’ன்னு அடிக்க வந்தாரு. இரும்பு ராடை எடுத்து அவருக்க முளங்காலிலே அடிச்சேன். அவரு விளுந்துட்டாரு. நான் அந்தாலே ஓடிட்டேன்.”

“அப்றம் கேங்கிலேதான், இல்லியா” என்றேன்.

“ஆமா சார். முளுக்க கேங்கிலேதான்… அவனுக எல்லாரும் பலஜோலிகள் செய்வானுக. பகலிலே வேலை செய்யுத வீட்டிலே ராத்திரி போயி வெளியே கிடக்குத சாமான்களை தூக்கிட்டு வந்திருவானுக…”

“அப்டித்தான் திருட்டு ஆரம்பிச்சது இல்ல?” என்றேன்.

“ஆமா சார், சின்னச் சின்ன திருட்டுதான் சார் எல்லாமே. ஆளில்லா வீட்டுக்குத்தான் போவோம். வெளியே கிடக்குத எதையாவது எடுத்திட்டு வந்திருவோம். பிறவு பூட்டை உடைச்சு திருட ஆரம்பிச்சோம்… வாரம் ஒரு ஆட்டைய போட்டா போரும் சார். பகல்ல எங்கயாவது உறங்குவேன்.”

“மோசே, நீ சர்ச்சுக்கு போறதுண்டுன்னு சொன்னியாமே.”

“ஆமா சார்.”

“அங்க கையைச் சாத்தலாம்னு பாத்தியோ.”

அவன் பேசாமல் இருந்தான்.

“சொல்லு”

“இல்ல சார்… “

“டேய், சொல்லு” என்றேன்.

“சார் நான் உண்மையான விசுவாசியாத்தான் சார் போறேன்.”

“திருடுறது சாவான பாவம் இல்ல?” என்றேன்.

“சார், நான் செய்யுதது எல்லாமே சாவான பாவம்தானே?” என்றான். “ஆனா பாவிகளே எனக்ககிட்ட வாருங்கன்னுதானே ஆண்டவரு சொல்லுதாரு?”

“அது சரி.”

“நான் ஒருக்க மேலவெளை சர்ச்சு பக்கமாட்டு போனேன். ரோட்டிலே போறப்ப அங்க உள்ள குருவானவர் பிரசங்கம் செய்யுததைக் கேட்டேன். என்னமோ ஒரு மனசு நடுக்கம் உண்டாச்சு… அளுதிட்டே நின்னுட்டிருந்தேன். கையை நெஞ்சுமேலே வச்சு கும்பிட்டே நின்னேன். அப்டியே ஓரோ வாத்தையாட்டு கேட்டுட்டே இருந்தேன்…” என்றான் மோசஸ்.

பிறவு எல்லாரும் கிளம்பிப் போனாங்க. சர்ச்சிலே ஆருமே இல்லை. நான் மெதுவா பாத்து உள்ள போனேன். அங்க யாருமே இல்லை. ஆல்டர்லே மாதா குளந்தை ஏசுவை கையிலே வச்சுகிட்டு வானத்திலே பறந்திட்டிருக்க மாதிரி நின்னா. பெரிய சிலுவைக்கு லைட்டு போட்டிருந்தது. ஆகாசம் மாதிரி கூரை. அதிலேருந்து வரிசையாட்டு நிறைய ஃபேன் தொங்கிட்டிருந்தது. தேக்கிலே பெஞ்சும் டெஸ்கும் போட்டிருந்தது. நான் மாதாவை பாத்துட்டு நின்னேன்.

நான் அதுக்கு முன்னாலே சர்ச்சுக்கு போனது எனக்க அம்மைக்க கூட. அம்மையும் சர்ச்சுக்கு தனியாத்தான் போவா. அவ போறப்ப அங்க யாருமே இருக்கிறதில்லை. அதேமாதிரி வெளிச்சமா, கலரா, மைதானம் மாதிரி காலியாத்தான் இருக்கும். நல்ல ஞாபகம் இருக்கு. அம்மை சேலையை தலையிலே போட்டுட்டு முட்டுகுத்தி உக்காந்து அளுவா.

அம்மை ஜெபம் செய்து நான் பாத்ததில்லை. அளுதிட்டே இருப்பா. சத்தமே இல்லாம கண்ணீரு விளுந்திட்டிருக்கும். பிறவு பெருமூச்சோட எந்திரிச்சு வெளியே போயி திரும்பி பாத்து சிலுவை போட்டுட்டு என்னைய கூட்டிட்டு நடப்பா. அப்ப அவகிட்ட ஒண்ணுமே பேசக்கூடாது. திருப்பிப் பேசமாட்டா. அடமாட்டு என்னமாம் பேசினா அடிவிளும்.

“நான் அங்க மண்டியிட்டு சும்மா கொஞ்சநேரம் இருந்தேன். அம்மைய மாதிரி எனக்கும் கண்ணீராட்டு வந்திட்டிருந்தது. அரைமணிக்கூர் அங்க இருந்து அளுதேன். பிறவு அப்டியே வந்திட்டேன். அதுக்குப்பிறவு அடிக்கடி அங்க போவேன். வெளியே நின்னு பாப்பேன். யாருமே இல்லேன்னா உள்ள போயி கொஞ்சநேரம் அளுதிட்டு வந்திருவேன்” என்றான் மோசஸ்.

“உன்னை யாருமே பாத்ததில்லையா?” என்று நான் கேட்டேன் “யாரும் எதுவும் கேக்கல்லியா?”

“இல்லை சார். கோயில்குட்டி பாத்திருப்பாரு. ஆனா ஆரும் ஒண்ணும் கேக்கல்ல.”

“எவ்ளவு நாளாட்டு போறே?” என்றேன்.

“ஒரு, ஒரு ரெண்டு வருசம் இருக்கும் சார்.”

“பிரசங்கம் கேக்க போவியா?”

“ஆமா சார், வெளியே நின்னு கேப்பேன். ரொம்ப தள்ளி ரோட்டிலே நின்னு கேப்பேன்.”

“மோசே, நீ அங்க முதல்ல கேட்ட பிரசங்கம் என்ன? அதிலே ஏதாவது ஞாபகம் இருக்கா?”

அவன் பேசாமலிருந்தான்.

“சொல்லு, ஞாபகமிருக்கா… ஏதாவது.”

“இருக்கு சார்.”

“சொல்லு, என்ன அது?”

“அது வெளிப்படுத்தின விசேஷம், எட்டாம் அதிகாரம், முதலாம் வசனம்.” என்றான் மோசஸ் “அவர் ஏழாம் முத்திரை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைநாழிகை நேரமளவும் அமைதி உண்டாயிற்று.”

“அது என்ன வசனம்.”

“சொர்க்கவாசல் திறக்குத நேரம் சார். பிதாவானவர் வைச்ச ஏழு முத்திரைகளிலே ஏழாவது முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிற எடம்” என்று மோசஸ் சொன்னான். “அதோடே நியாயத்தீர்ப்புநாள் தொடங்கும். கல்லறைகள் உடைஞ்சு திறக்கும். செத்தவங்கள்லாம் எந்திரிச்சு வருவாங்க. வானமும் பூமியும் அக்கினியால் மூடப்படும். ஏசுவானவர் புனித அங்கியும் கிரீடமும் சூடி வானத்திலே தோன்றுவார்”

நான் கைகளை கோத்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன.

“மோசே, உனக்கு படிக்கத்தெரியுமா?” என்றேன்.

“தெரியாது சார்.”

“பைபிள் படிக்கணும்னு தோணலையா?”

“நான் பைபிள் கேப்பேன் சார்…ரேடியோவிலே. ஒவ்வொருநாளும் கேப்பேன். ராத்திரியும் கேப்பேன்… “

“பைபிள் உனக்கு எந்த அளவுக்குத் தெரியும்?”

“கொஞ்சமாட்டு தெரியும் சார்.”

நான் “ம்” என்றேன். பெருமூச்சுடன் “சரி, இப்ப இந்த விஷயத்துக்கு வாறேன். நீங்க போன பத்தாம்தேதி எம்.கே.ஆபிரகாம் வீட்டுக்கு திருடப்போனீங்க இல்லியா?”

“ஆமா சார்”

“யாரெல்லாம்? எப்டி திட்டம்போட்டீங்க? எல்லாம் சொல்லு…” என்றேன்.

அவன் தலைகுனிந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பிறகு “ஜோசப்பும் மரியானும் செபஸ்தியும்தான் எல்லா திட்டங்களையும் போட்டாங்க சார். எனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க குமுதா சிக்கன்லே பரோட்டா தின்னுட்டிருந்தப்ப மரியான் ‘எங்கிட்ட ஏல உங்கிட்ட ஒரு விசயம் பேசணும் வா’ன்னு கூப்பிட்டான். என்னைய வெளியே கூட்டிட்டுப் போனான். அவன் கணபதி கடையிலே சிகரெட்டு வாங்கி கொளுத்தி ஊதிகிட்டு எங்கிட்ட ரகசியமாட்டு இந்த ஐடியாவ சொன்னான்”

“என்னன்னு?”என்றேன்

“இந்த மாதிரி ஒரு வீட்டுலே ஒரு ஆட்டைய போட ஐடியா இருக்குன்னு சொன்னான். அங்க புருசன் பெஞ்சாதி ரெண்டுபேருதான் நாலுநாள் இருப்பாங்க. புருசன் ரிட்டயர்டு மிலிட்டரி. அறுவது வயசு. பெஞ்சாதி அம்பது வயசு. பிள்ளைங்க எல்லாம் அந்த வீட்டிலேதான்.  ‘அவங்க எல்லாரும் இவங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு பாளையங்கோட்டையிலே ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. வாறதுக்கு அஞ்சுநாள் ஆகும். இன்னிக்கு ராத்திரியே கையைச் சாத்திருவோம்னு ஐடியா இருக்குலே’ன்னு மரியான் சொன்னான்”

“எனக்கு இரும்புவேலை தெரியும், அதாக்கும் என்னை அவன் கூப்பிட்டது. அங்க சன்னலிலே ஒரு கிரில்லு இருக்கு. அதை சத்தம் கேக்காம அறுக்கணும். உள்ள சிலசமயம் பீரோவை பூட்டி சாவிய பிள்ளைங்க கொண்டுட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு. அப்ப பீரோவையும் உடைக்கவேண்டியிருக்கும்.  ‘வாறியாலே? நூறுபவுனுக்கு குறையாது பாத்துக்க. நாலிலே ஒண்ணு விகிதம், நான் கேரண்டி’ன்னு மரியான் சொன்னான். ‘ஜோசேப்புதான் கேக்கச் சொன்னான். நான் உனக்க கூட்டுக்காரன் ஆனதனாலே கேக்குதேன்’ன்னு சொன்னான்.”

“நீ சம்மதிச்சே?”

“ஆமா சார்”

“மோசே நான் நேரடியா கேக்கேன். நீ சின்னச்சின்ன திருட்டுகள் செய்தவன். இவ்ளவுபெரிய ஆட்டைக்கு போக எப்டி சம்மதிச்சே? ”

“தேவை இருந்தது சார்.”

“என்ன தேவை? செட்டில் ஆகணும்னு நினைச்சியா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஏதாவது லவ்வு, அந்த மாதிரியா?”

“இல்ல சார்.”

“பின்ன?”

“எனக்க அம்மைய ஒருதடவை பாத்தேன்…”

“ஓ.”

“தற்செயலாட்டுத்தான் பாத்தேன். அம்மை  தனியாட்டு இருந்தா. ரொம்பக் கிளவியா ஆயிருந்தா. ஒரு தண்ணித்தொட்டிக்கு அடியிலே சட்டிபானையோட குடியிருந்தா. ஒப்பம் நாலஞ்சு சொறிநயிங்க. அவ வயித்துப்பாட்டுக்கு பிச்சை எடுத்திட்டிருந்தான்னு தெரிஞ்சுது. நாலுபிள்ளையளும் விட்டுட்டு போயிட்டோம். அவளுக்கு வேற கெதியில்லை. அவ காலுரெண்டும் வீங்கி பெரிசா துணிமூட்டை மாதிரி இருந்தது”

மோசஸ் சொன்னான். “நான் தூரத்திலே நின்னு பாத்தேன். பக்கத்திலே போயி என்னான்னு கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா கையிலே அப்ப ஒத்த ஒரு ரூபாகூட இல்லை. பக்கத்திலே போனா கிளவி பைசா கேப்பா… அந்தாலே திரும்பி வந்திட்டேன். பிறவு போகவே இல்லை”

“அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சே?” என்றேன்.

“ஆமா சார், கொஞ்சம் பைசா இருந்தா குடுக்கலாம்னு நினைச்சேன். நெறைய பைசா வரும்னா அவளைக் கொண்டுபோயி எங்கயாவது அனாதைவிடுதியிலே சேத்திடலாம்னு தோணிச்சு. டெப்பாசிட்டு குடுத்தா சோறுபோட்டு வச்சுக்கிடுவாங்க”

“சரி, அதுக்காக இவனுக கூட சேந்துகிட்டே” என்றேன். “சொல்லு, எப்டி நடந்தது கிரைம்?”

“நான் ஒரு வர்க்‌ஷாப்பிலே தங்கியிருந்தேன். அங்கபோயி வேண்டிய சாமான்களை எடுத்துக்கிட்டு வந்தேன். நாலுபேருமாட்டு சினிமாவுக்கு போனோம்… செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு கையிலே டிக்கட்டு வச்சிருக்கிறது நல்லதாக்கும். மரியானுக்க பைக்கிலே நான். ஜோசப்புக்க பைக்கிலே செபஸ்தியான். சினிமா பாத்துட்டு மறுபடியும் பரோட்டா சிக்கன் சாப்பிட்டோம். பைக்கை கொண்டுபோயி ஓரு சந்திலே நிப்பாட்டி நம்பர் பிளேட்டுகளை மாத்தினோம். மெதுவா பெத்தேல் நகருக்கு போனோம்.”

“எத்தனை மணி இருக்கும்?”

“ராத்திரி பின்னேரம் ரெண்டுமணி இருக்கும்…”

“மழை இருந்தது இல்ல?”

“ஆமா சார் சாரல் மழை உண்டு” என்றான் மோசஸ். “அந்த வீட்டுக்கு நல்ல பெரிய காம்பவுண்டு. ஒரு சடைநாயி உண்டு. பொரிச்ச சிக்கனிலே பாலிடால் கலந்து வச்சிருந்தான் ஜோசப்பு. அதை தூரத்திலே இருந்து எடுத்து வீசினோம்.”

“ஏன்?”

“ஆளைப்பாத்தா நாயி சாப்பிடாது. சும்மா வீசினா மோப்பம் புடிச்சு வரும். அதை வேட்டையாடி திங்குறதா நினைச்சுக்கிடும்”

“சாப்பிட்டு செத்துப்போச்சு”

“ஆமா, குரைக்கமுடியாம மயங்கினதுமே நாங்க ஏறிக்குதிச்சிட்டோம். நான் உள்ளே உக்காந்து கேட்டை பூட்டின பூட்டை அறுத்தேன்”

“எதுக்கு?”

“திரும்பி ஓடுறப்ப கேட்டு திறந்திருந்தா நல்லது. ஏறிக்குதிச்சா யாராவது பாத்திருவாங்கள்லா?”

“பூட்டை அரம் வச்சு அறுத்தியோ?”

“ஆமா சார் ரோலிங்பிளேடுள்ள அரம். அங்க கார்ஷெட்டிலே இருந்த பல்பை ஜோசப்பு உருவினான். அந்த ஹோல்டரிலே பிளக்கை மாட்டி வயர் கனெக்ட் பண்ணினேன். பூட்டு மேலே பழைய துணிய சுத்திட்டு அறுத்திட்டேன். ஒரு சின்ன வண்டு மாதிரி சத்தம் வரும். அல்வா மாதிரி வெட்டீரலாம்”

“அப்றம்?” என்றேன்.

“பைக்கை உள்ள கொண்டுவந்து கார்ஷெட்டிலே நிப்பாட்டினோம். வெளியே நிப்பாட்டினா யாருக்காவது டவுட் வந்திரும்னு ஜோசப்புக்க நினைப்பு.”

“உள்ள போகவும் கிரில்லை வெட்டினீங்க?”

“ஆமா சார், கொல்லைப்பக்கம் சன்னல் திறந்திருந்திச்சு. கிரில்லை நான் ரோலிங்ராடு வச்சு  அறுத்தேன். சின்ன கேப் வந்திச்சு. ஜோசப்பு ஒல்லியான ஆளு. பாம்பு ஜோசப்புன்னுதான் அவனுக்கு பேரு. அவன் நுளைஞ்சு உள்ள போயிட்டான். அவன் கதவைத் திறந்தப்ப நாங்க உள்ள போனோம்.”

மோசஸ் சொன்னான் “ரப்பர் சோல் செருப்பு போட்டிருந்தோம். கையிலே கிளவுஸு உண்டு. இருட்டிலே பென்டார்ச் அடிச்சு மெல்ல தேடிட்டு போனோம். பீரோ இருக்கிற ரூமெல்லாமே பூட்டியிருந்தது. சத்தம் கேக்காம உடைக்க முடியாது. அப்ப கிழவரை மிரட்டி உக்கார வைச்சாகணும்…. ”

அவங்க தூங்கிட்டிருந்த அறைக்கதவு திறந்துதான் இருந்தது. ஜோசப்பும் மரியானும் உள்ள போனாங்க. கிழவர் பயந்துபோய் எந்திரிச்சதும் ஜோசப்பு சட்டுன்னு இரும்புக் கம்பியாலே மண்டையிலே ஒரு அடிய போட்டான். அப்டியே மயங்கி விழுந்திட்டார். பேச்சு மூச்சு இல்லை.

மரியான் குனிஞ்சு பாத்தான். மூச்சு இல்லை. ‘டேய் ஆளு போய்ட்டாண்டா’ன்னு சொன்னான். நான் பயந்திட்டேன். செபஸ்தி பேசாம இருன்னு என் கையை பிடிச்சான்.

கிழவி எந்திரிச்சு கும்பிட்டுட்டு நடுங்கிட்டிருந்தா. கண்ணீரு வழிஞ்சிட்டிருந்தது  ‘சத்தம் போட்டா உன்னையும் கொன்னிருவோம்… மரியாதையா சாவிகளை எடு’ன்னு ஜோசப்பு சொன்னான்.

கிழவி அழுதிட்டே ‘எங்கிட்ட சாவியெல்லாம் இல்ல மக்கா… அதெல்லாம் மருமகளுக கொண்டுட்டு போயிட்டாளுக’ன்னு சொன்னா.

‘அப்ப சத்தம் காட்டாம உக்காந்துக்கோ… மூச்சு வந்தா சொருகீருவேன்’ன்னு மரியான் சொன்னான்.

மரியான் முதல்ல வெளியே வந்தான். ஜோசப்பு வெளியே வாரப்ப சட்டுன்னு கிழவர் பாய்ஞ்சு எந்திரிச்சு அவன் காலைப்பிடிச்சு தள்ளிட்டார். அவரு சாகல்ல. மரியான் திரும்பி அவர் மண்டையிலே மறுபடியும் ஒரு அடிய போட்டான். அப்டியே விளுந்திட்டாரு.

மரியான் அவருக்க மூக்கிலே காலை வச்சு பாத்து ‘ஒளிஞ்சான், எளவு பேயி மாதிரில்லாடே எந்திரிக்கான்’ன்னு சொன்னான்.

நான் நடுங்கிட்டு நின்னேன். ஜோசப்பு ‘செபஸ்தி, நீ கிளவிய வாயை கெட்டிப்போட்டுட்டு வா’ன்னு சொன்னான். செபஸ்தி உள்ள போனான்.ஜோசப்பு  எங்கிட்ட ‘ஏல போயி ரூமுகளுக்க பூட்டை உடை. சீக்கிரம், நேரமில்ல’ன்னு சொன்னான்.

நான் முதல் அறைக்க பூட்டை உடைச்சேன். உள்ள பீரோ இருந்தது. அப்டியே ரோலிங்ராடை கொண்டுட்டு போயி பீரோவோட தகரத்தை வெட்டி உள்ள கையவிட்டு இளுத்து கொக்கியை தாழ்த்தி திறந்தோம். உள்ளயும் சினனப்பெட்டியை திறக்க ரெண்டு தகரத்தை வெட்டினேன். உள்ள நகை இருந்தது. ஜோசப்பு அதை எடுத்தான்

மோசஸ் சொன்னான் “மரியான் எங்கிட்ட  ‘லே வா, அந்த மத்த ரூமை நீ திற’ன்னு சொன்னான். நாங்க வெளியே போறதுக்குள்ள இருட்டிலேருந்து வாறது மாதிரி அந்தக் கிழவர் செபஸ்தி மேலே பாய்ஞ்சிட்டாரு…”

“ஆபிரகாம் பட்டாளத்தாரா?” என்று நான் கேட்டேன்.

“ஆமா, அவருதான். அவரு சாகல்லை” என்றான் மோசஸ். “செபஸ்தி கீழே விழுந்தான். அவன் சத்தம்போடக்கேட்டு மரியான் ஓடிவந்து இரும்புக் கம்பியாலே அவருக்க வயித்திலே குத்தி எறக்கிட்டான். அவரு கிடந்து துடிச்சாரு. மொசைக்கு தரையெல்லாம் ரத்தம்… செபஸ்தி எந்திரிச்சப்ப ரத்தத்திலே சறுக்கிச்சறுக்கி விழுந்தான்”

அவன் அப்டி ஒரு வெறியோட குத்தினான். ரத்தவாடை குமட்டிட்டு வந்தது. என் கை நடுங்கிட்டே இருந்தது. ‘சீக்கிரம் பூட்டுகளை திறங்கலே’ன்னு ஜோசப்பு சொன்னான்.

நான் இன்னொரு ரூமுக்க பூட்டை உடைச்சேன். அங்கயும் ஒரு பீரோ. அதையும் உடைச்சேன். மரியான் அதிலே இருந்து நகையை எடுத்திட்டிருந்தான். அப்ப ஜோசப்புக்க சத்தம் கேட்டுது. என்னன்னு பதறி ஓடிப்போனா ஜோசப்பு நைலான் பையோட தரையிலே கிடக்கான். அவனை பிடிச்சு உருட்டுதாரு அவரு, ஆபிரகாம் பட்டாளத்தாரு.

செபஸ்திக்கு வெறி ஏறிப்போச்சு. நாயிமாதிரி உறுமிக்கிட்டே பாய்ஞ்சுபோயி அவருக்குமேலே ஏறி பிடிச்சு அந்தாலே போட்டு இடுப்புலே இருந்து கத்தியை எடுத்து கண்டமானிக்கு குத்தினான்.

‘லே, வேண்டாம், போரும்லே, ஆளு செத்துட்டான்…விடு’ன்னு சொல்லி மரியான் அவனைப் பிடிச்சு இளுத்து தூக்கினான்.

‘விடுலே என்னை… இந்த பிசாசு எந்திரிச்சு வந்திட்டே இருக்கு. இதுக்கு சாவு இருக்கா இல்லியான்னு பாக்கேன்’னு செபஸ்தி சத்தம்போட்டான்.

மரியான் ‘போயி கையை களுவுலே… அம்பிடும் ரத்தம்’ன்னு சொன்னான்.

செபஸ்தி பாத்ரூம் கதவை திறக்கிறப்ப ஆபிரகாம் பட்டாளத்தாரு முழிச்சுகிட்டு கையை ஊனி தலையை தூக்கினாரு. “டேய்’னு அலறிகிட்டு பாய்ஞ்சு அவரை மறுபடி குத்தி புரட்டி அந்தால போட்டான் செபஸ்தி. ரத்தத்திலே முங்கி சேத்துலே பன்னி மாதிரி அவரு கிடந்தாரு.

கொஞ்சநேரம் அப்டியே நின்னோம். “செரிலே நடந்தது நடந்துபோச்சு… சோலிய பாப்பம்’னு ஜோசப்பு சொன்னான்.

நாங்க அந்த உடம்ப பாத்துட்டு திரும்பி அறைக்குள்ள போறப்ப அவருக்க கை பாம்பு மாதிரி நீண்டு வந்து தேடுறதை பாத்தோம். ஜோசப்புக்கே வெறி வந்துபோட்டு ‘இவன் என்ன எனம் பிசாசுலே’ன்னு சத்தம் போட்டுட்டு ராடை வச்சு அவர் மண்டையிலே மாறி மாறி அடிச்சான். பல்லைக்கடிச்சு ‘சாவுலே சாவுலே’ன்னு சொல்லிட்டே அடிச்சான்.

அவருக்க கைவிரலு ஒண்ணொண்ணா வில்லறுந்து நிக்குததை பாத்தேன். வாயி திறந்து கண்ணு மலைச்சு கிடந்தாரு.  ‘செத்தான் நாயி’ன்னு சொல்லி துப்பிக்கிட்டு ஜோசப்பு எந்திரிச்சான். ‘வாலே, சோலியை பாப்பம்… போகணும்’னு சொன்னான்.

அவன் காலை எடுத்து வைச்ச அதேச்மயம் அவருக்க கை நீண்டு புழு  மாதிரி எந்திரிச்சுது. “சாவுலே சாவுலேன்னு சொல்லிட்டு ஜோசப்பு மறுபடியும் அவரை அடிச்சு சதைச்சு போட்டான்.

மறுபடி அறைக்குள்ள போனப்ப நாங்க எல்லாருமே நடுங்கிட்டிருந்தோம். நான் ‘என்னலே இது’ன்னு சொன்னேன்.

‘ஏன்?’ன்னு ஜோசப்பு கேட்டான்.

‘என்னமோ தப்பா இருக்கு. அவருக்கு ஏதோ அருளிருக்கு… ஆறுதடவை செத்துட்டு திரும்ப வந்திட்டாரு’ன்னு சொன்னேன்.

‘சும்மா கெடலே. லே, அந்த பைய எடு’ன்னு ஜோசப்பு சொன்னான். நான் பையை எடுத்து குடுத்தேன். பீரோவிலே வெள்ளிப்பாத்திரம் இருந்தது. கொஞ்சம் பட்டுசாரியும் இருந்தது. அதை அவன் எடுக்க ஆரம்பிச்சான்

செபஸ்தியான் எங்கிட்ட ரகசியமா ‘என்னலே சொல்ல வாறே?’ன்னு கேட்டான். ‘

‘ஆறுவரவுன்னா அருளிருக்குன்னு அர்த்தம். ஏழாம் வரவுலே வாறது வேறயாக்கும்’னு நான் சொன்னேன்.

‘வேறன்னா?’ன்னு அவன் கேட்டான்.

‘வேறன்னா…’ன்னு சொல்லிட்டு  மேலே சொல்ல எனக்கு தெரியல்ல. பிறவு. ‘அதுக்குமேலே அமைதின்னாக்கும் வேதத்திலே சொல்லுகது’ன்னு சொன்னேன்.

ஜோசப்பு எங்கிட்ட  ‘ஏல அங்க என்ன முணுமுணுப்பு… சும்மா கெடயுங்கலே, செவுளிலே வச்சு சாத்தீருவேன்’ன்னு சொன்னான். ‘போங்க போயி எல்லா வார்ட்ரோபையும் பாருங்க’

நானும் செபஸ்தியானும் வெளியே போனப்ப நான் ஆபிரகாம் பட்டாளத்தாரை பாத்தேன். செத்து வாயைப்பிளந்து கிடந்தாரு. கண்ணு திறந்து ரெண்டு வெள்ளைச்சிப்பி மாதிரி இருக்கு.

‘செத்துட்டானாலே?’ன்னு செபஸ்தியான் கேட்டான்

‘ஆமா’ன்னு நான் சொன்னேன்.

‘முளுக்க செத்திட்டானா?’ன்னு செபஸ்தியான் மறுக்கா கேட்டான்.

நான் பேசாம நின்னேன்.

‘பக்கத்திலே போயி பாருலே’ன்னு செபஸ்தியான் என்னை உந்தினான்.

நான் ‘இல்ல, போக மாட்டேன்’னு சொன்னேன்.

‘ஏன்?’ன்னு அவன் கேட்டான்.

‘நான் போகமாட்டேன்’ன்னு சொன்னேன்.

‘அப்ப அந்தாள் சாவல்லேன்னு நினைக்குதியா?’

‘ஆறுதடவை எந்திரிச்சிருக்காரு’ன்னு நான் சொன்னேன்.

‘அப்ப மறுபடி எந்திரிப்பாரா?’ன்னு செபஸ்தியான் கேட்டான்.

‘எந்திரிக்கக்கூடாது’ன்னு நான் சொன்னேன். ‘எந்திரிச்சா பிரச்சினைதான்.’

‘ஏலே, என்னலே பிரச்சினை?’ன்னு செபஸ்தியான் பயந்துபோயி கேட்டான்.

‘எனக்கு தெரியல்ல… ஆனா ஏளாம்வரவுன்னாக்கும் பைபிள் சொல்லுகது’ அப்டீன்னு நான் சொன்னேன். “ஏழாம் வரவுக்குப்பிறகு அமைதியாக்கும்”

‘ஏலே அங்க என்ன செய்யுதீக? வார்ட்ரோபை பாத்தியளா?’ன்னு ஜோசப் கத்தினான்.

நானும் செபஸ்தியும் கதவைத் திறந்து படுக்கையறைக்கு உள்ள போனோம். மெத்தையிலே கிளவி செத்துக்கிடந்தா. தலையிலே இருந்து ரெத்தம் மெத்தை முளுக்க பரவியிருந்தது.

‘அய்யோ, ஆருலே கிளவிய கொன்னது?’ன்னு நான் கேட்டேன்.

‘ஜோசப்பு கொல்லச் சொன்னான்லே… கிளவனை கொன்னுட்டு இவளை மட்டும் விட்டுட்டு போனா சாட்சி சொல்லிருவா… வா, வார்ட்ரோபை பாரு’

வார்ட்ரோபிலே துணிக்குள்ள ஒரு பத்துபவுன் செயின் இருந்தது. செபஸ்தி கிளவிக்க  கையிலே இருந்து வளையலையும் மோதிரத்தையும் களட்டினான். கம்மலை களட்ட முடியல்லை. அவன் கத்தியாலே வெட்டி எடுத்துக்கிட்டான்.

நாங்க மறுபடி ஹாலுக்கு வந்தோம். அங்க கிழவருக்க பிணம் அப்டியே கிடந்தது. செபஸ்தி கிட்டக்க போயி குனிஞ்சு பாத்தான். பயந்துபோயி பின்னால வந்து  ‘சிரிக்காரு’ன்னு சொன்னான்.

‘யாரு?’ன்னு கேட்டேன்.

‘இங்கபாரு… சிரிக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.

கிளவருக்க முகம் வலிச்சுகிட்டு பல்லு தெரிஞ்சுது. ‘இது வலிப்பாக்கும்’னு நான் சொன்னேன்.

‘சிரிச்சுக்கிட்டே செத்திருக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.

ஜோசப்பு வெளியே வந்து, ‘பாத்தாச்சாலே? போலாமா?’ன்னு கேட்டான்.

‘பாத்தாச்சுன்னு’ செபஸ்தி சொன்னான். ‘உள்ள ஒண்ணும் இல்ல’

மரியான் வந்து ‘போலாம்லே… எப்டியும் நூத்தியிருபது பவுனு தேறும். முப்பதாயிரம் ரூவாயும் இருக்கு… போரும்… கெளம்பிருவோம்’

‘நேரா போகமுடியாதுலே… உடம்பெல்லாம் ரெத்தம். பட்ரோலுபோலீஸ் பாத்தா நேரா செயிலுதான்’

‘அதுக்காக குளிக்க முடியுமா?. ஈரத்தோட போனா என்னன்னு கேக்கமாட்டானுகளா’

ஜோசப் கிழவரைப் பாத்துட்டு ‘லே, இவன் நம்ம சைசுதான்…இவன் சட்டை இருக்கான்னு பாரு. இவனுக்க பிள்ளைகளுக்க சட்டைகளும் இருக்கும்’னு சொன்னான்.

மரியான் வார்ட்ரோபிலெ போயி நாலு சட்டையை எடுத்துட்டு வந்தான். மார்பிலே வச்சுப் பாத்தப்ப எல்லாமே ஓரளவு சைஸ் சரியா இருந்தது.

‘அப்டீன்னா பேண்டையும் மாத்திருவோம்லே… நேரா களியக்காவிளை தாண்டீருவோம்’னு ஜோசப் சொன்னான். ‘இங்க எங்க போனாலும் ஆட்டைய போட்டுட்டோம்னு பயக்களுக்கு தெரிஞ்சிரும். போட்டுக்குடுத்திருவானுக’

ஜோசப் துணிகளை முழுக்க களட்டிட்டு ஜட்டியோட பாத்ரூமுக்குள்ள போயி நல்லா சோப்பு போட்டு கையையும் முகத்தையும் களுவிட்டு வந்தான். அதுக்குப்பிறகு மரியானும் செபஸ்தியானும் துணிகளை களட்டீட்டு போயி களுவினாங்க. நான் கடைசியா துணியில்லாம போயி சோப்பு போட்டு உடம்பைக் களுவினேன்.

துடைச்சுட்டு புதிய சட்டையும் பேண்டும் போட்டோம். பளைய துணிகளை சுருட்டி ஒரு பிளாஸ்டிக் கவர்லே போட்டு எடுத்துக்கிட்டோம். “ஏல இதை ஒரு கல்லு வச்சு கட்டி தெக்குக்குளத்திலே போட்டிடணும் கேட்டியா? ரத்தவாசம் நாயிக்கு நல்லா தெரியும். போறவளியெல்லாம் குரைக்கும்’னு ஜோசப்பு சொன்னான்.

எடுத்த சாமான்களை பையிலே போட்டுக்கிட்டோம். நான் ரோலிங்ராடையும் மத்த சாமான்களையும் எடுத்தேன். கொல்லைப்பக்கம் வழியா வெளியே வந்தோம். ஜோசப்பு   “ஒரு செக்கண்டு நில்லுங்கலே”ன்னு கையை காட்டினான்.நாங்க நின்னோம்.

ஜோசப்பு “மரியான், நீ நம்மளை யாராவது பாத்திருக்கானான்னு பாரு. செபஸ்தி நீ வீட்டுக்குள்ள எதையாவது மறந்திட்டோமான்னு நினைச்சுப்பாரு… கிளியர் ஆனாத்தான் கெளம்பணும்’னு சொன்னான்.

மரியான் பாத்துட்டு  ‘யாருமில்லை’ன்னு சொன்னான்.

அப்ப செபஸ்தி “அய்யோ!’ன்னு சொன்னான். மூச்சுமாதிரி. ஆனால் அதிலே அப்டி ஒரு பயம் இருந்தது.

“சார், நான் திரும்பிப் பாத்தேன். அங்க ஆபிரகாம் பட்டளத்தாரு நின்னிட்டிருந்தாரு” என்று மோசஸ் சொன்னான்.

‘செத்தவரு?” என்று நான் கேட்டேன்.

“ஆமா சார், செத்து எந்திச்சிட்டாரு”

“ஏழாவது வரவு?”

“ஆமா சார்”

“பிறகு?”

“ஜோசப்பு திரும்பிப்பார்த்தான். ‘லே இவன் என்னலே சாகவே மாட்டானா’ன்னு சத்தம் போட்டுட்டு கத்தியை உருவிட்டு அவரை கொல்லப்போனான்.  மரியானும் ‘கொல்லுலே அவனை’ன்னு கத்திட்டு குத்தப்போனான். நான் ‘வேண்டாம்லே, வேண்டாம்லே, அவரு ஆளுவேறயாக்கும்’னு கத்தினேன். அவனுக கேக்கல்ல” என்று மோசஸ் சொன்னான்.

நீண்டநேரம் அமைதி நிலவியது. மேலே மின்விசிறி சுற்றிக்கொண்டிருக்கும் ஓசை மட்டும் கேட்டது. மோசஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

பிறகு நான் அசைந்து அமர்ந்தேன். “மோசே, அவனுக மூணுபேரையும் யாரோ அங்க மண்டையிலே அடிச்சு கொன்னு போட்டிருந்தாங்க…” என்றேன். “போலீஸு வாரது வரை நீ அங்க உக்காந்திட்டிருந்தே.”

மோசஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“அவங்களை நீதானே கொன்னே?”

“இல்ல சார்.”

“அவங்க நீ சொன்னதைக் கேக்கல்ல, அவங்களை பின்னாலே நின்னு ஏதோ இரும்புக் கம்பியாலே அடிச்சே. இல்லேன்னா சுத்தியலாலே. அந்த ஆயுதம் எங்க? அதைமட்டும் சொல்லிரு.”

“இல்ல சார், அம்மை சத்தியமா இல்லை. பிதாசுதனாவி மேலே சத்தியமா இல்லை.நான் கொல்லல்லை.”

“பின்ன யாரு கொன்னது?”

“அவருதான் சார், ஏழாவதா எந்திரிச்சு வந்தவரு… அவரு ஆளு வேற சார். நான் கண்ணாலே பாத்தேன் சார்.”

நான் என்னை தொகுத்துக் கொண்டேன். மிகமிக இயல்பான குரலில் கேட்டேன்.  “மோசே, ஏழாவதா வந்தது என்ன?”

அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

”நீ பாத்திருக்க்கே”

அவன் தலையை அசைத்தான்.

”சொல்லு நீ பாத்தது என்ன?”

அவனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை, நான் மீண்டும் கேட்டேன் “சாத்தானா?”

அவனுடைய இறுகிய முகத்தை சற்றுநேரம் பார்த்துவிட்டுக் கேட்டேன் “கடவுளா?”

அவன் அசைவில்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நான் கைகளை மார்பில் கட்டியபடி அவனைப் பாத்துக்கொண்டிருந்தேன். மேலே மின்விசிறி சுழன்றுகொண்டிருக்கும் ஒலி. வெளியே நாய்களின் குரைப்பொலி. கார் ஒன்று சீறிச்செல்லும் ஓசை. என்னைச் சுற்றி ஒவ்வொன்றும் அமைதியாக இருந்தது.

***

முந்தைய கட்டுரைவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்