கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

சாதனாவை நான் அந்த மலைக்குன்றுக்கு அழைத்துவந்தபோது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். அவள் திறந்தவெளிக்கு வந்தே நீண்ட நாட்களாகியிருந்தது. பெரும்பாலும் ஆஸ்பத்திரி அறை, வீட்டின் அவளுடைய படுக்கையறை. ஆஸ்பத்திரியின் அறையில் இருந்து இன்னொரு ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் மஞ்சள் சுவர்தான் தெரியும். எங்கள் அப்பார்ட்மெண்டின் எந்த சன்னலைத் திறந்தாலும் வேறு அப்பார்ட்மெண்டின் அடுக்குகள் தெரியும்.

நான் அவளிடம் காலையில் “நாம வெளியே போலாமா?” என்று கேட்டேன்.

எந்த கேள்விக்கும் அவளிடம் எதிர்மறையான ஒரு தயக்கம்தான் வரும் “வெளியேவா?” என்றாள் “பீச்லாம் கூட்டமா இருக்கும்.”

“இது வேற எடம்” என்றேன்.

“கோயில்னாக்கூட கூட்டம்தான்” என்றாள். “அதோட எனக்கு ரெஸ்டாரெண்ட் ஓட்டல் எதுவும் ஒத்துவர்ரதில்லை.  லைட்டபோட்டு கொல்றான். கண்ணுக்குள்ள ஊசியச் செருகினது மாதிரி இருக்கும்.”

“நான் வேற எங்காவது… கொஞ்சதூரம் டிரைவ் பண்ணி போலாம்” என்றேன்.

“டிரைவ் பண்ணியா?” என்று அவள் மீண்டும் தயங்கினாள்.

“சும்மா வா, போய்ட்டு வந்திடலாம்.”

“திரும்பி வர்ரப்ப டயர்டாயிருவோம்.”

”பரவாயில்லை, பக்கத்து சிட்டியிலே ரூம் போட்டு தங்கிட்டு காலையிலே நிதானமா வரலாம்.”

“மாத்திரை எல்லாம் எடுத்துக்கணும்ல?”

“ஆமா, எடுத்துக்கலாம்.”

“அப்ப எமர்ஜென்சிக்கு அங்க பக்கத்திலே எந்த டாக்டர் இருக்காருன்னு கேட்டு தெரிஞ்சுக்கிடணும்ல?”

“நான் கேட்டுடறேன், அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்லை.”

அவள் பெருமூச்சுவிட்டாள். “நான் மெல்ல கெளம்புறேன். அவசரப்படுத்தாதே.”

“இல்லை” என்றேன்.

அவள் மிகமெல்லத்தான் கிளம்பினாள். உண்மையில் அவள் இப்போதெல்லாம் அணியும் தளர்வான ஜிப்பா போன்ற டாப்ஸும் பைஜாமாவும் அணிந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியதை தவிர எதையுமே செய்யவில்லை. மாத்திரைகள் முதல் அனைத்தையும் எடுத்துக்கொண்டது நாந்தான்.

ஆனால் அவள் எரிச்சல் அடைந்தபடியே இருந்தாள். “எல்லாம் எடுத்துவச்சாச்சா? மாத்திரை ஏதாவது விடுபட்டிருக்கப்போகுது… அங்கபோய் அப்றம் கெடைக்காது.”

“பாத்துட்டேன், எல்லாமே இருக்கு.”

“இன்னொரு வாட்டி பாத்திடு.”

“சரி” என் பொறுமையை நான் மிகமிகப் பழக்கப்படுத்தியிருந்தேன். அவள் பெரும்பாலும் அங்குமிங்கும் குழம்பியபடி சுற்றிவந்தாள். பலமுறை கழிப்பறைக்குச் சென்றாள். கண்ணாடியை எங்கோ வைத்துவிட்டாள்.

“என் கண்ணாடியை எங்க வச்சேன்?” என்றாள் எரிச்சலுடன் “எங்கியாவது எடுத்து வச்சிட்டியா? மாட், கண்ணாடி எங்கே?”

“பாத்ரூமிலே இருக்கும்” என்றேன்.

அவள் பெருமூச்சுடன் வந்து சோபாவில் அமர்ந்து  “எதுக்கு இப்ப?” என்றாள்.

“எனக்கே எங்காவது போகணும்போல இருக்கு.”

“சரிதான்… நான் அட்மிட் ஆயிடறேன். நீ வேணா போய்ட்டு வாயேன்.”

“இல்லை, அது சரியா இருக்காது. என் மைண்ட் ஃப்ரியா இருக்காது.”

“எங்க போறதுன்னு தெரியுமா?”

“சும்மா கூகிள்ல பாத்திட்டிருக்கிறப்ப ஒரு மலைக்கோயிலை பாத்தேன்… ஏகாந்தமா இருந்தது. அங்க போகணும்னு தோணிச்சு. அத அப்டியே தவிர்த்தாச்சு. ஆனா கனவிலே வந்து வளந்திட்டே இருக்கு…”

“எங்க இருக்கு அது?”

“விழுப்புரம் பக்கம்.”

“அவ்ளவு தூரமா?”

“போயிடலாம்… நீ ஒரு தூக்கத்தைப் போடு.”

அவள் பெருமூச்சுவிட்டாள். “முன்னெல்லாம் காரிலேயே டெல்லி போவேன்… நானே டிரைவ் பண்ணி நாலுவாட்டி போயிருக்கேன்.”

காரில் ஏறி அமர்ந்ததுமே “சீட் கீழே போக மாட்டேங்குது” என்றாள்.

“இவ்ளவுதான் போகும்… காலைநீட்டிக்க, ரிலாக்ஸா இருக்கும்” என்றேன்.

கார் கொஞ்சம் ஓடியதுமே தூங்கிவிட்டாள். கிளம்பும்போது பதற்றத்தை குறைக்க ஏதாவது மாத்திரை போட்டிருப்பாள்.

டிசம்பர் மாதம், மழைமூட்டம் இருந்தது. மங்கலான வெளிச்சம். நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகமாக உணர்ந்தேன். மெல்லிய குரலில் எண்பதுகளின் பாடல்களை ஓடவிட்டேன். என் நஸ்டால்ஜியா அது. ‘தனிமையிலே ஒரு ராகம் உருவாகும்…’

இருண்டு இருண்டு வந்தது. நெடுஞ்சாலையில் நேர்முன்னால் கருமுகில் நிற்பதுபோல. அதற்குள் சென்று நுழைந்தேன். மழை காரின் கூரையையும் முகப்புக் கண்ணாடியையும் அறைந்தது. காருக்குள் பாடல் ஒலிக்கும்போது வைப்பர்கள் பாடலுக்கு ஏற்ப சரியான தாளத்தில் நடனமாடுவதாகத் தோன்றுவது ஓர் இனிய மாயை.

அதே வேகத்தில் மழையிலிருந்து வெளியேறிவிட்டேன். இளவெயிலில் தார்ச்சாலை பளபளத்தது. டீசல்தடங்களில் வண்ணங்கள் மின்னின. நனைந்த பரப்புகள் எல்லாம் ஒளிர்ந்தன. நேர் முன்னால் மிகப்பெரிய வானவில்லை பார்த்தேன்.

“சாதனா,சாதனா” என்றேன்.

“என்ன?” என்றாள்.

“அங்க பாரு…”

”என்ன?”

“வானவில்… பாரு.”

அவள் பார்த்துவிட்டு “டைம் என்ன ஆச்சு?” என்றாள்.

“பத்தரை.”

“எப்ப போய்ச் சேர்வோம்?”

“மத்தியான்னத்துக்குள்ள போயிடலாம்.”

“எங்கயாவது நிப்பாட்டு…”

நான் “சரி” என்றேன்.

ஓட்டலில் டீ சாப்பிட்டேன். அவள் மீண்டும் தூங்கிவிட்டாள். நான் மீண்டும் பாடல்களில் மூழ்கினேன்.  ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. பழையபாடல்களை கேட்டபடி காரில் விரையும்போது காலத்தில் பின்னால் அம்பென ஏவப்பட்டுவிட்டதுபோல. சென்று சென்று இழந்த அனைத்தையும் அடைந்துவிடலாம் என்பதுபோல.

எளிமையான செண்டிமெண்டுகள். நானும் ஒருகாலத்தில் செண்டிமெண்டுகளை பார்த்து நமுட்டுப்புன்னகை பூத்தவன்தான். ஆனால் வாழ்க்கை என்பது விரும்பியோ விரும்பாமலோ இழந்து இழந்து கடந்து கடந்து செல்வது என்று தெரிந்துகொண்டபின், ஒன்றுமே மீளாது என்று அகம் கடைசியாக ஏற்றுக்கொண்டுவிட்டபின், அவ்வளவுதானா அவ்வளவுதானா என்று ஏங்கத் தொடங்கிவிட்டபின், தனிமை அத்தனை அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டபின் செண்டிமெண்டுகளைப் போல இனியவை வேறில்லை. ரத்தச்சுவை கொண்டவை. ஆனால் இனிப்பவை. மிச்சமிருப்பவை அவை மட்டும்தான் என்றால் அவற்றை சுவைப்பதில் தவறே இல்லைதான்.

விழுப்புரத்தில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டோம். சாதனாவுக்கு வீட்டிலேயே பார்லி கஞ்சி கொண்டு வந்திருந்தேன். அவள் பால் குடிக்கக்கூடாது. அங்கிருந்து பொன்னூர் வழியாகத் திரும்பி தீர்த்தமலை என்று அழைக்கப்பட்ட இந்தக் குன்றை வந்தடைந்தோம்.

காரிலிருந்து இறங்கியபோது சாதனா களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் ஓரங்கள் சுருக்கம் விழுந்திருந்தன. பத்துவயது அப்பயணத்திலேயே கூடிவிட்டதுபோல.

நான் மருந்துகள் தண்ணீர் எல்லாம் அடங்கிய தோள்பையை மாட்டிக்கொண்டேன்.

சாதனா இடுப்பில் கைவைத்து நின்று சுற்றிலும் பார்த்தாள். “எந்த இடம் இது?”

“தீர்த்தமலை… ஜினகிரின்னும் பேரு இருக்கு. மேலே ஒரு ஜைனக்குகையும் சின்ன கோயிலும் இருக்கு. ஒரு துர்க்கை கோயிலும் இருக்கு. ஒரு சின்ன குளமும் இருக்குன்னு போட்டிருக்கான். அங்கேயே ஊறி தேங்குற தண்ணி அதிலே.”

“ஏறணுமா?”

“கஷ்டம் இல்லை.”

“எதுக்கு அவ்ளவு உயரம்?”

“தெரியல்லை. ஆனா நீயும் நானும் அங்க நின்னிட்டிருக்கிறது மாதிரி ஒரு கனவு வந்தது…”

“ஓ” என்றாள் ஆர்வமில்லாமல்.

மழைமூட்டம் இருந்தது. வானில் மேகமென திரள் ஏதுமில்லை. ஆனால் மொத்தவானமுமே கரிய துணியாலான குடைபோலிருந்தது.

“வெயில் இல்லை… ஈஸியா ஏறிடலாம்” என்றேன்.

“ஆமா, காத்துகூட பிளஸண்டாத்தான் இருக்கு.”

அகலமான கருங்கல் படிகள். 1969ல் ஆதிநாத் ஜெயின் டிரஸ்டால் கட்டப்பட்டவை என்று கல்வெட்டு இருந்தது. குட்டையாக பரவி கிளைகளை தலைதட்டும் உயரத்திற்கு நீட்டியிருந்த ஓர் ஆலமரம். அதன் வேர்கள் பாறையிடுக்குகளில் பற்றி ஏறியிருந்தன. விழுதுகள் காற்றிலாடின. ஆலமர விழுது இவ்வளவு சன்னமாக இவ்வளவு மென்மையாக இருக்கும் என நான் நினைத்திருந்ததில்லை.

“சடைமுடி மாதிரி இருக்கு” என்றேன்.

சாதனா திரும்பிப் பார்த்து புன்னகைத்து “ஆமா” என்றாள்.

படிகள் உயரமற்றவை. சாதனாவால் இயல்பாக ஏறமுடிந்தது. “பத்துபடிக்கு ஒருதடவை நின்னுக்கோ. மெல்ல மெல்ல போலாம். ஒண்ணும் அவசரம் இல்லை” என்றேன்.

மேலே செல்லச் செல்ல அந்த இடத்தின் சூழல் எங்கள் மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டது. மேலிருந்து உதிர்ந்து குவிந்தவை போல பெரிய பெரிய பாறைகள் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை. அவை மேலும் குவிந்து எழுந்தவை போல ஆங்காங்கே குன்றுகள். பாறைகளுக்கு நடுவே பச்சைக்குடைபோல கருவேல மரங்கள். தொடுவானம் அப்படி துல்லியமான மாபெரும் வளையமாக அமைந்து நான் அதுவரை பார்த்ததில்லை.

படி ஏறியதன் களைப்பால் சாதனா மெல்லிய வியர்வையுடன் மூச்சிரைத்தாள்.

“களைப்பா இருக்கா? தண்ணி வேணுமா?”

“ம்” என்றாள்.

தண்ணீர் குடித்தபின்  “போலாம்” என்றாள்.

படியை ஒட்டியே சில ஆலமரங்கள் நின்றன. அந்த படிகள் கட்டப்பட்டபோது நடப்பட்டிருக்கலாம். கெட்டியான இலைகளுடன் கிளைகள் பரந்து நின்றன. இளமையான கன்றுகள்.

“சின்னவயசிலே ஆலம்பாலை மெல்வோம்… சூயுங் கம் மாதிரி” என்றாள் சாதனா.

“ஆலம்பால்னா?”

“பால் உறைஞ்ச அரக்கு.”

“ஓ” என்றேன். “இப்ப பால் இருக்குமா?”

“இருக்கும், ஆனா உறையறதுக்கு ஒருநாள் ஆகுமே.”

படிகள் மேலே சென்று திறந்தவெளி போன்ற மலையுச்சியை அடைந்தன. அங்கே முழுவட்டமாக வானம் சூழ்ந்திருந்தது. தெற்கே தொடுவான் நோக்கிய சரிவில் புகைக்குவியல் எழுந்ததுபோல மேகங்களை கண்டேன்.

“அங்கேருந்து மழை வருதுன்னு நினைக்கிறேன்” என்றேன்.

“இப்பல்லாம் வராது, ராத்திரி வந்தாலும் வரும்” என்று சாதனா சொன்னாள்.

மலை மேல் ஒரு பெரிய மைதானம் போல பாறைப்பரப்பு. அது கிழக்கிலிருந்து சீராகச் சரிந்து மேற்கே சென்று முடிந்தது. கிழக்கு பாறை மேடு போல எழுந்து தலைக்குமேல் நின்றது. சரிவின் விளிம்பில் ஆலமரங்கள் எழுந்து தெரிந்தன. கிழக்குமேட்டில் இரண்டு ஆள் உயரமான கோயில் தெரிந்தது. நான் நினைத்ததுபோல பழைமையான கோயில் அல்ல. சிமிண்டில் கட்டப்பட்ட சமீபகால கோயில்.

கோயிலுக்கு முன்னால் குளம் இருந்தது. ஆனால் அது ஒரு குட்டைதான். மிகக்கொஞ்சமாகத்தான் தண்ணீர் இருந்தது. பாசிபடிந்து பச்சைநிறமாக மாறியிருந்த நீர் ஏதோ ஆயுர்வேத தைலம் போலிருந்தது. குளத்திற்குள் செல்ல பாறையிலேயே சிறிய ஒற்றைக்காலடிப் படிகள் வெட்டப்பட்டிருந்தன.

“ஜைனக்கோயில் எங்க?”

“ஜைனக்கோயில் இல்லை, குகைன்னு சொன்னாங்க” என்றேன்.

“அந்தப் பக்கம் பாறையிலே ஏதோ கம்பி மாதிரி தெரியுது.”

மடிந்து எழுந்திருந்த கிழக்குப்பாறையில் கம்பியால் படி போல செய்யப்பட்டிருந்தது. அந்த மடிப்புக்குள் குகை இருக்கவேண்டும்.

“ஏறிடுவியா?”

“முடிஞ்சா ஏறுறேன்… இல்லேன்னா பரவாயில்லை. இந்த எடம் நல்லாயிருக்கு.”

நாங்கள் அந்த கம்பி ஏணியை அடைந்தோம். நான் மேலேறி கையை நீட்டினேன்

“இல்ல பரவாயில்லை” என்று அவள் மேலேறினாள். மூச்சுவாங்க வந்து நின்றாள். கழுத்தில் நரம்பு துடித்துக்கொண்டிருந்தது.

“படபடப்பா இருக்கா?”

“இல்ல, பரவாயில்லை”

அங்கே பாறை மடிந்து உள்ளே சென்றிருந்தது. மேலிருந்து நீர்வழிந்த தடம் காவிநிறத்தில் இருந்தது. உள்ளே பாறையிலும் சிவப்பு பட்டைகள் வழிந்திருந்தன. பாறையில் நான்கு படுக்கைத் தடங்கள் வெட்டப்பட்டிருந்தன.

“இதான்” என்று நான் சொன்னேன்.

“இதுலே படுப்பாங்களா?” என்று அவள் கேட்டாள்.

“அப்டித்தான் படிச்சேன். இங்க ஒரு குருவும் மூணு சிஷ்யங்களும் இருந்திருப்பாங்க…”

“எதுக்காக இந்த தனிமையிலே இருக்கணும்?”

“அப்பதான் தங்களைத் தாங்களே கூர்ந்து கவனிச்சுக்க முடியுமாம்.”

நாங்கள் கீழிறங்கி வந்தோம். அவள் “மெடிடேஷனுக்கு ஏத்த இடம்தான்… அப்டியே பறந்திரலாம்போல இருக்கு” என்றாள். அவள் ஆடை காற்றில் படபடக்க வண்ணத்துப்பூச்சி போல தெரிந்தாள்.

அவள்  “சட்டை புடைச்சு குண்டா தெரியறே” என்றாள்.

“நிஜமாவே குண்டுதான்… இப்பல்லாம் எந்த எக்ஸஸைஸும் இல்லை.”

“நான் உன் லைஃபை அப்டி ஆக்கிட்டேன் இல்ல?”

“இங்க நாம செல்ஃப் பிட்டியை வளத்துக்கிறதுக்காக வரலை.”

“ஸாரி.”

அந்த துர்க்கை ஆலயத்தை அடைந்தோம். அதற்குள் வெள்ளை டைல்ஸ் மேடையில் ஒரு சிறிய துர்க்கைச்சிலை இருந்தது.

“அங்க உக்காரலாம்” என்று அவள் ஆலமரத்தை சுட்டிக்காட்டினாள். அதுக்குக் கீழே நல்ல பாறைகள் இருக்கு.

“இங்க குரங்கு இருக்கா?” என்றேன்.

“வழக்கமா இந்தமாதிரி எடங்களிலே இருக்கும்… இங்க யாரும் வர்ரதில்லை போல.”

ஆலமரத்தின் அடியில் இருந்த பாறைகளில் வெள்ளையாக பறவை எச்சம் பரவியிருந்தது. எச்சம் இல்லாத ஒரு பாறையில் அமர்ந்து நான் ஷூவை கழற்றி கால்விரல்களை நெளித்துக்கொண்டேன்.

சாதனா “நான் பாத்ரூம் போய்ட்டு வர்ரேன்” என்றாள்.

“இங்கயே போ…”

“இங்கயா… இங்க கோயில் இருக்கு.”

“சரி.”

அவள் பாறையில் கைவைத்து ஆலமரத்தின் வேர்கள்மேல் இறங்கி அப்பால் சென்றாள். பின்னர் அங்கிருந்து “மாட், இங்க வா” என்றாள்.

“என்ன?”

“இங்க ஒரு சின்ன கேவ் டெம்பிள்.”

நான் இறங்கி ஆலமரத்தைச் சுற்றிக்கொண்டு செல்வதற்குள் அவள் ஒரு பாறை இடுக்குக்குள் இருந்த அந்த கோயிலை அடைந்துவிட்டாள். அருகே போனபோதுதான் தெரிந்தது. அது ஒரு பெரிய குகைக்குள் நுழைவதற்கான வாசல். சரிந்த பாறைப்பரப்பில் கையை ஊன்றி சற்றே சரிந்து நடந்துதான் உள்ளே போகவேண்டும். கோயில் என்பதைக் காட்ட காவிச்சிவப்பு செங்குத்துப் பட்டைச்சாயம் அடித்திருந்தார்கள்.

ஆனால் உள்ளே குகை மிகப்பெரிதாக இருந்தது. அது வெளியிலிருந்தே தெரிந்தது. பேசும்போது உள்ளிருந்து முழக்கமான எதிர்வினை எழுந்தது.

“ரொம்ப பெரிய கேவ், மாட்” என்று சாதனா சொன்னாள். கையூன்றி உள்ளே பார்த்து “பெரிசா இருக்கு… மைதானம் மாதிரி உள்ள எடமிருக்கு” என்றாள்.

“இதைப்பத்தி கூகிள்ல போடவே இல்லை” என்றேன்.

“வந்தவன் பாத்திருக்க மாட்டான்” என்றாள். “ஸோ ஹ்யூஜ்… ஒரு பெரிய சர்ச் ஹால் அளவுக்கு பெரிசு.”

“உள்ள போகணுமா?” என்றேன்.

“ஏன் போனா என்ன?”

“வௌவால் இருக்கப்போகுது.”

“இருக்காது… இது திறந்திருக்கு. உள்ள நல்ல வெளிச்சமும் இருக்கு.”

அவள் உள்ளே போனாள். நான் தொடர்ந்து போனேன். இயற்கையான குகை. உள்ளே பாறையாலான சுவர்கள் சரிந்து மேலேறிச் சென்றன. மேலே தேனீக்கூடுகள் தொங்கின. அங்கிருந்து பார்க்க சிறிய கரியபைகள் போல தெரிந்தன.

“தேனீக்கூடுதானே அதெல்லாம்?”

“மாட், அங்க பார்.”

அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த நான் திகைத்து நின்றுவிட்டேன். அறியாமலேயே கையை ஊன்ற சுவரை தேடினேன், அது மிக அப்பாலிருந்தது.

அங்கே குகையின் ஒரு பகுதி மேலும் ஆழமாக சென்றது. அதன் சுவர்களில் சுதைபூசி மேலே வளையமாக கொண்டுசென்று இணைக்கப்பட்டு ஒரு கருவறைபோல ஆக்கப்பட்டிருந்தது. அதற்குள் மூன்று ஆள் உயரமான மிகப்பெரிய புடைப்புச்சிலை அமர்ந்திருந்தது. சட்டென்று விஸ்வரூபமாக கண்முன் தோன்றியதுபோல.

கொடூரமான சிலை. எலும்புருவமான உடல். மண்டையோடு போன்ற முகத்தில் வெறிநிறைந்த பெரிய வட்டக்கண்கள். உரக்கச் சிரிப்பதுபோல இளித்த வாயில் வெண்பற்கள். கழுத்தில் ஓர் வளையம் தவிர ஆபரணங்கள் இல்லை. அதற்கு சரிகை வைத்த கரிய பட்டாடையை சுற்றியிருந்தனர்.

என் நெஞ்சின் படபடப்பை உணர்ந்தேன். சாதனா அதை நோக்கி சென்றாள். நான் “சாதனா, வேண்டாம் போயிருவோம்” என்றேன்.

“இரு” என்றாள்.

“எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றாள். அந்தச் சிலை காலடியில் ஓர் உடலை போட்டு மிதித்துக்கொண்டிருந்தது. மடியில் எதையோ பரப்பியிருந்தது. அதன்மேல் கரிய புடவை மூடியிருந்தமையால் சரியாகத் தெரியாது. குழந்தையா என்ன?

நான் அருகே சென்றேன். என் கைபட்டதும் சாதனா திடுக்கிட்டு திரும்பி பின்பு விலகிக்கொண்டாள்.  “மடியிலே என்ன, குழந்தையா?” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

நான் கூர்ந்து பார்த்தேன். மடியில் கிடந்தது இன்னொரு பெண். கைவளைகளும் கால்சிலம்புகளும் அண்ணாந்த முகமும் தெரிந்தன. ஒரு கணத்தில் கடுங்குளிர் மூச்சுவழியாக நெஞ்சுக்குள் போனதுபோல உணர்ந்தேன், அந்த கொடுந்தெய்வம் மடியில் கிடந்தவளின் நெஞ்சை இரு கைகளாலும் பிளந்துகொண்டிருந்தது. வேறு இரண்டு கைகளால் குடலை உருவி மாலையென வளைத்து பிடித்திருந்தது.

“போயிடுவோம்” என்று நான் சொன்னேன்.

சட்டென்று சாதனா தளர்ந்து குழைந்து தரையில் விழுந்தாள். நான் திடுக்கிட்டு எவரையாவது அழைக்க விரும்புபவன் போல “அய்யோ அய்யோ” என்று கூவியபடி அங்குமிங்கும் அலைமோதிச் சுழன்றேன். அதன்பின் தன்னிலை உணர்ந்து பையை கீழே வைத்து அதிலிருந்து நீரை அவள் முகத்தில் தெளித்தேன்.

அவள் இமைகள் அசைந்தன. விழித்துக்கொண்டதும் கையூன்றி திரும்பி அந்தச் சிலையை பார்த்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“தண்ணியைக் குடி” என்றேன். அவள் என் குரலை கேட்கவில்லை. அவளுக்கு நானே தண்ணீரை ஊட்டினேன். அவள் குடித்து முடித்ததும் சற்று ஆறுதலடைந்தாள்.

“வா, போயிருவோம்” என்றேன்.

அவளே கையூன்றி என் தோளைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். அந்த சரிந்த வாசல் வழியாக வெளியே வந்தோம். அவள் உடல் குளிர்ந்திருந்தது. முழு எடையும் என்மேல் இருந்தது.

“கீழே போயிருவோம்” என்றேன்.

“உக்காரணும்” என்று அவள் சொன்னாள்.

அங்கிருந்த படியிலேயே அமர்ந்தாள். என்னால் அமர முடியவில்லை. நான் அவள்முன் நின்றேன். என் கால்கள் துணிபோல குழைந்தன.

“ஐ யம் ஸாரி சாதனா… இப்டி எதிர்பார்க்கலை… பிளஸண்டான இடம்னு போட்டிருந்தது” என்றேன்.

அவள் தலைசரித்து வளைந்து கீழே இறங்கிய வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் அந்த இடத்தை பார்த்தபோது மீண்டும் பதற்றத்திற்கு ஆளானேன். எப்படிப்பட்ட இடம். எவ்வளவு தனிமை. எதை நம்பி அவ்வளவு தொலைவு வந்தேன்!

“மாட்” என்று சாதனா அழைத்தாள். “அங்க அந்த தெய்வத்தோட மடியிலே கிடந்தது நான்தான்.”

“சும்மா பேசாதே, போயிருவோம்.”

“நோ, ஒரு செக்கண்ட். கனவுமாதிரி. இல்ல வேறொரு ரியாலிட்டி மாதிரி. அப்டியே நேர்ல பாத்துட்டேன்.”

“ப்ளீஸ்” என்றேன் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.

“அது நான்தான்… அந்த தெய்வதோட மடியிலே… அந்த தெய்வம் இருக்கே… அதோட விஸ்வரூபம்…”

“நாம வேறே எதைப்பத்தியாவது பேசலாமே… பிளீஸ்.”

“கமான் மாட், என்னாலே வேற எதைப்பத்தியும் யோசிக்கவோ பேசவோ முடியாது”என்று அவள் சொன்னாள். “யூ நோ, அந்த தெய்வம் என்னன்னு.”

“அது இங்க உள்ள ஏதாவது தெய்வமா இருக்கலாம்” என்றேன்.

“பிணத்தை மிதிச்சிட்டு இருக்கு….. அப்டீன்னா அது சாமுண்டிதேவி”

“இல்லை, இது ஏதோ கிராமத்தெய்வம்… சிலையைப் பார்த்தா ரியலிஸ்டிக்கா இருக்கு” என்றேன். “கையிலே வழக்கமான ஆயுதங்கள் ஒண்ணும் இல்லை.”

“ஆமா, ஆனா அதான் டெம்ப்ளேட்” என்று சாதனா சொன்னாள். “எதுவா இருந்தா என்ன? அதைப்பத்தி தேடவேண்டியதில்லை. எனக்கு ஒரு விஷன் கிடைச்சிருக்கு. அது போதும்.”

“சாதனா ப்ளீஸ் போயிடலாம்” என்றேன்.

“மாட், எதுக்கு அவ்ளவு குரூரம்? அவ்ளவு வெறி? நான் என்ன பண்ணினேன் அப்டி? எனக்கும் அந்த தெய்வத்துக்கும் என்ன பகை அப்டி?” கன்னங்களில் கையை வைத்து நடுங்கி,  “குடலை மாலையா உருவி… அதோட கையிலே இருக்கிறது கரு… வயித்திலே இருக்கிற சின்ன குழந்தை” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளே புலம்பி முடிக்க விட்டுவிடவேண்டியதுதான்.

“நான் என்ன பண்ணினேன்? இதைத்தான் நினைச்சு நினைச்சு மறுகிட்டிருக்கேன். உண்மையிலே வலிகூட பெரிசில்லை. இந்த நினைப்புதான் போட்டு அரிச்சிட்டிருக்கு. ராத்திரியிலே தூக்கம் போச்சுன்னா பிறகு அவ்ளவுதான்… மண்டை கொதிக்கும். நரம்பெல்லாம் வெடிச்சிரும்போல இருக்கும் அப்டியே எந்திரிச்சு பால்கனியிலே இருந்து குதிச்சிரணும்னு தோணும்… அப்டி ஒரு மீனிங்லெஸ்நெஸ். வெறுமை…”

நான் தலையசைத்தேன்.

“ஏதாவது ஒரு லாஜிக் இருக்கணும்ல? இவ்ளவுதான்னா எல்லாத்துக்கும் என்ன அர்த்தம்? எதுக்கும் அர்த்தமில்லேன்னா அதுக்கு மட்டும் என்ன அர்த்தம்? நான்ஸென்ஸ்… ஷீர் நான்ஸென்ஸ்” என்று சாதனா தலையை உலுக்கினாள். கைகளில் தலையை தாங்கி குறுகி அமர்ந்திருந்தாள்.

“அப்டியே பின்னாலே வந்திட்டே இருந்திருக்கு. சத்தமே இல்லாம. நிழல் மாதிரி. இரையை பிடிக்கிற மாதிரி பிடிச்சிட்டுது. மெடிக்கல்நேம் இப்ப தெளிவா தெரிஞ்சாச்சு. ஆனால் அதிலே ஒண்ணும் அர்த்தமில்லை. அது ஒரு வழி, அவ்ளவுதான். அதுக்கு என்ன வேணும்? ஏன் என் பின்னாலே வந்தது?”

அவள் நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். என் நெஞ்சில் கடுமையான வலிபோல துயரம் எழுந்தது. அலறிவிடவேண்டும் என்று தோன்றுமளவுக்கு அழுத்தம். அவள் கண்களின் கண்ணீரை இப்போதெல்லாம் குறைவாகவே பார்க்கிறேன். எப்போதாவது அதைப் பார்க்கையில் எனக்குள் ஒரு வெறி எழும். கத்தி எடுத்து என் சங்கை அறுத்துக்கொண்டு விழுந்துவிடவேண்டும் என்பதுபோல. வெளியே இறங்கி கண்ணில்பட்ட அனைவரையும் கொன்று குவிக்கவேண்டும் என்பதுபோல.

”இப்ப அதை நேருக்குநேர் பாத்துட்டேன்… இதோ இங்க. விஸ்வரூபமா. அது இல்ல அவள்” என்று அவள் சுட்டிக்காட்டினாள். “அவளுக்கு என்ன வெறி அப்டி? யப்பா! அந்த கண்ணை பாத்தா….” அவள் உடலை உலுக்கிக்கொண்டாள்.

“நாம கெளம்பிடலாம் சாதனா” என்றேன்.

அவள் சட்டென்று எழுந்தாள். ”மாட், நான் அந்த குகைக்குள்ள போய்ட்டு வாரேன்.”

“வேண்டாம், ப்ளீஸ்.”

“என்னாலே அவளை நேருக்குநேர் பார்க்க முடியுமான்னு பாக்கிறேன். பாத்தாகணும், ஒருவேளை அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன்.”

“நானும் வர்ரேன்…”

‘நான் மட்டும்தான் போகணும்…”

“சாதனா பிளீஸ்.”

“இங்க இரு… ஒருமணிநேரத்திலே நான் வரலைன்னா உள்ள வா.”

அவள் எழுந்து திரும்பிச் சென்றாள். நான் அவள் போவதை பார்த்துக்கொண்டு செயலற்று நின்றேன். அவளுக்குப் பின்னால் போகலாமா? அவளை அறியாமல் கண்காணிக்கலாமா?

ஆனால் என்னால் அசையவும் முடியவில்லை. நெஞ்சின் எடை தாளமுடியாமல் மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். படிகளில் அமர்ந்து கொண்டேன். சற்றுநேரம் கழித்து எழுந்தேன். நிற்கமுடியாமல் மீண்டும் அமர்ந்தேன்.

தெற்கே மேகக்குவியல் பெருகி மேலெழுந்திருந்தது. அதில் சிறிய மின்னல்கள் வெட்டின. ஷார்ட் சர்க்யூட் ஸ்பார்க்குகள் போல. உறுமல்கள் போல இடியோசை எழுந்தது.

மீண்டும் எழுந்து நின்றேன். குகைக்குள் போய் பார்க்கலாமா? கால்மணிநேரம் ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. செல்போனில் சாமுண்டி என்று அடித்து தேடினேன். ஏறத்தாழ அதே போன்ற தெய்வங்கள் வந்தன. வட இந்தியாவில் பல கொடூரமான தோற்றம் கொண்ட சாமுண்டி கோயில்கள் இருந்தன. மண்டையோட்டு முகம், கொடூரமான சிரிப்பு கொண்டவை.

ஆனால் அந்த சிலைபோல மடியில் உடலைப் போட்டு கிழித்துக் கொண்டிருக்கும் தெய்வம் வேறு எங்கும் தென்படவில்லை. சாமுண்டி சாக்தமதத்தில் சப்தமாதாக்கள் என்னும் ஏழு அன்னை தெய்வங்களில் ஒன்று. சௌர மதத்தில் அறுபத்துநான்கு யோகினி தேவியர்களில் ஒருத்தி. பழங்காலத்தில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகைகூட நரபலி கொடுப்பதற்கானதாக இருக்கலாம்.

ஒருமணிநேரம் ஆகப்போகிறது என உணர்ந்து நான் பாறையில் இறங்கியபோது குகைக்குள் இருந்து சாதனா வெளியே வந்தாள். அருகே வந்து  “போலாம்” என்றாள்.

எனக்கு அவளுடைய சுறுசுறுப்பு ஆச்சரியமளித்தது. அவள் முகமே பத்து ஆண்டு இளமை அடைந்தது போலிருந்தது. கண்கள் மிக நன்றாகத் தெளிந்திருந்தன.

படிகளில் இறங்கும்போது அவளிடம் அதைப்பற்றி எதையாவது கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கேட்கக்கூடாது, அப்படியே விட்டுவிடவேண்டும். அதுவே முறையானது. ஆனால் என்னால் கேட்காமலும் இருக்கமுடியவில்லை. என் நாக்குவரை வந்த கேள்வியை விழுங்கினேன்.

அவள் சுற்றிலும் நோக்கியபடி நடந்துவந்தாள். நடையில் தளர்வு இல்லை. மெல்லிய மூச்சாக ஏதோ பாட்டை முனகுவதாகக்கூடத் தோன்றியது.

“நல்ல கூல்பிரீஸ் இல்ல?” என்றாள்.

“ஆமா” என்று நான் சொன்னேன்.

மின்னல் வெட்டியது. ஆனால் கண்முன் நிறைந்திருந்த வெளிச்சம் சற்று வெளிறி அணைந்ததுபோலத்தான் அது இருந்தது. இடியோசை பாறை ஒன்று உருண்டதுபோல ஒலித்தது.

”மழையிலே இங்கே இருந்தா நல்லா இருக்கும்” என்று சாதனா சொன்னாள்.

“நாம் போயிடுவோம்… இந்த எடம் ரொம்ப லோன்லியா இருக்கு” என்றேன்.

காருக்கு வந்ததும் அவள் நிமிர்ந்து மலையை பார்த்தாள். அங்கிருந்து பார்த்தால் படிகள் ஏறிச்சென்று வானில் முடிவதுபோல தோன்றியது “நைஸ் பிளேஸ்” என்றாள்.

நான் காரை திறந்துவிட்டு சுற்றிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். அவள் முன் இருக்கையில் அமர்ந்து குனிந்து லிவரை விடுவித்து இருக்கையை நிமிரவைத்துக்கொண்டாள்.

“போலாமா?” என்றேன்.

அவள் குனிந்து மலையை பார்த்துக்கொண்டு “நைஸ் பிளேஸ்” என்றாள்.

“இன்னொருவாட்டி வருவோம்.”

“ஓ நோ” என்று சிரித்தாள். “இன்னொரு வாட்டியா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.”

கார் தார்ச்சாலைக்கு வந்ததும் வேகத்தை கூட்டினேன். “விழுப்புரத்திலே தங்கணுமா?” என்றேன்.

“வேண்டாம், ராத்திரிக்குள்ள போயிடலாம்ல?”

“ஆமா.”

“தென் ஓக்கே.”

“செம மழை பெஞ்சிருக்கு” என்று சாதனா சொன்னாள் “எல்லாமே கழுவி துடைச்சு வச்சது மாதிரி இருக்கு.”

“ஆமா” என்றேன்.

“மேகம்லாம் என்ன ஒரு டிசைன்ஸ்…. அப்டியே ஜொலிக்குது இல்ல?” என்றாள். “சின்ன வயசிலே எனக்கு பிடிச்ச வெளையாட்டுன்னா கிளாஸ் மெட்டீரியல்ஸுக்குள்ள கண்ணை வச்சு பார்த்துட்டே இருக்கிறது. பாட்டில்கள் பேப்பர் வெயிட்டுகள்…வேற ஒரு உலகம் மாதிரி இருக்கும். அப்டியே கற்பனை பண்ணி உள்ள போயிடுவேன். அத மாதிரி இருக்கு. ஹெவென்ஸ்!”

நான் லாரி ஒன்றை கடந்தேன். சாதனா குனிந்து அந்த டிரைவருக்கு கைகாட்டினாள். “அந்தாள் ஃபன்னியா மீசை வச்சிருக்கான். வால்ரஸ் மாதிரி” என்றாள் “ஆனா பாக்க நல்லாத்தான் இருக்கு”

சாலை நனைந்து கருமையாக இருந்தது. கரிய நதிபோல ஒழுகி காருக்கு அடியில் புகுந்து மறைந்தது.

“ஒரு பெரிய பெல்ட் மாதிரி ஓடிட்டு இருக்கு ரோடு” என்றாள். “எல்லாமே பாக்க ஆரம்பிச்சா அழகா ஃபன்னியா ஆயிடுது இல்ல?”

“ஆமா” என்றேன்.

கார் வேகம் கூடியது. நான் அதன் சீரான ஓட்டத்துக்கு ஏற்ப மெல்ல மெல்ல அமைதியடைந்தேன். “என்னாச்சு?”என்றேன். என்னால் கேட்காமலிருக்க முடியவில்லை.

“என்ன?”

“மேலே என்ன பாத்தே?” என்றேன் “குகையிலே.”

“ஒண்ணுமில்லை.”

“வாட்?” என்றேன் மீண்டும்.

“கமான் மாட், அதை இன்னொருத்தர்ட்ட சொல்ல முடியாது. ஹெல்தியான ஒருத்தர்ட்ட சொல்லவே முடியாது.”

“ஓக்கே.”

“டோண்ட் பி ஆங்ரி… என் செல்லக்குட்டப்பன் இல்ல?”

“ஓக்கே” என்று புன்னகைத்தேன்.

“லாங் லிவ் வித் பீஸ் டியர்… நீ ரொம்ப ரொம்ப நல்லவன். ஐ அம் லக்கி டு ஹேவ் யூ…தேங்க் யூ டியர். தேங்க்யூ ஃபர் ஆல்”

நான் சட்டென்று கண்ணீர் மல்கினேன். ஆனால் அதை அவளுக்கு தெரியாமல் மறைத்தேன். உதடுகளை இறுக்கி தொண்டையின் இறுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“நேர்முன்னாடி கிளவுட்ஸ்” என்று சாதனா சொன்னாள். “பெரிய புகை மாதிரி… மலை மாதிரி”.

“ஆமா” என்றேன்.

“அதுக்குள்ள மழை பெஞ்சிட்டிருக்கும்… டெஃபனிட்லி!”

சட்டென்று அவள் கூச்சலிட்டாள். “மாட், வானவில்… அங்கபாரு வானவில்.”

நான் மிகப்பெரிய வானவில்லை பார்த்தேன். வானிலிருந்து வான் நோக்கி வளைந்திருந்தது. அதன்கீழே காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

***

முந்தைய கட்டுரைஅன்னம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருபோதும் திரும்பாது.