எப்படி எழுதுகிறேன்?

இந்த கொரோனாக்காலக் கதைகளின்போது என்னிடம் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது, எப்படி இவ்வளவு எழுதினேன்? முன்னரே எழுதி வைத்திருந்தேனா? தகவல்களை எல்லாம் முன்னரே தேடி தொகுத்துவைத்திருந்தேனா?ஒரேயடியாக எழுதிவிடுவேனா, அல்லது விட்டுவிட்டு எழுதுவேனா?

கொரோனோக் காலக்கதைகள் இவ்வளவு வந்ததற்கான முதன்மைக்காரணம், நான் ஏற்கனவே சொன்னதுபோல, நாங்கள் திட்டமிட்டு கைவிடப்பட்ட சிக்கிம்- அருணாச்சலப்பிரதேசம்- சீன எல்லை பயணம்தான். கொரோனா பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் மார்ச் பத்துமுதல் பதினைந்துநாட்கள் பயணம் செய்ய விமான முன்பதிவு செய்திருந்தோம்.

ஆகவே நான் முன்னரே வெண்முரசு இருபது அத்தியாயங்கள் வரை முன்னணியில் இருந்தேன். புத்தகக் குறிப்புகள் உட்பட தேவையான கட்டுரைகளை எழுதிச் சேர்த்திருந்தேன். கொரோனா அறிவிக்கப்பட்டமையால் இருபது நாட்கள் எதையுமே எழுதவேண்டிய தேவையில்லாமல் நாட்கள் முழுமையாகக் கிடைத்தன

தகவல்களை எப்படிச் சேர்க்கிறேன்? அறிவுத்தளச் செயல்பாடு கொண்ட நண்பர்களுக்கு தெரியும், இவை என்னுடைய ஆர்வம் சார்ந்த ஒரு சிறுவட்டத்திற்குள் அமைபவை. மீபொருண்மை உலகம், தொன்மங்கள், இந்தியாவின் நிலப்பகுதிகள், கேரள- தமிழ் வரலாறு ஆகியவை என்னுடைய ஆர்வம் சென்ற நாற்பதாண்டுகளாக குவிந்திருக்கும் களங்கள். நான் தொடர்ச்சியாக இத்தளங்களில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தொலைதொடர்புத்துறை நான் பணியாற்றியது

நான் உயிரியல் அல்லது இயற்பியல் அல்லது கணிதம் பற்றி எதையும் எழுதிவிடமாட்டேன். உயிரியலிலும் இயற்பியலிலும் ‘பாப்புலர் சயன்ஸ்’ எனப்படும் பொதுநூல்களை விரும்பி வாசித்த அளவுக்கே என் அறிதல். ஒரு புனைவில் அந்த அளவுக்குள் மட்டும் செய்திகளை நிறுத்திக்கொள்வேன். அதைப்போல மருத்துவம் போன்ற பலருக்கும் அடிப்படைகள் தெரிந்திருக்கும் துறைகளில்கூட பொதுமக்கள் அறிவுக்குக்கூட எனக்கு அறிதல் இல்லை. அவற்றை அறிந்தால்கூட என் நினைவில் நிலைகொள்வதில்லை

கணிதத்தில் என் திறமை ஐந்தாம் வகுப்பு மாணவன் அளவுக்கே. மூன்று இலக்க எண்கள் இரண்டை என்னால் காகிதத்தில் எழுதினால்கூட தவறில்லாமல் கூட்டிச்சொல்ல முடியாது. இன்றுவரை கணிதத்திற்கு பிறரைத்தான் நம்பியிருக்கிறேன். எளிய அடிப்படைக் கூட்டல் கழித்தல்கள்கூட இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. முயற்சி செய்தால் மூளை ஒருமாதிரி எரிய ஆரம்பிக்கும்.

ஆகவே எல்லாத்துறைகள் சார்ந்தும் எழுதுவதில்லை—சாதாரணமாக எழுத்தாளர்களால் அது இயலாது என்று நினைக்கிறேன். அந்த எல்லையைக் கடந்துசெல்லும் மேதைகள் இருக்கவும்கூடும். எனக்கு என்றும் ஆர்வம் உடைய, நான் அனேகமாக ஒவ்வொருநாளும் வாசித்துக்கொண்டிருக்கும் துறைகள் சார்ந்தே எழுதுகிறேன்.

என் கதைக்கருக்கள் அந்த தளங்களைச் சார்ந்து எழும்போது ஆய்வு தேவைப்படுவதில்லை. தேதிகள், ஆண்டுகள் போன்றவற்றை அவ்வப்போது சரிசெய்துகொள்ளவேண்டியிருக்கும், அவ்வளவுதான்

இங்கே எழுத்தாளர்கள் உணரும் ஒரு சிக்கல் உண்டு. எந்த நல்ல எழுத்தாளனும் எப்போதுமே புனைவுமனநிலையில்தான் இருப்பான். கண்முன் காட்சியையே அந்தந்த கணங்களிலேயே புனைந்துகொண்டும் இருக்காதவன் எழுத்தாளன் அல்ல.ஆகவே பலசமயம் பின்னர் நாம் நினைத்துப்பார்க்கையில் அடிப்படைச் செய்திகள், தரவுகளுடன் கற்பனையும் கலந்திருப்பதை காண்கிறோம். மனப்பதிவுகள் அனைத்திலும் ஊடாடியிருக்கின்றன.

ஆனால் அந்த ஊடாட்டம்தான் எழுத்தாளனின் பங்களிப்பு. அதன்பொருட்டே அவன் எழுதுகிறான், அவன் எழுத்தை அந்த தளத்தில் செயல்படும் நிபுணன் வாசித்தால் அவன் ஆர்வத்துடன் கவனிப்பது அந்த ஊடாட்டத்தைத்தான். தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் நெப்போலியனின் ருஷ்யப்படையெடுப்பைப் பற்றிச் சொல்லியிருப்பதை நெப்போலியனின் வரலாற்று ஆய்வாளர்கள் மிகமிக விரிவாக விவாதித்திருப்பது இந்தக் கோணத்திலேயே.

ஆகவே செய்திகளுக்கு சமானமாக புனைவும் ஊடுகலந்து ஒரு நிகர்வரலாறாக, நிகர்அறிவியக்கமாகவே இலக்கியத்தில் வெளிப்படுகிறது. செய்தியாக ஒன்று புனைவில் சொல்லப்பட்டால் அது சரியாக இருக்கவேண்டும் என கவனிப்பேன், ஆனால் என்னையறியாமல் அது உருமாறியிருப்பதை நான் கண்டால் அது என் ஆழ்மன வெளிப்பாடு என எண்ணி விட்டுவிடுவேன். அது மேலும் வளர்ந்து வேறெங்கோ செல்வதையும் பின்னர் கண்டிருக்கிறேன்.

இலக்கியவாதி ஆய்வுசெய்யவேண்டும், அது வரலாற்றாசிரியனின் ஆய்வு அல்ல. அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஒரு சிறுசெய்தியை உறுதிசெய்துகொள்வதற்காக இரண்டு ஆண்டுகள்கூட தேடிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.அவருடன் பயணம்செய்திருக்கிறேன். ஆனால் அது அவருடைய வழி, என் மனம் அதற்குள் அச்செய்தியினூடாக நெடுந்தொலைவு சென்றிருக்கும். இரு வழிகளும் வேறுவேறு, இலக்கியத்தில் கனவுக்கான முகாந்திரம்தான் செய்திகள். கற்பனைக்கான ஓடுபாதை.

இக்கதைகளை பெரும்பாலும் காலையில் தொடங்கி இரவுக்குள் முடித்திருக்கிறேன். தொடக்க நாட்களில் ஒருநாளில் இரண்டு கதைகள்கூட எழுதியிருக்கிறேன். இரண்டுநாட்களில் மூன்று கதை என்பது சாதாரணமாக இருந்தது. ஆகவேதான் கூடு, நற்றுணை, கரு போன்ற கதைகளை இரண்டுமூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதமுடிந்தது

இதிலுள்ள உடலுழைப்பு முக்கியமானது, ஆனால் அந்த உழைப்பை வியப்பவர்களிடம் எனக்கு மதிப்பில்லை. அந்த உழைப்பைப் பற்றி பேசுபவர்கள் எங்களூர் அம்மச்சி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுரத்தை பார்த்து “செஞ்சதுதான் செஞ்சாங்க, எப்டி எடுத்து நிப்பாட்டினாங்க!” என்று வியந்ததுபோல பேசுபவர்கள்

கலையில் உழைப்பு உள்ளது. ஓவியம் சிற்பம் மட்டுமல்ல, இசையிலேயே கூட உடலுழைப்பு மிகமிக அதிகம். அந்த உடலுழைப்பை அளிக்குமளவுக்கு உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்பவர்களாக, உடல்நலிந்திருந்தால்கூட உள்ளத்தின் விசையால் எழுந்து அதைச் செய்பவர்களாகவே மாபெரும் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். என் ஆதர்சங்கள் அவர்களே.ஆனால் உழைப்பல்ல கலை, கலையில் உள்ள உழைப்பைப் பற்றி பேசுவது அறிவின்மை. அவ்வுழைப்பில் நிகழ்த்தும் உந்துதலையே வாசகன் உணரவேண்டும்.

ஒருநாளில் நான் பன்னிரண்டு மணிநேரம் வரை சாதாரணமாக இப்படைப்புகளுக்காக வேலைபார்த்திருக்கிறேன். நேரடியாக எழுதுவது எட்டு மணிநேரம் வரை. ஆனால் எதையாவது வாசிக்கப்போய் அதிலேயே நெடுந்தொலைவு சென்றுவிடுவது. கேரளவரலாற்றின் அசல் ஆவணங்கள், ரோரிச் குடும்பத்தின் வாழ்க்கை, திபெத் பற்றிய ஆவணங்கள், ஆர்தர் ஆவலோன் எழுதிய தந்த்ரீகநூல்கள் என்று எப்படியும் ஒருநாளுக்கு நாலைந்து மணிநேரம் வாசித்து தள்ளியிருக்கிறேன். ரோரிச் குடும்பம் பற்றியே ஒரு நாவலை எதிர்காலத்தில் எழுதக்கூடும்.

கலையைப் படைக்க இன்றியமையாதது அதிலேயே இருப்பது. முழுநேரமும் முழுப்பிரக்ஞையும். இந்தக்கதைகளை எழுதியநாட்களில் வேறெதிலும் என் மனம் திரும்பியதில்லை. என் வாழ்நாள் முழுக்கவே கூடுமானவரை சில்லறை விஷயங்களில் கவனச்சிதறல் இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்.

ஆனால் தொழில்? நீங்கள் நினைப்பதுபோல அல்ல, சென்ற கொரோனோ காலகட்டத்தில் நான் வேலையும் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று பெரிய படங்களில் பணியாற்றுகிறேன். இன்னொரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுசார்ந்த பேச்சுகள் விவாதங்கள் போய்க்கொண்டுதான் இருந்தன. அவற்றையும் இணைத்தே செய்தேன். அது வேறு.அதிலிருந்து இதற்கு உருமாறிக்கொள்வேன்

இதை வாசிக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக எத்தனை நிமிடம் ஒன்றைச் செய்கிறீர்கள் என்று பாருங்கள். நடுவே மின்னஞ்சல், முகநூல், வாட்ஸப் பார்ப்பது எத்தனை முறை? டிவியை ஓரக்கண்ணால் பார்ப்பது எத்தனை முறை? அதை கவனித்தால் நீங்கள் வியப்பது என் திறனை அல்ல என்னுடைய ஈடுபாட்டைத்தான் என்று புரிந்துகொள்ள முடியும். முழுமூச்சாக ஒருமணிநேரம் செய்யும் வேலையை மூழ்காமல் செய்யவேண்டுமென்றால் நாலைந்து மணிநேரம் ஆகும். அது கற்பனை சார்ந்த வேலை என்றால் பலநாட்கள்கூட ஆகும்.

கதைவடிவத்தை திட்டமிடுவேனா? இல்லை. எனக்கு கதை ஒரு மங்கலான காட்சி, ஒரு படிமம், ஒரு தொடக்கவரி, ஒரு முடிவு வரி என்று ஏதோ ஒரு வடிவில் வரும். அவற்றில் சில நீண்டநாட்களாக நினைவில் கிடப்பவை. சில அக்கணத்தில் தோன்றி ஓரிரு மணிநேரத்திற்குள் படைப்பாக ஆகிவிடுபவை. கதையின் மொழியும் வடிவமும் பற்றி கவலையே படுவதில்லை. எழுதத்தொடங்கி மூழ்கி மூழ்கிப்போய் அந்தச் சித்திரத்தை முடிக்கும்போது அதுவே முழுமையான வடிவுடன் அமைந்திருக்கும்.

ஒரு கதையின் முடிவு என்பது அக்கதையின் வழியாக நான் தேடிச்சென்று அடையும் ஒரு கண்டடைதல், ஒரு மெய்யறிவு. அதுதான் கதை. அதுதான் அந்த வடிவத்தை உருவாக்குகிறது.அந்த கண்டடைதல் நடக்கவில்லை என்றால் மெய்யறிவு அடையப்படவில்லை என்றால் அது கதையாக ஆவதில்லை. அது ஆற்றல்மிக்க கண்டடைதல் மெய்யறிவு என்றால் அதுவே வடிவத்தை அமைத்துவிடுகிறது.

ஒரு கரு அமைந்ததுமே அதன் வடிவம் இயல்பாக வந்தமையவேண்டும். அதை அடைகாக்க வேண்டியதில்லை, செதுக்கவேண்டியதில்லை. சிலசமயம் முடிவில்லாது வடிவங்களை செதுக்குவது உண்டு. ஆனால் அது ஒரு பயிற்சிதான். அது அந்தக்கதையை ‘பிசிறற்றதாக’ ஆக்குவதற்காக அல்ல. அதனூடாக செல்லும் பிறிதொரு அகப்பயணத்திற்கான ஒரு  தயாரிப்பு அது

அப்படி முயலாமலேயே வடிவம் வந்தமைய என்ன செய்யவேண்டும்?. அது எந்தக் கலையிலும் அதன் மாஸ்டர்களால் மட்டும் இயல்வது. அதற்கு நீண்டகால பயிற்சி தேவை. முழு அர்ப்பணிப்புடன் பல ஆண்டுகள் மொத்த வாழ்க்கையையும் அளித்தல். அதைச்செய்யாத எந்த மாஸ்டரும் எந்த துறையிலும் இல்லை. கலையில் ஒரு தொழில்நுட்பம் உண்டு, அதைக் கற்று அதை முழுமையாக கடந்து மறந்து விடும் நிலை அது. மீறலுக்கான உரிமையும் அங்கேதான் அமைகிறது.

முந்தைய கட்டுரைவேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83