புதிய கதைகள்- கடிதங்கள்

தனசேகர்

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

அன்புள்ள ஜெ

வில்வண்டி சிறுகதையின் வடிவம் அதற்கு அபாரமான அழகைக் கொடுக்கிறது. மிகையான உணர்ச்சிகள் இல்லை. விரிவான சித்தரிப்புகள் இல்லை .இயல்பான ஒழுக்கு. வில்வண்டிக்காகத்தான் அவள் செந்தட்டியை திருமணம் செய்துகொள்கிறாள். செந்தட்டி அவளை சிவப்பு நிறத்துக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொள்கிறாள். சமூக அந்தஸ்து, கலர் ரெண்டும்தான் திருமணத்தை அங்கே முடிவுசெய்கின்றன. அவ்வளவுதான், அதுக்குமேலே அங்கே ஒன்றுமில்லை. அதன்பின் அவர்கள் அன்பாக வாழ்ந்திருக்கலாம். அவர்கள் பிள்ளைபெற்றிருக்கலாம். அதெல்லாம் வேறுவிஷயம். அவர்களின் வாழ்க்கையின் சாராம்சம் என்பது இந்தக்கொடுக்கல் வாங்கலதான். வண்டி உடைந்துவிட்டது, அவளும் கிழவியாகிவிட்டாள். அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது

ஆர்.தன்ராஜ்

***

அன்புள்ள ஜெ ’

வில்வண்டி அருமையான வடிவம் கொண்ட கதைதான். அதன் விஷயமும் மறுக்கமுடியாத யதார்த்தம்தான். ஆகவே ஒரு சிறந்த கதை என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அந்த தவிர்க்கமுடியாத முடிவு என்பது தவிர்க்கமுடியாதது என்று பல கதைகளிலே எழுதிவிட்டார்கள். எனக்கு சு.சமுத்திரம் எழுதிய நல்ல கதைகளில் ஒன்றான மானுடத்தின் நாணயங்கள் என்ற கதை ஞாபகம் வருகிறது. அதிலும் இதே கைவிடப்படும் நிலைதான். ஏன் சொல்லவருகிறேன் என்றால் அந்த கைவிடப்படுதல், உறவுகளின் அர்த்தமில்லாமை, வாழ்க்கையின் முடிவு இதெல்லாம் சொல்லப்பட்டுவிட்டது, அது மீண்டும் கதையில் எழுதப்படவேண்டும் என்றால் இன்னும் ஒரு புதிய அம்சம் தேவைப்படுகிறது. அந்த அம்சம் இருந்திருந்தால் இந்தக்கதை இன்னொரு உச்சத்தை அடைந்திருக்கும்.

எஸ்,வரதராஜன்

***

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

உதிரம் கூர்மையான ஒரு கதை. அந்தக்கதையை வாசிக்கும்போது ஒரு சின்ன விஷயத்தை சொல்லிவிடவேண்டும். இதை Trivia என்று சொன்னால் மறுக்கமாட்டேன்.உதிரம் என்றபோது நான் உடனே இலங்கை எழுத்தாளர் என்ன எழுதப்போகிறார் என்று ஒரு எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் கதை அந்த எதிர்பார்ப்புக்கு வெளியே வேறொன்றாக இருந்தது.

நான் இந்தக்கதையுடன் சொந்த வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை இணைத்துக்கொள்கிறேன். 1998ல் என் அம்மா கருப்பைப் பிரச்சினையால் இறந்தார். ரத்தப்போக்கு மிகப்பயங்கரமாக இருந்தது. நான்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். எவ்வளவு கவனமாக இருந்தாலும் ரத்தம் என்மேல் படும். என் உடைகளிலெல்லாம் ரத்தம். அந்த ரத்தவாடை ஆரம்பத்தில் மிகவும் அருவருப்பாக இருந்தது. அப்போது ஒருநாள் அம்மாவின் பழைய போட்டோக்களை பார்த்தேன். பழைய உற்சாகமான அந்த இளம்பெண்தான் இந்த அம்மா என்று நினைத்தபோது கதறி அழுதுவிட்டேன். அதன்பின் மனநிலையே மாறிவிட்டது.

நான் அந்தக்கதையை வாசித்தேன். அந்த அம்மாவுக்கு அதே பிரச்சினை ஏற்பட்டு அந்த உதிரத்தில் பையன் பல மாதகாலம் வாழ நேர்ந்தால் அவன் மனநிலை என்னவாக இருக்கும்?

ஜி.வேணுகோபால்

***

அன்புள்ள ஜெ,

தாய், தந்தையின் உடல் உறவை காணநேரும் மகனின் மனப்போக்கை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது அனோஜனின் ‘உதிரம்’. அந்தக் கதையின் கட்டமைப்பை இவ்வாறு பிரித்துக்கொள்ள முடியும்.

ஒரு இளைஞன் சிகிச்சைக்காக உளவியல் மருத்துவரை சந்திக்கச் செல்வது, அவனது பார்வையில் அம்மருத்துவமனைப் பற்றிய விவரணைகள், அம்மருத்துவருடனான ஆரம்பநிலை சம்பாஷணைகள். இரண்டாவது கட்டமாக, அவனை உள நெருக்கடிக்குத் தள்ளிய அவனது குடும்பச் சூழல் பற்றிய விளக்கங்கள். அதாவது, அப்பாவின் கோபம், அம்மாவுக்கும் அவனுக்குமான நெருக்கம், அப்பாவுக்கும் அவனுக்குமான விலக்கம் என அவனது குடும்பச் சூழலைப் பற்றிய பகிர்தல்கள். மூன்றாவது கட்டமாக, தான் எதிர்கொண்டுவரும் மனப் பிரச்சினைக்கு மைய காரணமான, தன் பெற்றோர் உறவு கொள்ளும் காட்சியை காணர நேர்ந்தது பற்றிய தகவல்கள்.

இந்தக் கதையில், தாயின் மீது நெருக்கம் கொண்டிருந்தவன் அவளது நிர்வாணத்தைக் காண நேர்கையில் அடையும் ஒவ்வாமை, அதன் பிறகான அவனது மன மாற்றங்கள் கதைத் தருணத்தை எட்டுகிறது. ஆனால் அங்கு கடத்தப்படும் உணர்வு, அங்கு கட்டமைக்கப்பட்ட கதை உலகத்தின் வழியே உருவாகி வருவதாக இல்லை. மாறாக, கதையில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், சமூக யதார்தத்தில் என்னவாக பார்க்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் உருவாகிறது. அதாவது, தாய், தந்தையின் நிர்வாணத்தை மகன் காண நேர்வது என்ற சித்திரமே, அங்கு எந்தப் புனைவுக் கட்டுமானத்தை உருவாக்காமல் வாசகரிடம் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையை ஏற்படுத்த வல்லது. எனில், புனைவில் அந்த நிகழ்வு கையாளப்படுகையில் அது தனக்காக உணர்வுத் தளத்தை உருவாக்குவதான் அக்கதைக்கான இலக்காக இருக்க முடியும். புனைவு வழியிலான உணர்வுத் தளம் அனோஜனின் கதையில் கட்டமையவில்லை. மாறாக, நேரடியாக வாசகனின் அன்றாடக் கற்பனையில் நிகழ்கிறது.

தவிரவும், அந்த தருணத்தின் வேறு பரிமாணங்கள் எதையும் பரிசீலிக்காமல், அந்த தருணத்தில் அடையும் மனமாற்றங்களையே கதையாக அர்த்தம் பெறச் செய்வது அங்கு நிகழ்கிறது. நிகழ்வுகளின் மீதான பார்வைக்கோணம்தான் ஒரு கதையை தனித்துவப்படுத்துகிறது. அது இந்தக் கதையில் தவறுகிறது.

இது அனோஜனின் கதை மீதான விமர்சனமாக மட்டுமல்லாமல், சமீபத்திய தமிழ் சிறுகதைகள் மீதான விமர்சனமாகவும் வைக்கிறேன். கதை எழுதுபவனின் பிரத்தியோகப் பார்வையே ஒரு நிகழ்வை கதைத் தளத்திற்கு இட்டுச் செல்கிறது. ஆனால், இங்கு எழுதப்படும் கதைகள் பெரும்பாலானவற்றில் இருப்பது தனி மனித உணர்ச்சி நிலைகள் மீதான விவரணைகள் மட்டும்தான். கதையில் புனைவு உலகத்தை கட்டமைக்காமல், சமூக நிகழ்வு ஒன்றிற்கு தன்னை சாட்சியாக்கிக்கொண்டு கதைசொல்லி தனக்கு நேர்ந்த அல்லது தான் இருக்கிற சூழலைப் பற்றி வாசகர்களுக்குப் பகிர்கிறார். அதிலும் அவர் எந்தத் தரப்பின் வழியே கதையை சொல்கிறாரோ அதனையே நியாயத்தரப்பாகக்கொண்டு கதை நிகழ்வுகளைக் கட்டமைக்கிறார். அந்த நிகழ்வுகளை எழுதிச் செல்லும் இலக்கியவப்பட்ட்ட சொற்த்தேர்வுகள், உவமைகள் போன்றவைகள் அந்நிகழ்விற்கு கதைபோலான சாயத்தை அளிக்கிறது. ஆனால் அது கதையல்ல. மொழி அல்ல, நிகழ்வின் மீதான பார்வைக்கோணம்தான் ஒரு பிரதியை இலக்கியப் பிரதியாக்குகிறது.

ரியாஸ்

***

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

அன்புள்ள ஜெ

நலம்தானே?

எம்.கே.மணி அவர்களின் கதை ஜி.நாகராஜன் கதையின் உலகத்தைச் சேர்ந்தது என்று சொல்லலாம். அங்கே எல்லாருமே underdogs அல்லது slumdogs. அங்கே அவர்களைவிட underdog என்று யார் இருக்கமுடியும்? கவிஞன்தான். நான் இதை பார்த்திருக்கிறேன். சென்னையிலே வாழும் குடிசைமக்கள், அதாவது மிக அடித்தள வாழ்க்கை வாழ்பவர்கள்கூட சாவுச்சடங்குகள் செய்பவர்களை அவர்களைக் காட்டிலும் கீழானவர்களாகவே நடத்துகிறார்கள். இங்கே கவிஞன் ஒருவகையான சாவுச்சடங்கு ஆள் மாதிரி இருக்கிறான். அவனுடைய உலகம் அப்படித்தான் இருக்கிறது. அவனுடைய அந்தஸ்தையும் அப்படித்தான் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

செ. கிருஷ்ணகுமார்

***

2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

அன்புள்ள ஜெ

ஒரு வாசகர்கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் தெய்வீகன் கதையைப் பற்றிய வாசிப்புகளை பார்த்தேன். கூர்மையான வாசிப்புகள். ஒரு விஷயம் விடுபடுகிறதோ என்று தோன்றியது. அது அந்த தலைப்பு. அவனை எனக்கு தெரியாது என்ற வரிக்கு ஒரு பைபிள் குறிப்பு உண்டு. ஈழ எழுத்தாளர் ஆகையினால் அது அவருக்கு மனசில் வந்திருக்கலாம். நமக்கு இங்கே அந்த மித்துக்கள் அப்படி அறிமுகம் கிடையாது.

பைபிளில் ஆபேல்- காயீன் கதை மிகமுக்கியமான ஒன்று. உற்பத்தி புத்தகம் சொல்லும் கதை இது. ஆதமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த மகன்கள் ஆபேலும் காயீனும்.மூத்தவனாகிய காயீன் விவசாயி. இரண்டாமனாகிய ஆபேல் இடையன். ஆபேலும் காயினும் யெகோவாவுக்கு பலி கொடுத்தனர்.யெகோவா காயீனின் பலியை ஏற்கவில்லை, ஆபேலின் பலியை ஏற்றார். ஆகவே காயீன் ஆபேலை கொன்றான்.

ஆபேல் எங்கே என்று யெகோவா கேட்கும்போது  ‘அவனை எனக்கு தெரியாது, நான் என்ன அவனுக்கு காவலா?’என்று காயீன் சொன்னான். அந்த வரி பலவகையில் மேற்கோள் காட்டப்படுவது. யெகோவா காயீனிடம் கோபம் கொண்டு அவனிடம் ஊர் ஊராக அலையும்படி சபித்தார்.

இந்தக்கதைக்கும் தெய்வீகனின் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதை அறிந்தால் கதையின் வாசிப்பு இன்னும் கொஞ்சம் கூடுகிறது

டேவிட் கென்னடி

***

8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

7.உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா

5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்

அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

உதிரம்- கடிதங்கள்

கவி- கடிதங்கள்

கன்னி- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஉஷ்ணம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிருமி [சிறுகதை] உமையாழ்