சிலோன் விஜயேந்திரன்

கம்பதாசன்

திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன்.

கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன்.

நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல்லிக்காட்டினார். எனக்கு கம்பதாசனைப்பற்றி அவர் எழுதிய சிறுநூலையும் அளித்தார்

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் கம்பதாசனை கொஞ்சம் கவனம் எடுத்து படித்தது அதன் பிறகுதான். அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் ஓர் இலக்கியவிழாவில் சந்தித்தேன். மீண்டும் கம்பதாசன் பற்றிய பேச்சு, ஒரு கவிதையை அன்றும் பாடிக்காட்டினார்

கம்பதாசன்

இப்படி ஒருவரின் ஆத்மாவை மறைந்த ஒரு படைப்பாளி கொள்ளைகொள்வது இலக்கியத்தின் வியப்புகளில் ஒன்று. சென்ற ஆண்டு விந்தனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது – அதாவது ஒரே ஒருவரால். அவர் விந்தனின் பெரும்பக்தர். விந்தனின் நூல்களை தானே அச்சிட்டு கிட்டத்தட்ட இலவசமாக வினியோகம் செய்தார். என்னை ஓர் இலக்கியவிழாவில் சந்தித்து விந்தனின் நூல்களை அளித்து விந்தனைப்பற்றி எழுதவேண்டும் என்று கோரினார். நான் எழுதினேன்

திராவிட இயக்க எழுத்தாளரான விந்தனுக்கு திராவிட இயக்க ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பணமேதும் சேர்க்கவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று நான் சொல்லியும்கூட எவரும் அவரைப் படித்ததாகவோ ஏதேனும் எழுதியதாகவோ தெரியவில்லை.

ஆனால் ஒருவன் எஞ்சியிருக்கிறான். அவன் எப்போதுமிருப்பான்

சிலோன் விஜயேந்திரன்

திருப்பூர் கிருஷ்ணன்

பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் சிலோன் விஜயேந்திரன் போல் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம்.

*சிலோன் விஜயேந்திரன் என்ற எழுத்தாளரை இன்று எத்தனைபேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ஆகஸ்ட் 26 அன்று தம் 58 வயதில், சென்னை திருவல்லிக்கேணி அருகே தாம் தங்கியிருந்த குடியிருப்பில், ஒரு தீவிபத்திற்கு ஆட்பட்டு இறந்து போனார் அவர். இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு பத்திரிகைச் செய்தி மூலம் இத்தகவலை அறிந்தேன்.

தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் கண்டிருக்கிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது.

சிலோன் விஜயேந்திரன் ஒரு வில்லன் நடிகர். நடிகர் சிவாஜி கணேசனோடு நடித்த `பைலட் பிரேம்நாத்` என்ற அவரது முதல் படமே அவருக்குப் பெரும்புகழ் தந்தது.

பிறகு `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார்.

நடிகர் சுமன் மூலமாக `பிரளய சிம்மன்` என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். பின் தெலுங்குப் பட உலகிலும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் பெரிதும் வில்லன் பாத்திரங்களிலேயே நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கேற்ற வகையில் இருந்தது. குணத்தில் அவர் வில்லனல்ல, குழந்தை.

சிறந்த நாடக நடிகரும் கூட. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். நாடக நடிப்பிற்காக `நவரச மன்னன்` என்ற பட்டம் பெற்றவர்.

கவிஞர் கம்பதாசனின் மாபெரும் ரசிகராக வாழ்ந்தவர். கம்பதாசனின் அற்புதமான கவிதையாற்றலைத் தமிழுலகிற்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர்.

`கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார். `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

`அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான்.

அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது.

மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் எனத் தமிழகத்தின் பல மூத்த பதிப்பகங்கள் சிலோன் விஜயேந்திரன் எழுத்துக்கு ஆதரவு கொடுத்தன. அவர் நிறைய எழுதினார். நடிப்பதை விடவும் எழுதுவதே அவருக்கு மிகப் பிடித்திருந்தது.

மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பலரால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர். தமிழின் பழைய இலக்கியம் முழுவதையும் கற்றுத் துறைபோகியவர்.

சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரது இலக்கிய அறிவு வியக்கச் செய்வது. பல பழம்பாடல்களை கண்களில் ஒரு மயக்கத்தோடு அவர் கடகடவென ஒப்பிப்பார்.

காலமாவதற்குச் சில நாட்கள் முன்பு திருவல்லிக்கேணி அருகே தற்செயலாக அவரைச் சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு அளவிட முடியாத பாசத்தோடு அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன்.

பல காலம் கழித்து என்னைச் சந்திக்க நேர்ந்ததால் அவரது விழிகளில் தென்பட்ட அன்பின் பளபளப்பு இன்றும் நினைக்கும் போதெல்லாம் என்னை நெகிழச் செய்கிறது.

பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம்.

வாழ்நாள் முழுவதும் வறுமை அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. தன் புத்தகங்ளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார். நான் அவருடைய ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.

எப்படியும் அது நான் படிக்க விரும்பும் சிறந்த நூலாகத்தான் இருக்கும். சிறந்த நூல் அல்லாத எதையும் அவர் எழுதியதில்லை. ஆபாசக் கலப்பில்லாமல் சமூகப் பொறுப்போடு எழுதியவர்.

புது நூல் வெளிவந்ததும் அவர் என்னைச் சந்திக்க வருவது ஏதோ என் மூலம் ஒரு பிரதி விற்றுவிட முடிகிறது என்றல்ல. என்னைச் சந்திக்க அப்படி ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் அவர் உண்டாக்கிக் கொண்டார்.

நாங்கள் மணிக்கணக்கில் பேசினோமா, நாள்கணக்கில் பேசினோமா தெரியாது. பழைய இலக்கியங்கள் குறித்து அவர் பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தன் நூல் ஒன்று நா.பா. தலைமையில் வெளியிடப் படவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. நா.பா. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தார். சென்னையில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் அந்தக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.

இறுதியில் ஏற்புரை சொல்லும்போது சிலோன் விஜயேந்திரன் `நா.பா.வின் தலைமையில் நூல் வெளியீடு` என்ற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், நா.பா.வுக்கு நன்றி தெரிவித்து ஒலிபெருக்கியிலேயே விம்மிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார். நா.பா. காலமானபோது அவர் அடைந்த துயரம் அளவிட இயலாதது.

விஜயேந்திரன் தோற்றம் வித்தியாசமானது. செம்மை கலந்து பளபளக்கும் தலைமுடி. கண்களில் எப்போதும் ஒரு சிவப்பு. கரகரப்பான குரல். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். பொதுத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட ஒரு தன்மை அவரிடம் இருந்தது.

அவரின் தோற்றம்தான் அவரை வில்லன் நடிகராக ஆக்கியிருக்க வேண்டும். வாழ்வில் யாருக்கும் அவர் வில்லனல்ல. என்போன்ற பலருக்கு இனிய நண்பர் அவர்.

முரட்டுத் தோற்றத்தோடு அவர் திகழ்ந்தாலும் அவரைப் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் அபூர்வம். ஈ எறும்புக்குக் கூட அவரால் கெடுதல் நினைக்க முடியாது.

விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். (எந்தப் பொருளில் பாடச் சொன்னாலும் சொன்னவுடன் அடுத்த கணமே தங்குதடை இல்லாமல் உடனே கவிதை பாடுபவர்களை `ஆசுகவி` என்பார்கள். தமிழ் எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் ஆசுகவியாகத் திகழ்ந்தவர். இடைக்காலப் புலவர்களில் பல ஆசுகவிகள் உண்டு.)

விஜயேந்திரனும் சொன்னவடன் கவிதை பாடக்கூடிய ஆற்றல் படைத்தவர். `ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு` என்பது விஜயேந்திரன் எழுதிய நூல்களில் ஒன்று.

தம் தாயார் மதுரையில் பிறந்தவர் என்றும் தந்தை ஈழத்தில் பிறந்தவர் என்றும் விஜயேந்திரன் சொன்னதுண்டு. மற்றபடி அவர் குடும்பம், உறவுகள் போன்றவை குறித்து நான் கேட்டதில்லை.

`நவரசத் தனிநடிப்பு` என்றொரு நிகழ்ச்சியைப் பல இடங்களில் நிகழ்த்தினார். எழுத்தால் வருமானம் வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால் நடிப்பாலும் அதிக வருமானத்தை அவர் ஈட்ட முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

ஏதோ நடிகர்களெல்லாம் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சமூகத்தில் தவறான ஒரு பிரமை இருக்கிறது. அந்த பிரமை பெரும் வெளிச்சத்தில் மின்னும் முதல்நிலை நடிகர்களைப் பொறுத்தவரை சரி. மற்றபடி துணை நடிகர்களின் பொருளாதார நிலை சொல்லும் தரமுடையது அல்ல.

இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை துணைநடிகர்கள் பொருளாதார ரீதியாக எவ்விதமெல்லாம் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தால் மனம் பதறுகிறது.

விஜயேந்திரன் அவரது கடைசிக் காலங்களில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். `சாப்பிட்டீர்களா?` என்றேன். பேசாமலிருந்தார். `வாருங்கள்` என்று உணவகம் அழைத்துச் சென்றேன். நானும் அவருமாகச் சாப்பிட்டோம்.

கைகழுவிக்கொண்டு வந்த அவர், `இப்படி வயிறாரச் சாப்பிட்டு நெடுநாள் ஆகிறது!` என்றார். அதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது.

என்னையே கூர்மையாகப் பாசத்தோடு பார்த்த அவர், தன் கைகளால் என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் காட்சியை வியப்போடு அந்த உணவகத்தின் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இலக்கிய உலகில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த சிலோன் விஜயேந்திரன் போன்றவர்கள் பாரதியாரின் இலக்கியத்திற்கு மட்டும் வாரிசு அல்ல. அவரது வறுமைக்கும் வாரிசு.

இவரைப் போன்ற பலர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரதியைப் பொருளாதார வறட்சியில் வறுத்தெடுத்த தமிழ்ச் சமூகம், அவரது இலக்கிய வாரிசுகளையும் அவ்விதமே பாரதிக்கு இணையாகத் தொடர்ந்து கெளரவித்து வருவது குறித்து நாம் மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்!

திருப்பூர் கிருஷ்ணன்

 

கசப்பெழுத்தின் நூற்றாண்டு

புரட்சிப்பத்தினி

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

விந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்

***

முந்தைய கட்டுரைநீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13