வில்லுவண்டி[ சிறுகதை] தனா
அன்புள்ள ஜெ,
தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று தெரிகிறது. ஆசிரியரே உணர்ச்சிவசப்பட்டு கதைசொல்வதுபோன்ற அந்த மொழி கதைமுழுக்க ஆசிரியரே இருப்பதுபோல தோன்றவைக்கிறது. இந்தக்கதையில் அந்த அம்சம் இல்லை. ஆசிரியர் ஒரு குரலாக எங்கேயும் இல்லை. இந்தவகையான கதைகள் எந்த அளவுக்கு உணர்ச்சியில்லாமல் சொல்லப்படுகின்றதோ அந்த அளவுக்கு நல்லது என்று நினைக்கிறேன்.
இந்தக்கதையிலுள்ள உணர்ச்சியில்லாத தன்மை இரும்பால் முடைந்ததுபோல உள்ளது. இதெல்லாம் இப்படித்தான், வேறுவ்ழியே இல்லை என்று சொல்கிறது. இது வாழ்க்கையின் கருணையில்லாமையைச் சொல்லும் கதை. மனிதர்களின் கருணையில்லாமை அல்ல. கிழவியின் மகனுக்கும் கணவனுக்கும் அவர்களின் கோணத்திலே பார்த்தால் அந்தந்த நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன.
ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
இந்தக்கதையில் உள்ள் இரண்டு சுவாரசியமான அம்சங்களை சொல்லவேண்டும் என்று தோன்றியது. வில்வண்டி என்பது எனக்கு வில் என்பதுடன் இணைந்து ஞாபகப்படுத்தியது. வில்லை வளைத்து பெண்ணை கைப்பற்றுவதுபோல தேவர் வில்வண்டியை வைத்து பெண்ணை கைப்பற்றிக்கொண்டுவருகிறார். அவளுக்கும் வில்தான் முக்கியமாக படுகிறது. அதுதான் அடையாளம். கெத்து
கிழவியாகி சாகும்நிலையில் இருக்கும்போதுகூட பஸ்ஸில் போகும்போது வில்வண்டியில் போகும் அசைவாக நினைத்து கிழவி மகிழ்ச்சி அடைகிறாள். அந்த வில்லில் இருந்து அவளுக்கு மீட்சியே கிடையாது.
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
தனாவின் சிறுகதை நல்ல ஒரு கிராமியச் சித்திரம். கி.ரா கதை ஒன்றை மதுரை வட்டார மொழியில் வாசித்ததுபோல் இருக்கிறது. கி.ராவின் கறிவேப்பிலைகள் போன்ற கதைகளை நியாபகப்படுத்திக்கொள்கிறேன். [இன்னொரு கதையும் இருக்கிறது. அன்னை என்று நினைக்கிறேன். கைவிடப்பட்டு பிச்சை எடுக்கும் பெற்றோர். அதில் அம்மா ‘என் பிள்ளைக நல்லா இருக்காங்களா?’என்று கேட்பார்.] நாஞ்சில்நாடன் கூட ‘சாலப்பரிந்து’ என்று ஒரு சிறுகதை எழுதியிருப்பார்.
இந்தக் கைவிடப்படுதல் என்பது க்ரூரமாக இருக்கிறது. ஆனால் இது ஒருவகையில் இயல்பானது. எல்லா விலங்குகளிலும் இதுதான் நடக்கிறது. இயற்கையுடன் ஒன்றி விலங்குகளுக்குச் சமானமான வாழ்க்கை வாழும்போது இதுதானே இயற்கையானது? வயதானவர்களை கம்யூனிட்டி தான் பார்த்துக்கொள்ள முடியும். அரசாங்கமோ சமூகமோ அதற்கான அமைப்பை உருவாக்கவேண்டும். இங்கே மேற்குநாடுகளில் இந்த அமைப்பு உண்டு. அதெல்லாம் இல்லாத தொன்மையான சூழலில் எது இயற்கையின் விதியோ அதுதானே நடக்கமுடியும்?
ஆகவே இந்தவகையான கதைகளில் உள்ள உணர்ச்சிகரமான பார்வை என்பது நடுத்தரவர்க்கம் குனிந்து ஏழைகளைப் பார்த்து அவர்கள் கருணையில்லாதவர்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். ஆனால் இந்தக்கதையில் அந்த தவிர்க்கமுடியாத தன்மை, அதுதன் இயற்கையின் விதி என்பதுபோல ஒரு பார்வை உள்ளது. அந்த metalic realism தான் இந்தக்கதையை வலிமையான கதையாகா ஆக்குகிறது என்று நினைக்கிறேன்
எஸ்.வரதராஜன்
அன்புள்ள ஜெ
நலம்தானே? நானும் நலமே.
தனா எழுதிய வில்வண்டி கதை வாசித்தேன். அழகான கதை. எனக்கு இந்தவகையான predictable sentiment உடைய கதைகள் ஏன் பிடிக்கின்றன என்று யோசிப்பதுண்டு. Anti- sentiment உள்ள் கதைகளைத்தான் நான் சின்னவயசிலே விரும்பினேன். எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உடைக்கிற கதைகளை விரும்பி வாசிப்பேன்.
ஆனால் தி.ஜானகிராமனின் கடன் தீர்ந்தது என்ற கதை ஞாபகத்தில் இருக்கும் அளவுக்கு ஏராளமான anti sentiment கதைகள் ஞாபகத்திலே இல்லை. ஏன்? என்று சிந்தித்தேன்.ஜானகிராமனின் எல்லா கதைகளுமே predictable sentiment கொண்டவைதான். ஆனால் அவை மனசிலே தங்கி வளர்கின்றன. ஏனென்றால் predictable sentiment என்பது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ஒரு வேல்யூ சார்ந்தது. அதை தொட்டுப் பேசுகிறது. anti sentiment அப்படி அல்ல. அதில் ஒரு உடைப்பு மட்டுமே உள்ளது. அந்த subversion நடந்ததுமே நாம் அதை கடந்துவிடுகிறோம்.
ஆனால் வேல்யூஸை அப்படி கடக்கமுடிவது இல்லை. அதை நம் மனசில் வைத்து உழற்றிக்கொண்டே இருக்கிறோம். கடன் தீர்ந்தது கதையிலே அந்த வாத்தியார் தன்னை ஏமாற்றியவனை மன்னிக்கிறார். அது மிகமிக எதிர்பார்த்த முடிவு. ஒரு நீதிக்கதை மாதிரி சம்பிரதாயமான முடிவு. ஆனால் அதுதான் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. அது ஏமாற்றியவனுக்கு மட்டும் விடுதலை இல்லை, ஏமாற்றப்பட்டவருக்கும் விடுதலைதான். அதுதான் சிறந்த வழி. ஆனால் அது ஏன் அப்படி அபூர்வமாக இருக்கிறது?
இந்தக்கதையில் கிழவி கைவிடப்படுகிறாள். ஆனால் வேறுவழியில்லை. அது ஒரு கருணையால் செய்வதாகவே இருக்கலாமே. கொல்லமுடியாமல் கைவிடுகிறார் என்று தோன்றுகிறது. அந்த predictable sentiment நிறைய யோசிக்கவைக்கிறது
மகாதேவன்
5 உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
4 கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
3. இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
2. அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
1. கன்னி- [சிறுகதை] ம.நவீன்