மாதவன் அண்ணனை நான் அழைத்துச் சென்றேன். தட்டுத்தடுமாறி வரம்பு வழியாக வந்த மாதவண்ணன் என்னிடம் “நான் இந்த ஏரியாவுக்கெல்லாம் வந்ததே இல்ல கேட்டியா?” என்றார்.
“உங்க வயலு இங்க இருக்கே? வடக்கே வயலு? நாலாம்கண்டம்?” என்றேன்.
“ஆமா, ஆனா அதெல்லாம் அப்பா பாத்துக்கிடுதாரு. நமக்கு எங்க நேரம்? நம்ம ஆபீஸுக்கு போயிட்டு வாறதுக்கே விடிஞ்சு இருட்டீடுது… இந்த ஆண்டுதான். அடுத்த வருசம் பிரமோசன் ஆனா மெயின் தமிழ்நாட்டிலே போஸ்டிங் போட்டிருவான். திருநெல்வேலியிலே போஸ்டிங் போட்டான்னாக்கூட வந்திட்டு போயிட்டு இருக்கலாம். இல்லேன்னா கஷ்டமாக்கும்.”
நான் “தமிழ்நாடு நல்ல ஊராக்கும்” என்றேன். ஆனால் மேற்கொண்டு தமிழ்நாட்டின் சிறப்புகள் எனக்கு ஞாபகம் வரவில்லை.
“நான் போயிருக்கேன்.. நம்ம பிரபேசன் பீரீட் அங்கேல்லா? தண்ணியில்லா காடாக்கும். கோயில்பட்டி ஏரியாவிலே வெயிலு என்னா அடி அடிக்கும்ங்குதே? தீயாக்கும், வானத்திலே இருந்து தீ எறங்கும். வெயிலுகாலம்னு இல்லை. அங்க பன்னிரண்டு மாசமும் வெயிலுகாலமாக்கும்” என்றார் மாதவண்ணன்.
வயல்வரப்பிலிருந்து அக்கரை ஆறடிச்சாலையை அடைந்தோம். “இங்க ஏம்டே இப்டி புல்லுபிடிச்சு கெடக்கு?”
“இங்க மாடு நிறைய இருக்குல்லா?” என்றேன்.
மாதவண்ணன் என்னை விசித்திரமாக பார்த்தார்.
“அதுக மேயணும்லா?”
அவர் மேலும் விசித்திரமாக பார்த்தார்.
நான் பேச்சை மாற்ற “தமிழ்நாட்டிலே காமராஜ் இருக்காரு” என்றேன்.
“அவரு எங்க இருக்காரு? தோக்கடிச்சு அனுப்பியாச்சே… அவரு எங்கயோ டெல்லியிலே போயி கெடக்காரு… பாவம்” என்றார் மாதவண்ணன் “ரொம்ப தூரமாடே?”
“வந்தாச்சு.”
“தமிழ்நாட்டுலே போஸ்டிங்னா கஷ்டம்தான். நான் மட்டும் தனியா போயி கிடக்கணும். இவள கூட்டிட்டுப் போகமுடியாது. இங்க அம்மை அப்பனுக்க சம்ரச்சணையிலே இருக்கிறப்பமே மூணுகரு தாங்காம விளுந்துபோட்டு… மூணுமாசப்பிள்ளைதான், போறது வெறும் ரெத்தக்கட்டி. ஆனா அவளுக்கு ஓரோண்ணும் ஒரு பிரசவமாக்கும்.”
அவர் ஒரு ஓடையை மிகக்கவனமாக கடந்து “தாளுமாதிரி வெளுத்துப்போயிருவா. மனசும் கலங்கீரும். வாயில தோணினத பேசுறது, முகம்பாத்தா ஆளுதெரியிறதில்லை… ராத்திரியிலே எந்திரிச்சு ஓடுகதும் உண்டு. நீ சின்னப்பையன், உங்கிட்ட சொல்லப்பிடாது. டேய், நானெல்லாம் அவகூட தனியா இருக்கதுக்கே இப்பல்லாம் பயப்படுதேன்” என்றார்.
நான் எனக்கு அளிக்கப்பட்ட அந்த மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு “கரு ஏன் நிக்குததில்லை?” என்றேன்.
“ஓரோருத்தரும் ஓரோண்ணு சொல்லுதாங்க. கருப்பையிலே பிரச்சினைன்னு மிஷனாஸ்பத்திரியிலே சொன்னாங்க.ரக்தமேகம்னு நாணுப் பணிக்கர் சொல்லுதாரு. ஏதோ யட்சி சினைமுட்டையை தின்னுட்டுப்போறான்னு அப்புப் பாட்டா சொல்லுதாரு… நாம என்ன கண்டோம்.”
மாதவண்ணன் பேசிக்கொண்டே வந்தார். “நாமளா ஒரு பாவமும் செய்யல்ல. மனசறிஞ்சு ஒருத்தனுக்கும் ஒரு தீமையும் செய்யல்ல. ஆனால் வாறது வழியிலே தங்குமா? வேரிலே உள்ளது கொம்பிலே பூக்கும்னாக்குமே சொல்லு. நம்ம பரம்பரையிலே என்ன பாவமோ என்ன பழியோ? நம்ம கைக்கும் காலுக்கும் நாம பொறுப்பு. நம்ம ரத்தத்துக்கு நாம பொறுப்பில்லை இல்லியா?”
அவர் எப்போதுமே அப்படித்தான். அவருக்கு அவரே பேசிக்கொள்வார். எப்போதுமே துயரத்துடன் இருப்பவர் போலிருப்பார். அவருடைய வயதை ஒத்த எவருடனும் அவர் பேசிக் கேட்டதில்லை. என்னை மாதிரி சிறுவர்களுடன்தான் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அதுவும்கூட விளையாட்டாகவோ சிரிப்பாகவோ பேசுவதில்லை. அவருடைய பிரச்சினைகளைத்தான் விரிவாகச் சொல்வார்.
அவர் பஞ்சாயத்து ஆபீஸில் வேலை பார்த்தார். எங்களூரில் துணியால் தைத்த பனியன் போடும் இளைஞர் அவர் ஒருத்தர்தான். அவர் போடும் சட்டையும்கூட முழங்கைவரை கையுடன் ஒற்றைப் பாக்கெட் வைத்தது. என் அப்பா வயதானவர்கள்தான் அதைப் போடுவார்கள்.
காக்கிநிறத்தில் ஒரு துணிப்பை வைத்திருந்தார். அதில் ஃபைல்கள் சோற்றுடப்பாவுடன் காலையில் கையை தூக்கித் தூக்கி வெட்டுக்கிளி போல தாவித்தாவி நடந்து குருவிக்காடு ஜங்ஷனுக்குப் போய் 13E பஸ்ஸில் ஏறி உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து ஆபீஸுக்கு போய்விட்டு திரும்பிவருவார். அவர் வந்துசேர மாலை ஏழுமணி ஆகிவிடும். அதேபோல தாவித்தாவி வருவார். நாங்கள் அப்போது கோயில்முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்போம்.
“இங்கயாடே?” என்று மாதவண்ணன் கேட்டார். “எடம் ரொம்ப ஒதுக்குபொறமா இருக்கு பாத்துக்கோ. சாராயம் குடிக்கவனுக வாற எடம் போல இருக்கு.”
நான் “இங்க நல்ல சாராயம் கிட்டும்” என்றேன் “அந்தா அந்த கைதைச்செடிக்க அந்தாலேதான் அம்புரோஸுக்க வீடு… அங்க உண்டு.”
“அய்யோ… நம்மள பாத்தா தப்பா நினைச்சுப்போடுவானுகளே.”
“அம்புரோஸுக்க சாராயம் நல்லதாக்கும்… நீலமா எரியும்.”
“நீ சும்மா வாடே” என்று மாதவண்ணன் சொன்னார். “சாராயம் குடிக்கவனுகளை போலீஸுக்கு பிடிச்சு குடிக்கணும்… நான் போனவாரம் ஆத்திலே எறங்குறப்ப நம்ம ஞானப்பன் ஆடி ஆடி வாறன். ஆனைமேலே இருக்கிறது மாதிரி ஒரு நடை… என்னையப் பாத்ததும் டேய் அடைக்கோழின்னு விளிச்சான். அடைக்கோழி அவனுக்க அப்பன்… குடிகாரன்கிட்ட நமக்கென்ன பேச்சு… நான் அப்டியே மேலே தாணுபிள்ளை தோட்டத்திலே ஏறி மறைஞ்சிட்டேன்.”
“ஞானப்பம் குடிக்குதது அரிஷ்டம், அது நாறும். இங்க அம்புரோஸ் காய்ச்சுதது நல்ல கதளிவாழைப்பழம் போட்ட மணமான சாராயமாக்கும்.”
“நீ எப்டிடே இதெல்லாம் தெரிஞ்சிருக்கே?”
“அப்பு அண்ணா குடிப்பாரு. எங்க அப்பாவுக்கும் வாங்கிட்டு போவாரு” என்றேன். “நான் அச்சு ஆசானுக்கு வாங்கி குடுத்திருக்கேன்.”
“உங்கப்பாவுக்கு எதுக்கு சாராயம்?”
“இங்கிலீஷ் பேசணும்லா?”
மாதவண்ணன் அதை யோசித்தபடி என்னுடன் வந்தார்.
அம்பாடி குளத்தின் தெற்குகரையிலிருந்த குசமேட்டை அடைந்தோம். குசமேட்டை குளத்தின் கரைவரம்பு என்றுதான் சொல்லவேண்டும். அம்பாடிக்குளம் மிகப்பெரியது. ஆகவே கரைவரம்பும் பெரியது. அங்கே குயவர்களின் வீடுகள் வரிசையாக இருந்தன. நாற்பது வீடுகளுக்குமேல் இருக்கும்.
அந்த வீடுகளின் தொடர்ச்சியாக இரண்டு சூளைகள். அவை செங்கல் அடுக்கி கட்டைப்பட்ட குள்ளமான வீடுகள் போலிருக்கும். உள்ளே பச்சைக்களிமண்ணால் ஆன பானைகளையும் சட்டிகளையும் சீராக அடுக்கி செங்கல் வைத்து மூடிவிட்டு, மண்ணுக்கு அடியில் சுரங்கம்போல ஆழமான அடுப்புக்குள் விறகை அடுக்கி தீபோட்டு அதையும் மூடிவிடுவார்கள். உள்ளே காற்றுபோவதற்கு களிமண் சுவரில் கட்டைவிரல் அளவுக்கு சிறிய துளைகள் வரிசையாக போடப்பட்டிருக்கும்.
சூளையில் தீ கொழுந்துவிட்டு எரியும் என நான் அங்கே வருவது வரை நினைத்திருந்தேன். அது வெந்நீர் போடும் ஒதுக்கு அடுப்பு போல கனல் மட்டும்தான் கொண்டிருக்கும், கொஞ்சமாகத்தான் புகையும் எழும் என்று அதைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. மேலே புகைபோவதற்கு களிமண்ணாலான குழாய் இருந்தது. அது பெரிய சுருட்டுபோல புகைந்தது.
முதல்நாள் என்னை அங்கே அழைத்து வந்திருந்த லாரன்ஸிடம் “கீழே இருக்கிற பானைமட்டும்தான் வேவுமா?” என்று கேட்டேன்.
“ஏல சூளைய நல்லா மூடிருவானுக. உள்ள தீ அப்டியே தண்ணி மாதிரி நெறைஞ்சிருக்கும் தெரியுமா?”என்றான்.
குசமேட்டில் எல்லாமே மிகச்சிறிய குடிசை வீடுகள். களிமண்ணாலான ஆளுயரச் சுவருக்குமேல் பெரிய ஓலைக்கூடையை கவிழ்த்தது போன்ற கருகிப்போன கூரை. தொலைவிலிருந்து பார்த்தால் அங்கே பெரிய சருகுக்குவியல்கள் வரிசையாக இருப்பதுபோலத் தெரியும். வீடுகளுக்கு முன்னால் முழங்கால் அளவு உயரமான மண் திண்ணை. உள்ளே படுப்பதற்கும் புழங்குவதற்கும் எல்லாம் சேர்த்து ஓர் அறை. சமைப்பதற்கு ஒரு சின்ன சாய்ப்பறை, அவ்வளவுதான் வீடு.
ஆனால் எல்லா வீட்டுக்கும் முன்னால் சற்று அகலமான ஓலைக்கொட்டகைகளை போட்டிருந்தனர். சுவராகவும் ஓலைக்கீற்றுகளை வைத்து கட்டப்பட்டவை. அவற்றில்தான் அவர்கள் மூங்கிலால் அடுக்கடுக்காக தட்டுவைத்து கட்டி அதில் பச்சைக்கலங்களை காயவைப்பார்கள். ஒரு சிறுகொட்டகைக்குள் இருநூறு முந்நூறு பானைகளும் சட்டிகளும் ஒரே சமயம் காய்ந்துகொண்டிருக்கும்.
அவர்கள் நாற்பது வீட்டுக்காரர்களும் முறைவைத்து அந்த இரண்டு சூளைகளையும் பயன்படுத்தினார்கள். எல்லாமே கூரையிட்ட இடம் என்பதனால் மழைக்காலத்திலும் பானைசெய்து சுட்டு எடுத்தார்கள். ஆண்கள் பானைகளை சேர்த்து கட்டி தலையில் ஏற்றிக்கொண்டு சந்தைக்கு போவார்கள். பெண்கள் கடவங்களில் சட்டி பானை கோருவை மூடிகளுடன் ஊருக்குள் கொண்டு சென்று விற்பார்கள்.
அப்போது எல்லா வீடுகளுக்கு முன்னாலும் பெண்கள் அமர்ந்து மரத்தாலான ஆப்புதட்டிகளால் சற்றே காய்ந்து இறுகிய பசைநிலையில் இருந்த சட்டிகளையும் பானைகளையும் தட்டித்தட்டி மெலிதாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே மரத்தாங்கு கொடுத்து சுழற்றிச் சுழற்றி தட்டினர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் கைதட்டும் ஓசைபோல கேட்டுக்கொண்டிருந்தது.
எல்லாருமே கிழவிகள். எல்லாருமே வாயில் வெற்றிலை போட்டு நிறைத்து வைத்திருந்தனர். எங்களை கூர்ந்து பார்த்தனர். ஆனால் கைகள் தட்டிக்கொண்டே இருந்தன.
ஆண்டிக் குயவனின் வீட்டுக்கு முன்னால் மேலேறிச் செல்ல சிறிய படிகள்போல மண்ணில் கொத்தப்பட்டிருந்தது. நான் மேலேறிச் சென்றுவிட்டேன். மாதவண்ணன் மிக மெதுவாக நடுங்கி நடுங்கி காலெடுத்துவைத்து மெலே வந்தார்.
“இதாக்கும் வீடு” என்று நான் சொன்னேன்.
“இதாடே? ஆரையும் காணமே.”
“உள்ள இருப்பாரு.”
“ஆண்டி இருக்காரா?” என்று மாதவண்ணன் கேட்டார். உரக்க “ஆண்டி இருக்காரா? நான் நாகமங்கலம் வீட்டிலே இருந்து மாதவன்… ஆண்டி இருக்காரா.”
பக்கத்துவீட்டில் பானை தட்டிக்கொண்டிருந்த கிழவிகள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவர்கள் தங்கள் பானைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
பக்கவாட்டில் கொட்டகையில் ஆண்டியின் குயச்சக்கரம் இருப்பதை நான் பார்த்தேன். அருகே குழைத்த களிமண் உருளைகள். களிமண் உருண்டை ஒன்று சினைப்பன்றி கிடப்பதுபோல பெரிதாக தெரிந்தது. களிமண் கலங்கள் பின்னால் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவை அடைகாப்பதற்காக வைக்கப்பட்ட முட்டைகள் போல என்று எனக்கு தோன்றியது.
“ஆண்டி இருக்காரு… பீடி வாங்க போனாருன்னு நினைக்கேன்” என்று சொல்லி குயச்சக்கரத்தை சுட்டிக்காட்டினேன். “பானை வனைஞ்சிட்டு இருந்திருக்காரு…”
“அதுக்கு நடுவிலே என்னத்துக்கு பீடி?” என்று மாதவண்ணன் சொன்னார்.
“பீடி சக்தியாக்கும்” என்று நான் சொன்னேன். ஆர்வத்துடன் குயச்சக்கரத்தை நோக்கிச் சென்றேன்.
குயச்சக்கரம். சிறிய மாட்டுவண்டிச்சக்கரம் போன்றது. அதை தரையில் இருந்த மரத்தாலான குமிழியில் பொருத்தியிருப்பார்கள். அதன் அச்சுப்பரப்பு ஒரு வட்டமான பீடம். அதில் களிமண்ணுருண்டையை வைத்து வேகமாகச் சுழற்றிவிட்டு விரல்களால் மென்மையாக பிடித்தாலேபோதும் சட்டியின் விளிம்பு உருண்டு வரும். அதற்கு சுருட்டுவது என்று பெயர்.
ஆனால் மிகக்கவனமாக அதை தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். கொஞ்சம் அழுத்தினால் விளிம்புவட்டம் சட்டென்று மெலிந்து உடைந்துவிடும். பிடி கொஞ்சம் அகன்றால் அது தடித்து குழைந்து வளைய தொடங்கும். எப்போது அப்படி ஆகிறது என்று சொல்லவே முடியாது. மண் நம் கைக்குக்கீழே நம் கையை அது எடுத்துக்கொண்டு தானாகவே உருண்டு வடிவம் கொண்டு வரும், நம்மை மீறியே நெகிழ்ந்து உருவழிந்து மீண்டும் களிமண்ணாகும்.
நான் அங்கே ஆண்டி சட்டியும் பானையும் செய்வதை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது உண்டு. ஆண்டியிடம் கேட்டு பலமுறை சக்கரத்தை சுழற்றி கலம் சுருட்ட முயன்றதும் உண்டு. ஒருமுறைகூட என் கையிலிருந்து கலம் எழுந்ததில்லை. ஆனால் என் கைக்குக்கீழே மண் குழைந்து உருவம் கொள்ளும்போது ஒரு பெரிய பரவசம் ஏற்பட்டது. மண் என்னுடன் உரையாடுவதுபோல.
நான் நடக்கும் மண், அள்ளிவிளையாடும் மண், கொத்திக்கிளைத்து அள்ளி கொட்டி, மிதித்துக் குழைத்து வேலைச்செய்யும் மண். என் ஊர், மரங்கள், மலைகள் எல்லாமே அமைந்திருக்கும் மண். அது மிகப்பிரம்மாண்டமானது. ஒரு மாபெரும் எருமைபோல். அதன்மேல் சின்னஞ்சிறு உண்ணிகள் போல மனிதர்கள். அவர்கள் இருப்பதையே அது அறிவதில்லை. அவர்கள் அதனிடம் உரையாடவே முடியாது. ஆனால் குயச்சக்கரத்தின் களிமண் நிலத்தின் உதடு. அது குவிந்து நெளிந்து நெகிழ்ந்து பேசுகிறது. என்ன பேசுகிறது என்று அறியமுடியாது. ஆனால் பேசுகிறது.
மாதவண்ணன் “அது என்னடே?” என்றார்.
“நான் காட்டித்தாறேன்.. குயச்சக்கரம்…” என்று நான் சென்று அதன்பின் வைக்கோல்புரி போட்டு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அதைச் சுழற்றிவிட்டேன். அது விசைகொண்டு சுழன்றதும் களிமண் உருண்டையை எடுத்து அந்த மையத்தில் வைத்தேன். கட்டைவிரலால் அழுத்தி மெல்லச் சுழற்றியபோது ஒரு கலத்தின் விளிம்பு தோன்றியது. ஓர் உதடு கூம்புவதுபோல.
“டேய் டேய்… அய்யோ இப்டியா செய்யுதானுக! அய்யோ… உருண்டு வருதே! ய்யம்மா!”
மாதவண்ணன் கைகால்கள் பதற தவித்தார்.அவருடைய உணர்ச்சிகள் எனக்கு வேடிக்கையாக இருந்தன. “தக்ளி வச்சு பஞ்சிலே நூலு நூக்குத மாதிரியாக்கும்…” என்று நான் சொன்னேன்.
வேறெங்கிருந்தோ ஊறி வந்து துளிப்பதுபோல என் கையில் எழுந்து வந்தது. அல்லது குளுமையான உருண்டையான ஒரு தாமரைப் பூ.
“டேய் , எங்கேருந்துடே வருது… இது எங்கேருந்து வருதுடே?”
“மண்ணாக்கும்” என்றேன்.
“மண்ணு தெரியுதே… இந்த வளைவு, இந்த ரூபம்… அய்யோ அப்பிடியே கீறிக்கிட்டு எந்திரிச்சு வருதே… சாமி பிரத்யட்சப்படுதது மாதிரீருக்கே… தள்ளுடே… நான் செய்யுதேன்டே.”
“மெதுவாச் செய்யணும்.. கொஞ்சம் கை தளந்தாலும் போச்சு” என்றேன். “தண்ணியிலே குமிழி வாறது மாதிரியாக்கும். சட்டுன்னும் காணாம போயிரும்”
“ஆமா, மண்ணுலே குமிழி” என்றார். அவர் அமர்ந்து சக்கரத்தைச் சுற்றிவிட்டு மண்ணை பிடித்தார். அவர் கை நடுங்கியது. மண்ணிலிருந்து உருவாகி வந்த ஒரு வளையம் சட்டென்று நெளிந்து மறைந்தது.
“ஏண்டே?” என்று திகைப்புடன் என்னிடம் கேட்டார்.
“சொன்னேன்ல? கைய வளைக்கப்பிடாது”
“இருடே இப்ப பாரு” என்று மீண்டும் அதை சுழற்றிவிட்டு மண்ணை வனையத்தொடங்கினார். வளையம் உருவானதுமே மெலிந்து கரைந்து மீண்டும் மண்ணுருளை ஆகியது.
மாதவண்ணனின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. “ஏம்டே? ஏன் வரேல்ல?”
நான் “ஈசியா வந்திடாது… வந்தா நாம குசவன் ஆயிருவோம்லா?” என்றேன்
“பாப்போம்” என்று மாதவண்ணன் பல்லைக் கடித்தார். வெறியுடன் மீண்டும் மண்ணை வனையத் தொடங்கினார். அது மீண்டும் கலைந்தது.
“அப்டி இறுக்கிப் பிடிக்கப்பிடாது… விட்டு பிடிக்கணும்”
“மண்ணு குழைஞ்சிருக்கு” என்றார். “இரு, பாப்போம்.”
அவர் உடலெங்கும் களிமண் ஆகிவிட்டது. முகத்தில் மண் தீற்றல்.
‘”போரும் எந்திரிங்க” என்றேன்.
என் குரலை அவர் கேட்கவே இல்லை. மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். அவர் வெறிகொள்ள கொள்ள அந்த வளையம் ஒருமுறைகூட உருவாகாமல் ஆகியது. அவர் சக்கரத்தை நிறுத்திவிட்டு தலைகுனிந்து அமந்திருந்தார்.
“போதும் மாதவண்ணா” என்றேன்.
“ம்ம்ம்” என்று உறுமிவிட்டு மீண்டும் சுழற்றி மண்ணை வனையத்தொடங்கினார். அவர் ஆளே மாறிவிட்டதுபோல தோன்றியது.
அவர் கைக்கு கீழே குயச்சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கொட்டகை சரிந்து கிடக்கும் ஒரு வண்டி என்று நான் கற்பனை செய்தேன். அல்லது நான் சரிந்து தொங்கியபடி ஒரு வண்டி ஓடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வண்டிச்சக்கரத்தில் சிக்கிய சேறு கலமாக திரண்டு வருகிறது. அல்லது மத்தில் வெண்ணை எழுகிறது.
ஆண்டி மேலிருந்து பீடியை இழுத்தபடி வந்தார். அவனைக் கண்டதும் புன்னகைத்து புகையை விட்டார்.
“ஆண்டி வாறாரு” என்றேன். ஆனால் மாதவண்ணன் அதைக் கேட்கவில்லை.
ஆண்டி அவரை அப்போதுதான் பார்த்தார். “ஏமானா, எப்ப வந்தீரு?”
மாதவண்ணன் குயச்சக்கரத்தை நிறுத்தி மூச்சிரைத்தார்.
“என்ன செய்யுதாரு?” என்று ஆண்டி என்னிடம் கேட்டார்.
“சட்டி” என்றேன். “வரமாட்டேங்குது.”
“வரணும்னு உண்டும்னா வரும்…” என்றார் ஆண்டி “இதுவரை இந்த மண்ணிலே எம்பிடு கலம் வந்திருக்கும். மறுக்கா மண்ணாப் போயிருக்கும்…”
மாதவண்ணன் சீற்றம் கொண்டார். எழுந்து வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு “கலம் வாறது இருக்கட்டும், வேய் ஆண்டி, நீரு கைய நீட்டி பைசா வாங்கிட்டுப்போயி எம்பிடு நாளுவே ஆச்சு?”
“ஏமானே அது சட்டியும் கலமும் இல்லல்லா? பாவையாக்கும். பாத்துச்செய்யணும். பதமாட்டு சுட்டு எடுக்கணும்..”
“அதுக்காக? இப்பம் மாசம் ரெண்டாச்சு… நீரு செய்தீரா இல்லியா? இல்லேன்னா பைசாவ திருப்பிக் குடும்”
“செய்தாச்சு… அடிச்சுருட்டுத வேலை நடந்திட்டிருக்கு… இண்ணைக்கில்லேன்னா நாளைக்கு சூளையிலே ஏறீரும்”
“இங்கபாரும், இன்னும் நாலுநாளிலே ஆடிவெள்ளி ஒடுக்கம்… அடுத்தவெள்ளி ஆவணியிலே…ஆவணிவிட்டா பிறவு அடுத்தமாசமாக்கும்…”
“நாளைக்கு தந்துபோடுதேன்னு சொன்னேன்லா?”
“வண்ணாத்திக்கிட்ட நாலுதடவை சொல்லிவிட்டாச்சு. அப்பா ரெண்டு தடவை வந்தாச்சு… அதாக்கும் இப்ப நானே வந்தேன்.. இந்த காட்டுமேடு ஏறி வந்திட்டேன்”
“தாறேன்ன்னு சொல்லுதேனே”
“அதை செஞ்சாச்சா? செஞ்சா எந்த நெலையிலே இருக்கு?” என்று மாதவண்ணன் கூச்சலாக கேட்டார்.
“வனைஞ்சாச்சு… உருட்டு முடிஞ்சு தட்டுகதுக்கு குடுத்திருக்கு. இது சில்பமாக்கும்… பானைமாதிரி உருட்டித் தட்ட முடியாது பாத்துக்கிடுங்க. வீதுகட்டியும் சுத்துகட்டியும் முழைக்கட்டியும் வச்சு மெள்ளமெள்ள தட்டி எடுக்கணும்…அது பொம்புளையாளுக்க சோலி. நான் செஞ்சுகுடுத்து நாலஞ்சுநாளாச்சு.. ஈரவைக்கோல போட்டு மூடி வீட்டுலே வச்சிருக்கா… நான் என்ன செய்ய?”
“ஏன் உன் வீட்டுக்காரிக்கு என்ன சீக்கு?”
ஆண்டி பார்வையை தாழ்த்தி சற்றுநேரம் சும்மா நின்றார். பின்னர் பீடியை இறுதியாக இழுத்து வீசிவிட்டு “சின்னக் குட்டி ஒண்ணு கெடந்துது, வெசக்காய்ச்சலிலே போயிட்டுது… ஒரு மாசமாச்சு” என்றார். “நான் சூளையெறக்கி நாப்பது நாளாச்சு… இது பின்னே அட்வான்ஸ் வாங்கியாச்சு, சாமிகாரியம்னாக்கும் நான் சம்மதிச்சது”
மாதவண்ணன் என்னை குழப்பமாக பார்த்தார். அவருக்கு ஆண்டி சொன்னது சரியாகப் புரியவில்லை என்று தோன்றியது.
ஆண்டி குரல் மேலும் தழைய “வனையதுக்கு கை நிக்கல்ல… எப்பவும் கையிலே வெறையல்… சக்கரம் சுத்தினா மண்ணு சரிஞ்சிரும்… மூக்குமுட்ட குடிக்காம தூங்க முடியாது. குடிச்சு தூங்கி எந்திரிச்சா கையிலே ஜன்னி வந்த லெச்சணம்… என்னண்ணு வனைய?” என்றார்.
“இந்த மண்ணை வச்சு பிசைஞ்சு பிசைஞ்சு…இந்த சக்கரமேடையிலே மண்ணு இருந்து சுத்திக்கிட்டே இருக்கும். விடப்பிடாது, விட்டா பின்ன இந்த கையிலே விஸ்வகர்மா வரமாட்டார்னு நினைச்சு விடாம செஞ்சிட்டே இருந்தேன்… முளுராத்திரியும் இருந்து ஒத்த ஒரு சட்டிய செய்ய பாத்திருக்கேன். பகலு முழுக்க சக்கரம் சுத்தி ஒரு சட்டிகூட இல்லாமல் களிமண்ணை குழைச்சு போட்டுட்டு எந்திரிச்சிருக்கேன்…”
“செய்யல்லியா? அப்ப பைசாவ குடுத்திடும்” என்றார் மாதவண்ணன்.
“அய்யா செஞ்சாச்சு… எனக்க வேலை முடிஞ்சாச்சு… சொன்னேம்லா?” என்றார் ஆண்டி “ஒரு வாரம் முன்னாலே குடிச்சுட்டு ஆலங்காட்டு பொத்தையிலே விளுந்து கிடந்தேன். அப்ப ஒரு சொப்பனம். எனக்க குட்டி வந்து நிக்குதா. இடுப்பிலே வெள்ளி அரஞாண்கொடி மட்டும்தான். அப்பா அம்மை விளிக்கான்னு சொன்னா. அம்பிடுதான். அந்தாலே எந்திரிச்சிட்டேன். நேரா வந்து உக்காந்து வனைஞ்சிட்டேன்… தொட்டா ஜீவன் வந்திரும்ங்குத மாதிரி பாவையாக்கும்…”
“அது எங்க? சும்மா சொன்னா ஆச்சா? காட்டும்வே” என்றார் மாதவண்ணன்
ஆண்டி என்னிடம் “பிள்ளே, பிள்ளை உள்ள போயி அவகிட்ட கேக்கணும்…அவ எடுத்து காட்டித்தருவா… பாத்திட்டு வரணும்”
”செரி” என்றேன்.
மாதவண்ணன் “நான் பாக்கணுமே” என்றார்.
“உடைமைக்காரன் முளுசாத்தான் பாக்கணும்… அதாக்கும் சாஸ்திரம்” என்றார் ஆண்டி.
“சாராயத்தை குடிச்சுட்டு பைசாவ செலவாக்கிப்போட்டே” என்றார் மாதவண்ணன் “அதாக்கும் கதை, எனக்கு விசயம் தெரியாம இல்லை”
“பிள்ளை பாத்துட்டு வந்து சொல்லட்டு” என்றார் ஆண்டி.
“நான் பாக்குதேன்” என்று நான் குடிலைநோக்கிச் சென்றேன். ஒட்டுத்திண்ணையில் ஒரு பழைய சிவப்பு ஃப்ராக் கிடந்தது. குழந்தைகள் அணிவது. திண்ணையில் ஏறி உள்ளே சென்றேன்.
அறையில் எவரும் இல்லை. வீட்டிலேயே யாருமிருப்பதுபோல தோன்றவில்லை. பின்பக்கம் சமையலறை சாய்ப்பிலும் யாருமில்லை. திரும்பிவிடலாமா என்று எண்ணியபோது கொல்லைப்பக்கம் ஒட்டுத்திண்ணையில் எவரோ இருப்பது தெரிந்தது. ஆளை தெரியவில்லை, அவர் நிழல் நீண்டு முற்றத்தில் விழுந்திருந்தது. அது ஆண்டியின் மனைவி வள்ளி. எங்கள் வீட்டுக்கு கலங்கள் கொண்டு வருபவள்.
நான் அங்கே சென்றேன். நான் சென்ற அசைவைக்கூட அவள் அறியவில்லை. நான் நிலைக்கதவை கையால் தட்டினேன். பிறகு “ஆண்டி விளிச்சாரு” என்றேன்
அவள் திரும்பி பார்த்தாள். முகம் வெளிறி வற்றி சருகுபோல் இருந்தது. உதடுகளும் இரு சருகுகள். இமைகள் இரு சருகுகள். கண்கள் உலர்ந்த கூழாங்கற்கள். “ஆண்டி விளிச்சாரு”
“ஏன்?”
“அவரு செய்த பாவை எங்க இருக்குன்னு கேட்டாரு”
“அங்க” என்று முகவாயால் காட்டினாள்.
நான் அவர் சுட்டிய பனையோலைப் பெட்டியை பார்த்தபின் “தட்டல்லியா?”என்றேன்
“இல்ல”
“ஏன்?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் அந்தப் பனையோலைப் பெட்டியை அணுகி குனிந்து அதன் மூடியை திறந்தேன். உள்ளே வைக்கோல்கூளம் நீர் தெளித்து ஈரமாக வைக்கப்பட்டிருந்தது. அதை அள்ளி விலக்கினேன். நடுவே மண்ணாலான பாவை இருந்தது
முதற்கணம் நான் திடுக்கிட்டு நிமிர்ந்துவிட்டேன். நெஞ்சு படபடக்க மீண்டும் குனிந்து பார்த்தேன். அங்கே ஒரு குழந்தை கைகளை விரித்து கால்களை தூக்கி படுத்திருப்பதுபோலவே இருந்தது
வழக்கமாக பாவைகளுக்கு சிவப்பு நீல வண்ணங்கள் பூசப்பட்டிருக்கும்.ஆகவே அவை குழந்தைபோலவே தெரியாது. மண்ணாலான பாவை குழந்தையின் உடல்நிறம்போலவே இருந்தது. கைகால்களில் விரல்களும் நகங்களும் இருந்தன. சிறிய தொந்தியில் தொப்புள். கைகளில் குழந்தைக்கைகள் போலவே மடிப்புகள்.
கண்கள் இரு சிறிய வட்டங்கள்தான் என்று கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. ஆனால் முகமாகப் பார்த்தபோது அவை பார்வை கொண்டிருந்தன. குழந்தை என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்யப்போகிறேன் என கவனிப்பதுபோல. அதன் கைகால்கள் அசைய தூக்கு என்று எம்புவதுபோல தோன்றியது
நான் அதை குனிந்து எடுத்தேன். அது அத்தனை கனமாக இருக்கும் என நினைக்கவில்லை. என் கையிலிழுந்து வழுவி விழப்போயிற்று
“அய்யோ!” என்று வள்ளி பின்னாலிருந்து கூவினாள்.
நான் அதை அப்படியே தரையில் வைத்துவிட்டேன். அது குளுமையாக மென்மையாக இருந்தது. என் கையின் தடம் அதன் இடையில் பதிந்து தெரிந்தது.
“அப்பிடி எடுக்கப்பிடாது பிள்ளே” என்று வள்ளி எழுந்து அருகே வந்தபடி சொன்னாள். “தலை வளைஞ்சு போயிரும்”
கீழே கிடந்த பாவையின் அடியில் இரு கைகளையும் கொடுத்து மெல்ல தூக்கி எடுத்தாள். அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் அழுதுவிடுவாள் என நான் நினைத்தேன். ஆனால் கண்கள் வரண்டுதான் இருந்தன
பாவையை அப்படியே எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் ஒட்டுத்திண்ணைக்குச் சென்றாள். அதை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் அதை மெல்ல கையால் வருடுவதை கண்டேன்.
நான் அங்கே நின்று அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பாடத்தொடங்கிவிடுவாள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. அவள் அங்கேயே அப்படியே அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள்
நான் வெளியே வந்தேன். மாதவண்ணன் மீண்டும் குயச்சக்கரத்தில் அமர்ந்து வனைந்துகொண்டிருந்தார். மண் அவர் கையில் திரண்டு கலத்தின் விளிம்பாக எழுந்து மீண்டும் குழைந்து மறைந்தது. நீர்க்குமிழியேதான். சேற்றில் அப்படி குமிழி எழுந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சேற்றுநீரில் கல் எறிந்தால் அதைப்போல ஒன்று எழும்
“பாவையப் பாத்தியளா பிள்ளே?”என்றார் ஆண்டி
“ஆமா பாத்தேன்” என்றேன். “சின்னப்பிள்ளை போல இருக்கு”
“முக்கூட்டாலு யட்சிக்கு வைக்கிறதுக்காக்கும்” என்று மாதவண்ணன் சொன்னார் “தோசம் உருகிப்போவும்னு சொன்னாங்க”
“அதாவது யட்சிக்கு பாவையை குடுத்தா அதை அவ கொஞ்சிகிட்டு இருப்பா. நீங்க பிள்ளைய பெத்திருவீங்க” ஆண்டி சொன்னார். “இங்க பிள்ளைதீனி யட்சிகள் அம்பிடு பேருக்க ஆலமரத்துக்க அடியிலயும் கிடக்குதது நம்ம பாவைகளாக்கும்”
“ச்சே” என்றார் மாதவண்ணன். அவர்கையில் கலம் மீண்டும் குழைந்து மண்ணாகியது.
“பிள்ளே, ஒண்ணு நினைக்கணும். கலம் வரணும்னு இருந்தா அதுவா வந்திரும். நாம நம்ம கைய குடுக்கணும். நாம செய்யுதோம்னு நினைக்கப்பிடாது. கையே அதுவே வனைஞ்ச தப்பில்லாம வந்திரும்… குசவன் கத்துக்கிடுத தொளிலு அதாக்கும். கலம் உருண்டு வாறப்ப அவனுக்க மனசும் பேச்சும் நடுவாலே போய் கலைக்காமப் பாத்துக்கிடுதது”
“பாப்பம்” என்று மாதவண்ணன் மீண்டும் வனைய தொடங்கினார்
ஆண்டி இன்னொரு பீடியை பற்றவைத்துக்கொண்டு “விடமாட்டாரு போல” என்றார்
“ஆண்டியே, நான் பிஎஸ்சி பரிச்சை பதினெட்டு தடவை எளுதி ஜெயிச்சவனாக்கும்” என்றார் மாதவண்ணன்.
“இந்தப் பரிச்சையிலே படிச்சா பாஸ் இல்லை. படிச்சதையெல்லாம் மறந்தா பாஸ்” என்றார் ஆண்டி
மாதவண்ணன் மீண்டும் வனையத்தொடங்கினார். அவருடைய முகமும் கையும் ஒன்றாக அதில் ஈடுபட்டன. அவர் எதையுமே அறியவில்லை. ஆண்டி என்னைப்பார்த்து புன்னகை செய்தார்.
கலம் மீண்டும் நழுவியது. மாதவண்ணன் பெருமூச்சுவிட்டபின் உடனே மீண்டும் மண்ணை உருட்டி செய்ய தொடங்கினார். அவர் உதடுகள் அழுத்தமாக குவிந்திருந்தன. முகம் கூர்மைகொண்டிருந்தது. அவர் ஏன் அத்தனை வெறிகொள்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
மீண்டும் கலம் நழுவியபோது மண்படிந்த கையை உதறியபடி அவர் பெருமூச்சுவிட்டார். தொண்டைமுழை ஏறி இறங்கியது
“பிள்ளே இப்ப போகணும்… பாவையை கூடிய சீக்கிரம் கொண்டு வாரதுக்கு பாக்குதேன்”
திடீரென்று எழுந்த சீற்றத்துடன் “அதை நீரு சொன்னா போராது. உம்ம கெட்டினவ சொல்லணும்… இப்ப அவள்லா பாவையைத் தட்டமாட்டேன்னு சொல்லுதா” என்றார் மாதவண்ணன் “இங்க வேற யாராவது தட்டுவாங்களா?”
‘இல்ல அப்டி மொறை இல்லை. நான் வனைஞ்சத அவ தட்டினா அவ எனக்க கெட்டினவ ஆயிடுவா”
“ஓ , அப்டி ஒரு மொறை இருக்கோ”
“ஆமா” என்றார் ஆண்டி “எனக்க கலத்தை வனையுதியாட்டீன்னுதான் நாங்க சம்பந்தம் கேட்டுக்கிடுதது”
மாதவண்ணன் மீண்டும் மண்ணை உருட்டி வைத்தார்.
“அதை விடணும் பிள்ளே, அது பிறவு செய்யலாம்”என்றார் ஆண்டி
“பாத்திருவோம்… இந்த மண்ணுக்காவது எனக்க நெஞ்சிலே தீ தெரியுதான்னுட்டு” என்றார் மாதவண்ணன்
“பூ பறிக்குத இருக்கணும் கை. பூவை பறிக்குறப்ப மனசு கனியும்லா… அப்டி மனசு மாறினாத்தான் களிமண்ணு பூக்கும்” என்று ஆண்டிசொன்னார்
மீண்டும் களிமண் கலைந்ததும் மாதவண்ணா சீற்றத்துடன் என்னை நோக்கி கத்தினார். “டேய் நீ உள்ள போயி அவ கிட்ட கேட்டுட்டு வா, அவ வனைவாளா இல்லியான்னு”
“அவங்க ஒண்ணுமே பேசல்லியே”
“நான் கேட்டேன்னு சொல்லுடா போடா” என்றார் மாதவண்ணன். அவர் முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தது. கண்களில் நீர்ப்படலம் தெரிந்தது.
“உள்ள போயி கேட்கணும் பிள்ளே” என்றார் ஆண்டி “ஏமான் கேக்குதாரு…. பிள்ளைக்க காரியமாக்கும்னு சொல்லணும்…பிள்ளை சொனனலாவது அவளுக்கு கேக்குதான்னு பாப்பம்”
நான் உள்ளே போனேன். ஆண்டி எனக்குப் பின்னால் “போரும் பிள்ளே, அப்டி ஒருநாளிலே உண்டாகி வரணும்னு நினைக்கப்பிடாது.நம்ம கையை பூமாதேவி அனுக்ரகிக்கணும்லா?” என்றார்
“அப்டி விடக்கூடாதில்லா?”என்றார் மாதவண்ணன் “பாப்போம்”
நான் உள்ளே சென்றேன். மிக அருகே என விசும்பலோசை கேட்டது. மெல்ல காலடி எடுத்துவைத்து பின்பக்கம் சென்றேன். வள்ளி அங்கே அமர்ந்திருந்தாள். அந்த பாவையை மடியிலிட்டு கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தாள்
அவள் அழுவதை பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றேன். அப்படி பார்க்கக்கூடாது, அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த காட்சியிலிருந்து கண்களை விலக்க முடியவில்லை
பிறகு எப்போதோ அவள் சற்று அசைந்தாள்.நான் திடுக்கிட்டு அவள் என்னை பார்த்துவிடுவாள் என்ற உணர்வை அடைந்தேன். அவள் பார்க்கிறாளா என்று ஒரு கணம் பார்த்துவிட்டு மெல்ல பின்னடைந்து வெளியே வந்தேன்
மாதவண்ணன் “யம்மா! யம்மா!” என்றுகூச்சலிட்டார்.“பகவதீ! எனக்க பகவதீ!” என்று கண்ணீர் விட்டார். நான் அவருடைய கைகளின் நடுவே ஒரு பானை திரண்டிருப்பதை கண்டேன். மிகச்சிறியது, மிக தடிமனாகவும் இருந்தது. ஆனால் முழுமையான கலம்
“பொத்தி எடுங்க… பொத்தி எடுங்க… அம்பிடுதான்”என்றார் ஆண்டி
மாதவண்ணன் அதை கீழே கைகொடுத்து வெட்டி அள்ளி இருகைகளிலும் எடுத்தார். என்னை நோக்கி திரும்பி “டேய்,பாருடே” என்றார்
அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
நான் அருகே சென்று அதை தொடப்போனேன். “டேய்!” என்று அவர் திரும்பிக்கொண்டார்
“அதை கையிலேயா வச்சிருக்கப்போறீரு? அந்தால அப்பிடியே வையும்…”என்றார் ஆண்டி
மாதவண்ணன் மிக மெதுவாக அதைவைத்தார். “இதை தட்டி சூளைவச்சு எனக்கு குடுக்கணும். நான் வாங்கிக்கிடுதேன். வெலைகுடுத்து நான் வாங்கிக்கிடுதேன்”என்றார்.
“வெலை வேண்டாம்.. ஏமான் வச்சுக்கிடணும். ஏமான் வனைஞ்சதுல்லா?”என்றார் ஆண்டி
மாதவண்ணன் அதை மிக மெல்ல தட்டில் வைத்துவிட்டு “கைகழுவணுமே” என்றார். அவரே பக்கெட்டில் இருந்த தண்ணீரை கண்டு அங்கே போய் கைகழுவினார்
ஆண்டி என்னிடம் “பிள்ளே அவகிட்ட சொல்லிட்டிகளா?”என்றார்
“இல்லை”என்றேன். “அவுங்க அழுதிட்டிருக்காங்க”
“அழுதிட்டிருக்காளா?” என்றார் ஆண்டி “பிள்ளை கண்ணாலே பாத்தியளா?”
”ஆமா பாத்தேன். சத்தம்போட்டு அழுதிட்டு இருந்தாங்க… மடியிலே அந்த பாவையை வச்சு தொட்டுத்தொட்டுப் பாத்துட்டு அழுதாங்க”
ஆண்டி ஒன்றும் சொல்லவில்லை. மாதவண்ணன் என்னைப் பார்த்துவிட்டு அவரிடம் “என்னவே ஆண்டி இது? நோம்புக்கு பாவை கிடைக்குமா கிடைக்காதா?” என்றார்
“கண்டிப்பா கிடைக்கும். நாளைக்கு சாயங்காலம் சூளையிலே ஏத்துவேன். மூணாம் நாள் சாயங்காலம் கொண்டுவந்து குடுக்கேன்” என்றார் ஆண்டி.
அவர் முகத்தில் இருந்த அமைதியைக் கண்டு மாதவண்ணன் “உம்மை நம்புதேன்” என்றார். என்னிடம் “போவம்டே” என்றார்
நாங்கள் மீண்டும் இடைவழிக்கு வந்ததும் மாதவண்ணன் “டேய், ஆரும் அறியப்பிடாது. அந்த அம்புரோஸுக்க வீட்டுக்குப் போயி ஒரு சின்னக்குப்பி சாராயம் வாங்கிட்டு வாடே.. நீ சொன்னியே , அந்த கதளிப்பழ மணமுள்ள சாராயம்” என்றார்
நான் உற்சாகமாக “நான் வாங்கிட்டு வாறேன்… எனக்குத்தெரியும்” என்றேன்.
***