உதிரம்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

அனோஜனின் கதையான உதிரம் வாசித்தேன். எனக்கு பலவகையான சம்பந்தமில்லாத நினைவுகள் வந்தன கோர்வையாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. என் வயதில் இந்தக்கதை என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை. இது ஒரு ஆய்வுப்பொருள் என்றுதான் எனக்கு தோன்றியது.

ஆனால் இளைஞர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் உண்மையான சிக்கலை கூர்மையாக சொன்ன ஒரு கதையாக இருந்திருக்கலாம். அந்தவகையில் அழகான கதை என்றுகூட சொல்லுவேன்.ஆகவே இதைப்பற்றி எழுதுகிறேன்

என்னுடைய கேள்வி என்பது இந்தப்பிரச்சினையைப் பற்றியது. இந்தப்பிரச்சினை வெவ்வேறுவகையிலே நம் எழுத்தில் வந்துகொண்டிருக்கிறது. பாலியல்படத்தில் நடிக்கும் அம்மாவைப் பார்த்ததைப் பற்றி தமிழ் இளம் எழுத்தாளர் ஒருவர் எழுதிய கதையை கொஞ்சநாள் முன்னால் படித்தேன். ஏறத்தாழ இதே பாணியில் ஒரு பத்துகதையாவது படித்திருப்பேன்

இந்தப்பிரச்சினை எங்கிருந்து ஆரம்பிக்கிறது? கொஞ்சநாள் முன்னால் ஒருவர் அவர் தன் நண்பனின் அம்மா அவர் கணவரின்முன் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததைச் சொனனர். அது இருபது ஆண்டு முன்னால் நடந்தது. நானே என் அத்தை பிராபோட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஆகியிருக்கிறேன்

ஜானகிராமனின் பிரச்சினையும் இங்கேதான். அம்மாவந்தாளின் அதிர்ச்சிமதிப்பு அம்சமும் இதுதானே? கிரேசியா டெலடா எழுதிய அன்னை என்ற நாவலைஅவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறர். அது 1920 ல் வெளிவந்த நாவல். அந்த நாவலின் அதே பிரச்சினைதான் அம்மாவந்தாளிலும். அதாவது ஐரோப்பா அடைந்த அதே சிக்கலை மேலும் அரைநூற்றாண்டு கழிந்து தமிழகம் அடைந்திருக்கிறது

அந்தக் காலகட்டத்தில் வந்த கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சாமர்செட் மாம் எழுதிய தி ரெயின் என்ற கதை இன்றைக்கு எப்படி அந்த பாதிப்பை அளிக்காமலிருக்கிறது? அன்றைக்கு கிறிஸ்தவப் பாதிரியின் செலிபஸி பற்றி அப்படி ஒரு உண்மையான நம்பிக்கை இருந்ததா என்ன? நமக்கு அப்படி ஏதாவது இருந்ததா?

சமீபத்தில் ஒரு மலையாளப்படம் பார்த்தேன். தன் அம்மா மீண்டும் திருமணம் செய்துகொள்ளுவதை ஏற்கமுடியாத மகள் கதாநாயகி. ஆனால் நம் கிராமச்சூழலில் அறுத்துக்கட்டுவதெல்லாம் எல்லா வயதிலும் சாதாரணமாக நடந்துகொண்டிருந்ததே

அப்படியென்றால் ஒரு நூறுவருசமாக நாம் ஒரு Desexualize செய்யப்பட்ட சமூகமாக மாறிவிட்டோமா? கோயில்சிலைகளில் முலைகளை கண்டால் அதை பிடிப்பது இன்றைக்குத்தான் நமக்கு வழக்கமாகிவிட்டதா? பழங்காலத்திலே அன்னையின் முலைகளையும் யோனியையும் நம்மால் வர்ணிக்க முடிந்திருக்கிறதே?

இந்தக்கதையிலேயே ஒரு விஷயம் இருக்கிறது. சிவன்மேல் ஏறி அமர்ந்து பாலுறவுகொள்ளும் காளியின் உருவம் இங்கே பலநூறாண்டுகளாக இருக்கிறது. அது ஒரு தியானவடிவம். சிவசக்தி யோகத்தில் சக்தி மேலோங்கிய நிலை.

இந்த இளம் ஆசிரியர் அதை கேள்விப்பட்டதோ பார்த்ததோ இல்லை என நினைக்கிறேன். அந்தக்குறிப்பே கதையில் வரவில்லை. இன்றையதலைமுறை அப்படி இருப்பதுதான் இந்தக்கதையின் பிரச்சினை.

1977 ல் காசி போனபோது சிவன்மேல் காளி அமர்ந்திருக்கும் படத்தைப் பார்த்து என் நண்பர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தது ஞாபகம் வருகிறது. இந்தக்கதையில் அந்தப் பையன் அடைந்த அதிர்ச்சி அதுதானே? மனநோய் மருத்துவர் நீ போய் காளியின் படத்தை பார்த்து தியானம் செய் என்று சொல்லியிருக்கலாமோ?

ஸ்ரீனிவாஸ்

வணக்கம் ஜெ

அனோஜனின் உதிரம் சிறுகதையை வாசித்தேன். மிகச்சரளமான நடையில் எழுதப்பட்ட கதை. இரு உதிரப்போக்கல்கள் இதில் வருகின்றன. முதலில் அம்மா மீது வருகின்ற கருணை, இரக்கமும் இன்னொன்றிலும் அதுவே தோன்றக்கூடும். இரண்டுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கிற நுண்ணிய வேறுபாடுகள்தான் இக்கதையில் காட்டப்பட்டிருக்கிறது.

இளமை அளிக்கும் குரூரமான அறிதல் மனதை அலைகழிய வைக்கிறது. அதைத்தான் இந்தக் கதையின் ஹரியின் வாயிலாகக் காண்கிறோம். குறிப்பிட்ட வயதில் அம்மாவிடம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. தன்னுள் அம்மா செலுத்தும் ஆளுமையை விலக்க முற்படுகிறோம். அது ஏற்படுத்தும் சமநிலைக்குலைவைக் காட்டும் கதை.

அர்வின் குமார்

அன்புள்ள ஜெ

அனோஜனின் கதையின் மையச்சிக்கல் ஆர்க்கிடைப்புகளின் உருமாற்றம் என நினைக்கிறேன். குழந்தைக்கு அம்மா என்று ஒரு ஆர்க்கிடைப் கொடுக்கப்படுகிறது. தாயன்பு தாயின் தியாகம், தானியின் பொறுமை இதெல்லாம். இதை ஒட்டித்தான் தாய்நாடு தாய்மண் என்று ஏகப்பட்ட மெட்டஃபர்கள் உருவாக்கபபட்டுள்ளது.  அம்மா இன்னொரு பெர்சனாலிட்டி ஆக வெளிப்படும்போது அந்த ஆர்க்கிடைப்  உடைகிறது. ஆகவேதான் நிலைகுலைகிறான். அம்மாவிலிருந்து காமம் நீங்கிவிட்டால் அந்த ஆர்க்கிடைப்பை மீட்டுக்கொள்ளலாம் என நினைக்கிறான்

எஸ்.வரதராஜன்

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

=============================================================

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

கன்னி- கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்