பகுதி ஏழு : நீர்புகுதல் – 6
நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை நாடுகளின் அரசர்கள். இறுதியாக முதன்மை அரசர்கள் முறையாக அவைக்குள் நுழைந்தனர். அவர்கள் குலத்தொன்மை, அரசின் அளவு ஆகிய இரண்டைக் கொண்டும் மதிப்பிடப்பட்டனர்.
ஒவ்வொருவருடைய மதிப்பையும் குருக்ஷேத்ரப் போர் மாற்றி அமைத்திருந்ததை கண்டேன். குருக்ஷேத்ரத்தில் தோல்வியடைந்த அரசுகள் வென்றவர்களால் கைப்பற்றப்பட்டு சிறுநாடுகளாக உடைக்கப்பட்டு வென்றவர்களுக்கு கப்பம் கட்டும் நாடுகளாக மாறிவிட்டிருந்தன. மூன்று மகதங்கள், ஏழு கலிங்கங்கள், நான்கு வங்கங்கள், இரண்டு பிரக்ஜ்யோதிஷங்கள். அவர்களிடையே எவர் மெய்யான வங்க அரசர் என்பதில் பூசல். அவர்களின் அமைச்சர்கள் ஒருவரோடொருவர் சீறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் கப்பம் கட்டும் அரசர்களிடம் பணிந்து குழைந்தனர்.
கோசலம், கேகயம், காசி போன்ற நாடுகள் தொன்மையான குடிப்பெருமையாலேயே அதுவரை அவைகளில் முதன்மையை அடைந்திருந்தன. அவை சிற்றரசுகளாக தங்கள் இடத்தை ஒத்துக்கொண்டுவிட்டிருந்தன. சால்வன் சிற்றரசர்கள் நடுவே அமர்ந்திருந்ததைக் கண்டபோது அவனுடைய பாட்டன் மதுரா மேல் படைகொண்டு வந்ததை நினைவுகூர்ந்தேன். ஆனால் சிற்றரசே ஆயினும் தவநிலம் என்று பெயர் பெற்றிருந்தமையால் மிதிலை அவைமுதன்மை பெற்றது. ஜனகர் அனைவராலும் வணங்கப்பட்டார்.
அரசர்களின் சிறுசிறு ஆணவ வெளிப்பாடுகளும், மூப்பிளமை பூசல்களும், எவருக்கு எவ்வகையில் அவைமுதன்மை என்பது பற்றி அவர்களுக்கிடையே இருந்த கணிப்புகளும், அது சார்ந்த சூழ்ச்சிகளும் காலையில் இருந்தே என்னை பித்துபிடிக்க வைத்திருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைச் சொல்லி அவைக்குள் கொண்டுவர வேண்டியிருந்தது. நிஷாத குலத்து அரசரான சௌமித்ரன் என்னை அழைத்து “அமைச்சரே, கீழ்க்குடியினரான மச்சர்களுக்கு நிகராக எங்களை நிறுத்தியதற்காக நான் இங்கிருந்து கிளம்பிச்செல்கிறேன்” என்றார். “என் வண்டிகளை ஒருக்கச் சொல்க… நான் இதை பொறுக்கலாகாது.” அவருடைய நிஷாத அரசு முன்பு மகதர்களுக்கு கப்பம் கட்டிய பலநூறு சிற்றரசர்களில் ஒன்று என்பதை நான் அறிந்திருந்தேன். அதை அவர் அங்கே கூறுவது ஏன் என்றும் புரிந்தது.
நான் “மச்சர்களை உங்களுக்கு நிகராக நிறுத்தலாகாது என்று எங்களுக்கும் தெரியும். உங்கள் குடிப்பெருமையை அறியாதவர்கள் அல்ல யாதவர்கள். ஆனால் அது அஸ்தினபுரியின் அரசரின் முதன்மை ஆட்சியாளர் வக்ரசீர்ஷரின் விருப்பம். பேரரசர் யுயுத்ஸுவுக்கு அவர் அணுக்கமானவர். அவர் அவைக்கு வந்ததுமே மச்சரையே உசாவுவார் என்று அவர் கூறினார். தங்களுக்கு மாற்று எண்ணம் இருப்பதை நாங்கள் வக்ரரிடம் முறையாக தெரிவித்துவிடுகிறோம்” என்றேன். சௌமித்ரன் திகைத்து “மச்சர்கள் எவ்வகையிலோ வக்ரரின் அணுக்கத்தை பெற்றுவிட்டார்கள். வக்ரரோ அரசி சம்வகையின் உறவினர். இன்று அவர்களிடம் நாங்கள் பூசலிடுவதில் பொருளில்லை. பிறகு இதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளே சென்றார்.
அவையின் முகப்புவாயிலில் சூரசேனர் நின்று தேரிலிருந்து இறங்கும் ஒவ்வொரு அரசரையும் கைகூப்பி முகமனுரைத்து வரவேற்றார். பெரிய அரசர்கள் அனைவருமே அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பெருமதிப்பு என்று எடுத்துக்கொண்டார்கள். இன்னொரு முகப்பு வாசலில் வசுதேவர் நின்று அனைவரையும் வரவேற்றார். முந்தைய நாள் காலையில்தான் அவர்களிருவரும் மதுவனத்தில் இருந்து மதுராவுக்குள் நுழைந்திருந்தனர்.
அவர்களை இதன்பொருட்டு அங்கிருந்து இத்தனை தொலைவு வரவழைக்கவேண்டுமா என்ற ஐயம் பலராமருக்கு இருந்தது. அவர்கள் இருவருமே துயருற்றிருந்தனர். துயரிலிருந்து வரும் உடல்நலிவும் கொண்டிருந்தனர். சூரசேனர் எவரிடமும் உரையாடாமலாகி நெடுநாட்களாகியிருந்தது. மதுவனத்தில் காட்டின் ஓரத்தில் கட்டப்பட்ட சிறுகுடில் ஒன்றில் அவர் ஏழு பசுக்களுடனும் கன்றுகளுடனும் தன்னந்தனியாக வாழ்ந்துவந்தார்.
வசுதேவர் பெரும்பாலும் தனிமையிலேயே இருந்தார். இரு துணைவியரிடமும் அவர் பேசுவதில்லை என்றனர். கன்றுகளை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் சென்று ஏதேனும் நிழல் மரம் ஒன்றை தெரிவு செய்து அதனடியில் பகல் முழுக்க அமர்ந்திருந்தார். நெடுநாட்களுக்கு முன் அந்தக் கன்றோட்டும் தொழிலை வெறுத்து சொல்தேர்ந்து மதுராவுக்கு கிளம்பிவந்தவர் அவர். கம்சரின் அமைச்சரானார், கம்சரின் தங்கையை மணந்தார். மதுவனத்திலிருந்து மேய்ச்சல்கழியை வீசிவிட்டுக் கிளம்பும்போது கனவுகண்டதுபோல மதுராவை முடிசூடி ஆளும் வாய்ப்பையே அடைந்தார். இப்போது சலித்து மீண்டும் மதுவனத்தின் காடுகளுக்கு சென்றிருக்கிறார்.
“ஒரு வட்டம் முழுமையாகிறது. அதை மீண்டும் உடைக்கவேண்டுமா என்ன?” என்று அமைச்சர் பூர்ணகோபர் கேட்டார். “நான் அவர்கள் வருவது நலம் பயக்கும். அவர்களுக்கு அது நன்றா இல்லையா என்று எனக்கு தெரியாது. இங்கிருந்து இளமைந்தர் எவரேனும் சென்று அவர்களை பார்க்கலாம். அவர்கள் உகந்த நிலையில் இருந்தால் அழைத்து வரலாம்” என்றேன். அதன்படி உல்முகன் மதுவனத்திற்கு சென்றார். அங்கிருந்து அவரே இருவரையும் அழைத்து வந்தார்.
உல்முகன் திரும்பி வந்தபோது நிறைவுகொண்டு ததும்பிக்கொண்டிருந்தார். “தந்தையே, இங்கிருந்து செல்கையில் அவர்கள் இருவரும் வருவதற்கு விரும்புவார்களா என்ற ஐயம் எனக்கு இருந்தது. வரமாட்டார்கள் என்றே அனைவரும் சொன்னார்கள். மூத்தவர் என்னிடம் எவரேனும் அவர்களை அழைத்துவருவதென்றால் உன்னால்தான் முடியும். நம் இளமைந்தர்களில் மீசை கருமைகொள்ளாதவன் நீ மட்டுமே என்றார்” என்றார். “நான் முதலில் முதுதாதை சூரசேனரை சென்று பார்த்தேன். தந்தையே தாங்கள் மதுராவுக்கு வரவேண்டும், அங்கொரு அரசவிளையாட்டு நிகழவிருக்கிறது, மூதரசராக நீங்கள் அங்கு நின்று அரசர்களை வரவேற்க வேண்டும் என்றேன்.”
“எனக்கு அவரது இயல்பு முன்னரே தெரியும். தன்னை ஓர் யாதவனென உணர்பவர் அவர். கன்றோட்டுகையிலேயே மகிழ்பவர். ஆனால் அரசனென்றும் தன்னை கற்பனை செய்துகொள்பவர். ஓர் அரசர் என அவரை முன்நிறுத்தும் எச்செயலையும் பெருமகிழ்வுடன் எதிர்கொள்பவர். ஆயினும் அன்று அந்நிலையில் அவ்வுளத்துடன் இருப்பாரா என்ற ஐயமும் எனக்கிருந்தது. ஆனால் நான் அதை சொன்னதுமே மகிழ்ந்து ‘ஆம், நான் மதுராவுக்கு வந்து நெடுநாட்களாகிறது’ என்றார். பின்னர் என் கையை பற்றிக்கொண்டு ‘என் விழிகள் மங்கிவிட்டன. என்னால் எந்த அரசரையும் பார்த்து அவர் எவர் என்று உடனடியாக புரிந்துகொள்ள இயலாது. என்னருகே அமைச்சர் ஒருவர் இருந்து அதை அறிவிக்க வேண்டும்’ என்றார். நான் ‘அதற்கு இரு அமைச்சர்களை தங்கள் அருகே நிறுத்துகிறேன்’ என்றேன்” என்றார் உல்முகன்.
“அவர் மீண்டும் என் கையைப்பற்றி ‘அரசருக்கான உடைகள் இப்போது என்னிடம் இல்லை. என்னிடம் இருந்த உடைகள் அனைத்தையும் முன்னரே எங்கோ விட்டுவிட்டேன். அவை நல்ல நிலையில் இருப்பதற்கான வாய்ப்பில்லை’ என்றார். ‘தாங்கள் இப்போது அரசர் அல்ல, பேரரசர். தங்களுக்குகந்த அணியாடைகளும் நகைகளும் மதுராவில் ஒருக்கப்பட்டுவிடும்’ என்றேன். ‘நன்று, நானும் அரசர்களைப் பார்த்து நெடுநாட்களாகிறது’ என்று அவர் கூறினார். மகிழ்ந்து சிரித்து ‘அரசர்கள் உண்மையில் அரசர்களுடன்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும், கன்றுகளுடன் அல்ல’ என்றார். அதை சொல்லிக்கொண்டே இருந்தார்” என்று சொல்லிச் சிரித்து “உதிரக் காத்திருக்கும் கனியை ஊதி உதிர்க்கமுடியும் என்று ஒரு சொல் உண்டு” என்றார்.
“மீண்டுவர விழையாத உள்ளங்கள் இல்லை. துயரிலிருந்தும் கசப்பிலிருந்தும் தனிமையிலிருந்தும் மட்டுமல்ல, சென்ற எல்லா தொலைவுகளிலிருந்தும் மனிதர்கள் திரும்பிவரவே எண்ணுகிறார்கள். உவகையிலிருந்தும் நிறைவிலிருந்தும்கூட நெடுந்தொலைவு சென்றதாக உணர்ந்தால் உடனே திரும்ப முயல்கிறார்கள்” என்று அமைச்சர் பூர்ணகோபர் சொன்னார். உல்முகன் “நான் மூத்த தாதை சூரசேனர் வரும் செய்தியை தாதை வசுதேவரிடம் உரைப்பதற்காக செல்கிறேன் எனும் முறையில் அவரைச் சென்று சந்தித்தேன். சூரசேனரை மதுராவுக்கு அழைத்துச் செல்ல தந்தையின் ஆணையுடன் வந்திருப்பதாகவும், அதற்கான ஒப்புதலை தாதை வசுதேவரிடமிருந்து பெற விரும்புவதாகவும் கூறினேன்” என்றார்.
தனக்குத்தானே சிரித்துக்கொண்டு உல்முகன் தொடர்ந்தார் “நான் எண்ணியது போலவே அச்செய்தியைக் கேட்டதும் வசுதேவர் முகம் சுருங்கியது. ‘அவர் உடல்நிலை எவ்வண்ணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார். என் மகிழ்வை அடக்கிக்கொண்டு ‘நான் அவரிடமே கேட்டேன், அவர் வர விரும்புகிறார். உரிய உடல்நிலையிலும் இருக்கிறார் என்றார்’ என்றேன். ‘எனில் அழைத்துச் செல்’ என்றபின் கண்கள் கூர்ந்து ‘என்ன நிகழ்கிறது மதுராவில்?’ என்றார். அதுவே அவர் ஆர்வம் கொண்டிருப்பதை காட்டியது. எனக்குள் புன்னகைத்து ‘தந்தையே, ருக்மிக்கு எதிரான போர் ஒன்றை தந்தை அறைகூவினார். அதை நாற்களமாடலாக மாற்றிக்கொண்டார்’ என்றேன்.”
“தாதை வசுதேவர் தலையை அசைத்து தன் நிறைவின்மையை வெளிப்படுத்தினார். ‘நாற்களமாடல் என்பது நிகரிப்போரல்ல, பொய்ப்போர். அது சிக்கல்களை பெரிதாக்கும், ஒத்திப்போடும், ஒருபோதும் தீர்க்காது’ என்று அவர் சொன்னார். ‘ஆம், நானும் அதைத்தான் சொன்னேன். நிகரிப்போரெல்லாம் பொய். இங்கே தாதை வசுதேவரைப்போல அரசுசூழ்தல் அறிந்த ஒருவர் இருந்தால் அவ்வாறே கூறியிருப்பார், அவர் இல்லாத குறையை இப்போது உணர்கிறோம் என்றேன். தந்தை ஆம் என்றார்’ என்றேன். அவர் முகம் மலர்ந்தது. ஆனால் உடனே முகத்தை திருப்பிக்கொண்டு ‘நான் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டு நெடுநாட்களாகிறது. இவை எவற்றிலும் எனக்கு ஆர்வமில்லை. என் இடம் இது. இங்கு நான் இவ்வண்ணம் எளிய சிற்றுயிரென மடிந்து மறையவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்.”
உல்முகன் சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டேன். ‘ஆம் தாதையே, துறந்து ஏகுவதே அரசமுனிவரும் தவமுனிவரும் கடைக்கொள்ளும் வழி’ என்றேன். ‘ஆகவே இதை தங்கள் கடமை என்று சொல்லமாட்டேன். ஆனால் ஓர் எளிய ஆடல் என்று தாங்கள் அங்கு வரலாமே?’ என்றேன். வசுதேவர் ‘என்னை அவன் அழைக்கவில்லையே’ என்றார். அவர் அதை சொன்னபோது நான் எப்படி சிரிக்காமலிருந்தேன் என இன்று எண்ணினாலும் புரியவில்லை.”
“நான் அவருடைய அச்சொல்லுக்காகவே காத்திருந்தேன். ‘தந்தையே, உண்மையில் தங்களை அழைப்பதற்காகத்தான் நான் வந்தேன். தவம் மேற்கொண்ட தாங்கள் வரக்கூடுமா என்ற ஐயம் இருப்பதனால்தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றேன். ‘ஒருமுறை வந்து மீளலாம் என்றே தோன்றுகிறது. தந்தைக்கும் துணையாக எவராவது வருவது நன்று. தன்னுடன் நான் இருந்தால் அவர் இன்னும் நம்பிக்கையாக உணர்வார்’ என்று வசுதேவர் சொன்னார். இருவரையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.”
பலராமர் புன்னகைத்து “இருவரும் இதனூடாக தங்கள் சோர்வுகளில் இருந்து வெளிவந்தால் நன்றுதானே?” என்றார். நான் “இந்நகரில் ஒவ்வொருவரும் தங்கள் துயர்களிலிருந்தும் தனிமையிலிருந்தும் வெளிவந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆடலின் பெறுபயன் என்பது முதன்மையாக இதுவே” என்றேன். “ஆம், நானும் அதையே எண்ணினேன். இங்கே மெல்லமெல்ல உயிர் திரும்பிக்கொண்டிருக்கிறது. புதுமழைக்குப் பின் பசுமை மீள்வதைப்போல” என்றார் பலராமர்.
வந்தது முதலே அவர்களிருவருமே அந்த அவைகூடலை விரும்புவதை கண்டேன். வந்தவுடனேயே சூரசேனர் வசுதேவரை அழைத்துக்கொண்டு சென்று அந்த நாற்களப் பந்தலை சுற்றிப் பார்த்தார். அதில் ஒவ்வொரு இருக்கையும் எவருக்கென போடப்பட்டிருக்கிறது என்று உசாவி அறிந்துகொண்டார். அவர் மிக அரிதாகவே மதுவனத்தில் இருந்து வெளியே வந்தார். மதுவனம் ஓர் அரசோ நகரமோ அல்ல, ஆகவே அவருக்கு எல்லாமே வியப்பூட்டியது. அவர் நன்கறிந்த அனைத்தையும் மறந்து மீண்டும் கண்டறிந்து திகைப்பும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். “இத்தனை அரசர்கள் ஓரிடத்திற்கு வருகிறார்களா? ஓர் ஆடலுக்காகவா?” என்றார்.
வசுதேவருக்கு ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒன்று சொல்வதற்கு இருந்தது. “மகதனின் அருகே கலிங்கனை அமரவைக்கலாகாது. அவர்களுக்குள் நெடுநாட்கள் நீண்ட பூசலொன்று உண்டு. இந்த அவையில் அவர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உடல்மொழியிலிருந்து ஏதேனும் கசப்புகள் உருவாகக்கூடும்” என்றார். “மச்சர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைப்பதுபோல் இங்கு பீடம் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழக்கூடாது. தனித்தனியாக அவர்கள் செயலற்றவர்கள். ஒருங்கு திரண்டால் விந்தையானதொரு திமிறலை அடைகிறார்கள்” என்றார்.
அவர்களுக்கு மேலும் ஆர்வம் வரும்படி விழா ஒருங்கிணைப்புக்கான அனைத்துச் செயல்களிலும் அவர்களை ஈடுபடுத்தினேன். ஒற்றர்களில் ஒருசாராரை சீராக அவர்களை சந்தித்து நிகழ்வதை சுருக்கி உரைக்க சொன்னேன். இரவெல்லாம் இருவரும் விழா ஒருங்கமைப்புகளில் முற்றாகவே ஈடுபட்டிருந்தனர். அவர்களின் வருகை இன்றி அவ்விழா நிகழ்ந்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவரும் பங்களிப்பாற்றினார்கள்.
பிரக்ஜ்யோதிஷத்தின் இளைய பகதத்தனுக்கும் அவருடன் வந்த இளையோனுக்குமிடையே சிறு பூசலொன்று உருவாகி அது நாப்பிறழ்ச் சொற்களாக வளர்ந்துவிட்டதென்று ஒற்றர்கள் சொன்னதுமே நான் சூரசேனரை அவர்களின் மாளிகைக்கு அனுப்பினேன். அவர் அங்கு அவர்களை தேடிச் சென்றதுமே இருவரின் உளநிலைகளும் மாறிவிட்டன. அவர் இருவரையும் அமரவைத்து ஓரிரு நற்சொற்கள் சொன்னதும் அவர்கள் தந்தை சொல்லென அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் மகிழ்ந்ததைவிட பலமடங்கு சூரசேனர் மகிழ்ந்தார். ஒரு சொல்லில் அவர்களின் பூசலை தீர்த்ததைப்பற்றி பலமுறை என்னிடம் சொன்னார். “அரசர்களிடையே நிகழும் பூசல் என்பது ஒரு சிறு நோய்க்கொப்புளம் போன்றது. அத்தருணத்திலேயே அதை சீர்படுத்திவிடுவது நன்று. இல்லையேல் அது பெருகும், உயிர் கவ்வி அழிக்கும்” என்றார். “பொதுவாகவே நான் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் நான் முறையென அல்லாதவற்றை சொல்வதில்லை.”
அந்த நாற்களமாடலுக்கான நெறிகள் அனைத்தையும் நான் முன்னரே முறையாக எழுதி அனைவருக்கும் அளித்திருந்தேன். அதை அவர்கள் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதில் மீறல் ஏதேனும் நிகழ்ந்தால் அதை முறைப்படி எனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் நெறிகள் அனைத்தையுமே சூரசேனரும் வசுதேவரும் தொடர்ந்து மாற்றிகொண்டிருந்தனர். அவர்கள் மாற்றுவதை உடனடியாக ஏற்றுக்கொண்டு சிறிய இடைவேளைக்குப் பின் எது முன்னரே ஏற்கப்பட்டதோ அதை மட்டுமே தொடரும்படி நான் அனைவருக்கும் மந்தணமாக சொல்லியிருந்தேன்.
அவர்கள் ஆர்வத்தையும் உவகையையும் பார்த்த பின் உல்முகன் என்னிடம் “ஒருமுறையேனும் தவறுதலாகவேனும் அவர்கள் இளைய தந்தை பெயரை சொல்வார்களா என்று நான் முழு இரவும் செவிகொண்டிருந்தேன். அவர்கள் அவரை முற்றாக மறந்துவிட்டார்கள்” என்று சொன்னார். “குற்றவுணர்ச்சி தாளமுடியாததனால் அவர்கள் அவரை முற்றாக மறக்க முயன்றார்கள்” என்று நான் சொன்னேன். “அவர்கள் எண்ணியதைவிட இயல்பாகவே அவர்கள் மறந்துவிட்டார்கள். பார்வையிலிருந்து ஒருவரை விலக்குவது அவரை நம் வாழ்வில் இருந்தும் விலக்கிவிடுகிறது.”
“நம் வாழ்வில் அன்றாடத்திற்கு இருக்கும் இடம் என்ன என்று நமக்கே தெரியாது. அன்றாடம் நம் சித்தத்தின் பெரும்பகுதியை நிறைக்கிறது, நம் வாழ்வில் பெரும்பொழுதை நிறைக்கிறது. அன்றாடத்திற்கு அப்பால் நாம் சில கணங்கள் சென்று வருகிறோம். கனவுகள் நம்மை ஊடுருவிச் செல்கின்றன. அங்கு மட்டுமே இளைய யாதவர் இருப்பார். கனவுகள் நிகழ்காலத்தில் இல்லை. நோக்குக, இங்கு வரும் எந்த அரசரும் அவர் பெயரை சொல்லப்போவதில்லை! இங்கு நிகழும் எந்தச் சடங்கிலும் அவர் நினைவுகூரப்படுவதும் இல்லை. அவர் பெயர் வரும்போதுகூட அது மூதாதை பெயர்களின் நீண்ட நிரையில் ஒன்றுபோல அத்தனை எளிதாக இயல்பாக கடந்து செல்லப்படும்” என்றேன்.
“அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் அவர் அவ்வப்போது நினைவுக்கு வருகிறார் என்று தெரியவில்லை” என்றார் உல்முகன். நான் புன்னகைத்து “அந்நினைவு நமக்கு அவ்வண்ணம் வருவதில் இருக்கும் விந்தையால் அதை மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறோம் போலும். அது இயல்பானதே என்று உணர்கையில் கடந்து செல்வோம். இளைய யாதவரின் பெயர் நம்மில் எவருக்கும் இன்று ஒவ்வா உணர்வையோ, பெருந்துயரையோ அளித்து மகிழ்ச்சியை குலைப்பதில்லை, அன்றாடத்தின் ஒழுங்கை மாற்றி அமைப்பதுமில்லை” என்றேன்.
அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அவை நிறைந்துகொண்டிருந்தது. நிறைவடையும் அவையில் ஏற்படும் ஒலி மாறுபாட்டை உணர்ந்தேன். விழிகளால் தொட்டுத்தொட்டு அனைவரையும் நோக்கினேன். ஏற்கெனவே துணையமைச்சர்களிடம் பட்டியல் வைத்து அனைவரையும் வருகை நோக்கச் சொல்லியிருந்தேன். வேண்டுமென்றே பிந்திவந்து தானில்லாமல் அவை தொடங்கிவிட்டதைச் சொல்லிப் பூசலிடுவோர் எப்போதும் உண்டு. அரசர்கள் பொய்ச்சிரிப்புடன் முகமன்களை உரைத்தனர். செயற்கையாக உரக்க நகைத்தனர். அதைவிட செயற்கையாக நெருக்கத்தை நடித்தனர்.
அஸ்தினபுரியில் இருந்து யுயுத்ஸு வருவாரா என்ற ஐயமிருந்தது. அதைவிட அவரை பிற ஷத்ரிய மன்னர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற தயக்கமும். யுயுத்ஸுவை மதுராபுரி அஸ்தினபுரியின் பேரரசராகவே ஏற்கிறது என்று வெளிப்படையாக காட்டிவிடவேண்டும், அரசர்களுக்கு எந்த ஐயமும் அதில் எழக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே யுயுத்ஸு வருகிறார் என்ற செய்தி வந்ததுமே வசுதேவரையும் நிஷதனையும் படகுத்துறைக்கே அனுப்பினேன். ஆனால் அவர்கள் அங்கே செல்வதற்குள்ளாகவே பதினெட்டு அரசர்கள் தங்கள் அமைச்சர்களை யுயுத்ஸுவை வரவேற்க படகுத்துறைக்கு அனுப்பியிருந்தனர்.
யுயுத்ஸு அவைக்களத்திற்கு வந்தபோது வாசல் முகப்பில் சூரசேனர் நின்று வரவேற்றார். கலிங்கர்களும் மகதர்களும் வங்கர்களும் என பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் வாயிலுக்கே சென்று யுயுத்ஸுவை வரவேற்று அழைத்து வந்தனர். அவருடன் ஒரு சொல் பேச, அவர் அருகே அமர அவர்களிடையே போட்டியே நடந்தது. அந்த அவை நடுவே வந்து யுயுத்ஸு அமர்ந்தபோது அவரே பேரரசர் என்பது அவையினரின் முகங்களிலேயே நன்கு தெரிந்தது. யுயுத்ஸுவும் அதை உணர்ந்திருந்தார். அவர் ஜனகருக்கு மட்டுமே தலைவணங்கினார்.
அவைநிறைவு நிகழ்ந்துவிட்டதை உல்முகன் என்னிடம் கைகாட்டி தெரிவித்தார். நான் தலையசைத்த பின்னர் திரும்பி அவைக்காவலனிடம் அவைநிறைவை அறிவித்தேன். பின்னர் இறங்கிச் சென்று அரங்கின் சிறு மூலையில் அனைவரையும் பார்க்கும்படி நின்றேன். ஒருகணத்தில் இயல்பாக என் பார்வை கணிகர் எங்கிருக்கிறார் என்று தேடி சலித்து மறுகணத்தில் அவர் அங்கில்லை, கிளம்பிச் சென்றுவிட்டார் என்று தெளிந்து, அவ் இன்மையில் துணுக்குற்று, பின்னர் சிறு மகிழ்வை அடைந்தது. அவர் அங்கில்லை என்பதில் அவ்வண்ணம் மகிழலாமா என்ற எண்ணம் தொடர்ந்து எழுந்தது. அவர் வந்து வேறு எதையோ நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார். அது என்ன? அது ருக்மியின் உள்ளத்தில் நுண்வடிவில் இருக்கும். நச்சுவிதை என, அறியா நரம்பின் ஒரு முடிச்சு என. ருக்மி அங்கு வரும்போது அது தெரியும்.
நிமித்திகன் மேடையேறி அவைநிறைவை தெரிவித்தான். அங்கு கூடியிருக்கும் அனைத்து அரசர்களையும் குலமுறை மூப்பு வரிசையில் ஓங்கிய குரலில் வரவேற்றான். “அவையோரே, விஷ்ணுவில் இருந்து பிரம்மா பிறந்தார். அவரிலிருந்து பிரஜாபதியாகிய அத்ரி எழுந்தார். அத்ரியின் மைந்தர் சந்திரன். சந்திரனின் மைந்தன் புதன். அவர்களின் கொடிவழி புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என நீண்டு யாதவ குடிமூதாதையான யதுவில் நிரப்புற்றது. யதுவின் குருதிமரபு சகஸ்ரஜித், சதஜித், ஹேகயன், தர்மன், குந்தி, பத்ரசேனர், தனகன், கிருதவீரியன், கார்த்தவீரியன், ஜயத்வஜன், தாலஜம்பன், வீதிஹோத்ரன், அனந்தன், துர்ஜயன், யுதாஜித், சினி, சத்யகன், ஜயன், குணி, அனாமிஸ்ரன், பிரஸ்னி, சித்ரரதன், விடூரதன், சூரன், சினி, ஃபோஜன், ஹ்ருதீகன் என வளர்ந்து எங்கள் குடிமூதாதையான சூரசேனரை வந்தடைந்தது. அவர் மைந்தர் வசுதேவர். அவர் மைந்தராகிய பலராமர் இங்கே அவையமர்ந்திருக்கிறார்.”
“இங்கு அவைகொண்டுள்ள அரசர்கள், குடித்தலைவர்கள் அனைவருக்கும் தொல்புகழ்கொண்ட யாதவக் குடிமரபின் மூதாதையரின் வாழ்த்துக்கள் அமைவதாக! குலதெய்வங்கள் இங்கே எழுந்தருள்க! அவையோரே, இந்த அவையில் இன்று ஒரு நிகரிப்போர் நிகழவிருக்கிறது. போர்புரிபவர்கள் ஆசிரியரும் மாணவரும் என திகழ்ந்தவர்கள். அவர்களிடையே அன்பும் மதிப்பும் உள்ளது. ஆகவே ஓர் அரசப்பூசலை இவ்வண்ணம் நிகரிப்போரில் தீர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது இருவரில் எவர் வென்றார் என்று அறுதியாக அறிவிக்கும் ஆடல். வென்றவரின் கோரிக்கையை தோற்றவர் ஏற்றுக்கொண்டாகவேண்டும். அதற்கு இங்கு அவையமர்ந்திருக்கும் அனைத்து அரசர்களும் சான்றாவார்கள்.”
அவையினர் கைதூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்று ஓசையெழுப்பினர். “நிகரிப்போருக்கு தொல்நூல்கள் அமைக்கும் வழிமுறைப்படியே இந்த அவை அமைந்துள்ளது. இங்கு அனைத்து முறைமைகளும் கடைபிடிக்கப்படும். அதற்கு இந்த அவையே சான்றும் வழிகாட்டியுமாக திகழவேண்டும். அன்பும் அளியும் எல்லை மீறாது நிகழும் இந்தப் போர் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் இனிதாகுக!” நிமித்திகன் தலைவணங்கினான்.
கொம்புகளும் மங்கல இசையும் முழங்க அந்தணர் எழுவர் அவைபுகுந்தனர். கங்கை நீர் நிறைந்த பொற்கலங்களுடன் வந்து அவையையும் அரியணையையும் நீர்தெளித்து வேதம் ஓதி தூய்மைப்படுத்தினர். மீண்டும் முரசொலிகள் எழுந்தன. இசைச்சூதர் அவைபுகுந்து இரண்டு பிரிவாக விலக அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் வந்து பிரிந்து விலகினர். மதுராவின் கருடக்கொடியுடன் ஏவலன் ஒருவன் அவைபுகுந்தான். தொடர்ந்து வந்த அறிவிப்பாளன் வலம்புரிச் சங்கை ஊதி “மதுவனத்தின் சூரசேனரின் பெயர்மைந்தர், வசுதேவரின் முதல் மைந்தர், மதுராவின் அரசர் பலராமர் வருகை!” என்று அறிவித்தான்.
அதை தொடர்ந்து அரசணிக்கோலத்தில் மதுராவின் தொன்மையான மணிமுடியைச் சூடி, மேழிவடிவில் அமைக்கப்பட்ட செங்கோலை ஏந்தி, சீரான நடையில் பலராமர் நடந்து வந்தார். அவருடைய பெரிய வெண்ணிற உடலில் நகைகளில் எழுந்த அருமணிகள் ஆயிரம் விழிகள் திறந்ததுபோல மின்னின. நீல நரம்போடிய வெண்பளிங்குக் கைகளே அவருடைய அழகு என சூதர் பாடுவதுண்டு. கண்கள் களைத்திருந்தாலும் அவர் உடல் மெருகு கொண்டிருந்தது. அவை அவரையே நோக்கிக்கொண்டிருந்தது.
பலராமர் முப்புறமும் திரும்பி அவையை வணங்கினார். அவைகூடல் அவருக்கு வழக்கம்போல உவகையை அளிக்கவில்லை என்று தெரிந்தது. அவர் முந்தையநாள் மிகுதியாக மது அருந்தியிருந்தார். ஆகவே காலையில் தலைப்பெருப்பும் கண்கூச்சமும் இருப்பது தெரிந்தது. அவையின் ஒளியும் ஒலியும் பெருகிச்சூழ்ந்து அவரை எரிச்சலுறச் செய்தன. அவர் பொதுவாக தலையசைத்துவிட்டு விழிகளைத் தாழ்த்தி நிலம்நோக்கியபடி வந்தார். அவையமர்ந்த அரசர்கள் எழுந்து கைதூக்கி அவரை வாழ்த்தினர். வாழ்த்தொலிகளும் இசையும் சூழ்ந்து அலைகொள்ள அவர் களிக்களத்தில் இடப்பட்ட அவருக்கான பீடத்தில் அமர்ந்தார். ஏவலர் வந்து மணிமுடியையும் செங்கோலையும் உடைவாளையும் பெற்றுக்கொண்டு அருகிருந்த பெரிய மேடையில் வைத்தனர். பலராமரின் அருகே ஆட்டத்துணைவனாக நிஷதன் அமர்ந்தார்.
அதன்பின் நிமித்திகன் மேடையேறி “விதர்ப்பத்தின் அரசரும், கௌண்டின்யபுரியின் பீஷ்மகரின் மைந்தரும், போஜகடகத்தின் தலைவருமான அரசர் ருக்மி அவைபுகுகிறார்” என்று அறிவித்தான். மீண்டும் கொம்போசை எழுந்தது. இசைச்சூதர்கள் முன்னால் வந்து விலக, மங்கலச்சேடியர் வந்து மறுபுறம் விலக, விதர்ப்பத்தின் கொடியுடன் முதன்மைக் காவலன் வந்தான். தொடர்ந்து வலம்புரிச் சங்கு ஊதியபடி ஒரு காவலன் முன்னால் வர விதர்ப்பத்தின் மணிமுடியை அணிந்து கையில் செங்கோலுடன் ருக்மி அவைபுகுந்தார்.
கணிகரின் சொல் அங்கு என்ன என்பது அப்போது தெரிந்தது. பிறிதொரு நாட்டுக்குள் மணிமுடியும் செங்கோலுமாக அரசர்கள் நுழையும் வழக்கம் இல்லை. அங்கு அவ்வாறு நுழையவேண்டும் என்பது ருக்மிக்கே தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ருக்மி அவைபுகுந்ததும் அனைவரும் தன்னியல்பாக அவரை வாழ்த்தி குரலெழுப்பினர். அரசர்கள் முன்பெனவே கைதூக்கி அவரை வாழ்த்தினார்கள். அவையெங்கும் வாழ்த்தொலி முழங்கிக்கொண்டே இருக்க ருக்மி கைகூப்பி அதை ஏற்றுக்கொண்டு வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்தார். அவரிடமிருந்து மணிமுடியையும் செங்கோலையும் பெற்றுக்கொண்டு பலராமரின் மணிமுடியும் செங்கோலும் வைக்கப்பட்டிருந்த அதே மேடையில் அருகே வைத்தனர் விதர்ப்பத்தின் ஏவலர்.
அது அரசக்கோலம் எதுவாயினும் இயல்பாக உருவாக்கும் ஏற்பு. பலராமர் சோர்ந்திருந்தமையால் ருக்மியின் முகமலர்வு அவர்களுக்கு மேலும் உவப்பாக இருந்திருக்கலாம். அது அவைமுறை அல்ல என்பது அப்போது அங்கிருக்கும் எவருக்கும் தோன்றியிருக்காது. ஆயினும் அது ருக்மியை மலரவைத்தது. முந்தைய நாள் நகர்நுழைந்தபோது குடிகளின் ஏற்பில் அவர் ஏற்கெனவே உளம் மயங்கியிருந்தார். அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தன்னை பேரரசராக எண்ணி வரவேற்பதாக கற்பனை செய்துகொண்டார். அந்த ஆட்டத்திற்கு அவருடன் இருப்பதற்காக கணிகர் அனுப்பிய பேய் அது என்று எனக்கு தெரிந்தது.