பெருவலி- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தச் சம்பவம் குறித்து தனிப்பட்ட உரையாடலில் சொல்லியிருக்கிறீர்கள். மகத்தான விஷயம். கண்ணீர் வரவழைக்கும் ஒன்று.

இரு கேள்விகள்.

1. ஒருமுறை நீங்கள் வீட்டு வேலையின் போது கீழே விழுந்து அந்த வலியை அனுபவித்தபடி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் கொப்புளிக்கும் வலியை சிவத்தின் துளிகளாக உணர்ந்து உருவகித்திருந்தீர்கள். இது நீங்கள் கோமல் சுவாமிநாதனிலிருந்து பெற்ற உள்ளுணர்வாக இருக்கக் கூடுமா?

2. புனைவின் எந்த பாவனையும் இல்லாத வெளிப்படையான ஆழமான அற்புதமான அனுபவ பகிர்தல் இது. இது எப்படி சிறுகதையாகிறது?

பணிவன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

*

அன்புள்ள அரவிந்தன்

இவ்வரிசைக் கதைகள் எல்லாமே இவற்றின் தேவைக்கு ஏற்ப சிறுகதையின் இலக்கணங்களைச் சற்றே மீறிச்செல்கின்றன என்று நினைக்கிறேன். எல்லா கதைகளிலும் மையக்கதாபாத்திரத்தை அவர் நிற்கும் மண்ணுடன் சேர்த்தே அள்ள முயன்றமையால் தகவல்களும் விவரணைகளும் சிறுகதையின் இலக்கணத்துக்கு அடங்காமல்தான் செல்கின்றன. ஆனால் சென்ற இருபதாண்டுகளில்வந்த – அதாவது நவீனத்துவகாலகட்டம் தாண்டி வந்த- எல்லா முக்கியமான கதைகளும் அப்படி இலக்கணத்தை தோன்றியபடி மீறிச்சென்றவையே என்பதையும் காணலாம்.

கோமல் வலியை உணர்ந்ததைப்பற்றிச் சொன்னது என் வாழ்க்கையின் ஆழமான தருணங்களில் ஒன்று. அவர் மிகச்சாதாரணமாகச் சொன்னார். முன்பு சில தருணங்களில் சொன்ன பல திரையுலக அனுபவங்களுடன் அந்த வரிகள் இணைந்துகொண்டன. அந்த வரிகளை அந்தத் தருணத்தை அனேகமாக எனக்கு தெரிந்த எல்லா நண்பர்களிடமும் சொல்லியிருப்பேன். சொல்லிச் சொல்லி நான் அவராக ஆகி மலை ஏறினேன். உலகையே சூழ்ந்திருக்கும் நோயின் வலியை முழுக்க நானே ஏற்றுக்கொண்டபடி.

இந்தக் கதைகளில் எப்படி நான் அந்த மையக்கதாபாத்திரமாக ஆகிறேனோ அப்படி அவர் நானாகவும் ஆகிறார். ஆகவேதான் இது புனைவு. இருவரும் ஒரு புனைவு வெளியில் சந்தித்துக்கொள்கிறோம். அந்த நீண்ட தன்னுரை கோமல் சொல்லியிருக்கக்கூடியது, அல்லது வேறு வகையில் சொன்னது என்றுதான் சொல்லமுடியும். அந்த முக்கியமான நாடகத்தருணம் அவரால் ஒருவகையில் எழுதப்பட்டுள்ளது. நான் அதை மீண்டும் என் புனைவாக எழுதியிருக்கிறேன்.

சிறுகதை என்றால் அது ஒரு தருணத்தில் நிகழும் திருப்புமுனைதான். கோமல் அந்த வலியில் இருந்து மீறி எழுந்து இமயம் செல்வது கதையின் உடல். கைலாயத்தைக் காண்பது உச்சம்.அந்த உச்சம் அவர் நினைத்திருந்ததற்கு மாறாக இன்னொன்றாக நிகழ்வது சிறுகதையின் திருப்புமுனை. அந்த எழுச்சியின் கணமே இதைக்கதையாக்குகிறது. கைலாய மலை ஏற்றம் உண்மையில் வலி வழியாக ஏறிச்செல்வது. அதன் உச்சியில் அந்த ஒளிமிக்க மணிமுடி. அவரைக் கடைசிவரை தொடர்ந்து வரும் மரணம் ஒரு இனிய நிகழவாக ஆகும்போது சிறுகதை முடிகிறது.

இப்படிச் சொல்லலாம். வேறு வாசிப்புகளும் இருக்கலாம்

ஜெ

==================================================

அன்புள்ள ஜெயமோகன்

கோமலுக்கு செய்யப்பட்ட அற்புதமான அஞ்சலி. அவர் இனிமேல் இந்தக்கதை வழியாகவே இலக்கியத்தில் நினைக்கப்படுவார். இத்தனை வருடங்கள் கழிந்துவிட்டன. கிட்டத்தட்ட எல்லாருமே அவரை மறந்து விட்டார்கள். இப்போது அவரை இப்படி நினைவுகூர்ந்து எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அவரை கைலாச மலையின் அடியில் ஒளியுடன் நிற்பவராகத்தான் இப்போது நினைக்கமுடிகிறது.

கதை முழுக்க மரணம் எப்படியெல்லாம் வந்துகொண்டே இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன். வலி மரணம்தானே. அதைப் பெண் குழந்தைபோல கோமல் ’வளர்த்து ஆளாக்குகிறார்’ என்பதும் இணைபிரியாத நண்பன் போல அது கூடவே வந்துகொண்டிருப்பதும் அந்த எருமையும் எல்லாம் ஆச்சரியமான உவமைகள்.

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராம்

நன்றி.

இந்தக்கதையை நான் இத்தனை வருடம் சொல்லிக்கொண்டேதான் இருந்தேன். அந்த உச்சத்தை எனக்குள் கற்பனையில் நிகழ்த்திக்கொள்ள இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

ஜெ

====================================================

அன்புள்ள ஜெ,

அறத்தில் ஆரம்பித்து இந்த பெருவலி கதை வரை எல்லாம் வாசித்தேன். எல்லாம் ஒருவகையில் உலுக்கிய எழுத்துக்கள். உங்கள் கிரியேட்டிவிட்டியின் உச்சியிலே இருக்கிறீர்கள். இந்த பெருவலி கதையைப்பற்றி நான் ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம். அதாவது 87 ல் நான் கரூரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் நான் வழக்கம்போல பையை என் சட்டைக்குள் போட்டு வேட்டியில் செருகி வைத்திருப்பேன் ஆதலால் அதை சட்டை பட்டனை திறந்து எடுத்தேன். அப்போது எனக்கு தோன்றியது ஒரு விசித்திரமான நினைப்பு. நான் என் வயிற்றுக்குள் கையை விட்டு எதையோ எடுப்பதை மாதிரி. ஏன் அப்படி தோன்றியது என்று நினைப்பேன். ஆனால் ஒன்றுமே தெரியவில்லை. இரண்டு வருஷம் கழிந்து எனக்கு ஆப்பரேஷன் நடந்தது. இரைப்பையிலே கட்டி வந்திருந்தது. அந்த கட்டி வந்து இரண்டு வருஷம் ஆகியிருக்கும் என்று டாக்டர் சொன்னார். எனக்கு படபடப்பாக இருந்தது. அந்த கட்டி வந்த அன்றைக்கே என் மனசுக்கு அதைப்பற்றி தோன்றிவிட்டதா என்று நினைத்தேன். என் குரு அரவிந்த ஆசிரமத்திலே இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இதைப்பற்றி கேட்டேன். கண்டிப்பாக அப்படித்தான். உள்மனசுக்கு தெரியும் என்று சொன்னார்.

இந்தக்கதையிலே கோமல் அந்த எருமைக்குட்டியின் படத்தை பார்க்கிறாரே. அன்றைக்கு அவர் மனசும் நல்ல நிலையிலே இல்லை. அழுகிறார். அன்றைக்குத்தான் அவருக்கு புற்றுநோய் வந்திருக்கும். அந்த உள்மனசுக்கு அது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி நினைத்தபோது எனக்கு படபடப்பாக இருந்தது. அது நடக்கக்கூடிய விஷயம்தான் என்று நினைக்கிறேன்

எஸ். சிவலிங்கம்

அன்புள்ள சிவலிங்கம்

விசித்திரமாக இருக்கிறது. எனக்கு பொதுவாக அற்புதங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஆழ்மனதின் எல்லைகளைப் பற்றி ஒரு புரிதல் உண்டு. ஆயுர்வேத மரபின்படி நோய் முதலில் சுஷுப்தியிலும் பின் ஸ்வப்னத்திலும் பின்பு ஜாக்ரத்திலும் வந்து அதன் பிறகுதான் உடலுக்கு வருகிறது. ஆகவேதான் கனவுகளைப்பற்றி விரிவாக விசாரிக்கிறார்கள்.

ஜெ

வலிக்கும் ஆன்மீகத்திற்கும் எதோ சம்பந்தம் இருக்கிறது. விரதங்கள் வலியை வருவித்துக்கொள்வதுதானே. தீ மிதித்தல் அலகுகுத்திக் கொள்ளுதல் போன்றவை இறை வழிபாட்டின் ஒரு அங்கமாய் இருப்பது எனக்கு ஞாபகம் வருகிறது. எங்களூர் திரௌபதியம்மன் தீ மிதி விழாவில் மக்கள் சாட்டையடி வாங்கிக்கொள்வார்கள். நானும் மூன்று அடி வாங்குவேன், கைகளில் தாம்புக்கயிறு தடிமனுக்கு வீக்கம் ஏற்படும் அளவிற்கு. அந்த வலியில் எனக்கு கிட்டிய மன அமைதி எனக்கு இப்போதும் வியப்பூட்டுவதாக உள்ளது. சபரிமலை யாத்திரையில் கரிமலையில் ஏறும்போது ஒவ்வொரு அடியும் எனக்கு வலிநிரம்பியதாய் இருக்கும். ஒருவேளை அந்த வலிக்காகவே நான் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்கிறேன் எனநினைக்கிறேன். வலி நம்முடைய பாசாங்குகளையெல்லாம் கழற்றி விட்டு நம்மை நிர்வாணமாக ஆக்குகிறது. நம் அகங்காரமெல்லாம் வலியில் கழன்றுபோகின்றன. இந்தச்சின்னஞ்சிறு வலிகள் நம் ஆன்மீகத்துக்கு உதவுவதுபோல் கோமல் அவர்களின் பெருவலி அவருக்கு ஆன்மீக நாட்டத்தை தந்திக்கலாம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

துரைவேல்

கோமல், கடிதங்கள்

வலி,கோமல்:கடிதங்கள்

வலி

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


தாயார் பாதம்

மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைஇருகதைகள்
அடுத்த கட்டுரைசாமர்வெல் ஓர் விவாதம்