“செல்லம், இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு காட்டுவியா?” என்று கீழிருந்து கெஞ்சலான குரல் வந்தது. அனந்தன் செம்பன்குளத்தின் பெருவரம்பாக அமைந்திருந்த ஆறடி மண்சாலையில் சென்று கொண்டிருந்தான்.
மறுபக்கம் சாலையிலிருந்து இறங்கிச் செல்லவேண்டிய ஆழத்தில் இருந்த ஓலைக்கூரை வீட்டின் முன்னால் பகவதியம்மை மூச்சிரைத்தபடி நின்றிருந்தாள். அவள் கையில் நீல இன்லெண்ட் லெட்டர். அருகே அவளுடைய மகன் அவள் இடுப்புவேட்டியின் நுனியை ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையில் ஒரு மாம்பழத்துடன் நின்றான்.
அவள் அவனைக் கண்டபின் குடிலுக்குள் சென்று அந்த லெட்டரை எடுத்துக்கொண்டு ஓடிவந்திருந்தாள். அவளுடைய கழுத்து மூச்சில் ஏறியிறங்கியது. கழுத்துக்குழி பதைத்தது. கன்னங்கள் ஈரமாக பளபளத்தன. மேலே முந்தானையாகப் போட்ட வெள்ளை துண்டு விலகி பெரிய மார்பகங்களின் இடைவெளி வாழையிலையின் நடுவளைவுபோல பளபளப்பாகத் தெரிந்தது.
அனந்தன் “நான் பிளாக்காப்பீஸுக்கு போகணுமே” என்றான்.
“ஒரு அஞ்சுமினிட்டு மக்கா… வந்து படிச்சு காட்டிட்டு போ… எனக்க செல்லம்ல?” என்றாள்.
அனந்தனுக்குக் கூச்சமாக இருந்தது. மென்மீசையெல்லாம் வந்தபிறகு ஓர் அன்னியப்பெண் செல்லம் ஏன்றெல்லாம் அழைப்பதென்றால்… அவன் குடில்களில் வேறு எவராவது இருக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்தான். பகலில் அந்த குடில்களில் எவரும் இருப்பதில்லை. வெள்ளாவி வைத்த துணிகளுடன் குளத்திற்கு துவைக்கச் சென்றிருப்பார்கள். மறுபக்கம் நீர்விளிம்பில் இட்ட கற்களில் இருந்து மரம்கொத்திகளின் ஓசைபோல துவைக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
“பாம்பேயிலே இருந்து அவ்வோ விட்ட லெட்டராக்கும்… போஸ்டாப்பீசிலேருந்து குடுத்தனுப்பி நாலஞ்சு நாளாச்சு மக்கா. இங்க ஒருத்தருக்கும் எளுத்து வாசிப்பு தெரியாது… எப்பிடி நான் வாசிப்பேன். ஒருக்க வந்து வாசிச்சு காட்டுடே… மகாராஜாவாட்டு இருப்பே.”
அனந்தன் செம்மண் சரிவில் மண்வெட்டியால் கொத்தி உருவாக்கிய கால்தடம் வழியாக இறங்கி கீழே சென்றான். எல்லாமே தாழ்வான கூரைகொண்ட மண்சுவர் குடில்கள். மண்ணாலான திண்ணைக்கு அப்பால் ஒரே அறை. பின்பக்கம் சமைப்பதற்கான மேலும் தாழ்வான சாய்ப்பு அறை. அவ்வளவுதான் வீடே.
ஆனால் எல்லா வீடுகளுக்கு முன்னாலும் வீட்டளவுக்கே உயரமான வெள்ளாவிப்பானை கரிபடிந்து நின்றிருந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய அடுப்பின்மேல் நிலையாகப் பதிக்கப்பட்டது. அதற்குள் நீரூற்றவும் துணிகளை போடவும் போட்ட துணிகளை எடுக்கவும் ஏணி வைத்துத்தான் ஏறவேண்டும். மூங்கில் ஏணி அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துகிடந்தது.
அனந்தன் முற்றத்தில் நின்று “துவைக்கப் போகல்லியா?” என்றான்.
“இல்ல, இப்பம் நான் துணி எடுக்குறதில்லை. கோமதியக்காவுக்கு எனக்க பிடாகைப் பங்கை குடுத்தாச்சு. வீட்டிலே இருந்து பெட்டி போட்டு மடக்கி குடுத்து அவ குடுக்கிறத வாங்குவேன்… அது கைச்செலவுக்கு வரும்… இதுக ரெண்டையும் வச்சுக்கிட்டு எங்க போவ…” என்றாள் பகவதியம்மை “வா மக்கா, இரு.”
அவள் திண்ணையில் ஒரு பனையோலை தடுக்கை எடுத்து போட்டாள். அவன் அதில் அமர்ந்துகொண்டான்.
“குமரேசன் இப்பம் பம்பாயிலயா?” என்றான்.
“ஆமா, போயி நாலு மாசமாச்சு. அங்க மாசச் சம்பளமாக்கும் மாசம் நாநூறு ரூவா. செலவுபோக முந்நூறு ரூபா அனுப்பிருவாரு. இங்க முந்நூறு ரூபாயை கண்ணால பாக்கணுமானா ஒரு வருசம் குனிஞ்சு நிமிரணும்லா?” அவள் குரலை தாழ்த்தி “முந்நூறு ரூபா வார விசயம் இங்க யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா கடன் வாங்க வந்திருவாளுக… பைசா போன வளி தெரியாது” என்றாள்.
“ஆமா”என்று அவன் சொன்னான்.
அவள் திண்ணையில் அருகே அமர்ந்துகொண்டாள். பையன் அவள் உடலுடன் நெருங்கி அமர்ந்து அவனை கூர்மையாக பார்த்தான்.
“இவனுக்க பேரு மாணிக்கம்லா?”
“ஆமா, வயசு ரெண்டாவது.”
“பேசமாட்டானா?”
“பேசுவான்… வேற ஆளுக கிட்ட பேசமாட்டான்… உள்ள கிடக்குதது சின்னவ. அவளுக்கு ஏளுமாசம்” என்றாள்.
அவன் இன்லண்ட் லெட்டரை பார்த்தான். சீரான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. “இது குமரேசன் எளுதினதா?”
“அவருக்கு எளுத்து தெரியாது… இது அங்க ஆருகிட்டயோ குடுத்து எளுதினதாக்கும்” என்று பகவதியம்மை சொன்னாள். “முதல் ரெண்டு லெட்டரையும் போஸ்டாப்பீஸுக்கு போயி நாடாருகிட்ட சொல்லி வாசிச்சு பாத்தேன். அவரு முளுக்க வாசிச்சு காட்ட மாட்டாரு. உள்ள என்ன எளுதியிருக்குன்னு ரெண்டு வார்த்தை சொல்லுவாரு… இங்க நாலஞ்சு குட்டிக பள்ளிக்கூடம் போகுதுக. அதுக கிட்ட வாசிக்க குடுத்தா பைசா அனுப்புத காரியம்லாம் தெரிஞ்சுபோயிடும்…” கெஞ்சலாக “நீ கொஞ்சம் வாசிச்சு காட்டு மக்கா.”
அனந்தன் கடிதத்தை வாசித்தான். “இங்க நான் சுகம். அங்க நீ சுகமா? நம்ம குளந்தைகள் சுகமா? மாணிக்கம் சுகமா? சின்னக்குட்டி சுகமா? பின்ன இங்க நிறைய தேய்ப்பு வேலை உண்டு. ராத்திரிவரை தேப்புவேலை. ராத்திரியிலே உறங்குதது மட்டுப்பாவிலேயாக்கும். இங்க மளை இல்லை. மளைவந்தா உள்ள உறங்கணும். நல்ல வெயிலு உண்டும். பைசா அனுப்பியிருக்கேன். போஸ்டாபீஸிலே போட்டு வையி. ஆருகேட்டாலும் குடுக்காதே. கடன்கேட்டாலும் குடுக்காதே. வட்டிக்கு கேட்டாலும் குடுக்காதே. நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குத பணமாக்கும். பத்திரமா வச்சுக்கோ. கோமதி அக்காவை கேட்டதாச் சொல்லு. கோமதி அக்காவுக்கு வேணுமானா கொஞ்சம் சகாயம் செய். மத்த பொம்புளைக கூட பேச்சு வேண்டாம். பத்திரமா இருந்துக்க. பிள்ளைகளை பாத்துக்க. விசயங்களுக்கு லெட்டர் போடு. இப்படிக்கு குமரேசன்.”
அவள் “அங்க துவைக்குத வேலை இல்லை. தேய்ப்புவேலை மட்டுமாக்கும்” என்றாள்.
“ஆருகூட போனாரு?” என்று அனந்தன் கேட்டான்.
“அவருக்க மாமனுக்க மகன் அங்க லாண்டரி வச்சிருக்காரு… அவரு நல்ல சௌகரியமா ஆயிட்டாரு.. இங்க வீடும் தோப்பும் எல்லாம் வாங்கியாச்சு. வாறியாடேன்னு கேட்டாரு. நான் போகவேண்டாம்னு சொன்னேன். போடி, இங்க நாலணாவுக்கு நாலு வேட்டி துவைச்சு எப்ப மனுசனா சீவிக்குததுன்னு சொல்லிப்போட்டாவ… திருவனந்தபுரம் போயி அப்பிடியே ரயிலு ஏறி போனதாக்கும்… போறதுக்கு ரெண்டுநாளு… பாம்பேன்னா வானத்துக்கு பக்கத்திலேல்லா?”
அனந்தன் புன்னகைத்தான், கடிதத்தை மடித்தான்.
அவள் சட்டென்று கண்கலங்கி “முகம் பாத்து நாலு மாசமாச்சு… ஒத்த ஒருத்தியா இங்க கெடக்கேன். ஆதரவா, எதமா ஒரு வார்த்தை எளுதல்ல” என்றாள்.
அவள் முகத்தை பார்த்த அனந்தன் “எளுதியிருக்கு” என்றான்.
அவள் புருவம் சுருங்க “எளுதியிருக்கா? எங்க?” என்றாள்.
“இதிலே” என்றான். “அதை நான் எப்டி வாசிக்குததுன்னு நினைச்சேன்…”
“அதுக்கென்ன? படிச்சு காட்டு செல்லம்” என அவள் அருகே சற்று வந்தாள். முகம் சொல்லுக்காக குவிந்தது.
அனந்தன் அவள் கண்களை பார்த்தான். அவை சட்டென்று ஈரமும் பளபளப்பும் கொண்டவை போல ஆகிவிட்டிருந்தன.
அவன் தயங்கினான். அவள் “படி பிள்ளே” என்றாள்.
அவள் சற்று கொழுத்த பெண். கன்னங்கரிய நிறம். உருண்டையான முகம். மிகப்பெரிய எருமைக்கண்கள். ஆனால் உதடுகளும் மூக்கும் செவியும் எல்லாம் சிறியவை. கழுத்து மிகமெலிந்தது. அவள் நடிகை சரிதா போல இருப்பதாக அப்போது அவனுக்கு தோன்றியது.
அவன் அந்த நீலக்காகிதத்தைக் கசக்குவதுபோல பிடித்தபடி அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது.
“படிடே… என்ன இப்பம்? அவ்வோ எளுதினதுதானே?”
அவனுக்கு மூச்சுத்திணறியது. குரல் அடைப்பது போலிருந்தது “என்..” என்றபோது ஒலி வெளிவரவில்லை. தொண்டையை கனைத்து “என் அருமைச் செல்லக்குட்டிக்கு” என்றான்.
அவள் மிகமெல்லிய ஒரு முனகலோசையை எழுப்பினாள். அவனுக்கு அந்த ஓசை மிகமிகக் கூரிய ஒரு வருடல் போல இருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது. கைகள் நடுங்கின. கண்களில் நீர் ததும்பிவிடும்போலிருந்தது. மீண்டும் ஒருமுறை “என் அருமைச் செல்லக்குட்டிக்கு” என்றான்.
அவளிடம் எதிர்வினை இல்லை. அவள் அவன்முன் இல்லை என்று தோன்றியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் உடல் அனல்வெம்மைகொண்டு, கருமைக்குள் சிவப்பு கலந்ததுபோல தெரிந்தது. கழுத்தில் புல்லரித்திருப்பதன் புள்ளிகள் தெரிந்தன.
அவள் “ம்ம்” என்றாள். அவனுக்கு மட்டுமே அந்த ஓசை கேட்கமுடியும்.
“என் அருமை செல்லக்குட்டிக்கு, நீ இல்லாம இங்க என்னாலே இருக்க முடியல்லை” என்று அனந்தன் வாசித்தான். “நான் எப்பமும் உனக்க நினைப்பாத்தான் இருக்கேன். உன் முகத்தைத்தான் எப்பமும் நினைச்சுக்கிட்டே இருக்கேன். உன் கண்ணு ரெண்டும் எப்பமும் என் மனசுக்குள்ளே இருக்கு. நீ என்கூடவே இருக்கமாதிரியே இருக்கு. இனிமே எப்பம் உன்னைய பாப்பேன்னு நினைக்குறப்ப அழுகையாட்டு வருது…”
அவள் பெருமூச்சுவிட்ட ஒலியில் அவன் நிறுத்திக்கொண்டான். காகிதத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். பிறகு தொடர்ந்தான்.
“நான் இங்கே கொஞ்சம் சம்பாதிச்சபிறவு ஓடி வந்திருதேன். நாம சேந்து சந்தோசமா இருப்போம். நான் தேதிய எண்ணிக்கிட்டே இருக்கேன்” என்று அனந்தன் வாசித்தான். அவன் குரல் தாழ்ந்து கிசுகிசுப்பாக ஒலித்தது. நெஞ்சின் இரைச்சல் தாளமுடியாமல் அவன் படிப்பதை நிறுத்தினான்.
அவள் “ம்” என்றாள்.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு.
அவள் “ம்ம்” என்றள். அவன் குரல் சற்று தெளிந்து வந்தது “நான் உன் அழகைப்பற்றி நினைச்சுக்கிட்டே இருக்கேன். பகவதி, நீ காராமணி பயிறு மாதிரி நெறம் கேட்டியா? உன் முகம் வட்டமா அழகாட்டு இருக்கும். உன் சின்ன உதடு பூவு மாதிரி இருக்கும்”
அவன் நிறுத்திவிட்டான். மிகமிக அடர்த்தியான குளிர்ந்த காற்றுப்பரப்பு ஒன்றை உடலால் கிழித்து அப்பால் கடந்து “அந்த சின்ன உதட்டிலே முத்தம் குடுக்கேன்” என்றான்.
அவளிடமிருந்து ஓசையே இல்லை. கைகளால் கன்னங்களை ஏந்தி முலைகள் தொடையில் அழுந்த குனிந்து அமர்ந்திருந்தாள். அவளுடைய வகிடு தெரிந்தது. அவள் கழுத்து அசைந்துகொண்டே இருந்தது.
அனந்தன் “உன் அன்புள்ள கணவன் குமரேசன்” என்றான்.
அவள் அசையவில்லை. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். நெடுநேரம் ஆனதுபோல் இருந்தது. சூழ்ந்திருந்த தென்னை மரங்களில் காற்று ஓலைகளை சுழன்றாடச் செய்தது. அந்த ஓசை மழைபோல கேட்டுக்கொண்டிருந்தது.
பிறகு அவள் விழித்தெழுந்தாள். கண்கள் காய்ச்சல் வந்ததுபோலச் சிவந்திருந்தன. சிறிய மேலுதட்டுக்குமேல் கண்ணாடியில் நீராவி பனித்ததுபோல வியர்வை. ஒன்றும் சொல்லாமல் கைநீட்டினாள். அவன் அவள் முகத்தை பார்க்காமல் கடிதத்தை நீட்ட அவள் அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவன் மேலும் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து சரிந்த மண்பாதை வழியாக்க மேலே சென்றான். குளத்தில் நீர் கண்கூசும்படி பளபளத்து அலைகொண்டது. அதன் மறுகரையில் துணி துவைப்பவர்களின் அசைவு ஓசையின்றி தெரிய கல்லில் துணி அடிக்கப்படும் ஓசை சற்றுநேரம் கழித்து எழுந்து மறுகரையில் முட்டி இரண்டிரண்டாக கேட்டது. அந்த ஓசை அவன் உடல்மேலேயே கூழாங்கற்கள் போல விழுந்தது.
அவனால் நடக்க முடியவில்லை. கால்கள் தளர்ந்திருந்தன. மெல்ல மெல்ல களைப்பு ஓங்கி கண்கள் கூசி மூடிக்கொள்ள அவன் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் நடந்துகொண்டிருந்தான். அவன் மேல் துவைக்கும் ஓசை கொத்திக் கொத்தி தொடர்ந்து வந்தது.
நெடுநேரம் கழித்து பிளாக் ஆபீஸ் வாசலை அடைந்தபோது தான் விடுபட்டான். உடல் வியர்த்திருக்க அதன்மேல் காற்று குளிர்ந்து வீசியது. பிளாக்காபீஸ் மாதவன் போற்றி “என்னடே, ஆளு ஒரு மாதிரி இருக்கே?” என்றார்.
“தண்ணி வேணும்” என்று அவன் சொன்னான்.
அங்கிருந்து திரும்பும்போதுதான் அவனுக்கு ஒரே கணத்தில் எல்லாம் உறைத்தது. நிகழ்ந்தவற்றை மீண்டும் நினைத்துக் கொள்ள நாணியவனாக தனக்குத்தானே தலையை அசைத்தான். நேராக எதிர்ப்பக்கம் சாலைக்குச் சென்று சுற்றிக்கொண்டு குருவிக்காடு ஜங்ஷன் வழியாக வீட்டுக்குச் சென்றான்.
வீட்டுக்குச் செல்லும் அந்த பாதை முழுக்க அவன் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். அந்த சந்தர்ப்பத்தை, அவன் வாசித்த அந்த வார்த்தைகளை அத்தனை துல்லியமாக காட்சி காட்சியாக, சொல் சொல்லாக நினைவிலிருந்து எடுத்தான். ஆனால் உடனே ஒட்டுமொத்தமாக அனைத்துமே மறந்துபோய் ஒரு மொத்தையான நினைவாக எஞ்சியது.
அதை நினைக்கக்கூடாது என்று அவன் விலக்கினான். அதை விலக்க விலக்க அப்படியே அசையாமல் நின்றது. சாலையில் எதையாவது பார்த்து அந்த நினைப்பில் கொஞ்ச தூரம் வந்தபோது சட்டென்று எழுந்து முன்னால் வந்து நின்றது
வீட்டுக்கு வந்தபோது அவன் களைத்துப் போயிருந்தான். பிளாக்காப்பீஸில் வாங்கிய பூச்சிமருந்தை அப்பு அண்ணாவிடம் அளித்துவிட்டு உள்ளே சென்று கட்டிலில் படுத்துக்கொண்டன். அவனுடைய அறைக்குள் அவனுடைய கட்டிலில் படுத்தபோது ஆறுதல் உருவாகியது.
மெல்ல எல்லாம் நிலைமீண்டபோது அவன் அனைத்தையும் நிதானமாக எண்ணிப் பார்த்தான். அவள் அவன் வாசித்தவை அந்தக் கடிதத்தில் இல்லை என்று தெரிந்து கொண்டிருப்பாளா? அதெப்படி தெரியும்? அவளுக்கு வாசிக்க தெரியாது. இனி அவள் அதை இன்னொருவரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லப்போவதுமில்லை.
ஆனால் உண்மையாகவே தெரியாமலிருக்குமா என்ன? அவன் குரல் அப்போது எப்படி இருந்திருக்கும்? அவன் முகத்தை அவள் பார்க்கவே இல்லை. அவன் மெல்ல மெல்ல நிம்மதியிழக்க தொடங்கினான். அவளுக்கு தெரியாமலிருக்காது. அப்போது தெரியாவிட்டாலும் மீண்டும் ஒருமுறை யோசிக்கும்போது தெரிந்துவிடும்.
தெரிந்துவிட்டது, அதனால்தான் அவள் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே போனாள். ஆனால் அவள் அந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்டுக்கூட அவ்வாறு போயிருக்க வாய்ப்புண்டு.
இல்லை, அவளுக்கு தெரிந்துவிட்டது. அவன் அவளுக்கு அவன் மீதிருந்த எல்லா மதிப்பையும் அழித்துக்கொண்டு விட்டான். அவள் இப்போது அவனைப்பற்றி கசப்புடன் நினைத்துக்கொள்வாள். மனதுக்குள் வசைபாடுவாள், வெறுப்பாள். நேரில் மறுமுறை கண்டால் அவனை அவமதிக்கக்கூடும். ஒன்றும் சொல்லவேண்டியதில்லை, பேசாமல் திரும்பிக்கொண்டாலே அவமதிப்புதான்
நினைக்க நினைக்க அவன் உடல் எரிவது போலிருந்தது. படுத்திருக்க முடியவில்லை. எழுந்து கொல்லைப்பக்கம் சென்றான். அங்கிருந்து தோப்புக்குச் சென்றான். அப்படியே ஆற்றுக்கு போனான். எங்கே போனாலும் அந்த நினைப்புகள் கூடவே வந்தன.
ஏன் அப்படி தோன்றியது? அவளை அப்படி பார்த்ததே இல்லை. அவள் கண்ணுக்கு அழகு என்றுகூட தோன்றியதில்லை. அந்த சந்தர்ப்பத்தை அவன் எந்த மறுநினைப்பும் இல்லாமல் தற்செயலாக விரிவாக்கிக் கொண்டான், அவ்வளவுதான். அந்த சந்தர்ப்பத்தை கைவிட மனமில்லை.
“ஏம்லே ஒருமாதிரி இருக்கே?” என்று தங்கையாநாடார் கேட்டார். அவருக்குப் பின்னால் வந்த குளிப்பாட்டப்பட்ட எருமை அவனைப் பார்த்தது. அதே கன்னங்கரிய பெரிய கண்கள்.
அவன் திரும்பி வீட்டுக்கு வந்தான். அம்மாவின் டப்பிக்குள் இருந்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டான். சட்டையை சுருட்டி கையில் எடுத்தபடி ஆற்றில் இறங்கி அப்பால் ஏறி மாறப்பாடி ஜங்ஷனுக்கு போனான். பதினாறு இ வந்து நின்றிருந்தது. அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.
எங்கே போகிறோம்? எங்கே போனாலும் இந்த சிந்தனைகள் கூடவேதான் இருக்கப்போகின்றன. ஆனால் ஆச்சரியமாக அவனுடைய வழக்கமான இடங்களைவிட்டு பஸ் நகருந்தோறும் அவனுடைய எண்ணங்களும் மாறின.
அருமனையில் கிருஷ்ணப்பிரியா தியேட்டரில் மலையாளப்படம். அங்கத்தட்டு, பிரேம் நஸீர் விஜயஸ்ரீ நடித்தது. வண்ணப்படம். வரலாற்றுப் பின்னணி. விஜயஸ்ரீ நல்ல வெண்ணிறம், பருமன். பெரும்பாலான காட்சிகளில் அரையாடைதான். “தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி! தாளத்தினொத்தொரு பாட்டுபாடி! குறுமொழிகுளங்ஙரை குளிக்கான்வா, குறுந்தேனிடத்திலே கிளிமகளே”
படம் முடிந்தபோது அவன் முற்றிலும் வேறொரு இடத்தில் இருந்தான். மணிகண்ட விலாஸில் பரோட்டாவும் பீஃபும் சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது எதுவுமே நினைவில்லை. “தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி!” பாட்டு மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டுநாள் கழித்து அவன் குருவிக்காட்டு ஜங்ஷனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே பகவதியும் கோமதியும் வந்துகொண்டிருந்தனர். அவள் இடுப்பில் பெண்குழந்தை இருந்தது. அவளைப் போலவே கரிய நிறமும் பெரிய கண்களும் கொண்டது.
எதிரிலிருந்து கடுங்குளிர் காற்று வந்து அறைந்ததுபோல அனந்தன் நடைதளர்ந்தான். எங்கும் திரும்பி செல்லமுடியாது. அவளை எதிரெதிர் கண்டே ஆகவேண்டும். அவன் பார்வையை அங்குமிங்கும் அலையவிட்டு நடந்தான்.
கோமதி “பிள்ளே, அங்கிண ரேசனிலே அரிசி குடுகானுகளா?” என்றாள்.
“குடுக்கானுக” என்றான்.
“மண்ணெண்ணை” என்றாள்.
“மண்ணெண்ணை அடுத்த வாரம்னு நினைக்கேன்” என்றான் அனந்தன்.
பகவதி “சீனி குடுக்கானுகளா?” என்றாள்.
அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். இயல்பான முகம், இயல்பான சிரிப்பு, சாதாரணமான கண்கள்.
அவன் குழறியகுரலில் “சீனி, சீனியும் குடுக்கானுக”என்றான்.
“ஓ” என்று சொல்லி அவள் புன்னகைத்தாள்.
“வாறேம் பிள்ளே” என்றாள் கோமதி அவர்கள் கடந்துசென்றனர்.
அவன் அப்பால் சென்றதும் ஆறுதல் அடைந்தான். ஆனால் நடக்க நடக்க சிறு ஏமாற்றம் ஏற்பட்டது. அப்படியென்றால் அவன் வாசித்ததை அவள் கண்டுபிடிக்கவில்லை.
அதெப்படி என்று வியப்பு ஏற்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. அவள் அந்த கடிதத்தை புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால் அவளுக்கு கடிதம் என்பதே புதிய விஷயம். அவளுக்கு அவள் கணவன் எழுதிய நான்கே நான்கு கடிதங்கள்தான் அதுவரை வந்திருக்கும். எஞ்சிய மூன்று கடிதங்களையும் போஸ்ட்மேன் எபனேச நாடார் படித்து உள்ளடக்கத்தை சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.
அவர் ஒருநாளில் நாற்பது ஐம்பது கடிதங்களை வாசிக்கவேண்டும். எப்போதுமே சலிப்பான முகம் கொண்டவர். கோயில்வட்டம் சர்ச்தெரு இரண்டு இடங்களுக்கு மட்டும்தான் அவரே லெட்டர் கொண்டுசென்று கொடுப்பார். மிச்சமெல்லாம் சொல்லி அனுப்புவதுதான். நேரில் சென்று வாங்கிக் கொள்ளவேண்டும். அல்லது கொடுத்தனுப்புவார்.
அனந்தன் அவள் முகத்தை நினைத்துக் கொண்டிருந்தான். கடிதத்தை வாசிக்கும்போது அவள் முகத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்போது நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது. அப்போது அவள் அவன் கண்களைப் பார்த்திருந்தால் அவன் எழுந்து ஓடிவந்திருப்பான்.
நேரம் செல்லச் செல்ல அந்த ஏமாற்றம் ஒரு சிறிய கீறலின் எரிச்சல்போல நீடித்தது. பின்னர் அது எங்கோ மறைந்தது. அவ்வப்போது அவன் அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக் கொள்ளும்போது சிறிய கசப்பு மட்டும் எழுந்தது.
பிறகொருநாள் அவன் நினைத்துக் கொண்டான். இன்னொரு கடிதம் வந்தால் அவள் அவனை வாசிக்க அழைப்பாளா? அதை எப்படி அறிவது? அந்த முந்தைய கடிதம் வந்திருக்கக்கூடிய நாளை கணித்து சரியாக ஒருமாதம் கடந்து அவன் அவள் வீடு இருக்கும் திசைக்குச் சென்றான். ஆனால் அவள் வீட்டை அடைவதற்கு முன்னரே கால்கள் பதற திரும்பிவிட்டான்.
இரண்டுநாட்கள் அதையே நினைத்துக் கொண்டிருந்தான். அதன்பின் முழுத்துணிவையும் திரட்டிக்கொண்டு குளத்தின் வரம்புப்பாதை வழியாக அவள் வீட்டுக்குமேல் நடந்தான். தொலைவிலேயே அவள் திண்ணையில் குழந்தையுடன் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டான். நிதானமாக நடக்கவேண்டும் என்று நினைத்தான். ஆனால் நடக்க நடக்க நடை தள்ளாடி செயற்கையாக ஆகியது. கழுத்தை இரும்புபோல இறுக்கியபடி நடந்து அவள் வீட்டை கடந்தான்.
நெடுந்தொலைவு சென்றபிறகுதான் அவன் இயல்படைந்து நீண்ட மூச்சுக்களை விட்டான். பின்னர் ஏமாற்றம் அடைந்து திரும்பிப் பார்க்கப்போய் மயிரிழையில் விலகிக்கொண்டான். நடந்து நடந்து அந்த இடத்தை கடந்தபின் வியர்வையில் நனைந்த சட்டையை தூக்கி விட்டுக்கொண்டான்.
அவள் தன்னை பார்க்கவில்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது. நெடுநேரம் அங்கே ஒரு இலுப்பை மரத்தடியில் நின்று யோசித்துப் பார்த்தான். அதன்பின் திரும்பி நடந்தான். இம்முறை அவள் வீட்டை திரும்பிப் பார்த்தான். அவள் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வீட்டுக்கு திரும்பியபின் எரிச்சலுடன் இருந்தான். மீண்டும் ஒருமுறை அவள் வீட்டுக்கு முன்பாக நடந்தால் என்ன என்று தோன்றியது. அது மிகவும் கீழிறங்குவதாக ஆகிவிடும் என்று எண்ணி தவிர்த்தான்.
அந்த பிடிவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தது. சும்மா போனால் என்ன? அந்தவழியாக பிளாக்காப்பீஸ் போவதுதான் வசதியானது. அதிலென்ன இருக்கிறது? அவனே சொல்லிச் சொல்லி தன்னை உந்திக்கொண்டு மீண்டும் அவ்வழியாகச் சென்றான். இம்முறை அவள் அவனை பார்த்தாள் என்பது உறுதியாக தெரிந்தது.
ஒருவேளை கடிதம் வராமலிருந்திருக்குமோ? கடிதம் வந்ததா என்று எப்படி தெரிந்துகொள்வது? அவன் யோசித்து பலமுறை ஒத்திப்போட்டு போஸ்டாபீஸ் சென்றான். நாடார் அவனிடம் “லெட்டர் இல்லை” என்று கைகாட்டினார்
“அப்பாவுக்கு இல்லை, எனக்கு” என்றான்.
“என்ன லெட்டர்?”
“காலேஜ் லெட்டர்”
“வந்தா தாறேன் என்ன?”
அவன் மீண்டும் ஒருமுறை அவள் வீடுவழியாகச் சென்றான். போஸ்டாபீஸுக்கும் போனான். நாடார் “லெட்டர் இல்லியே மக்கா” என்றார்.
போஸ்டாபீஸில் அவனை அடிக்கடிப் பார்ப்பது போஸ்ட்மாஸ்டர் கிருஷ்ணையருக்கு கொஞ்சம் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்தது. “வே இவன் நம்ம கரடிக்க பயலாக்குமே.. என்னடே?” என்றார்.
“ஒண்ணுமில்லை” என்றான் அனநத்ன் “லெட்டர் போட்டேன்.”
“போட்டாச்சுல்லா, போ.”
“இல்ல” என்றான். எச்சில் விழுங்கி “அதை திரும்ப எடுக்கணும்.”
“ஆகா, அது நடக்காதுல்லா. அது இனி சர்க்காருக்க முதலாக்கும். அதை திரும்ப எடுக்க முடியாது…” என்றார் கிருஷ்ணையர்.
“ஏன்?” என்று அவன் கேட்டான்.
“அது நீ போட்ட லெட்டர்னு ஆதாரம் உண்டாடே? சங்கதி பதினஞ்சுபைசா லெட்டராக்கும். ஆனா அதுக்கு பின்னாலே சில சர்க்காரு சட்டவட்டங்களெல்லாம் உண்டு, போ போ சோலியப்பாரு.”
“நான் எளுதினதுல்லா?” என்றான் அனந்தன்.
“இதுக்குள்ள போட்டாச்சுன்னா அதுக்க சொந்தக்காரன் அட்ரஸிலே இருக்கப்பட்டவனாக்கும்…” என்றார் கிருஷ்ணையர்.
அவன் திரும்பியபோது கிருஷ்ணையர் பின்னால் “லவ் லெட்டராடே?” என்றார்.
அவன் அதன்பின் போஸ்டாபீஸ் போகவில்லை. எதிரில் கண்ணன் பார்பர்ஷாப்பிலேயே நின்று தினத்தந்தியை படித்தான்.
ஒருநாள் அவன் போஸ்டாபீஸுக்கு வெளியே கோமதி அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான். அவன் மனம் திடுக்கிட்டது. அவன் எண்ணியது போலவே அவள் அங்கே நின்றிருப்பதைக் கண்டான்.
பார்பர்ஷாப்பில் மறைவாக நின்று அவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அவள் கையில் இன்லண்ட் இருந்தது. அதை போஸ்டாபீஸில் நின்றிருந்த எல்.ஐ.சி அருணாச்சலம் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துத் தரும்படி கேட்டாள். அவர் கண்ணாடியை போட்டுக்கொண்டு அதை வாசிப்பதை அவன் கண்டான்
அனந்தன் பார்பர்ஷாப்புக்குள் நுழைந்து பெஞ்சில் ஒடுங்கி அமர்ந்து கொண்டான். அவளும் கோமதியும் கிளம்பிச் செல்வதை தொலைவிலேயே பார்த்தான். நெடுநேரம் அவன் காய்ச்சல் கண்டவன்போல அங்கேயே அமர்ந்திருந்தான். பின்னர் பெருமூச்சுவிட்டுக்கொண்டு கிளம்பி வீட்டுக்குச் சென்றான்
அவன் வீட்டுக்குச் செல்வதற்குள் பலமுறை நின்றுவிட்டான். அப்படியே எங்காவது ஓடிவிடவேண்டும் போலிருந்தது. தலையில் மடேர் மடேர் என்று அறையவேண்டும் போலிருந்தது. கண்ணீர் வழிய அவ்வப்போது துடைத்துக்கொண்டான்.
வீட்டுக்குச் சென்றபோது அவன் அந்த உணர்ச்சிகளை கோபமாக மாற்றிக் கொண்டான். “எருமை! எருமை!” என்று சொல்லிக் கொண்டான். பல்லைக் கடித்து கைகளை சுருட்டி “எருமை! காரானெருமை!” என்று ஓசையின்றி உறுமினான்.
அறைக்குள் அவனால் இருக்க முடியவில்லை. உள்ளே நீராவி நிறைந்திருப்பது போல புழுங்கியது. அம்மாவின் சம்புடத்தைப் பார்த்தான். அதில் பணம் இல்லை. ஆனால் மூக்குத்தியின் திருகாணி கிடந்தது.
அதை எடுத்துக்கொண்டு சட்டையை சுருட்டி தாளில் பொதிந்து கையில் வைத்தபடி அவன் தோட்டம் வழியாக ஆற்றில் இறங்கி மறுகரையை அடைந்து மாறப்பாடி ஜங்ஷனில் பஸ் ஏறினான். அருமனைக்குப்போய் குமாரசாமி தட்டானின் கடையில் அந்த திருகாணியை விற்றான் ஐம்பதுரூபாய் கிடைத்தது.
மார்த்தாண்டம் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். அங்கே இறங்கி சாமுவேல் ஓட்டலில் பரோட்டா பீஃப் சாப்பிட்டுவிட்டு திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். தம்பானூரில் இறங்கி நின்று விஜயஸ்ரீ நடித்த படங்கள் என்னென்ன என்று பார்த்தான். பழைய படங்கள் சாலை சிவா தியேட்டரில்தான் ஓடும். ‘ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ’ ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துவிட்டு ஸ்ரீபத்மநாபா தியேட்டருக்குப் போய் அக்ஞாதவாசம் பார்த்தான்.
இரவில் ரயில்நிலையத்திலேயே தங்கிவிட்டு விடியற்காலையில் பஸ் ஏறி திரும்பி வந்தான். பஸ்ஸில் அரைத்தூக்கத்தில் பாட்டுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ படத்தின் ‘வீணபூவே குமாரனாசான்றே வீண பூவே’ பாட்டும் ‘தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி’ பாட்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. விஜயஸ்ரீ அரைநிர்வாணமாக ஓவியன் முன் நின்று போஸ் கொடுத்தாள். தடித்த வெண்ணிறமான பெண்.
அவன் திரும்பி வந்தபோது காய்ச்சல் இருந்தது. இரவெல்லாம் ரயில்நிலையத்தின் பனியில் படுத்திருந்தான். அப்பா அவன் வீட்டுக்கு வராத செய்தியையே அறியவில்லை. அம்மா “எங்கடா போனே? புத்திகெட்ட நாயே?” என்றாள். அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு கிடந்தான். தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி! “என்னடா முழிக்கே?” அவன் முனகினான். அவன் காதில் அந்தப்பாட்டே கேட்டுக்கொண்டிருந்தது. தங்கப்பவன் கிண்ணம் தாளமாடி!
நான்குநாட்கள் காய்ச்சல் இருந்தது. ஆனைமலைக் கம்பவுண்டரின் கலக்குமருந்தை குடித்தபோது குணமாகியது. அவன் எழுந்தபோது காலேஜ் திறந்திருந்தது. ஒவ்வொரு நாளாக அவனை அதிலிருந்தெல்லாம் தள்ளிக்கொண்டு சென்றது.
மெல்ல மெல்ல அவன் தெளிவடைந்தான். அப்படி என்னதான் நடந்துவிட்டது? அவன் செய்தது ஒரு சிறிய குறும்புதான். அவளிடமே போய் அதைச் சொல்லிவிட்டால் தீர்ந்தது. “ஒரு வெளையாட்டுக்கு அப்டி வாசிச்சுப் போட்டேன். மனசிலே வைச்சுக்கிடாதே” அவ்வளவுதான். அவள் அவனை விட மூத்தவள். பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவன் அறிந்த மூத்த பெண்கள் எல்லாருமே அப்படித்தான்.
அதோடு அதெல்லாம் முடிந்துவிடும். அதன்பின் அவளிடம் மறுபடியும் சாதாரணமாகப் பேசமுடியாமலாகலாம். அது தேவையுமில்லை. இந்த அசௌகரியம் மனதிலிருந்து போய்விடும்.
ஆனால் அதற்கு அவளை தேடிப்போக வேண்டும். அவள் வீட்டுக்கு முன்னால் சென்று அவளை வெளியே அழைத்து சொல்ல வேண்டும். அப்போது உடன் எவரும் இருக்கக்கூடாது. அதைச்செய்ய அவனால் முடியும் என்று தோன்றவில்லை. தற்செயலாக எங்காவது தனியாகச் சந்திக்கலாம். ஆனால் அவள் எங்கும் போவதுமில்லை. பெரும்பாலும் கோமதியுடனேயே சென்றாள்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு அவன் நகர்ந்து கொண்டிருந்த குலசேகரம் பஸ்ஸில் பாய்ந்தேறியபோது அவள் உள்ளே நின்றிருந்தாள். கூட்டமில்லை. ஆனால் எல்லா சீட்டிலும் ஆளிருந்தனர்.
அவன் அவளை முதலில் பார்க்கவில்லை. டிக்கெட் எடுத்தபின் முன்னகர்ந்தபோது தான் அங்கே நின்றிருந்தவள் அவள் என்று கண்டான்.
அவன் மிகமிக விலகி வந்துவிட்டான் என்று நினைத்திருந்தான். ஆனால் அது ஒருவட்டம், ஒரே சுழற்சியில் அவன் மிக அருகே சென்றுவிட்டான். அவன் பின்னால் செல்லலாமா என்று பார்த்தான், இடமில்லை. முன்னால் சென்றுதான் ஆகவேண்டும். அவளருகே செல்லவேண்டும். அவன் நெஞ்சு படபடக்க இரண்டு அடி எடுத்து வைத்தான்.
அப்போது அவனுக்கு மிகநுட்பமான ஓர் உணர்வு ஏற்பட்டது, அவன் அந்தக் கடிதத்தை வாசித்தபோது இருந்த உடலசைவு அவளில் ஏற்படுவதாக அறிந்தான், ஆனால் அவளை அவன் பார்க்கவில்லை.
திடுக்கிட்டு அவன் விழிதூக்க அவள் கண்களை சந்தித்தான். அவள் புன்னகைத்தாள். சாதாரணமான புன்னகைதான், ஆனால் கண்களில் அதற்குமேல் ஒன்றும் இருந்தது.
அவன் கண்களை விலக்கிக் கொண்டான். மீண்டும் அவன் பார்த்தபோது அவள் கண்களால் சந்தித்து புன்னகையுடன் திரும்பி சன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். முன்பு அவன் கண்டதுபோல அவள் உடல் அனல்கொண்டு சிவப்பு ஓடியிருந்தது. மெல்லிய வியர்வை பூத்திருந்தது. அவள் முகத்தில் பஸ்ஸின் சன்னல் வெளிச்சம் அலையலையாக விழுந்து கொப்பளித்துக் கொண்டே இருந்தது.
***