‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75

பகுதி ஏழு : நீர்புகுதல் – 4

கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக ருக்மிக்கு அனுப்பப்பட்டன. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ருக்மியிடமிருந்து அந்த நிகழ்வை மதுராபுரியிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தன் அணுக்கர்களுடனும் அகம்படியினருடனும் மதுராவுக்கு வந்து சேர்வதாகவும் செய்தி வந்தது.

பலராமர் தன் ஆசிரியர் அகவை முதிர்ந்தவர் என்பதனால் அதுவே முறை என்று கருதுவதாக ருக்மி குறிப்பிட்டிருந்தார். அதை கேட்கும்போது இயல்பானதாகவும், முறையானதாகவும் தோன்றினாலும்கூட அவருக்கு முதலில் அது ஏன் தோன்றவில்லை என்பது ஐயத்திற்குரியதாக இருந்தது. அதை நான் பலராமர் அவையில் முன்வைத்தேன். ஆனால் பலராமர் “எல்லாவற்றையும் ஐயப்படுவது அமைச்சர் தொழில். இவ்வாறு ஒவ்வொன்றையும் நாம் உட்புகுந்து எண்ணிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. ருக்மி எப்போதுமே எண்ணித் துணிபவன் அல்ல. எப்போதுமே உற்றோரின் சொற்களை செவிமடுப்பவனும் அல்ல. இப்போது பிந்தியேனும் இவ்வாறு தோன்றியது என்று கொள்ளவேண்டியதுதான்” என்றார்.

நான் பிறிதொரு முறை ஒற்றர்களைக் கொண்டு உசாவியபோது அமைச்சர் ஒருவரின் சொல்படி அம்முடிவை ருக்மி எடுத்திருப்பதாக தெரிந்தது. அவ்வமைச்சர் புதிதாக ருக்மியின் அவைக்கு வந்து சேர்ந்தவர் என்று கூறினார்கள். அவ்வாறெனில் அது நன்று என்று எனக்கும் தோன்றியது. பிந்தியேனும் ஓர் அமைச்சரின் சொல்கேட்க ருக்மிக்கு தோன்றியது உகந்ததே என்று நான் எண்ணினேன். கௌண்டின்யபுரியைப்பற்றி பேசுகையில் மதுராவின் பேரவையில் அதை சொன்னேன். பலராமர் “நன்று, பெரும்பாலும் இந்த நாற்களமாடலுக்குப் பின்பு அவன் இதைப்பற்றி எல்லோருடைய சொற்களையும் கேட்டுக்கொள்ளக்கூடும்” என்று சிரித்தார்.

பலராமர் அவருடைய வழக்கமான நகையாட்டையும் பெருங்கூச்சலுடன் பேசும் இயல்பையும் மீண்டும் அடைந்தவராகத் தோன்றினார். பிரஃபாச க்ஷேத்ரத்தின் அழிவிற்குப் பின் ஆழ்ந்த சோர்விலிருந்த அவர் அதிலிருந்து ஒவ்வொரு திரையாக விலக்கி வெளிவந்துகொண்டிருந்தார். அதன்பொருட்டேனும் அந்த நாற்களமாடல் நன்று என்று எனக்குத் தோன்றியது. ருக்மியால் நாற்களமாடலில் எந்நிலையிலும் பலராமரை வெல்ல இயலாது என்று நான் அறிந்திருந்தேன். பலராமர் நாற்களமாடலை வாழ்நாள் முழுக்க இடைவெளியில்லாமல் செய்து வந்தவர்.

எவர் ஒருவர் தனது உள்ளச்செயல்பாட்டை ஆடல் ஒன்றுடன் இணைத்துக்கொள்கிறாரோ அவருக்கு அது உள்ளமே ஆகிவிடுகிறது. பலராமருக்குள் எண்ணங்கள் இயல்பாக எழுவதே நாற்களமாடலாகத்தான். அதை அவர் பேசும்போதும் எண்ணம் ஓட்டும்போதும் விரல்களால் நாற்களக் காய்களை நகர்த்துவதில் இருந்தே காணமுடியும். ஆகவே நாற்களத்தில் அவர் இயல்பாக திகழ்வார். ருக்மி அவ்வாறல்ல. எப்போதேனும் அவையமர்கையில் மட்டும் விளையாடுபவர். எனில் களத்தில் ஒவ்வொன்றையும் எண்ணிச் சூழ்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். பலராமருக்கு கனவில் இருந்த கை நீண்டு காய்களை நகர்த்தும்.

ஒருவேளை பலராமர் அவ்வாடலில் தோல்வியுற்றால்கூட அது பிரஃபாச க்ஷேத்ரத்தில் மறைந்த செல்வத்தின் இன்னொரு பகுதி இழக்கப்பட்டதாகவே முடியும். ஈட்டினாலும்கூட பலராமர் அதை தனக்கெனக் கொள்ளுவதாக எண்ணவில்லை. துவாரகை இளைய யாதவரால் கைவிடப்பட்டது என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. அவர் மைந்தரின் பொருட்டு அதை அகற்ற முயன்றாலும் அதுவே ஓங்கியது. ஆகவே அவர் துவாரகையின் அழிவை அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளவில்லை. பிரஃபாச க்ஷேத்ரத்தின் அழிவேகூட அவருக்கு நிலைகுலையச் செய்யும் செய்தி அல்ல. அவர் ஆழத்தில் அவற்றை தன்னிடமிருந்து கழற்றிவிட்டிருந்தார்.

நான் அந்த நாற்களமாடலுக்கான ஒருக்கங்களைச் செய்வதில் ஈடுபட்டேன். மதுராவின் அரசப்பேரவையை ஒட்டி நாற்களமாடுவதற்கான பந்தல் அமைக்கப்பட்டது. நிமித்திகர் வகுத்த பொழுதில் வேதியர் எரியெழுப்பி அவியிட்டு கங்கைநீர் தெளித்து கால்நாட்டுச் சடங்கை செய்தனர். எண்கோண வடிவில் எட்டு வாயில்களுடன் அப்பந்தல் சிற்பிகளால் எழுப்பப்பட்டது. நடுவே ருக்மியும் பலராமரும் அமர்ந்து ஆடுவதற்கான எதிரெதிர் பீடங்கள். அருகே ஆட்டத்துணைவருக்கான சிறு பீடங்கள். நாற்களம் பரப்பப்பட்ட தாழ்வான பீடம். சுற்றிலும் பிற நாட்டு அரசர்களும் அவர்களுக்குப் பின்னால் அமைச்சரும் படைத்தலைவர்களும் வணிகரும் பிறரும் அமர்ந்து பார்ப்பதற்கான பீடங்கள்.

எட்டு வாயிலுக்கும் வெளியே காத்து நின்றிருக்கும் காவல்படைகளுக்கான தங்குமிடங்கள் ஒருங்கின. எவருக்கும் நாற்களமாடலுக்கு என்னென்ன தேவை என்பது தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் மதுராவில் அதற்கு முன் அவ்வாறொன்று நிகழ்ந்திருக்கவில்லை. அரங்கு எண்கோண வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்று நான் சொன்னபோது “ஏன்? அதற்கான தேவை என்ன?” என்று பலராமர் கேட்டார். “ஷத்ரிய மன்னர்கள் வரக்கூடும். அவர்களில் எவரை முதலில் அரங்குக்கு அழைத்துச்செல்வது என்பது எப்போதும் இடருடைய வினா. ஒரே கணத்தில் சிலரை உள்ளே அழைத்துச்செல்ல பல வாயில்கள் இருப்பது நன்று. அது மூப்பிளமை குறித்த பூசல்களை தவிர்க்கும் வழி” என்றேன்.

“தாங்கள் அவைநுழையும்போது தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் உடன்நுழைந்தார்கள் என்றும் ஏவலர்களும் உடன் வந்தால் ஏவலருடன் உள்ளே அழைத்துச் சென்றார்கள் என்றும் அரசர்கள் பூசலிடுவார்கள். அரசர்களுக்கு இவ்வாறு அவைப்பூசல் இடுவது தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வழி. ஓர் அவைப்பூசல் வழியாகவே தங்கள் முந்தைய நிலையில் மாற்றம் வந்துள்ளது என்பதை அவர்கள் அறிவிக்க முடியும்” என்றேன். “குடித்தலைவர்கள் தங்களுடன் இணையாக நடத்தப்படுபவர் எவர் என்று நோக்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடையே பூசல்கள் முடிவே அற்றவை.”

“ஆகவே ஏவலர்க்கும் காவலர்களுக்கும் ஒரு வாயிலையும் குடித்தலைவர்களுக்கு இரண்டு வாயில்களையும் ஒதுக்கிவிட்டு ஐந்து வாயில்களை இணையான அணி செய்யப்பட்ட அரசவாயில்களாக அமைத்து ஐந்தினூடாகவும் இணையாக அரசர்களை வரவேற்று அவையமரச் செய்யவேண்டும்” என்று நான் கூறினேன். “இது நாற்களமாடலைவிட சிக்கலானதாக இருக்கிறதே!” என்று சொல்லி பலராமர் உரக்க நகைத்தார். பின்னர் குரல் தாழ்த்தி “மெய்யாகவே இவ்வண்ணம் எண்ணி எண்ணி தங்கள் மூப்பிளமையை கணித்து நோக்கும் எவரேனும் இருக்கிறார்களா?” என்றார். “நோக்குங்கள்! ஒவ்வொருவராக தங்கள் சொற்களுடன் கிளம்பி வருவார்கள்” என்று நான் சொன்னேன்.

நாற்களமாடல் நிகழவிருப்பதை அரசர்களுக்கு முறைப்படி அறிவித்தோம். தூதுகளும் ஓலைகளும் சென்றன. பாரதவர்ஷம் குருக்ஷேத்ரப் போருக்குப் பின் உளம் சோர்வுற்றிருப்பதனாலும் பெரும்பாலான நாடுகளில் உட்பூசல்களும் குடிப்போர்களும் நிகழ்ந்துகொண்டிருப்பதனாலும் பெரும்பாலும் எவருமே வர வாய்ப்பில்லை என்றே மதுராபுரியின் அமைச்சர்கள்கூட எண்ணினார்கள். ஆனால் பதினெட்டு அரசர்கள் உடனே ஆடல் நோக்க வருவதாக குறிப்பிட்டார்கள். ஒவ்வொருநாளும் அவ்விழாவிற்கு வரும் அரசர்களின் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

வழக்கம்போல கலிங்கமும் வங்கமும் தாங்கள் இணையாக நடத்தப்படலாகாது, தாங்கள் ஒருவருக்கொருவர் மிஞ்சியவர்கள் என்ற செய்தியை அனுப்பினார்கள். கேகயனும் கோசலனும் தங்களுக்கிடையே இருக்கும் பூசலை தங்கள் அழைப்பு ஏற்பு ஓலையிலேயே காட்டியிருந்தார்கள். ஷத்ரியர்கள் வருகிறார்கள் என்ற செய்தி அறிந்ததுமே மச்சர்களும் நிஷாதர்களுமாகிய பல சிறு அரசர்கள் தாங்களும் வருவதாக செய்தி அனுப்பினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குடிமேன்மையை அந்த ஓலைகளில் தெரிவித்திருந்தனர். தாங்கள் தொல்குடி ஷத்ரியர்கள் என்றும் பரசுராமரால் முடிசூட்டப்பட்டவர்கள் என்றும் பலர் ஓலைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

பெரும்பாலான ஓலைகளில் குருக்ஷேத்ரப் போரில் தங்கள் குடியினர் பங்குபெற்று பெருஞ்செயல் புரிந்து புகழ் நிறுத்தியதைப்பற்றிய குறிப்பிருந்தது. குருக்ஷேத்ரப் போரில் களத்தில் படைநிரத்தியபோது தங்கள் படை எந்த இடத்திலிருந்தது என்பதைக் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் தங்கள் நோக்கை வகுத்திருந்தார்கள் சிலர். பலராமர் ஒருகணத்தில் சோர்வுற்று “இது புதிய பூசல்களுக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது. இவர்களை யார் வரவேற்பது? இதில் என் உள்ளம் செல்லாது” என்றார். நான் “மதுவனத்திலிருந்து சூரசேனரையும் வசுதேவரையும் வரச்சொல்லலாம். அவர்கள் முதியவர்கள். அவர்கள் வாயிலில் நின்று வரவேற்றால் அதையே தனக்கு அளிக்கப்படும் மதிப்பென்று கருதுவார்கள். பிற வாயில்களில் தங்கள் மைந்தர்கள் நின்றால் போதும்” என்றேன்.

விழா நெருங்க நெருங்க ஒருக்கங்கள் மேலும் கூடிக்கொண்டே சென்றன. வந்து இறங்கும்போதே ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்க வேண்டியிருந்தது. அவர்களுக்கான மாளிகைகள் முன்னரே அவர்களுக்கான கொடிகளுடன் காத்திருக்கவேண்டும். அவர்களின் அகம்படியினர் தனித்தனியாக வரவேற்கப்படவேண்டும். பொதுவாக அகம்படியினர் தாங்கள் சரியானபடி வரவேற்கப்படவில்லை என அரசரிடம் முறையிட்டுக்கொண்டே இருப்பார்கள். அரசர் அதன்பொருட்டு சற்று சீற்றம் காட்டினால் தங்களுக்கு உரிய இடம் கிடைத்துவிட்டதாக மகிழ்வார்கள், அது பிற அகம்படியினர் நடுவே தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் வழி.

ஒவ்வொரு அரசருக்கும் ஒரு துணையமைச்சர் உடனிருந்தேயாகவேண்டும். அத்தனை துணைஅமைச்சர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைச்சர் வேண்டும். அந்த அமைச்சருக்கு முதன்மை அமைச்சருடன் தொடர்பிருக்க வேண்டும். எந்த அரசர் எந்த அரசரை எப்போது சந்திப்பது என்பது வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் தற்செயலாக சந்தித்துக்கொள்ள நேரக்கூடாது. அது தேவையற்ற சொல்லாடல்களுக்கும் பூசலுக்கும் வழிவகுக்கும்.

பலராமரின் மைந்தர் உல்முகன் சிரித்து “எவ்வண்ணமாயினும் இங்கே மேலும் பத்து நாற்களமாடலுக்கான அறைகூவல் நிகழாமல் போகாது” என்றார். “போர் நிகழாமல் இருந்தால் போதும்” என்று நான் சொன்னேன். “போர் நிகழாது, மூத்தவரே. ஒவ்வொருவரும் குருக்ஷேத்ரத்தை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அனைத்துப் போர்களும் இவ்வண்ணம் நாற்கள மேடையிலேயே நிகழவிருக்கின்றன. இவர்கள் அனைவரும் திரண்டு நாற்கள ஆடலை பார்ப்பதற்காக வருவதே அதற்காகத்தான். இதில் முறைமைகளை தெரிந்துகொள்வார்கள். தங்கள் நாட்டில் தாங்களும் நாற்களமாடலை தொடங்குவார்கள்” என்றார் உல்முகன். “நோக்குக, பெரும்பாலானவர்கள் தங்கள் முதன்மை அமைச்சருடனேயே வருவார்கள்!”

விழாவுக்கு முதலில் வந்த கோசல நாட்டு மன்னன் தீர்கயக்ஞன் தன் இரண்டு முதன்மை அமைச்சர்களையும் அழைத்து வந்திருந்தார். படகில் மதுராபுரி வந்திறங்கிய அவரை வரவேற்க நானே சென்றிருந்தேன். அவர் இறங்கியதும் கைகூப்பி அணுகி முகமன் உரைத்து வரவேற்றேன். அவர் என்னிடம் “நாங்கள் எந்த நாற்களமாடலுக்கும் பொதுவாக செல்வதில்லை. இங்கே இளைய யாதவர் மீதான மதிப்பின் பொருட்டே வந்தேன். கோசலம் தொன்மையான நாடு. பெரும்புகழ் கொண்ட ராமன் பிறந்த மண். மதுராபுரி குலப்பெருமையில் ஒரு படி தாழ்ந்ததெனினும்கூட எங்கள் அரசியை இளைய யாதவர் மணந்ததனால் நிகரான பெருமையை அடைந்தது. ஆகையினால் இங்கு வரலாம் என்று முடிவெடுத்தேன்” என்றார்.

“மதுரா வாழ்த்தப்பட்டது, வருக!” என்று அழைத்துச்சென்றேன். என்னுடன் வந்த உல்முகன் “நான் ஒன்றையே நோக்கவிருக்கிறேன், இவர்களில் ஒருவரேனும் தங்கள் குலப்பெருமையை இணைக்காது ஒரு முகமன் உரைக்கிறார்களா என்று” என்றார். நான் “முகமன் என்பதே ஒருவகையில் குலப்பெருமை உரைப்பது மட்டும்தான்” என்றேன். “மறுமுகமன் என்பது அக்குலப்பெருமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனும் சொல்” என்றேன். உல்முகன் சிரித்து “கூடவே நம் குலப்பெருமையை அவர்கள் பக்கமாக நீட்டிவிடலாம்” என்றார்.

மதுராபுரி சோர்ந்து, குளிர்ந்து, அங்கே மானுடரே இல்லையோ என்று தோன்றும் நிலையில் ஓராண்டுக்கு மேலாக கிடந்தது. துவாரகை விழுந்த செய்தி வந்தபோதே மதுராபுரியில் அச்சோர்வு நிறைந்தது. கருமுகிலென வான் மூடி கரிய பிசின் என மண்ணில் இறங்கி ஒவ்வொருவரையும் சிக்கவைத்து அசைவிலாதாக்கியது அது. அவர்களின் உடல் அசைவுகளே மிக மெல்ல நிகழ்ந்தன. சிரிப்பொலிகள் அணைந்தன. அழுகையும் துயரும் நிகழ்ந்து மெல்ல மெல்ல அன்றாடமென ஆகி ஒவ்வொருவரின் முகமும் அழுவதற்கே உரியவை என ஆகிவிட்டிருந்தன.

ஒரு துயர் நெடுநாள் நிகழ்கையில் அதை இயல்பெனக் கொள்ள மக்களும் நகரும் பழகிவிடுகின்றனர். ஒருவரை ஒருவர் சந்திக்கையில், முகமன் உரைக்கையில், புன்னகைக்காமல் இருக்க ஒவ்வொருவரும் பழகினர். குழந்தைகள் கூவிச் சிரிக்காமல் ஆயினர். பெண்டிர் வண்ண அணி ஆடைகளை ஒழிந்தனர். இல்லங்கள் முன் கோலமும் தோரணமும் அமைக்கும் வழக்கம் மறைந்தது. நகர மையங்களில் எரிந்த விளக்குகள் கூட ஒளி குறைந்து இருள் சூழ நின்றன. அந்தியில் மிக முந்தியே நகரம் அடங்கியது. காலையில் மிகப் பிந்தியே விழித்தது.

முதற்காலையிலும் பின்மாலையில் வணிகம் சிறப்புற நிகழும் பொழுதிலும்கூட நகரிலிருந்து பேரோசை ஏதும் எழவில்லை. கோட்டை மேலிருந்து அப்போது நகரத்தை பார்த்தால் ஓசையற்ற சிறு எறும்புப்புற்றென அது அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். அல்லது ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலையொன்றின் நெளிவென விழிமயக்கம் காட்டும். துவாரகையின் அழிவின் துயரிலிருந்த மக்கள் மீள்வதற்கு முன்னரே பிரஃபாச க்ஷேத்ரத்தின் அழிவுச் செய்தி அவர்களுக்கு வந்தது. சற்றே விலகிய துயர் எழுந்து மீண்டும் அவர்களை மூடிக்கொண்டது.

மதுராவின் மக்களில் ஒரு சிலருக்கேனும் அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடும் எண்ணம் இருந்திருக்கலாம். முதியவர் சிலர் யாதவர்கள் கன்றோட்டும் வாழ்வில் இருந்து விலகி ஷத்ரிய வாழ்க்கையை மேற்கொண்டதை தெய்வங்கள் விரும்பவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த எண்ணம் ஏறத்தாழ அனைவரிடமும் இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் மூழ்கும் தெப்பத்துடன் தானும் மூழ்குபவர்கள்போல அந்நகரையே பற்றிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் பிறிதொன்றை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்த ஆயர்வாழ்வெல்லாம் நூலிலும் கலைகளிலுமே.

உளச்சோர்வை மனிதர்கள் பழகி தங்கள் இயல்பென கொள்ளத் தொடங்கும்போது அது ஒரு மறைமுக இன்பத்தை அளிக்கிறது போலும். சோர்ந்து தோள்தளர்ந்து மெல்ல நடந்துசெல்லும் மதுராபுரியின் ஒரு குடியினனுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை சொன்னால் கூட இயல்பாக உவகை கொள்ள அவனுக்கு பழக்கமில்லை என்றே தோன்றும். புன்னகைகள் உதடுகளில் மட்டுமே நிகழ கண்கள் அப்பால் இரு பளிங்குத் துண்டுகளென உணர்வற்றிருக்கும்.

மதுராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு உறவினரேனும் துவாரகையில் உயிர்நீத்திருந்தனர். அங்கிருந்து நீத்தார் கரிய நிழல்களென வந்து மதுராபுரியில் செறிந்துவிட்டதாக சூதன் ஒருவன் சொன்னான். ஆகவே மதுராவின் மக்கள் ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்து பல நிழல்கள் இருப்பதாக உணரத்தொடங்கினர். இல்லங்களில் பல நூறு நிழல்கள் ஆடின. நிழல் பெருகி ஒன்றுடன் ஒன்று இணைந்து இரவாகியது. ஒருமுறை உச்சிப்பொழுதிலேயே முற்றிலும் இருண்டு நகர் ஒன்றும் தெரியாமல் ஆகியது. அன்று கலைந்த பறவைக்கூட்டமென மதுரா ஓலமிட்டது.

மதுராவில் நாற்களமாடலுக்கு களம் ஒருங்கிய செய்தி மக்களிடம் எந்த விருப்பையும் உருவாக்கவில்லை. எவரும் அதை செவி கொடுத்து கேட்கவுமில்லை. அது நன்றென்றே தோன்றியது. பந்தல் அமைக்கவும், பாதைகள் சீரமைக்கவும், காவலும் ஏவலும் ஒருக்கவும் முயலும்தோறும் மக்கள் அவற்றில் இருந்து அகன்று செல்வதாகவே தோன்றியது. ஆனால் முந்தையநாள் கோசலத்திலிருந்து அரசர் வந்து இறங்கியபோது முதல் அசைவு நிகழ்ந்தது.

சோர்ந்து ஒலியடங்கிக்கிடந்த நகரத்தினூடாக அணிசெல்கையில் வாழ்த்தொலி எழாமலிருந்தால் கோசலர் தனக்கெதிரான புறக்கணிப்பாக அதை எடுத்துக்கொள்ளக்கூடும் என்பதற்காக ஊதியமளித்து ஆங்காங்கே படைவீரர்களை குடிமக்களென நிறுத்தி வாழ்த்தொலி எழுப்பச்செய்தோம். அணைந்து கிடந்த நகரில் எழுந்த அந்த வாழ்த்தொலி துயிலில் இருந்து விழித்துக்கொண்டவனின் குரலென ஒலித்தது. அது நகரின் ஆழத்திற்குக் கேட்டது. எங்கிருந்தோ அதற்கு எதிரொலி எழுந்தது.

உச்சிப்பொழுது கடந்து மிதிலையில் இருந்து ஜனகர் நகருள் நுழைந்தபோது மதுராவின் குடிகளில் ஒருசாரார் சாலையில் வந்து நின்று வாழ்த்தொலி கூவினர். அன்று மாலையே மதுராபுரி மாறியது. இல்லங்களுக்கு முன் கோலங்கள் எழுந்தன. தளிர்த்தோரணங்களும் மலர்த்தோரணங்களும் உருவாயின. வண்ண ஆடை அணிந்த மக்கள் சாலைகளில் குவிந்தனர். மன்றுகளில் வண்ணத்தலைப்பாகைகளுடன் குடிமக்களை காண முடிந்தது. சிரிப்பொலிகளும் விழியொளிகளும் தென்பட்டன. மெல்ல மெல்ல நகர் மங்கலம் கொள்ளத் தொடங்கியது.

“நன்று, ஒழிந்த மங்கலம் இன்று மீள்கிறது. அவ்வகையில் நன்று” என்று என்னருகே நின்ற அமைச்சர் ஒருவர் சொன்னபோது நான் உளச்சோர்வையே அடைந்தேன். பிறிதொன்றையே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வாத ஒன்று. ஏனெனில் அக்கொண்டாட்டத்திற்கு அடியில் இருப்பது ஒரு கசப்பென்று நான் அறிந்திருந்தேன். அது என் உள்ளக்கசப்பா என்று எண்ணி அதை தவிர்த்தேன். ஆனாலும் என் உள்ளம் காற்றிலா கொடி என துவண்டே கிடந்தது.

ருக்மி அன்று மாலை மதுராபுரிக்குள் நுழைவதாக இருந்தது. கௌண்டின்யபுரியிலிருந்து அவரும் அமைச்சரும் கிளம்பிவிட்டதாக செய்தி வந்தது. பன்னிரண்டு படகுகள் யமுனைக்குள் நுழைந்தன. மதுராவிலிருந்து எட்டு படகுகள் சென்று அவர்களை நீரிலேயே கொடி காட்டி வரவேற்று சூழ்ந்து அழைத்து வந்தன. ருக்மியின் படகு மதுராவின் படகுத்துறையை வந்து அடைந்தபோது நானும் பட்டத்து இளவரசனாகிய நிஷதனும் துறைமேடையில் நின்று அவர்களை வரவேற்றோம்.

ருக்மி படகில் இருந்து கூப்பிய கையுடன் இறங்கி வந்தபோது நான் முன் சென்று தலைகுனிந்து “வருக விதர்ப்பரே, இது தங்கள் கால் பழகிய நிலம், மீண்டும் தங்கள் கால் பட்டு இது மங்கலம் கொள்க!” என்றேன். அவர் உரக்க நகைத்து “ஆம், நான் அறிந்த நிலம். அறிந்த ஆசிரியர். நான் நன்கறிந்த ஆடல்கள்” என்றார். பலராமரின் மைந்தர்கள் நிஷதனும் உல்முகனும் அவரை முறைப்படி முகமன் கூறி வரவேற்றனர். நிஷதனின் தோளில் தட்டி “எப்படி இருக்கிறீர்கள்? தந்தையைப்போலவே தோள்பெருத்திருக்கிறீர்கள். கதை பழகியிருக்கிறீர்களா?” என்றார். அவர்கள் புன்னகைத்தனர்.

அவரை அழைத்துச்சென்று அணித்தேரில் ஏறினோம். தேரில் ருக்மி மதுராவின் தெருக்களினூடாகச் சென்றபோது குடிமக்கள் இருபுறமும் வந்து கூடி வாழ்த்துரைத்தனர். “விதர்ப்பர் வெல்க! ருக்மி வெல்க!” என்ற குரல்களைக் கேட்டு அவர் திகைத்தார். பின்னர் உரக்க நகைத்து இருபுறமும் நோக்கி கைதொழுதார். மதுராவின் மக்களின் வாழ்த்தென்பது அவர்கள் நெடுங்காலம் இருந்த உளச்சோர்விலிருந்து வெளிவந்தமையால் என்று எனக்கு தெரிந்திருந்தது. அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நான் “எவ்வகையில் என்றாலும் அது நன்று” என்றேன்.

நிஷதனும் உல்முகனும் ருக்மியுடன் சென்றனர். நான் படகுத்துறைக்கு மீண்டேன். அமைச்சர்கள் வந்த படகு வந்து நின்றது. நான் அங்கு நின்று ஒவ்வொருவரையாக வணங்கி முகமன் உரைத்து உரிய தேர்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு தேரிலிருந்து அகன்ற தாலத்தில் கணிகர் கொண்டுவரப்படுவதை பார்த்தேன். முதலில் அது ஏதோ பொருள் என்று எண்ணினேன். கணிகர் என்று கண்டதுமே என் உளம் திகைத்தது. பின்னர் புரிந்துகொண்டேன். முன்னரே எனக்கு அது மெலிதாக தோன்றியிருந்தது. புதிய அமைச்சராக கௌண்டின்யபுரியில் சேர்ந்த அமைச்சர் கணிகர்தான். நாற்களமாடல் மதுராவில் நிகழவேண்டும் என்று அறிவுரைத்தவர் அவரே.

அதில் அவரது ஆடல் என்ன என்று என் உள்ளம் எண்ணியது. எவ்வகையிலும் அது ருக்மிக்கு உகந்ததல்ல என்றுதான் தோன்றியது. அப்போதுதான் பிறிதொரு எண்ணம் வந்தது. ஒருவேளை இந்த நகரில் ருக்மிக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பை கணிகர் முன்னுணர்ந்திருப்பாரா? அதன்பொருட்டுதான் இந்த மாற்றத்தை அவர் உரைத்தாரா? அத்தனை முன்சென்று எண்ண எவரால் முடியும்? ஆனால் அவரால் இயலும் என்றும் தோன்றியது.

முந்தைய கட்டுரைஉத்திஷ்டத ஜாக்ரத!
அடுத்த கட்டுரைகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்