கதைத் திருவிழா-1 ’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முக்தா சொன்னார், “முன்பெல்லாம் பாடபேதங்களைப் பற்றி எனக்கு ஒரு பெரிய பதற்றம் இருந்தது. எந்த மூலநூல் என்றாலும் அதன் மூலபாடம் என்ன, பாடபேதங்கள் என்னென்ன, பாஷ்யங்கள் என்ன, பாஷ்யபேதங்கள் என்னென்ன் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருந்தது”.

ஏனென்றால் Institute of Parapsychology And Marginal Psychology யில் என்னுடைய வேலையே பழைய நூல்களை பாடபேதம் நோக்கி, பிழைப்பட்டியல் தயாரித்து, சொல்லடைவு பொருளடைவுடன் பிரசுரிப்பதுதான். என் இருபது வயதுமுதல் நான்காண்டுகாலம் அதைத்தான் நான் செய்துகொண்டிருந்தேன். பெரும்பாலானவை பௌத்தநூல்கள், தாந்த்ரீகநூல்கள்.

நூல்களில் மூழ்கிக்கிடப்பது மிக நல்லது. அதிலும் சென்றகால நூல்கள். நான் இப்படிச் சொல்கிறேனே, சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன். பழையநூல்கள் காலத்தால் வடிகட்டப்பட்டவை, ஆகவே அவை நிலையான சிலவற்றைச் சொல்பவை. நான் புதியநூல்கள் அனைத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பவன்.

ஆனால் நூல்கள் ஒரு தருணத்தில் நம்மை சூழ்ந்துகொள்கின்றன. வெளியேற வழியே இல்லாததுபோல ஆகிவிடுகிறது. நூல்களைச் சொல்லிப் பயனில்லை. அவை நம்மிடம் பேசுகின்றன. நாம் அவற்றிடம் பேசுகிறோம். நம்மிடம் பேசும் எவரிடமும் எதனிடமும் திரும்பப்பேச ஆரம்பிப்பது நமக்குள்ள வழக்கம். ஒருகட்டத்தில் நூல்கள் நம்மிடம் பேசுவதைவிட மேலாக அவற்றுடன் நாம் பேச ஆரம்பித்துவிடுகிறோம்.

நூல்களில் இருந்து பெற்ற சொற்களை நாம் நம் ஆழத்தில் புதைக்கவேண்டும். புதைக்கப்படாத விதை முளைப்பதில்லை. நூலில் இருந்து அமைதியைப் பெற்றுக்கொண்டவனே உண்மையில் அந்நூலைச் சென்றடைந்தவன்.

புத்தகம் அளிக்கும் அத்தனை சொற்களையும் திருப்பி அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகத்துடன் பேட்மிண்டன் விளையாடுகிறார்கள். ஆனால் புத்தகம் ஒரு சொல் அடித்தால் இவர்கள் நூறு சொல்லை திருப்பி அடிப்பார்கள். கடைசியில் சொற்களாலேயே ஒரு பெரிய அறையை கட்டிக்கொள்கிறார்கள். அதற்குள் இவர்களின் சொற்களையே இவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அது நம் மூச்சை நாமே விட்டு மூச்சுத்திணறுவது போல. சிலர் அதிலேயே வாழ்ந்து மடிகிறார்கள். புழுக்கள் தங்கள் உணவிலேயே வாழ்ந்து அங்கேயே சாவதுபோல. ஆனால் எல்லாருக்கும் அந்த நிலை சற்றேனும் அனுபவப்பட்டிருக்கும். அதை உணர்ந்த கணமே கிழித்துக்கொண்டு பறந்துவிட்டால் தப்பினோம். நான் ஒருநாள் காலையில் IPMPயின் அறையிலிருந்து தப்பி இமையமலைக்கு போனது அப்படித்தான்”.

ஊட்டியில் குருவின் காலைவகுப்பு முடிந்தபின் உருவாகும் ஓய்வான, அப்படியென்றால் மந்தமான, சூழல். உருக்கி ஊற்றப்பட்டது போன்ற வெயிலில் இலைகள் பளபளத்து அசைந்தன. முந்தையநாள் மழைக்குப்பின் புற்கள் மேலும் செழித்தவை போலத் தோன்றின. காற்று வீசுகையில் காதுமடல்களில் குளிர் சிலிர்த்தது

குருவின் வகுப்பை கேட்டு நினைவிலிருந்து திரும்ப எழுதிக் கொண்டிருந்தனர். ஏழெட்டுபேர் எழுதியதை பின்னர் அமர்ந்து ஒப்பிட்டு பிழைகள் திருத்தினர். ஒவ்வொருவரின் பதிவும் இன்னொருவரின் பதிவிலிருந்து நுட்பமாக மாறுபட்டது. சொற்களில், கருத்துப்பதிவில், வரிகளின் அடுக்கில்.

“ஒருவர் எழுதியது உயர்வு இன்னொருவர் எழுதியது குறைவு என்றிருப்பதைக் கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரின் எழுத்திலும் ஒவ்வொன்று சிறப்பாக பதிவாகியிருப்பது ஆச்சரியம்தான்” என்றார் ராமகிருஷ்ணன்.

“அது கேட்பவர் எவர் என்று காட்டுகிறது” என்றார் முக்தா.

சட்டென்று வீசிய காற்றில் அத்தனை மரங்களும் மறுபக்கமாக இலைமடிந்து நிறம் மாறி குலுங்கி கொப்பளித்து சட்டென்று அமைதியடைந்தன. சிறிய குருவிக்கூட்டம் ஒன்று அந்தக்காற்றில் ஏறி வந்து இறங்கி முற்றத்தில் தங்கள் சிறு நிழல்களுடன் நடந்து சிற்றடி எடுத்துவைத்து மேயத்தொடங்கியது.

“உலகத்திலுள்ள அனைத்து நூல்களுமே பாடபேதங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு பொன்மொழி உண்டு” என்று முக்தா சொன்னார்.

முக்தா தொடர்ந்தார். “மூலநூல்களை மையமாகக் கொண்ட மதங்களில் பாடபேதமில்லாமல் அந்நூலை உருவாக்கி பேணுவதற்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முயல்கிறார்கள். பேரறிஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக அதன்பொருட்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். பாடபேதம் உருவாக்குவது மரணதண்டனைக்குரிய குற்றம் சில மதங்களில்.

ஆனால் அத்தனை நூல்களும் பாடபேதங்கள் கொண்டவையே. ஏனென்றால் முதலில் அவை மொழியாக்கம் செய்யப்படவேண்டும். மொழியாக்கமே ஒரு பாடபேதம்தான். ஆகவேதான் அத்தனை மூலநூல்களுக்கும் மேலும் மேலும் ‘சரியான’ மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மூலவடிவங்களிலேயே வாசிப்புகள் ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், தருணத்திற்கு தருணம் மாறுபடுகின்றன. ஏனென்றால் சொற்களும் சொற்சேர்க்கைகளும் முடிவில்லாமல் அர்த்தங்களை உருவாக்குபவை. அப்படியென்றால் எல்லா வாசிப்புகளும் பாடபேதங்களே.

இந்தியாவில் பாடபேதம் என்பதை ஓர் அறிவுச்செயல்பாடாகவே அங்கீகரித்துவிட்டார்கள். பிரச்சினையை எளிதாகக் கடந்து சென்றுவிட்டார்கள். உரை எழுதுவதென்பது அதிகாரபூர்வமாக பாடபேதங்களை உருவாக்குவது. ஒரேவரியில் இருந்து சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் வேறுவேறு தத்துவங்களையே உண்டு பண்ணிவிட முடிகிறது. துணிந்தால் விவேகசூடாமணிக்கு ஓர் உரையெழுதி ஆதிசங்கரருக்கு வேதாந்தம் என்றால் என்ன என்று நாம் கற்பிக்கமுடியும். ஆனால் இன்னமும்கூட மீமாம்கர்கள் எதுபாடம் எது பேதம் என்பதையே தங்கள் வாழ்நாள் அலைபாய்தலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கேள்விப்பட்டேன், ஒரு மீமாம்சகர் வேதமோதி அவியிட்டு வேள்வி நிறைவுசெய்தார். யாகஸ்தம்பத்தில் இடிமின்னலுடன் இந்திரன் எழுந்தான். ஆனால் ஏதோ சின்ன வேறுபாடு. இவருக்குச் சந்தேகம். கேட்டபோது இந்திரன் சொன்னான், “நான் நகல் இந்திரன், ஒருசில பிழைகள் இருக்கும். நீ சொன்ன வேதம் பாடபேதம்” என்று.”

எழுதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பி நோக்கிச் சிரித்தார்கள்.

முக்தா தானும் சிரித்து “இன்னொரு கதையும் உண்டு” என்றார். “ஒரு மீமாம்சகர் பரமபதம் அடைந்தார். அங்கே சென்றபின் அவர் கேட்டார், வேதத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்று. பார்த்தபோது தெரிந்தது, அவர் ஓதியது பாடபேதம். ‘இல்லை, கொள்கைப்படி பாடபேதத்தை என்னால் ஏற்கமுடியாது. என்னை பரமபதத்தில் இருந்து கீழே தள்ளுங்கள். நான் சரியானதை ஓதி திரும்ப வருகிறேன்’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.”

மீண்டும் சிரிப்பு. உண்ணிக்கிருஷ்ணன் “பலவகையான பாடபேதங்கள் உண்டு. வலியதளி வைதிகர்கள் காசியில் வேதம் ஓதியபோது வேறுபாடு தெரிந்தது, கடைசியில் கண்டுபிடித்தனர். வலியதளி கோயில் அருகே கொட்டிக்கொண்டிருந்த ஓர் அருவியின் சத்தமும் அதில் சேர்ந்துவிட்டிருக்கிறது” என்றார்.

”ஆமாம், பற்பல தலைமுறைகளின் பல்லாயிரம் ஏப்பங்களின் பெருந்தொகுப்பு வேதங்களில் உள்ளது என்பார்கள்” என்று முக்தா சொன்னார். “ஆனால் நான் பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்றை ஒருமுறை பார்த்தேன்.”

முக்தா சொன்னார். நான் 1950-ல் திபெத்திற்குள் நுழைந்தேன். அப்போது அது சீனாவின் பகுதியாக ஆகவில்லை. ஆனால் அதைப்பற்றிய பதற்றங்கள் இருந்துகொண்டிருந்தன.

திபெத்தின்மேல் என்றுமே பேரரசுகளின் கண் இருந்து கொண்டிருந்தது. எண்ணூறுகளில் அதை கைப்பற்ற பிரிட்டிஷ் பேரரசு திட்டமிட்டது. இல்லையேல் அதை ரஷ்யப்பேரரசு கைப்பற்றிவிடும் என அது அஞ்சியது. இரு பேரரசுகளின் உளவாளிகளும் திபெத்திற்குள் அலைந்து கொண்டிருந்தனர். மதப்பரப்புநர்களாக, மலைப்பயணிகளாக, பௌத்த அறிஞர்களாக.

நான் ஒவ்வொருவரையும் அவ்வாறு சந்தேகப்பட்டேன். என்னை ஒவ்வொருவரும் அவ்வாறாக சந்தேகப்பட்டார்கள். அதைமீறி நம் தனிப்பட்ட திறனாலும் நம்முடைய நல்லூழாலும் சில தொடர்புகள் ஏற்பட்டன. ஆனால் நான் திபெத்தில் அலைந்த காலகட்டத்தில் எந்த நாளிலும் சாக வாய்ப்பிருந்தது.

திபெத்திய நிர்வாகம் அன்று தலாய்லாமாவின் கையில் இருந்தது. அவர்கள் எவரைச் சிறையிட்டாலும் நாடுகடத்த மட்டுமே செய்தனர், கொலை செய்யவில்லை. அதுதான் அவர்களின் பண்பாடு, ஆனால் அது பெரிய தவறாக ஆகியது. அவர்கள் பலநூறு ஒற்றர்களை திருப்பி அனுப்பிவிட்டனர், அவர்கள் சேகரித்த தகவல்களுடன்.

அந்த ஒற்றர்களின் செய்திகளினூடாக, அவர்களை உடனழைத்துக் கொண்டுதான் கர்னல் யங்ஹஸ்பெண்ட் 1903-ல் திபெத்தின் மேல் படையெடுத்து வந்து லாசாவை கைப்பற்றினார். மடாலயங்களைச் சூறையாடினார். திபெத் என்னும் மறைஞானக் கட்டமைப்பின் சரிவு அங்கே தொடங்கியது.

திபெத் மலையுச்சி சமவெளியில் அலைந்து கொண்டிருந்த ஒற்றர்களுக்கு இன்னொரு ஒற்றரால்தான் ஆபத்து இருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றனர், சிறிய சந்தேகம் வந்தாலும் போதும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

கொல்வதோ மிக எளிது. ஏனென்றால் பெரும்பாலான நிலம் பனிப்பரப்பு. சாட்சிகளே இல்லாத வெளி. கொல்லப்பட்டவர் கண்டெடுக்கப்படவே நெடுநாட்களாகும். ஒருவேளை கண்டெடுக்கப்படாமலேயே போகவும்கூடும்.

நான் அப்படி ஓர் ஒற்றனைச் சந்தித்தேன். அவன் மங்கோலியன். மங்கோலியர்களை நம்மால் திபெத்தியர்களிடமிருந்து பிரித்தறிய முடியாது. நான் அவரை திபெத்தின் மடாலயம் ஒன்றில் பிக்ஷுவாக சந்தித்தேன். அவன் அங்கே எட்டு ஆண்டுகளாக பிக்ஷுவாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

நான் லாஸாவிலிருந்து பதினாறு கிலோமீட்டர் அப்பாலிருந்த ட்ரா யேர்பா [Drak Yerpa] என்ற மடாலயத்தில் பதினெட்டு மாதம் தங்கியிருந்தேன். ட்ரா யேர்பா விந்தையான ஒரு மடாலயம். அதை மடாலயம் என்பதைவிட மென்பாறையில் அமைந்த குகைகளின் தொகுதி என்று சொல்லலாம். பலகுகைகள் இயற்கையானவை. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டிருப்பவை. போன் மதத்தின் தெய்வங்களுக்குப் பலிகொடுக்க பயன்படுத்தப்பட்டவை. பின்னாளில் பௌத்த மதத்திற்குள் வந்தவை. சில குகைகள் விரிவாக்கப்பட்டவை, புதிதாகச் செதுக்கப்பட்டவை.

சுண்ணப்பாறைகளாலான செங்குத்தான மலைமுடிகள் சூழ்ந்திருக்க ஒரு மலைச்சரிவில் அமைந்திருக்கிறது இந்த மடாலயம். இதன் அனைத்துச் சாளரங்கள் வழியாகவும் நேர் எதிரில் இருக்கும் இன்னொரு மலைச்சிகரத்தைப் பார்க்கலாம். அதன்மேல் தொன்மையான தியாகமயானங்கள் உள்ளன. அப்படித்தான் சொல்கிறார்கள். சடலங்கள் அங்கே கொண்டு சென்று வைக்கப்படும். மலைக்கழுகுகள் அவற்றை கொத்தி உண்ணும். நான் அங்கே சென்றபோதுகூட அவ்வழக்கம் பௌத்தர்களிடையே இருந்தது.

அங்கிருந்த குகைகள் சிறு ஆலயங்களாக மாறி வழிபடப்பட்டன. பொதுயுகம் 604-ல் யார்லங் வம்சத்தின் 33 ஆவது அரசரான சோங்ஸ்டன் காம்போ அங்கே இன்றிருக்கும் பெரிய மடாலயத்தை கட்டினார். இங்கிருக்கும் யேஷே என்ற வஜ்ரயோகினியின் கோயில் முக்கியமான ஓரு தாந்த்ரீக மையம். இங்கு புத்தர் வஜ்ரயோகினியுடன் புணர்ச்சிநிலையில் அமர்ந்திருக்கிறார். எல்லையற்ற ஆற்றலும் எல்லையற்ற ஞானமும் ஒன்றாக ஆகும் ஒரு கணத்தின் சிற்பவெளிப்பாடு அது. வஜ்ராயன பௌத்தம் உருவாக்கிய படிமங்களில் தலையாயது.

அந்தக் குகைகளில் பெரும்புகழ்பெற்ற பல லாமாக்கள் தங்கள் இறுதித் தியானத்தைச் செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நான் அங்கிருக்கையில்கூட பல சிறுகுகைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிற மானுடரையே பார்க்காமல் தவம்செய்யும் லாமாக்கள் இருந்தனர். சிலரை நான் நிழலசைவாக பார்த்திருக்கிறேன். சிலரை அவர்கள் அங்கிருக்கிறார்கள் என்ற உள்ளுணர்வாலேயே அறிந்திருக்கிறேன். அங்கிருந்தபோது நான் அடைந்த சில அனுபவங்கள் உள்ளன, அவற்றை பின்னர் சொல்கிறேன்.

அங்கே நான் தங்கியிருந்த அனுபவம் விந்தையானது. அங்கே எவரையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொண்ட பின்னர் சமையல் வேலையும் தூய்மை வேலையும்தான் அளிக்கப்படும். அவை அந்தக் கடும்குளிரில் முதுகை உடைக்கும் வேலைகள். எந்த மறுநினைவும் இல்லாமல் முழுமூச்சாக பகலெல்லாம் வேலை செய்து இரவில் தள்ளாடி நடந்து மென்மயிர்ப் போர்வைக்குள் சுருண்டு தூங்கி காலையில் அப்படியே எழுந்து மீண்டும் வேலை.

ஒருவகை தியானம்தான் அது. நினைத்துப் பார்த்தால் நான் மனமே இல்லாமல் எண்ணங்களே இல்லாமல் இருந்த நாட்கள் அதைப்போல பிறகு எப்போதும் அமையவில்லை என்றுகூட தோன்றுகிறது. வேலை என்னை பித்துப்பிடிக்க வைத்தது. என்னிடமிருந்த எல்லா ஞானமும் பறந்து போயிற்று. என் கடந்தகாலமே உதிர்ந்து எங்கோ மறைந்தது.

ஒரு திபெத்திய மடாலயத்தை தூய்மை செய்யவேண்டிய தேவையே இல்லை. அங்கே அன்றெல்லாம் எவருமே வருவதில்லை. எவரும் நடமாடுவதுமில்லை. தூசி இல்லை. பனி இருப்பதனால் பாசிப்படர்வும் இல்லை. ஆனால் தூய்மை செய்யும்படி ஆணையிட்டுக் கொண்டே இருப்பார் அதற்குப் பொறுப்பான லாமா. ஏன் என்று எண்ணவும் நமக்கு நேரமிருக்காது

அப்படி ஒன்பது மாதங்கள். நான் ஒருநாள் விடியற்காலையில் விழித்துக்கொண்டபோது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற வியப்பை அடைந்தேன். கிளம்பிச் சென்றுவிடவேண்டும். இங்கே இருந்தால் என்னை ஓர் எறும்பாக ஆக்கிவிடுவார்கள். இந்த மடாலாயம் ஓர் எறும்புப் புற்று. எங்கோ ராணி இருக்கிறது. எஞ்சிய ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வேலை வகுத்து தரப்பட்டிருக்கிறது. அதை செய்து செய்து அதிலேயே சாகவேண்டியதுதான்.

அன்று நான் வேலை செய்யப்போவதில்லை என்று தீர்மானித்தேன். லாமாவிடம் சொல்லிவிட வேண்டியதுதான், நான் அதற்காக வரவில்லை, கிளம்பிவிடுகிறேன் என்று. அதற்கான சொற்களை நான் உருவாக்கிக்கொண்டேன். கைகளையும் முகத்தையும் நீராவியால் தூய்மை செய்தேன். அங்கே பனியாடைகளை உலர்ந்த வெப்பக்காற்றால் தூய்மைசெய்ய ஓர் அமைப்பு இருந்தது. அதில் அவற்றை வாட்டிக்கொண்டேன்.

அப்போது இளைய துறவி ஒருவர் என்னை அழைத்து லாமா டென்ஸின் க்யாட்ஸோ என்னை அழைப்பதாகச் சொன்னார். அவர் பெயருக்கு ஞானக்கடல் என்று பொருள். அவரை நான் ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் மிகத்தொலைவில் இருந்து. அவர் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

அவர் என்னை அழைக்கவில்லை, தவறு ஏதோ நடந்துவிட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆகவே தயக்கத்துடன்தான் சென்றேன். என்னை வஜ்ரயோகினியின் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அது ஓர் அறை எனத் தோன்றும், ஆனால் அது இயற்கையான குகை. ஆழ்ந்த சிவப்புநிறம் பூசப்பட்ட மரத்தாலான முகப்பு கொண்டது. குருதிச்சிவப்பும் நீலமும் கலந்து வரையப்பட்ட ஓவியம் பரவியிருக்கும் பெரிய வாசல்கதவில் பித்தளைக் குமிழ்களும் தாழும். அதை திறந்து உள்ளே செல்லச் சொன்னார் என்னை அழைத்துச்சென்ற பிக்ஷு. உள்ளே நுழைந்தபிறகுதான் அது குகை என அறிந்தேன்.

தரையில் அடர்சிவப்பான மென்மயிர்க் கம்பளம். மரப்பட்டையாலான உட்சுவர்களில் பல்லாயிரம் சிறிய அறைகளில் பொன்பூசப்பட்ட மரத்தாலான புத்தர்சிலைகள் ஊழ்கத்தில் நிலம் தொட்டபடியும், அறிவுறுத்தியபடியும், ஆணையிட்டபடியும், ஆழிசுழற்றியபடியும் அமர்ந்திருந்தன.

நேர் எதிரில் வஜ்ரயோகினியின் சிலை. ஆயிரமிதழ்கொண்ட பொற்றாமமரை மேல் அமர்ந்திருக்கும் கோலம். தலைமயிர் பெரிய கொண்டை வளையங்களாக கட்டப்பட்டு தோளில் அமைந்திருந்தது. இரு கைகளிலும் வஜ்ராயுதங்கள். செக்கச்சிவந்த ஆடையின் பொன்வேலைப்பாடுகள் செறிந்திருந்தன. வெண்ணிற மேலாடை முகில்கீற்றுபோல வளைந்து நெளிந்து உடலை மூடியிருந்தது.

சிலைக்கு முன்னால் இரண்டு வரிசையாக மென்மையிர் போர்த்த மெத்தையாலான பீடங்கள். ஒவ்வொன்றின் முன்னும் சிறிய மேஜைகளில் விரிக்கப்பட்ட நூல்கள். அன்று அங்கே காகிதநூல் வழக்கத்திற்கு வரவில்லை. வெண்மையான ஃபிர்ச் மரப்பட்டைகளாலும் ஆட்டுத்தோலாலும் பட்டுத்துணியாலும் ஆனவை அந்நூல்கள். பிரார்த்தனைக்குரிய மணிக்கலங்களும் சுழலும் உடுக்கைகளும் குழல்களும் கொம்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

இருக்கைகளின் முகப்பில் மெத்தைமேல் லாமா டென்ஸின் க்யாட்ஸோ அமர்ந்திருந்தார். மிக முதியவர். அவர் விழிகள் மேலும் சிறிதாகி முகச்சுருக்கத்தின் ஆழமான மடிப்புகளுக்கு நடுவே இரண்டு காராமணிகளை செருகி வைத்திருப்பதுபோல தோன்றின. ஆழ்சிவப்புக் கம்பிளியாடை. கையில் பொன்னாலான ஒரு கங்கணம். ஒருகையில் படிக மணிமாலை சுழன்று கொண்டே இருந்தது. அவர்விரல்கள் அவற்றை உருட்டி நகர்த்திக் கொண்டே இருந்தன.

நான் சென்று அவர் முன் விழுந்து முறைப்படி வணங்கினேன். அமர்ந்து கொள்ளும்படி கைகாட்டினார். நான் அமர்ந்ததும் புன்னகைத்து “தென்னகத்தில் இப்போது நல்ல மழை” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தலைவணங்கினேன்.

“தெற்கே, பரசுராமக்ஷேத்திரத்தில், நீ பிறந்த மண்ணில்” என்று சொல்லி புன்னகை செய்தார்.

நான் அதையும் புரிந்து கொள்ளாமல் தலைவணங்கினேன்.

“நீ கடுமையாக உழைப்பதாக நீ எண்ணுகிறாய்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “உன் உடல் ஓய்வுகொள்ளலாம்…”

நான் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பேசும்போதுகூட கையில் அந்த மணிகள் ஓடிக்கொண்டிருந்தன. அது அவருடைய இன்னொரு மனம். அல்லது அதுதான் அவருடைய மனம், இந்த உரையாடல் மேலே எழும் அலை.

“நாளைமுதல் நீ இங்கே ஒரு குகையில் தனித்திருக்கலாம். உனக்கான உணவு அங்கே அளிக்கப்படும்” என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார்.

நான் முகம் மலர்ந்து மீண்டும் வணங்கினேன்.

“அங்கே வெறுமே இருந்தால் போதும். ஆனால் வெறுமே இருக்கவேண்டும். நூல் எதையும் வாசிக்கக்கூடாது. எதையும் வரையக்கூடாது, செதுக்கக்கூடாது. கைத்தொழில் எதையும் செய்யக்கூடாது. எவரிடமும் பேசக்கூடாது, உனக்கு நீயேகூட ஓசையிட்டு உரையாடிக் கொள்ளக் கூடாது”

“செய்கிறேன்” என்றேன்.

“நல்லது, நன்றே நிகழ்க!” என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ வாழ்த்தினார்.

நான் திரும்பும்போது உற்சாகம் கொண்டிருந்தேன். இதோ என்னை ஞானத்தேடல் கொண்டவன், யோகம் செய்ய தகுதியானவன் என்று குரு அங்கீகரித்திருக்கிறார். முதல்படியை தாண்டிவிட்டேன். இனி நான் செல்லக்கூடிய பாதை மிக நீண்டது, அதன் தொடக்கப்புள்ளி இது. நான் அத்தனை தொலைவு கடந்து திபெத்துக்கு வந்ததே இதற்காகத்தான்.

என் அறையிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கான புதிய ஆடையையும் போர்வையையும் காலணிகளையும் கையுறைகளையும் பிக்ஷுக்கள் அளித்தார்கள். அவை அனைத்துமே கன்னங்கரியவை. உணவு உண்பதற்கான கலம் ஒரு கரிய கொப்பரை- நம்மூர் சாமியார்களின் திருவோடேதான்.

ஆடைகளை நான் அணிந்து கொண்டேன். இருட்டுக்குள் என் உடல் மூழ்கிவிட்டதுபோல பிரமை எழுந்தது. என் மூக்கும் கண்களும் வாயும் மட்டுமே வெளியே தெரிந்தன. காலணிகளின் அடிப்பகுதியில் மரக்கட்டைக்கு அடியில் மரநார் வைத்து தைக்கப்பட்டிருந்தது. நான் நடந்தபோது சேற்றில் மிதித்துச் செல்வதுபோல தோன்றியது. தயங்கி தயங்கி காலடி வைத்தேன். அதன்பின் நின்றுவிட்டேன்.

பின்னர் என் அகம் ஏன் தத்தளிக்கிறது என்று எனக்கு புரிந்தது. நடந்தபோது முற்றிலும் காலடியோசை இல்லை. நம் காலடியோசைகள் நாம் நடக்கும்போது நம்முடன் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கேட்டுக்கேட்டு பழகிவிட்டோம். ஓசையின்றி காலடி விழுமென்றால் நாம் நடப்பதை நம் அகம் நம்புவதில்லை. ஆகவே அது பதறுகிறது.

அந்த குகையறைக்குள் சென்றபின் கண்டுகொண்டேன், நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஓசை தேவைப்படுகிறது. தொலைபேசியை இயக்கும்போது அந்த ஓசை வரும்படி ஏன் அமைக்கப்பட்டிருக்கிறது? ஓசையின்றி ஒரு செயல் நிகழுமென்றால் கூடவே நம் அகமும் அமைதியாகி காலத்தை உணர்ந்து பதற்றம் கொள்வது ஏன்? எண்ணை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு ஊற்றப்படும்போது அதை கவனிக்காமலிருக்க முடியவில்லை. நெடுநேரம் எண்ணை ஊற்றப்பட்டால் நம் நரம்புகள் வெடித்துவிடும்போல் ஆகிவிடுகின்றன. நாம் செய்வது நமக்கே தெரியவேண்டும். நம்மை நம் காது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். நம் மனம் நம்மை அப்படித்தான் அறிகிறது.

இல்லாவிட்டால் நம்மை நாம் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஓசை தேவையில்லை. அல்லது நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக நம்மை எவரேனும் பார்க்கவேண்டும். அவ்விழிகளை நாம் சந்திக்கவேண்டும்.

ஆனால் அந்தக் குகையறைக்குள் எதற்குமே வழியில்லை. அதன் சுவர்களும் மென்மயிர்ப் பரப்பால் ஆனவை. அதன் தரையும் அவ்வாறே. நான் அணிந்திருக்கும் ஆடைகள் காலணிகள் கையுறைகள் அனைத்துமே மென்மயிராலானவை. அங்கே ஓசையெழுப்பும் பொருளே இல்லை. ஆடியில்லை. நான் பேசவும்கூடாது. அதாவது நான் இருக்கிறேன் என்பதற்கு என் மனம் உணரும் தன்னுணர்வு அன்றி சான்றே இல்லை.

முதலில் உள்ளே சென்றதுமே ஒரு புதைவுணர்வு ஏற்பட்டது. மூச்சுத்திணறலாக அதை உணர்ந்தேன். அங்கே காற்றே இல்லாததுபோல. தலைக்குமேல் மலை இருப்பதைப்போல. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. மெல்லமெல்ல அந்த பதற்றம் குறைய ஏழெட்டு நாள் ஆகியது.

உணவையும் நீரையும் வெளியே கொண்டுவந்து வைத்துச் செல்வார்கள். அவர்களை நாம் பார்க்கமுடியாது. பின்னிரவில் மணியடிக்கையில் எழுந்து காலைக் கடன்களுக்குச் செல்லலாம். சிறுநீர் கலத்தையும் கொண்டு சென்று தூய்மை செய்து வரலாம். ஒவ்வொரு குகைக்கும் ஒரு வகை மணியோசை. ஆகவே ஒருவர் இன்னொருவரை பார்க்கவே முடியாது.

அங்கே நான் அடங்கிக் கொண்டே இருந்தேன். அதன் ஒவ்வொரு படியாக பின்னர் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். முதலில் அந்த இடத்தை என் வயப்படுத்திக் கொள்ள முயன்றேன். அங்கே நான் வசதியாக சொகுசாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். அச்சுவர்களை தொட்டுப்பார்த்தேன். அந்த அறைக்குள் நடந்தேன். வெவ்வேறு வகையாக அங்கே படுத்தும் அமர்ந்தும் அதை என் உடலுக்கு பழக்கப்படுத்தினேன். இருக்கையையும் படுக்கையையும் இரண்டுமுறை இடம் மாற்றிக்கொண்டேன்.

மெல்ல மெல்ல அந்த அறை என் உடலாயிற்று. உடல் போலவே என் பிரக்ஞையால் மட்டுமே அறியக்கூடுவதாயிற்று. அதாவது நான் அதை மறந்தேன், ஆனால் நான் என என்னை எண்ணுகையில் அந்த அறையுடன் சேர்த்தே எண்ணலானேன். அதன்பின் என் அகம் பிரிந்து செயல்படத் தொடங்கியது.

என் அகம் முதலில் கட்டற்ற ஓலமாக இருந்தது. நினைவுகள், எண்ணங்கள், அகச்செயல்கள். அவை புதுவெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறுபோல கொப்பளித்துச் சுழித்துச் சென்று கொண்டிருந்தன. முதலில் காமம். பலபெண்களுடன், முதன்மை ஆண்குரங்குபோல.

பின்னர் ஆணவம், என்னை எவரென அனைத்து இடங்களிலும் நிலைநாட்டுவது. உலகையே வென்று என் காலடியில் விழச்செய்வது. சக்கரவர்த்தி என ஆவதுதான் அது. சக்கரவர்த்தி என்பது மனிதனின் பகற்கனவிலிருந்து உருவாகிவந்த ஒரு பதவி. ஒரு சக்கரவர்த்தி குடிகொள்ளாத மானுட அகமே இல்லை.

ஆனால் அவை எழுச்சிகள். அவை மீண்டும் நிகழவேண்டுமென்றால் வீழ்ச்சி தேவை. அதன்பொருட்டு கழிவிரக்கம். நான் தனியன், கைவிடப்பட்டவன், புரிந்துகொள்ளப்படாதவன், வெறுக்கப்படுபவன். அந்த ஏக்கத்தின் உச்சியில் விழிநீர் கசியும் சிறுமையிலிருந்து மீண்டும் ஓங்கி எழுதல்.

ஆனால் மிகவிரைவிலேயே அகநாடகங்கள் சலித்துவிட்டன. கதைசொல்லிகளுக்கு மட்டுமே அகநாடகங்களில் வாழ்நாள் முழுக்க திளைக்கமுடியும். மற்றவர்களுக்கு கதைகள் தீர்ந்துவிடுகின்றன. வெளியே இருந்து கதைகள் வரவில்லை என்றால் தேய்ந்த தடத்திலேயே ஓடிச் சலித்துவிடுகின்றன. தேய்ந்த ஆணியில் சுழலும் சக்கரம்போல அது ஓடுவதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும். அது இருப்பதும் இல்லாததும் ஒன்றே என்று ஆகும்.

அதன்பின் அகம்நிகழா அசைவின்மை. உள்ளம் கொப்பளித்தபோது ஒருநாள் என்பது பற்பல மடங்கு நீளம். உள்ளம் அமைந்தபின் நாட்களே தெரியவில்லை. அந்த அறைக்குள் இரவுபகல் இல்லை. ஒரு மணியோசையால் நாட்கள் துண்டுபடுத்தப்படுகின்றன.

அந்த வெறுமையை அகம் தாங்கிக் கொள்வதில்லை. அது அந்த கரும்பாறைமேல் அறைந்து அறைந்து விரிசலிட செய்கிறது. உள்ளே வேர் எழுந்து முளைக்கச் செய்கிறது. கனவுகள் வரலாயின. துளித்துளி நிகழ்வுகளாக அல்ல, தொடராக, பெருக்காக. ஒரு மாற்றுலகாக.

நான் நல்ல காய்ச்சலின் போதுதான் அத்தகைய கனவுகளை கண்டிருக்கிறேன். எந்த முயற்சியும் இல்லாமல் அவை என்மேல் ஓரு நீரோடை போல சென்றுகொண்டே இருக்கும். விழித்தாலும் துயின்றாலும் அவை மாறுபடுவதில்லை. எழுந்து அமர்ந்தாலும் நடந்தாலும்கூட அவை கலைவதில்லை.

அவற்றுக்கு எந்த ஒழுங்கும் இல்லை. இடமோ காலமோ கூட அவற்றை வகுக்கவில்லை. எங்கும் நிகழ்ந்தன. கேரளத்தில் என் வீட்டில். என் தந்தையும் தாயும் உடன்பிறந்தாரும் இருந்தனர். எங்கள் நாயும் பசுவும் இருந்தன. அண்டைவீட்டார் ஊரார் இருந்தனர். ஊடே எங்கள் கோயிலின் வேட்டைக்கொருமகன் தெய்வம். சாஸ்தாக்கள், பகவதிகள், குளிகன்கள், மறுதாக்கள், கடுத்தாக்கள், மாதிகள், நீலிகள், யட்சிகள்.

என் அலைச்சல்களின் நகரங்கள். இருண்ட பாலத்தடியில் அழுக்குக் குவியல்களுக்குள் தூங்கும் தொழுநோயாளிகள். காசநோய்ச் சளி துப்பப்பட்டிருக்கும் கடைத்திண்ணைகள். பட்டினியால் செத்த சடலங்கள் விழுந்து கிடக்கும் பிகாரின் தெருக்கள். பிச்சைக்காரர்கள் மண்டிய ரயில்நிலையங்கள். வெறிமின்னும் கண்கள் கொண்ட சாமியார்கள் நிறைந்த காசி. பனிபடிந்த இமையமுடிகள் அப்பால் தெரியும் கேதார்நாத்.

நான் படித்தறிந்த நூல்களின் சொற்கள் ஊடே புகுந்தன. மேடம் பிளவாட்ஸ்கி, ஷெர்பாட்ஸ்கி, மோனியர் விலியம்ஸ், மாக்ஸ்முல்லர், தாஸ்குப்தா, சர்.ஜான் வுட்ரோஃப், அரவிந்தர். திபெத்தைப் பற்றி எழுதிய சரத் சந்திர தாஸ், நிகோலஸ் ரோரிச், ஹெலெனா ரோரிச். அச்சொற்களில் இருந்து எழுந்த மனிதர்கள். நிலவெளிகள். மின்னும் பனிபடிந்த மலைப்பாதைகள்.

கனவுகளை அஞ்சத்தொடங்கினேன். எப்போதாவது நினைவு மீளும்போது அக்கனவுகளை நினைவுகூர்ந்து அவற்றின் அராஜகப்பெருக்கை கண்டு பிரமித்தேன். என் சித்தம் பிறழ்ந்துவிட்டிருக்கிறதா? அல்லது சித்தப்பிரமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேனா? வெளியேறிவிடவேண்டும். இந்தச் சிறுகுகை என்னை அழித்துவிடும்.

ஆனால் ஆயிரம் அன்புக்கைகளால் கனவுகள் என்னை அள்ளி எடுத்துக்கொள்ளும். அன்னைப் பசுவின் நாக்குபோல நக்கி ஈரமாக்கும். சிறகுகளால் வெதுவெதுப்பாக மூடிக்கொள்ளும். இப்படியே சாவேன் என்றால் நன்றல்லவா? ஒருவன் அடையும் சிறந்த சாவு என்பது தன் கனவில் தானே மூழ்கி மறைவது அல்லவா? தேனீ தேனில் மூழ்கிச் சாவதுபோல!

ஒருநாள் விழிப்பு கொண்டபோது நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் நான் என்று என் அகம் கூவிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். மறுகணம் அச்சம் நெஞ்சை அடைக்க, நெஞ்சில் உதைவாங்கியவன் போல அப்படியே பின்னால் விழுந்துவிட்டேன். நான் எவரென்றே எனக்கு தெரியவில்லை

நான் யார்? என் பெயர் என்ன? எங்கிருக்கிறேன்? எப்படி இங்கே வந்தேன்? ஒன்றும் நினைவில்லை. நான் யார்? என் பெயர் என்ன? அதையே அரற்றிக்கொண்டிருந்தேன். எட்டு பதினாறு முப்பத்திரண்டு அறுபத்துநான்கு அறுபத்து நான்காயிரம் கைகளால் வெளியை துழாவித் துடித்தேன். என் பெயர் மட்டும் போதும், அதை மட்டும் கண்டடைந்தால் போதும், எஞ்சிய அனைத்தையும் மீட்டுக்கொள்வேன். அதற்கு முன் என் முகத்தை நான் பார்க்கவேண்டும். என் முகம் எப்படி இருக்கும்? அதை என்னால் நினைவுகூரவே முடியவில்லை

அந்த அச்சத்தை என்னால் எத்தனை விளக்கினாலும் உனக்கு பகிர்ந்துவிட முடியாது. என்னுடையது என நான் எண்ணிய எதுவுமே என் நினைவில் இல்லை. என் பெயர், சொந்த முகம், உறவினர், சொந்த நிலம், கடந்தகால நினைவுகள் எதுவும். ஆனால் நான் என்னும் தன்னுணர்வு இருந்தது. அது அஞ்சி, பதைத்து, கூவி, அலறிப் பரிதவித்தது.

நான் குகைவாசலை திறந்து தலையில் கைகளால் அறைந்தபடி ஓடினேன். செல்லும் வழியிலேயே கால்தவறி முகம் அறைந்து விழுந்தேன். மீண்டும் எழுந்து ஓடியபோது என் மூக்கிலிருந்தும் கிழிந்த உதடுகளிலிருந்தும் ரத்தம் வழிந்தது. விலங்குபோல ஓலமிட்டுக் கொண்டிருந்தேன்.

இடைவழியிலேயே மயங்கி விழுந்த என்னை தூக்கிக் கொண்டு சென்று படுக்கச் செய்தார்கள். நான் கண்விழித்தபோது என் பழைய அறையில் இருந்தேன். என் பெயர், என் முகம், என் நினைவுகள் அனைத்தும் ஒரே கணத்தில் மீண்டுவந்தன. “ஆ!”என்று கூச்சலிட்டபடி எழுந்து சென்று அங்கிருந்த சிறிய ஆடியில் என் முகத்தை பார்த்தேன். நானேதான்.

நான் பழைய ஆழ்சிவப்பு ஆடை அணிந்திருந்தேன். தலை மழிக்கப்பட்டிருந்தது. கண்கள் களைத்திருந்தன. உதடுகள் வீங்கியிருந்தன. ஆடியை வைத்துவிட்டு அந்த மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தேன். “ஆம்! ஆம்! ஆம்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எவருக்கோ அறிக்கையிடுவதுபோல. எதையோ ஆமோதிப்பதுபோல.

பின்னர் எழுந்து சென்று சிறிய கண்ணாடிச் சன்னல் வழியாக வெளியே தெரிந்த மலைச்சரிவையும் அப்பால் அடுக்கடுக்காக கண்கூசும் ஒளியுடன் எழுந்த மலைமுடிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் உச்சியில் வெண்பனித் தீற்றல்கள் தூய நீலவானில் சிதறிக் கிடந்த கீற்றுமுகில்களுடன் கலந்திருந்தன. அமைதியில் உறைந்திருந்தன. காலத்தை அறியாதவையாக இருந்தன. அன்றுதோன்றி மறுநாளே மறையும் நாய்க்குடைகள்போல மிகமிக மென்மையான வெண்ணிறம் கொண்டிருந்தன.

நான் அழத்தொடங்கினேன். என் விசும்பலோசை எனக்கே கேட்க மேலும் மேலும் விசைகொண்டு அழுதேன். அழுந்தோறும் கரைந்து கரைந்து எடையில்லாதவனாக ஆனேன். சன்னலிலேயே தலைவைத்து சற்று தூங்கினேன்

அத்தனை இனிய துயிலை நான் அடைந்ததே இல்லை. மிகமிக இனிமையான ஒரு மயக்கவெளி அது. என் அகமும் உடலும் தித்திப்பதுபோல. அத்தனை ஓய்வாக உணர்ந்தேன். நூறுகிலோ எடையை நாலைந்துநாள் தூக்கி சுமந்துவிட்டு அமர்வதுபோல என்று நினை. அல்லது பத்துநாள் விழித்துவிட்டு தூங்குவதுபோல என்று எண்ணிக்கொள்.

அதில் நான் ஒரு கனவுகண்டேன். ஒரு புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். அது செந்நிறமான தோலேட்டில் பொன்னிற எழுத்துக்களால் எழுதப்பட்டது. அதன் ஒவ்வொரு சொல்லும் என்னை கொந்தளிக்கவும் பரவசம் கொள்ளவும் செய்தன. அதை வாசித்துக்கொண்டே இருக்கையில் விழித்துக்கொண்டேன். என் அறைக்குள் லாமா டென்ஸின் க்யாட்ஸோ வந்து நின்றிருந்தார்.

நான் எழுந்து வணங்கினேன். அவர் என்னிடம் “என்ன கனவு?”என்றார்

“என்ன?” என்று நான் கேட்டேன்

“இப்போது நீ கண்டது?”

“ஒரு நூலை படிப்பதுபோல…” என்றேன் “செந்நிறமான தோலேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நூல். திபெத்திய மொழியில் அமைந்தது”

அவர் புன்னகையுடன் என்னை பார்த்து “அதை நீ எங்கிருந்து எடுத்தாய்?” என்றார்

நான் நினைவுகூர்ந்து “அது ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அமிதாப புத்தரின் பொன்வண்ணச் சிலை. அவருக்கு நேர்முன்னால் தாராதேவியின் சிலை. தாராதேவியின் காலடியில் வெண்கலத்தாலான ஒரு பீடம். அதில் இருந்தது இந்நூல்”

அவர் “நல்லது” என்று மட்டும் சொன்னார்.

நான் “அப்படி ஒரு நூல் இருக்கிறதா? உண்மையிலேயே எங்காவது இருக்கிறதா?”என்று கேட்டேன்.

“இல்லை… நான் கேள்விப்பட்டதில்லை”என்று அவர் சொன்னார். ஆனால் அவர் முகம் மாறியதை நான் நினைவுகூர்ந்தேன்.

அவர் “நீ ஓய்வெடுக்கலாம். மீண்டும் தியானத்திற்கு நீ செல்வதா வேண்டாமா என்று நான் சொல்கிறேன்” என்றார்.

அவர் சென்றபின் நான் படுக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக்கனவை மிகத் துல்லியமாக என் உள்ளத்தில் மீட்டிக்கொண்டேன். அந்த சிலை இருந்த அறை ஒரு மடாலயத்தின் கோயில் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. அந்த அறை மடாலயத்திற்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட குகை என்றுகூட உணரமுடிந்தது. ஆனால் அதன் சுவர்களும் கூரையும் சுருங்கி விரிந்து குவிந்து பரவிய சற்றே அழுக்கான வெண்ணிறத்திரைச் சீலையால் ஆனவை.

அன்று இரவு நான் நெடுநேரம் தூங்கவில்லை. மடாலயம் மிகமிக அமைதியானது. ஆனால் எனக்கு அது ஒரு தொழிற்சாலைபோல ஓசையிடுவதாகத் தோன்றியது. ஒவ்வொரு ஓசைக்கும் நான் திடுக்கிட்டுக் கொண்டிருந்தேன்.

விடியற்காலையில் தூங்கினேன். மீண்டும் அதே கனவு. அந்நூலை நான் மிகமிக அணுக்கமாகக் கண்டேன். அதன் தோல்பரப்பின் விரிசல்களையும் நுண்ணிய துளைகளையும்கூட

விழித்துக்கொண்டபின் எழுந்து அமர்ந்து நெடுநேரம் எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் என் அறைக்குள் அமர்ந்து மலைமுடிகளின் மேலே மட்டும் பனி ஒளிவிடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

முன்கூட்டியே ஒப்புதல் பெறாமல் எவரும் தலைமை லாமா அவர்களைச் சந்திக்கக் கூடாது என்று சட்டம். இருந்தாலும் நான் கிளம்பிச் சென்றேன். அவ்வேளையில் அவர் வஜ்ரயோகினி ஆலயத்தில் இருப்பார் என்று தெரிந்திருந்தது எனக்கு

நான் அங்கே சென்றபோது முன்பெனவே அவர் அங்கே தனித்திருந்தார். நான் உள்ளே நுழைந்து அவரை அணுகி தலைவணங்கினேன். அவர் என்னை எதிர்பார்த்திருப்பதுபோல தோன்றியது

நான் நேரடியாகவே அதைப்பற்றி பேசினேன். “குரு, என்னை வாழ்த்துங்கள். நான் அதை கனவுகண்டுவிட்டேன். கனவு காண்பவர்கள் அடைவார்கள் என்று முதுசொல் உள்ளது”

அவர் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தார்

“அந்த பொன்னிறநூல் எங்குள்ளது? அதை நான் வாசிக்க என்ன செய்யவேண்டும்?”

“அது இங்கே திபெத்தில்தான் உள்ளது. ஆனால் எளியோரிடமிருந்து அது மறைக்கப்பட்டுள்ளது”என்று டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார். “இங்கே ஒரு மடாலயத்தின் பாதாள அறையில். அதை ஒருவன் வாசிப்பது உகந்தது அல்ல”

“ஏன்?”என்று நான் கேட்டேன்

“அது முடிவற்றது. எவரும் அதிலிருந்து வெளியே வர முடியாது” என்று டென்ஸின் க்யாட்ஸோ சொன்னார் “அறிவின் முடிவின்மையை உணர்த்தும்பொருட்டு அது உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. அது ஒருவனின் கனவில் வருவதென்பது ஒர் அழைப்பு. ஆனால் அது வீடுபேறின் அழைப்பல்ல, மாளா இருளின் அழைப்பாகவும் இருக்கலாம்”

“குரு, அதை நான் அடையவிரும்புகிறேன். அது எனக்காக அளிக்கவிருப்பது எதுவாக இருந்தாலும் சரி, நான் அங்கே செல்லவேண்டும், அதைப்பார்க்கவேண்டும்” என்றேன். “அதை நோக்கிச் செல்லும் வழியை எனக்குச் சொல்லுங்கள்”

“இல்லை, நான் உனக்குச் சொல்லமுடியாது. அந்த பொறுப்பை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது”

“நான் இங்கே உண்ணாநோன்பிருப்பேன். உயிர்துறப்பேன்”

“நான் அதைச் சொல்லி நீ சென்றடையும் இருளைவிட இறப்பு எளியதுதான்”

“குரு என்மேல் கனிவுகாட்டுங்கள்”

“உன்மேல் கனிவதனால்தான் சொல்ல மறுக்கிறேன்”

நான் பெருமூச்சுவிட்டேன். அதன்பின் ஒன்றும் கேட்பதற்கில்லை

“நான் இங்கிருந்து இன்றே கிளம்புகிறேன்” என்றேன்

“உனக்கு நலம் நிகழட்டும்”என டென்ஸின் க்யாட்ஸோ வாழ்த்தினார்

நான் வணங்கி விடைபெற்றேன். என் அறைக்கு வந்து தேவையான ஆடைகளையும் குறைந்த அளவு உணவையும் பொட்டலம் கட்டினேன். மடாலயத்தில் நான் விடைபெறும்படி அணுக்கமாக எவரும் இல்லை.

அப்போதுதான் அந்த மங்கோலியத் துறவி என் அறைக்குள் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னிடம் “கிளம்புகிறாயா?”என்றார்

“ஆம்”என்றேன்

“அந்த மாயநூலை தேடியா?”

நான் திகைப்புடன் பார்த்தேன்

“நீ பேசியதைக் கேட்டேன்“ என்று அவர் சொன்னார். “நானும் அந்நூலைத் தேடித்தான் இங்கே வந்தேன்”

“அப்படியொன்று மெய்யாகவே இருக்கிறதா?”

“இருக்கிறது”என்று அவர் தன்னிடமிருந்த புகைப்படம் ஒன்றை காட்டினார். “பார்”

அது கருப்புவெள்ளை புகைப்படம். ஆனால் அந்த நூலேதான். அந்த இடமும்கூடத்தான் அதில் தாராதேவியின் சிலையும் இருந்தது

“இதேதான், இதேதான்!” என்று பதற்றத்துடன் சொன்னேன். .

“இந்தப்புகைப்படம் 1921ல் எடுக்கப்பட்டது. இன்னொரு துறவியிடமிருந்து இதை நான் பெற்றுக்கொண்டேன். அவருக்கும் எங்கிருந்தோ கிடைத்தது. இது எங்குள்ளது என்று எவரும் சொல்வதில்லை.நான் எட்டு ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். எனக்கு இன்றுவரை அங்கே செல்லும் வழி தெரியவில்லை. நான் அறிந்ததெல்லாம் கொஞ்சம்தான்”

அவர் தொடர்ந்தார். “சமீபத்தில்தான் ஒன்று தெரிந்தது, இது எங்குள்ளது என்று பெரும்பாலானவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது. அங்கே செல்ல ஒரே வழிதான், அது கனவில் வரவேண்டும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அங்கு செல்லும் வழியில் ஒரு பகுதி தெரியும், ஒருவரின் கனவில் அனைத்தும் ஒன்றாகக் கோக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டுவிடும். அவர் உடனே கிளம்பிவிடுகிறார்”

“எனக்கு வழி தெரியவில்லை”என்றேன்

“ஆமாம், ஆனால் நாம் சேர்ந்து செல்லலாம். என்னிடம் இப்பகுதியின் முழு வரைபடமும் உள்ளது. நீங்கள் உங்கள் கனவில் தெரிந்தவற்றைச் சொல்லி வழிகாட்டுங்கள். செல்லுமிடத்தை அதுதானா என்று உறுதியளியுங்கள்”

“ஆனால் வழி என் கனவில் வரவில்லை”என்றேன் மீண்டும்

“இல்லை, முன்பு கனவில் வழி வந்திருக்கும்… அதை இதனுடன் இணைத்திருக்க மாட்டீர்கள். நாம் செல்லும்போது அந்த இடத்தை நீங்கள் முன்பு கனவில் கண்டதுண்டா என்று மட்டும் சொல்லுங்கள், போதும்”

நான் “சரி”என்றேன்

“என்னால் கழுதைகள், பயணச்சரக்குகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்யமுடியும்… நாம் கிளம்புவோம்” என்று அவர் சொன்னார்

முக்தா சொன்னார். அவர் பெயர் பாட் எர்டீன். மங்கோலிய மொழியில் அதற்கு உறுதியான ஆபரணம் என்று பொருள். அவர் ரஷ்யாவின் ஒற்றர், ஆனால் பிறப்பால் பௌத்தர். கிட்டான் என்ற தொன்மையான இனத்தைச் சேர்ந்தவர். கிழக்கு மங்கோலியாவில் கெர்லென் ஆற்றங்கரையில்  உள்ள அழிந்துபட்ட பௌத்த நகரமான பார்ஸ்-ஹாட் [Bars-Hot] என்னுமிடத்தில் பிறந்தவர். இன்று அது ஹெடோங் என அழைக்கப்படுகிறது.

அவர் ஒற்றராக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவர் அனைத்தையும் மிக விரைவாக ஏற்பாடு செய்தார்.ஒருநாள் புலரிக்கு முன் நாங்கள் மடாலயத்தில் இருந்து வெளியேறி ,நாங்கள் நான்கு கழுதைகளில் பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு வழிகாட்டிகளுடன் லாசாவை விட்டு அகன்று, திபெத்தின் வடமேற்காக பயணம் செய்தோம்.

எங்கள் பயணம் அன்று மிகமிக அரிதான ஒன்று. திபெத்தின் அன்றைய மையப்பாதைகள் எல்லாமே மடாலயங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பவையாகவே இருந்தன. நாங்கள் சென்றது முற்றிலும் புதிய ஒரு தடத்தில்.நாகு நகரைஅடைந்து உள்ளே நுழையாமலேயே வடமேற்காகத் திரும்பிச் சென்றோம்.

திபெத்தின் நிலவெளியினூடாக பயணம் செய்வதென்பது ஓர் அகவெளிப்பயணமேதான். மலைகள்சூழ்ந்திருக்கும் சமவெளி. தொலைவில் ஏதேனும் ஊர் இருப்பதை அங்கிருந்து தூண் போல எழுந்து நாய்க்குடை போல வானில் விரிந்திருக்கும் வெண்புகையில் இருந்து மட்டுமே உணர முடியும். ஏனென்றால் ஊர்கள் எப்போதும் பள்ளத்திலெயே இருந்தன. பனி உருகிய நீர் சென்று சேரும் இயற்கையான ஏரி ஒன்று அங்கே இருக்கும். சிலசமயம் மேட்டில் நிற்கையில் அந்த ஏரிப்பரப்புகள் கண்கூசச்செய்யும்.

ஊர்களில் இருந்து குரல்கள் எழுவது ஒரு விந்தை. கூரிய குரல்கள் நம்பமுடியாத அளவுக்கு நெடுந்தொலைவுக்கு காற்றால் கொண்டுவரப்படும். நாம் பனிப்புகைமூடிய சூழலில் திசையை கண்ணுக்கெட்டிய பொருட்களை வைத்து கணித்து சென்றுகொண்டிருக்கையில் மிக அருகே ஒரு கைக்குழந்தையின் அழுகை ஒலிக்கும். ஆனால் அது ஓரிரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு சிற்றூரில் எழுந்த ஓசையாக இருக்கும். அதை காற்று அள்ளிவந்து நம் காதில் போடும். நாம் துணுக்குற்று உடல்நடுங்க நின்றுவிடுவோம்

அடுத்த ஓசை கேட்காது. செவிகூர்ந்தால் ஆழ்ந்த அமைதி, அல்லது காற்றின் முழக்கம். நெஞ்சு படபடக்கும். அது பேய்களின் விளையாட்டல்ல என்று நாமே நம் அகத்துக்குச் சொல்லிச் சொல்லி நிறுவவேண்டும்.

அக்குரல்களைக்கொண்டு திசையையும் புரிந்துகொள்ள முடியாது காற்று மலைமேல் பட்டு எதிரொலியை நேர் எதிராக திருப்பித்தந்திருக்கலாம். அங்கே மலை இருக்கவேண்டும் என்றும் கட்டாயமில்லை. மேகமே உறுதியான மலைபோல ஆகி ஒலியை எதிரொலிக்கக் கூடியதுதான்

நாங்கள் பதினெட்டு நாட்கள் பயணம் செய்தோம். பாட் மிக இயல்பாக பழகினான். நிறைய பேசினான். நாங்கள் எளிதாக நெருக்கமானவர்கள் ஆனோம். பாட் அவனுக்கே ஒரு திட்டம் வைத்திருந்தான்.முதல் இரண்டுநாட்கள் சென்றதும் அவன் ஒரு மலையை காட்டி  “இந்த மலைப்பாதையை நீ பார்த்திருக்கிறாயா?” என்றான்

பார்த்திருந்தேன் என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை. நான் சற்றுநேரம் திகைத்து நின்றிருந்தேன். பிறகு “ஆம்” என்றேன். என் கனவில் வந்த இடம் அது

மீண்டும் நெடுந்தொலைவுக்குப் பின் அவன் உருண்டு வந்து சாலையோரமாக நின்றிருந்த ஒரு பாறையைச் சுட்டிக்காட்டி கேட்டான். “இதை பார்த்திருக்கிறாயா?” அதை நான் பார்த்திருந்தேன்

சாலை ஒரு பெரும் பாறையில் முட்டி ஓடைபோல வழிந்து சுழன்றுசென்றது.  அந்தப்பாறையில் புடைப்புச்சிலையாக முப்பதடி உயரமுள்ள போதிசத்வரின் உருவம் இருந்தது. தொலைவிலிருந்து பார்த்தபோது இன்னொரு பாறைக்குமேல் எட்டிப்பார்ப்பதுபோல போதி சத்வரின் முகம் மட்டும் தெரிந்தது.

“இதை நீ பார்த்திருக்கிறாயா?” என்றான் பாட்

“ஆம் பார்த்திருக்கிறேன்… பார்த்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன்

“இப்படித்தான் இங்கே போகமுடியும் என்று சொன்னார்கள். என் கனவில் இது வருவதற்காக நான் பல ஆண்டுகள் காத்திருந்தேன். அதற்கு முன் இப்படி கனவில் வழிகண்டுதான் அங்கே செல்லமுடியும் என்பதை நம்பவே எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது” என்று பாட் சொன்னான்

நங்கள் அப்படி பதினேழு இடங்களை அடையாளம் கண்டுகொண்டோம். திபெத்தின் வடமேற்காக பனிமலைகளின் சரிவில் ஏறிச்செல்ல தொடங்கினோம். அது சமவெளியின் முடிவு. மீண்டும் மலையடுக்குகள்

நான் “அந்த மடாலயம் இங்கே இருக்கிறதா?”என்றேன்

“இங்குதான் இருக்கவேண்டும்…பார்ப்போம்” என்று அவன் சொன்னான்

“அவர்கள் நம்மை வரவேற்பார்களா?”என்றேன்

“அவர்களால் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் கனவில் அழைப்பு வராமல் ஒருவர் இங்கே வரமுடியாது” என்றான் பாட்

நாங்கள் ஒரு மலைவிளிம்பை அடைந்தபோது மிக அப்பால் பிறிதொரு மலைச்சரிவில் அந்த மடாலயத்தை நான் கண்டேன். அக்கணமே அடையாளம் கண்டுகொண்டேன். “அதுதான்” என்றேன்

பல கனவுகளில் நான் அந்த மடாலயத்தை கண்டிருக்கிறேன். குகையிலிருந்த போது வந்த கட்டுக்கடங்காத கனவுகளில் நான் அங்கே நின்று அதை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். காட்சி மட்டுமல்ல அப்போது அங்கே விழுந்திருந்த ஒளியும்கூட அப்படியே

அது மாலைநேரம். சாய்வான ஒளியில் மடாலயத்தின் செந்நிறச் சுவர்களும் கூரைஓட்டின் வளைந்த பரப்பும் மின்னிக்கொண்டிருந்தன. கூழாங்கற்களின் பெருக்காக கீழிறங்கிச் சென்ற மலைச்சரிவே பொன்னாக வழிந்திருந்தது. அதன் தலைக்குமேல் எழுந்த மலையடுக்குகள் சுடர்முகம் கொண்டிருந்தன.

மேகங்களை ஜ்வாலாமுகிகள் என்று காளிதாசன் சொல்கிறான். தழலுக்கு முகம் கொடுத்தவர்கள், தழலே முகமானவர்கள். அந்த மலைகள் உறைந்த மாபெரும் தழல்கள் போலிருந்தன. அவை பனிமுடிகளைச் சூடியிருந்தன. இமையத்தொடரின் மலைகள் அனைத்துமே கனவுகளில் பிரமித்து அமர்ந்திருப்பவை. இந்த பல்லாயிரம் பல்லாயிரம் சிகரங்களில் ஒருமுறையேனும் மானுடக்கண்படாதவைகூட உண்டு. ஒரு சொல்லால் கூட சென்றடையப்படாதவை உண்டு.

நான் பெருமூச்சுக்களாக விட்டுக்கொண்டிருந்தேன். பாட் என் தோளை தொட்டு “வா” என்று சொன்னான்

மலைச்சரிவில் கழுதைகளை ஆதரவாகக் கொண்டு சென்றோம். எங்கள் கால்பட்டு உருளைக்கற்கள் பாதாளம் நோக்கி உருண்டு சென்றன. தோன்றி நெடுநேரமாகியும் கழுதைக்கு முன் காரட் போல மடாலயம் அங்கேயே நின்றிருந்தது. அவ்வெண்ணம் வந்ததும் நான் புன்னகைத்தேன். எல்லா மடாலயங்களும் காரட் வண்ணம்தான். அதன்பின் நான் பாட்டிடம் மடாலயம் என்பதை குறிக்க காரட் என்றே சொன்னேன்

அங்கே சென்று சேர்ந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. அங்கிருந்து அந்திப் பிரார்த்தனையின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. முற்றத்தில் நாங்கள் நின்றோம். குளிர் நடுக்கி எடுத்தது. பனியிலிருந்து வருவதைவிட காற்றிலிருந்து வரும் குளிருக்கு வீச்சு அதிகம்

ஒரு முதிய பிக்ஷு வெளியே வந்து நாங்கள் யார் என்று விசாரித்தார்

நான் அவரிடம் உண்மையைச் சொன்னேன். ட்ரா யேர்பா மடாலயத்தில் நான் தங்கியிருந்ததும், லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவர்களால் குகைத்தியானத்திற்கு பணிக்கப்பட்டதும் ,அப்போது ஒரு பொன்னிற நூலை வாசிக்கும் கனவு வந்ததும், கனவிலிருந்த அடையாளங்களை கொண்டே அது வரை வந்ததும். ஒன்று மட்டும் பொய், பாட்டை எனக்கு துணையாக லாமா டென்ஸின் க்யாட்ஸோ அனுப்பியதாக நான் சொன்னேன்

அவர் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை.  “உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார்

மிகச்சிறிய மடாலயம் அது. ஆனால் மிகமிக தொன்மையானது. அதுவும் பாறையில் உருவான குகைகளுக்குமேல் கட்டி நீட்டப்பட்டதுதான். அங்கே ஏழெட்டுபேர் கூட தங்கமுடியாது. குளிர்காலத்தில் முற்றாகவே பனியால் மூடிவிடக்கூடும். குளிர்காலத்தில் அங்கே எவரும் தங்கவே வாய்ப்பில்லை என்று தோன்றியது

எங்களுக்கு அளிக்கப்பட்ட அறை மிகச்சிறியது. இருவர் படுக்கமுடியும். அமர்வதென்றால் அதிலேயே எழுந்து அமர்ந்துகொள்ளலாம். நான் உயரமானவன் என்பதனால் என் தலை மேலே கூரையில் இடிக்கும். தரை மென்மயிர்க் கம்பளத்தாலானது. சுவர்களும் கூரையும் செந்நிற வண்ணம் பூசப்பட்ட மரத்தாலானவை

ஆனால் கீழிருந்து மண்குழாய்கள் வழியாக கொண்டுவரப்பட்ட சூடான காற்று அறையினுள் இருந்த செம்புத்தகட்டை பழுக்கக் காய்ச்சி உள்ளே வெம்மையை நிறைத்தது.அந்த மண்குழாய்கள் மடாலயத்தின் அடியில் இருந்த பெரிய அடுப்பு ஒன்றுடன் தொடர்புகொண்டிருந்தன. அது இரவும்பகலும் எரிந்தது.

ஒரு கருவறைபோல அந்த அறையை உணர்ந்தேன். பனிவெளியில் திறந்த வானின் கீழ் பலநாட்கள் பயணம் செய்தபின் கிடைக்கும் அத்தகைய அறைகள் அளிக்கும் இன்பம் நம்மை மீண்டும் குழந்தையாக, எளிய மிருகமாக ஆக்குவது. அறை சிறிதாகும்தோறும் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்

முக்தா சொன்னார். காலையில் எழுந்தபோது நான் புத்தம்புதியவனாக இருந்தேன். அத்தனை ஆழ்ந்த துயில் மட்டுமே அத்தனை புதிய உள்ளத்தை அளிக்க முடியும். எங்கள் அறைக்கு ஒரே ஒரு கண்ணாடி சன்னல்தான். இரட்டை கண்ணாடிகள் கொண்டது. அறைக்கு உள்ளே வெப்பம் நிறைந்திருந்தது. சன்னலின் அரைத்திறப்பின் வழியாக வெளிக்காற்று உள்ளே வந்தது. அதனருகே சென்று முகத்தை வைத்தேன். குளிர் என் நுரையீரலை நிறைத்தது.

மெத்தைக்குவியல்கள் மேல் தவழ்ந்து கதவை திறந்தேன். குளிர்க்காற்று உள்ளே அறைந்ததும் பாட்  ‘ம்ம்ம்’ என்று முனகினான்

நான் வெளியே சென்றேன் சிறிய இடைநாழியில் தரையில் பலகை விரித்திருந்தார்கள். சுவர்களிலும் இரட்டைப் பலகை. எவரோ பேசிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது. அந்த ஓசையை இலக்காக வைத்து நடந்து சமையற்கட்டை சென்றடைந்தேன்

அங்கே இரண்டு பிக்ஷுக்கள் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் முந்தைய நாள் எங்களை வரவேற்றவர்

சமையலறை மிகச்சிறியது. அடுப்பும் பாத்திரங்களும் கரண்டிகளும் எல்லாமே அதிகம்போனால் ஏழெட்டுபேருக்கு சமைப்பதற்குரியவை. அதையொட்டிய பெரிய அறை கரியும் விறகும் சேகரித்து வைப்பதற்குரியது

நான் அவர்களை வணங்கினேன். அவர்கள் திபெத்திய மொழியில் வணக்கம் சொன்னார்கள். நான் அவர்கள் அருகே அமர்ந்த போது ஒருவர் எனக்கு மக்காச்சோள சூப்பை ஒரு மரக்கிண்ணத்தில் கரண்டியால் கோரி விட்டு அளித்தார். கொன்றைபோன்ற ஏதோ மரத்தின் நெற்றினால் ஆன கரண்டி.

கொதிக்கக் கொதிக்க அந்த இனிய சூப்பை அருந்தினேன். என் உடல் இதமாக தளர்த்திக்கொண்டது. அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என்பெயர் முக்தா என்பதை அவர்கள் முடா என்றனர்

அவர்களில் ஒருவர் நியிமா. சூரியன் என்றுபொருள். இன்னொருவர் ஷெரிங். நீண்டவாழ்க்கை என்று பொருள். அங்கே மூன்று பிக்ஷுக்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரையும் தவிர மேலும் முதியவரான ஒருவர் இருந்தார். அவரே தலைமை லாமா. அவர் பெயர் யோண்டென் க்யாட்ஸோ. நான்காவது தலாய் லாமாவின் பெயர் அது.

“இந்த மடாலயத்தின் பெயர் என்ன?” என்று நான் கேட்டேன்

நியிமா புன்னகைத்து  “இந்த மடாலயத்திற்கு பெயர் இல்லை” என்றார்

ஷெரிங் “இதை பொதுவாக பேச்சா கோம்பா என்கிறார்கள்” என்றார்.

பேச்சா என்றால் திபெத்திய மொழியில் புத்தகம். நான் அவரிடம் “இங்கே புத்தகங்கள் எங்கே உள்ளன?”என்று கேட்டேன்

“இங்கே புத்தகங்கள் இல்லை, இருப்பது ஒரே ஒரு புத்தகம்தான்” என்றார். “அந்தப் புத்தகத்தைப் பேணுவதற்காகவே இந்த மடாலயம் அமைக்கப்பட்டது. அதை இங்கே தங்கி படிக்கலாம்”

“எவர் வேண்டுமென்றாலும் வரலாமா?” என்றேன். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது

“ஆமாம், இங்கே அனுப்பப்படும் எவரும் வரலாம்”

“அப்படி பலபேர் வருவதுண்டா”என்றேன்

“ஆமாம், ஆண்டுக்கு இருபதுபேர் வரை வருவார்கள்” என்றார் நியிமா

நான் மேலும் சற்று தயங்கி “இந்த நூலை நாம் படிக்க மட்டும் செய்யலாமா?நகல் எடுத்துக்கொள்ளலாமா?”என்றேன்

“நகல் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான எல்லா பொருட்களையும் இங்கேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்’

நான் சோர்ந்துவிட்டேன். அப்படியென்றால் திபெத்தின் எல்லா மடாலயங்களிலும் இதன் நகல் இருக்கும். இதற்காகவா இத்தனை தொலைவு வந்தேன்?

“இதன் நகல்கள் எல்லா மடாலயங்களிலும் இருக்கும் அல்லவா?” என்றேன்

“ஆமாம், கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளாக இங்கே வந்து நகல் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்”.

நான் சலிப்புடன் பெருமூச்சுவிட்டேன். இது எப்போதுமே நடப்பதுதான். மிக அரிய ஒன்றுக்காக தேடிச்செல்வது போன்ற பாவனை எப்போதுமே ஆன்மிகமரபில் உண்டு. அகத்தே தேடும் ஒன்றை புறத்தே ஒரு பொருளாக கற்பனைசெய்துகொள்வோம். அதைத் தேடி காடுமேடெல்லாம் அலைவோம். சித்தர் மரபில் அரிய வேர்கள், கற்களுக்கான தேடல்கள் நிறையவே காணலாம். அப்படி தேடிச்சென்று அடையும்போது தெரியும், அவை மிகச்சாதாரணமாக கிடைப்பவையே என்று. செல்லும் பயணமே நாம் அடைவது, இறுதியில் கைப்பற்றுவது அல்ல.இருந்தாலும் ஏமாற்றமே நீடித்தது

பாட் சற்று பிந்தி எழுந்தான். அப்போது நான் மடாலயத்தின் முற்றத்தில் நின்று மலைகள் ஒளிகொண்டு எழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். இமைய மலைமுடிகள் ஒளிகொள்வது ஓர் அற்புதமான நாடகக் காட்சி. அப்பால் தன் விளக்குகளுடன் மறைந்திருக்கும் அரங்கநிபுணன் ஒவ்வொரு மலைமுடியாக ஒளியை பாய்ச்சுகிறான்.

முதலில் மிகத்தொலைவில் மேகக்குவியல்களுக்குள் மேகத்தாலானவை போல தெரிந்துகொண்டிருக்கும் மலைமுடிகளில் ஒரு முனை மட்டும் செந்நிறமாகச் சுடர்விடுகிறது. அதைப்பார்த்துக்கொண்டே நின்றிருப்போம். அடுத்த மலைமுடி எது என நம்மால் ஊகிக்கவே முடியாது. இன்னொன்று ஒளிவிடும்போது  “ஆ!” சிறுவனைப்போல கைகொட்டி துள்ளிக்குதிக்க தோன்றும். முற்றிலும் எண்ணாத திசையில் பிறிதொன்று சுடரும்.சம்பந்தமே இல்லாத இன்னொன்று. சட்டென்று நாம் கணித்து வைத்திருக்கும் ஒன்றே ஒளிர்கிறது. ஆனால் அடுத்து இன்னொன்று எங்கோ ஒளிகொள்கிறது.

மெல்ல ஒளிரும் மலைகளாலான ஒரு மாலை வானின்கீழ் தெளிகிறது. மேகங்களின் முகங்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மலைகள் ஒளிகொள்ளும் கோணத்திற்கும் மேகங்கள் ஒளிகொள்ளும் கோணத்திற்கும் தொடர்பே இல்லை. மலைகள் உலையின் அனல் போல சிவந்து, மெல்ல வெளிறி, மலரிதழ்கள் போல ஆகி, வெண்ணிறத் தீற்றலாக மாறின. சாணியுருளைகள் வெந்து விபூதியாகி கிடப்பதுபோல

பாட் என்னருகே வந்து “நாம் முதிய லாமாவைச் சந்திக்கவேண்டும். அந்த நூலை நாம் பார்கவேண்டும்” என்றான்

நான் “எனக்கு ஆர்வமில்லை” என்றேன்.

“ஏன்?”என்று அவன் திகைப்புடன் கேட்டான்

“இங்கே வருவதுமட்டுமே முக்கியம் என்று தோன்றுகிறது. வந்துவிட்டோம். இனி என்ன?”

“முட்டாள் மாதிரி உளறாதே… நாம் வந்ததே அந்த நூலை பார்ப்பதற்காகத்தான்”

நான் முதல்முறையாக ஓர் அச்சத்தை அடைந்தேன். அவன் ஓர் ஒற்றனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அங்கே வந்து சேர அவனுடைய உதவி தேவை. ஆகவே அவனை கூட்டிக்கொண்டேன். அந்த நூலை அவன் கவர்ந்துசெல்லக்கூடுமா? என் சுயநலத்திற்காக அந்த நூலுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கி அளித்திருக்கிறேன்!

உடனே சென்று தலைமை லாமாவிடம் அவன் ஒரு திருடன் என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் என்னையும் சேர்த்தே சந்தேகப்படுவார். அவர்களுக்கு இங்கே காவலர் எவருமில்லை. ஆனால் எந்த மடாலயத்திற்கும் பரம்பரையான காவலர்கள் என்று சிலர் இருப்பார்கள். அருகே இருக்கும் பழங்குடிகளுக்கு எங்களைப் பற்றி செய்தி தெரிவிக்க அவர்களுக்குரிய ஏதாவது வழி இருக்கும். புகைபோடுவது, மணியோசை, பறவைகள்….

“சரி நாம் சென்று அனுமதி கேட்போம்” என்று நான் சொன்னேன்.

“நீ அடைந்த அந்தச் சலிப்பு இங்கே வந்ததும் எனக்கும் ஏற்பட்டது” என்று பாட் சொன்னான். “இந்த இடம் இத்தனை சாதாரணமாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை”

நியிமாவிடம் நாங்கள் யோண்டென் க்யாட்ஸோ அவர்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார்

நாங்கள் காலையில் உணவு அருந்திவிட்டு காத்திருந்தோம். நியிமா எங்களை வந்து சைகையால் அழைத்தார்

நியிமா இடுங்கலான வராந்தா வழியாக ஒரு சிறிய கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் கதவை திறந்து உள்ளே சென்றபின் வந்து எங்களிடம் உள்ளே வரும்படி சைகை காட்டினார்

நாங்கள் உள்ளே சென்றோம். வழக்கமான திபெத்திய மடாலயங்களின் அதே அமைப்புதான். நேர் எதிரில் மைத்ரேயபுத்தர். இருபுறமும் அவலோகிதேஸ்வரரும் அமிதாபரும்.மரத்தாலான ஆளுயரச் சிலைகள். பொன்பூச்சு கொண்டவை. சிவந்த உதடுகளும் கரிய விழிகளும் சிவந்த ஆடையும் பொறிக்கப்பட்டவை.

அங்கே சிவப்புக்கம்பிளி போடப்பட்ட இருக்கையில் யோண்டென் க்யாட்ஸோ அமர்ந்திருந்தார் மிகமிக வயதானவர். நன்றாக வளைந்த சுருங்கிய உடல். மேல் இமை தொய்ந்து சுருங்கி உருகிவழிந்ததுபோல கண்கள்மேல் கிடந்தது. விழிகள் எங்கிருக்கின்றன என்றே தெரியவில்லை. ஈரமான மஞ்சள்பட்டுபோல சுருக்கங்கள் மண்டிய முகமும் உடலும்

நாங்கள் வணங்கி அவர் முன் அமர்ந்தோம். நான் அவரிடம் நான் ட்ரா யேர்பா மடாலயத்தில் தங்கியிருந்ததையும், அங்கே தனிமைக்குகையில் கண்ட கனவுகளையும் சொன்னேன். அங்கே கனவினூடாகவே வழிகாட்டப்பட்டதை குறிப்பிட்டேன்

ஆனால் அவரிடம் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. அவர் வேறு ஒரு மொழியில் நியிமாயிடம் எங்களை அழைத்துச் செல்லும்படிச் சொன்னார். நியிமா எங்களிடம் வாருங்கள் என்று சைகை காட்டினார். நாங்கள் வணங்கி எழுந்துகொண்டோம்

செல்லும்போது பாட் சற்று ஏமாற்றம் அடைந்தான். “அவர் நம்மை பெரிதாக பொருட்படுத்தவில்லை… ஒன்றுமே சொல்லவில்லை” என்றான்

“என்ன சொல்லியிருக்கவேண்டும்?”என்றேன்

“அவர் நம்மை வாழ்த்தியிருக்கலாம். அல்லது நமக்கு அறிவுரையாவது சொல்லியிருக்கலாம்”

நான் புன்னகைத்தேன்

எங்களை அந்த மடாலயத்தின் பின்பக்கம் அழைத்துச் சென்றார் நியிமா அங்கே நிற்கும்படிச் சொல்லிவிட்டு ஒரு சிறிய கதவை திறந்து உள்ளே சென்றார். கதவு மூடிக்கொண்டது

எனக்கு பாட்டை எப்படி கையாள்வது என ஓர் எண்ணம் வந்தது. நேரடியாகவே அவனிடம் “பாட், நான் என்னைப் பற்றிச் சொல்கிறேனே, நான் ஒரு பிரிட்டிஷ் உளவாளி.நான் இந்த நூலைத்தேடித்தான் வந்தேன்” என்றேன்

அவன் திகைப்பதற்குள் “நீ ரஷ்ய உளவாளி என்று எனக்குத்தெரியும்” என்றேன்

அவன் பெருமூச்சுவிட்டு “எனக்கும் சந்தேகம் இருந்தது”என்றான் “ஆனால் நான் உளவறிய வந்தவன் அல்ல. இது எனக்கு தனிப்பட்ட தேடலும்கூட. உளவறிந்தாலொழிய நான் இங்கே வரமுடியாது என்பதனால் வந்தேன்” என்றான்

“நானும் அவ்வாறுதான்” என்றேன். “இந்த நூலை என்ன செய்வது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இதை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போகலாம். அது கொஞ்சம் கடினமானதுதான், ஆனால் செய்துவிடலாம். இவர்கள் நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களை ஏமாற்றி கொண்டுசென்றுவிடலாம்” என்றேன்

அவன் சிந்தனையுடன் என்னைப் பார்த்தான்

“ஆனால் இங்கிருந்து தப்பிப் போவது மிகக்கடினம்.இந்த பிக்ஷுக்களுக்கு இங்கிருக்கும் கிராமங்களின் இடையர்களுக்குச் செய்திசொல்ல ஏதாவது முறை இருக்கும். நாம் எந்தத்திசையில் சென்றாலும் வெட்டவெளியில் தன்னந்தனியாக செல்லவேண்டியிருக்கும். நம்மை பிடித்துவிடுவார்கள். இடையர்கள் நம்மை தயக்கமில்லாமல் கொல்வார்கள்”

அவன் விழிகளை பார்த்தபடி தொடர்ந்தேன் “ஆனால் அதையும்கூட எப்படியாவது ஏமாற்றி சென்றுவிடலாம், ஆனால் நாம் இந்நூலை எடுத்துச்சென்றால் இதை நாம் எவ்வகையிலும் பயன்படுத்தமுடியாது. இந்நூலில் திபெத்தின் பொக்கிஷங்களைப் பற்றிய செய்தியோ ரகசியப் பாதுகாப்பு முறைகளைப் பற்றிய செய்தியோ அல்லது ஏதாவது மருந்துகளைப் பற்றிய செய்தியோ இருக்கும் என்றுதான் நம்மை அனுப்பியவர்கள் எதிர்பார்ப்பார்கள். இதை நாம் இங்கிருந்து எடுத்ததுமே இவர்கள் எச்சரிக்கைகொண்டு அனைத்தையும் மாற்றிவிடுவார்கள். கொண்டுசென்றும் பயனில்லாமல் போகும்”

அவன் சிலகணங்கள் யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு “நீ என்ன செய்யப்போகிறாய்?”என்றான்

“நான் இதை நகல்செய்யப்போகிறேன். நுணுக்கமாக, எழுத்து எழுத்தாக. அடையாளங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் சேர்த்து. என்னை ஒரு சாதாரண பௌத்தப் பயணி என அவர்கள் நம்பும்படி நடந்துகொள்வேன். இந்நூலின் உள்ளடக்கச் செய்தி திபெத்துக்கு வெளியே செல்லவில்லை என அவர்கள் நம்பும்படிச் செய்வேன்”

அவன் சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பல திசைகளில் பயணம் செய்வது தெரிந்தது. பிறகு “ஆம், நீ சொல்வது உண்மை” என்றான்

அவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

கதவு திறந்தது. நியிமா வெளியே வந்து தலைவணங்கினார். “இந்நூலை வாசிப்பவர்கள், நகலெடுப்பவர்களுக்கு மூன்று நெறிகள் உள்ளன. அவற்றை உறுதியாக கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்

நாங்கள் ஆம் என்று தலைவணங்கினோம்.

“ஒன்று, இதை ஒருசமயம் ஒருவர் மட்டுமே வாசிக்கவேண்டும். இரண்டு, அதை அவர் எவரிடமும் விவாதிக்கக்கூடாது. நகலெடுத்த பின்னரும் பகிர்ந்துகொள்ளக்கூடாது. மூன்று, இதன் இறுதி சொல்லை படித்தபின் அல்லது நகலெடுத்தபின் அக்கணமே அறையிலிருந்து வெளியேறிவிடவேண்டும். அப்படியே மடாலயத்திலிருந்தும் அகன்றுவிடவேண்டும். நான்கு, ஒருவர் ஒருமுறையே இந்த மடாலயத்திற்கு வரமுடியும். கிளம்பியபின் திரும்பி வரவே கூடாது”.

நாங்கள் அதை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னோம்.அவர் வாருங்கள் என்று கைகாட்டினார். நாங்கள் அந்தச் சிறிய அறைக்குள் சென்றோம். அங்கே தரையில் ஏற்கனவே ஓர் இரும்புக்கதவு திறந்திருந்தது.  அதன்கீழே படிகள் இறங்கிச் சென்றன.

கையில் சிறிய விளக்குடன் நியிமா கீழே செல்ல பாட்டும் நானும் தொடர்ந்து சென்றோம்.அந்தப்படி அத்தனை ஆழமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது இன்னொரு அறைக்கான ஏணிப்படி அல்ல. நீளமான ஒரு சுரங்கம் போன்ற குழாய். நூறுபடிகளுக்குமேல் இருக்கும்.

அது ஒரு சிறிய அறைக்குள் சென்று நின்றது. அதன் சுவர்களில் திபெத்திய காவல்சிம்மங்கள் கீழ்நோக்கி வாய்திறந்திருந்தன. அவற்றின் கைகள் சுவர்களை நரம்புகள் புடைக்க பிடித்திருந்தன. வாயில் வெண்பற்கள் செறிந்திருந்தன. கடைவாயில் வளைந்து மேலேறிய தந்தங்கள். துறித்து உந்திய உருண்டை விழிகள்.

அவ்வறையின் சுவரில் வலப்பக்கம் பெக்ட்ஸே என்னும் உக்கிரமான காவல் தேவன். இடப்பக்கம்  பால்டன் லமோ என்ற பேருருக்கொண்ட பெண் பேய்த்தெய்வம்.அவர்கள் இருவருக்கும் நடுவே பழைய இடையர்களின் பலித்தெய்வமான ட்ஸென் ஒரு கையில் துரட்டியும் மறுகையில் பாசமும் சடைமுடிக்கற்றையுமாக நின்றது. நேர் எதிரில் தேவு ரங் என்னும் பேய்த்தெய்வம் விரித்த சடை மரம்போல விரிந்து கால்வரை பரவியிருக்க ஈட்டியுடன் நின்றிருந்தது.

அந்த அறையின் நான்கு சுவர்களிலும் குகைவழிகள் இருந்தன. ஒன்றினூடாக வந்திருந்தோம். அவர் இன்னொன்றை நோக்கி அழைத்துச் சென்றார். அங்கிருந்த  சிறிய குகைவழியாக இறங்கினோம். இருளுக்குள் அந்த சிறு விளக்குச் சுடர் எங்களை அழைத்துச் சென்றது. அது ஒரு சிவந்த சிறிய வண்ணத்துப்பூச்சி போல பறந்து அமிழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தது

அடுத்த தளத்தில் நான்கு சுவர்களிலும் நீலமும் சிவப்பும் கருமையும் கொண்டு வரையப்பட்ட நான்கு திபெத்திய தாந்த்ரீக தேவர்களின் உருவங்கள் கீழ்நோக்கி வெறித்திருந்தன. எட்டு தலைகளும் நூறு கைகளும் கொண்டு எருமைமேல் அமர்ந்திருக்கும் யமந்தகர்.பதினாறு கைகளுடன் அனல் உமிழ்ந்துகொண்டிருந்த சக்ரசம்வரர், கதாயுதத்துடன் வெறித்த கண்களும் வெண்பற்கள் பரவிய முகமும் கொண்ட காலதேவர், எலும்புருக்கொண்ட முகமும் பேய்விழிகளும் தொங்கும் முலைகளும் கொண்ட ஏகஜாதி. .

அங்கும் நான்கு வாசல்கள். அதில் ஒன்றின் வழியாக அடுத்த அறைக்குள் சென்றபோது நான் களைத்திருந்தேன். அது எந்த இடம் என்றே தெரியவில்லை. மலைக்குள் இறங்கிச் செல்கிறோமா? அல்லது மலையின் சரிவிலா?

மூன்றாவது அறையில் நான்கு சுவர்களிளிலும் நான்கு போதிசத்வர்களின் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டு பொன்வண்ணம் பூசப்பட்டு பதிக்கப்பட்டிருந்தன. அறையின் சுவர் வளைந்து குடைபோன்ற கூரையென்றாகியது.  அவர்களின் தலைகள் எழுந்து சென்று குனிந்து நோக்கின. அவர்களின் மணிமுடிகள் கூரையின் மையத்திலிருந்த தலைகீழ் தாமரையில் சென்று இணைந்தன

ஆகாசகர்ப்பர் என்று பாலியில் சொல்லப்படும் நம்க்யால் நியிங்போ சுடர்விடும் விண்முகில்களாலும் வானவிற்களாலும் சூழப்பட்டவராக நின்றிருந்தார். சென்ரிஸிக் எனப்படும் அவலோகிதேஸ்வரர் ஒரு கையில் தாமரையும் இன்னொரு கையில் வஜ்ராயுதமும் ஏந்தி நின்றிருந்தார்.ஒருகையில் உலகஉருளையை பொற்குவை என ஏந்திய க்ஷிதிகர்பர் என்னும் போதிசத்வர் திபெத்தில் அவர் நியுங்போ என அழைக்கப்படுகிறார். மகாஸ்தாமப்பிராப்தர் என பாலியில் குறிப்பிடப்படும் துசென் டோப் எனப்படும் பேராற்றல் வடிவமான போதிசத்வர் ஆயிரமிதழ் தாமரைமேல் அமர்ந்திருந்தார்.

கொடூரமான காவல்தெய்வங்களும் உக்கிரமான தாந்த்ரீக தெய்வங்களும் அளிக்காத பதற்றத்தை போதிசத்வர்களின் பார்வை பரிதவிப்பை அளித்தது. நியிமா அங்கிருந்த நான்கு குகைவழிகளில் ஒன்றுக்குள் நுழைந்தார். அதன் வழியாக அவர் இறங்கிச் சென்ற பின் வெளிச்சம் ஒரு சிவப்பு வட்டமாக தெரிந்தது. பாட் என்னை பார்த்தான். நான் முதலில் இறங்கினேன், தொடர்ந்து அவன் வந்தான்

நாங்கள் சென்றடைந்த அறை வட்டமானது. இருபத்தைந்தடி உயரமான இயற்கையான குகை அது. அது ஒரு பிலம் என்று தெரிந்தது. அந்த பிலம் வரை மேலிருந்து போடப்பட்ட துளைதான் நாங்கள் வந்த பாதை. அவ்வாறு நான்கு வழிகள் வந்து அங்கே திறந்திருந்தன

பிலத்தின் வெவ்வேறு வெடிப்புகளிலிருந்து மெல்லிய காற்று வந்து உள்ளே சுழன்றுகொண்டிருந்தது. அங்கே இதமான சூடும் இருந்தது. அவர் தன் கையில் இருந்த விளக்கின் சுடரால் அங்கிருந்த கொழுப்பாலான மெழுகுவத்திகளை பற்றவைத்தார். அவற்றுக்குமேல் கண்ணாடிக் குமிழிகளை பொருத்தினார். சிவந்த பழங்கள் போல அந்த விளக்குகள் மெல்லிய வெளிச்சத்தை பரப்பி அந்த அறையை நன்றாகக் காட்டின.

தலைக்குமேல் சுண்ணாம்புக் கூம்புகள் தொங்கி நின்றன. கீழே உறைந்த நுரையென கூம்புகள் எழுந்திருந்தன. சுண்ணாம்புப் பாறையின் அலைகளும் மடிப்புகளும் திரைச்சீலைகள் போல, வெவ்வேறுவகையாக அவிழ்ந்து விழுந்த துணிகளின் குவியல்கள் போல, பன்றியின் முலைகள் போல சூழ்ந்திருந்தன

குகையறையின் நடுவே விந்தையான ஒரு சிலை இருந்தது, திபெத்தில் நான் எங்குமே அப்படி ஒருசிலையை பார்த்ததில்லை. மூன்று போதிசத்வ உருவங்கள் ஒன்றாக இணைந்த உடல். நேர் எதிரில் மைத்ரேயர் மூன்றடுக்கு கொண்ட மணிமுடி சூடி ஒருகையில் வஜ்ராயுதமும் மறுகையில் தாமரையும் ஏந்தி நின்றிருந்தார், அவருடைய உடலுடன் ஒட்டியபடி இடப்ப்பக்கம் அமிதாபர் இடதுகையில் அமுதகலம் வைத்திருந்தார். மைத்ரேரரின் வஜ்ராயுதமேந்திய இடதுகையே அமிதாபரின் வலதுகையாக இருந்தது.

வலப்பக்கம் மைத்ரேயரின் தாமரை ஏந்திய வலக்கையை தன் இடக்கையாகக் கொண்டு மஞ்சுஸ்ரீ நின்றிருந்தார். தன் வலக்கையில் அறிவுறுத்தல் முத்திரை காட்டியிருந்தார்.மூவரின் தலைகளும் இணைந்து ஒற்றை மணிமகுடத்தைச் சூடியிருந்தன. மரத்தால் செய்யப்பட்டு பொன்பூச்சு அளிக்கப்பட்ட பதினைந்தடி உயரமான கூட்டுச்சிலை. அச்சிலைக்கு நேர்முன்னால் தாராதேவியின் சிலை அமர்ந்திருந்தது

நான் கனவில் கண்ட அதே இடம், ஆனால் இத்தனை தெளிவாக இல்லை. திரைச்சீலைகள் என நான் கண்டவை சுண்ணாம்புப்பாறையின் அலைகள். முன்னர் கனவில் கண்ட ஓர் இடத்தை நேரில் காண்பது படபடப்பை அளித்தது. அப்போது காண்பது கனவு என மயங்கவைத்தது.

அச்சிலைக்கு நேர்முன்னால் ஒரு பெரிய வெண்கலப் பேழை இருந்தது. அதன் மூடி ஒரு பெரிய கடலாமை ஓடு போல அமைக்கப்பட்டிருந்தது. பொன்னிறமான கடலாமை ஓடு. வெண்கலத்தால் செய்யப்பட்டு பொற்பூச்சு அளிக்கப்பட்டது. ஆமையின் முதுகிலிருந்த நுட்பமான செதுக்குகள் ஓம் மணிபத்மே ஹும் என்னும் மூலமந்திரத்தின் அலங்காரவடிவ எழுத்துக்கள் என்று தெரிந்தது

நியிமா அதன் பக்கவாட்டில் இருந்த எட்டு குமிழ்களை வெவ்வேறு திசைநோக்கி நகர்த்தினார். அப்படி அறுபத்துநான்கு நகர்வுகள் அதற்கு சிக்கலான கணக்கு இருந்தது. மிகப்பொறுமையாக நினைவிலிருந்து வழுவாமல் அதைச் செய்யவேண்டும்.

அத்தகைய பூட்டுக்களை திபெத்தில் நான் முன்னரே கண்டிருந்தேன். அவற்றில் பிழைக்கு இடமே கிடையாது. அறுபத்துநான்கில் ஒன்று பிழையானாலும் பின்னர் திறக்கமுடியாது. அதற்கான வழி தெரிந்தவர் வரவேண்டும். பெரும்பாலும் அது ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யவேண்டியதாக இருக்கும்

அதன் பூட்டு உள்ளே விடுவிக்கப்படும் ஓசை கேட்டது. அவர் அந்தப்பேழையை திறந்தார். அதன் உள்ளே செந்நிறமான தசைக்கதுப்பு போல பட்டுதுணியிட்ட மெத்தை. அதன்மேல் ஒரு செந்நிறமான தோலுறையிடப்பட்ட அகன்ற தட்டுப்பேழை. அதை எடுத்து உள்ளிருந்து அந்த நூலை உருவி எடுத்தார். பளபளக்கும் தங்கத்தகடால் அட்டையிடப்பட்ட புத்தகம் அது

அதைக் கண்டதும் என் மனம் படபடக்க தொடங்கியது. நா வரள்வதுபோலவும் கைகால்கள் தளர்வதுபோலவும் தோன்றியது. அதற்கு எத்தனை நகல்கள் வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் அதை நானும் பார்த்துவிட்டிருக்கிறேன்.

அந்த நூலை அவர் சிறிய பீடத்தின்மேல் வைத்தார். அதன் பொன்னிற அட்டை வழவழப்பாக வெறுமையாக இருந்தது. அடையாளங்களோ குறியீடுகளோ இல்லை. எழுத்துகள் ஏதுமில்லை. அலங்காரச் செதுக்குகள்கூட இல்லை.

அதுவே வியப்புக்குரியது. திபெத் அலங்காரங்களின் நிலம். அங்கே அனைத்தையுமே நுணுநுணுகிச் செதுக்குவார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் வரைவார்கள். வெளியே பெரும்பாலான மாதங்களில் வெறுமை நிறைந்திருக்கும் விரிந்த நிலம். அதற்கு மாற்றாக அவர்கள் அத்தனை மலர்களையும் அத்தனை தளிர்களையும் அத்தனை சிறகுகளையும் தங்கள் பொருட்களில் செய்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறு சிற்பத்தில் அல்லது கூஜாவில் அல்லது பேழையில் அல்லது டாங்காவில் எதற்காக அத்தனை அணியலங்காரங்கள் என்று நமக்குத் தோன்றும். ஆனால் ஆறுமாதகாலம் ஓர் அறையில் அந்த ஒரே பொருளை நாளெல்லாம் பார்த்துக்கொண்டு வாழவேண்டியிருக்கையில் அந்த அலங்காரங்கள் போதாது என்று நம் மனம் ஏங்கும் தருணம் வரும்.

ஆகவே அந்த வெறும்பரப்பு எனக்கு திகைப்பை அளித்தது. அதில் நான் நுட்பமாக பார்க்கவேண்டிய ஏதோ செதுக்குகளோ எழுத்துக்களோ இருக்கும் என்று நினைத்தேன். நோக்க நோக்க அந்த வெறுமை மேலும் அறைந்தது

நியிமா அதை எங்களிடம் சுட்டிக்காட்டி “இதை ஒரு சமயம் ஒருவர் படிக்கலாம். நகல் எடுக்கலாம். அப்போது மற்றவர் இந்த அறைக்குள் இருக்கவேண்டும். நீங்கள் இங்கே எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் தங்கலாம். உங்களை நான் அழைத்துவந்து விடுவேன். திரும்பி மேலே செல்வது உங்கள் விருப்பம். நீங்கள் விரும்பும்போது இந்த நான்கு பாதைகளில் ஒன்றின் வழியாக மேலேறி வந்துவிடலாம்.ஆனால் அதற்குமுன் இந்நூலை இந்தப் பெட்டிக்குள் முன்பெனவே வைத்து மூடிவிடவேண்டும். வைத்து மூடாவிட்டால் மீண்டு செல்லும் வழிகள் திறந்திருக்காது” என்றார்

“எந்தப்பாதையும் மேலே செல்லுமா?”என்று நான் கேட்டேன்

“செல்லும்”என்று அவர் சொன்னார். “ஆனால் எல்லா பாதையும் இங்கே வராது”

“அதெப்படி?” என்று நான் வியந்தேன்.

பாட் “நாங்கள் முறை வைத்துக்கொள்கிறோம்” என்றான்

“நெறிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்

நாங்கள் இருவரும் “அவ்வாறே”என்று தலைவணங்கினோம்

அவர் தலைவணங்கி வெளியே சென்றார். நான் பாட்டிடம் “நீ படி” என்றேன்

அவன் “இல்லை, நீயே தொடங்கு”என்றான்

நான் அந்த நூல் அருகே சென்று மென்மயிர் உறையிட்ட மெத்தையில் அமர்ந்தேன். அந்த புத்தகம் எடைமிக்கதாக இருந்தது. அதை திருப்பி வைத்துக்கொண்டு திறப்பதை எண்ணி தயங்கிக்கொண்டிருந்தேன்

ஏன் தயங்குகிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அதை திறக்கும்போது நான் எதையோ தொடங்குகிறேன் என்று உள்ளுணர்வு சொன்னது. நல்லதோ தீயதோ, பெரிய ஒன்றை. திரும்பிச்செல்லமுடியாத ஒன்றை. என்னை நிரந்தரமாக மாற்றிவிடக்கூடியதை

அதன் அட்டையை திறந்தேன். அதுவும் எனக்கு ஏமாற்றம் அளித்தது.அதை திறக்க சிலவகையான பூட்டுக்கள் இருக்கும் என நினைத்திருந்தேன். நுட்பமான ஒரு புதிர் விளையாட்டு. ஒரு கணக்குபுத்தகத்தை திறப்பதுபோல அதை திறக்கமுடிந்தது.

உள்ளே அதன் முதல்பக்கம் மெல்லிய தங்கத்தகடால் ஆனது. அதில் தாராதேவியின் கோட்டுவடிவம்.  “ஓம் மணிபேமே ஹும்” என்னும் மந்திரம்.அடுத்த பக்கத்தில் மஞ்சுஸ்ரீயின் கோட்டு வடிவம். “ஓம் ஆஹ் ஹுங் பென்ஸா குரு பேமா ஸித்தி ஹங்!”

அதன்பின் ஒன்றோடொன்று ஒட்டி உருவாக்கப்பட்ட கெட்டியான ஆட்டுத்தோலால் ஆன ஏடுகள். அவற்றின் ஓரங்கள் மெல்லிய வெண்கலத்தகடால் மடித்து விளிம்பிடப்பட்டிருந்தன. எழுத்துக்கள் பொன்னாலானவை. கூர்ந்து பார்த்தேன். பொன்னேதான். அவை எழுதப்பட்டவை அல்ல, அச்சிடப்பட்டவை. எழுத்துக்கள் சுண்ணாம்புப் பலகையிலோ களிமண் பலகையிலோ அச்சாகச் செய்யப்பட்டு உருகிய பொன்னில் முக்கி தோலில் பதித்து அச்சிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுத்துக்கள் இருந்தன.

பிராமியில் இருந்து உருவான தொன்மையான திபெத்திய எழுத்துருவில் எழுதப்பட்ட வரிகள் நெருக்கமானவையாக அமைந்திருந்தன. அவற்றை புரட்டிப் புரட்டி பார்த்தேன்.அவை எளிதாகப் படிக்கும்படியாக அமைந்திருந்தன. எந்த மர்மமும் இல்லை. வழக்கமான திபெத்திய வஜ்ராயன மார்க்க மறைநூல்களைப்போல குறியீடுகளாலும் உருவகங்களாலும் எழுதப்பட்ட ஈரடிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக அமைந்திருந்தன. பெரும்பாலான சொற்களும் வரிகளும் ஏற்கனவே எனக்குத்தெரிந்தவையாகவே தோன்றின

அதுவரை நான் இறுக்கமாக, பதற்றமாக இருந்தேன். சட்டென்று எளிதாகி புன்னகை புரிந்தேன். அவ்வளவுதான். இந்த நூலின் முக்கியத்துவம் இது இத்தனை தொலைவில் இத்தனை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே. இதன் பலநூறு நகல்கள் மடாலயங்கள் தோறும் இருக்கும். ஒருவேளை நான் முன்னரே முழுமையாகப் படித்ததாகவே இருக்கக்கூடும்.

நான் அதை நகல் செய்ய தொடங்கினேன். பாட் மடியில் கைவைத்து தியானத்தில் அமர்ந்திருந்தான். நீலநிற மையில் தூரிகைப் பேனாவை தோய்த்து கெட்டியான காகிதத்தில் அந்த எழுத்துக்களை நோக்கி நோக்கி எழுதிக்கொண்டிருந்தேன். ஏதோ மலைப்பாறையின் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கிறேன் என்னும் உணர்வு எனக்கு இருந்தது. பழத்தின் சுளைக்குள் கொட்டைக்குள் வாழும் சிறு புழுபோல.

தொடர்ச்சி

தங்கப்புத்தகம் பகுதி 2

முந்தைய கட்டுரைஇந்தக்குரல்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2