வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும்.