‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73

பகுதி ஏழு : நீர்புகுதல் – 2

ஸ்ரீகரர் சொன்னார். நான் விதர்ப்பினியாகிய ருக்மிணியைக் கண்டு நிகழ்ந்தவற்றைச் சொல்லி மீளலாம் என்று எண்ணினேன். அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கு விதர்ப்பத்தின் அரசமைவில் ஏதாவது சொல்லுரிமை இருக்கலாம். பிரத்யும்னனின் செல்வத்தை கோரும்போது அவருடைய சொல்லும் உடனிருப்பது நன்று. பிரத்யும்னனும் அநிருத்தனும் பெயர்மைந்தரும் அழிந்திருந்தாலும்கூட துவாரகையின் கருவூலத்தில் இருந்து ருக்மியிடம் அளிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் பகுதிக்கு ருக்மிணி உரிமைகொண்டாடலாம். ருக்மிணி ஒரு சிறுவனை பெறுமைந்தனாக குடியில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். அவன் பிரத்யும்னனுக்கும் அநிருத்தனுக்கும் நீர்க்கடன் செய்யக்கூடும் எனில் அச்செல்வம் அவனுக்குரியது.

நான் அவ்வெண்ணத்தை அடைந்ததுமே பரபரப்பு கொண்டேன். அவையில் ருக்மி பிரத்யும்னனின் மைந்தரோ பெயர்மைந்தர்களோ எவரேனும் எஞ்சியுள்ளனரா, அவர்கள் எவரேனும் ஒருவர் வந்து கேட்டால் அக்கருவூலத்தை அளிக்கிறேன் என்று அறைகூவியபோது என் நா தாழ்ந்தது. ஏனெனில் எவர் உயிரோடிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எம்முறைப்படி அதை கோருவதென்பதும் தெளிவாக இல்லை. நான் அங்கு வந்தமைக்காகவே, எனக்கு பணிக்கப்பட்டதை இயற்றுவதே என் கடமை என்பதற்காகவே அப்போது அவைநின்றேன். ஆனால் அனைத்து நெறிகளின்படியும் நீர்க்கடன் செய்பவர்களுக்குரியது தந்தையின் செல்வம்.

மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் வழிமைந்தர்களும் மறைந்து துயருற்றிருந்தாலும் ருக்மிணி இயற்ற வேண்டியதை இயற்றும் உளநிலையிலேயே இருப்பார் என்று நான் எண்ணினேன். எவராயினும் இப்புவியில் இருந்து வரும் அன்னமும் நீரும் இன்றி விண்புக இயலாது. ருக்மிணி விதர்ப்பத்தின் இரண்டாம்தலைநகரான போஜகடகத்தில் வரதாவின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சிறு மாளிகையில் இருப்பதாக அறிந்தேன். வரதாவின் பெருக்கினூடாக படகில் சென்று போஜகடகத்தை அடைந்து அங்கே படித்துறையில் இறங்கியபின் அங்கிருந்த காவலனிடம் ருக்மிணியை சந்திக்க விரும்பி செய்தி அனுப்பினேன்.

படித்துறையிலேயே காத்திருந்த என்னை ருக்மிணியின் ஏவற்பெண்டு வண்டியில் வந்து அழைத்துச் சென்றாள். வரதாவில் கோடைகால நீர்ப்பெருக்கு கலங்கி சிவந்து சுழித்து சென்று கொண்டிருந்தது. இளையோர் அதில் குதித்து நீந்தி மறுகரை சென்று மீண்டு வந்துகொண்டிருந்தனர். கரையெங்கும் மலர்க்கிளைகளில் மகளிர் அமர்ந்து மயில்கள்போல கூவிக்கொண்டிருந்தனர். எங்கும் கூச்சலும் சிரிப்புகளுமாக இருந்தது. என்னை அழைத்துச் சென்ற சேடி திரையிடப்பட்ட சிறு வண்டியை மாளிகையின் முற்றத்தில் நிறுத்தினாள். “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

மரத்தாலான சிறிய மாளிகை அது. அதன் முகப்பில் இருந்த படைக்கலமேந்திய இரு காவலரை தவிர்த்தால் அங்கு அரசகுடியினர் தங்கியிருப்பதற்கான சான்றே இல்லை. உள்ளே இரண்டு ஏவற்பெண்டுகளுடன் ருக்மிணி தனித்து தங்கியிருந்தார். அதை ஒரு தவக்குடில் என்றே சொல்ல வேண்டும். முகப்பின் சிற்றறையில் நான் அரசிக்காக காத்திருந்தேன். சற்று நேரத்தில் ஏவற்பெண்டு உள்ளே வந்து “விதர்ப்பினியாகிய அரசி ருக்மிணி வருகை” என்று தாழ்ந்த குரலில் அறிவித்தாள். நான் எழுந்து கைகூப்பி நின்றேன். மங்கலத்தாலமேந்திய சேடி முதலில் வந்தாள். தொடர்ந்து ருக்மிணி வெண்ணிற ஆடை அணிந்து சிற்றடிகளுடன் வந்தார்.

நான் கைதொழுது முகமன் உரைத்தேன். அவற்றை கேட்காதவர்போல் பீடத்தில் அமர்ந்தார். என்னை அதன் பின்னரே பார்த்தவர்போல விழிமலர்ந்து “நலமா?” என்று மெல்லிய குரலில் கேட்டபின் அமரும்படி கைகாட்டினார். அமர்ந்ததுமே நான் அங்கு வந்தது எதற்காக என்று கூறத்தொடங்கினேன். அவர் அனைத்தையும் முன்னரே அறிந்திருந்தார் என்று தெரிந்தது. “தேவி, இத்தருணத்தில் பிரத்யும்னனின் தூதை ஏன் தலைக்கொண்டேன் எனில் அவர் அதை என்னிடம் சொன்ன ஏழு நாட்களில் பிரஃபாச க்ஷேத்ரத்தில் விழவு தொடங்கியது. அவர் அதில் உயிரிழந்தார். எனில் அவர் எனக்கிட்ட இறுதி ஆணை அது. ஆகவே அதை முற்றாக நிறைவேற்ற நான் கடமைப்பட்டவன்.”

“ஆம், அவர் தன் இறப்பை முன்னுணர்ந்து அதை கூறாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஊழ்நெறியை வைத்து பார்க்கையில் அவர் சாவுக்கு முன் சொன்ன விழைவு அது. ஆகவே ஒவ்வொருவரும் அதை தலைக்கொள்ள வேண்டியுள்ளது” என்று நான் சொன்னேன். “அச்செல்வத்தைப் பற்றிய அவரது பதற்றத்தையும் ஐயத்தையும் அருகமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். தனக்கென ஒரு துண்டு நிலமேனும் அச்செல்வத்தைக் கொண்டு ஈட்டிக்கொள்ளவேண்டும் என்றும் பிரஃபாச க்ஷேத்ரத்திலிருந்து கூடிய விரைவில் அகன்று சென்றுவிடவேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதுவே அவருடைய முதன்மை விழைவாக இருந்தது என்றும் சொல்வேன்.”

“பிரஃபாச க்ஷேத்ரத்திலேயே அவர் இருக்கலாமே என்று நான் சொன்னபோது அவர் அதை மறுத்தார். இல்லை, இங்கு ஏதோ தீங்கு நிகழப்போகிறது என்று எனக்கு தோன்றுகிறது, நானும் இளையோரும் இங்கிருந்தால் அத்தீங்கு நிகழும், அகன்று சென்றால் அது நிகழாது என்று தோன்றுகிறது என்றார். எரிச்சலுடனும் சீற்றத்துடனும் ஓராண்டு ஆகிவிட்டது, இன்று வரை உரிய மறுமொழி எதையும் சொல்லாமல் இருக்கிறார் மாதுலர், இம்முறை அவரிடம் உறுதியாகக் கேட்டு வாருங்கள், நாங்கள் அளித்த அச்செல்வம் எங்களுக்குரியது, அதை அவர் திருப்பி அளித்தே ஆகவேண்டும் என்றார். அவர் எங்களுக்கு அளிக்கவிருக்கும் நிலம் எது என்று தெரியவேண்டும், இந்த இளவேனிலிலேயே நாங்கள் கிளம்பி அங்கு சென்று தங்க எண்ணுகிறோம், இனியும் பொறுப்பது இயலாது என்றார்.”

“நான் இளவேனிலில் கிளம்பினால் மக்கள் அத்தனை பொழுது நடந்து செல்வதற்குள் முதுவேனிலாகிவிடுமே என்றேன். ஆம், அவந்தியை அடைகையில் முதுவேனிலாகியிருக்கும். ஒருவகையில் அதுவும் நன்று. விதர்ப்பத்தில் வேனிலில் குடியேறுவதே சிறந்தது. கோடைகளில் ஆறுகளில் நீர் குறைந்திருக்கும். அணைகளையும் பாலங்களையும் நாம் அமைத்துக்கொள்ள முடியும். உறுதியான நிலத்தில் இல்லங்களையும் குடிலையும் கட்டிக்கொள்ள முடியும் என்றார். அவருடைய உள்ளம் அமைந்துவிட்டது என்று தெரிந்தது. உரத்த குரலில் கோடைக்குள் நமது சிறுநகர் விதர்ப்ப நிலத்தில் எழுந்தாக வேண்டும் என்று அவர் சொன்னபோதிருந்த அந்த முகத்தை மறக்கமுடியவில்லை.”

“அரசி, நான் அவரிடம் நிலைமையை விளக்கினேன். அரசே, எட்டு முறைக்கு மேல் தூது சென்றும் கூட விதர்ப்பத்தின் அரசர் சொல்லொழிகிறார் என்றால் அவருக்கு அச்செல்வத்தை திருப்பி அளிப்பதற்கான எண்ணமில்லை என்றே தோன்றுகிறது, ஆகவே மீண்டும் மீண்டும் தூது செல்வதில் பொருளில்லை என்றேன். அவர் ஆம், அதை நானும் அறிவேன் என்றார். குடிகள் எதிர்க்கிறார்கள், எந்த இடம் என்று முடிவுசெய்ய முடியவில்லை, அண்டை நாட்டரசர் தலையிடுகிறார்கள் என்று அவர் சொல்வதெல்லாமே இதை ஒத்திப்போடுவதற்கான முயற்சிதான். ஆனால் மாதுலருக்கு எதிராக நான் படைகொண்டு செல்ல இயலாது. படைகொண்டு செல்லும் இடத்திலும் நாம் இல்லை. கேட்டுத்தான் பெற்றாகவேண்டும் என்று பிரத்யும்னன் சொன்னார்.”

“அப்போது அவரிடம் தெரிந்த சோர்வை எண்ணுகையில் உள்ளம் நெகிழ்கிறது. இம்முறை அவரிடம் கூறுக, அவர் எதன்பொருட்டேனும் மறுப்பாரெனில் நான் மதுராபுரிக்குச் சென்று என் பெரிய தந்தையிடம் முறையிட வேண்டியிருக்கும், மதுராபுரியிலிருந்து சூரசேனரும் பலராமரும் நானும் என் இளையோனும் படை கொண்டு வந்தால் விதர்ப்பம் அதை எதிர்கொள்ள இயலாது, ஆகவே சொல்காக்குமாறு அவரிடம் கூறுக என்றார். அந்த வஞ்சினமும் பொருளற்றது என்பதை நாங்கள் இருவருமே அறிந்திருந்தோம். ஆனால் அது அவருடைய அகத்தின் தவிப்பு” என்றேன்.

“அரசி, இன்று இளவரசர் பிரத்யும்னன் இல்லை, அவர் மைந்தன் அநிருத்தன் இல்லை, அவர் மைந்தரும் இல்லை. எனினும் அச்செல்வம் நமக்குரியது. அதை தாங்கள் பெற்றாகவேண்டும்” என்றேன். ருக்மிணியின் கண்களில் எந்த உணர்ச்சியும் எழவில்லை. ஆகவே நான் அடுத்த கருத்தை நோக்கி சென்றேன். “அரசி, தாங்கள் தங்கள் குடியிலோ யாதவக்குடியிலோ ஒரு சிறுவனை பெறுமைந்தனாக எடுத்துக்கொள்ளலாம். அவனுக்கு அச்செல்வத்தை உரிமையாக்குங்கள். அவனும் அவன் குடியினரும் வரும் தலைமுறைகள் தோறும் மாண்டவர்களுக்கு நீர்க்கடன்கள் அளிக்கவேண்டுமென்று ஒருங்கு செய்யுங்கள். இத்தருணத்தில் தாங்கள் ஆற்றவேண்டியது அதுவே” என்றேன்.

அரசி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நான் “ஒருவேளை பிரத்யும்னன் என்னிடம் பணித்ததே இதற்காகத்தான் போலும்” என்றேன். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறவில்லை. “தாங்கள் தங்கள் மூத்தவருடன் முரண்பட தயங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் தங்கள் மூத்தவர் பற்றி எந்த நல்லெண்ணமும் எவரிடமும் இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் அலைமோதுபவராகவே அவர் இருந்திருக்கிறார். குருக்ஷேத்ரத்தில் ஊசலாட்டத்தால் விலகி நின்றமை ஒரு நல்வாய்ப்பு என்றும் இப்பெருஞ்செல்வம் விதர்ப்பத்தை முதன்மை நாடாக்கும் என்றும் அவர் கருதுகிறார். பாரதவர்ஷம் கலங்கி நிலையழிந்திருக்கும் இத்தருணத்தில் கருவூலம் நிறைந்திருப்பது ஆற்றலை பெருக்குவதென்று எண்ணுகிறார்.”

“ஆனால் அவர் எண்ணுவதுபோல அது எளிதாக நிகழப்போவதில்லை. மதுராபுரி இன்னும் ஆற்றலுடனேயே இருக்கிறது. பலராமரின் யாதவப் படைகளும் பெரும்பகுதி அழியாமல் எஞ்சுகின்றன. பலராமரும் ஆற்றலுடனேயே இருக்கிறார். அவர் விழைந்தால் அஸ்தினபுரியின் உதவியையும் நாடமுடியும். எனவே யாதவச் செல்வத்துடன் அவர் அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது” என்றேன். மேலும் கூர்மையாக “அரசி, ஒருவேளை உரிய தருணத்தில் உங்கள் மூத்தவர் உதவியிருந்தால் உங்கள் மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் இந்நேரம் உயிருடன் இருந்திருக்கக் கூடும். விதர்ப்ப மண்ணில் ஒரு தனியரசு அவர்களுக்கு அமைந்திருக்கவும் கூடும். ஒரு நோக்கில் முழுப் பழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர் உங்கள் மூத்தவர்தான். அவர் மேல் எந்தப் பரிவும் வேண்டியதில்லை” என்றேன்.

ருக்மிணி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தபோது ஆடை சற்றே சரிந்தமைய முகம் தெரிந்தது. அதில் எந்த உணர்வும் இல்லை. விழிகள் வெறுமை கொண்டிருந்தன. மெல்லிய குரலில் “இருப்பவர் இல்லாதவர் எவருக்காகவும் நான் துயருறவில்லை” என்று அவர் சொன்னார். “இதில் நான் தலையிடுவதாகவும் இல்லை. இவ்வுலகியல் நிகழ்வுகளிலிருந்து முற்றாக விலகிவிடவேண்டும் என்று எண்ணினேன், விலகியும்விட்டிருக்கிறேன். இனி திரும்ப வந்து எதையும் தொட்டுக்கொள்வதாகவும் இல்லை. நான் இனி செய்வதற்கு ஒன்றே உள்ளது.”

நான் ஊடே புகுந்து “ஆனால் மாண்டவர்களுக்கான கடன்கள்…” என்று சொல்ல “எச்சமின்றி அழியவேண்டும் என அவர் விழையாமல் இவ்வண்ணம் நடந்திருக்குமா?” என்றார். நான் திகைத்துவிட்டேன். “அவருடைய அவ்விழைவுக்கு எதிராக நான் போரிடவேண்டுமா? இவையனைத்தும் நிகழ்ந்தவை அல்ல, தெய்வப்பேருருவனால் நிகழ்த்தப்பட்டவை. நான் அதில் ஒரு சிறு துளி. என் பணிகளும் முடிந்தன. நான் காத்திருக்கும் செய்தி ஒன்று மட்டுமே” என்றார் ருக்மிணி. “இதில் தாங்கள் ஆற்றுவது எதுவோ அதை செய்யலாம். விளைவுகள் எதுவோ அது நிகழட்டும். ஊழ் வகுத்ததற்கு நடுவே புகுந்து கைவிரித்து நின்றிருக்கும் நிலையில் நான் இல்லை.”

“ஆனால்…” என்று நான் சொல்ல மெல்லிய புன்னகையுடன் “அவ்வண்ணமே” என்று சொல்லி தலைவணங்கி அவர் எழுந்துகொண்டார்.

 

நான் வரதாவினூடாக கங்கைக்குச் சென்று அங்கே பிறிதொரு படகிலேறி யமுனையை அடைந்து மீண்டுமொரு சிறுபடகில் மதுராவுக்கு சென்றேன். மூன்றாவது நாள் மதுராவின் துறைமுகத்தில் இறங்கியபோது என் உள்ளம் அடங்கி உரைக்கவேண்டிய அனைத்தும் சொல்கோக்கப்பட்டுவிட்டிருந்தன. அந்தப் பயணத்தில் நான் என்னை பலமுறை நம்பிக்கையின்மையின் இருட்டில் இருந்து மீட்டுக்கொண்டேன். நானே இயற்றுகிறேன் என்னும் மேலும் பெரிய இருட்டிலிருந்து பிடுங்கி அகற்றிக்கொண்டேன்.

நான் வருவதை முன்னரே ஒற்றர்களுக்கு அறிவித்திருந்தேன். அவர்கள் அனுப்பிய பறவைச்செய்தியினூடாக பலராமர் என் வரவை அறிந்திருந்தார். என்னை துறைமேடையில் வரவேற்க மதுராவின் சிற்றமைச்சர் கர்க்கர் காத்து நின்றிருந்தார். அவர் புன்னகை இல்லாமல் என்னை வரவேற்றார். நடுப்பகலிலும் இருள்மூடியதுபோல ஓசையழிந்து ஓய்ந்து கிடந்த மதுராவின் சாலைகள் வழியாக சென்றோம்.

கர்க்கருடன் துணைமாளிகைக்குச் சென்று உணவருந்தி ஓய்வெடுத்தேன். உரிய உடைகளை அணிந்துகொண்டு பின்மாலைப்பொழுதில் பலராமர் அவைக்கு சென்றேன். அரண்மனையே சோர்ந்து கிடப்பதை கண்டேன். தூண்கள் நீர்ப்பாவைகள்போல நெளிவதாக, சுவர்கள் அலைகொள்வதாக தோன்றியது. காற்று எடைமிகுந்துவிட்டதைப்போல. ஒவ்வொருவரும் அடிக்கடி மூச்சை இழுத்து நீளொலியுடன் விட்டனர்.

பலராமர் தன்னுடைய அவையில் அமைச்சர்களும் குடித்தலைவர்களும் சூழ அமர்ந்திருந்தார். அவர் முதல் நோக்கில் துயர்கொண்டிருப்பதாக தோன்றவில்லை. வழக்கம்போல மிகையாக உணவும் மதுவும் உண்டு களைத்த விழிகளுடன் உடலை பீடத்தில் தளர்வாக நீட்டி அரை உள்ளத்துடன் சொற்களைச் செவிகொண்டு அமர்ந்திருப்பதாகவே தோன்றினார். எல்லா அவைகளிலும் அவர் துயிலில் இருப்பதாகவே தோன்றும்.

ஆனால் அருகணைந்து வணங்கியபோது அவருடைய கண்களை பார்த்தேன். அவை களைத்துச் சலித்திருந்தன. கண்களுக்குக் கிழே தசைவளையங்கள் கருகி அடுக்கடுக்காக படிந்திருந்தன. வாயைச் சுற்றி அழுத்தமான மடிப்புகளும் கோடுகளும் தெரிந்தன. அவர் துயரடைந்து, அத்துயரில் நெடுந்தொலைவு சென்று, சலித்து கரையொதுங்கிவிட்டார் என்பதை காட்டின அவை. மிகுந்த துயர்கொண்டவர்கள் அடையும் அச்சலிப்பு நஞ்சு போன்றது. ஒருபோதும் அவர்களை அது விடுவதில்லை.

அப்போது உணர்ந்தேன், நெடுநாட்கள் அவர் உயிருடன் இருக்கப்போவதில்லை என்று. அது அவர் உடல் நலிந்திருப்பதனால் அல்ல, உள்ளம் உயிர்வாழ்வதற்கான விளைவை முற்றாக இழந்துவிட்டதனால். சுடர் அகலிலிருந்து பறந்தெழ விரும்பி படபடத்துக்கொண்டிருக்கும்போது அணைவது குறைவு. தன்னைத் தானே சுருக்கி கரி உமிழ்ந்து சிறுமொட்டென அசைவிலாதிருக்கும் நிலையில் அது மீள்வது அரிது.

அவையினரும் எந்த ஆர்வமும் இல்லாதவர்களாக இருந்தனர். பலராமரின் மைந்தர்கள் நிஷதனும் உல்முகனும் அவையில் இருந்தனர். விஜயன் என்ற பேரில் நிஷதனை மதுராவுக்கு பட்டத்து இளவரசனாக முடிசூட்டும் விழவு ஓராண்டுக்கு முன் நிகழ்ந்திருந்தது. துவாரகையின் வீழ்ச்சியால் அதை ஒரு எளிய அரண்மனைச் சடங்காகவே முடித்துவிட்டிருந்தனர். அதன்பின் வசுதேவரும் தேவகியும் ரோகிணியும் மதுவனத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள்.

நான் முகமன் உரைத்து பீடம் கொண்டேன். முறைமைச் சொற்களும் சடங்குகளும் முடிந்த பின் சலிப்பும் சோர்வும் நிறைந்த முகத்துடன் பலராமர் என்னைப் பார்த்து “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். நான் அனைத்தையும் அவரிடம் கூறினேன். நான் எதன் பொருட்டு பிரத்யும்னனின் ஆணையை தலைக்கொண்டு அங்கே சென்றேன் என்பதை விளக்கும்போதேனும் அவரிடம் சிறு உணர்வெழுச்சி உருவாகும் என்று எதிர்பார்த்தேன்.

அவர் மாறாத விழிகளுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் “நீர்க்கடனுக்கு எவருமில்லை என்று எண்ணவேண்டியதில்லை. மதுரா இங்கிருக்கிறது. என் மைந்தர்கள் இருக்கிறர்கள்” என்றார். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆனால் அந்தச் செல்வத்தை தனக்குரியது என்று எண்ணி தன் மாதுலரிடம் கொடுத்திருக்கிறார் மறைந்த இளவரசர். நிறைவேறாத விழைவொன்றுடன் அவர் இறந்தார் என்று ஆக வேண்டியதில்லை. அவரை ஒருவன் ஏமாற்றி சிறுமைசெய்தான் என்ற சொல் நிலைகொள்ள வேண்டியதில்லை. அவர் நிறைவுற்று விண்ணேகட்டும். அதன்பொருட்டே இதை சொல்லவந்தேன்” என்றேன்.

அதுவும் பலராமரை உணர்வெழுச்சி கொள்ளச் செய்யவில்லை. “அதற்கென்ன?” என்று அவர் மீண்டும் சலிப்புற்ற குரலில் சொன்னார். அவையை கலைக்கப்போவதுபோல மெல்ல அசைந்தார். “துவாரகையின் பெருஞ்செல்வம் அங்கே பிரஃபாச க்ஷேத்ரத்தில் கிடக்கிறது. ஃபானு அக்கருவூலத்தை உடன்கொண்டு சென்றான் என நான் அறிவேன். இங்கு சிலர் அதை கொண்டுவரவேண்டும் என்றார்கள். அது தேவையில்லை என்று நான் தடுத்துவிட்டேன். தன் குடி முற்றழியட்டும் என அவன் எண்ணாமல் அது நிகழாது. தன் நகர் எஞ்சலாகாது என அவன் விழையாமல் கடல் எழுந்து வராது. அச்செல்வமும் கடல்கொள்வதே முறை என்றேன்” என்றார்.

நான் இறுதியாக பிரத்யும்னனை சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்ததை சொன்னேன். என்னையறியாமல் என் குரலில் உணர்வெழுச்சி ஓங்கியது. “அன்று இளவரசரின் கண்களில் இருந்த அந்த நெகிழ்வை இன்னமும் நினைவுகூர்கிறேன். இவையனைத்திற்கும் ஒருவரை பழிசாற்ற முடியுமெனில் அது ருக்மியை மட்டுமே. உரிய பொழுதில் அவர் நிலத்தை பிரத்யும்னனுக்கு அளித்திருந்தாரெனில் இன்று மைந்தர் உயிருடன் இருந்திருப்பார்கள்” என்றேன். “அதை இனிமேல் பேசவேண்டியதில்லை. அதை அவன் மட்டுமே தடுத்திருக்க முடியும். அவன் அகன்றுவிட்டான் என்னும் நிலையில் எவரும் எதுவும் செய்திருக்க முடியாது” என்றார் பலராமர்.

“அரசே, அழிவை பிரத்யும்னனும் அஞ்சிக்கொண்டிருந்தார், அதிலிருந்து விடுபட முயன்றார். இறுதியாக அவர் எண்ணியது தங்களைத்தான். மதுராவிலிருந்து குலமூதாதை பலராமரின் உதவி வரும், அவருடன் சேர்ந்து படைகொண்டு வருவேன் என்றுதான் அவர் ருக்மிக்கு சொல்லி அனுப்பினார்” என்றேன். அச்சொற்களின் விளைவை உடனே கண்டேன். ஒருகணத்தில் பலராமரின் இரு கைகளும் இறுகுவதை காணமுடிந்தது. பீடத்தின் கைப்பிடிகளை இறுகப்பற்றி பற்களைக் கடித்து, தாடையை முறுக வைத்தார். சிறிய கண்கள் என்னை கூர்ந்து பார்த்தன.

“ஆம், தாங்கள் கூறியபடி அவர் இயற்றியதே அனைத்தும். ஒவ்வொன்றும் இணைந்துதான் அவ்வாறு நிகழ்ந்தன. ஊழ் அவ்வாறு வகுக்கிறது என்றால் நாம் செய்வதற்கொன்றும் இல்லைதான். எனினும் மானுடப்பிழை என்று அதில் இருந்தால் அதற்கு மானுடன் பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும்” என்றேன். “அனைத்தையும்விட மறைவதற்கு முன் தந்தையை எண்ணாமல் தன் குலமூதாதை என பெரியதந்தையை எண்ணிய மைந்தனின் உணர்வை நாம் எண்ணாமலிருக்க முடியுமா என்ன?”

பலராமர் உறுமினார். நான் மேலும் முன்னகர்ந்தேன். “அங்கே தூதுசெல்லும்போது நான் எண்ணியது என்னிடமிருக்கும் இறுதிப் படைக்கலம் தங்கள் பெயரே என்றுதான். தாங்கள் ருக்மியின் ஆசிரியர், அவருக்கு தந்தையெனும் நிலையில் இருந்தவர். தங்கள் மைந்தனுக்கு அளித்த சொல்லில் இருந்து அவர் மீறிச் செல்வார் என்றால் அதன் பொருள் என்ன? தங்கள் பெயர் அவரை நடுங்கச் செய்யும் என எண்ணினேன். ஆனால் ஒரு சிறு இளிவரலையே அவரிடமிருந்து பெற்றேன்.”

முறுகிய குரலில் “அறிவிலி!” என்று பலராமர் கூறினார். அது ஒரு தொடக்கச் சொல். அவையிலிருந்து ஒரு முதிய யாதவர் எழுந்து “நம் மைந்தனுக்கு இழைத்த அத்தீங்குக்கு நிகர்செய்யாமல் இங்கே வீணே அமர்ந்திருக்கப் போகிறோமா என்ன?” என்றார். பலராமர் “நாம் இயற்றக்கூடுவதென்ன?” என்றார். “செல்வம் அல்ல, அவனை அவ்வண்ணம் ஒருவன் ஏமாற்றக்கூடும் என்றால் நமக்கு பீடு அல்ல” என்றார் அவர். “அவனை பழிகொள்வோம். அச்செல்வத்தை அவனிடமிருந்து பிடுங்குவோம். அது நமக்கு தேவையில்லை, அதை அள்ளி யமுனையில் வீசுவோம். ஆனால் யாதவ மைந்தன் ஒருவனிடம் சொல்பிறழ்ந்து செல்வத்தை பெற்றுக்கொண்டு வென்றோம் என ஆணவம் கொண்டு அவன் அங்கிருந்தால் அதைவிடக் கீழ்மை எதுவுமில்லை” என்றார்.

அதுவரை நான் பேசிய எதிலும் ஆர்வம் காட்டாமல் அமர்ந்திருந்த அந்த அவை கலைந்து ஓசை எழுப்பத் தொடங்கியது. ஒவ்வொருவரும் பேச முயன்றபோது முழக்கம் பெருகியது. பலர் கூச்சலிட்டனர். அங்கிருந்த சோர்வை அப்படியே வெறியாக மாற்றிக்கொண்டார்கள். மெல்ல மெல்ல உணர்வெழுச்சிகள் கூடின. “கொல்லவேண்டும் அவனை! அவன் தலையை கொண்டுவந்து மதுராவில் வைப்போம்!” என்றார்கள். “மதுராவில் அல்ல, பிரஃபாச க்ஷேத்ரத்தில் அவன் தலை கொண்டுவைக்கப்பட வேண்டும்!” என்றார் பிறிதொருவர். “யாதவரை எவரும் ஏமாற்றி மகிழ்ந்திருக்கப் போவதில்லை என்ற செய்தி சென்று சேரட்டும் பாரதவர்ஷமெங்கும்!” என்றார் இன்னொருவர்.

அவை கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. பலராமர் என்னிடம் “அவன் அந்தச் செல்வம் அனைத்தையும் அதை செய்ததற்கான பிழையீடான செல்வத்தையும் சேர்த்து கொண்டுவந்து இங்கு மதுராவில் என் காலடியில் வைத்து வணங்கவில்லை எனில் அவன் தலையை மதுராவில் கோட்டைமுகப்பில் தொங்கவிடுவேன் என்று சென்று சொல்க!” என்றார். அவை கைவீசி ஆர்ப்பரித்தது. “ருக்மி வந்தாகவேண்டும். அடிபணிந்தாகவேண்டும்!”

அக்கணத்தில் ஓர் எண்ணம் எனக்கு எழுந்தது. நான் ஏன் இதை செய்கிறேன்? இந்தச் செல்வத்தை ருக்மியிடமிருந்து மீட்டு நான் செய்யப்போவதுதான் என்ன? அதைவிடப் பெருஞ்செல்வம் அங்கே கடலில் மூழ்கிக்கிடக்கிறது. உள்ளாழத்தில் எனக்கு தெரிந்திருந்தது, எதையேனும் ஒன்றை செய்வதனூடாகவே நான் வாழ்வை பொருள்கொள்ளச் செய்யமுடியும் என்று. பெருக்கில் செல்லும் பாம்பு சுள்ளியில் தொட்டதுமே உடலே கையாகி அள்ளிச் சுற்றிக்கொள்வதுபோல எனக்கு ஏதேனும் ஒன்று தேவைப்பட்டது. அவ்வண்ணமே பலராமருக்கும் என்று புரிந்துகொண்டேன். அந்த அவையில் இருந்த அனைவருக்கும் அப்படியே என்று தெளிந்தேன்.

பிரத்யும்னனைப் பற்றி நான் சொன்னவை எல்லாம் ருக்மியிடமும் பின் ருக்மிணியிடமும் சொன்னபோது உருவாக்கி வளர்த்துக்கொண்டவை. அங்கே சொல்லச்சொல்ல பெருகியவை. அவை பொய் அல்ல, ஆனால் அவற்றுடன் இணைந்திருந்த உணர்வுகள் மிகையானவை. மிகையெல்லாம் பொய்யே. மீண்டும் ஒரு போர் நிகழலாம். புரவியின் நோயெல்லாம் அது ஓடினால் சீராகிவிடும் என்பார்கள். போரினூடாகவே அரசகுடியினரின் சோர்வும் துயரும் இல்லாமலாகுமா என்ன?

முந்தைய கட்டுரைஇரு தொடக்கங்கள்
அடுத்த கட்டுரைராஜன்,தேனீ- கடிதங்கள்