நிறைவு -கடிதங்கள்

ஜெ

நிறைவு. நிறைவன்றி வேறில்லை. முதல் சொட்டு விழும் போதே பாத்திரம் நிறைக்கத்தான். ஆனால் எப்போதும் கடைசிச் சொட்டு ஒரு துக்கமே. அது துக்கமாக நாலாபுறமும் தெறித்து ஆவியாகிவிடுகிறது. அந்த ஆவியாகி மறைகணத்தை சொட்டு விழப்பெற்றவன் உணர்ந்தால் ஒரு நொடி சிலிர்ப்பு அல்லது ஆனந்தம்.  – நீங்கள் அந்த மூன்று பறவைகளில் குறிப்பிடுவது போல, நிறைவு என்பது கூட ‘ஒரு சரியாகச் சமைக்கப்பட்ட துன்பம்’ தான்.

நீங்கள் தேனீ கதையை எழுதிய போதே, அனேகமாக நிறைவை நெருங்கிவிட்டீர்கள் என்று தோன்றியது. சொல்லப் போனால் என் வாசிப்பின் போக்கில்,  உங்களுக்கு ஒரு சிறு அலுப்பு  வந்திருப்பதை அந்தக் கதையில் உணர்ந்தேன்.

இந்த 69 ஆம் கதையை ஆகாயத்தில் முடித்திருப்பது கூடத் தற்செயல் அல்ல, அந்த மூன்று குருவிகளின் ஒற்றைச் சொல் அது. யோசித்தால், எதுவும் உலகில் தற்செயல் அல்ல. செயல் அன்றி எதுவும் நிகழ்வதில்லை.

இந்த 69 கதைகளையும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து மீண்டும் வாசிக்க நினைக்கிறேன். இப்படியான நல்ல சனிக்கிழமை காலைத் தீர்மானங்களை அனுமதிக்க, என்னுடைய சனிக்கிழமை பிற்பகல்கள் கூட முன் வருவதில்லை. ஆனாலும்  வாசிப்பேன்.

நல்லது ஜெயமோகன். எதைச் சொல்ல இதை எழுத ஆரம்பித்தேனோ அதைச் சொல்லி விடுகிறேன் – ‘ நல்லா இருங்க’.

கல்யாண்ஜி

***

அன்புள்ள ஜெ

நிறைவு என்னும் சொல்லுடன் இந்தக்கதைகள் முடிந்தபோது ஓர் ஆழமான துயரம் ஏற்பட்டது. துயரம் என்று சொல்லமுடியாது, ஒருவகையான கனம். அதை சிலநாட்கள் கொண்டு செல்லவேண்டும், அது ஒரு நல்ல அனுபவம் என்றுதான் நினைத்துக்கொண்டேன். இதைப்போல பாஸிட்டிவான துயரத்தின் கனம் கொண்ட நாட்கள் அடிக்கடி வாழ்க்கையில் வருவதில்லை அல்லவா?

நாங்கள் இக்கதைகளைப் பற்றி ஒரு சிறுநட்புக் குழுமத்தில் பேசிக்கொண்டோம். ஊரடங்கு நின்றபின் சந்தித்துப் பேசிக்கொண்டோம். அப்போது ஓர் எழுத்தாளர் நக்கலும் நையாண்டியுமாக இக்கதைகளைப் பற்றிப் பேசினார். அவர் சென்றபின் நண்பர்களில் சிலர் ஏன் இப்படி பேசுகிறார் என்று திகைப்புடன் பேசிக்கொண்டோம்.

அப்போது மூத்தநண்பர் ஒருவர் சொன்னார். “பாவம், அவர் என்னதான் செய்வார்? ஒன்று நானும் எழுதியிருக்கிறேன் என்று நிமிர்ந்து சொல்லும் அளவுக்கு அவர் எழுதியிருக்கவேண்டும். அல்லது இனிமேல் எழுதமுடியும் என்ற நம்பிக்கையாவது வேண்டும்.இரண்டுமே இல்லை என்றால் அவர் வேறென்ன சொல்ல முடியும்?”

இந்தக்கதைகளின் முதல் சிறப்பு இவை தமிழில் எழுதமுடியும் என்ற நம்பிக்கை கொண்ட எல்லாரையுமே எழுதவைத்தன என்பதுதான். கதைகள் பெருக்கெடுத்த காலகட்டம் இது. தமிழ்ச்சூழலில் இருந்த அரசியல் கசப்புகள், வம்புகள் எல்லாவற்றையும் கடந்து ஏராளமானவர்களை இலக்கியம் நோக்கி வரச்செய்தன

இந்தக்கதைகள் நின்றிருக்கும் ஒரு தளம் உள்ளது. கவித்துவமும் ஞானதரிசனமும் முயங்கிய இடம் அது. தமிழிலக்கியத்தின் உச்சதளம் என்று நான் சொல்வேன். அது என்றென்றும் வாசகர்கள் வந்து சேரும் இடமாகவே இருக்கும். அதற்கு மிகமிக கீழே ஆழத்தில் நின்று சிலர் கூச்சலிடுவதும் நடக்கும். வாசகர்கள் குனிந்துபார்த்து புன்னகைத்துவிட்டுச் செல்லவேண்டியதுதான்

இந்தக்கதைகளில் இருந்து இன்றைக்கு எழுதக்கூடியவர்கள் நிறையவே கற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு மனமிருந்தால். கதைகள் என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் அவை வாசகனை கற்பனைசெய்ய வைக்கவேண்டும். அவனுக்கு ஒரு சமானமான வாழ்க்கையை வாழக்கொடுக்கவேண்டும். அது நிகழாவிட்டால் அது கதையே அல்ல.

அன்றாடவாழ்க்கையின் சிக்கல்களுக்கும் அரசியல்பார்வைகளுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு. ஆனால் அந்த இடம் மிகமிகச் சிறியது. மகத்தான கதைகள் அதற்கும் அப்பால் எழுந்தாகவேண்டியவை.

இன்ஸ்பிரேஷனை நம்பி எழுதுவதும், அந்த தீ அணைந்துவிடாமல் கூடுமானவரை பொத்திப்பொத்தி வளர்த்து கொண்டுசெல்வதும் அதை படைப்பாக ஆக்குவதற்கான எல்லா அறிவார்ந்த உழைப்பையும் மேற்கொள்வதும்தான் இதிலிருந்து எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது

இன்றைய புதிய எழுத்தாளன் இதை தன் இயலாமையை மறைத்துக்கொள்ளுவதற்காக சில்லறை விமர்சனங்கள் வழியாக கடந்துபோவான் என்றால் அல்லது வாசிக்காமலிருப்பான் என்றால் இழப்பு அவனுக்கே. இதை தன்னாலும் நிகழ்த்தமுடியும், கடந்துசெல்லமுடியும் என்று நம்பினால் அவன் உண்மையான எழுத்தாளன்

எவராக இருந்தாலும் வேறு திசைதிரும்புதல்கள் இல்லாமல் ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் இதை எழுதிவிடவும் வேண்டும். திசைதிரும்புதல்கள் என்றால் லௌகீகமான விசயங்கள்தான். குடிபோன்றவற்றையும் சேர்க்கலாம்

உடனே முடியாதுதான். இன்ஸ்பிரேஷன் வந்ததுமே அதை சிந்தாமல் கலைவடிவமாக ஆக்குவதற்கு Masters Craft தேவைப்படும். அதற்கு எழுதி எழுதி தேர்ந்த கை வேண்டும். இன்றிலிருந்து பத்தாண்டுக்குள் இதை தானும் நிகழ்த்துவேன் என ஒர் எழுத்தாளன் இன்று நினைப்பான் என்றால் அது இக்கதைகளின் சிறந்த விளைவு என்று நினைப்பேன்

ஸ்ரீனிவாஸ்

***

ஜெ

உங்களின் சிறுகதைகளின் நிறைவு கட்டுரையை மிகவும் துயர் ஊட்டுகிறது. இந்த எழுபது நாட்கள் எத்தனை வித உணர்வுகளில் ஆட்பட்டிருந்தோம். கண்ணீர், காமம், காதல், யுத்தம், அறம், சாகசம், பெருஞ்சிரிப்பு, அங்கதம், மகத்தான பயணங்கள், கலவையாய்.கொண்டாட்டமாய் இருந்தது.

இப்படி ஓரு தொடர் கொண்டாட்டம் இலக்கியத்தில் எவரும் நிகழ்த்தியதில்லை. இரவோ, காலையோ அத்தனை பரவசத்துடன் விடிந்தது. தனிப்பட்ட முறையில் என்னை நீங்கள் உயிர்ப்பித்த நாட்கள் இவை. கொந்தளிப்பான நாட்கள் இவை. இந்த எழுபது நாட்களும் கொண்டாடி தீர்த்தோம்.

சாம்ராஜ்

***

ஜெ

வணக்கம். பிரமிப்பு நீங்கவில்லை. இது எதுவும் பொய்யில்லை. அடையவியலாத உச்சம். ஒரு சாதனையாளரை உயிரும் இரத்தமுமாக நான் கண்டிருக்கிறேன் என்பதே பெருமை கொள்ள வைக்கிறது. நிறைவடையும் புள்ளி எந்த தருணத்திலும்  வந்தமையலாம் அல்லது  இன்னுமின்னும் என்ற துழாவி  எந்த புள்ளியையும் கண்டடையலாம். அப்புள்ளி யாரும் தொட்டு விடவியலாத ஆழமாகவும் இருக்கலாம். அது கடலின் அசைவற்ற ஆழம் போன்றது.

அன்புடன்

கலைச்செல்வி.

***

அன்புள்ள ஜெ.

உங்களுடைய எழுத்து ருத்ரம் சற்று சாந்தமடைந்துள்ளது என்பதை எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதனால் இப்போதைக்கு நின்றுகொள்கிறேன் என்ற அறிவிப்புடன் அறியமுடிகிறது.  இதைக் கதைகளுக்கான தற்காலிக ஓய்வு என்றே கருதமுடியும். மீண்டும் வெறியாட்டம் தொடரும் போலவே அந்த அறிவிப்பு உள்ளது. மேலும் பலிகொள்ளும் போது இறைவனுக்குக் காணிக்கை அளிப்பது போல உங்கள் குருவையும் நினைத்துக் கொண்டீர்கள்.  அட்ஷய பாத்திரம் போல கதைகள் நாளும் வந்துகொண்டே இருந்தன. 69 கதைகளில் எனக்குப் பிடித்த கதைகள் என்று இதைத்தான் கூறுவேன்.

  1. பத்துலட்சம் காலடிகள்.
  2. போழ்வு
  3. சிவம்
  4. நற்றுணை
  5. பொலிவதும் கலைவதும்
  6. முத்தங்கள்
  7. தேனீ
  8. மதுரம்
  9. கரு

போழ்வு கதைக்கு உற்றதுணையாக இணைவு, முதுநாவல் இரண்டையும் சேர்க்கலாம். இந்தக் காலத்தில் இயன்றவரைக்கும் அரசியல் விவாதங்களைத் தவிர்த்தே வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். இந்த நாட்களின் மீதிருந்த தனிமைச்சுமை, பயப்பீதிகள், ஆழ்மனக்கனம் என்று இன்னோரன்ன சமாச்சாரங்கள் உங்கள் கதைகளுக்குள் புதைந்து போனது என்றே சொல்லமுடியும்.

இவற்றைத் தொகுப்பாக வெளியிடும் போது கிடைக்கும் எதிர்பார்ப்புக்களை எண்ணிக்கொள்கிறேன், மீளவும் ஒருமுறை படிக்கவேண்டும் என்று.

அன்புடன்

சுயாந்தன்.

***

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகுருவிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலைகள் அங்கேயே…