பித்திசைவு
செங்கோலின் கீழ்
சின்னஞ்சிறு வெளி
மீண்டும் காலைநடை செல்லத் தொடங்கி விட்டிருக்கிறேன். ஏறத்தாழ அறுபத்தைந்து நாட்களுக்கு பிறகு. காலைநடை செல்லலாம் என்று ஆனபிறகுகூட பலநாட்கள் தயங்கிக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அவசியமானதாக தெரியவில்லை. மொட்டைமாடி நடையே இனியதாக ஆகிவிட்டிருந்தது
திடீரென்று மலைகள் நினைவுக்கு வந்தன. இங்கே வேளிமலை அடுக்குகள் மழைக்காலத்தில் மிக அழகாக முகில்சூடி தென்படும். இந்த முகிலை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணமுடியும் என்கிறார்கள். இது வான்முகில் அல்ல. நிலத்திலிருந்து எழும் நீராவி வானில் குளிர்ந்து உருவாகும் முகில். மலைமேல் நின்றிருக்காது. மலையிடுக்குகளில் வெண்ணிற பட்டு மேலாடை போல வழிந்து கிடக்கும்
இந்த ஆண்டு இங்கே கோடையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏப்ரல் முழுக்க நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை மழை. மேமாதமும் மழைதான்.சென்ற சிலநாட்களாக புயல். கூடவே மழை.கோடை மழை அதற்கே உரிய ஓசையும் மூர்க்கமும் கொண்டது. மறுநாள் காகங்கள் புத்தம்புதியவையாக வந்திறங்கின. அவற்றின் கருமை பிஎம்டபிள்யூ கார்களை நினைவுறுத்தியது . ஃபேக்டரி ஃப்ரஷ் என்பார்கள்.
மழை எஞ்சியிருக்கும் மலைகளைப் பார்க்க விரும்பினேன் அந்த மலைகளை எப்படி இயல்பகாவே மறந்துவிட்டேன். இந்த நாட்களில் மொட்டைமாடியில் இருந்து தெரியும் மலைகளை பார்க்க கண்கள் பழகிவிட்டிருந்தன. மலைகள் என்றாலே இந்தக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அந்த மலைகள் அங்கே இருக்கின்றனவா?
காலையில் நடைசென்றபோது வியப்பூட்டியது அங்கே மனிதர்கள் நடமாடிய தடமே இல்லை என்பது. சேற்றிலும் மணற்பரப்பிலும் இடைவெளியே இல்லாமல் நாய்களின் காலடித் தடங்கள். மனிதர்கள் விட்டுவிட்ட இடங்களில் அவை களியாட்டமிட்டிருக்கின்றன. அவற்றின் காலடிகளை பார்க்கையில் அந்த நடனத்தை உணரமுடிகிறது
மலைகளின் இருள்நீலந்நிறம். வெண்ணிறமான முகிலை இறகுகள் எனச் சூடி அவை அமைந்திருந்தன. அவ்வப்போது திசைகள் உறுமிக்கொண்டிருந்தன. எங்கும் பசுமை. காற்றில் அலையடிக்கும் பசுமையின் ஒளி. ஈரத்திற்கு என ஒரு மணம் உண்டு. பசுமைக்கு என இன்னொரு மணம். சேற்றுக்கு வேறொரு மணம். அவை கலந்த ஒரு புதிய மணம்.
இன்று திரும்பும்போது எண்ணிக்கொண்டேன், நாய்கள் அங்கே வரும். என் காலடிகளை கண்டு ‘இவனும் வந்துவிட்டானா?’ என்று விழிகளால் பேசிக்கொள்ளும். இனி நானும் இருப்பேன். மலைகள் அங்கேயே இருக்கின்றன. ஆறுபோல மானுட வாழ்க்கையில் மலைகள் ஈடுபடுவதில்லை.மலைகளை போல மாபெரும் சாட்சி வேறில்லை. அவற்றை ஒரு புனைகதையில் வெறும் சாட்சியாகவே பயன்படுத்தமுடியும். விஷ்ணுபுரத்தில் ஹரிததுங்கா வெறும் சாட்சிதான்.
மலைகள் எதன் சாட்சி? சம்ஸ்கிருதத்தில் அவை அசலம் என அழைக்கப்படுகின்றன. அசைவில்லாதவை. அவை இங்கே கணம் ஒழியாமல் அசைந்துகொண்டே இருக்கும் வாழ்க்கையின் அசைவில்லாத சாட்சிகள்
திரும்பி வரும்போதே சாரல் அறைந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்து தலைதுவட்டியபின்பு மீண்டும் மொட்டைமாடிக்குச் சென்று மலைகளையும் வானையும் பார்த்தேன். காலைநடை சென்று மீண்டாலும் இந்த மொட்டைமாடிக்காட்சியை தவறவிடமுடியாது
***