ஆகாயம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி பற்றிய கதை. காதும் நாவும் இல்லாதவன் செய்த சிலை என்பதே குறியீடுதான். அவனால் அந்தக் கலையை விளக்க முடியாது- அந்தவகையில் பெரும்பாலான கலைஞர்கள் விளக்கத்தெரியாதவர்கள்தான்.
கலை நிகழ்ந்துவிடுகிறது. இனி அதை என்ன செய்வது? எப்படி பயன்படுத்துவது? சமூகத்திற்கு இதனால் என்ன நன்மை? அதனால் ஏதாவது கெடுதல் விளையுமா? அதை வைத்திருக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. சரி, ‘கட்டுப்படுத்தி’ வைப்போம். அவனை ‘கண்காணிப்போம்’ இதுதான் எந்த அதிகார அமைப்பும் செய்வது.கலையை கண்காணிக்கும் அந்த அதிகார அமைப்பு அரசன் அல்ல. தத்துவமும் மதமும்தான்.
அந்தக்கலையை என்ன செய்வது? அது வானில் இருந்து வருகிறது. வானில் நாமறியாத எவ்வளவோ இருக்கும், வானை எப்படி கட்டுப்படுத்துவது? கதையில் உள்ளேயே ஆசாரி சொல்கிறார் அவருடைய உளி இருப்பது வானத்தின் கையில் என்று
ஆகாயம் என்பது முடிவில்லாத கலையின் விதைகள் உள்ள பரப்பு. மதமும் தத்துவமும் கலையைக் கண்டு பிரமித்துக் குழம்பும் இடம் இந்த பிரம்மாண்டத்தைக் கண்டுதான்
ஜெயராமன்
***
வணக்கம் ஜெ
ஆகாயம் சிறுகதையை வாசித்தேன். இந்தத் தொடர் கதைகளில் வரும் இன்னொரும் பெருங்கலைஞனின் கதை அது. ருசி, ரசனை, இன்னும் பலபல துறைகளின் உச்சமாக நாமறியும் அத்தனையும் பெருங்கலைஞர்கள் நம் நாவில் தொட்டு இட்ட மதுரம் தான். நாம் வணங்கும் தெய்வங்கள் உட்பட. அப்படிப்பட்ட பெருங்கலைஞர்களின் பித்து மனநிலையும் அதைக் கண்டடைந்து ஆராதிக்கும் ஒருவனுடைய கதை. விசும்பின் துளி வீழின்….எனும் திருக்குறளையும் நினைவுறுத்தியது.
அரவின் குமார்
மலேசியா
***
நிழல்காகம்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
நிழற்காகம் படித்தேன். நானே சில சிக்கல்களில் ஆழ்ந்திருக்கிறேன். என் சிக்கல்கள் என்ன என்று எனக்கே தெளிவாக இல்லை. உறவுகள் மீதான கசப்பு என்று சொல்லலாம். என்ன செய்வது என்றே தெரியாத நிலை என்று சொல்லலாம். எதிலுமே பெரிய நம்பிக்கை வராதநிலை என்றும் சொல்லலாம். நிழற்காகம் என்னை விடுவித்தது. இதை சீரியஸாக ஆடுவதுதான் என் பிரச்சினையா? இதை மீம் பண்ணினால்தான் அது எஃபக்ட்வாக இருக்குமா?
அந்தக் காகத்தை நான் அறிவேன். அதனுடன் நான் விளையாடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்
எம். பாபு
***
அன்புள்ள ஜெ,
நமது செயல்களின் எண்ணங்களின் விளைவுகள் நமது நுண் உடலில் பதிவுகளாக பதிகின்றன. அது நமது சந்ததியினர்க்கும் தொடர்கிறது. அப்பதிவுகளை விலங்குகளும், பறவைகளும் நாம் எங்கு சென்றாலும் உணர்ந்துகொள்ளுகின்றன. எதிர் வினை ஆற்றுகின்றன.
இந்த அறப்பிரச்சினை தத்துவப் பிரச்சினையாக மாறும் போது நாம் அதனை அஞ்ஞாமல் நேரிடத்தொடங்குகிறோம். நம்முடைய அகம் பண்படத்தொடங்குகிறது. அது நமது நுண உடலிலும் பிரதிபலிக்கிறது. அதை அனைத்து உயிரினங்களும் உணர்ந்து கொள்ளுகின்றன. நம்மை ஏற்றுக் கோள்ளுகின்றன. நமக்கு சாபவிமோசனம்.
நெல்சன்
***