பகுதி ஆறு : படைப்புல் – 13
எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இருப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு. ஆனால் அறியாத ஒன்றைப் பற்றிய அச்சம் எப்போதும் இருக்கிறது. ஈட்டி, சேர்த்து, தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் மேலான பற்று தடுக்கிறது. தன்முனைப்பும் தன்னுணர்வும் தன் இடம் குறித்த பதற்றமும் நிலைகொள்ள வைக்கிறது.
எல்லாக் கேளிக்கைகளுக்கும் எவர் முந்தி எழுகிறார்கள் என்பதிலிருந்து ஒருவர் அகத்தின் எடையென்ன என்பதை உணர முடியும். அகத்தில் எடையே அற்ற குழந்தைகள் முதலில் எழுகின்றன. மென்காற்றில் பறக்கும் பட்டுக்கொடிகள்போல. இலையசையாதபோதே சுழன்றலையும் பஞ்சுப்பிசிறுகள்போல. விழா என்ற சொல் எழுவதற்கு முன்னரே அவை கிளம்பிவிடுகின்றன. பின்னர் பெண்கள், பின்னர் இளையோர், அதன் பின்னர்தான் முதிர்ந்த ஆண்கள். இறுதியில்தான் முதியோர். அரசகுடியினரோ அதற்கும் பின் எழ வேண்டியவர்கள். அதுவரை கற்பாறையென தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியவர்கள்.
பிரஃபாச க்ஷேத்ரத்தின் தெருக்களிலெல்லாம் நுரைத்துத் ததும்பி ஆடி மகிழ்ந்துகொண்டிருந்த மக்களை தெருக்களில் புரவியில் ஓடியும் காவல்மாடங்களில் ஏறி நின்றும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் இளையோரும் பின்னர் பெண்டிரும் பின்னர் ஆடவரும் என அவர்கள் வரும்தோறும் அப்பெருந்திரளின் வண்ணமே மாறிக்கொண்டிருந்தது. அசைவுகள் மாறின, ஓசைகள் மாறுபட்டன. கிளிக்குரல்கள் குயில்குரல்களாகி, அகவல்களாகி, முழவோசை என்றாகி, முழக்கமாக மாறின. விந்தை என்னவென்றால் சில முதியோர் இளமைந்தருக்கு நிகராக எழுந்தனர். சில குழந்தைகள் முதியோருடன் ஒட்டிக்கொண்டு இறுதியாகவே வந்தன. மானுடரின் வண்ணங்களை வரைந்து தெய்வம் சலிப்படைவதே இல்லை.
அனைத்து தெரு முனம்புகளிலும் பெருங்கலங்களில் மது கொண்டுவந்து வைக்கப்பட்டது. மதுவை விலைக்கு விற்கலாகாது என்று அரசனின் ஆணை இருந்தமையால் குடிகளுக்கு கணக்கின்றி அளிக்கப்பட்டது. மது அருந்துவதில் நிரை நேர் தலைகீழாக இருந்தது. முதலில் முதியோர் அருந்தினர். பின்னர் ஆடவர். அதன் பின்னர் இளையோர். தயங்கியபடி முதிய பெண்கள். சிரித்து நாணி கூச்சலிட்டபடி கூட்டமாக வந்து கன்னியர். கன்னியர் ஊட்ட சிறுவர்களும் சிறுமியரும் அருந்தத் தொடங்கிய பின்னர் அனைத்துத் தளைகளும் கடந்தன. மக்கள் விலங்குகள் என, சிறு பூச்சிகள் என, ஒற்றை உடல் திரளென மாறினர்.
விழவுகளில் மானுடர் ஒருவரை ஒருவர் புதிதெனக் கண்டுகொள்கிறார்கள். வெல்லவும் வெல்லப்படவும் ஏதுமில்லாத உறவு. பதியவும் நிலைக்கவும் தேவையில்லாத உலவுதல். பஞ்சுத்துகள்கள்போல வானில் ஒட்டிக்கொண்டு மெல்ல பறந்திறங்குகின்றனர். ஆணும் பெண்ணும் விழவுகளில் மிக இயல்பாக உளம்தொட்டுக் கொள்கிறார்கள். உடலிணைந்துவிடுகிறார்கள். கள் எல்லா எல்லைகளையும் கடக்கச் செய்கிறது. தொன்மையான மரபுகள் அனைத்துக் கட்டுகளையும் தளர வைக்கின்றன. நாணல் புதர்கள்தோறும் இளையோர் தழுவி நின்றிருப்பதை உடல்பிணைத்துக் கிடப்பதை கண்டேன். ஒவ்வொரு பொருளிலும் காமம் நிறைந்திருந்தது. கள் என்பது என்ன? மரம் கொண்ட காமம். இனிமையை காய்ச்சி குறுக்கி எடுக்கும் மது என்னும் பித்து இப்புவி கொண்ட காமத்தின் உச்சம் அன்றி வேறென்ன?
நாணல்வெளிக்கு அப்பால் கடலோர மணற்பரப்பில் வேனில்விழாவுக்கான இடம் ஒருக்கப்பட்டிருந்தது. வண்ணம் பூசப்பட்ட நாணல்தட்டிகளை இழுத்து கட்டப்பட்ட நிழல்கூடாரங்களில் மூத்தவர் ஃபானுவும் உடன்பிறந்தோரும் கொலுவமரவேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது. அங்கே மணல்வெளி தூய்மை செய்யப்பட்டது. நாணலை உரித்து நாராக்கி பின்னப்பட்ட வண்ணக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. நாணலைக் கொண்டே வளைவுகளும் தொங்குபட்டங்களும் அணித்தூண்களும் ஒருக்கப்பட்டன.
சாம்பனும் பிரத்யும்னனும் அநிருத்தனும் ஃபானுவுடன் ஒற்றை இடத்தில் அமையவேண்டுமென்பது எனது எண்ணமாக இருந்தது. அதை நான் முன்னரே ஃபானுவின் அவையில் உரைத்தேன். “இப்போது இந்நகருக்குள் நான்கு பகுதிகளாக அமைந்திருக்கின்றன நமது தலைமைகள் என்பதே நமக்கு நலம் பயப்பது அல்ல. இவ்விழவில் தாங்கள் தலைமை கொள்ளவேண்டும். தங்கள் தலைமையை அவர்கள் ஏற்கிறார்கள் என்பது விழிக்கூடென தெரியவும் வேண்டும். அதற்கு அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும்” என்று நான் சொன்னேன்.
“அதிலென்ன? நான் ஆணையிடுகிறேன்” என்றார் ஃபானு. பிரஃபானு “நமது ஆணைகளை அவர்கள் தலைக்கொள்ளாமல் இருக்கக்கூடும்” என்று சொன்னார். சுருதன் “நான் அவர்களிடம் சென்று பேசுகிறேன்” என்றார். “அதில் பயனில்லை” என்று வீரா சொன்னார். “அவர்கள் இத்தருணத்தில் அவ்வண்ணம் வந்தமர்ந்தால் அதன் பின் இந்நிலத்தில் அவர்கள் தலைமை கொண்டு எழவே இயலாது போகும். அவர்கள் வரக்கூடும் என்று எனக்கு தோன்றவில்லை” என்றார். “நாம் முயல்வோம்” என்று நான் கூறினேன்.
இளவேனில் கொண்டாட்டத்தின்போது கடற்கரையில் ஃபானு அரசு வீற்றிருக்கையில் உடன் வந்து அமர்ந்திருக்கவேண்டும் என்று கோரி உடன்பிறந்தாரை பிரத்யும்னனிடமும் சாம்பனிடமும் தூதனுப்ப எண்ணினோம். ஆனால் அவர்கள் இளையோர் என்பதனால் அவர்களின் சொற்கள் செவிகொள்ளப்படுமா என்ற ஐயம் எழுந்தது. ஆகவே சாத்யகியை சாம்பனிடமும் கிருதவர்மனை பிரத்யும்னனிடமும் அனுப்பினோம். அவர்கள் அப்பொறுப்பை உவந்து ஏற்றுக்கொண்டார்கள். பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு வந்த பின்னர் அவர்கள் பெரும்பாலான பொழுதை இணைந்து வேட்டையாடிக் கழித்தனர். அரசப்பணிகளை செய்ய விழைந்தனர்.
இளவரசி கிருஷ்ணையிடமிருந்து மறுமொழி வந்தது. சாத்யகி வந்து அவருடைய மறுமொழியை ஃபானுவின் அவையில் சொன்னார். சாம்பன் வந்து ஃபானுவின் அருகமர்வதில் தடையேதுமில்லை, ஆனால் அவருடைய பீடம் ஃபானுவுக்கு ஒரு படி கூட கீழே அமையமுடியாது, முற்றிலும் இணையாக அமையவேண்டும். ஆனால் விழவு தொடங்குகையில் தன்னை மூத்தவரின் இளையோன் என்று முன்வைப்பதில் சாம்பனுக்கு தடையேதுமில்லை.
அதைக் கேட்டு ஃபானு சீற்றத்துடன் எழுந்து “அரசருக்கு இணையாக அரசமர விழைகிறானா அவன்?” என்றார். பிரஃபானு “மூத்தவரே, மூத்தவரே” என்று சென்று அவர் கையை பற்றினார். “உளம் அமையுங்கள். இத்தருணத்தில் இவ்வளவேனும் அவர்கள் இறங்கி வந்தது நமக்கு நல்லூழ் என்றே கொள்ளுங்கள். அவர்கள் வரட்டும்” என்றார். சாத்யகி “நான் கிருஷ்ணையிடம் ஆம் அவ்வாறே ஆகுமென்று சொல்லளித்துவிட்டு வந்தேன்” என்றார். “நீங்கள் எவ்வண்ணம் சொல்லளிக்கலாம்? அரசருக்கு நிகராக தான் அமரவேண்டும் என்று ஒருவர் கேட்கும்போது ஆணை அளிக்க உங்களுக்கு என்ன உரிமை?” என்றார் வீரா.
சாத்யகி அச்சொற்களால் உளம் புண்பட்டார். “நான் என் கடமையை செய்தேன். இக்குடிக்கு அரசமுடியென ஒன்று இருந்தது. இளைய யாதவர் அதை சாம்பனுக்குத்தான் அளித்துச் சென்றார். யாதவக் குடியின் நெறியின்படி மூத்தவர் ஆளவேண்டுமென்று நானும் கிருதவர்மனும் இணைந்து ஃபானுவை அரசமையச் செய்தோம்” என்றார். ஃபானு சீற்றத்துடன் “ஆனால் அது துவாரகையில். அங்கு தந்தையின் சொல் ஒருவேளை நின்று ஆளலாம், அவருடைய நகரம் அது. இது நான் உருவாக்கிய நகரம்” என்றார். சாத்யகி சினத்தை அடக்கி “இதன் கருவூலம் இன்னும் உங்கள் தந்தையுடையதே” என்றார்.
“அதை என்ன செய்யவேண்டுமென்கிறீர்கள்? அவ்வீணர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிறீர்களா?” என்று ஃபானு கேட்டார். “நான் அவ்வண்ணம் சொல்லவில்லை. நீங்கள் உங்களை இயல்பாகவே அரசர் என எண்ணவேண்டாம் என்றேன். முடியுரிமையில் அவர்களுக்கும் முறையான பங்கு உண்டு. அவர்களிடம் அதை நாம் கோரியே பெறவேண்டும். நிகராக அவர்கள் என்ன கோருகிறார்களோ அதை நாம் கொடுக்கவும் வேண்டும்” என்று சாத்யகி சொன்னார்.
வீரா “ஒருபோதும் இதற்கு ஒப்பலாகாது. மக்கள் சொற்களால் அல்ல, விழிகளால்தான் புரிந்துகொள்கிறார்கள். அரசருக்கு இணையாக சாம்பன் அமர்ந்தார் என்றால் இங்கு அரசருக்கு இணையானவர் அவர் என்பது நிறுவப்பட்டுவிடும். பின்னர் அதை எளிதில் மாற்ற முடியாது” என்றார். சாத்யகி “அவர்கள் தனியாக கடற்கரையின் வடமுனைக்குச் சென்று அமர்வதாகவே திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக அங்கே தங்களுக்கு வேனிற்பந்தல் அமைக்கவும் ஆணையிட்டிருந்தார். உங்கள் அருகே வந்தமரும்படி சொல்லி அவர்களை அழைத்து வந்தவன் நான். என் கடமை முடிந்தது. அவர்கள் உங்கள் அரியணைக்கு கீழே அமரவேண்டுமா என்பதை நீங்களும் அவர்களும் இணைந்து முடிவு கொள்ளலாம்” என்றார்.
அவர் சென்றதும் பிரஃபானு “ஆயிரம் பேசினாலும் அவர் விருஷ்ணி குலத்தவர். அந்தகர்கள் முழுமுற்றான முடியுரிமை கொள்வதை அவரால் ஏற்க இயலாது. முடி அசுரர்களுக்கோ ஷத்ரியர்களுக்கோ செல்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் அது நம்மிடம் உறுதிகொள்வதையும் அஞ்சுகிறார். இரு பக்கமும் இரு எதிரிக்காய்களை நிறுத்தி நாற்களத்தில் அரசனை கட்டுப்படுத்துவதுபோல ஆடவிழைகிறார்” என்றார். “நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றார் சுருதன்.
பிரத்யும்னனிடம் பேசச் சென்ற கிருதவர்மன் திரும்பி வந்து “பிரத்யும்னன் வருவான். அரசனுக்குரிய முறைமைகளை உனக்கு செய்வான். ஆனால் எந்நிலையிலும் தலைவணங்கவோ தாழவோ மாட்டான். இதை அவன் என்னிடம் முறையாக அறிவித்திருக்கிறான்” என்றார். “அவர்கள் இருவரும் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்! பேசி முடிவு செய்திருக்கிறார்கள்!” என்று ஃபானு கூவினார். “பொறுங்கள். அவர்கள் இயல்பாகவே அதை முடிவு செய்திருக்கவும் கூடும்” என்று நான் சொன்னேன். “அவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கங்கள் இருக்கின்றன. ஒரே முடிவுக்கு வருவதும் இயல்பே.” சுருதன் என்னை நோக்கி “ஆம், இளையோன் சொல்வதும் மெய்யே” என்றார்.
“பிரத்யும்னன் இங்கிருந்து கிளம்பும் எண்ணத்தில் இருக்கிறார். அவருடைய தூதர்கள் ருக்மியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ருக்மி அவர்களுக்கு அளந்து அளிக்கவிருந்த நிலம் எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அங்குள்ள குடிகள் பிரத்யும்னனை அரசராக ஏற்க மறுக்கிறார்கள். அப்பேச்சுகள் முடிந்து நிலம் முடிவு செய்யப்பட்டதும் அவர் இங்கிருந்து கிளம்பிச்செல்வார். அப்போது நாம் அவருக்கு முறையாகவே விடைகொடுத்து அனுப்புவோம். அவரை நம் நட்பு நாடாகவே பின்னர் கருதுவோம். இந்நிலையில் இப்போது பூசல் எழவேண்டியதில்லை. அவர்களை நாம் அரசருக்கு இணையாகவே இப்போது வைப்பதே முறை” என்றேன்.
கிருதவர்மன் “இது ஒன்றே இயல்வது. இதை நிகழ்த்துவதே நன்று” என்றார். “இன்னும் ஒரு நாள் இருக்கிறது இளவேனில் விழாவுக்கு. அதற்கு முன் இந்நிலைமையை மாற்ற எவராலும் முடிந்தால் அதை செய்யலாம்” என்றார் பிரஃபானு. “கணிகர் உடல்நலமின்றி இருக்கிறார். அவர் இருந்தால் இங்கிருந்து சொற்களாலேயே இதை நிகழ்த்தித் தருவார்” என்று ஃபானு கூறினார். கிருதவர்மன் அந்தச் சொற்களை கேட்டதாகக் காட்டாமல் விழிகளை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். அன்று முழுக்க ஃபானுவின் உடன்பிறந்தார் ஒருவருக்கொருவர் பேசிப் பேசி பொழுது கழித்தனர். அதன் பின்னர் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்பதனால் அவ்வண்ணமே ஆகுக என்று முடிவெடுத்தனர்.
பிரஃபாச க்ஷேத்ரத்தின் கடலோரத்தில் செழித்த நாணல்தொகையிலிருந்து சில நாணல்கள் முற்றும்போது பொன்னிறம் கொண்டன. அவற்றை ஹிரண்யகுசம் என்றனர். அந்நாணல் தண்டுகளை வெட்டிக்கொண்டு வந்து நீரில் ஊற வைத்து வளைத்து முடைந்த அரியணை ஒன்று அமைக்கப்பட்டது. கைஎட்டும் தொலைவுக்கு அப்பால் நின்று பார்த்தால் அது பொன்னென்றே விழிமயக்கு காட்டியது. மூன்றடுக்குக் கூரை கொண்ட வண்ணப் பந்தலில் அரசமேடையில் அதை அமைத்தனர். அதைச் சூழ்ந்து மணலில் நாணல் நாரால் செய்யப்பட்ட வண்ன விரிப்புகளைப் போட்டு குடிகளும் பிறரும் அமர்வதற்கு இடம் ஒருக்கினர்.
ஃபானுவின் அரியணைக்கு இருபுறமும் அதே உயரத்தில், ஆனால் சற்றே சிறிதாக, இரு பீடங்கள் சாம்பனுக்கும் பிரத்யும்னனுக்கும் அமைக்கப்பட்டன. அவையின் முகப்பில் அநிருத்தனுக்கென பீடம் ஒன்று போடப்பட்டது. இளையோர் அமர்வதற்கான தனிப் பீடங்கள் இருபுறமும் நின்றன. பந்தலுக்கு வெளியே இணைப்பாக அமைந்த சிறுபந்தலில் அரசகுடியினரும் மகளிரும் அமரும் இடங்கள் ஒருக்கப்பட்டன. அங்கே அரசி கிருஷ்ணைக்கான தனிப் பீடம் ஒன்று போடப்பட்டது.
அப்பீடங்கள் போடப்படுவதை நானே சென்று பார்வையிட்டேன். அப்பீடங்கள் அமைப்பதில் ஒவ்வொரு தருணத்திலும் ஐயங்களும் குழப்பங்களும் எழுந்துகொண்டே இருந்தன. ஒருகணத்தில் இதேதான் துவாரகையிலும் நிகழ்ந்தது என்று நினைவுகூர்ந்தேன். அங்கு ஒவ்வொரு வெளிநாட்டு அரசர் நகர்புகுகையிலும் அவர்களின் அரசமுறைமைகள் என்ன, படிநிலைகள் என்ன என்பதை விரிவாக உசாவி அறிந்துகொள்ள வேண்டியிருக்கும். அவர்களின் ஒவ்வொரு அமைச்சரும் சற்றே மாறுபட்ட படிநிலைகளையே கூறுவார்கள். அப்படிநிலைகளை வெளிப்படையாகக் கூறவும் தயங்குவார்கள்.
ஏனெனில் அப்படிநிலைகளை அவர்களே மாற்றினார்கள் என்றோ அமைத்தார்கள் என்றோ தோன்றுவது அவர்கள்மேல் வஞ்சங்களை உருவாக்கும். அவர்களிடமிருந்து அச்செய்திகளைப் பெற்று முடிவெடுத்து நம் பொறுப்பில் அதைச் செய்து பழிகொள்ளமால் முடிப்பதென்பது ஒரு நுண்ணிய அரசாடல். பல தருணங்களில் நம்மிடம் அந்தப் படிநிலைகளைச் சொன்னவர்களே அரசர் முன்போ அவையிலோ முற்றிலும் மாற்றிச் சொல்லி நம்மை குற்றம்சாட்டவும் கூடும்.
துவாரகையில் ஒவ்வொரு ஆண்டும் படிநிலையில் மிகச் சிறிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துகொண்டே இருக்கும். “இளைய யாதவர் இங்கிருக்கையில் இருக்கும் படிநிலை அவர் சென்ற பின்னர் வருவதில்லை. சாம்பன் அவரில்லாதபோது மேலெழுந்து இருக்கையில் கீழே செல்கிறார். அவர் உளம் மகிழ்ந்திருக்கையில் ருக்மிணி மேலெழுகிறார். சலிப்புற்றிருக்கையில் சத்யபாமை முதன்மை கொள்கிறார்” என்று ஒருமுறை விளையாட்டாக ஸ்ரீகரர் சொன்னார். ஆனால் அது உண்மை. துவாரகையில் ஒருநாள்கூட படிநிலைகளுக்கான போர் முடிந்ததில்லை. பிரஃபாச க்ஷேத்ரத்தில் அரண்மனைகளோ கோட்டைகளோ படைகளோ இல்லை. அரசர்கள் எவரும் வருவதில்லை. இன்னமும்கூட குடிகள் வேர் கொள்ளவில்லை. ஆயினும் படிநிலைகளுக்கான பூசல் அதே உணர்வுகளுடனும் விசையுடனும் இருந்தது.
மூத்தவர் ஃபானு அரண்மனையிலிருந்து அணி ஊர்வலமாக கடற்கரைக்கு வந்தார். அவருக்குப் பின்னால் இளையோர் நிரைவகுத்தனர். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் முன்னே வர அகம்படியினர் தொடர ஃபானு கைகூப்பியபடி நுழைந்தார். முன்னரே அங்கு சாம்பனும் பிரத்யும்னனும் அநிருத்தனும் வந்து தங்களுக்குரிய பீடங்களில் அமர்ந்திருந்தனர். ஃபானு அவை நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணங்கி நின்றனர். சாம்பன் மூன்றடி வைத்து முன் சென்று உடைவாளை உருவி கால்நோக்கித் தாழ்த்தி ஃபானுவை வணங்கி அழைத்து வந்து பீடத்தில் அமர்த்தினார். பிரத்யும்னன் வாள் தாழ்த்தி அவரை அரியணையில் அமரும்படி வழிகாட்டினார். ஃபானு அரசப்பந்தலில் நடுவே அமைந்த மூங்கில் அரியணையில் அமர்ந்தார்.
ஃபானு அங்கு கிளம்புவது வரை இருந்த பதற்றங்களையும் பூசல்களையும் மறந்து அத்திரளையும் உடன்பிறந்தாரையும் கண்டு உளம் மகிழ்வு கொண்டவராகத் தோன்றினார். அரியணையில் அமர்ந்ததும் குடிகளின் வாழ்த்துகளும் மங்கல இசையும் முழங்கின. மகளிர் வந்து அவையமர்ந்தனர். கிருஷ்ணை முகப்பில் அமர்ந்தார்.
துவாரகையில் அரசர் அவை அமர்கையில் என்னென்ன முறைமைகளும் சடங்குகளும் நிகழுமோ அவையனைத்தும் அங்கு நிகழ்ந்தன. முதுமூத்தோர் எழுவர் சென்று செங்கோலையும் மணிமுடியையும் கொண்டு வந்தனர். மூவர் சேர்ந்து மணிமுடியை ஃபானுவின் தலையில் சூட்டினர். நால்வர் சேர்ந்து செங்கோலை அவரிடம் அளித்தனர். செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி ஃபானு அரியணை அமர்ந்து அவைமங்கலம் கொண்டார்.
குடிகள் எழுந்து அரிமலர் தூவி அவரை வாழ்த்தினார்கள். முரசுகள் அதிர்ந்தன. குடிகள் கைதூக்கி “வெல்க யாதவ குலம்! வெல்க முடிமன்னர் ஃபானு! ஓங்குக யதுவின் கொடிவழி! ஓங்குக அறக் குலம்!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.
சாத்யகியும் கிருதவர்மனும் அருகருகே அமர்ந்து தங்களுக்குள் மெல்லிய குரலில் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உள்ளம் இணைந்திருப்பதை அவர்கள் சற்றே தொட்டுக்கொண்டிருப்பது காட்டியது. அவர்கள் அவ்வப்போது கைகளாலும் தோள்களாலும் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டனர். அவர்கள் மைந்தரின் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்திருக்கும் தந்தையரின் முகம் கொண்டிருந்தனர். அங்கு நிகழும் ஒவ்வொன்றையும் கிருதவர்மன் களியாடுகிறார் என்றும் சாத்யகி மகிழ்ந்து நகைக்கிறார் என்றும் தோன்றியது. சில சமயங்களில் சாத்யகி போதும் என்று பொய்யான சீற்றத்துடன் சொல்லி கிருதவர்மனின் கையில் அடித்தார்.
குடிகள் அனைவரும் ஏற்கெனவே மது அருந்தி மயக்கத்திலிருந்தனர். முதிய குடியினன் ஒருவன் எழுந்து “இங்கு நாம் பேரரசை அமைப்போம்! இங்கு எவரும் நம்மை அணுக முடியாது. எவர் வந்தாலும் நமது சேற்று வெளிக்கு வளமாக மாறுவார்கள்!” என்றான். இன்னொருவன் “ஆம், குருதி தேவை! இங்கு நாம் மண்ணுக்கு வளம் இடுகிறோம்! தழையும் சுண்ணமும் சாம்பலும் போடுகிறோம். ஆனால் பேரரசு நிலைகொள்ளும் நிலங்களில் குருதி சிந்தப்படவேண்டும். குருதி உயிர் கொண்டது, அனல் கொண்டது, பல்லாயிரம் விதைகள் கொண்டது. இந்நிலத்தில் குருதி சிந்தாதவரை நாம் வென்றவர்கள் அல்ல, ஓங்குபவர்கள் அல்ல!” என்றான்.
சிரித்தபடி “முதலில் இவன் கழுத்தை வெட்டி குருதி சிந்துங்கள் இங்கே!” என்று ஃபானு கைநீட்டி கூவினார். அனைவரும் சிரித்தனர். அவன் அச்சிரிப்பை தனக்கெதிரான நகையாட்டாக எடுத்துக்கொண்டு சீற்றம்கொண்டு “ஆம், நான் சிந்துகிறேன்! இங்கு குருதி சிந்துகிறேன்! எனக்கொரு வாளை கொடுங்கள். இங்கேயே இக்கணத்திலேயே சங்கறுத்து விழுகிறேன். என் குருதி இந்நிலத்தில் ஊறி இதை உயிர்கொள்ளச் செய்யுமெனில் நன்று. இன்று இந்நிலம் செத்த பாம்பென கிடக்கிறது, மிதிபடுகிறது, நெளிந்து குழைகிறது. இது படமெடுத்து சீறி எழும் காலம் வரவேண்டும். அதற்கு என் முதற்குருதி இங்கே விழுந்தால் நன்று எனில் அது நிகழ்க!” என்றான்.
“முதலில் அவனுக்கு ஒரு மொந்தை கள் கொடுங்கள்” என்று பிரஃபானு சொன்னார். “விழவுகள் தொடங்கட்டும்” என்று ஃபானு ஆணையிட்டார். முரசுகள் முழங்கி விழவு தொடங்கியதை அறிவித்தன. “அரசே, விழவு காலையிலேயே தொடங்கிவிட்டது” என்றான் ஒருவன். “ஆம், இனி கலைநிகழ்ச்சிகள் மட்டும்தான்” என்றார் சுருதன். “அதற்கு முன் ஒரு சிறு அறிவிப்பு” என்றபடி அடுமனையாளராகிய பத்ரர் எழுந்தார். “இங்கு நமது குடியினர் மிகச் சிறந்த மது ஒன்றை ஒருக்கியிருக்கிறார்கள். இதோ இங்கிருக்கும் இந்நாணற்புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”
அனைவரும் உரக்க கூச்சலிட்டனர். “கந்தர்வர்களுக்கும் பித்தெழச் செய்வது இது என்று சொல்கிறார்கள். இந்நாணல்மதுவை அருந்திய முயல்கள் சிறகுகொண்டு பறக்கத் துடித்தன. நாம் அனைவரும் பறப்போம். முதல் குவளை மதுவை அருந்தி அரசர் இந்நிகழ்வை தொடங்கிவைக்கவேண்டும்” என்றார். குடிகள் அனைவரும் கூச்சலிட்டனர். தொலைவில் ஒரு பொற்குவளையில் அம்மதுவை ஏந்தியபடி ஒருவன் வந்தான். அவன் கையிலிருந்து ஒருவன் பறித்து இன்னொருவனிடம் அளித்தான். அவன் சிரித்தபடி தள்ளாட இன்னொருவன் அதை பறித்தான். அலைகளின்மேல் சிறு நெற்றென அந்தக் குவளை யாதவக் குடிகளின் தலைக்குமேல் வட்டமிட்டது. எழுந்து அமைந்து சுழன்று மூத்தவர் ஃபானுவை நோக்கி சென்றது.
இறுதியாக ஒருவன் தன் தலைக்குமேல் வந்த அதை பிடித்துச் சுழற்றி அவரை நோக்கி எறிய அவர் வலக்கையால் அதை பிடித்துக்கொண்டார். தலைக்கு மேல் அதை தூக்கியபின் “வெல்க யாதவக் குடி!” என்று கூவி அதை குடித்தார். “சுவையானது!” என்று முகம் மலரக் கூறினார். “அனைவருக்கும் வழங்கப்படட்டும்” என்றார். பிரத்யும்னனுக்கும் சாம்பனுக்கும் குவளைகளில் அந்த மது வழங்கப்பட்டது. சாத்யகியும் கிருதவர்மனும் அதை வாங்கி அருந்தினர். பின்னர் குடிமூத்தோருக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொருவரும் முட்டி மோதி அதை வாங்கி அருந்தினர்.
அருந்தியவர்கள் மீண்டும் அருந்தினார்கள். சற்று நேரத்திலேயே ஒவ்வொருவரும் வியர்த்து விழிமயங்கி நாக்குழைந்து உடல் தள்ளாடத் தொடங்கினார்கள். நீர் நிறைந்த கலங்கள்போல் தங்களுக்குள் முட்டி மோதினார்கள். குழைந்த சுழன்ற சொற்களில் பேசிக்கொண்டார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப சொன்னார்கள். அழுதார்கள், சிரித்தார்கள். கைகளை விரித்து எழுந்து எழுந்து பறக்கத் துடித்தார்கள். பெருங்காற்றொன்று அவர்களை அள்ளி மண்ணிலிருந்து மேலே தூக்குவதுபோல் அவர்கள் உடல்கள் ததும்பின.
சூதர்கள் எழுந்து பாடத் தொடங்கினார்கள். துவாரகை பிறந்த கதையை ஒருவன் பாடத் தொடங்க இளைஞன் ஒருவன் எழுந்து “நிறுத்து! எதற்கு அந்த இடிந்த பழைய நகரத்தை பாடுகிறாய்? அது பழைய கதை. புதிய கதை இங்கு தொடங்கியிருக்கிறது. பிரஃபாச க்ஷேத்ரத்தை பாடுக!” என்றான். “ஆம், பிரஃபாச க்ஷேத்ரத்தை! பிரஃபாச க்ஷேத்ரத்தை பாடு!” என்று பல குரல்கள் எழுந்தன. “பிரஃபாச க்ஷேத்ரத்தின் கதையை நான் பாடுகிறேன்!” என்று இன்னொரு சூதன் எழுந்தான். “இந்நகர் இப்பாரதவர்ஷம் எனும் நாணலில் ஊறி வந்த ஒரு சொட்டு மது. இது களிமயக்கின் நகர். மதுவின் நகர்.”
“ஆம்! ஆம்!” என்று அனைவரும் கூவினர். “விண்ணிலிருந்து தெய்வங்கள் இதை நமக்கு அளித்தன. ஒன்பது ஊர்களை அவை படங்களாக வரைந்து நமக்கு காட்டின. வைர ஒளிகொண்ட நகரம் ஒன்று. பொன்னொளிர் நகரம் ஒன்று. வெள்ளி நகரம் ஒன்று. வெண்கலத்தால் விளங்கிய நகரம் ஒன்று. இரும்பால் கோட்டை கட்டப்பட்ட நகர் பிறிதொன்று. கல்லால் ஆனது ஒன்று. மண்நகர் மற்றொன்று. மரத்தாலானது மற்றொரு நகர். இந்நகரா இந்நகரா என்று அவை நம்மை கேட்டன. இறுதியில் நாம் இந்நகரை தெரிவு செய்தோம், இந்த நாணல் நகரை.”
“ஏனெனில் இங்கு இனிய மது நிறைந்திருக்கிறது. வைரம் அல்ல, பொன் அல்ல, வெள்ளி அல்ல, வெண்கலமோ இரும்போ அல்ல, கள்ளே நம் ஆற்றல். கல்லல்ல, மண்ணல்ல, மரமல்ல, கள்ளூறும் மூங்கிலே நமது நகர்.” அவன் பாடி முடிப்பதற்குள்ளாகவே “ஆம்! ஆம்! என்று அனைவரும் கூவினர். ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டும் அறைந்துகொண்டும் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் ஒருவர்மேல் ஒருவர் எறிந்தும் கூச்சலிட்டனர்.