தேனீ [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற ஒரு தேனீவாழ்க்கை கொண்டவர் ஆசாரி. ஏக்கமே தவமாகச் செய்தவர் என்ற வரி என்னை உருகவைத்துவிட்டது
டி.விஜயகுமார்
***
வணக்கம் ஜெ
தேனீ கதையை வாசித்தேன். இசை, தேன், பொன் இது மூன்றும் காற்றில் மண்ணில் எனக் கனிந்து தித்திப்பின் வெவ்வேறு ருசியை அளிக்கிறது. இந்தத் தித்திப்பைத் தேடிய மெய்யான அலைவுதான் கலை மீதான அல்லது ஏதாவது ஒன்றின் மீதான பிரேமை. அந்தத் தித்திப்பு இந்தக் கதை வாசித்த ஒரு கணம் சட்டென்று ஊறி மறைந்தது.
அரவின் குமார்
***
இணைவு [சிறுகதை]
போழ்வு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
இணைவு- போழ்வு வழியாக ஒரு முழுமையான கதை உள்ளது. ஒரு மக்கள்நாயகன் எப்படி வெறும் அடக்குமுறையாளனாக ஆகிறான், அவன் தன்னை பிளந்துகொள்ளும் தருணம் முதல்கதை. அந்த பிளவை சாவின்மூலம் இணைத்துக்கொள்ளும் இடம் இணைவு கதை. அவனுக்குள் எங்கோ அவன் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறான்
விரிவான வரலாற்றுச்செய்திகள்மூலம் சொல்லப்படுவது ஒரு மனிதனுக்குள் மிக அந்தரங்கமாக நிகழும் உடைவும் இணைவும்தான்
சங்கர்
***
என் அன்பு ஜெ,
வரலாறு, சொல்லியைப் பொறுத்து மாறுபடும் கண்ணோட்டம் கொண்டது என்று நினைக்கிறேன் ஜெ. ஒருவேளை அலெக் பெய்ன்ஸ்க்கு பதிலாக சேமர்ஸ் கதைசொல்லியாயிருப்பின் இந்தியர்களின் மீது ஓர் கழிவிரக்கமும், குற்றவுணர்ச்சியும், தாழ்வுமனப்பான்மையும் குடி கொள்ளும். இதே வேலுத்தம்பியின் படைவீரன் எடுத்தியம்புவனாயின் உணர்வின் உச்சத்தில், குருதி கொந்தளித்திருப்போம். ஆனால் கதைசொல்லி இங்கே அலெக் பெய்ன்ஸ். என் வரையில் இந்த போழ்வு-இணைவின் நாயகன் அலெக் பெய்ன்ஸ் தான். வரலாற்றை உள்ளபடியே நேர்மையாக பதிவு செய்துவிட்டுச் சென்றவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன்.
சிந்து சம்வெளி நாகரீகம்/ சங்க காலம் இவற்றைத் தவிர்த்து மகாபதஜனங்கள் தொடங்கி, முகலாயர்கள் வரை அரசனை முன் வைத்தே அதன் சமூக நிலையைத் தெரிந்து கொள்கிறோம். உண்மையில் ஓர் சாமனியரின் வாழ்வு, அவனின் அன்றாடம் எப்படி இருந்திருக்கும் என்பது புலப்படாத ஒன்று. இங்கும் வேலுத்தம்பி வழியாக இந்த கேரள சமஸ்தான மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இணைவு படித்துவிட்டு போழ்வு மறுவாசிப்பு செய்தேன். இந்த பத்மநாபன் தம்பியை நீங்கள் முதலிலேயே அறிமுகம் செய்ததன் காரணம் இணைவு முடிக்கையில் தெரிந்தது.
சேமர்ஸ் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் வேலுத்தம்பிக்கானது மட்டிமல்ல. ஒட்டுமொத்த உலக அரசர்களை நோக்கியது என்று நினைத்தேன் ஜெ. இன்றும் அந்த மனநிலையில் இருக்கும் தலைவர்கள் மக்களின் நல்வாழ்வைத் மறந்து, தங்களைத் தலைவர்களாக நிலை நிறுத்திக் கொள்ளவே அவர்களை பலிகொடுப்பதாகப் பார்க்கிறேன்.
சேமர்சுக்கு பதிலடி ஒரே வரியில் அலெக் பெய்ன்ஸ் கொடுத்துவிட்டார் எனினும். இந்த வரிகளுக்கு, அவருக்கான தக்க பதில் ஒன்றுண்டு என்னிடம்.“ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும்… இதேபோல கண்மூடித்தனமான கூட்டம் . இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை… இதேதான்… நூற்றுக்கணக்கான முறை…”
கல்வியும், உலக அறிவும் தான் பிரிடிஷார் நம்மை அடிமைப்படுத்துவத்துவதற்கு காரணம் என்கிறார் சேமர்ஸ். இந்த இந்தியா என் வரையில் பூர்வீகக் குடி என்ற ஒன்றைத் தாண்டியது. இங்கு பிரிடிஷார் வருவதற்கு முன்பிருந்தே கிரேக்கர்களும், மத்திய ஆசிய குழுக்களும், அரேபியர்களும், முகலாயர்களும் ஆட்சி செய்து நம்முடன் கலந்து விட்டவர்கள். நம்மிலிருந்து அவர்களைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்துவிட்டவர்கள். ஆனால் இத்தனை உலக அறிவும், கல்வியும் பிரிடிஷார்களுக்கு மூர்க்கத்தையும், பழமையைத் தூற்றும் எண்ணத்தையும், எப்படியாவது நாம் முன்னேரினால் போதும் என்ற தன்னல எண்ணத்தையும் தான் தந்திருக்கிறது. அத்தனை வெற்றிக்குப் பின்னர், இந்தியாவை கைப்பற்றிய பின்னரும் எம் மக்கள் என்ற எண்ணமில்லது இருந்ததே அவர்களின் அழிவுக்கு வித்திட்டது எனலாம்.
1805-8 வரையிலான காலகட்டத்தைப் பேசும் சேமர்ஸ்க்கு ஏன் திப்புவின் ஞாபகம் இல்லை என்ற எண்ணம் வருகிறது. உலக அறிவு கொண்டவன் தான் திப்பு, பிரெஞ்சுடன், ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டவன். தன் படையை நவீனமாக்கிக் கொண்டவன். பல முறை ஜெயித்தவன். ஆனால் சேமர்ஸ் சொல்வது போல பக்கத்திலிருக்கும் பகைவர்களையே பார்த்துக் கொண்டு, அதை விட மூர்க்கர்களான பிரிடிஷை குறைவாக எடை போட்டு விட்டார்கள். வணிகக் குழுதானே என்ற எண்ணம். எல்லாம் நடந்து முடிந்த பின் தான் அது புரிகிறது. என்ன செய்ய. இது காலத்தின் கட்டாயம் என்று சொல்வதைத் தவிர உலகின் சிறு துளியான எனக்கு சொல்ல ஒன்றுமில்லை.
1806 ல் வேலூர் புரட்சியை பலரும் முதல் சுதந்திரத்திற்கான புரட்சி என்று சொல்கிறார்கள். இல்லை என்றும் சொல்கிறார்கள். அதையொட்டிய ஓர் புரட்சியாக இந்த கதையில் வரும் சம்பவங்களை நான் பார்க்கிறேன். இதில் நாம் வெற்றி பெறவில்லையெனினும் அதையொட்டிய பிரிடிஷாரின் மீதான காழ்ப்புணர்ச்சி அதிகரித்தது எனலாம். சேமர்ஸ் சொல்வது போல இன்னும் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஓர் ஐம்பதாண்டுகாலம் போரை நீட்டித்திருக்கலாம் தான். ஆனால், அதற்குப் பின்னான கலகலங்களுக்கும், 1858 புரட்சிக்கும் ஓர் முன்னோடியாக இது போன்ற புரட்சிகள் வித்தாக இருந்திருக்கும் என்று. 1858 ல் இந்த கிழக்கிந்திய கம்பெனியின் மூர்க்கமான ஆட்சியை முடிவுக்கு கொணர்வதற்கு இது போன்ற புரட்சிகள் காரணமாய் அமைந்திருக்கும் என்பதை சேமர்ஸ் அறிந்திருக்கவில்லை. பாவம். பின்னாலில் சேமர்ஸை விட இந்த வரலாற்றில் நினைவு கூறப்படுபவர் வேலுத்தம்பி என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரை எதிர்த்த காரணத்திற்காகவே அந்த சம காலத்தில் வாழ்ந்த பிரிட்டிஷ் படைத்தளபதிகளை நினைவு கூறுகிறோம் என்பதுங்கூட அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அலெக் பெய்ன்ஸ் தெரிந்து வைத்திருந்தார். அறிவுடையார் ஆவதரிவார் அல்லவா! நீங்கள் சொல்வது போல ஐந்துபரிமாணங்களைத் தெரிந்து வைத்திருப்பவர் அவர். முன் கூட்டியே கணித்து தளவாய் வேலுத்தம்பிக்கு ஓர் எச்சரிக்கை செய்தார். அவர் கேட்கவில்லை. பத்மநாபன் தம்பியையும் காக்க எத்தனித்தார். அறிவுடை பத்மநாபன் தம்பிக்கு அது தெரிந்தும் தன் கர்ம வினைக்காய் அவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறார்.
வரலாற்றில் பிரிடிஷ் ஆட்சிக்கு அடிபணிந்து, அவர்கள் கொடுக்கும் பென்ஷனை ஏற்றுக் கொண்டு, மக்களைக் காப்பாற்றி, தங்களையும் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்களையும் விட மக்கள் மேலாக நினைப்பது அவதாரப் புருஷர்களைத்தான். வீரர்களை முதன்மைப்படுத்தும் இனக்குழுக்களுக்கு அது சாத்தியம் தான். வீரர்களுக்கு நடுகல் வழிபாடு நடத்தும் குழுக்களுக்கு அது சாத்தியம் தான். அந்த ஒன்றிலிருந்து நாங்கள் வெளிவந்து காந்தியை ஏற்றுக் கொண்டு எங்களுக்கான விடுதலையை வாங்க இன்னொரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வகையில் காந்தி தாக்கப்படுவதும் இத்தகைய மன நிலையினின்று அடுத்த கட்டத்திற்கு செல்ல மறுப்பவர்களால் தான். பாவம் அவர்கள் வேறு வழிகளை அறிந்திராதவர்கள். காந்தியை கீழே தள்ளி சுபாஷ் போஸைளையும், பகத் சிங்களையும் முன் முனைவதும் இந்த மன நிலை தான். ஆனால் இவர்களே காந்தியைத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பது தெரியாதவர்கள். காந்தி இல்லையானால் நம் சுதந்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைத்தாலே மனம் வலிக்கிறது. வன்முறை வன்முறையாலேயே மிக விரைவில்(சேமர்ஸ் சொல்வது போல எறும்புகளை வீழ்த்துவது போல) வீழ்த்தப்படும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அப்படியானால் இந்த வீரர்களும் அவதாரப் புருஷர்களும் தேவையே இல்லையா? அப்படியில்லை. அவர்களாலும் தான் இது சாத்தியமானது. அஹிம்சையும், ஹிம்சையும் மாறி மாறித் தாக்கி சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்.
அதன் பின் மக்களாட்சி. அங்கு ஆட்சியாளர்களால் இத்தகைய சிக்கல் நடக்கவில்லையா எனக் கேட்டால். நடந்தது எனலாம். நடக்க வாய்ப்பிருக்கிறது எனலாம். 1975 களை நம்மால் மறக்க இயலாது.
” நீ அந்தப்பதவியில் அமர்ந்திருப்பதற்காக இதையெல்லாம் செய்கிறாய். ஆனால் ஒரு பதவிக்காக எதையும் செய்பவனால் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அந்தப்பதவியை அதற்கும் மேலே ஒரு பெரிய லட்சியத்திற்காக கையாள்பவனால்தான் அதில் நீடிக்கமுடியும். ”
மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை சொல்கையில் நம் இந்தியாவின் 1975 கள் எனக்கு நினைவிற்கு வந்தது. இன்று இருக்கும்பெரும்பாலான தலைவர்களை பதவிக்கு முன் பின் என்றே பிரித்துக் கொள்ளலாம். பதவியில் நீட்டிபதற்காக அவர்கள் செய்யும் அபத்தங்களில் அவர்களின் சுயத்தை இழந்துவிடுகிறார்கள். உண்மையாக, மக்களுக்கு நல்லதை நினைக்கும் அமைச்சர்களை அழித்து நீங்கள் சொல்வது போல துதிபாடிகளையும், நெடுஞ்சான்கிடையாக காலில் விழுபவர்களையும் மட்டுமே அருகில் வைத்திருக்கிறார்கள். இந்த துதிபாடிகளே சமயம் வருகையில் காலை வாருவார்கள் என்று அறியாமலேயே. அவர்கள் சாகும் போது நினைப்பது இடித்துரைத்த அமைச்சனைத்தான். வேலுத்தம்பி இறக்கும் போதும் சரி, பத்மநாபன் நம்பி இறக்கும் போது சரி நினைத்தது மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளையைத் தான். ”குறுகிய நோக்கங்கொண்டு மக்களின் மன நிலைக்கேற்றபடி நடித்து, பிரிவினைகளை தூண்டிவிட்டு, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அரசியல் வாதிகளும் இருக்கின்றனர். தன் உண்மையான கொள்கைக்காக நிலைத்து நின்று, மக்களின் நலனுக்காவே வாழ்ந்து மாண்டு போகும் நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் புரிந்து கொள்வதில்லை” என்று அறமும் அரசியலும் என்ற நூலில் மு.வ சொல்வது நினைவிற்கு வந்தது.
இங்கு தான் மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை கதாநாயகனாகிறார். இந்த போழ்வு-இணைவின் கதையின் நாயகனான அலெக் பெய்ன்ஸ் சொல்லும், இந்தக் கதையின் நாயகன் மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை தான் என் வரையில்.
சரித்திரக் கதை. இதுவும் ஓர் நல்ல அனுபவமாகத்தான் இருந்தது. நன்றி ஜெ.
அன்புடன்
இரம்யா.
***