ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன. பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன.

அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார்.

“நானா, உள்ளேயா?” என்றான் பூதத்தான்.

“ஆமடா, உன்னைத்தான் எஜமான் தேடினார். போ…”

அவன் ஒவ்வொரு காலாக எடுத்துவைத்து உள்ளே நுழைந்தான். வயிறு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது உடலே சிறு வலிப்பு வந்ததுபோல உலுக்கிக் கொண்டது. அவன் முகம் அக்கணம் அழுதுவிடுவதுபோல இழுபட்டிருந்தது.

காலைவெயிலின் சரிவு குறைந்து வந்தது. நாலாம் காரியஸ்தன் குமாரன் நாயர் கொட்டியம்பலம் நோக்கி ஓடினான். பின்னர் மூச்சிரைக்க திரும்பிவந்தான்.

“டேய் மொண்ணையா, இங்கேயா நிக்கிறே? அறிவுகெட்ட நாயே. என்னை நீ வாழவிடமாட்டே இல்ல?”

“அடியேன், அப்பமே இங்கே நின்னேன்.”

“உன்னைத்தான்டா தம்புரான் தேடிட்டிருக்காரு.நான் உன்னை வரச்சொல்லி எவ்ளவு நேரமாச்சு?”

“அடியேன், அப்பமே வந்தாச்சு…”

“பின்ன? சத்தம் குடுக்கவேண்டியதுதானே? வாயிலே என்ன உனக்க அப்பனுக்க நேந்திரம்பழமா?”

பூதத்தான் ஒன்றும் சொல்லவில்லை.அப்படி சத்தமெல்லாம் கொடுக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

“உள்ள வா”

“அடியேன் ஒரு தப்பும் செய்யல்ல உடையதே” என்று பூதத்தான் நாயர் கைகூப்பி சொன்னான்.

“தப்பு செய்தாயா நல்லது செய்தாயான்னு தீர்மானிக்கவேண்டியது உடையதம்புரான்… வாடா”

உள்ளே காலெடுத்து வைத்தபோது பூதத்தான் மேலும் குறுகி மேலும் நடுங்கினான். பெரிய எட்டுகெட்டு வீட்டின் இரண்டுமாடி முகப்பு கோட்டைபோல எழுந்து வந்தது. பூமுக நீட்சி ஒரு பெரிய படகின் முகப்பு போல தெரிந்தது. அதைச்சுற்றி கருங்கல்லால் ஆன படிகள். அவை நீரலைகள்போல.

வெட்டுகல் பரவிய முற்றத்தில் பூதத்தான் கைகூப்பி நின்றான். உடலை ஒடுக்கி எலிபோல ஆக்கிக்கொண்டான். கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டான்.

நாலாம் காரியஸ்தன் குமாரன் நாயர் மேலே சென்று கைகட்டி தலைதாழ்த்தி “வந்திருக்கான்” என்றான்.

உள்ளே செம்பட்டுத் துணியாலான சாய்வுநாற்காலியில் மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர்  அமர்ந்திருந்தார். முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் அவருக்கு அருகே இடுப்பில் மேல்வேட்டியை கட்டிக்கொண்டு குறுகி நின்றிருந்தார். நேர்ப்பின்னல் குட்டிச் சட்டம்பி கருணாகரன் நாயர்.

வலிய எஜமானன் எழுந்து சுற்றிலும் பார்க்க அவருக்கு பின்னால் நின்ற குட்டிச்சட்டம்பி கருணாகரன் நாயர் பித்தளைக் கோளாபியை எடுத்து நீட்டினான். அதில் துப்பிவிட்டு அவர் வந்து முகப்பில் வந்து பூதத்தானின் தலைக்குமேல் ஓங்கி நின்றார்.

கோயில் முகப்பில் துவாரபாலகன் நிற்பதுபோலிருந்தது. வலிய எஜமானன் நல்ல உயரம். ஆற்று வெண்மணலின் நிறம். கொழுத்த உடலில் பெரிய தொப்பை. மயிரடர்ந்த மார்பின்மேல் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட பதக்கம் கொண்ட வேப்பிலைப்பொளி மாலை பதிந்திருந்தது. காதுகளில் கனல்துண்டுகள் போல சிவப்புக்கல் கடுக்கன்கள். கைகளில் தளர்வான தங்கக்காப்புகள். இடுப்பில் பொற்சரிகைகொண்ட கோடிவேட்டி.

பூதத்தான் தலை தரையை முட்டுமளவுக்குக் குனிந்து வணங்கினான்.

“டேய் நீயாடா பூதத்தான்?” என்றபடி அவர் குருவிபோல ஓசையிட்டு வெற்றிலைச்சாற்றின் மிச்சத்தை கூர்மையாக அவன் மேல் துப்பினார். “எரப்பாளி நாயே… நல்ல தீனி என்ன? உடம்பு ஏறி பெருத்திருக்கே.”

“அடியன்,எல்லாம் இங்க குடுத்த கரிக்காடியாக்கும் உடையதே” என்றான். அவன் தோளில் விழுந்த வெற்றிலைச் சாறு வழிந்தது.

“நீயாடா வலியசங்கரனுக்கு பாப்பானா இருந்தே?”

“ஆமாம் ஒடையதே, அடியனுக்கு அப்டி ஒரு பாக்கியம்.”

“ம்ம்ம்” என்றார் வலிய எஜமானன். நாவால் பாக்குத்துகளை எடுத்தபடி ஏதோ யோசித்தார்.

“வலிய சங்கரன் போனதோட கொட்டிலுக்கு ஐஸ்வரியமும் போச்சு” என்றார் பின்னால் நின்ற முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர்.

“வலியசங்கரன் எத்தனை அடிடே உயரம்?” என்று வலிய எஜமானன் அவனிடம் கேட்டார்.

“அடியன், பத்தேமுக்கால் அடி…” என்றான் பூதத்தான்.

அவர் திரும்பி கோவிந்தன் நாயரிடம் “மத்தவன் எத்தனை அடிடே?” என்றார்.

“பதினொண்ணுண்ணு சொன்னாக” என்றார் கோவிந்தன் நாயர்.

“பதினொண்ணா!”

“ஆமா… அதொரு ஆச்சரியம்… பதினொண்ணுன்னா அதுமாதிரி ஒரு ஆனை இதுவரை இல்லேன்னு அர்த்தம் உடையதே”

“உனக்கு ஆனை வேலையெல்லாம் நல்லா தெரியும்ல?” என்று அவனிடம் வலிய எஜமானன் கேட்டார்.

“அடியன், தெரியும்… பிறந்ததே ஆனைப்பிண்டத்திலேதான்”

“ஆனைப்பிண்டத்திலே பிறக்க நீ ஆரு வண்டா? ஹெஹேஹெ” என்று சிரித்தபடி அவர் திரும்பி மற்றவர்களைப் பார்த்தார்.

பின்னால் நின்ற காரியஸ்தனும் குட்டிச்சட்டம்பியும் கணக்காகச் சிரித்தனர்.

“டேய் நாயே…” என்றார் வலிய எஜமானன்.

“அடியன்… உத்தரவு” என்றான் பூதத்தான்.

“கோவிந்தன் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவான்… பாத்துச் செய் என்ன?”

“அடியேன், உத்தரவு” என்று அவன் வணங்கினான்.

“ம்ம், உனக்கு வேண்டியத நான் செய்வேன். போடா”

அவன் மீண்டும் தரைவரைக்கும் கும்பிட்டு பின்பக்கம் காட்டாமல் நகர்ந்து முற்றத்திற்கு வெளியே சென்று நின்றான். மார்பில் கட்டிய கையை எடுக்கவில்லை.

முதல் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் வெற்றிலை குதப்பிய வாயுடன் வருவதை பூதத்தான் பார்த்தான். அவருடைய முதுகு கும்பிட்டு குறுகி நின்று நின்று நன்றாகவே கூன்போட்டு வளைந்திருந்தது. ஆகவே மார்புகள் வயிற்றின்மேல் அமர்ந்திருந்தன. கால்களை கோழிபோல எடுத்துவைத்து விரைந்துவந்தார்.

அவனைப் பார்த்து  ‘வா’ என்று கைகாட்டிவிட்டு நடந்தார். வீட்டின் தெற்கே பகவதிகோயிலை ஒட்டி ஒரு சிறிய ஓட்டு அறை இருந்தது. ஒன்றில் கதகளி ஆசான் கிருஷ்ணன் நாயர் தங்கியிருந்தார். இன்னொன்று காரியஸ்தனின் அறை.

கோவிந்தன் நாயர் வாயிலிருந்த வெற்றிலையை அங்கே மணற்குவியல் மேல் துப்பிவிட்டு அவனை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.

உள்ளே தரையில் அமர்ந்து எழுதுவதற்கான சாய்வான எழுத்துமேஜையும் மெத்தையும் கிடந்தன. அவர் அந்த மெத்தையில் அமர்ந்து கைகளை மேஜை மேல் வைத்துக்கொண்டார். முதுகை சுவரில் வைத்து நிமிர்த்தார். அவருடைய கூனும் குறுகலும் அகன்றுவிட்டிருந்தன. முகமும் வேறுமாதிரி மாறியது.

பூதத்தான் உள்ளே சென்று சுவர் ஓரமாக பணிவாக கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

“எஜமான் சொன்னதுபோல நீ நல்லா தின்னு தடிச்சு போட்டியேடே” என்றார் கோவிந்தன் நாயர்.

“அடியேன், அரண்மனை எச்சில்ச் சோறாக்கும்” என்றான் பூதத்தான்.

“நல்லா இரு” என்றார் கோவிந்தன் நாயர் “மண்வரை பணிஞ்சா மண்ணிலே வாழலாம்னாக்கும் சொல்லு”

அவன் தலைவணங்கினான்.

அவருடைய கண்கள் மாறின. “டேய், உன்னை விளிப்பிச்சது ஒரு வேலைக்காக. பரமரகசியமான வேலையாக்கும்… தெரியுமே, சொன்னா சொல்லுள்ள ஆளாக்கும் எஜமானன். மறுசொல்லுன்னா மறுவாள்னு நினைக்கக்கூடியவர். மறுநினைப்பிருந்தா சொப்பனத்திலே வந்து நிப்பாரு…”

”ஆமா” என்று அவன் சொன்னான்.

“இது அவருக்க உத்தரவு. செய்யல்லன்னா உனக்க தலை போகும். உன் குடும்பம் அழியும்… சிலசமயம் என் தலையும் போகும்.”

பூதத்தான் தலையசைத்தான்.

”உனக்கு பர்வதராஜனை தெரியுமா? பாறசாலை நெல்லுவிளை வீட்டு பர்வதராஜன்?”

பூதத்தான் “திருவட்டாறு ஆறாட்டிலே பாத்திருக்கேன்” என்றான் முகம் மலர்ந்து, “தலையெடுப்புள்ளவன்… ஏழரைப்பொன்னு பூவும் இரட்டையிணைக் கொம்பும்… ஐசரியமுள்ள ஆனையாக்கும்” என்றான்.

“வலியசங்கரன் போனபிறகு ஏழு வருசமா நம்ம கொட்டிலிலே பெரிய ஆனைன்னு ஒண்ணு இல்லை. வலிய எஜமான் போன சித்திரை மாசம் பாறசாலை ஆறாட்டுக்கு போயிருக்கார். அங்க இந்த பர்வதராஜனை பாத்திருக்கார்.  வச்ச கண்ணு வாங்க முடியல்லை. டேய், அவன் இப்ப நம்ம வலியசங்கரனை விட அரையடி உயரம் கூடுதல். பதினொண்ணு அடி உயரம். இப்டி ஒரு ஆனை இப்ப இந்த நாட்டிலே வேற இல்லை. கொம்பு மட்டும் எட்டடி நீளம். தலையெடுப்பும் நெத்திப்பூவும் செவிவட்டமும் எல்லாம் சாஸ்திரம் சொன்னதுபோல. கஜராஜனாக்கும்.”

பூதத்தான் “ஆமா” என்றான்.

“அப்ப அது நம்மகிட்ட இருக்கணும்ல? வலிய எஜமானன் விலைபேசி பாத்தார். நெல்லுவிளைவிட்டு கரைநாயர் குடுக்க மாட்டேன்னு சொல்லிப்போட்டான். எட்டு யானைக்க விலைய சொல்லியாச்சு. குடுக்க மாட்டானாம். அவனுக்க குடும்ப ஐஸ்வரியமாம். கடைசியிலே நானே போனேன். பேசினேன். போடான்னு சொல்லிட்டான்” என்றார் கோவிந்தன் நாயர்.

பூதத்தான் தலையசைத்தான்.

“நெல்லுவிளைவிட்டு கரைநாயர் எங்கிட்ட சொன்னாரு. என்ன ஓய், நெல்லுவிளை வீடுன்னு ஒண்ணு இருக்கிறது உம்ம எஜமானன் கண்ணுலே இப்பதானே ஓய் பட்டுச்சு? ஆறாட்டுக்கும் கொடியேற்றுக்கும் நான் போயி நின்னு கும்பிட்டா உம்ம எஜமானன் இதுவரை திருப்பிக் கும்பிட்டிருக்காரா? ஒரு தலையசைப்பு, போயி சாவுடான்னு சொல்லுகது மாதிரி. இல்ல? சொல்லும் ஓய். இப்ப எப்டி வந்தேரு? இந்த யானையாலே. அப்ப என்னை ராஜாவாக்குதது யாரு? இந்த யானை. இதை விக்குததுக்கு நான் என்ன மடையனா? போவும் ஓய்னுட்டாரு.. அந்தாலே தலைய கவுத்துட்டு வந்தேன்.”

பூதத்தான் தலையை ஆட்டினான்.

“இங்க வந்து சொன்னா இவரு எந்திரிச்சு வந்து என்னை எட்டி மிதிச்சாரு. நான் படியிலே உருண்டு விளுந்துட்டேன்… அவனுக்கு என்ன வேணும்னு கேளுடா… அவன் கேட்டது கிடைக்கும்னு சொன்னாரு. வலிய எஜமானனுக்க தூதா கண்ணம்பாறை போற்றியே நேரிலே போனாரு. கைமங்கலமா வெத்திலை பாக்கு பழத்தோட அஞ்சுபவுன் நாணயமும் வச்சு குடுத்து இருந்து பேசிப்பாத்தாரு. அவன் சொல்லு கேக்கல்ல.”

“எஜமானன் விடல்லை. வெறி ஏறிப்போச்சு. இதுவும் ஒரு யுத்தமாக்குமே. மறுபடியும் ஆளனுப்பினாரு. எல்லா ஆசையும் காட்டியாச்ச்சு. மெரட்டியாச்சு… உள்ளதைச் சொன்னா இப்ப தூக்கமில்ல. நல்லா போஜனம் இல்லை. வேறே ஒரு நினைப்பில்லை. செத்துப்போன மூதாதைகளும் காரணவன்மாரும் பாத்து சிரிக்குததா சொப்பனம் வருது. குலதெய்வம் முன்னாலே தலையெடுத்து நிக்க முடியல்லை. படாப்பாடு படுதாரு. அது கிட்டல்லன்னா ஏங்கிச் செத்திருவாரு.”

“அது அப்டியாக்கும்டே. பழங்காலம் முதல் அப்டியாக்கும் அஞ்சுமங்கலம் உண்டு. மண்ணு, பொன்னு, வைரம், யானை, பெண்ணு. அதிலே மனசு பதிஞ்சா பின்ன விடமுடியாது. முதலைக்கடி, முதலையே நினைச்சாலும் விடமுடியாது. பழங்கால ராஜாக்கள் இந்த அஞ்சிலே ஒண்ணுக்காகத்தான் யுத்தம் செய்தாங்க. ஏன்னா இந்த அஞ்சும் மகாலட்சுமிக்க கண்கண்ட வடிவம். மகாலட்சுமி மனுசன் மனசிலே பீடம் போட்டு இருப்பா. அந்த பீடம் அகங்காரமாக்கும்… அகங்காரமாக்கும் அஞ்சையும் கடலா வானமா பெரிசாக்குதது.”

“கேட்டிருப்பே, அந்த அஞ்சுக்காகவும் காடுமலை ஏறிப்போயி யுத்தம் செஞ்சிருக்காங்க ராஜாக்கள். குலம்குடிகொடியோட அழிஞ்சவங்க உண்டு. அழிஞ்சாலும் அது ஷத்ரியலெச்சணமாக்கும்…” என்றார் கோவிந்தன் நாயர். “நமக்கு அது யானை. அவங்களுக்கு அது ஒரு பூஷணம்… வேற என்னத்தச் சொல்ல?”

“எறங்கிப்போயி கேட்டாச்சு. எஜமானைச் சாவ விட்டிராதீங்கன்னு சொல்லிப்பாத்தாச்சு. எறங்க எறங்க அவனுக்கு ஏத்தம். எத்தனை நூறுவருச ஆங்காரம் அவன் மனசிலே இருக்கும். இங்க பெரியவன் சின்னவனுக்க தலைக்குமேலே காலுபோட்டுல்லா உக்காருவான். சின்னவன் தலைக்குமேலே காலுபோட்டாத்தானே அவன் பெரியவன்” என்று கோவிந்தன் நாயர் சொன்னார் “இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை. அதான் உன்னைய அனுப்பலாம்னு முடிவாகியிருக்கு. இது எஜமான் உத்தரவு. எஜமான் உத்தரவுன்னாக்க அது ராஜசாசனம்… தெரியும்ல?”

“ஓ”

“அதாகப்பட்டது…” என்று கோவிந்தன்நாயர் குரலை தழைத்தார். “இந்தா இதைப்பாரு” அவர் தன் மேஜையின் அறைக்குள் இருந்து ஒரு சிறு சம்புடத்தை எடுத்து மேலே வைத்தார். “இது சீமைவிஷமாக்கும். ஆர்சனிக்கு. இதை நீ அந்த யானைக்கு குடுக்கணும்.”

“அய்யோ!” என்று பூதத்தான் அலறிவிட்டான்.

“சொன்னேன்ல, ராஜ சாசனம்… நீ இதை செய்யணும். இங்க இல்லாத ஒண்ணு எங்கயும் இருக்கவேண்டாம். அடுத்த திருவட்டாறு ஆறாட்டுக்கு அவனுக்க யானை முன்னாலே போயி நம்ம யானை பின்னாலே போனா அதுக்குப்பிறகு நம்ம எஜமான் நாட்டுராஜான்னு சொல்லிட்டு இங்க வாழமுடியாது. டேய், ஆயிரம் வருச பாரம்பரியமுள்ள குடும்பமாக்கும். அதுக்கு மயிருக்க வெலையாக்கும் பின்ன…”

“இல்ல நான் செய்யமாட்டேன். ஆனை தெய்வமாக்கும் எனக்கு.”

“எனக்கும் ஆனை தெய்வம்தான்… ஆனா ஆனைக்க தெய்வம் நம்ம எஜமானன்… கண்கண்ட தெய்வம். நாம திங்குத சோறு அவரு தாறது. நம்ம ரெத்தம் அவருக்க வீட்டு எச்சில்… நாம நன்னி மறக்கப்பிடாது.”

“ஆனையக்கொல்ல என்னாலே முடியாது” என்று பூதத்தான் கூச்சலிட்டான்.

“மெல்ல… கேக்கப்போவுது”என்றார் கோவிந்தன் நாயர்.

“கேக்கட்டும்… ஆனைய கொல்லுகதா?”

“நீ செய்யமாட்டே?”

“மாட்டேன்”

“எஜமானன் உத்தரவு உனக்கு மயிருக்குச் சமம், இல்ல?”

“எஜமானன் எனக்கு தெய்வமாக்கும். ஆனா நான் கண்ட முதல்தெய்வம் ஆனையாக்கும்” என்று பூதத்தான் சொன்னான். “நான் ஆனைக்கு சேவை செய்யுதவன் இல்லை. ஆனைக்கு என்னை அடிகாணிக்கை வைச்சவனாக்கும். ஆனைக்க கோலை எனக்க அச்சன் எடுத்து என் கையிலே தந்தப்போ சொன்னார். டேய் மக்கா பூதத்தான், ஆனைக்க காலிலே செத்தா உனக்கு மோட்சம்லேன்னு. அவரு மோட்சத்துக்கு போனாரு… எனக்கும் மோட்சம் உறப்பாக்கும்.”

“செரி. அப்ப போ. போறப்ப அப்டியே போயி உனக்க பெஞ்சாதியையும் எட்டு பிள்ளைகளையும் உனக்க துறட்டியாலே அப்படியே குத்திக் கொன்னிரு… அம்பிடுதான்” என்றார் கோவிந்தன் நாயர். “நீ சாவலாம்… நீ செத்தா எஜமான் அதுகளை விட்டிருவாரா? உனக்க எட்டுபிள்ளைகளையும் எருக்குளியிலே கெட்டி எறக்கிப்போடுவாரு… தெரியும்லே, சுட்ட கிளங்குமாதிரி ஆயிடும் உடம்பு… அந்த நரகத்தை அதுகளுக்கு குடுக்கணுமா? போடே, போயி குடும்பத்தோட சாவு. போ…”

பூதத்தான் நடுங்கி கண்ணீருடன் கைகூப்பினான். விசும்பல் ஓசை மட்டும் எழுந்தது.

“சொன்னாக்கேளு. ஒண்ணும் பெரிய காரியமில்லை. நீ கெளம்பி துறட்டிக் கம்போட போயி நெல்லுவிளைவீட்டு முற்றத்திலே நில்லு. அவனுக நல்ல ஆனைக்காரனை தேடிட்டிருக்கானுக. உன்னை கண்டா விடமாட்டானுக. உள்ள போ. சமயம் கிட்டும்ப ஆனைக்க வாயைத்திறந்து கடைவாயிலே இதை வச்சிட்டு அந்தாலே ஓடிவந்திரு… அவ்ளவுதான்.”

கைகூப்பியபடி “ஜென்ம பாவமாக்கும்… தலைமுறை சாபமாக்கும்” என்றான் பூதத்தான்.

“நீ இதை விரும்பிச் செய்யல்ல… ஏலே, கொலை செஞ்சா நரகம் உண்டு. யுத்தத்திலே கொலை செஞ்சா சொர்க்கமாக்கும். ஏன்? நாம ராஜாவுக்க உத்தரவை செய்யுதோம். நமக்கு பாவமில்லை. கடமையைச் செய்த புண்ணியமாக்கும்” என்றார் கோவிந்தன் நாயர். “யுத்தத்திலே எத்தனை யானையை கொன்னு குமிச்சிருக்கானுக… அதெல்லாம் என்ன கணக்கிலே? ராஜாவுக்கு பாவமில்லை. தலைமுறைச் சாபமும் இல்லை. குடிகள் விடுத கண்ணீரு ராஜாவை பாதிக்காது. அதுக்காக்கும் அரண்மனைக்குள்ள எட்டு திக்கிலயும் பகவதியை நிறுத்தி ரெண்டுநேரம் பூசை போடுதது. மாடனுக்கும் எசக்கிக்கும் கொடை போடுதது….”

பூதத்தான் கண்ணீர் மட்டும் வழிய பார்த்துக்கொண்டே நின்றான்.

“நம்ம எஜமான் வாளைக்கொண்டுட்டுபோயி திருவட்டாறு ஆதிகேசவன் காலடியிலே வச்சு அவருக்க உத்தரவாட்டு ஆட்சி செய்யுதாரு. பாவமும் புண்ணியமும் ஆதிகேசவனுக்காக்கும். கண்ணீரும் சாபமும் அவருக்காக்கும்…” என்று கோவிந்தன் நாயர் சொன்னார். “இது ஒரு யுத்தம். ஆமாடே யுத்தம். இந்த தெக்குதேசம் இப்ப நம்ம எஜமானனுக்க ஆணையிலே இருக்கு. இங்க இன்னொருத்தன் விளைஞ்சுவந்தா அதுக்கு என்ன அர்த்தம்? அவன் ஒருநாள் நேருக்குநேர் நிப்பான். அது ரத்தம்சொரிவுக்கு வளியாக்கும். ஆயிரம் பேரு சாவான். ஆயிரம் தலைடே… அதுக்கு இந்த யுத்தத்திலே ஒரு ஆனை விளுந்தா தப்பில்லை.”

“இங்கபாரு, நீ ஆனையை கொல்லல்ல.நம்ம எதிரிக்க சைன்னியத்திலே ஒருத்தனை கொல்லுதே… அம்பிடுதான். சொன்னாக் கேளு. நீ இதை செய்யல்லேன்னா இன்னொருத்தன் செய்வான். எஜமான் முடிவெடுத்தாச்சு. இனி அந்த ஆனைக்க ஜீவன் இல்லை. முடிஞ்சாச்சு. அது செத்தாச்சுன்னு வை. நீ செய்தா ஆனை சாவும், உனக்க குடும்பம் வாழும். அதுதான் வித்தியாசம்.”

“செரிடே, பாவம்னே வையி. அதை நீ தாங்கு. எல்லா நரகத்தையும் நீ அனுபவிச்சுக்கோ. இருந்து உருகி செத்து மேலே போ. ஆனா உனக்க பிள்ளைக இங்க வாழும்லா? அதுகளுக்கு ஏன் மண்ணிலே மகாநரகத்தை நீ குடுக்கே? ஆனையை ரெட்சிச்சிட்டு உனக்க பிள்ளைகளை நரகத்திலே விட்டேன்னா அதுக்க பாவத்தை எங்ககொண்டுபோயி தீப்பே?ஆனைசாபம் வேண்டாம்னு புத்ரசாபத்தையா சேத்து வச்சுக்கிடப்போறே?”

“உனக்கு ஒருசாபமும் வராது. தீர்மானம் எடுக்குதவனுக்குத்தாண்டே சாபம், செய்யுதவனுக்கு இல்லை. மகராஜா உத்தரவிட்டா செய்யவேண்டியது ஒவ்வொரு நாயர் வீரனுக்கும் கடமையாக்கும். இந்தா எட்டுவீட்டுப்பிள்ளைமாரை கொன்னு அவங்களுக்க வீடுகளை இடிச்சு குளம்தோண்டி அவங்களுக்க பெண்டு பிள்ளைகளை கொண்டுபோயி துறையேத்தினாரு மார்த்தாண்ட வர்மா. எத்தனை தலைமுறை ஆச்சு? என்ன நடந்தது? அவங்களுக்கு என்ன கொறை? அவருக்க உத்தரவு கேட்டு அதைச் செய்த நாயர்வீரனுக்கு என்னடே சாபம்? இது ராஜாங்க காரியம். நீ ஒரு உடைவாளு, ஒரு கட்டாரி. நீ ரெத்தத்திலே குளிப்பே, ஆனா உனக்கு அதுக்குண்டான பொறுப்பில்லே. இது இங்க மட்டும் இல்லை. எங்கும் உள்ள கணக்காக்கும்”

பூதத்தான் ஒன்றுமே சொல்லவில்லை.

கோவிந்தன் நாயர் நம்பிக்கை பெற்று “உனக்கு காரியங்கள் இப்ப பிடிகிட்டியிருக்கும். நானும் இதை விரும்பிச் செய்யுதேன்னா நினைக்கே? இல்லை, எனக்கும் இது கடமையாக்கும்…” என்றார். அந்த சம்புடத்தை நீட்டி “இந்தா, சோலிய முடி.உனக்கு எஜமான் பாத்து செய்வாரு” என்றார்.

“ஆனா உடையதே” என்று பூதத்தான் உடைந்த குரலில் சொன்னான்.  “இந்த கேரளத்து மண்ணை பரசுராமனாக்கும் மழு எறிஞ்சு உண்டாக்கினது. ஏன்? அடியன் கேட்ட கதை இதாக்கும். மழுவோட பரசுராமன் தெக்கே வந்தப்ப அங்க ஒரு யானைக்குட்டி காய்ஞ்ச சருகைப் பொறுக்கி தின்னுட்டிருந்ததைப் பாத்தாரு. என்ன மக்கா, உனக்கு பச்சைப்புல்லு இல்லியான்னு கேட்டாரு. எனக்கு மேயக் காடில்லேன்னு அது சொல்லிச்சு. உனக்கு நான் தாறேன் பச்சை மாறாத மண்ணுன்னு சொல்லிட்டு அவரு கோகர்ணத்திலே ஏறி நின்னு கடலைப் பாத்தாரு. மழுவை தூக்கி அந்தாலே வீசினாரு. அது போயி விழுந்த இடம்வரை கடலு பின்மாறி இந்த கேரளத்து மண்ணு உண்டாச்சு”

“பரசுராமன் அதை யானைக்காக்கும் குடுத்தாரு. சஹ்யாத்ரி முதல் அகஸ்தியர்கூடம் வரை ஆனைமேயுத மண்ணாக்கும். இந்த நாட்டிலே ஓரோ இஞ்சும் ஆனைக்குள்ள மண்ணு. பரசுராமரு திரும்பிப்போறப்ப அவருக்க காலிலே விழுந்து ஜனங்கள் எங்களுக்கு மண்ணுகுடுங்க மகரிசியேன்னு கேட்டாங்க. ஆனைக்க கிட்ட கேளு, அது குடுத்த நிலத்திலே பெத்துபெருகி வாழ்ந்துக்கோன்னு சொல்லிட்டு அவரு போனாரு”

“மூத்த கொம்பனானைக்கிட்ட போயி ஜனங்க கேட்டாங்க. ஒடையதே, கருமாமலையே, ஏழைகள் ஜீவிக்க மண்ணு வேணும்னு. எனக்கு அதிகாரமில்லை, எனக்க அம்மையாக்கும் ஆனைக்குலத்துக்கு அரசி. அவகிட்டே கேளுன்னு சொல்லிப்போட்டுது கொம்பன்ஆனை. ஆனா அம்மைகிட்ட நீங்கபோயி கேக்கப்பிடாது. உங்க குடியிலே மூத்த அம்மச்சிமார் போயி கேக்கணும்னு சொல்லிட்டுது.”

“அப்டியாக்கும் பளியர், காணி, பண்டாரம், குறும்பர், பணியர், குறவர், மலையர்னு ஏழு பேரெடுத்த பெருங்குலத்திலே உள்ள மூத்தம்மச்சிமார் ஏழுபேரு போயி ஆனைமூத்தம்மைக்க காலிலே விழுந்து கேட்டாங்க. எங்க குடிவெளங்க மண்ணுகுடுடி மூத்தம்மோன்னு. அம்மை மனமெரங்கி சொன்னா. ஆனைப்புல் முளைக்கும் நிலம் ஆனைக்கு. அருகம்புல் முளைக்கும் மண்ணு மனுசனுக்கு. அருகம்புல்ல்லா வேரோடுங்க, அருகம்புல்லா அடிபணிஞ்சு இருங்க, போங்கன்னு. அப்டி மூத்த பிடியானை நம்ம அம்மைகளுக்கு குடுத்ததாக்கும் இந்த மண்ணு. அதனாலத்தான் இது பெண்மலையாளம்.”

“ஏழுகுடியும் ஏழாயிரம் ஊராச்சு. ஊருமூத்து நாடாச்சு. அம்பத்தாறு ராஜ்ஜியமாச்சு. அதுக்கு தலைநாடா திருவிதாங்கூரு நாடு வந்தாச்சு. இந்த நாட்டுக்க அடையாளம் ஆனையாக்கும். இந்த நிலத்திலே ஒவ்வொரு ராஜாவும் ஆனைக்க கிட்ட சம்மதம் வாங்கித்தான் சிம்ஹாசனத்திலே இருக்கணும். ஆனை குடுத்த அதிகாரமாக்கும் அரசனுக்கு. ஆனை பிறந்தா அரசன் முறைசெய்யணும். அத்தனை ஜாதகர்மமும் உண்டு. ஆனை செரிஞ்சா செங்கோல் பிடிக்குத அரசனே மகனா நின்னு குடமுடைச்சு கொள்ளிவச்சு காடேத்தணும்… சரமச்சடங்கு ஒண்ணு குறையப்பிடாது… இப்பமும் இதாக்கும் முறை” பூதத்தான் சொன்னான். “ஆனைக்க நாடு இது… நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்.”

“அப்ப முடியாதுன்னு சொல்லுதே?” என்று காரியஸ்தன் கோவிந்தன் நாயர் கோபத்துடன் கேட்டார்.

“முடியாது… காரியஸ்தன் நாயரே, அந்த யானை யுத்தத்துக்கு வந்தா நம்ம யானையோட போயி நானே அதைக் கொல்லுவேன். யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் பற்களைக் கடித்தபடிச் சொன்னான்.

“அப்ப நீ போ, நான் பாத்துக்கிடுதேன்” என்றார் கோவிந்தன் நாயர்.

கைகளை சுருட்டி ஆட்டியபடி முன்னால் ஓரடி வைத்து வெறிகொண்ட குரலில் கூச்சலிட்டான் “பின்ன ஒண்ணு சொல்லுதேன். என்ன ஓய் சொன்னீரு? வெசம் வைப்பீரா? கொல்லுவீரா? கொல்லும் பாப்பம். அம்மையாணை சொல்லுதேன், பெத்த பிள்ளையாணை சொல்லுதேன், அச்சன் எடுத்து தந்த இந்த துரட்டிக்கோலாணை சொல்லுதேன், அப்டி அவரு ஆனையை கொன்னா வலிய எஜமானனை நான் கொல்லுவேன். அவருக்க குடியிலே ஒராளையாவது கொல்லாம நான் சாவமாட்டேன்! திருவனந்தபுரம் ஆளும் பொன்னுதம்புரான் ஆனாலும் செரி, இது எனக்க ஆணையாக்கும்.”

“உனக்கு கிறுக்குடே… நீ வெறுதே சாவப்போறே”

“ஆனைக்காக செத்தா எனக்கு மோட்சமாக்கும்” என்றான் பூதத்தான்.

“டேய் நான் சொல்லுகதை கேளு.”

“ம்ம்ம்” என்று உறுமி காலால் மண்ணை ஓங்கி மிதித்து ஒருகணம் விம்மியபின் பூதத்தான் வெளியே சென்றான்.

நடந்தபோது உள்ளிருந்த விசை அவனை ஓடச்செய்தது. அவன் கொட்டியம்பலத்தைக் கடந்து ஓடியபோது காரியஸ்தன் சங்கரன்நாயர் எழுந்து “டேய், டேய், நில்லு” என்று கூவினான்.

அவனை கேட்காமல், அந்த சூழலையே உணராமல், காற்றில் செல்லும் சருகுபோல பதறி பறந்து பூதத்தான் வெளியே ஓடினான்.

கோட்டைக்கு வெளியே வந்ததும்தான் மனதுக்குள் நிறைந்திருந்த மதர்ப்பு குறைந்தது. அவன் எறும்பு போல கைகைளை ஆட்டியபடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டான். பிறகு நேராக ஓடி ,வெட்டுகல் படிகள் வழியாக இறங்கி, ஆற்றுக்குள் பாய்ந்து, நீர்ப்பெருக்கை நீந்திக்கடந்து, மறுபக்கம் மணல்மேல் ஏறி, இடைவழியில் நுழைந்து மூச்சுவாங்க ஓடினான்.

நிற்காமல் அவன் ஓடிக்கொண்டே இருந்தான். வழியில் ஓடைகளில் குப்புறவிழுந்து நாய்போல நீர்குடித்தான். குனிந்து நின்று மூச்சுவாங்கினான். மீண்டும் ஓடினான். எங்கே செல்கிறோம் என்பதை அவன் நெடுநேரம் உணரவில்லை. இரவெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான். வழியில் ஓரிடத்தில் அப்படியே விழுந்து நினைவிழந்து சற்றுநேரம் தூங்கினான். எழுந்தபோது அவன் உடல்மேல் தவளைகள் தாவிக்கொண்டிருந்தன. சூட்டுகோல் பட்டதுபோல உடல்துடிக்க நினைவுமீண்டு மீண்டும் ஓடினான்.

பாறசாலையை அவன் சென்றடைந்தபோது விடிந்துவிட்டிருந்தது. அவன் வந்த அந்தவழி அவனுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. பாறசாலை இருந்த திசைநோக்கி அம்புபோல நேராக அவன் வந்திருந்தான். ஆறுகளையும் ஓடைகளையும் தாண்டி. வேலிகளையும் சுவர்களையும் ஏறிக்குதித்து. வழியில் அவனைக்கண்ட நாய்கள் குரைத்தபடி அஞ்சி வாலை கவட்டைக்குள் ஒடுக்கி விலகி ஓடின. பறவைகள் வானில் கலைந்து எழுந்து கூச்சலிட்டன.

பாறசாலை கோயிலைச் சுற்றிக்கொண்டு அவன் நேராக நெல்லுவிளை வீட்டை நோக்கிச் சென்றான். உயரமான மண்சுவரால் கோட்டை கட்டப்பட்ட உயரமில்லாத நாலுகட்டு வீடு. கொட்டியம்பலத்தில் ஒரு சேவகன் நின்றான்.

பூதத்தான் எவரையும் பார்க்கவில்லை  “உடையதம்புரானே! மலைத்தம்புரானே! தலையெடுத்து நிக்குத பர்வதராஜா!” என்று கைவிரித்து கூச்சலிட்டபடி வெறிகொண்டவனாக கொட்டியம்பலத்தை கடந்து ஓடினான்.

“டேய் டேய் நில்லு… கிறுக்கன்! கிறுக்கன்!” என்று சேவகன் கூச்சலிட்டபடி பின்னால் ஓடிவந்தான். கற்களை எடுத்து அவனை நோக்கி எறிந்தான்.

நெல்லுவிளைவீடு சிறிதானாலும் சுற்றிலும் மிகவிரிவான முற்றம் இருந்தது. அதன் தெற்கே பகவதிகோயிலை ஒட்டி பர்வதராஜன் கட்டப்பட்டிருந்தது.

“உடையதே! பர்வதராஜா! தம்புரானே!” என்று கைவீசி கூவியபடி பூதத்தான் ஓடிவந்தபோது அங்கே நின்றிருந்த பாகன்கள் திடுக்கிட்டு திரும்பினார்கள்.

பகவதி கோயிலுக்குள் போற்றி பூசை செய்துகொண்டிருந்தார். முகப்பில் நெல்லுவிளைவீட்டின் கரைநாயர் சரிகை மேல்வேட்டியை சுற்றிக்கொண்டு நின்றிருந்தார். அனைவரும் பதறிவிட்டார்கள்.

“டேய் ஆரெடா அவன்? கிறுக்கன். பிடி அவனை” என்று நெல்லுவிளைவீட்டு கரைநாயர் நாகப்பன் கூச்சலிட்டார்.

பூதத்தான் யானையை நோக்கி ஓட பாகன்களும் சேவகர்களும் எதிரே வந்தார்கள்.

பூதத்தான் “எஜமானே, ராஜாவே!” என்று யானையை நோக்கிக் கூவினான். “இந்நாடு நமக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே! நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே!”

அவர்கள் அவனை பிடிப்பதற்குள் பர்வதராஜன் பின்னால் நின்று அவர்களை துதிக்கையால் தட்டி அப்பால் தெறிக்க வைத்தது. அவர்கள் துள்ளி விழுந்து உருள பெருங்கை நீண்டுவந்து பூதத்தானை சுற்றித் தூக்கி எடுத்து தன் மத்தகத்தின் மேல் அமர்த்திக்கொண்டது.

யானை உடலை உந்தி ஒருமுறை இழுத்தபோது சங்கிலிகள் உடைந்து விழுந்தன. அந்த ஓசை கேட்டதும் சேவகர்கள் அலறியபடி ஓடினர். அதன் நேர்முன் நின்ற நாகத்தான் நாயர் பின்னால் ஓட முயன்று அங்கிருந்த தூணில் முட்டிக்கொண்டு நடுங்கி கைகூப்பி நின்றார். அவர் நரம்புகள் இறுகி முகம் வலிப்படைந்தது. சிறுநீர் கழித்து வேட்டி நனைந்தது.

ஆனால் பர்வதராஜன் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அது நேராக நடந்து சென்று பெரிய வாசலை அடைந்தது. அங்கே அதை மறிக்க எண்ணி கூடிய சேவகர்களைக்கூட அது கருத்தில் கொள்ளவில்லை. அதன் வேகம் சற்றும்குறையவில்லை என்று கண்டு அவர்கள் பதறி விலகினர்.

பர்வதராஜன் கோயில் முகப்பை அடைந்து வளைந்து மறுபக்கம் சென்றபோது ஆலமரத்து மைதானத்தில் எட்டு மாட்டுவண்டிகளிலாக ஈட்டிகளும் ஆளுயர மஸ்கட் துப்பாக்கிகளும் ஏந்திய வீரர்களுடன் மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் கொண்டுவந்த படை வந்திறங்கியிருந்தது. அதை அணிவகுத்துக்கூட்டிவந்த சிராமங்கலம் கடுத்தா நாயர் “ஆ- ஹேய்!” என்று ஆணையிட்டார். “கம்பேனி ஆர்டர்!” என்று அவர் கூவ படைநாயர்கள் சரசரவென்று எட்டு வரிசைகளாக அணிவகுத்தனர். அவர் உடைவாளுடன் முன்னால் நின்றார்.

அவர்களுக்கு பின்னால் வில்லுவண்டியில் வந்த மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் அதிலிருந்து இறங்கி குடவயிற்றின்மேல் சரிகை மேல்வேட்டியை கையால் அழுத்திப்பிடித்தபடி ஓடிவந்தார். அவருக்குப் பின்னால் காரியஸ்தன் கோவிந்தன் நாயர் ஓடிவந்தார்.

பர்வதராஜன் அவர்கள் எவரையுமே பார்த்ததாக தெரியவில்லை. அதன் விசைகூடவோ குறையவோ இல்லை. சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி,  தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது.

படைத்தலைவன் சிராமங்கலம் கடுத்தா நாயர் திகைத்துப்போய் கையில் உடைவாளுடன் ஆணையிடத்திறந்த வாய் அவ்வண்ணமே நின்றிருக்க வெறித்து பார்த்துக்கொண்டு நின்றார். வீரர்களும் அப்படியே பார்த்து நின்றார்கள். இருட்டென அவர்களின் பார்வையை மறைத்து கடந்து அப்பால் சென்றது பர்வதராஜன்.

அது மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயரையும் பார்க்கவில்லை. நிழலெனக்  கடந்துசென்றது. படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று செல்லும் பேரரசன் போல.

மேலறைக்கல்வீட்டு வலிய எஜமானன் கண்ணன்குமாரன் நாயர் மார்பின் மேல் கைகூப்பி தோளை ஒடுக்கி உடல்குறுக்கி நின்றார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

பாறசாலையின் தெருவினூடாக பர்வதராஜன் சென்றபோது அத்தனை மக்களும் வீடுகளிலிருந்து கைகளை கூப்பியபடி வெளியே வந்து நின்றனர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கி காட்டி “பொன்னுதம்புரானே! உடையதே!” என்று கண்ணீருடன் கூவினர். யானை எவரையுமே அறியவில்லை. அதன்மேல் மேகத்தில் ஏறிச்செல்பவன்போல் அமர்ந்திருந்த பூதத்தான் நாயரும் எவரையும் பார்க்கவில்லை.

யானை நடந்து சென்று மேலேத்தோப்புக்குள் நுழைந்து அப்பால் சென்றது. அப்படியே அது மறைந்துவிட்டது. அது நெய்யாற்றினூடாக காட்டுக்குள் சென்றுவிட்டது என்றார்கள். அதை அதற்குப்பின் எவரும் பார்க்கவில்லை. பூதத்தானும் திரும்பி வரவில்லை.

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–69