அன்புள்ள ஜெ
இந்தக்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். நான் இலக்கியம் வாசிப்பது என் வாழ்க்கையை நுணுக்கமாகப் புரிந்துகொள்வதற்காக மட்டும்தான். இலக்கியத்தில் இருந்து எனக்கு அழகனுபவம் வேண்டும். வாழ்க்கை தரிசனம் வேண்டும். ஆகவே இலக்கிய சர்க்கஸ்களில் எனக்கு இன்று பெரிய ஆர்வம் இல்லை.
நான் வாசிக்க ஆரம்பித்ததே ஆங்கிலத்தில்தான். டெல்லியில் படித்தபோது அயன் ராண்ட் வழியாக இலக்கிய அறிமுகம். அதன்பின் லத்தீனமேரிக்க நாவல்கள். ஐரோப்பிய படைப்புக்கள். இன்றைக்கு ஃபேஷனபிளாக உள்ள எல்லா படைப்புக்களையும் வெறிகொண்டு வாசித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் நான் இதையெல்லாம் வாசிப்பது ஆணவமாகவே உணர்ந்திருக்கிறேன்
நான் அமெரிக்கா போன ஆண்டு ஃபூக்கோஸ் பெண்டுலம் வெளியாகியிருந்தது. அதை வாங்க கியூ. ஆமாம், உண்மையாகவே கியூ. கியூவில் நின்று நானும் வாங்கி வெறிகொண்டு வாசித்தேன். அன்றைக்கு பெரிய அளவில் பாதித்த பல நாவல்கள் நெஞ்சை விட்டு நீங்கிவிட்டன. நீண்ட காலத்திற்குப்பிறகுதான் தமிழிலே வாசிக்க ஆரம்பித்தேன். தற்செயலாக. இணையம் வராவிட்டால் நானெல்லாம் தமிழில் வாசித்திருக்கவே வாய்ப்பு இல்லை
தமிழில் வாசித்தபோது என்னை மிகவும் கவர்ந்த படைப்பு புதுமைப்பித்தனின் கபாடபுரம். அது என்னை பல மாதகாலம் கனவுக்குள் புகுந்து ஆட்டுவித்தது. அதைப்பற்றி யோசித்தேன். அதேபோன்ற கதைகளை நான் ஏராளமாகவே வாசித்திருக்கிறேன். ஆனால் இது மட்டும் ஏன் இப்படி படுத்தி எடுக்கிறது? பிறகு புரிந்தது இது என்னுடைய சொந்த பண்பாடு. அதுக்குள் இருந்து வந்த மெட்டஃபர். ஆகவே இது என்னை இப்படி ஊடுருவுகிறது என்று. இது ஒரு நார்ஸ் தொன்மமோ அல்லது கிரேக்க தொன்மமோ என்னிடம் நிகழாது. ஏனென்றால் அதையெல்லாம் நான் அறிகிறேன். உணர்வதில்லை. அவை என் கனவுக்குள் போகமுடியாது
அதன்பிறகுதான் தமிழிலே வாசித்தேன். விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதினேன் விஷ்ணுபுரம் என்னை டிசைன் செய்த நாவல்களில் ஒன்று. எந்த வெளிநாட்டு நாவலும் அப்படி என் ஆழ்மனசை டிசைன் பண்ண முடியாது. ஏனென்றல் இந்த கோயில்களும் சிற்பங்களும் எனக்குள் ஆழத்திலே ஆர்க்கிடைப்புகளாக உள்ளன. விஷ்ணுபுரம் அங்கே போய் தொடுகிறது. அதில் விஷ்ணு ஆழத்தில் கருக்குளத்தில் குழந்தையாகச் சுருண்டு கிடக்கும் காட்சியில் நான் அழுதுவிட்டேன். மெய்சிலிர்த்தேன்.அந்தச் சிலிர்ப்புதான் இலக்கியம் அளிக்கவேண்டியதே ஒழிய வெறும் மூளைசார்ந்த ஒரு அனுபவத்தை அல்ல.
இன்றைக்கு நான் ஒன்றைச் சொல்வேன். தன்னுடைய சொந்த கலாச்சாரச் சூழலில், வாழ்க்கைச்சூழலில் இருந்துதான் ஒருவன் மெய்யான இலக்கிய அனுபவத்தை அடையமுடியும். அந்த அனுபவமே அடித்தளம். அதற்குமேலே நின்று அதைவைத்துக்கொண்டுதான் பிற இலக்கியங்களை உணரமுடியும். நான் மார்க்யூஸின் ஒன் ஹண்ட்ரெட் இயர்ஸ் ஆஃப் சாலிடியூட் வாசித்தபின் பதினெட்டு ஆண்டுகள் கழித்து விஷ்ணுபுரம் வாசிக்கிறேன். ஆனால் அதை வாசித்தபிறகுதான் என்னால் மார்க்யூஸை உண்மையில் உணர்வுரீதியாக உள்வாங்க முடிந்தது.
ஆகவே இந்த புனைவுக்களியாட்டுக் கதைகளை நான் வாசித்துக்கொண்டே இருந்தேன். எனக்கு இந்த கொரோனா காலம் பெரும்பாலும் விடுமுறைதான். கலைடாஸ்கோப் திரும்பியதுபோல திரும்பிக்கொண்டே இருந்த இந்தக்கதைகள் என் கலாச்சாரத்தின் பலமுகங்களை எனக்குக் காட்டிக்கொண்டே இருந்தன. பழைய கிராமிய சமூக அமைப்பின் கொண்டாட்டத்தை காட்டும் துளி, மொழி, ஆனையில்லா, பூனை, இடம், சூழ்திரு போன்ற கதைகள். டெக்னாலஜி வந்து எல்லாவற்றையும் மாற்றியமைத்து ஒரு புதியவகை ஆன்மிகத்தை உருவாக்குவதை காட்டும் உலகெல்லாம், வான்கீழ் , மலைகளின் உரையாடல் போன்ற கதைகள், பழைய சரித்திரத்தில் இருந்து தொடர்ச்சியை எடுக்கும் போழ்வு, இணைவு, ஆயிரம் ஊற்றுக்கள் போன்ற கதைகள், குற்றம் வழியாக சமூக உருவாக்கத்தை ஆராயும் வேட்டு, பத்துலட்சம் காலடிகள் போன்ற கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகம். ஒரு கதைக்குள் முழுசாகவே ஒரு உலகத்தை உருவாக்கிக் காட்ட உங்களால் முடிகிறது. மகத்தான ஓர் அனுபவம். நன்றி
எஸ்.வரதராஜன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் அனைத்த சிறுகதைகளையும் எழுதியபின்னர், அவை அளித்த மனஎழுச்சியை தொகுத்து கடிதமாக எழுதவேண்டும் என்று நினத்தேன். ஆனால் நீங்கள் எழுத ஆரம்பித்த சில நாட்களிலே, அது முடியாத காரியம் என்று தெரிந்துவிட்டது. அவ்வளவு கதைக்களம், எவ்வளவு சாத்தியங்கள். சிறு கற்களை போட்டு ஒரு மலையை எழுப்புவது போல் உள்ளது.
தனிப்பட்ட முறையில் எனக்கு, சில சிறுகதைகள்/குறுநாவல்கள் ஏற்படுத்தும் மனஎழுச்சியும், தாக்கமும், சில நாட்களில் ஒரு காட்சியாக பின்னர் ஒரு அழுத்தமான படிமமாக என்னுள் தங்கிவிடும். அது பின்னர் என்னை என்ன செய்தது என விவரிப்பது கடினம், ஆனால் ஏதோ ஒரு தருனத்தில் திடீரென்று ஒரு பேருருவம் கொண்டு நிற்கும், என்னை சுட்டெரிக்கும், நானி கூசவைக்கும், கீழ்மையிலிருந்து என்னை மீட்டெடுக்கும்.
லங்காதகனத்தில் முழுமையாக அனுமனாக மாறி, பூரணத்துவத்தை அடைய சந்நதம் கொண்டு ஓடிவரும் ஆசானின் காட்சி, அப்படி என்னுள் படிமமாக தங்கிவிட்ட ஒன்று. பலமுறை என்னுள் மின்னல் போல வந்து போகும் காட்சி. கலையில் சாத்தியமாகும் பூரணத்துவத்துவம், தினசரி வேலையில் சாத்தியம் இல்லயென்றாலும், படைப்பூக்கம் இல்லாமல் சோர்ந்திதருக்கும் நேரத்தில் உத்வேகம் அளிக்கவும், ஏதோ சாதித்துவிட்ட நினைப்பு வரும்பொழுது சமன் செய்யவும், அந்த காட்சி மின்னல் போல வெட்டி மறையும். சில நேரம் அதே படிமம், ஒரு ஆற்றாமையும் , அயர்ச்சியும் தோற்றுவிக்கும் .
இறைவன் கதையை பற்றி யோசித்தபோதும், அதே காட்சி தோன்றியது. அப்படி மற்றுமொரு படிமமாக கேசினி கதவை உடைத்து வரும் காட்சி என்னுள் தங்கிவிட்டது. அந்த மொத்தகதையும் இப்போது அந்த ஒரு படிமமாகிவிட்டது. அதைபற்றி தொடர்ந்து யோசிக்க, திசைதெரியாமல் காட்டுக்குள் அலையும் மனதினை போல, வேறு வேறு விஷயங்கள் ஒன்று சேர, திடீரென்று ஆற்றின் ஆழத்திற்கு சென்ற கூழாங்கற்கள் மெலெழும்பி வந்ததை போல, போழ்வும், நஞ்சும், நற்றுனையுடன் சேர்ந்து ஒரு முக்கோணம் போல் சுற்ற ஆரம்பித்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள்தான், என் தனிப்பட்ட வாழ்க்கையனுபவத்தை வைத்து விந்தையான மனது ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு தாவி ஒரு தொடர்பை உருவாக்கி கொண்டுவிட்டது.
நற்றுனை கதையில் வருவது போல் இன்றும் பெண்கள் உடைக்கவேண்டிய கதவுகள் எராளம் உள்ளன. இந்த புள்ளியிலிருந்து கதையின் மறுமுனைக்கு சென்றேன். நாகத்தான் நாயர் போன்றோர் இருக்கும் மற்றோர் முனைக்கு. இயல்பாகவே ஒரு ஆணாதிக்க மனது எப்படி செயல்படுமோ, அப்படி சிந்திக்கவே, ஆண்களும், பெண்களும் சிந்திக்க பயிற்றுவிக்கபட்டிருக்கின்றனர். அதிலிருந்து உடைத்துகொண்டுவர தொடர்ந்து சுயவிசாரனை தேவை. இல்லயென்றால் கேசினி போல் ஒரு யகஷிதான் தேவை. தடுக்க முடியாத சக்திதான் தேவை. அந்த கனலின் வெப்பத்தில் மற்ற சிறுமைகளெல்லாம் பொசுங்கிவிடும்.
இந்த கதையை பதினொன்று வயதான என் மகளுக்கு எப்படி சொல்லலாம் என்று யோசித்துகொண்டிருந்தபோது, சட்டென்று நான் என் மனைவிக்கு என்ன செய்தேன் என்ற எண்ணம் தலையில் ஓங்கிஅடித்தது போல் இருந்தது. என் அம்மாவுக்கும்தான் என்ன செய்தேன். வாழ்வு முழுவதும் தங்களை எரித்து எரித்து எனக்கு ஊழியம் செய்வதை வெட்கமே இல்லாமல் அனுபவத்திக்கொண்டிருக்கின்றேன். இந்த குற்றவுணர்விலிருந்து விடு படவே முடியவில்லை. அவள் சுதந்திரமாக உணர எது செய்தாலும் தோல்வியில்தான் போய் முடிந்தன.
கல்லூரி பருவத்தில் ஒரு புரட்சியாளனை போல நினைத்துகொண்டிருந்த ஒரு போலிபாவனை கலைந்து நானும் ஒரு ஆணாதிக்க சமூகத்தை சேர்ந்த சாதாரன மனிதந்தான் என்று உணர்ந்து அதிலிருந்து வெளியே வருவது ஒரு மிக நீண்ட பயணம். மிக முரண்பாடான விஷயம் என்னவென்றால், சமுகத்தையோ, குடும்பத்தையோ காப்பதாக நினைக்கும் ஆணாதிக்க மனோபாவம்தான் அதன் பிரச்சனைகளுக்கும் காரணமாயிருக்கிறது. தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால், நான் அன்பு செலுத்துபவர்களைத்தான், காயப்படுத்துகிறேன். என் ஆளுகைக்கு உட்படுத்துகிறேன். தண்டிக்கிறேன். நாகத்தான் நாயரைப் போல. கிட்டதிட்ட வேலுதம்பி தளாவாயை போல, அதிகாரவெறியை முற்றிலுமாக வேறு தளத்தில் வைத்து விவாதிக்கலாம் என்றாலும் கூட, அதீத நீதியுணர்வோ, காக்கும் குனமோ குரூரமாக மாறும் விந்தை ஒரு ஆணாதிக்க சமுதாயத்தின் குணமாகவே பார்கிறேன்.
வரலாற்றை, சரித்திர நாயகர்களை ஒற்றைப்படையாகவோ, கருப்பு வெள்ளையாகவோ எளிமைபடுத்த முடியாது. சரித்திர நாயகனை பற்றிய வேறொரு சித்திரம். புனிதத்தன்மையை உடைத்து வீரபிம்பத்தின் மற்றொரு முகத்தை காட்டும் கதை போழ்வு. வரலாற்றின் போக்கை வேலுத்தம்பி போன்ற மனிதரிகளின் முடிவுகள் எப்படி தீர்மானிக்கின்றன் என்பது ஒரு பக்கமிருந்தாலும், ஒரு தனி நபராக அவரின் மாற்றம் அவர் தேர்ந்தெடுத்த பாதை என்பது எளிமையான ஒன்றல்ல. குடும்ப அமைப்புகளில் கூட, அதிகாரத்தை நாடி, அழிவை கொண்டு வரும் ஆண்கள் தேர்ந்தெடுக்கும் பாதையும் அதுவே. நீதி உணர்வு வீரமாக மாறி, வீரம் அதிகாரமாக மாறி, முழுமுதற் அதிகாரம் பாதுகாப்பற்ற பயமாக மாறி, கடைசியில் கண்ணை மறைக்கும் வெறுப்பாக மாறும் பாதையை வேலுத்தம்பி தெரிந்தே தேர்ந்தெடுத்திருப்பாரா? தான் நடந்துகொண்டிருக்கும் பாதை, அவர் விரும்பிய பாதைதானா என்று யோசிக்காமலா இருந்திருப்பார், அப்படி யோசித்திருந்தாலும் அந்த பாதையில் தொடர்ந்து செல்ல எந்த விதியின் கை அவரை இழுத்து சென்றிருக்கும்?
மறவர்களின் குடும்பத்தை கொன்றோழிப்பதில் ஆரம்பித்து, அவருக்கான புது ஆடையை அணிவதில் முழுமடைவதாகவே நான் புரிந்துகொண்டேன். அதற்குப்பின் கிருஷ்ணப்பிள்ளையை கொல்லும்போது, அது வரை சேர்த்து வைத்திருந்த நஞ்சு, ஒரு சீழ் கட்டியாய் உடையும் தருணம் போல. வெறுப்பும், கோபமும், உடல் முழுவதும் வழிந்தோடும் சீழ் போல உணரும் தருணம்.
உடனே, நஞ்சு கதையின் முடிவுதான் நினைவுக்கு வந்தது. தொடர்பில்லா கதைகள்தான். அவன், அவளை அனைக்கும் தருணம், ஒரு சீழ் கட்டி உடைவது போலத்தான் தோன்றியது. ஒரு அவமானத்தையொ, ஏன் சில நேரங்களில் ஒரு சிறு சீண்டலை கூட மனம் வெறிபிடித்தார் போல திரும்ப திரும்ப நினத்து, முழுக்க வேறொன்றாக மாற்றிவிடும். பித்து நிலைதான். ஒரு கட்டத்தில் அது வெடித்து சிதறும்போது, முழுவதுமாக சோர்ந்து போய்விடுவேன். ஒரு வெறுமை சூழ்ந்துவிடும், அல்லது கீழ்மையை எண்ணி குறுகிபோய்விடுவேன். ஒரு வகையில் விடுதலைதான்
நான் இங்கே சொல்லியதை விட நஞ்சு கதை ஒரு சிக்கலான தளத்தில் நடக்கின்றது. ஆனால் இந்த மூன்று கதைகளயும், கண்ணாடியில் முகத்தை பார்ப்பது போல் வாசித்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. இக்கடிதத்தை எழுதியபிறகு வாசித்து பார்த்தபின் ஏன் இப்படி தொடர்பு படுத்திக்கொண்டேன் என்று தெரியவில்லை. கதைகள் கொண்டுள்ள சாத்தியங்கள்தான் என நினைக்கின்றேன்.
இப்படிக்கு,
பி.ராஜசேகர்