தேவி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தேவி கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முதலில் அந்த நாடகம் எனக்கு அப்படி ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஜெ, நான் ஒரு சிறிய ஊரிலேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட இருந்தேன். மதுரைப்பக்கம் கிராமம். அங்கே எந்தவகையான சமூக வாழ்க்கையும் கிடையாது. கூத்து திருவிழா எதுவுமே இல்லை. எல்லாமே குடியும் சாதியரசியலும் மட்டும்தான். ஆகவே இந்த பொற்காலத்தை வாசிக்கும்போது பெரிய ஏக்கம் வந்தது
மீண்டும் வாசிக்கும்போது அதைவிட முக்கியமானது அந்த நாடகத்துக்கு வெளியே உள்ள நாடகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அங்கே எத்தனை கதாபாத்திரங்க. பெட்டி காதர் முதல் ராஜாமணி வரை. அவர்கள் ஆடுவது இன்னொரு நாடகம். ஒவ்வொன்றிலும் வெடிச்சிருப்புக்கு இடமிருக்கிறது. இவ்வளவு நாடகம் நடக்கும்போதும் எருமைக்கு வைக்கோல் வைப்பதை தவிர ஆர்வமே இல்லாத ஒருவர். பையன் நடிப்பதை தலையில் துண்டுபோட்டுக்கொண்டு வந்து பார்த்துச் செல்லும் ஒருவர். இந்த நாடகம் இன்னும் அருமையானது
ஜெயராஜ்
***
அன்புநிறை ஜெ,
தினமும் தங்களின் சிறுகதைகள் வாசித்து வருகிறேன். சமீபத்தில் தேவி சிறுகதை இந்த வரிசையில் உச்சத்தை தொட்ட சிறுகதை. பத்துலட்சம் காலடிகள் விட மிகச்சிறந்த மிக முக்கியமான சிறுகதையாக அது எனக்கு பட்டது. கதை கொண்டுபோகும் விதம் ஒருகட்டத்தில் அக்கதையில் ஒரு கதாபாத்திரமாகவே நான் மாறிவிட்டேன். மிக மிக யதார்த்தமான ஒரு கதை போக்கு ஆனால் ஒவ்வொரு கதையம்சமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐந்து பகுதிகளில் நான்காம் பகுதியும், ஐந்தாம் பகுதியும் வாசித்தபொழுது நான் அடைந்த உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை. நாம் எதுவாக ஒரு இசையை எண்ணுகிறோமோ அதுவாகவே அது மாறுகிறது. காருக்குருச்சி அருணாச்சலம் இசை மாறியது அவ்வாறுதான். ரஹ்மான் இசையை இளையராஜா இசை என்று தெரியாமல் நான் பலமுறை பலபாடல்கள் கேட்டுள்ளேன். இக்கதையில் ஒரு இடத்தில் ஆனந்தன் நடந்து செல்லும்பொழுது ஒருவர் வழிமறித்து பேசுவார். அவர் பேசிசென்றப்பின் ஆனந்தன் எதற்காக நாம் செல்கிறோம் என்பதையை மறந்துவிடுவான் அதுபோல் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது.
இக்கதையின் உச்சம் அந்த நாடகம் நடக்கும் இடம். முதல் நாடகத்தின் படப்படப்பு. அந்த மூன்று வேடங்களிலும் உமா மாறி மாறி நடிக்கும் விதம். மிக நுண்ணிய விவரணை. நம் வாழ்வில் அமுதூட்டும் அன்னையென, இன்பதுன்ப இடர்களில் பங்குபெறும் துணையென, நம்மை தக்க நேரத்தில் அதட்டி மிரட்டும் நல்வழிப்படுத்தும் ஒரு நற்றுணை என ஒருத்திதான் அமைகிறாள் அவள் உண்மையில் தேவிதான். இக்கதையில் வில்லி கதாபாத்திரம் கடன்கொடுத்த காசை திரும்ப கேட்கவருகிறாள் அதட்டுகிறாள் அவ்வளவுதான் அந்த வில்லி கதாபாத்திரம் கூட ஒரு மெண்மையான கதாபாத்திரம் தான். படைத்து, காத்து, அழித்து என அனைத்துமாகி நம் வாழ்வில் நிற்பவள் நம் தேவிதான் அதை நுட்பமாக கதையில் காண்பித்த தருணம் மிக மிக அருமை. இந்த வாழ்க்கையே ஒரு நாடக மேடைதான் அதில் நாமெல்லாம் வெறும் நடிகர்கள் எனும் ஒற்றை வரியை மொத்த வாழ்வியல் தருணமாக கண் முன் நிறுத்தியது தேவி எனும் சிறுகதை. லாரன்ஸ் என்பவன் கடைசியில் தேவியின் காலில் விழுவது உச்சகட்ட தருணம். தன்யை மொத்தமாக அவன் அர்ப்பணித்துவிட்டான். தன் ஆணவத்தை மொத்தமாக அதில் எாித்துவிட்டான் அவன்.
ஒரு சிறுகதையில் வாழ்ந்த அனுபவம் தந்தமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
ரா. பாலசுந்தர்
***
சிவம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சிவம் என்னை உலுக்கிய கதை. 1997ல் நான் காசிக்கு கிளம்பிச் சென்றேன். அப்பா செத்துப்போனபோது. சட்டென்று என் வாழ்க்கையிலே அப்படி ஒரு பெரிய வெறுமை. அதிலிருந்து இன்றைக்குவரை என்னால் மீளவே முடியவில்லை. அன்றைக்கு நான் போன காசியை மீண்டும் பார்த்ததுபோல இருந்தது
சிவம் என்ற கதை அன்பு என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்து காசிக்கு போனது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் காசியில் அன்புக்கே இடமில்லை. அது சாவின் நகரம். அப்படித்தான் அங்கே சொல்வார்கள். சாவுக்குமுன்னால் அன்புக்கு என்ன இடம். எரியும் பிணத்தில் இருந்து நகைகள் உருகிவிழுவதுபோல அங்கே அன்பு பாசம் எல்லாம் விழுந்துவிடுகின்றன
கார்த்திக்
***
என் அன்பு ஜெ,
இந்த “அன்பு” தான் என் வாழ்வின் பிராதானமாக இருந்து வருகிறது. “அன்பே சிவம்” என்று தானே இத்துனை நாளாய் நினைத்திருந்தேன். இன்று நீங்கள் அன்பே சிவம் என்பதிலிருந்து சிவோகம் என்பதைப் பற்றிச் சொல்கிறீர்கள். அதையும் கடந்து வாழ்வின் அப்பட்டங்களை தோலுரித்துக் காட்டுகிறீர்கள். மரணத்தின் முன் அன்பு இல்லாமையை உணரும் போலும். அது அனைத்தையும் விழுங்கி விடக் கூடியது. செந்தழல் போல. சிதையில் மூட்டப்படும் தீ போல.
“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம்”
என்ற புறநானூற்று வரிகள் நினைவிற்கு வருகிறது ஜெ.
காசியை ஓர் சத்திய யுகத்தில் வாழும் இடமாக ”கரு” சிறுகதையில் சொல்லியிருந்தீர்கள். அதற்கேற்றார்போல அது புதையுண்டு, புறவயமான நாகரிகத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளாததாகத் தெரிகிறது. “பிறர்” என்ற ஒன்றைத் துறந்ததாக அது இருப்பது எத்துனை நிம்மதியளிக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரர்களால் அழிந்த குடும்பங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தன் வீட்டுப் பிள்ளையைவிட அடுத்த வீட்டிலுள்ள பிள்ளை என்ன செய்கிறது என்பதில் ஆர்வமாயிருந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் பேச்சுக்காகவே வாழ்ந்து மாள்பவர்களும் இருக்கிறார்களே. இவர்களுக்குத் தெருவில் உள்ளவர்கள் தான் உலகம். அவர்கள் என்ன சொல்வார்களோ என்றே அஞ்சி, தன் வாழ்வை வாழ்ந்து, அது சார்ந்து கட்டமைத்து உயிரை விடுவார்கள்.
இந்தக் கதையில் வரும் பெயரற்ற சிஷ்யன், நித்யா அன்பில்லாதவரோ என்று வருத்தப்படுவது புரிகிறது. ஆனால் நித்யா தான் அன்பை காசியிலேயே உதரி விட்டாரே. அந்த அன்பென்னும் சிவத்தை காசியிலேயே கரைத்துவிட்டாரே. அந்த ஒன்றரை வருடங்களாக இறப்பின் நிதர்சனத்தை, அப்பட்டமாகக் கண்டிருக்கிறாரே. கதையின் முடிவில் அவனும் அன்பை கரத்து விட்டிருக்கக் கூடும். இந்த வாழ்வு அவ்வளவு தான் என்று புரிந்து விட்டால் எத்துனை தீவிரமாகச் செயல்படுவோம் நாம். அது தெரியாமல் தானே இந்தச் சோம்பல், மெத்தனம், அழுகை எல்லாமே. நித்யா ஒரு ஸ்ட்ரோக்குப் பிறகு வீணை கற்றுக் கொள்ள துடித்ததை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். அந்தத் தீவிரம் உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. நாளையே மரணித்துவிடுவேன் என்று நினைத்து எழுதுவது போலான தீவிரம். அது வெவ்வேறு துறைகளில் எல்லாருக்கும் வர வேண்டுமானால் மரணத்தைப் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. அது இங்கே, இந்தக் கதையில் எனக்குக் கிடைத்தது.
“ஓர் உயிரல்லவா!” என்று அந்த பைத்தியத்தைக் காப்பாற்றிய இளைஞன் சொன்னபோதும், அந்தக் கிழவியை எரியூட்டும்போது நீங்கள் என்னுள் ஏற்படுத்திய காட்சிப் பிண்பமும் இறப்பின் தீவிரத்தை, நிலையாமையை, உயிர்ப்பின் உன்னதத்தை உணர்ந்து கொள்ள வைத்தது.
ஒரு முறை சென்னை-அண்ணாநகரில், காலையில் டீ குடித்துவிட்டுத் திரும்பும் போது எனக்கு மிக அருகாமையிலேயே என்னைக் கடந்து போகும் ஓர் மனிதனைப் பார்த்தேன். அவன் சடாமுடியுடன் ஒட்டிக் கொண்டிருந்த சிறு துளி ஆடையுடன் மிகக் கம்பீரமாக, வேகமாக ஏதோ அருகிருக்கும் ஓர் இலக்கை அடைய ஆவலாய் செல்பனைப் போல பாய்ந்துகொண்டிருந்தான். அவன் யாரையும் சட்டை செய்திருக்கவில்லை. அவனையும் யாரும் செய்திருக்கவில்லை. அவன் என் கண்ணை விட்டு மறையும் வரை அவனைப் பார்த்திருந்தேன்.
எத்துனை சுதந்திரமான வாழ்க்கை. எதைப்பற்றியும் கவலையில்லை. என்னை நானே ஒருமுறை பார்த்தேன். ஓடுகிறேன். நானே இந்த உலத்தைப் புரிந்து வைத்ததிலிருந்து, உருவாக்கிக் கொண்ட இலக்கை நோக்கி. எல்லாம் எதற்காக என்று ஒரு முறை தோன்றிவிட்டால் உலகாயதங்கள் அனைத்தையும் விட்டு விட்டு ஓடத்தான் தோன்றுகிறது. ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டு இந்த வாழ்கையை வாழ்கிறேன். அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்துவிட வேண்டும் என்றே ஓடுகிறேன். “புத்தருக்கு தியானத்தைப் போல, எனக்கு எழுத்து” என்று சொல்வீர்களே! அதையும் நினைத்துக் கொள்வேன். இப்படி ஆளாளுக்கு ஒன்று இருக்க வேண்டும். அது நம்மை உந்தித் தள்ள வேண்டும். அப்படி ஒன்றை நான் வகுத்துக் கொண்டதனால் தப்பித்தேன்.
இறுதியாக நீங்கள் சொன்ன இந்த வரிகள்… “உடல் காலத்தில் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என. உள்ளம் அதில் இருந்தாக வேண்டும். ஓடும் படகில் அமரும் காகம்போல. ஆகவே அது எங்கும் தனியாக நின்றுவிடமுடியாது. எழுந்து எப்படிச் சுற்றினாலும் மீண்டும் வந்து அந்தப்படகில் அமர்ந்தாக வேண்டும். அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி உள்ளத்தை நாளும் புதிய சூழலில் ,புதிய வகையில் திகழச்செய்துகொண்டே இருப்பது உடல்தான். நில்லாக்காலம் நிகழும் உடல்”. எத்துனை அற்புதமான வரிகள். இவ்வரிகளை சோர்ந்து போகும் போதெல்லாம் இனி எடுத்துப் பார்த்திருப்பேன். இந்த உடலை விட்டு நான் செல்லும் வரை.
இது பிரமிள் அவர்களின்,
“உனக்குள் உன்
உயிரென நீ
உருவேற்றிக் கொள்வதுவோ
உயிரல்ல, காலம்.
எனவே எட்டாத
வெற்று வெளி ஒன்றில்
ஓயாத திகிரியை
மென்சிறகலைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசயாமல்
பறப்பது நீயல்ல
நானல்ல,
காலாதீதம்”
என்ற வரிகளையும் நினைவுபடுத்தியது ஜெ.
வீட்டை விட்டு வெளியேறுவது, இந்தியா முழுக்க தன்னந்தனியாய் அலைந்து திரிவது, கேட்கக் கேட்க ஆர்வமாயிருக்கிறது. என்றாவது ஒரு நாள் காசிக்குச் செல்வேன். அங்கு நீங்கள் சொன்ன அகோரிகளை/பெயரில்லா நபர்களை/ எருமைகளை/உணர்வுகளை/சிதைகளை எல்லாம் தேடியிருப்பேன். அது தரும் உணர்வுகளை உடலில்/ மனதில் படரவிட்டு இரசித்திருப்பேன். ஆம் இறப்பதற்கு முன்; அன்பையெல்லாம் இல்லறத்தில் கரைத்தபின் கட்டாயம் செல்ல வேண்டும். வெறும் சிவத்தை நோக்கி…
அன்புடன்
இரம்யா.
***