அன்பிற்கினிய ஜெ,
தொடர்ச்சியாக இக்கதைகளை வாசித்த இரண்டு மாதமும் என் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். நான் 1998 முதல் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தவன். அப்போதே காலச்சுவடு உயிர்மை எல்லாம் வாசித்தேன். உங்கள் சொல்புதிதுக்கும் சந்தா கட்டியிருந்தேன். நவீன இலக்கியம் மீது வெறியோடு இருந்தேன். நவீன அமெரிக்க எழுத்தில் ஓர் ஈடுபாடு வந்தது.
தொழில் அலைச்சல் என்று விலகிச்சென்றுவிட்டேன். பத்தாண்டுகளில் அவ்வப்போது நீங்கள் எழுதிய சிலகதைகளை வாசித்திருக்கிறேன். ஏழாம் உலகம், இரவு என்ற இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். பெரிதாக வாசிக்க மனம் கூடவில்லை. அலைச்சல்தான் காரணம். இந்த இரண்டுமாதமும் ஒரு தவம்போல உங்கள் கதைகளை வாசிக்க முடிந்தது.
தவம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் எந்த கவலையும் இல்லை. எந்த திசைதிரும்பல்களும் இல்லை. முழுநேர வாசிப்பு. எல்லாக்கதைகளையும் காலையில் ஒருமுறை வாசிப்பேன். கடிதங்களை வாசித்தபின் அந்த கதைகளை இன்னொருமுறை வாசிப்பேன். இத்தனை ஆழமான ஒரு வாசிப்பு இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு விரிவான எழுத்தும் அதன்மீதான விவாதமும் வேறெப்போதும் தமிழிலக்கியச்சூழலில் நடந்ததே கிடையாது.
இப்படி ஒரு மனநிலையில்தான் இத்தனை தீவிரமாக வாசிக்க முடிகிறது. இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. வழக்கம்போல இலக்கியம் என்ற வட்டத்திற்குள்ளெயே வராமல் வெறுமே வசை, நையாண்டி என்று சுற்றிச்சுற்றிக் கும்மியடிப்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே இருந்தார்கள். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வேறுவேறு ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள். எதாவது கொள்கை, அரசியல், கோட்பாடு என்று பேசுவார்கள். அவர்களுக்கு இலக்கியம் புரியாது என்பதுதான் அடிப்படைக் காரணம்.
அதோடு முப்பதாண்டுகளுக்கு முன்னால் தாங்கள் வாசித்த எதிலாவது நின்றுகொண்டு அதையே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம். அவர்களுக்குக் கொஞ்சமாவது செவிகொடுத்த இளைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்
எம்.குமார் ஆறுமுகம்
அன்புள்ள ஜெ,
இந்தச் சிறுகதைகளை நினைவுகூரும்போது இப்படி ஒரு காலகட்டம் முன்பும் இருந்தது என்று என் ஆசிரியர் வகுப்பிலே சொன்னது ஞாபகம் வருகிறது. 1935ல் மட்டும் புதுமைப்பித்தன் எழுதிக்குவித்திருக்கிறார். அதேபோல பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை ‘அவ்வளவும் சிறுகதைகள்’ என்ற தலைப்புடன் முழுக்கமுழுக்க சிறுகதை இதழாகவே கொண்டுவந்தார். அப்படி கொத்துக்கொத்தாகச் சிறுகதை வந்ததனால்தான் சிறுகதையின் இலக்கணமே தமிழில் பிடிகிடைத்தது.
மொத்தமாக வகைவகையான சிறுகதைகளை வாசிப்பது ஒரு பெரிய அனுபவம்இந்தக்கதைகளில் ஆன்மிகம், தத்துவம், அரசியல், வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகள் என பலகதைகள் உள்ளன. எளிமையான அழகியல்கொண்ட கதைகள் சிக்கலான கட்டமைப்பு கொண்ட கதைகள். நகைமுகன் கதைக்கும் கரு கதைக்கும் எவ்வளவு தூரம். சிறுகதையின் எல்லா வடிவங்களும் உள்ளன.
ஆனால் அடிப்படையில் ஊழ்,அறம் என எப்போதும் தேடிச்செல்லும் கேள்விகளையே இக்கதைகளும் காட்டுகின்றன. இதுவரை தமிழில் அதிகம் எழுதாத, அல்லது திரண்டு வராத எது இவற்றில் இருக்கிறது என்றால் வரலாறு அல்லது ஊழ் போன்று மனிதனைக் கட்டுப்படுத்தும் பெரிய விசைகள் உள்ளன. அடிப்படையான ஞானத்தேடல் உள்ளது. அதற்கு எதிர்ப்பக்கம் சமானமாக சுவை என்ற ஒன்றை நிறுத்துகிறீர்கள். கலைகளில் உள்ள சுவை. ஐம்புலன்களின் சுவை. சுவைக்கொண்டாட்டமே எல்லாவற்றுக்கும் ஒரே பதில் என்று சில கதைகள் சொல்கின்றன
செ. கிருஷ்ணகுமார்
அன்புள்ள ஆசான் ,
பித்திசைவு – உங்கள் வீரியமும் நுட்பங்களும் அது இருக்கும் தளங்களும் உங்களை படிப்பவர்க்கு நிச்சயம் தெரியும்
‘பித்திசைவு’ இதன் சாராம்சமே. உங்களின் இந்த அஸ்பெக்ட் அம்சம் குறித்து பல நாட்கள் பல மணிநேரம் ஒரு மெடிடேஷன் போல யோசித்ததுண்டு.
பித்திசைவு -படிக்கையில் உடம்பெல்லாம் பற்றிக்கொள்வது போல இருந்தது.
4:01இல் வருவது போல
https://youtu.be/IRFFa9yA05c?t=241
புறப்பாடு படிக்கும்போது இப்படி இருந்ததுண்டு. (இப்படி ஒரு சுயசரிதை வடிவம் என் வாழ்நாளில் நான் படித்ததேயில்லை) . வாழ்வின் மேல் ஹுமர் அல்லது வீரியம் குன்றிவிடும் நேரத்தில் மீண்டும் மீண்டும் ‘ஆடகம்’ போல சென்று படிப்பது உங்கள் புறப்பாடு (இரண்டு பாகங்கள்)
என் தோழி ஒருவர் உங்கள் பித்திசைவு பதிவு படித்து ‘பாபி பிஷர்’ செஸ் ஆட்டம் குறித்து பேசினார்.
https://www.youtube.com/watch?v=M624T3PTggU&t=30s
மீண்டும் நீங்கள் பித்து நிலைக்கு சென்று எங்களுக்கு விருந்து படைக்க வேண்டி
நன்றி ஆசான்
ஸ்ரீதர்
அன்புள்ள ஜெ.,
நீங்கள் கூறிய பித்திசைவு இல்லாது இவ்வளவு பெரிய இலக்கியக் கொண்டாட்டத்திற்கான சாத்தியமே இல்லை. Ingrained என்பது போல, பித்திசைவோடு கூடிய ஒத்திசைவு. பித்தும் இசைவும் தேவையான விகிதத்தில் கலந்தூறி வருகிறது, கடலிலிருந்து ‘மோட்டார்’ போட்டெடுத்தாற்போல. ‘மை பொதி நெருப்பே அன்ன’ என்ற மெய்ப்பொருள் நாயனார் புராண வரி ஞாபகத்திற்கு வந்தது, ‘மனத்தினுள் பித்து வைத்து’ என்று அடுத்த அடியை மாற்றிக்கொள்ளலாம் உங்களுக்காக. நீங்கள் எழுதுகிற வேகத்திற்குப் படிப்பதே சவாலாக இருந்தது. இதுவரை இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சிறுகதைகளை யாரும் எழுதியிருப்பார்களா, தெரியவில்லை. வெண்முரசும் இருப்பதனால் நடுவிலே ரெண்டு, மூணு கதைகள் பின்தங்கிவிடும். இப்போது கணக்கு நேராகி விட்டது. ‘கொரோனா வந்தப்ப நாங்கல்லாம்’ என்று சொல்லிக்கொள்ளுகிறமாதிரி ஏதோ செய்தது போல படித்த எங்களுக்கே ஒரு உணர்வு. நிற்க.
இதையெல்லாம் நீங்களே எண்ணியிருப்பீர்கள்தான். நான் நினைப்பதுண்டு ஜெயஸ்ரீ போன்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கும்போது உங்கள் கதைகளை ஏன் மலையாளத்தில் மொழிபெயர்க்க ஆவன செய்யக்கூடாது என்று. பித்திசைவின் வேகம் சற்றே குறைவதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் நல்லதே, அந்த நேரங்களில் நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கிற கதைகளை மட்டுமாவது நீங்களே மொழிபெயர்க்கலாம் அல்லவா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
ஜ்யோமிதி ஓவியங்கள் தண்டபாணி துரைவேல், கணிதத்துறை, பாண்டிச்சேரி பல்கலை