சிவம் [சிறுகதை]
கூடு [சிறுகதை]
அன்பு நிறை ஜெ,
சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் தடைபட்டது ..
உங்கள் தளத்தில் வெளியாகும் கதைகளை படிக்கச் படிக்கச் என் பழக்கங்கள் ஒருவகை ஒழுங்கை நோக்கி செல்வதை உணர்கிறேன். வெளியான 61 கதைகளில் 10 கதைகள்தான் படித்தேன் ஆனால் அது தொடர்பாக இந்த 60 நாட்கள் ஏதோ ஒன்றை வாசித்து கொண்டும் தேடிக்கொண்டும் தான் இருக்கின்றேன். படித்த கதைகளில் ஒரே ஒரு சம்பவமாவது என் பயண அனுபவங்களுடனும், சுய தேடலில் கண்டடைந்த தரிசனங்களுடனும் ஒத்து போகின்றது. பல அனுபவங்களையும், புரிதல்களையும் இன்னும் ஆழமாக உணர்ந்து அதை குவியலாக தொகுத்து எழுத முடிகிறது. உங்களின் சமீபத்திய கதைகளை படித்ததிலிருந்து எழும் வினாக்களையும் , கதைகள் சொல்லாமல் விட்டு சென்ற இடங்களை நிரப்பி கொள்ள சில விடைகளையும் எண்ணி எண்ணி செயலும் சிந்தனையும் பக்குவமடைகிறது.
உங்கள் முந்தைய சிறுகதைகளை தொகுப்பாக படிக்கும் பொழுது அவை ஏதோ ஒரு மைய ஒற்றுமையுடன் சீராக எழுதபட்டதை போல உணர்வேன், அதனாலேயே மிகவும் அலைக்கழிக்க பட்டேன், உதாரணம் அறம் தொகுப்பு, அக்கதைகளின் தீவிரத்தை என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, சீண்டப்பட்டு கொண்டே இருந்தேன். இந்த சமீபத்திய சிறுகதைகள் ஆரம்பிப்பதற்கும் முடிவதற்கு மட்டுமே ஒரு ஒழுங்கு கொண்டது போல எனக்கு தோன்றுகின்றது , மற்ற பகுதிகள் எல்லாம் விரிந்து விரிந்து எங்கோ கொண்டு போய்விடுகிறது, பின்பு கதையின் நடையே மெதுவாய் இருக்கும் இடத்திற்க்கே கூட்டி வருகிறது.
சிலகதைகளை ஒரே மூச்சில் படித்துவிட முடியவேயில்லை.. கொஞ்சம் படித்து அதிலே மூழ்கி மூழ்கி மீண்டும் விட்ட இடத்திலிருந்தே தொடர முடிகிறது.. சிவம், கூடு கதைகள் அப்படிபட்டவை என நான் உணர்கிறேன் .. காசியின் விரிவை படித்ததுமே, வாசிப்பதை நிறுத்திவிட்டு அங்கே வசிக்க ஆரம்பித்துவிட்டேன், மீண்டும் மறுதினம்தான் கதையை தொடர்ந்தேன்.
சிவம்
நான் கங்கையை கண்டது கொட்டும் மழையில்,
நான் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருந்தேன்,
காசியின் மழை என்னை முழுவதுமாய் நனைத்துவிட்டுருந்தது,
படித்துறையில் உடல்கள் எரிந்து கொண்டே இருந்தது,
காசியையும் மழை நனைத்து கொண்டே இருந்தது..
இதை எதை பற்றியுமே பற்றுக்கொள்ளாத கங்கை,
சலனமில்லாமல் எங்களை கடந்து சென்று கொண்டே இருந்தாள் ..
பிறப்போ, இறப்போ ,
கண்ணீரோ, புன்னகையோ,
காதலோ, காமமோ ,
தீதோ, நன்றோ
மலமோ , மலரோ
நீரோ, நெருப்போ ..
சவமோ, சிவமோ
கங்கை எந்த இருமையும் அறிந்திருக்கவில்லை ,
அன்பெனும் ஒருமையாக பெருக்கெடுத்தாள் .
கூடு
கூட்டிலிருந்து விரியவே முளைக்கிறேன்,
கூட்டை கழற்றி வெளியே அலைகிறேன்,
வெட்டவெளி தோறும் நட்ட பெரும் குன்றில்,
திண்ணமிட்ட மொட்டை கூட்டை காண்கிறேன்..
தத்தி சென்று தம்மம் கேட்கிறேன்,
கை நீட்டிய இடத்தில் ஓர் கூடு, தந்ததொரு கூடு …
வெளியேறிய கூட்டிலிருந்து சென்றதோர் கூடு ,
கண்டதோர் கூடு, அடைந்ததோர் கூடு.
என் கூட்டிலிருந்து வந்தேன் உன் கூடு.
கூட்டிலிருந்து கூடு பாய வைத்தது உன் கூடு.
உன் கூட்டிலே சுருங்கி கொள்கிறது என் கூடு.
சிலதினங்களுக்கு முன் அலைதலும் அமைதலும் பற்றி சிந்திக்கையில், சுருங்கி விரிதல் என்னும் பிரபஞ்ச நியதியை பற்றியும், நான் அன்று அலைந்ததை விரிந்ததுடனும், இன்று அமைந்து ஒரு இடத்தில் கிடப்பதை சுருங்குதலுடனும், மீண்டும் ஒரு விரிதல் நோக்கியும் செல்லும் வாழ்கை என்பதை போல ஒப்பிட்டு நாட்குறிப்பில் சில வரிகளை எழுதிவைத்திருந்தேன், கூடு கதை படித்ததும் மிக பெரிய தரிசனத்தை அடைந்தேன்.. கூட்டு பிரக்ஞை ( Collective consciousness) என்ற உணர்வை உணர்ந்தேன். உங்களை மானஸீகமாக தொடர்பவர்களை உங்கள் சிந்தனை வட்டத்துக்குள் வைத்து கொள்கிறீர்கள் என்பது போல நினைத்து கொண்டேன்.. சுருங்குவதை “செயலாகவும் பொருளாகவும் மாறாமல் வெறும் தர்மம் மட்டுமே இருக்கும் நிலை” என எண்ணி கொண்டு செயலை நோக்கி தர்மத்தை செலுத்துகிறேன்.
நான் செய்த லடாக் பயணத்தை பற்றி எனக்கு பெரிய மனக்குறை உண்டு, கிட்ட தட்ட 15 தினம் அந்த பெருவெளியில் அலைந்தும், அடங்கியும் இருந்த போதிலும் ஒரே ஒரு காட்சியை கூட என்னால் மீண்டும் நினைவில் நிறுத்திவிட முடியவில்லை.. அது ஒரு பெரும் கனவு அதை கண்டேன் என்னும் நினைவுள்ளது , என்ன கண்டேன் என்பது சற்றும் நினைவில்லை.ஒரு இரவு டிஸ்கிட் என்னும் ஒரு ஊரில் பால்வெளி நட்சத்திரங்களை மிக அருகில் கண்டேன் அதை 20 வினாடிக்கு மேல் பார்த்தல் பித்தாகி விடுவேன் என தோன்றியது, உடலெங்கும் ஒரு நடுக்கமும் பயமும் பரவியது, லடாக் பயணத்தில் இரவில் நான் வானை காணவே இல்லை. லேஹ்விலிருந்து தில்லி வந்து, லடாக் பயணத்திலிருந்து மீள வேண்டியே ஐந்து தினங்கள் ஒரு சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தேன்.
நான் லடாக்கில் எடுத்த நிழல் படங்களில் , காணொளிகளில் எதிலுமே நான் கண்ட லடாக் இல்லை, அந்த நிலப்பகுதியை காண்பதற்க்காகவும், அதில் திறிபதற்காகவும் ஏழு ஆண்டுகள் கனவு கண்டேன், அந்த பயணத்திற்காக மட்டும் சிறுக சிறுக பணம் சேர்த்தேன், இருபத்தி ஐந்து வயது ஆவதற்குள் அங்கே சென்றுவிட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதை தவிர அந்த பயணத்தில் இருந்து நான் எதுவுமே என்னுடன் எடுத்து வரவில்லை… அதன் பின்பு லடாக் பயணத்தி பற்றி நினைப்பதையே நிறுத்திவிட்டேன்.
கூடு கதையின் ஒவ்வொரு சொல்லும் நான் கண்ட லடாக்கை என் முன் நிறைத்தது, மிக நுட்பமாக ஒரு ஒரு கல்லாக லடாக்கின் சிகரங்களையும், அதன் மடாலங்களையும் கட்டி எழுப்பியது.. எதை நான் காண வேண்டும் என்று அந்த மலை சரிவிற்கும், பள்ளத்தாக்கிற்கும் சென்றேனோ, எது என் நினைவில் இன்று இல்லையோ அதை இங்கே என் கூட்டிலிருந்தே காண்பித்துவிடீர்கள், நன்றி ஜெ.
பணிவன்புடன்,
இளம்பரிதி
***
அன்புள்ள ஜெ
கூடு கதை என்னை விசித்திரமான மனநிலைகளுக்குத் தள்ளியது. நானும் லடாக்கில் நிறைய சுற்றியிருக்கிறேன். பைக்கில். லடாக் நமக்கு என்ன அளிக்கிறது? லடாக்கில் நமக்கு கிடைப்பது ஒரு வெறுமை. இங்கே எங்கே பார்த்தாலும் மனிதர்களும் விலங்குகளும் நிறைந்திருக்கிறார்கள். லடாக்கில் நாம் ஒரு பெரிய வெட்டவெளியை கண்முன் காண்கிறோம். அது அளிக்கும் சூனியம் நம்மை பல அசலான கேள்விகளை நோக்கி செலுத்துகிறது
லடாக் மண்ணில்தான் பயணமே ஒரு ஆன்மிக அனுபவமாக அமைகிறது. உள்ளேயும் தேடலாம், வெளியேயும் தேடலாம். வெளியே தேடுவதுதான் எளிது. அங்கே வழிகள் புறவயமானவை என்ற ஒரு வரி ஷாக் அளித்தது. ஆனால் அதைத்தான் பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். கூடு கதையில் லாமா அவ்வளவுபெரிய மடத்தை கட்டியது அதற்காகத்தானே?
எஸ்.மாதவன்
***
நிழல்காகம்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
காகத்தின் கொத்தை ஒரு மீம் ஆக மாற்றிக்கொண்ட கதையை வாசித்தேன். இந்த தளத்தில் முன்பு மாதவன் இளங்கோ என்பவர் டின்னிடஸ் என்ற நோய் பற்றி எழுதியிருந்தார். காதில் குரல்கள் கேட்பது. அதிலிருந்து தப்ப ஒரே வழி அதையே இயல்பான நிலையாக சைக்காலஜிக்கலாக ஏற்றுக்கொள்வது, அதில் வாழ்வது, அதை விளையாட்டாக ஆக்கிக்கொள்வது என்று எழுதியிருந்தார். அதைத்தான் நினைத்துக்கொண்டேன்
குமரவேல்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
‘நிழல் காகம்’ படித்தேன். என் வாழ்வில் நேர்ந்த உண்மை சம்பவத்தை கூற விரும்புகிறேன். 1997 – 1999 வருடங்களில் நான் பாலக்காட்டில் ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் அங்குள்ள பிரியதர்சினி தியேட்டருக்கு அருகில் நடந்து வரும் பொழுது ஒரு காகம் எங்கிருந்தோ பறந்து வந்து என் தலையில் அதன் இரண்டு கால்களையும் வைத்து அழுத்தி ஒரு கணம் நின்றுவிட்டு அப்படியே பறந்து சென்று விட்டது.
இதன் பின் என்ன நடக்குமோ என்ற எனக்கு பயம் தொற்றி கொண்டது. சனி பகவான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா ? உடன் பணிபுரிந்த ஹரி என்ற பிராமண நண்பரிடம் என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டேன்.அவர், தான் வசிக்கும் பாலக்காட்டில் நூராணி என்ற கிராமத்தில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டால் போதும் என்றார். அவ்வாறே செய்தேன்.
இதை உங்களுக்கு எழுத காரணம் என்னவென்றால், நிழல் காகம் கதையில் காகா தோஷத்து குடும்பத்தில் உள்ள மகன் கதாபாத்திரம் பரிகாரம் செய்ய பாலக்காட்டில் உள்ள நூராணி கோவிலில் ஒரு வாரம் தங்கி உள்ளதாக எழுதி உள்ளீர்கள். என்னை வியக்க வைத்தது என்னவென்றால், நூராணி ஒரு மிக சிறிய கிராமம், அது நம் தமிழ்நாடு பாணியில் உள்ள ஒரு கோவில் என்று தான் எனக்கு ஞாபகம். தங்களது கதையில் வரும் தகவல்கள் எவ்வளவு துல்லியமானவை !!!!!!!!!!!!!!. அசர வைக்கிறீர்கள்.
நிற்க. எனக்கு வாழ்க்கையில் பல கேள்விகள் எழும். தங்களிடம் கடிதம் மூலம் கேட்க நினைப்பேன். பெரும்பாலும் விரைவிலேயே தங்களது ஏதேனும் கதையிலோ அல்லது கட்டுரையிலோ பதில் கிடைத்து விடும். நிழல் காகம் கதை எனக்கு மிக பிடித்திருந்தது, அதிலும் கீழே உள்ள உங்கள் வரிகள் மிக மிக. .
“ஆமாம் போலி செய்வதே மூலத்தை அறிவதற்கும் அதை கடப்பதற்கும் சரியான வழி” என்று அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமி சொன்னார். “மகனே, இந்த சிவன் விஷ்ணு எல்லாம் யார்? பிரம்மத்தை நாம் நகல்செய்த வடிவங்கள்தானே?”
மிகுந்த வணக்கத்துடன்
பா. சரவணகுமார்
நாகர்கோயில்
***