கரு,நிழல்காகம்- கடிதங்கள்

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1

கரு [குறுநாவல்]- பகுதி 2

அன்புள்ள ஜெயமோகன்,

கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு முறை வாசித்தபிறகுதான் முழுமையாகச் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

முதலில் ஒரு குறிப்பிட்ட அறிவுலகை அறிமுகம் செய்கிறீர்கள். அதிலுள்ள மயக்கங்கள், குழப்பங்கள், கற்பனைகள் ஆகியவற்றுடன்.லாப்சங் ராம்பா போன்ற பாப்புலர் எழுத்தாளரை உருவாக்கியது அந்த கனவுலகம்தான்.அந்த கனவுலகுக்கும் இன்றைய திபெத்துக்குமான உறவையும் தொடர்பையும் சொல்லிவிட்டு மேலே செல்கிறீர்கள். இந்தக்கதை எந்த அஸ்திவாரம் மீது அமைந்துள்ளது என்று காட்டும் ஒரு பகுதி அது

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

இந்தக்கதை நான்கு கதைசொல்லிகளாலானது. முக்தா ப்ரைமரி கதைசொல்லி. அதன்பின் ஆடம் கதை சொல்கிறான். அன்னா அவரே வந்து கதை சொல்கிறார். பிரிகேடியர்ஜெனரல் டக்ளஸ் வைட்பரோஸ் கதை சொல்கிறார்.முக்தாவும் ஆடமும் சொல்லும் கதைகளுக்குள் இரண்டு பேரின் கதைகள் வருகின்றன. ஆன்னியின் கதை, சூசன்னாவின் கதை. முக்தா அந்த இருகதைகளிலும் தன்னுடைய விவரிப்பை சேர்த்துக்கொள்கிறார். முக்தா ஹெலெனா ரோரிச்சின் கதையைச் சொல்லி முடிக்கிறார்.

இத்தனை கதைப்பின்னலும் முரண்பாடுகள் இல்லாமல் ஒரே ஃப்ளோவாக கதையோட்டத்துடன் வந்துகொண்டிருக்கின்றன. ஒருகதையில் விடுபட்டதை இன்னொரு கதையில் நிறைத்துக்கொண்டு கதை முன்னால் செல்கிறது.வாசகன் எந்தக்கதை எவரால் சொல்லப்படுவது என்று தெரிந்துகொண்டு அவனே இக்கதைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்

இந்தக்கதைகளின் மையமாக இருப்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறார் முக்தா. அது இன்றைய திபெத் என்னும் நிலத்தில் மைக்ரோ- அப்ஸ்ட்ராக்ட் வடிவில் எஞ்சியிருக்கும் ஒரு கனவு. உண்மையில் இருக்கிறதா என்றால் அது என் நம்பிக்கை என்று அவரே சொல்லிவிடுகிறார். ஆன்னி அங்கே செல்லும்போது ஒரு மிஸ்டிக் அனுபவத்தை அடைகிறார். சூசன்னா அதே அனுபவத்தின் தொடர்ச்சியை அடைகிறார். ஹெலெனா ரோரிச்சும் அடைகிறார். மூன்று அன்னைகள். அவர்கள் அடையும் மிஸ்டிக் அனுபவத்தின் மூலமாக இருக்கிறது ஷம்பாலா என்ற நிலம்.

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

அது ஒரு கூட்டுக்கனவு. சென்றநூற்றாண்டின் மிகப்பெரிய கனவு அது. அந்த Night walkers and mystery mongers வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் இருந்து அது உருவாகி வந்தது. அந்த ஷம்பாலா என்ற கனவை தொட்டு நின்று அப்படி சென்றகாலத்தில் இருந்து ஒரு கனவின் மிச்சம் இங்கே வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சென்ற யுகத்தின் மிச்சம்தான் ஷம்பாலா. அப்படியென்றால் இந்த Night walkers and mystery mongers வாழ்ந்த காலகட்டத்தின் மிச்சம் இன்றைக்கும் இருக்கவேண்டும் அல்லவா?

சென்றகாலகட்டத்தின் துளி நம்மிடம் காத்திருக்காமல் நாம் எப்படி வாழமுடியும்? மீட்பும் நோயும் உடலிலேயே மைக்ரோகுரோஸம் ஆக இருக்கமுடியுமா? அதுபோல வரலாற்றிலும் இருக்குமா? இப்படி ஒன்றன்மீது ஒன்றாக கேள்விகளை எழுப்பிச்செல்கிறது கதை. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கேள்விகளுடன் செல்கிறது. வாசகர்கள் எங்கே எதற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது அவர்களின் தேடலைப் பொறுத்தது.

கடைசியாக ஒன்று, இந்தக்கதையிலேயே இதெல்லாமே ஒருவகையான Fantasy என்னும் எண்ணம் உங்களுக்கு இருப்பதைக் காண்கிறேன். நீங்கள் சொல்லாவிட்டாலும். அப்படி இல்லை. ஷம்பாலா திபெத் பௌத்தம் பற்றி நான் சொல்லவரவில்லை. ஆனால் வேறு பலவிஷயங்கள் உள்ளன. எனக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு.தனியாக எழுதியிருக்கிறேன்

சுவாமி

***

http://www.roerich.org/roerich-writings-shambhala.php

Nicholas Roerich and the Search for Shambhala

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

ஷம்பாலா என்ற மையம்தான் கதை. அதிலிருக்கும் கனவு, எதிர்பார்ப்பு அதுதான் கதையை நிகழ்த்துகிறது. அங்கிருந்து மீட்புவரும் என்ற நம்பிக்கை. அல்லது மனிதனால் அங்கே செல்லமுடியும் என்ற நம்பிக்கை. அது ஒரு மாபெரும் collective fiction.

ஆனால் எனக்கு அந்தக்கதைக்குள் இருக்கும் மனிதகதைகள் முக்கியமானவையாக பட்டன. சூசன்னாவுக்கும் பெட்ரூஸுக்குமான காதல். அதிலுள்ள ஆட்கொள்ளல். கூடவே கசப்பு பகைமை. பெட்ரூஸ் காணாமலாகும் அன்று அவருக்கும் சூசன்னாவுக்குமான உரையாடல் மிகமுக்கியமானது. ஏசுவுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர் சாத்தானிடம் காதல்கொள்வதன் கதைதானே அது? விசித்திரமான ஒரு காதல்கதை.

ஆனால் ஆன்னி அப்படி இல்லை. குற்றவுணர்ச்சியால் அவதிப்படுகிறார். அவருக்கு ஷம்பாலாவில் இருந்து உதவிகிடைக்கிறது. ஆனால் திபெத் மீதான படையெடுப்பை அவர் ஆதரித்து உதவியும் செய்கிறார் இன்னொரு கதை சார்ல்ஸுடையது. தாயன்பை அறியாத குழந்தைக்கு ஷம்பாலாவிலேயே கூட அமைதி இல்லை. அவன் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான்

எஸ். முரளி

***

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

அசிதர் சொல்லும் காகத்தின் கதை வேடிக்கையும் விளையாட்டுமாக ஒரு அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறது.  மனிதவாழ்க்கை என்பது ஒரு பெரிய வேடிக்கை ஆட்டம்தானா? எனக்கு அதில் முக்கியமானதாக தோன்றியது இரண்டு வரிகள். துறவு என்பது வாழ்க்கையை நடிப்பது என்ற வரி. துறவி கொஞ்சம் விலகிநின்று வேடிக்கைபார்த்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதுவரை துரத்தி கொத்திய லௌகீகம் என்னும் காக்கா கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறது

இன்னொருவரி நித்யா சொல்வது காக்கா மனிதனுக்கு பித்ருவாக நடிக்கிறது. ஏனென்றால் மனிதர்கள் அதை அப்படி நினைத்துவிட்டார்கள். வேடிக்கையும் நையாண்டியுமாகச் சொல்லப்பட்டாலும் இந்தக்கதையின் பல வரிகள் சீண்டிக்கொண்டே இருந்தன

ஆர்.ராஜசேகர்

***

என் அன்பு ஜெ,

அசிதர் சொன்ன அந்த வித்தியாசமான கதையால் பல்லுணர்வுகளுக்கு ஆட்பட்ட பிற துறவிகளைப் போலவே நானும் ஆட்பட்டேன்.

கலை என்பது நடிப்பு. சரி. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆமாம் தான். ஆனால் நான் அதிர்ந்தது இந்த வார்த்தைகளால் தான். “துறவு என்பதும் வாழ்கையில் வேறு ஒரு வகையில் நடிப்பது தான்”. இங்கு தான் கேள்விகள் பெருகியது என்னுள். அப்படியானால் இல்லறம் என்பதும் நடிப்புதானே!. மனைவி என்பதும், காதலி என்பதும், நல்ல மாணவி என்பதும், இன்னும் பிறவும், யாவும் நம்பப்படும் வரை நடிக்கப்படும் ஓர் விளையாட்டல்லவா. நம்புவது நின்று போகையில் அது சார்ந்தோருக்கு அர்த்தமற்றதாகி விடுகிறது. அதை நம்பவைக்கவே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

குலக்கடமையாக, பிரபஞ்ச விதியாக, ஆணையாக நமக்கு அளிக்கப்படும் தண்டனைகள் இருக்கத்தான் செய்கின்றன. காகம் கொத்துவதைத் தாண்டிய, கண்களால் அறிய இயலா பிரபஞ்சக் குட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவே. துன்பங்களாக வந்து நம்மை ஆட்டுவிக்கின்றனவே. அவற்றை கடப்பது எங்ஙனம் என்று நீங்கள் சொல்லித் தந்தாற்போலிருந்தது. வா! வந்து என்னைக் குட்டு என்ற ஓர் சரணாகதி. வலிப்பது போல் நடிப்பதன் மூலமே அதன் செயல் முழுமை பெறுகிறதென்றால், துன்பம் வந்தால் துக்கமடைந்து அழுது இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுவதே துன்பத்தை முடித்து வைப்பதற்கான வழியாகக் கண்டுகொண்டேன். என்ன செய்ய.? துன்பம் தவிர்க்க முடியாதது ஆயிற்றே. அதை ஏற்றுக் கொள்வதன் மூலமே கடந்துவிடலாம் என்று எடுத்துக் கொண்டேன் ஜெ.

இறுதி வரிகள் ஒரு சிரிப்போடு, சிந்தனையையும் உதறிவிட்டுச் சென்றது. பெரும்பாலன விசயங்கள் நாம் நம்புவாதாலேயே நடிக்கப் படுகின்றன. என் சிற்றப்பா சிகிரெட் பிடிப்பார், மது அருந்துவார். ஆனால் அது எனக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார். ஏனெனில் சிறு வயதில் அவர் என் ஹீரோ. அப்படி நான் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்ததாலேயே அவர் என் முன்பு எதுவும் செய்ததில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அதன்பின் அவர் நடிப்பதில்லை. அது போலவே எனக்கு பிடித்தமான நண்பர் ஒருவர் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசுவார். குழுவாக நாங்கள் படிக்க உட்காரும்போது பலரும் சொல்வார்கள் ‘அவனைப் பற்றி உனக்குத் தெரியாது; இருப்பதிலேயே மோசம் அவன்’ என்று. ஆனால் அவன் என்னிடம்/என் முன்பு அப்படியில்லை. காரணம் நான் நம்புவதாலேயே நடித்திருக்கிறான். இன்னும் அனைத்து உறவுகளும், நபர்களுக்குத் தக்கவாரு இருப்பதாக உணர்கிறேன். நாம் நம்புவதால் அப்படி இருக்கிறார்கள். சில சமயம் நம்மை சிலர் நம்புவதால் நாம் அப்படி இருக்கிறோம்.

அய்யோ நான் இதையெல்லாம் யாரிடம் போய் சொல்வேன். உங்களைத் தவிர கேட்க அளில்லை அதனால் உங்களுக்கே எழுதுகிறேன். நீங்கள் கேட்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.

அன்புடன்

இரம்யா

***

முந்தைய கட்டுரைகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘பிறசண்டு’ [சிறுகதை]