பொன்னீலன்

 

பொன்னீலன் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் மகளும் மனைவியும் உடனுள்ளனர். சிலநாட்களில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்படும். பெரிய சிக்கல் ஏதுமில்லை.

சென்றசில நாட்களில் அவர் ஒருசிலரால் கடுமையாக வசைபாடப்பட்டு துன்புற்றார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய இயல்புக்கு அந்த வசைபாடல்களை அவர் கொஞ்சம் உணர்ச்சிகரமாகவே எடுத்துக்கொள்வார். அவருடைய கட்சிiநண்பர்கள், முகநூல் மார்க்ஸியர் பலரே அவரை அத்துமீறி தாக்கினார்கள் என்றும் அதில் ஒருசாராரிடம் மதவெறியே மிகுந்திருந்தது என்றும் கேள்விப்பட்டேன்

அதற்குக் காரணமாக அமைந்தது கல்கியில் பொன்னீலன் என்னைப்பற்றி எழுதிய சிறு குறிப்பு. என் எழுத்தைப் பாராட்டி அவர் எழுதியிருந்தார். அதை இன்றைய முகநூல்மார்க்சியர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் மார்க்ஸியம் என்றால் நாவார வசைபாடுவது என்று புரிந்துகொண்டவர்கள்.

அடிப்படையில் இதிலுள்ளது தலைமுறை இடைவெளி. பொன்னீலனுடைய தலைமுறை தூயமார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டது, அதற்காக வாழ்க்கையை அளித்தது. கூடவே தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையான ‘சான்றோர் மரபைச்’ சேர்ந்தவர் அவர். அவருடை மார்க்ஸியம் அவ்விரு பண்பாட்டுக்கூறுகளின் கலவை

ஆகவேதான் அவரால் திருமூலரையோ வள்ளலாரையோ ஐயா வைகுண்டரையோ மார்க்ஸியத்துடன் இயல்பாக இணைத்துக் கொள்ளமுடிகிறது. அவருக்கு எதிர்மறைக்கூறுகள் இல்லை. எவருடனும் காழ்ப்புகளும் தனிப்பட்ட விலக்கங்களும் கிடையாது. மேலும் அவருடைய தலைமுறையில் மார்க்சியம் மெய்யாகவே ஒரு புதிய உலகை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அது ஒரு மக்களியக்கமாகவும் திகழ்ந்தது.

அவருடைய அடுத்த தலைமுறைக்கு மார்க்ஸியத்தின் புத்துலகக் கனவுகள் உண்மையில் கிடையாது. அதெல்லாம் வெறும்பேச்சு என அவர்களுக்கு ஆழத்தில் நன்றாகவே தெரியும். சாதி,மத நிலைபாடுகளுக்கும் தனிப்பட்ட காழ்ப்புகளுக்கும் மார்க்ஸியம் ஒரு திரை மட்டும்தான் அவர்களுக்கு. அவர்களால் காழ்ப்பின்றி செயல்பட முடியாது.அக்காழ்ப்பின் நஞ்சை அவர்கள் தங்கள் மூத்தவர்களுக்கும் அளிப்பார்கள். அவர்கள் எத்தகைய பெரியவர்கள், தியாகிகளாக இருந்தாலும்.

இது உண்மையில் குறுங்குழுக்களின் பண்பாடு. மார்க்ஸியக் குறுங்குழுக்களில் இப்படி மாறிமாறி கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் மனநிலைதான் நிலவும். அவர்களின் தலைவர்களும் மூத்தவர்களும் ஒரு கட்டத்தில் அடுத்த தலைமுறையினரால் துரோகிகளாக முத்திரைகுத்தப்படுவார்கள்

கம்யூனிஸ்டுகள் இன்று அகன்றுவிரிந்த கட்சி என்பதிலிருந்து குறுங்குழுவாக தங்களை மாற்றிக்கொண்டே செல்கிறார்கள்போல தோன்றுகிறது. கட்சிக்கு வெளியே இன்று இடதுசாரிகளாக அறியப்படுபவர்கள் பலர் பல்வேறு உளச்சிக்கல்களை மார்க்ஸியத்தின் பெயரால் முகநூலில் கொட்டிக்கொண்டிருக்கும் சிறியமனிதர்கள்.

பொன்னீலனுடன் எனக்குள்ள உறவு முப்பதாண்டுக்கால நீட்சி கொண்டது. அவரை சுந்தர ராமசாமியின் நண்பர் என்றுதான் எனக்கு தெரியும். 1988 ல் சுந்தர ராமசாமியின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். அன்று அந்த ‘சபையில்’ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களில் பொன்னீலன் மட்டும்தான் மார்க்ஸியர்

சுந்தர ராமசாமி,எம்.எஸ். போன்றவர்களுடன் பொன்னீலனுக்கு இருந்த உறவு என்பது கட்சி, அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. அரசியல்ரீதியாக கடுமையான முரண்பாடுகளுடன் வாழ்நாள் முழுக்க நீடித்த உறவு அது

1992 ல் பொன்னீலனின்  ‘புதியதரிசனங்கள்’ நாவல் வெளிவந்தபோது நடந்த விமர்சனக்கூட்டத்தில் அவருடைய அழைப்பின்பேரில் தர்மபுரியில் இருந்து வந்து பேசியிருக்கிறேன்.நான் நாகர்கோயிலில் எடுத்த எல்லா விழாக்களிலும் அவர்தான் தலைமை. எம்.எஸ், நாஞ்சில்நாடன், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் என அனைவருடைய பாராட்டுவிழாக்களையும் அண்ணாச்சியின் தலைமையில்தான் நடத்தியிருக்கிறேன்.

அது ஒரு மங்கலம் என்பதே என் எண்ணம். பொன்னீலன் வந்து மனம்விட்டு பாராட்டிப் பேசுவார். சற்று கூடுதலாகவே பாராட்டுவார், நம் தகுதிக்கு மீறிய பாராட்டு என நமக்கே தெரியும்தான், அது அவருடைய தலைமுறையின் வழக்கம். அதை ஒரு பெரியமனிதரின் வாழ்த்தாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

அவர் வந்து வாழ்த்தி பாராட்டிச் சென்றவர்கள் எல்லாம் மார்க்ஸியர்கள் அல்ல, சொல்லப்போனால் வேதசகாயகுமார் போன்றவர்கள் கடுமையான மார்க்ஸிய எதிர்ப்பாளர்கள். மட்டுமல்ல, அவர்கள் பொன்னீலனையே கடுமையாக எதிர்த்தவர்கள். அந்தப்பாராட்டுக்கு பிறகும் எதிர்ப்பவர்கள். அது அவருக்கு எப்போதுமே ஒரு பிரச்சினை அல்ல.

அதைத்தான் நான் தமிழின் சான்றோர்மரபு என்கிறேன். அது கருத்தியல் செயல்பாடுகளுக்கு அப்பால் மனித உறவை நிறுத்துவது. அத்தனைக்கும் அப்பால் மனிதனோடு மனிதன் பேச இடமளிப்பது. கணக்குவழக்குகள் அற்றது. ஒருபோதும் பண்பின் எல்லை தாண்டி எதையும் சொல்லாதது. எந்நிலையிலும் அன்பின், அரவணைப்பின் மொழியில் பேசுவது.

அந்த சான்றோர் மரபு ஜீவாவிடம் இருந்தது. ஜெயகாந்தனிடம் இருந்தது.  ஞானியிடம் இருந்தது.கந்தர்வனிடம் இருந்தது. பவா செல்லத்துரையில் நீடிக்கிறது.அது இங்கே ஒரு பெரிய பண்பாட்டு உரையாடலை உருவாக்க தொடர்ச்சியாக முயன்றது. ஒருங்கிணைப்பதன் வழியாக ஒரு அறிவுச்செயல்பாட்டை உருவாக்க முயன்றது. பொன்னீலன் அதன் ஒரு முகம்.

நான் மார்க்ஸியக் கட்சிகளின் நேரடி ஆதரவாளன் அல்ல.மார்க்ஸியத்தின் வரலாற்று ஆய்வுநோக்கை ஏற்றுக்கொண்டவன். அதன் அடிப்படை அறவியலை ஏற்றுக்கொண்டவன். அதன் இந்திய அரசியல்ச் செயல்பாட்டை விமர்சனத்துடன் அணுகுபவன். அதில் ஏதும் ரகசியம் இல்லை. மிகமிக விரிவாக எழுதியிருக்கிறேன்

பொன்னீலன் உறுதியான கட்சி ஆதரவாளர். அவர் என் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல. அதை மேடைகளிலேயே சொல்லிவிட்டே மேலே பேசுவார். அது எவ்வகையிலும் நான் அவர்மேல் கொண்டுள்ள பணிவுகலந்த மதிப்பையோ அவர் என்மேல் கொண்டிருக்கும் அன்பையோ மாற்றப்போவதில்லை

எழுத்தாளன் விமர்சிக்கும் தகுதி கொண்டவன். மெய்யான மார்க்சிஸ்டுகளுக்கு அந்த புரிதல் இருப்பதனால்தான் கேரளத்தின் முதன்மையான மார்க்ஸிய அரங்குகளுக்கு நான் அழைக்கப்படுகிறேன். கேரளத்தின் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான தேசாபிமானியின் எழுபத்தைந்தாவது ஆண்டு கருத்தரங்கையே நான்தான் தொடங்கிவைத்து உரையாற்றினேன்

இந்த வசைகளை நான் எதிர்பார்த்தேன். பொன்னீலன் அந்தப் பாராட்டை எழுதியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். சென்ற சிலநாட்களாகவே தனிமையால் சோர்ந்த நிலையில்தான் இருந்தார். எப்போதும் நண்பர்களுடன், இளவல்களுடன் இருந்த பெருவாழ்வு அவருடையது. அச்சோர்வுடன் இந்த தாக்குதல்களும் சோர்வை உருவாக்கியிருக்குமோ என்று ஐயம் எழுந்து என்னை வருத்தம் அடையச் செய்கிறது.

பொன்னீலன் நலம்பெறவேண்டும்.

முந்தைய கட்டுரை‘பிறசண்டு’ [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–65