பகுதி ஆறு : படைப்புல் – 7
பிரத்யும்னனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்த கிருதவர்மனிடம் நான் “தந்தையே, தாங்கள் நேரில் செல்லத்தான் வேண்டுமா? ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா?” என்றேன். அவர் “அல்ல, அன்று அவர்கள் இருந்த உளநிலை வேறு. இன்று ஒவ்வொருவரும் நகரிழந்த நிலையில் இருக்கிறார்கள். ஒரு நகருள் திகழும் நெறிகள் அந்நகரைவிட்டு வெளியேறியதுமே மறைந்துவிடுகின்றன. ஓர் இல்லத்தில் வாழ்பவர்கள் அதைவிட்டு வெளியேறி தெருவில் வாழத்தொடங்கினால் ஓரிரு நாட்களிலேயே நாடோடிகளின் இயல்பை கொள்வதை நீ பார்க்கலாம்” என்றார்.
“இங்கு இப்போது எந்த அரச நெறியும் திகழாது. இங்கு மேலெழுந்து ஆள்வது ஃபானுவின் ஐயமும் அச்சமும் மட்டும்தான். இத்தருணத்தில் எவரும் தன்னை மதிக்கமாட்டார்கள், தன்னைக் கடந்துசென்று படைகொள்வார்கள் என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைக்கிறது. இன்று அவன் இரவும்பகலும் தன் கருவூலத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறான். அதை எவர் வேண்டுமானாலும் கைப்பற்றிக்கொள்வார்கள் என்ற அச்சமே துயிலவிடாது தடுக்கும். இப்போது எவர் எதைச் சென்று சொன்னாலும் கருவூலத்தை கைப்பற்றும் முயற்சி என்றே அவனுக்குத் தோன்றும்” என்றார் கிருதவர்மன். “அந்த உளநிலையில் அவன் இருக்கையில் அதற்கு எதிரான எதிர்வினைகளாகவே பிற உளநிலைகள் அனைத்தும் இருக்கும்.”
“எனில் பிரத்யும்னனையும் கிருஷ்ணையையும் சென்று பார்ப்பதில் பொருளில்லை அல்லவா?” என்று நான் கேட்டேன். “அல்ல, கூட்டான முடிவென்பது ஃபானுவைச் சற்று தயங்கவைக்கும். அவன் கிளம்பிச்செல்லவேண்டும் என்று ஆணையிட்ட பிறகு, அதை தவிர்த்து பிரத்யும்னனையும் கிருஷ்ணையையும் பின் தொடரும் யாதவர்கள் இங்கு நின்றுவிட்டால் மூன்றில் ஒரு பங்கினரே அவனுடன் கிளம்புவார்கள். அது மெய்யாகவே அவன் மூன்றிலொரு பங்கினருக்கு மட்டுமே தலைவன், எஞ்சியவர்கள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கண்கூடாக காட்டியதாகவே அமையும். ஆகவே அவன் அதை எண்ணி தயங்குவான். நாம் அதை எடுத்துக் கூறி அவனுக்கு உணர்த்தினால் அவனால் புரிந்துகொள்ள முடியும்” என்று கிருதவர்மன் கூறினார்.
நான் அவருடன் சென்றேன். அந்தப் பொழுதில் துவாரகையை ஒட்டிய அந்த மணற்பரப்பு முழுக்க மக்கள் புயலுக்குப் பின் சருகுக்குவியல் என நிறைந்திருந்தனர். சருகின் வண்ணம்தான். அழுக்கும் மண்ணும் மட்டும் அல்ல மானுட உடலே கூட சருகின் வண்ணமே. பிரத்யும்னன் தன் படைகளுக்கு நடுவே மணலில் இழுத்துக் கட்டிய கூடாரங்களுக்கு வெளியே சுற்றத்துடன் அமர்ந்திருந்தார். வெயில் படாமலிருக்க அங்கு நின்றிருந்த முள்மரங்களை இணைத்து மூங்கிலை வைத்து அவற்றுக்கு மேல் மூங்கில் தட்டிகளை அடுக்கி குடில்போல் கட்டியிருந்தார்கள். கீழே மணல்மேல் விரிக்கபட்ட கம்பளத்தில் அவர் அமர்ந்திருக்க சூழ அவருடைய இளையவர்கள் அமர்ந்திருந்தனர்.
தொலைவிலேயே அவர்களின் உடல்மொழியைக் கொண்டு உளநிலையை உணரமுடிந்தது. பிரத்யும்னன் பதற்றம் கொண்டவராக இருந்தார். அவர் இளையவர்களில் மூவர் ஃபானுவுடன் சென்று சேர்ந்திருந்தனர். இருவர் கொல்லப்பட்டுவிட்டனர். சேர்ந்து அமர்கையில் கண்ணெதிரே தன் உடன்பிறந்தார் பாதியெனக் குறைந்திருப்பதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களில் எவர் தனக்கான கத்தியுடன் இருப்பார் என்று அவர் அகம் ஐயமும் கொண்டிருந்தது. ஆகவே படைத்தலைவர்களால் சூழப்பட்டவராக படைக்கலத்தை மடியிலேயே வைத்திருப்பவராக ஐயத்துடன் சூழ விழியோட்டிக்கொண்டிருப்பவராக இருந்தார்.
அவருக்கு நேர்க்குருதி மரபினனாகவும் இளவரசனாகவும் இருந்த அநிருத்தன் அங்கே அவருடன் இல்லை. அவருடைய படைப்பிரிவுக்குள்ளேயே அவர்கள் தனியாக பிறிதொரு இடத்தில் இருந்தனர். தந்தைக்கும் மைந்தனுக்கும் இடையே எக்கணத்திலும் பூசல் நிகழும் என்று சொல்லப்பட்டது. “அநிருத்தனை தனியாக சந்திக்கவேண்டுமா?” என்று நான் கிருதவர்மனிடம் கேட்டேன். “தேவையில்லை என நினைக்கிறேன். முரண் என ஏதேனும் தெரிந்தால் சந்திக்கலாம். ஆனால் நமக்கு பொழுதும் இல்லை” என்றார் கிருதவர்மன்.
கிருதவர்மனும் நானும் அவரை சந்திக்கவேண்டும் என விரும்புவதை ஏவலரிடம் அறிவித்தோம். அவன் சென்று அவரிடம் தெரிவித்தபோது தொலைவிலேயே பிரத்யும்னன் மாறி மாறி வினாக்களை கேட்டும் அவ்வப்போது எங்களைப் பார்த்தும் குழம்பிக்கொண்டிருப்பதை பார்த்தோம். கிருதவர்மன் சலிப்புடன் “சந்திப்பதற்கு எதற்கு இவ்வளவு தயங்குகிறான்?” என்றார். நான் எரிச்சலுடன் “நாம் நேராகச் சென்று பார்ப்போம்” என்று நடந்து செல்லத்தொடங்கினேன். கிருதவர்மன் “இல்லை, இங்கு கோட்டையும் அரண்மனையும் இல்லை. ஆயினும் கோட்டையையும் அரண்மனையையும் நாம் கற்பனையில் உருவகித்துக் கொண்டாலொழிய இங்குள்ள அரசமுறைமைகளை கடைபிடிக்க இயலாது. அரசமுறைமைகள் கடைபிடிக்கப்படாவிட்டால் அவன் அரசன் அல்லாமல் ஆகிவிடுவான். அரசன் இல்லாத சூழலில் எவரும் வாழ இயலாது” என்றார்.
நான் அங்கே மாளிகைக்கதவுகளையும் இடைநாழிகளையும் பார்க்கத்தொடங்கினேன். அப்போதுதான் அங்குள்ள ஒவ்வொரு ஏவலரும் அங்கே ஓர் அரண்மனையை உளப்படமாக வரைந்திருப்பதை கண்டேன். பிரத்யும்னன் வெட்டவெளியில் அமர்ந்திருந்தாலும் கூட அவர் ஏவலன் அவன் வாசல் என நினைத்திருந்த ஓர் எல்லைக்கு வெளியிலேயே நின்றான். அதற்கு அப்பால் செல்லும்போது காலெடுத்து வைத்து மெல்ல தயங்கி கதவைத் திறப்பவன்போல உடல் அசைவு காட்டி மேலே சென்றான். வணங்கி மீண்டு வரும்போதும் அவன் அந்த கற்பனையான கதவைத் தாண்டி வருவதை காணமுடிந்தது.
சில கணங்களில் அங்குள்ள அனைவருமே கோட்டைகளை, காவல்மாடங்களை, தெருக்களை, இல்லங்களை நடித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். சூழவும் நோக்க நோக்க என் வியப்பு விரிந்துகொண்டே சென்றது. இல்லாத ஒன்று இருப்பவர்களினூடாக அங்கே திகழ்ந்து வந்தது. புரவிகளும் யானைகளும் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் வந்தன. காவலர்களும் ஏவலர்களும் உருவாயினர். அரண்மனை என்பது பொருளில் இல்லை, உள்ளத்தில் இருக்கிறது என்பதை அப்போது கண்டேன். மறுகணம் ஒரு புன்னகையுடன் எண்ணம் எழுந்தது, கால் நோக்கி சிறுநீர் கழிக்கும் நாயின் அருகே அது தன் உள்ளத்தில் கண்ட மரம் ஒன்றிருக்கிறது என்று முன்னர் என் ஆசிரியர் கூறினார். அவர் விளையாட்டாக அதை உரைத்திருந்த போதிலும்கூட அது என் உள்ளத்தில் பல தளங்களில் விரிந்த ஒன்றாக இருந்தது. சில தருணங்களில் அது தெய்வத்தை புரிந்துகொள்வதற்கான உருவகமாகவே ஆகிவிட்டிருந்தது.
ஏவலன் வந்து பிரத்யும்னனை சந்திக்க ஒப்புதல் கிடைத்திருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். காவல்நிலைகளையும் கதவுகளையும் கடந்து சென்று பிரத்யும்னனை அணுகி வணங்கி முகமன் உரைத்தோம். பிரத்யும்னன் வணங்கி அமரும்படி கைகாட்டினார். அமர்ந்ததும் இருவரும் அனைத்து சொற்களையும் அரசமுறைப்படியே உரைத்தனர். பின்னர் கிருதவர்மன் நிகழ்வினை சுருங்க சொன்னார். “பிரபாச க்ஷேத்ரத்திற்குப் போவதில் பிழையென ஒன்றுமில்லை. எனினும் இவ்வண்ணம் ஒரு முற்சொல் உள்ளது. அது பொய்யென்றாகலாம். ஆயினும் அவ்வண்ணம் ஒன்று உள்ளது என்பதே உகந்ததல்ல” என்றார் கிருதவர்மன்.
“ஒரு இல்லத்தில் பூசல் நிகழக்கூடுமென நிமித்திகரின் சொல் இருந்தால் அங்குள்ள அனைவரும் இயல்பாக அனைத்து சொல் செயல் வழியாகவும் பூசல் நோக்கி செல்வதை பார்க்கலாம். ஓர் அவையில் உளவிரிசல் நிகழுமென்று முன்னரே ஐயமிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் அவ் உளவிரிசல் நோக்கியே ஒழுகும்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆகவே நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்வது இன்று உகந்ததல்ல. மேலும் இத்தகைய முடிவுகளை நாம் மிக எண்ணி எடுக்கவேண்டும். சிறந்த பிற இடங்கள் உள்ளனவா, வேறு எங்கேனும் மேலும் உகந்த எதையேனும் நாம் கண்டடைய முடியுமா என்ற விரிவான தேடலுக்குப் பின்னரே கிளம்பவேண்டும்.”
ஆனால் பிரத்யும்னன் எதையும் செவி கொள்ளவில்லை. ஆர்வமில்லாமல் தலையை அசைத்து “தாங்களே முடிவை எடுக்கலாம். எங்கு சென்றாலும் எனக்கு ஒப்புதலே. உண்மையில் நான் பிரபாச க்ஷேத்ரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனது படைகளுடன் கிளம்பி விதர்ப்பத்திற்கே செல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார். “விதர்ப்பத்திற்குச் செல்வது உகந்த எண்ணமல்ல. அங்கு தாங்கள் அரசர் அல்ல. விருந்தினராக அரசர் ஒருவர் பிறிதொரு நாட்டில் நெடுநாள் இருக்கமுடியாது” என்றார் கிருதவர்மன். “ஆம், ஆனால் நான் மாதுலர் ருக்மியிடம் விதர்ப்பத்தின் ஒரு நிலப்பகுதியை விலைகொடுத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான செல்வம் அவரிடம் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக அவர் நிலத்தை கொடுக்கட்டும். அங்கு ஒரு அரசை நான் அமைத்துக்கொள்கிறேன். பின்னர் எனக்குரிய நிலத்தை நான் வென்று பெறுவேன்” என்றார் பிரத்யும்னன்.
“இன்று பிரபாச க்ஷேத்ரத்திற்கு வந்தால்கூட ஒரு புதிய சதுப்புநிலத்தில் பிறிதொருவரின் இளையவனாக இருப்பதில் பெரிய பொருளில்லை” என்றார் பிரத்யும்னன். “ஆனால் நாம் எடுத்த முடிவு ஃபானுவை அரசராக்குவதென்று” என்று கிருதவர்மன் சொன்னார். “மெய். ஆனால் அது துவாரகையின் அரசர் என்னும் நிலை. அன்று துவாரகை மண்ணில் இருந்த மாபெரும் நகர் என்று இருந்தது. இன்று நம்மிடம் நகரில்லை. ஒரு சதுப்பை பங்குவைப்பதற்காக நான் எதற்கு இவருடன் இருக்கவேண்டும்?” என்றார். “மெய்தான்” என்று கிருதவர்மன் சொன்னார். “நீ கிளம்புவதாக இருப்பினும் அது ஒருவகையில் நன்றே. ஆனால் எதுவாயினும் நாம் இங்கு ருக்மி வந்துசேர்வது வரை காத்திருப்போம். அதுவே முறை.” பிரத்யும்னன் “ஆம், எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றார்.
பிரத்யும்னனின் முடிவை அங்கிருந்து கிளம்பிச்செல்லும்போது கிருதவர்மனும் நானும் எங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. சாத்யகி அப்போதும் சாம்பனை சந்திக்க கிளம்பியிருக்கவில்லை. அவர் எங்களுக்காக காத்திருந்தார். அவரை சந்தித்ததும் கிருதவர்மன் பிரத்யும்னனின் எண்ணத்தை சொன்னார். சாத்யகி “அவர் கிளம்பிச்செல்வது எவ்வகையிலும் உகந்த முடிவல்ல. குறிப்பாக யாதவருக்கு” என்றார். “நாம் சென்று நின்றிருக்கப்போவது ஒரு திறந்தவெளியில், புதுநிலத்தில். எந்தப் புதுநிலமும் எவருக்கும் உரியதாக எளிதில் ஆவதில்லை. அங்கு எவருக்கேனும் ஏதேனும் உரிமை இருக்கும். அவர்கள் கிளம்பிவருவார்கள். போரிடாது வெல்லாது எந்த நிலத்தையும் அடைய முடியாது. போரிட்டு வென்ற நிலத்திற்கு மட்டுமே மக்கள் மனதில் மதிப்பும் இருக்கும். அநிருத்தனும் பிரத்யும்னனும் இல்லாமல் ஃபானுவால் ஒரு புதுநிலத்தை வென்று தனக்கென முடிசூட்டிக்கொள்ள இயலாது.”
“ஆனால் நிலம் வென்று மூத்தவருக்கு கொடுங்கள் என்று நாம் எப்படி பிரத்யும்னனிடம் கேட்க முடியும்?” என்றார் கிருதவர்மன். “பிரத்யும்னன் ருக்மிக்கு செல்வத்தை அளித்திருக்கிறார். பெற்ற செல்வத்தை எவரும் திருப்பிக்கொடுக்கமாட்டார்கள். அதற்கு நிகராக ஒரு பொருளைப் பெறுவதே எளிது” என்றார். சாத்யகி “ஆம்” என்றார். “ருக்மி துவாரகையே தனக்கு வேண்டுமென்று விரும்பியவர். இன்று அவர் விரும்பியது போலவே இளைய யாதவரின் பெயர் எஞ்சாது துவாரகை அழிந்துவிட்டது. இளைய யாதவரின் மைந்தரை அழைத்துச்சென்று தன் நிலத்தில் ஒரு பகுதியை அவருக்கு அளித்து அங்கு ஓர் அரசை உருவாக்கி இளைய யாதவரின் பெயர்கூட இல்லாத மணிமுடியொன்றை அங்கு எழச் செய்தால் ருக்மி வெற்றி அடைந்தவராவார். அதை அவர் விரும்பத்தான் செய்வார்” என்று கிருதவர்மன் சொன்னார்.
“எனில் சாம்பனை நாம் உடனழைத்துச் செல்கிறோமா?” என்றார் சாத்யகி. “சாம்பன் களிமகனாயினும் கட்டற்றவனாயினும் போர்க்களத்தில் வெல்பவன். அசுரர்கள் புதுநிலத்தை வென்று கோல்கொள்வதில் இயல்பான ஊக்கமும் பயிற்சியும் கொண்டவர்கள். புதுநிலத்தில் அவர்கள் வெல்லலாம்” என்றார் கிருதவர்மன். சாத்யகி “ஆனால் அது நாம் அடையும் புதுநிலம் மேய்ச்சல் நிலமா காடா என்பதைப் பொறுத்தது. மேய்ச்சல் நிலமெனில் யாதவர் கை ஓங்கும். காடெனில் அசுரர் கை ஓங்கும்” என்றார். கிருதவர்மன் “நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. மேய்ச்சல் நிலத்தில் புல்வெளிகளும் நீர்நிலைகளும் நமக்கு உகந்தது. ஆனால் பிறரால் எளிதில் தாக்கத்தக்கது. படைக்கலம் இல்லாது வெட்டவெளியில் நின்றிருப்பது அது” என்றார்.
“புல்வெளியில் ஆ புரக்கலாம். ஆனால் சில நாட்களேனும் எவருக்கேனும் கப்பம் கொடுத்தே ஆகவேண்டும். அல்லது கடும்போரிட வேண்டும். காட்டில் வாழ்பவர்களுக்கு காடே கோட்டையாகிறது. காட்டை தெரிவு செய்வதா அல்லது மேய்ச்சல் நிலத்தையா என்பதை பிறகு முடிவெடுக்கலாம். கிருஷ்ணை என்ன சொல்கிறார் என்பதை அவரிடம் கேட்போம்” என்று சாத்யகி சொன்னார். “கிருஷ்ணை ஒருபோதும் புல்வெளி வாழ்வை விரும்பமாட்டார். காட்டையே தெரிவுசெய்வார். எனக்கும்கூட புல்வெளிமேல் ஒவ்வாமை உண்டு. மேயும் விலங்குகளில் மாறாதிருக்கும் அச்சமும் பதற்றமும் எனக்கு அருவருப்பூட்டுவன” என்றார் கிருதவர்மன்.
சாம்பனின் படைப்பிரிவை அடைந்தபோது அங்கு மானுட உடல்களாலான கோட்டை ஒன்று இருப்பதை கண்டேன். எட்டு பேராக படைவீரர்கள் நீண்ட நிரை அமைத்து ஒரு கோட்டையை உருவாக்கியிருந்தார்கள். அந்தக் கோட்டைக்கு வாயிலும், அதற்குள் நெடுஞ்சாலையும் இருந்தது. உள்ளே சென்றபோது நிரைவகுத்த மனித உடல்களாலான அரண்மனை. அவ்வரண்மனைக்கு நடுவே கூடங்கள், அவைகள் ஆகியவை இருந்தன. “எறும்புகளின் வழி இது. அவை உடலாலேயே பாலங்களையும் கோட்டைகளையும் அமைக்கும். உடலே படகும் தெப்பமும் ஆக மாறும்” என்று சாத்யகி சொன்னார்.
எங்கள் வருகையை அறிவித்தபோது சாம்பன் மது அருந்தி துயின்றுகொண்டிருக்கிறார் என்று ஏவலன் கூறினான். நாங்கள் அரசி கிருஷ்ணையை சந்திக்க விழைகிறோம் என்று சொன்னோம். அதையே எதிர்பார்த்துமிருந்தோம். கிருஷ்ணையை சந்திக்கும்பொருட்டு எங்களை அழைத்துச் சென்றான் ஏவலன். அவனுடன் மானுட உடல்களால் ஆன இடைநாழி வழியாக சென்றோம். மானுட உடலால் ஆன வாயிலைக் கடந்து கூடத்துள் நுழைந்தோம். கிருஷ்ணை வழக்கம்போல் தனக்கு வந்த ஓலைச்செய்திகள் அனைத்தையும் தொகுத்து படித்துக்கொண்டிருந்தார். சாத்யகியையும் கிருதவர்மனையும் ஏவலன் அறிவித்ததுமே எழுந்து வந்து கைகூப்பி வணங்கினார். இருவரையும் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
அங்கு மணலை அள்ளி மேடாக்கி பீடங்கள்போல உருக் கொடுத்து, அவற்றுக்கு மேல் கம்பளங்களை விரித்து மெய்யாகவே ஓர் அவை உருவாக்கப்பட்டிருந்தது. அமர்ந்தபோது மிக உகந்த பீடங்களாக அவை இருந்தன. மூங்கில் கழிகள் நடப்பட்டு அனைத்து சுவர்களும் கண்கூடாக வரையறுக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பேரரசி உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். பெண்கள் எங்கும் ஒரே நாளில் அடுமனைகளை உருவாக்கிக்கொள்வதைப்போல அரசியர் எங்கும் சில கணங்களிலேயே அரசை உருவாக்கிவிடுகின்றனர்.
சாத்யகி தன் வருகையின் நோக்கத்தை உரைத்தார். கிருஷ்ணை அதை விழிசரித்து கேட்டிருந்தார். பின்னர் “நானே தங்களிடம் வந்து இதை கூறுவதாக இருந்தேன். இங்கு நாம் சற்று நாட்கள் தங்குவதே உகந்தது. இங்கிருந்து எங்கு செல்லவேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கு நாம் சற்று பொழுதை அளிக்கவேண்டும்” என்றார். “ஏனெனில் நம் எதிரிகள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களில் எவர் நம்முடன் இருக்கிறார்கள் எவர் இப்போது நம்மை வெல்ல முயல்வார்கள் என்பதை உணரக்கூடிய பொழுது இது.”
அந்தக் கோணத்தில் சாத்யகியும் கிருதவர்மனும் எண்ணியிருக்கவில்லை. அவர்கள் வியப்பது தெரிந்தது. “ஒருவேளை நமது எதிரிகள் நம்மை ஆதரிக்கக்கூடும். நண்பர்கள் நம்மை கைவிடவும் கூடும். எந்த நிலத்திற்குச் சென்றாலும் அங்கு நம்மை எதிர்க்கப்போவது யார், நம்முடன் இருக்கப்போவது யார் என்பது தெளிவடைந்த பின்னர் கிளம்புவதே உகந்தது. அறியா நிலத்தில் நின்று நட்பும் பகையும் அறியாது இருப்பதைபோல் இடர் ஏதுமில்லை” என்றார் கிருஷ்ணை. “ஆம், மெய். நாங்கள் இதை எண்ணவில்லை” என்றார் கிருதவர்மன்.
“பிரபாச க்ஷேத்ரத்தைப் பற்றி இப்போதுதான் ஒற்றர்கள் சொன்னார்கள். அது எவ்வகையிலும் உகந்த இடமல்ல. அது கடலோரமாக அமைந்திருக்கிறது, ஆனால் அங்கு ஒரு துறைமுகம் அமைய முடியாது. சேற்றுப்பரப்பு அது. சேற்றுப்பரப்பை எவ்வகையிலும் நம்மால் உருமாற்றமுடியாது. ஓர் இடத்தில் எதனால் சேறு உருவாகிறதோ அங்கே அந்த அடிப்படைகள் இருக்கும் வரை சேறே உருவாகும். சேற்றில் சிறு படகுகள் மட்டுமே வரமுடியும். பெருங்கலங்கள் ஒருநாளும் அந்தக் கரையை அணுகமுடியாது” என்று கிருஷ்ணை சொன்னார்.
“அது புல்வெளி. ஆனால் ஆழமான சதுப்பு. அடியில் பாறை ஏழு கோல் ஆழத்தில் உள்ளது. ஆகவே அங்கு நாம் பெரிய கட்டடங்களை அமைக்கமுடியாது. சென்றதுமே குடில்களைத்தான் அமைக்கமுடியும். அங்கு உறுதியான பாதைகள் அமைய முடியாது. ஆகவே பெரிய சந்தைகள் அமையாது. எவ்வகையிலும் நாம் செழித்து வளர்வதற்கு உகந்த பகுதியல்ல. அங்கு செல்லலாம் என்ற எண்ணம் எவ்வண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்பதே எனது முடிவு. அதை விரிவாக எழுதி சற்று முன்னர்தான் ஃபானுவுக்கு அனுப்பினேன்” என்றார் கிருஷ்ணை.
“அனுப்பிவிட்டீர்களா?” என்றார் சாத்யகி. “ஆம், நான் எனது எண்ணத்தை தெரிவிக்கவேண்டும்” என்றார் கிருஷ்ணை. “ஆனால் தாங்கள் எத்தனை தெளிவாக சொன்னாலும் தாங்கள் சொன்னதனாலேயே அது பொருட்படுத்தப்படமாட்டாது” என்றார் சாத்யகி. “ஆம், நான் அறிவேன். என்னை சிறையிட்ட பிறகுதான் பெருவெள்ளம் அங்கு வந்தது. அந்நகரை ஒழிந்து இங்கு வந்தபோதிலும்கூட அரசரிடமிருந்து எனக்கு சிறைமீட்பு ஆணை வராதவரை நான் சிறையில் இருப்பவளாகவே கருதப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது சொற்களை சொல்லியாகவேண்டும்” என்றார் கிருஷ்ணை.
“எந்த வகையிலும் பிரபாச க்ஷேத்ரம் யாதவர்கள் சென்று குடியேற உகந்ததல்ல” என்று கிருஷ்ணை தொடர்ந்தார். “இன்று யாதவர்கள் சென்று குடியேற உகந்த இடம் காடுதான். ஜாம்பவானின் நிலம் இன்னும் வெல்லப்படாததாகவே உள்ளது. அங்கு மிக எளிதில் ஓர் அரசை அமைக்கமுடியும். ஜாம்பகிரி எனும் மலை அருகே உள்ளது. அது நெடுங்காலமாக எவராலும் குடியேறப்படாதது. மலைகளில் அடுக்கடுக்காக நமது அரசை அமைத்துகொள்வோம். பல வகையிலும் அது உகந்தது. ஏனெனில் ஏற்கெனவே மலைகளில்தான் நமது அரசை அமைத்திருக்கிறோம். அந்தப் பழக்கமும் உளப்பதிவும் நம்மிடம் உள்ளது. நமது புரவிகளும் தேரும் அனைத்துமே குன்றில் அமைந்த நகருக்காக உருவாக்கப்பட்டவை.”
“மேலும் இன்று நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய ஆற்றல் என்பது கருவூலம்தான். எவர் வேண்டுமானாலும் நமது கருவூலத்தை தேடி வரக்கூடும். தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேன்போல அது சூழ்ந்திருக்கும் அனைத்து அரசர்களுக்கும் அழைப்பு. ஒரு தலைமுறைக்காலம் நமது கருவூலத்தை நாம் பாதுகாத்துக் கொண்டோம் எனில் இயல்பாகவே நாம் ஒரு அரசாக ஆகிவிடுவோம். நாம் சந்தைகளை அமைக்கமுடியும். சாலைகளை விரிக்கமுடியும். இன்று நமக்குத் தேவை அணுகமுடியாத ஓர் இடம். வெல்லமுடியாத ஒரு கோட்டை. திறந்த வெளியில் கருவூலத்தை கொண்டு வைப்பதல்ல, எவரும் அணுக முடியாத உச்சத்தில் கொண்டு வைப்பதே இன்று உகந்தது.”
“இது தங்கள் முடிவென்றால் நாங்கள் ஃபானுவிடம் பேசுகிறோம்” என்றார் கிருதவர்மன். “நான் இதை அவருக்கு அனுப்பிவிட்டேன். அந்த ஓலையை இந்நேரம் அவர் படித்துவிட்டிருப்பார். அவர் முடிவெடுக்க தயங்கி இருக்கும் நேரம் இது. உடனே நீங்கள் சென்று அவரிடம் பேசலாம். சற்று வற்புறுத்தினால் அவர் இணங்குவார்” என்று கிருஷ்ணை சொன்னார். “நன்று, அரசி. தங்களின் தெளிவான பார்வை உடனிருந்தால் ஃபானுவுக்கு தாங்கள் பெருமளவுக்கு உதவியாக இருக்கக்கூடும். அதை அவர் உணரவேண்டும்” என்றபின் சாத்யகி கிருதவர்மனுடன் எழுந்தார்.
நாங்கள் வெளிவந்தோம். ”உடனே ஃபானுவை நோக்கி செல்வோம். கிருஷ்ணையின் ஓலை ஃபானுவை மிரள வைக்கும். இத்தனை தெளிவாக எண்ணம் ஓட்டும் ஒருவரை தன் எதிரியாகவே கருதுவார். ஒருபோதும் அவர் அச்சொல்லை ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்று சாத்யகி சொன்னார். கிருதவர்மன் “இல்லை, அவ்வண்ணம் அச்சம் எழுந்தாலும் கூட இத்தருணத்தில் ஒரு முடிவையே அவன் எடுப்பான். அவனால் மற்றொரு கருத்தை எண்ணமுடியாது” என்றார். “அவன் இன்று அஞ்சிக்கொண்டிருப்பது கருவூலத்தைப்பற்றி. வெட்டவெளியில் கருவூலத்துடன் சென்று நின்றிருப்பது சாவுக்கு நிகர் என்று அரசி சொல்லியிருக்கிறார். அந்த வரியிலிருந்து அவனால் வெளியே வரமுடியாது” என்றார்.
ஃபானுவின் அவையை நெருங்கினோம். அங்கு ஃபானு தன் உடன்பிறந்தாருடன் உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தோம். கிருதவர்மனையும் சாத்யகியையும் கண்டதும் ஃபானு அவரே முன்னால் ஓடிவந்து “மூத்தவரே, பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வதாக தெரிவித்திருந்தேன். இன்று சற்று பொறுத்து இங்கு வரும் ருக்மியையும் பிற அரசர்களையும் கண்டு பேசிய பிறகு கிளம்பலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். தங்கள் கருத்தென்ன?” என்றார். “எங்கள் எண்ணமும் அதுவே. அதை சொல்லவே நாங்கள் வந்தோம்” என்று சாத்யகி சொன்னார்.
“நான் ஒன்றை எண்ணினேன், நமது கருவூலமே நமது ஆற்றல். கருவூலத்தை கொண்டுசென்று வெட்டவெளியில் திறந்து வைப்பதைப்போல் அழிவை வரவழைப்பது வேறெதுவும் இல்லை. கருவூலம் உயரமான அணுகமுடியாத இடமொன்றில் இருக்கையில் மட்டுமே நம்மால் வெல்ல முடியும். அதற்கான இடம் ஒன்றை தேர்வோம். அதுவரை இங்கு காத்திருப்போம்” என்றார் ஃபானு. “ஆம், உகந்தது அதுவே” என்றார் கிருதவர்மன்.
ஆனால் அதற்குள் முரசொலிகள் கேட்டன. “என்ன நிகழ்கிறது?” என்று ஃபானு திரும்பிப் பார்த்தார். “எல்லையில் முரசொலிகள்…” என்றான் ஃபானுமான். பிரஃபானு ஓடிவந்து “மூத்தவரே, நம் மக்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை ஆணையிட்டு நிறுத்த முடியவில்லை. ஆணைமுரசுகள் வீணே ஒலிக்கின்றன” என்றார். ஃபானு இருந்த இடமே அப்பகுதியின் மேடு. அங்கு நின்றபோது தெளிவாகவே பார்க்க முடிந்தது, பள்ளத்தில் விழிதொடும் எல்லை வரை தேங்கி நின்றிருந்த யாதவர்களின் கிழக்குப் பகுதி உருகி ஓடையென்றாகி வழிந்து நீண்டு முன் செல்லத் தொடங்கியிருந்தது.
“எங்கு செல்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்?” என்று ஃபானு கூவினார். புரவியில் ஓடி இறங்கி அருகே வந்த எல்லைப்படைவீரன் “அரசே, எண்ணியிராக் கணத்தில் பெருந்திரளின் விளிம்பு உடைந்து அத்தனை பேரும் பிரபாச க்ஷேத்ரம் நோக்கி செல்லத்தொடங்கிவிட்டார்கள்!” என்றான்.