சீட்டு,நஞ்சு- சிறுகதை

சீட்டு [சிறுகதை]

அன்பின் ஜெ

சீட்டு கதையை வாசித்தேன். கீழ்நடுத்தரவர்க்கத்திடம் எப்போதுமே ஒரு ஆழமான மெட்டீரியலிஸ்டிக் தன்மை இருக்கும். அவர்களுடைய ஆன்மிகம் கூட மெட்டீரியலிஸ்டிக் ஆனதாகவே இருக்கும். அன்பு காதல் திருமணம் பாசம் எல்லாமே அப்படித்தான். அது வாழ்க்கையின் கஷ்டத்தில் இருந்து வந்த ஒரு இயல்பு. அப்படித்தான் அவர்கள் இருக்கமுடியும். பைசா பைசாவாக சேமிப்பது. இன்னொருத்தரை பிய்த்துப்பிடுங்குவது. எப்போதுமே பைசாக் கணக்கு பார்ப்பது. அவர்களுடைய உலகம் அப்படிப்பட்டது. அந்த உலகத்தின் மிக அழகான சித்திரமாக இருந்தது. யதார்த்தமே மீறப்படவில்லை. மிகமிக இயல்பான யதார்த்தமான சூழல்.

அவர்களின் இயல்பை அற்பத்தனம் என்று சொல்லலாம். ஆனால் குருவி கூடுகட்டுவதுபோலத்தான் அவர்கள் குடும்பத்தை அமைத்துக்கொள்வது. ரேஷனில் சர்க்கரை போடுவதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். அந்தச் சூழலில் ‘நைசா கேட்டுப்பாரு’ என்று அழகப்பன் சொல்வதில் நமக்கு தப்பாக தோன்றலாம். அவனுக்கும் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். ஆனால் வேறுவழியில்லை. அவனும் அவளும் அப்படித்தான் குடும்பத்தை அமைக்கப்போகிறார்கள். நல்ல தம்பதிகலாக குருவிக்கூடு ஒன்றை கட்டி இதேபோன்ற குருவிக்குஞ்சுகளை உருவாக்குவார்கள். அந்த அம்மா அப்படித்தான் அழகப்பனை உருவாக்கியிருக்கிறார்.

இது நியாயதர்மங்களின் கதை அல்ல, அவர்களின் வாழ்க்கையில் உள்ள குறுகலின் கதை

மகேஷ்

***

வணக்கம் ஜெ

சீட்டு சிறுகதை வாசித்தேன். மனித மனத்தில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்துக்கும் உணர்வுக்கும் பிறிதொன்று ஈடாக முன்வைக்கப்படுகிறது. நைசாக கேட்டுப்பாரு எனும் சொல் மெல்ல ஒயா முடிவிலாச் சுழலில் பெண்களைத் தள்ளும் வார்த்தைகளின் தொடக்கம். இந்தச் சுழல் எப்பொழுதும் பெண்களைக் கொண்டே எழுப்பப்படுகிறது.

அரவின் குமார்

***

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நஞ்சு கதையை வாசிக்கையில் எனக்கு பட்டது இது அந்தப்பெண் செய்த சிறிய துரோகம், அந்த இளைஞன் அதற்கு பதிலடி செய்தது என்று சுருக்கமாகவே வாசிப்பார்க்ள். ஆனால் இது மூன்று கட்டம் கொண்டது. துரோகம் பதிலடி இரண்டுக்கும் நடுவே அவன் படும் அவஸ்தையும் அவனுடைய உருமாற்றமும் உள்ளது. மூன்று கட்டமாக கதையை வாசித்தால்தான் இந்தக்கதையை புரிந்துகொள்ளமுடியும்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் எனக்கு இதே அனுபவம். அவள்தான் முன்னால்வந்து என்னுடன் நெருக்கமாக இருந்தாள். காதல் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் மாட்டிக்கொண்டோம். எனக்கு வேலை இல்லை. அவள் குடும்பத்தில் அப்படி ஒரு ரியாக்சன் வரும் என அவள் நினைக்கவில்லை. சட்டென்று நான் அவளை ‘தொந்தரவு’ செய்வதாக மாட்டிவிட்டுவிட்டாள். அடி உதை பிரச்சினைகள். போலீஸில் போய் எழுதிக்கொடுத்தேன். ஊரைவிட்டே வந்துவிட்டேன்

பத்து வருஷங்களுக்கு பிறகு அவளை பிள்ளைக்குட்டிகளோடு பார்த்தேன். என்ன சொல்ல? இதேபோல ஃபிளர்ட்டிங் பண்ண முயன்றாள். ஏனென்றால் அது அவள் சமாதானப்படுத்தும் முயற்சி. ஆனால் எனக்கு அய்யே என்று ஆகிவிட்டது. ஆனால் அதுவரை இருந்த ஒரு ஆற்றாமை இல்லாமலாகிவிட்டது. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்

இன்றைக்கு பல காதல் விவகாரங்களில் சட்டென்று பெண் மனசு மாறி குடும்பத்துடன் திரும்பிச் சென்றுவிடுகிறாள். உலகம் ‘பாவம் அந்த பொண்ணு’ என்றுதான் பேசும். ஆனால் அந்த ஆணின் மனசிலே ஒரு நஞ்சை விட்டுவிட்டுச் செல்கிறாள் என்பதை உணர்வதில்லை

ரகு

***

அன்புள்ள ஜெ,

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், ‘நஞ்சு’வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, ‘நஞ்சு’விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் ‘நஞ்சு’வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

‘நஞ்சு’ காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

அன்புடன்,

பிரவின்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–65
அடுத்த கட்டுரைதேவி,லாசர்- கடிதங்கள்