தேவி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான் அவனை செலுத்துகிறது. அவன் தேடுவது ஹீரோயினைத்தான். ஆனால் ஸ்ரீதேவி வந்து முப்பெரும்தேவியராக மேடையில் தோன்றுகிறாள். காதலி அம்மா வில்லி என மூன்று முகம். அப்படியே சூழ்ந்துகொள்கிறாள். அவளை ஒன்றுக்குள் ஒன்றாகவே அவன் பார்க்கிறான். காதலியில் அம்மாவும் வில்லியும். வில்லியில் அம்மாவும் காதலியும். மூன்றுமுகமான ஒன்றை அவன் கண்டுகொள்கிறான். அவன் பெண்ணை அறியும் இடம் அது. மூன்றாகி நின்று நடிக்கும் வேறொன்றை. சரஸ்வதி லட்சுமி பர்வதி மூன்றும் ஆன ஸ்ரீதேவியை அவன் காண்கிறான்
மக்கா கிளம்பி மதினா செல்லும் ஏழரைக்கட்டை பெட்டி காதருக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்
ராஜசேகர்
***
வணக்கம்
தேவி சிறுகதை வாசித்தேன் – நாடகம் தொடங்குவதற்கு முன் லாரன்ஸ் குழம்பி நிற்பது அனைத்து ஆண்களுக்குமான தருணம் – லாரன்ஸுக்கும் அனந்தனுக்கும் முதல் நாடகத்திலேயே குழப்பம் தெளிந்தது அவர்கள் நல்லூழ் – சில ஆண்களுக்கு இது வாழ்நாள் முழுவதும் புரிவதில்லை
அனந்தனின் ஆணவம் அழிந்து யாரோ நடத்தும் நாடகம் என்று அவன் உணரும் இடம் அருமை
அன்புடன்
மணிகண்டன்
***
சிவம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சிவம் ஒரு spiritual parable என்று தோன்றியது. ஒரே வரியில் சொல்லப்படவேண்டிய கரு. ஒரு குட்டிக்கதையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதன்மேல் அந்த சூழலும் அந்தச் சூழல் பற்றிய சிந்தனைகளும் தொடுத்துத் தொடுத்து வேறுவேறு திசைநோக்கி விரிகின்றன. அது உருவாக்கும் கேள்விகள் அந்த கதையை ஒரு parable அல்லாமலாக்கி ஒரு நவீனச் சிறுகதையாக ஆக்குகின்றன
அந்த விவாதம் இல்லாமலிருந்தால் உயிரை காப்பாற்றுபவன் கொலையும் செய்வான் என்ற ஒற்றைவரியாக ஆக்கிவிடலாம். எளிமையாக அப்படி நாம் வாசிக்கும் எல்லா வாசிப்புகளையும் முதலில் இருக்கும் அந்த நீண்ட விவாதம் ஏற்கனவே தகர்த்துவிடுகிறது. மேலதிகமாக சிந்திக்கும்படி கட்டாயபப்டுத்துகிறது
ராஜசேகர்
***
வணக்கம் ஜெ
சிவம் சிறுகதையை வாசித்தேன். நாம் அறியமுடியாத உலகில் வாழும் மனிதர்களாகவே காசியில் இருக்கும் மனிதர்களைக் காண முடிந்தது. சாக முனையும் பைத்தியத்தைத் தடுத்து நிறுத்துகிறார்கள். சாக முடிவெடுத்துவிட்ட சாமியாரை அதிலிருந்து விலகாமல் இருக்க கயிற்றால் பிணைக்கிறார்கள். ஆழ்ந்த தியானத்தின் நிறைவாக மரணம் நிகழ்கிறது.
அரவின் குமார்
***