‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60

பகுதி ஆறு : படைப்புல் – 4

தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம். அங்கே மூத்தவர் ஃபானு அரண்மனைகளைக் கைவிட்டு தன் படையினருடனும் சுற்றத்துடனும் வந்து தங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த பிரத்யும்னனும் அனிருத்தனும் சற்று அப்பால் தங்கினார்கள். அரசி கிருஷ்ணையும் சாம்பனும் இறுதியாக வந்து தங்கினர். ஒவ்வொருநாளும் என அந்தக் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது.

துவாரகையை கைவிடும் முடிவை எடுப்பதற்கே எங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஆயிற்று. நகரில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்பதை நாங்கள் அறியவில்லை. எங்களிடம் வந்து சொல்லும் ஒற்றர் பேரமைப்பும் முற்றிலும் சிதறிவிட்டிருந்தது. நாங்கள் திகைத்து சொல்லிழந்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக்கொண்டிருந்தோம். எவரிடமும் எந்த விதமான திட்டங்களும் இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் இன்னொருவரை தேடிச்சென்று உரையாட விரும்பினோம். ஏதேனும் ஒரு வழி இருக்கிறது என்று பிறிதொருவர் சொன்னால் அதை நாம் கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணமே எங்களை உந்தியது.

மூத்தவர் ஃபானு தன் அரண்மனை அறையில் முழு நேரமும் தாழ்வான பீடத்தில் கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டு உடல்குறுக்கி அமர்ந்திருந்தார். அதுதான் அவருடைய இயல்பான அமர்வு முறை. இளமையிலேயே எந்த பீடத்திலும் காலை மேலே தூக்கி உடல் குறுக்கி அமர்வதே அவர் வழக்கம். எங்களுக்கு அரசமுறைகளை கற்பித்த திரிவக்ரர் அவரை பலமுறை கண்டித்து திருத்தி கால் விரித்து கையமர்த்தி நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அரச தோரணையை கற்பித்தார். அதை ஒரு பயிற்சியாகவே அவர் நெடுங்காலம் மேற்கொண்டார். எனினும் அவைகளில் அமர்கையில் எதையோ ஒன்றை கூர்ந்து உளம்கொள்கையிலோ, உளம் தளர்ந்து தன்னுள் அமிழ்கையிலோ இயல்பாக அவரிடம் அந்தக் குறுகல் வரும். தனி அவைகளில் அவ்வப்போது அவர் கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொள்வதுண்டு.

சிற்றவைகளில் மது அருந்திக் களித்திருந்தால் முதலில் அவருடைய இரு கால்களும் பீடத்திற்கு மேல் செல்லும். உடல் குறுகி தலை தாழும். கண்கள் பிறிதொன்றாக மாறும். தன் மேல் ஏற்றப்பட்டிருந்த அரசப்பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு எளிய யாதவராக அவர் மாறுவார். அதன் பின்னரே அவர் குரல் மேலெழத் தொடங்கும். உடைந்த நீள்குரலில் பாடுவார். கைகளைத் தட்டி தாளமிடுவார். அரிதாக குழலெடுத்து மீட்டவும் செய்வார். அப்போது மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். அவரில் தொன்மையான யாதவ மூதாதையர் ஒவ்வொருவராக எழுந்து வருவதாக எண்ணிக்கொள்வேன்.

இரும்பாலான பிறிதொரு ஃபானுவை செய்து அவர் மேல் சுமத்தியிருந்தார்கள். தன் முழு விசையாலும் அதைச் சுமந்து அவர் அலைந்தார். அதற்குள் அவர் சிக்கிக்கொண்டு உடல் இறுகி இருந்தார். துவாரகை சரிந்த செய்தியிலிருந்தே மெல்ல மெல்ல அவரிடம் இருந்த இறுக்கம் அகன்றது. எவரும் எவரையும் நோக்காமல் ஆனபோது அவர் ஒரு விடுதலையை அடைந்தார். தனக்குத்தானே பேசிக்கொண்டும் மெல்ல சிரித்துக்கொண்டும் இருந்தார். பெரும்பாலான நேரங்களில் மது அருந்தி களியில் இருந்ததனால் தன்னுணர்வை முற்றாக இழந்திருந்தார். பீடங்கள் அனைத்திலும் அவர் கால் தூக்கி அமர்வதை எவரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பது மட்டும் அல்ல அது அப்போது சற்று உகந்ததாகவும் இருந்தது. யாதவக் குடியின் தொல்மூதாதை ஒருவர் வந்து தன்னுடன் அமர்ந்திருப்பதுபோல ஒவ்வொருவரும் உணரத்தலைப்பட்டனர்.

ஒவ்வொருவரும் அவரிடமே சென்று பேசினர். அவர் எவருக்கும் எந்தத் தீர்வும் சொல்லவில்லை. எந்த மறுமொழியும் நேரிடையாக இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அவர் அருகே இருக்கவும் அவரிடம் பேசவும் விழைந்தார்கள். அவருடைய சிற்றறை எப்போதும் உடன்பிறந்தாரால் நிறைந்து நெரிசல் கொண்டிருந்தது. சில தருணங்களில் சிலர் வெளியேறினாலே சிலர் உள்ளே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. அவர் தன்னை தளர்த்திக்கொண்டு பெருந்தந்தை என்ற பாவனையை சென்றடைந்தார். அவர் அதை தன்னுள் நெடுங்காலமாக நடித்திருக்கக்கூடும். இயல்பாக அதில் சென்று அமைய அவரால் முடிந்தது.

யாதவ மைந்தர் எவருமே அரண்மனை விட்டு வெளியே செல்லவில்லை. வெளியே சென்றால் இடிந்துசரிந்த நகரைக் கண்டு நிலையழிய வேண்டியிருக்கும் என அவர்கள் அஞ்சினர். அரண்மனைக்குள் இருக்கையில் வெளியே நிகழ்வதென்ன என்று நன்றாகவே தெரிந்திருந்தாலும் மெல்லமெல்ல அனைத்தும் முன்பெனவே உள்ளன என்னும் பாவனைக்குள் செல்ல முடிந்தது. ஒன்றை உடல் நடிக்கையில் உள்ளம் அதை தொடர்கிறது. அரண்மனைக்குள் விருந்துகள் நடந்தன. அவைக்கூடல்கள் இடைவிடாது நிகழ்ந்தன. குடிக்களியாட்டு எப்போதுமிருந்தது. சூதர்களும் விறலியரும் பாடி ஆடினர். நாற்களமாடலும் நிகழ்ந்தது.

இளையவர் பத்ரன் மட்டும் வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து “நகரம் சரிந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே” என்றார். “மக்கள் அஞ்சி கிளம்பிவிட்டார்கள். விட்டுச்செல்ல முடியாதவர்கள் தெருக்களில் அலைமோதுகிறார்கள். எங்கும் இறந்த உடல்கள். உளம்பிறழ்ந்த மக்கள் எங்கும் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்… இந்நகரம் அழிந்துவிட்டது.” நக்னஜித்தி அன்னையின் மைந்தரான வீரா “சில மாளிகைகள் சரிந்ததனால் நகருக்கு ஒன்றும் ஆகபோவதில்லை” என்று சொன்னார். “இந்நகரம் ஆயிரக்கணக்கான மாளிகைகளால் ஆனது.” பத்ரன் எரிச்சலுடன் “சில மாளிகைகள் அல்ல. நகரில் பெரும்பாலான மாளிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

“மாளிகைகள் சரிந்தாலும் கட்டிவிடலாம், நம்மிடம் கருவூலம் இருந்தால் போதும்” என்றார் மூத்தவர் சுருதன். பத்ரன் “துறைமேடை உடைந்ததும் கடல்நீர் உட்புகுந்திருக்கிறது. இந்நகரைத் தாங்கியிருந்த இரு அடித்தளப் பாறைகளும் விலகிவிட்டிருக்கின்றன. அவை மெல்ல உருண்டு கடலுக்குள் செல்வதுபோல் தோன்றுகிறது” என்றார். சுருதன் “நகர் உருண்டு கடலுக்குள் செல்வதா? நன்று! சீரிய கற்பனை” என்றார். “மெய்யாகவே கடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது இந்நகர். மலைச்சரிவில் சில இல்லங்கள் இவ்வாறு வழுக்கி நகர்ந்து கீழிறங்குவதுண்டு” என்று பத்ரன் சொன்னார். “நான் விழிகளால் கண்டேன், இந்நகர் கடல்நோக்கி இறங்கிச் செல்கிறது.”

ஆனால் ஒவ்வொருவரும் அவரை நகையாடி சிறுமைசெய்யத் தொடங்கினர். அதனூடாக அத்தருணத்தில் தங்களுக்கிருந்த அனைத்து இறுக்கங்களையும் தளர்த்திக் கொண்டனர். நகையாட்டு பொறுக்க இயலாத பத்ரன் சீற்றத்துடன் “எனில் எவரேனும் வெளியே சென்று பாருங்கள். அருகிலிருக்கும் உயரமான காவல்மாடம் எதிலேனும் சென்று பாருங்கள். இப்போது கடல் எங்கே இருக்கிறது என்று பாருங்கள். முன்பு கடல் மிக ஆழத்திலிருந்தது. சாளரங்களினூடாக மரக்கலங்களின் உச்சிப்பாயையும் கொடியையும் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கடல் நமக்கு நேராக இருக்கிறது. கீழ்த்தளத்தில் ஒவ்வொரு சாளரத்தினூடாகவும் கடலலைகளை பார்க்க இயல்கிறது” என்றார்.

அது உண்மை என்பதனால் அனைவரும் அமைதியடைந்தனர். “கடலோரமாக அமைந்திருந்த சுங்கநிலைகளும் பண்டகநிலைகளும் முற்றிலும் மறைந்திருக்கின்றன. வணிகர்களுக்காக அமைக்கப்பட்ட பெருந்தெரு மீது கடல்அலைகள் வந்து அறைந்து கொண்டிருக்கின்றன. துவாரகையின் ஆறு தெருக்கள் இப்போதே கடலுக்குள் சென்றுவிட்டன. இங்கிருந்தே பார்க்க இயல்கிறது” என்றார். எவரும் எதுவும் சொல்லவில்லை. மித்ரவிந்தை அன்னையின் மைந்தரான விருகன் “நான் அதை நோக்கினேன். இந்நகர் கடலை நோக்கி கவிழ்ந்திருப்பதுபோல தோன்றியது… பெரும்பாலான மாளிகைகள் சரிந்துள்ளன” என்றார்.

அப்படியும் மூத்தவர் ஃபானு நிறைவடையவில்லை. உடன்பிறந்தார் புரவியில் சென்று நேரில் பார்த்துவரும்படி ஆணையிட்டார். அவர்கள் செல்லும்போதே ஒவ்வொருவருக்கும் நகரில் என்ன நிகழ்கிறது என்று தெரிந்திருந்தது. எனினும் எவரும் எதையும் சொல்லவில்லை. பத்ரன் எரிச்சலுடன் “நகருக்குள் நீர் புகுந்திருக்கிறது என்ற செய்தியை மட்டும் வந்து சொல்க! ஏனெனில் அதற்கு அப்பால் ஏதும் செய்தியில்லை” என்றார். “நகருக்குள் அனல் புகுந்திருக்கிறது என்று சொல். மேலும் சில நாள் சொல்லாடுவதற்கு உகந்ததாக இருக்கும்” என்றார் விருகன்.

அவர்கள் சென்ற பின்னர் சுருதன் “நாம் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. உண்மையில் இந்நகர் சற்று சிறுப்பது நன்று. இதன் குடிகளில் பாதி பேர் வெளியேறினால் இது இன்னும் உகந்த நகரமாகும். இதில் விரிசல்விட்டிருக்கும் அனைத்துக் கட்டடங்களையும் நாமே இடித்துத் தள்ளுவோம். அவ்விடிபாடுகளைக் கொண்டுசென்று கடலோரமாக அடுக்கினோமெனில் கடலையும் கட்டுப்படுத்த முடியும். நமக்கிருக்கும் கருவூலச் செல்வம் இங்கிருக்கும் குடிகள் பாதியாக குறைந்தால் இன்னும் ஒரு தலைமுறை இங்கு வாழ்வதற்கு போதுமானதாகும். ஆகவே எதைப்பற்றியும் நாம் கவலைகொள்ள வேண்டியதில்லை” என்றார்.

அந்த எண்ணம் மிகச் சிறிய ஓர் ஆறுதலாக இருந்தது. “ஆம், கருவூலம் இருக்கிறது. அது இன்னும் ஒரு தலைமுறைக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் நம் குடிகளில் ஒரு சாராரை கைவிடுவது போலாகுமல்லவா?” என்று பத்ரன் கேட்டார். “நாம் கைவிடவில்லை. அவர்கள் நம்மை கைவிட்டுச் செல்கிறார்கள். இந்நகரை இந்த இக்கட்டில் கைவிடாது இங்கு நின்றிருப்பவர்களுக்குரிய பரிசென்று நம்முடைய கருவூலச் செல்வம் அமையட்டும். விட்டுச் செல்பவர்கள் தங்கள் நிலத்தை தேடிக்கொள்ளட்டும். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் சுருதன். கருவூலச் செல்வம் என்ற சொல் அனைவரையும் ஆறுதலடையச் செய்தது. அனைவரும் அச்சொல்லையே உள்ளத்துள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விழிகள் காட்டின.

“இப்போது நாம் என்னதான் செய்வது?” என்றார் பத்ரன். “இந்நகர் தன்னைத்தானே ஒருங்கமைத்துக்கொள்ளட்டும். இதிலிருந்து பறந்து செல்பவர்கள் அகன்று, இதிலேயே தங்குபவர்கள் நீடிக்கட்டும். நிலைகொண்ட மாளிகைகள் எஞ்சி நிலையற்ற மாளிகைகள் இடிந்து இது தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. அந்தப் புதிய நகரத்தை நாம் உகந்த முறையில் கட்டியமைப்போம்” என்றார் சுருதன். “ஆம், நாம் இந்நகரை மீட்டமைப்போம்” என்றார் விருகன். “இது நமது நிலம்… நாம் இங்கே வென்று காட்டுவோம்… கடல் அறியட்டும் யாதவ மைந்தரின் ஆற்றலை” என்றார் வீரா.

ஃபானு தலையை அசைத்து “எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் என்னை வந்து சேர்கின்றன. எல்லாமே சரி என்றும் பிழை என்றும் எனக்கு தோன்றுகிறது. இத்தருணத்தில் முற்றிலும் தனித்துவிடப்பட்டிருக்கிறேன்” என்றார். “அது நன்று, எல்லா தரப்பும் வரட்டும். நாம் ஆராய்ந்து முடிவெடுப்போம். எந்த முடிவையும் நாம் அஞ்சி எடுப்பதாக இருக்கவேண்டாம்” என்றார் சுருதன். “நாம் சாத்யகியிடமும் கிருதவர்மனிடமும் கலந்துகொள்வோம்” என்று வீரா சொன்னார். “பிரத்யும்னனும் அனிருத்தனும் இத்தருணத்தில் நம்முடன் நிலைகொள்ளவேண்டும்” என்று ஃபானுமான் சொன்னான். “நம்முடன் முரண்படுபவர் அஸ்தினபுரியின் அரசி மட்டுமே… அவர் சொல்லை சாம்பன் கேட்பார் என்றால் நன்றல்ல” என்றார் ஃபானு.

கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்த பொழுதுகள் வீணே கடந்து சென்றன. வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எண்ணியதைவிட திகைத்து வெளிறி சொல்லடங்கிப் போயிருந்தனர். ஃபானு “என்ன நிகழ்கிறது? நகரில் நீர் புகுந்திருக்கிறதா?” என்று கேட்டார். “நகருக்குள் படகுப் போக்குவரத்தை தொடங்க முடியுமா?” என்று சுருதன் நகையாட்டாகக் கேட்டார். ஆனால் மூத்தவரான பிரஃபானு ஃபானுவைப் பார்த்து “மூத்தவரே, இந்நகரை இனி நாம் காப்பாற்ற இயலாது. இங்கு இனி எவரும் தங்க இயலாது” என்றார். “என்ன சொல்கிறாய்?” என்றார் ஃபானு. “என் கண்ணெதிரில் மாளிகை ஒன்று இறங்கிs சென்று கடலுக்குள் மூழ்குவதை பார்த்தேன். இந்நகரைத் தாங்கியிருந்த பெருந்தாலம் சற்றே சாய்ந்ததுபோல இதிலுள்ள ஒவ்வொன்றும் நகர்ந்து கடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது” என்றார் பிரஃபானு.

“நாம் இந்த அரண்மனையில் இருக்கிறோம். அவ்வாறு இங்கு எதையும் உணரவில்லையே” என்றார் ஃபானு. “இது உச்சியில் அமைந்த மாளிகை. இங்கும் அந்த அசைவு வரும். நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அது நமக்கு இன்னும் தெரியவில்லை” என்றார் பிரஃபானு. “வேளாண்குடித் தலைவர்களின் மாளிகைகளும், படைத்தலைவர் இல்லங்களும் கடலுக்குள் சென்றுவிட்டன. நகரின் பெரும்பாலான தெருக்கள் ஒழிந்து கிடக்கின்றன. தங்களுக்கு உகந்த பொருட்களையும் உறவினரையும் சேர்த்துக்கொண்டு மக்கள் நகரைவிட்டு வெளியேறி சிந்துவுக்குச் செல்லும் பாதையிலும் பாலைநிலத்துச் சோலைகளிலும் நிறைந்து செறிந்திருக்கிறார்கள்” என்றார் பிரஃபானு.

“கைவிடுவதா? இந்நகரையா? எங்கு செல்வது?” என்றார் ஃபானு. “மதுராவுக்கு செல்வோம், பிற யாதவ நிலங்களுக்கு செல்வோம். எங்கேனும் செல்வோம். ஆனால் இங்கு இனி நீடிக்கமுடியாது. ஐயமே வேண்டியதில்லை” என்றார் பிரஃபானு. “இனி நீரெழ வாய்ப்பில்லை என்றார்களே?” என்று ஃபானு மீண்டும் கேட்டார். “சரிந்துகொண்டிருக்கும் மரத்தில் இறுதி வரை தங்கியிருக்கும் பறவைகளைப்போல நாம் இந்த நகரை நம்பியிருக்கிறோம். ஆயினும் இது விழுந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. மூத்தவரே, இனி பேரலை வரவில்லை என்றாலும், இனி ஒரு காற்று கூட அடிக்கவில்லையென்றாலும்கூட இந்நகர் விழுந்துவிடும்” என்றான் ஃபானுமான்.

“நகரின் கீழ் அடுக்குகள் அனைத்தும் கடலுக்குள் விழுகின்றன. அந்த இடத்தை நிரப்ப மேலுள்ள அமைப்புகள் மேலும் கீழிறங்கிச் செல்கின்றன. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையின் கடல் மிக மிக ஆழமானது. இறங்கிச்செல்லும் அத்தனை கட்டடங்களும் மிகப் பாதாளத்தில் சென்று மறைந்து கொண்டிருக்கின்றன. துவாரகை என்பது கடலாழத்தில் உடல் மறைத்து தலைமட்டும் காட்டி அமைந்திருக்கும் மாபெரும் மலையொன்றின் உச்சியில் அமைக்கப்பட்ட நகர் என்பதை மறக்க வேண்டியதில்லை. நாம் உண்மையில் மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சந்திரஃபானு.

“என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து எப்படிச் செல்வது? நமது கருவூலம் மிகப் பெரியது. நம் கருவூல அறைகளை ஒழித்து கையிலெடுத்துக்கொண்டால் நம்மால் அதை பாதுகாத்து கொண்டுசெல்ல இயலாது. நமது படைவீரர்கள் சிதறிவிட்டிருக்கிறார்கள். மிகக் குறைவான படைவீரர்களுடன் நாம் இந்தக் கருவூலத்தை கொண்டு பாலைநிலத்தில் நிற்பதென்பது கள்வருக்கு முன் கதவை திறப்பதற்கு நிகர்” என்றார் ஃபானு. “மதுராவுக்குச் செல்லலாம். ஆனால் அது நெடுந்தொலைவில் இருக்கிறது. மதுவனம் அதைவிட நெடுந்தொலைவில் இருக்கிறது. கூர்ஜரமோ அவந்தியோ நம்மை இப்போது வெல்வதென்றால் சேற்றில் சிக்கிய விலங்கை வேட்டையாடுவதைப்போல. இந்நகரே நமக்கு பாதுகாப்பு. இதிலிருந்து வெளியேறுவதென்பதை பலமுறை எண்ணியே நாம் முடிவெடுக்க வேண்டும்.”

“வெளியேறாமல் இருக்க முடியாது. நெருப்பு என நீர் எரிந்தேறி வருகிறது. வெளியே சென்று ஒருமுறை பாருங்கள், தங்களுக்குத் தெரியும்” என்றான் ஃபானுமான். “என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லையே! இந்நகரை நம்மால் உதற முடியாது” என்று ஃபானு சொன்னார். “எனில் ஒரு சிற்பியை அழைத்து வருவோம். இந்நகரை முற்றறிந்த சிற்பி ஒருவன் சொல்லட்டும் இது மீளுமா என்று” என்றார் பிரஃபானு. “ஆம், அப்படி செய்வோம். அது நன்று” என்றார் ஃபானு. அனைத்தையும் ஒத்திப்போட ஒரு வாய்ப்பு கிடைத்தது என்ற நிறைவு அவரில் தெரிந்தது. மதுக்கோப்பையை அவர் உள்ளம் நாடிவிட்டது என்று புரிந்தது.

 

மூன்று நாட்களுக்குப் பிறகுதான் துவாரகையின் சிற்ப அமைப்பை சற்றேனும் அறிந்த ஒருவர் ஒற்றர்களால் எங்களிடம் அழைத்து வரப்பட்டார். அவர் பெயர் சுப்ரதீபர். சிற்பிகளின் மரபைச் சார்ந்தவராயினும் சிற்பக்கலை முழுதறிந்தவர் அல்ல. நகரிலிருந்து பிற சிற்பிகள் ஒழிந்து சென்ற பிறகும் அவர் அங்கே தங்கியிருந்தது அவருடைய இரு கால்களும் பழுதடைந்தமையால் அவரால் சிற்ப பணியில் ஈடுபடமுடியாது என்பதால்தான். வணிகர்களுக்கு அவர்களின் குலமுத்திரைகளை பலகைகளில் வரைந்துகொடுத்து சிறுபொருள் ஈட்டி அவர் அங்கு வாழ்ந்தார்.

அவ்வாறு ஒருவர் அங்கிருப்பது எவருக்கும் தெரியவில்லை. நகரெங்கும் அலைந்த ஒற்றர்களிடம் ஒருவர் இவ்வாறு ஓவியம் வரையும் ஒருவர் இருப்பதாக சொன்னார். அங்கு சென்றபோது சிறிய இல்லத்தின் திண்ணையில் காலோய்ந்து அவர் அமர்ந்திருந்தார். அவருடைய மைந்தர்கள் அவரை அவ்வண்ணமே விட்டுவிட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள். அணுக்கத்து வீட்டில் இருந்து அவருக்கு அன்னமும் நீரும் அளிக்கப்பட்டிருந்தது. அவரை அந்நகரின் சிற்ப அமைப்பை தெரிந்த சிற்பி என்று பொய்யுரைத்து அவை முன் கொண்டு நிறுத்தலாம் என்று முடிவு செய்து வீரர்கள் அவரை அழைத்து வந்தனர். அவ்வாறு வருகையில் அவரிடம் பேச்சுக்கொடுத்தபோதுதான் அவர் மெய்யாகவே சிற்ப அமைப்பை நன்கு தெரிந்தவர் என்று தெரிந்தது.

ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “எவ்வாறு இந்நகரின் அமைப்பு உங்களுக்கு தெரிந்தது?” என்று அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்டனர். அவர் அங்கிருந்த ஒவ்வொரு மாளிகையையும் சுட்டி அவற்றை எவ்வாறு அவர் வரைபடமாக பார்த்திருக்கிறார் என்பதை விளக்கினார். அதன் பின்னரே அச்சிற்ப அமைப்பு அவருக்கு தெரியும் என்பதை உணர்ந்து அவரை ஃபானுவின் அவைக்கு கொண்டுவந்தனர். அப்போது நாங்கள் அங்கிருந்தோம். அவர் அத்தனை விரைவாக கண்டடையப்பட்டது மூத்தவர் ஃபானுவுக்கு பிடிக்கவில்லை என்பது அவருடைய அமைதியிலிருந்து தெரிந்தது.

முகமன்கள் முடிந்ததும் ஃபானு அவரிடம் முதல் வினாவை நேரடியாக எழுப்பினார். “சிற்பியே, கூறுக! இந்நகரை மீட்க இயலுமா? ஏதேனும் ஒரு பகுதியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா?” சுப்ரதீபர் “தக்கவைத்துக்கொள்வதா? என்ன சொல்கிறீர்கள்?” என்று திகைப்புடன் கேட்டார். ஃபானு எரிச்சலுடன் “தக்கவைத்துக்கொள்வதென்றால் இந்நகரம் மீண்டும் பழைய பொலிவுடன் எழ முடியுமா என்று பொருள்” என்றார். “பழைய பொலிவுடனா? அரசே, மெய்யாகவே நீங்கள் இதை கேட்கிறீர்களா?” என்றார். ஃபானு சினத்துடன் “உமது உளப்பதிவென்ன? அதை சொல்லுங்கள்” என்றார்.

அதன் பின்னரே சுப்ரதீபர் ஃபானுவின் உளநிலையை புரிந்துகொண்டார். “அரசே, இந்நகர் அழிந்துகொண்டிருக்கிறது. இனி எத்தனை நாட்கள் என்பதே வினா” என்றார். “நாட்கள் என்றால்?” என்றார் ஃபானு. “எனது கணிப்பின்படி இன்னும் மூன்று நாட்களில் பெரும்பாலான துவாரகையின் பகுதிகளுக்குள் நீர்புகும். பதினைந்து நாட்களுக்குள் துவாரகையின் அனைத்துக் கட்டடங்களும் நீருக்குள் மூழ்கிச் செல்லும். இன்னும் ஒரு மாதத்திற்குள் துவாரகையின் தோரண வாயில் வரைக்கும் கடல் நீர் சென்று அடிக்கும்” என்றார் சுப்ரதீபர்.

மூத்தவர் ஃபானு திகைப்புடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “தோரணவாயில் வரைக்குமா?” என்றார். “ஆம், தோரணவாயில் வரைக்கும் இந்நகரின் முழு நிலமும் நீருக்குள் சென்றுவிடும்” என்றார் சுப்ரதீபர். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். “இது அமைந்திருக்கும் பாறைகள் இரண்டு திசைகளிலாக விலகிவிட்டன. நிலையழிந்து அவை கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டு யானைகளின் அம்பாரிகளாக இந்நகரம் அமைந்திருந்தது. யானைகள் இறங்கி ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அம்பாரிகள் மட்டும் எவ்வாறு இங்கிருக்க முடியும்?”

ஃபானு உரக்க கூச்சலிட்டு அவரிடம் “எனில் எதை நம்பி இந்த நகரத்தை அமைத்தீர்கள்?” என்றார். “அந்த இரு பாறைகளும் தெய்வ ஆணைக்கு கட்டுப்பட்டவை” என்றார் சுப்ரதீபர். “இந்நகரை அமைக்கையில் நான் இளஞ்சிறுவன். எந்தை இதன் முதன்மைச் சிற்பிகளில் ஒருவர். பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளை இங்கு அழைத்து இளைய யாதவர் பேரவை ஒன்றை கூட்டினார். அதில் இந்த நிலத்தை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை கூறும்படி பணித்திருந்தார். எந்தை இந்நிலத்தின் இயல்பை அறிந்து இது இரண்டு யானைகளால் ஆனது என்று வகுத்துரைத்தார். அவை கீழே ஆழத்தில் உளைச்சேற்றில் கால்மிதித்து நின்றிருக்கின்றன. இங்கிருக்கும் இரண்டு மலைகளின் உச்சிகள் அவை. இங்கே ஒரு நகரம் உறுதிபட அமையும், கடல் அதை ஒன்றும் செய்யாது. ஆனால் அந்தப் பாறைகள் தங்களை அசைவில்லாமல் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவை எந்த நெறிகளின்படி இங்கு நின்றிருக்கின்றனவோ அந்த நெறிகள் நீடிக்கவேண்டும் என்றார் எந்தை.”

பிற சிற்பிகளும் அதையே சொன்னார்கள். “இந்நகரம் இங்கு இந்தப் பாறைகளில் ஏதேனும் ஒன்று அசைந்தாலும் சரிந்துவிடும்” என்றனர். ஆனால் அவையில் அமர்ந்து அவற்றை கேட்டுக்கொண்டிருந்த இளைய யாதவர் ஒரு கணத்திற்குப் பின் “இந்நகர் இங்கு அமையட்டும்” என்றார். “அரசே, எண்ணிதான் முடிவெடுக்கிறீர்களா?” என்று கேட்டபோது “நெறிகளின்மீது கட்டப்படும் நகரங்கள் மட்டுமே அறம் வளர்க்கும் தகுதிகொண்டவை. அறம் பிழைத்த கணமே அழியும் நகரையே விரும்புகிறேன்” என்றார். சிற்பிகள் “நிலையான பெருநகரை அமைக்கவே அரசர்கள் முயல்வார்கள்” என்றனர். இளைய யாதவர் “என் நகர் தன் பெருமை அழிந்தபின் ஒரு கணமும் நீடிக்கலாகாது, இடிபாடுகளென இதை எவரும் பார்க்க வாய்ப்பிருக்கக் கூடாது. இது அழியுமெனில் முற்றாக மூழ்கி மறையவேண்டும்” என்றார்.

எந்தை அந்த அவையில் உரக்க “யாதவரே, நாம் எழுப்பப்படாத ஒரு நகரத்தின் அழிவைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “இல்லங்களை கட்டுபவர்கள் ஒவ்வொருவரும் அதன் அழிவைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்” என்றார் இளைய யாதவர். “கால்கோளிடும்போது சொல்லும் நுண்சொற்களில் ஒன்று நூறாண்டுகாலம், ஏழு தலைமுறைக்காலம் இவ்வில்லம் வாழவேண்டும் என்பதல்லவா?” என்று மூத்த சிற்பி சாயர் கேட்டார். இளைய யாதவர் சிரித்து “நோக்குக, அதன் அழிவைப்பற்றி ஒரு குறிப்பு அதில் உள்ளது!” என்றார். “இந்தப் பெருநகர் நூறு ஆயிரம் ஆண்டுகாலம் வாழலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் இதன் நெறி பேணப்படவேண்டும். யானை மீதிருப்பவன் ஒன்று அறிவான், யானையுடனான அவனுடைய உறவு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் பேணப்படவேண்டும். இல்லையேல் அவனால் அங்கே அமர இயலாது. பாறையின் மேலல்ல, யானையின்மேல்தான் இந்நகரை கட்ட விரும்புகிறேன்” என்றார். “எனில் அவ்வாறே ஆகுக” என்று சிற்பிகள் உரைத்தனர்.

“அதன்பிறகுதான் இந்நகரம் கட்டப்பட்டது. இதோ யானைகள் நெறி பிறழ்ந்திருக்கின்றன. இனி அவற்றை ஆள நம்மால் இயலாது” என்றார் சுப்ரதீபர். உளம்தளர்ந்து “இனி என்ன செய்வது?” என்று மூத்தவர் கேட்டார். “எத்தனை விரைவாக இந்நகரை கைவிடுகிறீர்களோ அத்தனை நன்று” என்று அவர் சொன்னார். “எங்கு செல்வது?” என்று அவரிடமே மூத்தவர் கேட்டார். “அதை நான் அறியேன். அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். முதலில் இந்நகரிலிருந்து வெளியேறுக! வெளியேறியபின் எங்கு செல்வது என்று முடிவு எடுக்கலாம். எங்கு செல்வது என்று முடிவெடுத்தபின் நகரத்திலிருந்து வெளியேறுவீர்கள் என்றால் ஒவ்வொரு கணமும் பெருகிவரும் இடர் ஒன்றை சந்திக்கிறீர்கள்” என்றார்.

“ஒருவேளை நான் உரைத்த கணக்கை மீறி ஒரே நாளில் துவாரகை நீருக்குள் செல்லுமெனில் நீங்கள் நீந்திக்கூட வெளியேறிட முடியும். துவாரகையின் கருவூலங்கள் முற்றாகவே நீருக்குள் சென்றுவிடும். அவற்றை நம்மால் மீட்க இயலாது” என்று சுப்ரதீபர் சொன்னார். அந்தச் சொல் பிறர் அனைவரையும் விட ஃபானுவை அசைத்தது. ஏனெனில் அவருடைய தன்னம்பிக்கையும் கனவும் முழுக்க துவாரகையின் கருவூலத்தின் மீது அவருக்கு இருந்த உரிமையினாலேயே நிறுவப்பட்டது. எங்கு சென்றாலும் தான் ஒரு அரசன் என்று நிலைநிறுத்துவது அந்தக் கருவூலம் என்று அவர் அறிந்திருந்தார். துவாரகையின் மாளிகைகள் இடிந்து கருவூலம் மீட்கப்படாது போகுமெனில் அதன் பின்னர் கன்றோட்டும் எளிய யாதவனாக தான் ஆகிவிடவேண்டும் என்பதை அவர் எண்ணியிருந்தார். தன்னை ஒவ்வொருமுறையும் உள்ளத்தால் யாதவனாக எண்ணியிருந்தவர் அப்போது அதை அஞ்சி அகம் நடுங்கினார். ஒரு கணத்தில் முடிவெடுத்து “நாம் வெளியேறுகிறோம், இன்றே” என்று அவர் கூறினார்.

முந்தைய கட்டுரைசிவம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஅரசன்,சிட்டுக்குருவி- கடிதங்கள்